SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Monday, October 1, 2012

இனியும் கிட்டுமா தமிழீழம்?...

 
எவருக்கும் ஆதரவாகவோ, இல்லை... எவருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கிலோ இக்கட்டுரை எழுதப்படவில்லை. இதிலிருக்கும் அனைத்தும் தனித் தமிழீழக்கனவு காணும் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் உறைக்கவேண்டிய நிதர்சனமான உண்மைகள் மட்டுமே!!!

ஒரு காலத்தில் (ஏன் இன்னமும் கூட) நானும் தனித்தமிழீழம் கிடைக்கும்... ஈழத்தமிழர்கள் நிம்மதியாக வாழ வழி பிறக்கும்... என்றெல்லாம் வெறிக்கனவோடு வாழ்ந்தவன்தான். ஆனால் இன்றைய சூழ்நிலைகள் இனியும் ஈழம் கிட்டுமா?... என்ற நம்பிக்கையற்ற வார்த்தை வரை எனைக் கொண்டு வந்திருக்கிறது!

 விடுதலைப்புலிகள் இருந்தவரை சில அறிவு ஜீவிகள் புரட்சியால் மட்டுமே தனித்தமிழீழம் கிட்டாது. விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட்டால்தான் அரசியல் தீர்வு மூலம் தமிழீழம் கிட்டும் என்று புத்திசாலித்தனத்தை பறை சாற்றினார்கள். ஆனால் விடுதலைப்புலிகளின் அழிவோடு இலங்கையில் தமிழினம் வேரறுக்கப்படும் என்பது இப்போது மெல்ல வெட்ட வெளிச்சமாகிக்கொண்டிருக்கிறது. அரசியல் தீர்வு, நாடு கடந்த அரசு, மறுபுணரமைப்பு என்பதெல்லாம் பரண் மேல் செத்த எலிபோல நாறிக்கிடக்கிறது. ஒரு சில தமிழுணர்வாளிகளின் தீக்குளிப்புகள் கூட பிரயோஜனமற்ற செயலாய் மாறிப்போனது. சொந்த இனம் வேரறுக்கப்பட்டாலும் அதை ஏதோவொரு வெளிநாட்டு பிரச்சினை போல இன்னமும் தமிழக மக்கள் பெரிதாய் அலட்டிக்கொள்ளாமல் அவரவர் வாழ்க்கையில் பிஸியாய் பயணித்துக்கொண்டிருப்பது நிச்சயமாய் தமிழினத்திற்கு விதிக்கப்பட்ட சாபம்தான்.

சரி... நடப்பது நடக்கட்டும். இனி தமிழீழம் என்பது வெறும் கனவுதானா?...

இந்தியாவில் இப்போதைய மத்திய அரசும் சரி, இல்லை இனிவரும் தேர்தல்களில் புதிதாய் மாறி அமையும் அரசானாலும் சரி... தமிழீழத்திற்கான முன்னெடுப்புகள் இனி இந்தியாவில் இருந்து எதுவும் இல்லை என்பது நிதர்சனம்.

தமிழகம்?... அதுவும் அப்படித்தான். மாநில சுயாட்சி உரிமையற்ற இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி... தமிழீழம் என்பது அவர்களைப் பொறுத்த வரையிலும் மிகப்பெரிய ஓட்டு வங்கி இல்லை என்பதால் பெரிதாய் அலட்டிக்கொள்ள ஏதுமில்லை. இங்கே வீதிக்கொரு சங்கம், சாதிக்கொரு கட்சி என்று பிளவுபட்டுக்கிடக்கும் இனத்துக்குள் எங்கோ நரகத்தில் தவிக்கும் ரத்த பந்தங்களை நினைத்து கவலைப்பட நேரமேது?... நமக்கு புதுப்பட ரிலீஸ்கள், உலகக்கோப்பை கிரிக்கெட், வழக்கமான பண்டிகைகள், வாரயிறுதி கொண்டாட்டங்கள் என்று ஆயிரம் வேலைகள்!!! எவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன வந்தது?... ஏதோ கொஞ்சபேர் மெழுகுவர்த்திகளை ஏந்தி மெரினா பீச்சில் வலம் வருவோம். முடிந்தால் வடமாநில எல்லையில் போய் நின்று கூப்பாடு போட்டு வருவோம். தீக்குளித்தவர்களின் நினைவேந்தல்களை வருடத்திற்கு ஒருநாள் நினைவுபடுத்திக்கொள்வோம். போஸ்டர்களிலும், நம்மைப்போன்ற கையாலாகாதவர்கள் இணையத்திலும் ஈழத்தைப்பற்றி புரட்சி செய்வோம்! ஆனால் இதெல்லாம் தமிழீழத்தை பெற்றுத்தருமா?... இல்லை, இலங்கையில் அடிமைகளாக ஆகிப்போன தமிழினத்தை முழுச்சுதந்திரக்காற்றை சுவாசிக்கச்செய்யுமா?...

சரி... புலம் பெயர் ஈழத்தமிழர்கள்?... அவர்களால் முடிந்த முன்னெடுப்புகளை நடத்திக்கொண்டிருந்தாலும் பெரிதாய் ஒரு முடிவெதுவும் கிட்டப்போவதில்லை என்பது அவர்களுக்கே தெரிந்திருக்கும். வெறுமனே வெளிநாட்டு வீதிகளில் கொடி பிடித்து நடப்பதாலும், கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்துவதாலும், வெவ்வேறு நாடுகள் அதையெல்லாம் அனுமதித்து விட்டதால் மட்டுமே தமிழீழம் கிட்டும் என்பது எவருக்கும் நம்பிக்கையில்லா ஒரு வீண்வாதம் மட்டுமே! தமிழீழ விடுதலைப்போரில் புலம் பெயர் ஈழத்தமிழர்கள் விடுதலைப்புலிகளுக்கு அளித்து வந்த பொருளாதார ஒத்துழைப்பு மட்டுமே தமிழீழ மலர்ச்சிக்கு அவர்கள் இட்ட சரியான வித்து. மற்றபடி அவர்களின் இன்றைய நிகழ்வுகள் எதுவுமே தமிழீழத்தைப் பெற்றுத்தராது என்பது அவர்களுக்கே தெரிந்திருக்கும் என்பது என் எண்ணம்...

சரி... அடுத்து உலக நாடுகள்?... சொந்த வீட்டுக்குள்ளேயே ஆயிரம் பிரச்சினைகள்... எவன் போய் அடுத்த வீட்டுக்குள் மூக்கை நுழைப்பான்?... என்றைக்கு சீனா இலங்கை அரசுக்கு ஆதரவாக இலங்கைக்குள் காலடி எடுத்து வைத்ததோ அன்றே உலக நாடுகளின் கரங்கள் இலங்கை விஷயத்தில் சுருக்கப்பட்டன. இந்தியாவின் மீதான ஆதிக்கத்திற்காக சீனா இலங்கை அரசுடன் கை கோர்த்திருப்பது தமிழீழ மீட்டெடுப்புக்கான மாபெரும் தடை என்பது கொஞ்சம் ஆழச் சிந்திப்பவர்களுக்கு விளங்கலாம். அமெரிக்காவும் இலங்கையில் கால்பதிக்கும் எண்ணத்துடன்தான் ஆரம்பத்தில் கொஞ்சம் உதவ முயன்றது. சீனாவின் கால்பதிப்பிற்கு பிறகு இனி அமெரிக்காவின் உதவிக்கரமும் நீளப்போவதில்லை.

ஐ.நா. சபை?... இது வெளிப்பார்வைக்கு உலகின் நாட்டாமை போலத்தெரிந்தாலும் உண்மையில் இதுவொரு கைப்பாவை அமைப்பு. சுயமாய் ஏதும் செய்ய இயலாத ஒரு பொம்மைதான் ஐ.நா என்பது எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்பது விளங்கவில்லை. குட்டிநாடு இலங்கை ஐ.நா வின் கண்களுக்குள் விரலை விட்டு ஆட்டும்போதே தெரிந்திருக்கும்... இனியும் நாம் ஐ.நா வை நம்பினால் நம்மை விட முட்டாள் எவருமில்லையென்பது!

இலங்கை அரசு?... என்னைப் போன்றே பலதமிழர்களின் மனதில் இன்னுமொரு அடிமனது எண்ணமும் உண்டு. இப்போதிருக்கும் ராஜபக்சே அரசு எப்படியும் சிறிது காலத்துக்குள் ஒரு முடிவுக்கு வரும். அப்போது நிச்சயம் ஈழத்தமிழர்களின் வாழ்வுக்கு ஏதேனும் விடிவுகாலம் பிறக்குமென்று எண்ணலாம். ஆனால் அதுவரையிலும் இலங்கையில் தமிழின அடையாளங்கள் நிலைத்திருக்குமா?... அப்படியே புது அரசு அமைந்தாலும் அதுவும் நிச்சயம் ‘’சிங்கள’’ அரசாங்கமாக மட்டுமே இருக்குமொழிய நமது ஆசைகள் எதுவும் நிறைவேறப்போவதில்லை. அதேபோலத்தான் ராஜபக்சே போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார் என்ற கனவும். ராஜபக்சே போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என்று இன்னமும் நம்பிக்கொண்டிருப்பதைப் போன்ற அடி முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க சாத்தியமேயில்லை!

விடுதலைப்புலிகள்?... இருக்கிறார்களா... இல்லையா என்றே தெரியாத கானல் நீர் கதையாகிப்போனது. தனித்தமிழீழத்திற்கு இருந்த ஒரே நம்பிக்கை... இன்னமும் கொஞ்சபேர் மனதில் அதே நம்பிக்கையுடனும், கொஞ்சம் பேர்கள் இனி சாத்தியமில்லை எனும் அவநம்பிக்கையுடனும் வாழப்பழகியாகிவிட்டது. பொட்டு அம்மான் இருக்கிறார்... தலைவரே இன்னும் உயிருடன்தான் இருக்கிறார்... விடுதலைப்புலிகளின் முக்கிய பிரிவு ஒன்று இன்னமும் வன்னிக்காட்டுக்குள் இருக்கிறது... என்றெல்லாம் உலவும் செய்திகள், வெறும் கதையா? இல்லை மக்களின் அடிமனது கனவுகளா?... என்பது புரிபடாத மர்மமாகிப்போனது! விடுதலைப்புலிகள் இருக்கிறார்களோ இல்லையோ... ஆனால் அவர்களின்றிப்போனால் இனி தனித்தமிழீழம் சாத்தியமேயில்லை என்பது நெஞ்சைச்சுடும் நிஜம்.


 ஈழத்தமிழ் அடிமைகள்?...

தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா?... இப்பயிரை எங்கள் கண்ணீர் விட்டல்லோ வளர்த்தோம்?... சுதந்திரம் முழுவதுமாய் பறிபோயிற்று. சொந்த நாட்டிலேயே எதிர்காலத்திற்கு உத்திரவாதமற்ற அடிமைகளாக வாழப்பழகிவிட்டது. இனமும், குழந்தைகளும் மிஞ்சுமா என்பது விடை தெரியாத சந்தேகமாகிவிட்டது. உணர்வுகள் எல்லாம் செத்துப்போனதோடு மட்டுமில்லாமல்... இவர்கள் காப்பார்கள்... அவர்கள் காப்பார்கள் என்ற கனவுகளும் கொஞ்ச கொஞ்சமாய் செத்து முழுதாய் முடிந்து போனது. இனி எஞ்சியிருக்கும் உடம்பு வாழ்ந்தால் என்ன? மறைந்தாலென்ன?... தனித்தமிழீழம் இனி மலர்ந்தாலும்... இல்லை நிரத்தரமாய் மறைந்தாலும் அதைப்பற்றிய எண்ணங்களையும் கனவுகளையும் விதைக்க எங்கள் நெஞ்சிலும், உடலிலும் இனி உரமுமில்லை... தெம்புமில்லை!!!

 

10 comments:

 1. அருமையான இடுகை சகோ! அனைத்துக் கருத்துக்களுமே ஏற்புடையவை! மேலும் நாம் வெளிநாட்டு வீதிகளில் கொடிபிடிப்பதற்கு வேறு காரணம் இருக்கிறது! அது குறித்து தனி பதிவு ஒன்று எழுதுகிறேன்!

  நடுநிலைமயான இடுகைக்கு நன்றி சகோ :))

  ReplyDelete
  Replies
  1. எனது கருத்துக்களுக்கு எதிர்ப்புகள் வரும் என்று எண்ணினேன். அனைத்து கருத்துக்களுமே ஏற்புடையவை என்று புரிந்து கொண்டமைக்கு நன்றி பிரதர்...

   Delete
 2. இது தான் யதார்த்தம்.தொடருங்கள்.நன்றி.

  ReplyDelete
 3. ”ஈழம் கனவு
  என்றேன் நான்
  அவர்களும்...
  ஈழம் கனவுதான்
  என்கிறார்கள்”

  தேவையான அலசல் !

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கு நன்றி தோழமையே! கனவு நனவாக என்றாவது ஒருநாள் சாத்தியப்பட்டாலும் சந்தோஷமே!

   Delete
 4. நடைமுறை யதார்த்தங்களால் உங்கள் கருத்தில் அவநம்பிக்கை மிகுந்து காணப்படுகிறது என நினைக்கின்றேன்.நிலம்,புலம் இணைக்கும் வலிய சக்தியில்லாமல் போனதும்,தமிழகம் ஒருமித்த கருத்து இருந்தாலும் தனி மனித ஈகோ சார்ந்து பிரிந்து நிற்பதாலும் நம்பிக்கையில்லாமல் போவதற்கான காரணங்கள்.தமிழர்களின் குரல்களையும் மீறி உலக அரசியல் களம் சாதகமாக இல்லையென்ற போதிலும் ஏதாவது ஒரு சிறு நெருப்பில் புதிய ஒளிக்கான சாத்தியங்கள் உருவாகவும் கூடும்.

  மனம் தளர்ந்து போவதை விட விளைவுகள் எதுவாகிலும் நம்பிக்கை விதைகளை விதைப்பது அவசியம்.

  ReplyDelete
 5. நிகழ்வுகள் இரு பக்கம் சார்ந்தது.

  ReplyDelete
 6. சிங்களவனுக்கு ஒரு சாதி,ஒரு மதம், ஒரு இனம், ஒரு மொழி ,ஒருகடவுள்,ஒருநாடு இப்படி கற்பிக்கப்பட்டுள்ளது. தமிழர் சாதிப் பிரிவிலிருந்து விளகாதவரை [ புலம் பெயர் ஈழத்தமிழரும் ஈழத்தமிழரும்]எதுவுமே சாத்தியமில்லை.

  ReplyDelete
  Replies
  1. மிகச் சரியான புள்ளியைச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள்

   Delete
 7. ippathaan ungka pathivaip paarkkiReen. nalla ezhuthuringka. unmaiyana purithal.

  ReplyDelete