SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Sunday, November 25, 2012

கும்பகோணமும் கோமாளிச்சட்டமும்...!!!


சமீபத்தில் ஒரு பத்திரிக்கையை புரட்டிக்கொண்டிருந்தபோது கும்பகோணம் பள்ளிக்கூட தீவிபத்து வழக்கு விசாரணையைப்பற்றி படிக்க நேர்ந்தது. அந்த தீவிபத்தின் மறுநாள் செய்தித்தாள்களில் கருகிய பிஞ்சுகளின் படங்களைப்பார்த்து கட்டுப்படுத்தமுடியாமல் கண்ணீர் வடித்தவர்களில் நானும் ஒருவன். ( இவ்வளவுக்கும் அப்போது எனக்கு திருமணம்கூட நடந்திருக்கவில்லை. திருமணமாகாத ஒருவருக்கே அது தாங்க முடியாத துயரமென்றால், பெற்றோர்கள் என்ற நிலையிலிருந்து அந்தச்செய்தியை எதிர்கொண்டவர்களின் மனநிலை எப்படியிருந்திருக்கும்?. அதைவிட அந்த நிகழ்வில் குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்களின் மனநிலை எப்படியிருந்திருக்கும்?...) ஏற்கனவே வெகுநாட்களாகவே நமது நாட்டில் பல வழக்குகள் மீடியாக்களாலும், மக்களாலும் அப்போதைய காலகட்டத்தில் மட்டும் பரபரப்பாக பேசப்பட்டு சில நாட்களுக்குப்பின்னர் எவ்விதத் தகவலுமின்றி அமுங்கிப்போவதைப் பற்றி பதிவெழுதவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.

கும்பகோணம் பள்ளிக்கூட தீவிபத்து வழக்கின் சமீபத்திய விசாரணையில் அந்த விபத்தில் காயங்களுடன் உயிர்தப்பி வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளிடம் குற்றவாளித்தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இடைவெளியின்றி அடுத்தடுத்து கேள்வி கேட்டு குழப்பியிருக்கிறார்கள். ஒரு மனசாட்சியில்லாத வக்கீல் தீவிபத்தில் தப்பிய ஒரு சிறுவனிடம் அதே தீவிபத்தில் இறந்துபோன அவனது நண்பனைப்பற்றி விசாரணை என்ற பெயரில் தீ விபத்தில் இறந்துபோன அவனது நண்பன் தீப்பற்றிய போது என்ன செய்து கொண்டிருந்தான்?. அவன் உடலில் முதன் முதலில் எங்கு தீப்பிடித்தது?... என்றெல்லாம் கேள்விகேட்டு குழப்பியிருக்கிறார். இது எல்லாவற்றுக்கும் மேலாக அந்தக்கட்டுரையின் இறுதியில் குற்றவாளித்தரப்பு வழக்கறிஞர் ஒருவர் பேட்டியளித்திருக்கிறார்.

அதில் அவர் ‘’இது ஒரு விபத்து. அவ்வளவே தவிர எனது கட்சிக்காரர் (அந்தத்தனியார் பள்ளியின் கரஸ்பாண்டன்ட்) குற்றமற்றவர். அரசாங்க வக்கீல்கள்தான் தேவையில்லாமல் அந்த தீ விபத்தில் தப்பிய குழந்தைகளை வைத்து பொய்சாட்சி சொல்லவைக்கிறார்கள்’’ என்று தனது அதிபுத்திசாலிமான கருத்தைப்பதிந்திருக்கிறார்.

அந்த வக்கீலின் சட்டையைப்பிடித்து சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று தோன்றியது. அதை இங்குதான் கேட்கமுடியும்...

அய்யா வழக்கறிஞரே... உங்களுக்கு என்னுடைய (எங்களுடைய) ஒரே கேள்வி இதுதான். ஒருவேளை உங்கள் வீட்டு பிஞ்சுகள் அந்தப்பள்ளியில் படித்து அந்தத் தீவிபத்தில் இறந்திருந்தால் அப்போதும் உங்கள் பதில் இதுவாகத்தான் இருந்திருக்குமா?...

ஏற்கனவே இருக்கும் ஓட்டைகளில் எல்லாம் உங்களைப் போல பல பெருச்சாளிகள் புகுந்து விளையாடி பல குற்றவாளிகளை பாதுகாப்பாக உலவ விட்டதோடுமில்லாமல் புதிதாக குற்றம் புரிய திட்டமிடுபவர்களுக்கு கூட பயமில்லாத மனநிலையை உண்டாக்கி வைத்திருக்கிறீர்கள். தீவிபத்து நடந்து 94 பிஞ்சுகள் கருகியது 2004ம் ஆண்டு. 2012ம் ஆண்டுதான் வழக்கு தஞ்சை செஷன்ஸ் கோர்ட்டிலேயே நொண்டியடிக்க ஆரம்பித்திருக்கிறது. இன்னமும் இது செல்ல வேண்டிய தூரம் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று நிறைய இருக்கிறது. எங்களுக்குத்தெரியும்... உங்களைப்போன்ற வக்கீல்கள் இருக்கும்வரை நிச்சயம் நீதி கிடைக்காதென்பது. இந்த வழக்கு விசாரணையை இழுத்தடித்து உங்கள் வருமானத்தை தக்கவைத்துக்கொள்ள நீங்கள் இதை உச்சநீதிமன்றம் வரை இழுப்பீர்கள் என்பதும் வழக்கு முடிவதற்குள்ளாகவே அதற்கு காரணமான குற்றவாளிகள் அனைவருமே வயோதிகமடைந்து இயற்கையாகவே மரணித்துப்போய் உங்கள் கல்லாப்பெட்டிக்கு சில்லறைபோட நீங்களும் அடுத்தடுத்த குற்றவாளிகளை தயார் செய்திருப்பீர்கள் என்பதும் புதிதல்ல.

குற்றங்களும், ஊழல்களும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருப்பதன் ஒரே காரணம் நமது சட்டத்தின் சாராம்சம்தான். எவ்வளவு பெரிய குற்றம் புரிந்தாலும் ஜாமீனும், வாய்தாவும், குற்றவாளிக்கும் ஆதரவளிக்கும் வழக்கறிஞர்களும் இருக்கும்வரை இங்கே குற்றங்கள் பெருகிக்கொண்டேதான் இருக்கும்.

கும்பகோணத்தில் பிஞ்சுகள் கருகிக்கிடந்த சோகத்திலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஆதரவாக வாதாட இங்கே வக்கீல்கள் இருக்கிறார்கள்.

உயிர்காக்கும் மருந்துகளில் போலிகளை உலவ விட்டு மக்களின் உயிரோடு விளையாடி கோடிகளை சம்பாதித்தவர்க்கு ஆதரவாக வாதாடவும் இங்கே வக்கீல்கள் இருக்கிறார்கள்.

நிதி நிறுவனம் என்ற பெயரில் ஏழை எளியவர்களின் பணத்தை விழுங்கி ஏப்பம்விட்டு பல குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தியவர்களுக்கு ஆதரவாக வாதாடவும் இங்கே வக்கீல்கள் இருக்கிறார்கள்.

இவ்வளவு ஏன்?... வக்கீலை நடுரோட்டில் வெட்டிக்கொன்றவர்களுக்கும், சப்-இன்ஸ்பெக்டரை நடுரோட்டில் வெட்டிக்கொன்றவர்களுக்கும்கூட ஆதரவாக வாதாட வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்.

கேட்டால் குற்றவாளியாகவே இருந்தாலும்கூட தங்களிடம் வரும் கிளைன்ட்டுகளுக்கு ஆதரவாக வாதாடி அவர்களை விடுவிப்பதுதான் தங்களது வக்கீல் தொழில் தர்மம் என்பார்கள்.

ஒவ்வொரு குற்றங்களுக்குப்பின்னாலும் நேரடிக்குற்றவாளிகள் மட்டுமில்லாமல் பல மறைமுக குற்றவாளிகளும் எந்தவித தண்டனையுமில்லாமல் உலவுவதும் குற்றங்கள் பெருகுவதன் மற்றுமொரு காரணம்.

கும்பகோணம் தீவிபத்தில் அந்தத்தனியார் பள்ளியை நடத்திய தாளாளர் மட்டும்தான் குற்றவாளியா?... சரியான அடிப்படை வசதியற்ற, பாதுகாப்பற்ற அப்படியொரு கட்டிடத்தில் பள்ளிக்கூடம் நடந்ததை அனுமதித்த அரசு அதிகாரிகளுக்கு எந்தவொரு தண்டனையுமில்லையா?...

ஒவ்வொருமுறை பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் போது அந்த வாகனத்தை ஓட்டிய டிரைவர் மீது மட்டும் வழக்கு பதிந்துவிட்டு பராமரிப்பில்லாத வாகனத்தை பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனமாக அனுமதித்த பள்ளி நிர்வாகம் மீதும், அப்படிப்பட்ட வாகனங்களை முறையாக ஆய்வுசெய்யாத அரசு அதிகாரிகள் மீதும் எந்தவித வழக்கும் பாயாதா?...

விபத்துக்கள் நடக்கும் முன்பே விழித்தெழாமல் பள்ளிவாகனங்கள் விபத்துக்குள்ளாகும்போது மட்டும் ரொம்ப யோக்கியர்கள் போல எல்லா பள்ளி வாகனங்களையும் ஆர்.டி.ஓ ஆபீசிற்கு வரச்சொல்லி சோதனையிடும் அதிகாரிகளின் கடமை உணர்ச்சியை நினைக்கும் போது தலையிலடித்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை நமக்கு!.

சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதனை கொன்ற ரவுடிகளை ஆரம்பத்திலேயே களையெடுக்காமல் காவல்துறையின் கைகளை கட்டிப்போட்ட காவல்துறை உயரதிகாரிகளுக்கு எந்தவித தண்டனையுமில்லையா?...

ஆல்வின் சுதனை கொன்ற ரவுடிகள்மீது ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையின் கைகளை கட்டிப்போட்ட உயரதிகாரிகளுக்கு தண்டனை என்ன தெரியுமா?... வெறும் இடமாற்றம்... இந்த இடமாற்றம்தான் அவர்கள் செய்த தவறுக்கு தண்டனையென்றால் அவர் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் இடத்திலும் அதேப்போல ரவுடிகளை வளரவிடமாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதமிங்கே?...

நிதிநிறுவன மோசடி வழக்குகள் ஏராளமிங்கே. ஆனால் இதுவரையிலும் எதாவது ஒரேயொரு நிதிநிறுவன அதிபராவது தண்டனை பெற்றிருக்கிறாரா?... மோசடி செய்தவர்கள் அனைவருமே மோசடி செய்த பணத்திலேயே வழக்குக்கும் செலவு செய்து கொண்டு வாழ்க்கைக்கும் செலவு செய்து கொண்டு சொகுசாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வழக்குகளின் கதி என்னானது என்று எடுத்துக் கூறுவதற்குகூட இங்கே எந்தவொரு ஊடகத்திற்கும் மனமில்லை. பரபரப்பு செய்திகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் மக்களின் மனநிலையும், ஊடகங்களின் நடைமுறையும் பல பழைய வழக்குகளின் ஊத்திமூடப்பட்ட நிலையை வெளிக்கொண்டு வருவதேயில்லை. (என்னைப்பொருத்தவரை 2ஜி ஊழல்கூட அல்ரெடி இந்த வரிசையில் சேர்ந்தாகிவிட்டது!)

இங்கே ஏதாவது ஒரேயொரு ஊழல் அரசியல்வாதியாவது கடுமையான தண்டனை பெற்றதற்கான வரலாறுகளோ, இல்லை... கடுமையான தண்டனை பெறுவதற்கான சாத்தியக்கூறுகளோ உண்டா?...!

வெறுமனே கசாப்பை தூக்கிலிட்டுவிட்டு தீவிரவாதத்தையே அடியோடு ஒழித்தது போலவும், நீதியை நிலைநாட்டியது போலவும் மார்தட்டிக்கொள்ளும் அரசும், நீதிமன்றங்களும் இன்னும் கொஞ்சம் ஆழச்சிந்திக்கவேண்டும். அந்தத்தீவிரவாத தாக்குதலில் வெளிவந்த மற்றுமொரு ஊழல் தரமற்ற புல்லட் புரூஃப் ஜாக்கெட். அந்த ஊழலை மறைக்க அதன் அத்தனை ஆதாரங்களும் வெகு சாதாரணமாய் அழிக்கப்பட்டதை இங்கே எத்தனை மீடியாக்கள் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது?...

ஜாமீன்களும், வாய்தாக்களும், அப்பீல்களும் திருத்தி எழுதப்படாதவரை இங்கே சட்டம் வெறும் செல்லாக்காசுதான். நீதி என்பது நிதி உள்ளவன் வகுத்ததுதான்.

குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பமுடியாத சூழலும், கடுமையான தண்டனைகளும் நிறைவேற்றப்படாதவரை இங்கே குற்றங்களும், ஊழல்களும் குறையவேப்போவதில்லை என்பதுதான் நிஜம்.

கட்டுரையை படித்து முடித்த உங்களுக்கு ‘’இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப்போகட்டும்’’ என்ற பழைய வில்லன் நடிகர் பி.எஸ்.வீரப்பாவின் டயலாக் நியாபகத்துக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!!!
 
 
 

Thursday, November 15, 2012

குழந்தையும் தெய்வமும்...!


தீபாவளி தினம்... காலைப்பொழுது... எனது மனைவி பூஜையறையில் விளக்கேற்றிக்கொண்டிருந்தாள்... நான் சமையலறையில் எனது நான்கு வயது மகனுக்கு ஊட்டுவதற்காக தோசை தயார் செய்து கொண்டிருந்தேன். பூஜையறையில் எனது மனைவிக்கு உதவி செய்து கொண்டிருந்த எனது ஏழு வயது மகள் திடீரென்று கையில் வண்ண வண்ண மலர்களோடு என்னிடம் ஓடி வந்தாள்.

டாடி... நான்  சாமி ரூம்ல ஃபோட்டோவுக்கெல்லாம் பூ வச்சிட்டு இருக்கேன். சுப்பையா தாத்தா ஃபோட்டாவுக்கு பூ வைக்கனும்(சுப்பையா தாத்தா என்பது எனது தந்தை). சுப்பையா தாத்தாவுக்கு என்ன கலர் புடிக்கும் டாடி?... ஒரு கணம் யோசித்து நான் ‘’தெரியலையேம்மா’’ என்றேன்.

என்ன டாடி... இவ்வளவு பெரிய ஆளா வளந்திருக்கீங்க... உங்க டாடிக்கு என்ன கலர் புடிக்கும்னு உங்களுக்குத்தெரியாதா?... உங்களுக்கு என்ன கலர் புடிக்கும்னு நான் சொல்லட்டா?... உங்களுக்கு ஸ்கை புளூ கலர் புடிக்கும். மம்மிக்கு மெரூன் கலர் புடிக்கும். அம்மா ஆயாவுக்கு கிரீன் கலர் புடிக்கும்... என்று அடிக்கிக்கொண்டே பூஜை ரூமுக்குள் நுழைந்து கொண்டாள்.

எனது மகளின் கேள்வி என்னில் எழுப்பிய உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளைத் தேடுவதென்பது முடியாத காரியம். ஏழே வயதான எனது மகளுக்கு எனக்கு என்ன கலர் பிடிக்குமென்பது தெரிந்திருக்கிறது. ஆனால் முப்பத்தி நான்கு வருடங்கள் என்னோடு வாழ்ந்து மறைந்த எனது தந்தைக்கு என்ன கலர் பிடிக்குமென்பது தெரியாமலேயே நானும் வாழ்ந்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போது வித்தியாசமான உணர்வுகள் நெஞ்சைப்பிசைந்தது.

தலைமுறை இடைவெளியென்பது இதுதானா?... எனது தந்தையுடன் நான் வாழ்ந்த காலங்களில் அதிகமாய் அவரிடம் பேசியதுகூட இல்லை. இவ்வளவுக்கும் சிறுவயதில் என்னை அவரது தோளிலும் மார்பிலும் தாங்கி கதைகள் கூறி வளர்த்தவர். ஏனோ எனது வயது வளர வளர அவருக்கும் எனக்குமான இடைவெளியும் வளர்ந்து போனது. நான் மட்டுமல்ல. எனது பள்ளிப்பருவ நண்பர்கள் அனைவரின் நிலையும் கூட இதுதான். எங்கள் எவருக்கும் தந்தையுடனான நெருக்கம் என்பது இல்லாமல் போனதை புரியாமலேயே வளர்ந்து வெவ்வேறு ஊர்களில் வேறூன்றிப்போனோம்.

குழந்தைகளின் உலகம் அலாதியானது. அளவிடமுடியாதது. அது தேவதைகள் வாழும் உலகம். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சொர்க்கம் என்றால் மிகையாகாது. இன்று பல தாம்பத்ய உறவுகள் அனுசரித்து வாழப்பழகிக்கொண்டதன் பின்னனியில் அவர்கள் குழந்தைகளுக்கான வாழ்க்கைப்பாதை வடிவமைக்கப்பட்டிருப்பது பலபேர் அறியாமலேயே தொடர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைமுறை!  நாமும் குழந்தைகளாயிருந்து வளர்ந்தவர்கள்தான். ஆனாலும் குழந்தைத்தனம் தொலைத்து வாழ்க்கைப்புரிதல்கள் கற்றுக்கொண்டு வளரத்தொடங்கிய பொழுதுகளில் பலவித வாழ்க்கைப்பாடங்களை கற்றுக்கொள்ளாமலேயே வாழப்பழகியிருக்கிறோம் என்பது நிதர்சனம்!

குழந்தைகளின் மழலைக் கேள்விகள் பல நேரங்களில் நமக்கு வாழ்க்கையில் கற்றுக்கொள்ளாத பலவிதமான பாடங்களை கற்றுத்தருவதாய் மாறிப்போவது ஆச்சர்யம்தான்!!! சும்மாவா சொல்லியிருப்பார்கள் ''குழந்தையும் தெய்வமும் ஒன்று'' என்று?....