SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, October 25, 2012

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமீ...!!!


ஐயா எசமானுங்களே... உங்க எல்லாருக்கும் ஒரு சாமான்ய வெவசாயியோட வணக்கமுங்க!

வெவசாயியா? இன்னமுமா அப்படியொரு கூட்டம் இருக்குன்னு நீங்க யோசிக்கிறது புரியுதுங்க! ஆனா இன்னமும் நாங்க கொஞ்சபேரு உசுரோடத்தான் இருக்கோமுங்கய்யா! என்ன பண்றதுங்க? சேத்துல நாத்து நடறதத் தவிர நமக்கு வேறெந்த தொழிலும் தெரியாதுங்க.

உங்களுக்கென்னங்க?... நீங்கல்லாம் கம்ப்யூட்டரும் கொக்கோகோலாவும் காய்ஞ்சரொட்டியும்னு வாழப்பழகீட்டீக. நாம அப்பிடியீல்லீங்க... இன்னமும்கூட பழையசோறும் வெங்காயமும், கஞ்சித்தண்ணியும் கருப்பட்டியும் நம்ம வூட்டவுட்டு போகலீங்க!

பயமுறுத்தி கொஞ்சமும், எங்க கஷ்டத்தை பயன்படுத்தி கொஞ்சமுமா வெள்ளாம பண்ண விளைநிலத்தையெல்லாம் வூடுகட்டுற விலைநிலமா மாத்திப்புட்டீக! மேலாடை போடாம வேல பாக்குற எங்களுக்கு மிச்சமிருக்கிற கோவணத்தையும் எப்போ உருவப்போறீகளோன்ற பயம் மட்டும்தான் மிஞ்சிக்கெடக்குதுங்கய்யா...

இலவசமா கரண்ட் குடுக்கறோம்... வெவசாயத்துக்கு முக்கியம் குடுக்கறோம்னு நீங்கல்லாம் மாத்தி மாத்தி மேடை போட்டு பேசும்போதெல்லாம் எங்க வவுறு எரியுது எசமான்! டீக்கடைக்கு டீக்கடை பேப்பரை படிச்சிப்புட்டு கரண்ட் பிரச்சினையத்தான் பேசிக்கிட்டிருக்கிறாக. ஆனா கட்சி கூட்டத்துக்கும், கல்யாண வூட்டுக்கும் செனரேட்டர் இல்லாமலே தெருவெல்லாம் வெளக்கு போட்டு ஜொலிக்க வைக்கிறீக... அது எப்படி எசமான் முடியுது உங்களால?... எங்களுக்கு தூங்குறதுக்கு குளுகுளு மெசின் போட கரண்ட் வேணாம். அட எங்க வூட்டு புள்ளைங்க படிக்கிறதுக்குகூட கரண்ட் வேணாம் எசமான். அதுக்கெல்லாம் ரேசன்கடையில கால்கடுக்க நின்னு கெஞ்சி கூத்தாடி வாங்குன மண்ணெண்ணை வெளக்குல படிச்சிக்குமுங்க! ஆனா எங்க வெள்ளாமைக்கு தண்ணி வேணுமே எசமான். அக்கம்பக்கத்து மாநிலத்துக்காரன் தண்ணி வுட்டாலும் வுடலன்னாலும் எங்க பயிருங்களுக்கு அது புரியறதில்லயே எசமான். எப்போ கரண்ட்ட வுடுவீகன்னு தெரியாம ராப்பகலா வயக்காட்டுலயே காத்துக்கெடக்கோம். பல பயலுக நடுராத்திரி கரண்ட்டுல தண்ணி பாய்க்கிறேன்னு போயி பாம்பு கடிச்சி பரலோகம் போனதுதான் மிச்சம்.

படிக்காத பயபுள்ளைக நாங்க... எங்களுக்கு ஒன்னு மட்டும் புரியறதில்ல எசமான். மழை கொட்டுறப்பல்லாம் வெள்ளத்தண்ணி கடலுக்குள்ள வீணாப்போவுது. ஆனா கோடி கோடியா செலவு பண்ணி கடல்தண்ணிய குடிதண்ணியா ஆக்கப்போறிகன்னு கேள்விப்பட்டேன்... அப்பிடீங்களா எசமான்?... ஏன் எசமான்... கடல்தண்ணிய காச செலவுபண்ணி குடிதண்ணியா ஆக்கிறதுக்கு பதிலா வீணாப்போற வெள்ளத்தண்ணிய உருப்படியா ஏதாவது திட்டம்போட்டு உங்களால சேத்துவைக்கமுடியாதுங்களா?... அப்பிடி ஏதாவது பண்ணீகன்னா கண்டவனைப்போயி தண்ணிக்கு நாம கையேந்தவேண்டிய நெலம இருக்காதே எசமான்?...
 

ஏதோவொரு இந்தி நடிகர் எங்கள மாதிரி ஒரு வெவசாயி தற்கொலை பண்றதப்பத்தி படம் எடுத்து நம்ம பிரதமருக்கு போட்டுக்காமிச்சாராம்ல?... அவரும் படத்தைப்பாத்துட்டு நல்லாயிருக்குன்னு சொல்லிப்புட்டு போயிட்டாராம்... அவரு என்ன பண்ணுவார்ங்க பாவம்?... அவரால முடிஞ்சது அம்புட்டுதேன்! அவுக ஆளுங்க அடிக்கிற ஊழல் பணத்துக்கு படிச்சவகளாலேயே பூஜ்யம் போடமுடியாதுன்றாக... அம்புட்டு பணமாமே?... நெசமாங்களா அது?

விவசாயக்கடன், விதைநெல்லு, மானியம் அது இதுன்னு வாய்கிழிய பேசிக்கிறாக சிலபேரு. ஆனா ஒவ்வொரு வாட்டியும் அதுக்கெல்லாம் படிக்காத பயபுள்ளைக நாங்க ஆபிஸ் ஆபீசா ஏறி இறங்கறதுக்குள்ள நாங்க குடிச்ச கஞ்சித்தண்ணியெல்லாம் கண்ணுவழியா வந்துருதுங்க எசமான். இந்த லட்சணத்துல விவசாயி கால்சென்டர்னு வேற ஏதோ விளம்பரமெல்லாம் காமிக்கிறீக. வெவசாயம் பண்றதுக்கே வக்கத்து போயி கெடக்குற எங்களை கால்சென்டருக்கு போன் பண்ணி என்னத்த கேக்க சொல்றீக சாமீ?...  நிலமில்லாத வெவசாயிக்கு ரெண்டு ஏக்கர் நெலமுன்னு சொன்னீக... எதுக்குமே பிரயோசனப்படாத நெலத்த எங்க தலையில கட்டுனீகன்னா அதை வச்சிக்கிட்டு நாக்கா வழிக்கிறது சாமீ நாங்க?... கந்துவட்டி, கஞ்சித்தொட்டி, எலிக்கறின்னு எல்லாமும் பட்டபிறகு இன்னமும் ஏதாவது மிஞ்சியிருக்கும்னு நெனக்கிறீகளா நீங்க?... அய்யா... எசமானர்களே... விலங்குகளையெல்லாம் ஏதோ அழிந்த இனம், அழிந்து கொண்டிருக்கும் இனம், அழியப்போற இனமுன்னு வகைப்படுத்துவீகளாமே... அதேமாதிரி வெவசாயிங்க எங்களையும் இப்போதைக்கு அழிந்துகொண்டிருக்கும் இனம், விரைவில் முழுசா அழியப்போற இனமுன்னு லிஸ்ட் போட்டீகன்னா புண்ணியமா போகும் சாமீ!

ஆத்து மணலையெல்லாம் அள்ளி அள்ளி விக்கிறோம். பிளாஷ்டிக்கெல்லாம் கொட்டி நெலத்தையெல்லாம் மூடுறோம். கழிவுத்தண்ணியெல்லாம் கெடச்ச ஆத்துக்குள்ள கூச்சமில்லாம வுடுறோம். ஏன் எசமான்... ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னாடி இந்த பாட்டில்லேயும், கேன்லேயும் தண்ணிய விக்கிறதெல்லாம் இல்லியே?... அப்போல்லாம் நாம நல்ல தண்ணிய காசுகுடுத்து வாங்கமாலேயே குடிச்சிட்டிருந்தோமே... அதெல்லாம் மறந்தீட்டீகளா சாமீ?...


இந்தியா ஒரு வெவசாயநாடுன்னு நாங்க மழைக்கு ஒதுங்குன இஸ்கூல்லயிருந்து புள்ளைங்க படிக்கிற சத்தம் கேட்டுச்சு... சிரிப்பா சிரிக்கிற எங்க பொழப்ப நெனச்சப்ப சிரிப்புதான் வந்திச்சு எசமான். விதவிதமா சம்பா, பொன்னி, பாசுமதின்னு வெளயவைக்கிறது நாங்க. ஆனா எங்க வூட்டு புள்ளைக இன்னமும் ரேசன்ல போடுற புழுத்த அரிசிதான் சாப்பிடறோம்ன்றது உங்களுக்கெல்லாம் தெரியுமுங்களா? பொறுத்து பொறுத்து பாத்திட்டு நாங்களும் திருந்திட்டோமுங்க. எங்க வூட்டு புள்ளைகள இப்போல்லாம் வயல்ல இறக்கிறது இல்லைங்க. நாங்க படுற நாறப்பொழப்பு அவுகளுக்கும் வேண்டாமுன்னு கடனை உடனை வாங்கி கஷ்டப்பட்டாவது அவுகளை படிக்கவைக்கிறோமுங்க. எங்கள்ல பலபேரு கூலிவேலைக்கு போயிட்டாலும் ஏதோ படிப்பு ஏறாத பயபுள்ளைக கொஞ்சபேரு இன்னமும் பரம்பரைத்தொழிலை செய்யிறதால வெவசாயம் முழுசா சாவாம குத்துயிருமா குலையுயிருமா கெடக்குதுங்க.

வெளயறபூமியில பாதிக்கு மேல வித்தாச்சு. வருங்கால சந்ததியில வெவசாயம் பாக்க ஆளில்லாம குறைஞ்சாச்சு. நாங்க சேத்துல கால்வைக்கலன்னா நீங்க சோத்துல கை வைக்கமுடியாதுன்ற வசனமெல்லாம் மறந்தாச்சு. தண்ணியப்பத்தின கவலையெல்லாம் ஆட்சியாளர்களும் துறந்தாச்சு. உள்நாட்டுல உற்பத்தி பத்தலையா?... அதைப்பத்தியெல்லாம் ஆராய்ஞ்சிக்கிட்டு இருக்காம, இறக்குடா கப்பல்ல டன் டன்னா தானியத்தைன்னு இறக்குமதி பண்ணி பழகியாச்சு. இனிமே வெவசாயி எவன் எக்கேடு கெட்டா உங்களுக்கென்ன எசமான்?...

மிச்சமிருக்கிற எங்க கோவணத்தையும் உசிரையும் எப்படியும் காப்பாத்திக்க உழைச்சு உழைச்சு காய்ப்பு ஏறுன எங்க கைக்கு தெரியும் எசமான். ஆனா எனக்கு ஒரேயொரு உண்மை மட்டும் தெரிஞ்சாகனும் சாமீ... இருக்குற வெவசாயிக்கும் வெவசாயத்துக்கும் சமாதி கட்டிப்புட்டு எத்தனை நாளக்கித்தான் இறக்குமதியிலேயே ஓடப்போவுது உங்க வாழ்க்கைன்னு எங்களுக்காக இல்லாட்டியும்... உங்களுக்காக இல்லாட்டியும்... உங்க வருங்கால சந்ததிக்காகவாவது ஒரே ஒருமுறை யோசிச்சு சொல்லுங்க சாமீ...!!!
 
 
இல்லேன்னா இறக்குமதிக்கு வழியில்லாம நிச்சயமா போகப்போற ஒருநாளு உங்க வூட்டுல கார் இருக்கும். குளுகுளு வசதியிருக்கும். பொட்டி நெறய பணம் இருக்கும். ஆனா... பசிக்கிற வவுத்துக்கு போடறதுக்கு ஒருபுடி சோறு கெடைக்காது சாமீ!!!

 

8 comments:

 1. ஒரு விவசாயி எப்படில்லாம் புலம்புகிறார் என்பதை அப்படி படம் பிடிச்சி காட்டிருக்கிங்க...

  அருமையான பதிவு நண்பரே!

  ReplyDelete
 2. அட்டகாசமான பதிவு நண்பரே...பாமரன் கடிதம் படித்த மாதிரி நச்னு இருக்கு.....

  ReplyDelete
 3. இன்றைய விவசாயியின் நிலமையை அப்படியே சொல்லிய பதிவு!

  ReplyDelete
 4. இன்றைய நிலை... உண்மை நிலை...

  http://www.sangkavi.com/2012/11/8112012.html மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்...
  நன்றி...

  ReplyDelete