SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, October 25, 2012

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமீ...!!!


ஐயா எசமானுங்களே... உங்க எல்லாருக்கும் ஒரு சாமான்ய வெவசாயியோட வணக்கமுங்க!

வெவசாயியா? இன்னமுமா அப்படியொரு கூட்டம் இருக்குன்னு நீங்க யோசிக்கிறது புரியுதுங்க! ஆனா இன்னமும் நாங்க கொஞ்சபேரு உசுரோடத்தான் இருக்கோமுங்கய்யா! என்ன பண்றதுங்க? சேத்துல நாத்து நடறதத் தவிர நமக்கு வேறெந்த தொழிலும் தெரியாதுங்க.

உங்களுக்கென்னங்க?... நீங்கல்லாம் கம்ப்யூட்டரும் கொக்கோகோலாவும் காய்ஞ்சரொட்டியும்னு வாழப்பழகீட்டீக. நாம அப்பிடியீல்லீங்க... இன்னமும்கூட பழையசோறும் வெங்காயமும், கஞ்சித்தண்ணியும் கருப்பட்டியும் நம்ம வூட்டவுட்டு போகலீங்க!

பயமுறுத்தி கொஞ்சமும், எங்க கஷ்டத்தை பயன்படுத்தி கொஞ்சமுமா வெள்ளாம பண்ண விளைநிலத்தையெல்லாம் வூடுகட்டுற விலைநிலமா மாத்திப்புட்டீக! மேலாடை போடாம வேல பாக்குற எங்களுக்கு மிச்சமிருக்கிற கோவணத்தையும் எப்போ உருவப்போறீகளோன்ற பயம் மட்டும்தான் மிஞ்சிக்கெடக்குதுங்கய்யா...

இலவசமா கரண்ட் குடுக்கறோம்... வெவசாயத்துக்கு முக்கியம் குடுக்கறோம்னு நீங்கல்லாம் மாத்தி மாத்தி மேடை போட்டு பேசும்போதெல்லாம் எங்க வவுறு எரியுது எசமான்! டீக்கடைக்கு டீக்கடை பேப்பரை படிச்சிப்புட்டு கரண்ட் பிரச்சினையத்தான் பேசிக்கிட்டிருக்கிறாக. ஆனா கட்சி கூட்டத்துக்கும், கல்யாண வூட்டுக்கும் செனரேட்டர் இல்லாமலே தெருவெல்லாம் வெளக்கு போட்டு ஜொலிக்க வைக்கிறீக... அது எப்படி எசமான் முடியுது உங்களால?... எங்களுக்கு தூங்குறதுக்கு குளுகுளு மெசின் போட கரண்ட் வேணாம். அட எங்க வூட்டு புள்ளைங்க படிக்கிறதுக்குகூட கரண்ட் வேணாம் எசமான். அதுக்கெல்லாம் ரேசன்கடையில கால்கடுக்க நின்னு கெஞ்சி கூத்தாடி வாங்குன மண்ணெண்ணை வெளக்குல படிச்சிக்குமுங்க! ஆனா எங்க வெள்ளாமைக்கு தண்ணி வேணுமே எசமான். அக்கம்பக்கத்து மாநிலத்துக்காரன் தண்ணி வுட்டாலும் வுடலன்னாலும் எங்க பயிருங்களுக்கு அது புரியறதில்லயே எசமான். எப்போ கரண்ட்ட வுடுவீகன்னு தெரியாம ராப்பகலா வயக்காட்டுலயே காத்துக்கெடக்கோம். பல பயலுக நடுராத்திரி கரண்ட்டுல தண்ணி பாய்க்கிறேன்னு போயி பாம்பு கடிச்சி பரலோகம் போனதுதான் மிச்சம்.

படிக்காத பயபுள்ளைக நாங்க... எங்களுக்கு ஒன்னு மட்டும் புரியறதில்ல எசமான். மழை கொட்டுறப்பல்லாம் வெள்ளத்தண்ணி கடலுக்குள்ள வீணாப்போவுது. ஆனா கோடி கோடியா செலவு பண்ணி கடல்தண்ணிய குடிதண்ணியா ஆக்கப்போறிகன்னு கேள்விப்பட்டேன்... அப்பிடீங்களா எசமான்?... ஏன் எசமான்... கடல்தண்ணிய காச செலவுபண்ணி குடிதண்ணியா ஆக்கிறதுக்கு பதிலா வீணாப்போற வெள்ளத்தண்ணிய உருப்படியா ஏதாவது திட்டம்போட்டு உங்களால சேத்துவைக்கமுடியாதுங்களா?... அப்பிடி ஏதாவது பண்ணீகன்னா கண்டவனைப்போயி தண்ணிக்கு நாம கையேந்தவேண்டிய நெலம இருக்காதே எசமான்?...
 

ஏதோவொரு இந்தி நடிகர் எங்கள மாதிரி ஒரு வெவசாயி தற்கொலை பண்றதப்பத்தி படம் எடுத்து நம்ம பிரதமருக்கு போட்டுக்காமிச்சாராம்ல?... அவரும் படத்தைப்பாத்துட்டு நல்லாயிருக்குன்னு சொல்லிப்புட்டு போயிட்டாராம்... அவரு என்ன பண்ணுவார்ங்க பாவம்?... அவரால முடிஞ்சது அம்புட்டுதேன்! அவுக ஆளுங்க அடிக்கிற ஊழல் பணத்துக்கு படிச்சவகளாலேயே பூஜ்யம் போடமுடியாதுன்றாக... அம்புட்டு பணமாமே?... நெசமாங்களா அது?

விவசாயக்கடன், விதைநெல்லு, மானியம் அது இதுன்னு வாய்கிழிய பேசிக்கிறாக சிலபேரு. ஆனா ஒவ்வொரு வாட்டியும் அதுக்கெல்லாம் படிக்காத பயபுள்ளைக நாங்க ஆபிஸ் ஆபீசா ஏறி இறங்கறதுக்குள்ள நாங்க குடிச்ச கஞ்சித்தண்ணியெல்லாம் கண்ணுவழியா வந்துருதுங்க எசமான். இந்த லட்சணத்துல விவசாயி கால்சென்டர்னு வேற ஏதோ விளம்பரமெல்லாம் காமிக்கிறீக. வெவசாயம் பண்றதுக்கே வக்கத்து போயி கெடக்குற எங்களை கால்சென்டருக்கு போன் பண்ணி என்னத்த கேக்க சொல்றீக சாமீ?...  நிலமில்லாத வெவசாயிக்கு ரெண்டு ஏக்கர் நெலமுன்னு சொன்னீக... எதுக்குமே பிரயோசனப்படாத நெலத்த எங்க தலையில கட்டுனீகன்னா அதை வச்சிக்கிட்டு நாக்கா வழிக்கிறது சாமீ நாங்க?... கந்துவட்டி, கஞ்சித்தொட்டி, எலிக்கறின்னு எல்லாமும் பட்டபிறகு இன்னமும் ஏதாவது மிஞ்சியிருக்கும்னு நெனக்கிறீகளா நீங்க?... அய்யா... எசமானர்களே... விலங்குகளையெல்லாம் ஏதோ அழிந்த இனம், அழிந்து கொண்டிருக்கும் இனம், அழியப்போற இனமுன்னு வகைப்படுத்துவீகளாமே... அதேமாதிரி வெவசாயிங்க எங்களையும் இப்போதைக்கு அழிந்துகொண்டிருக்கும் இனம், விரைவில் முழுசா அழியப்போற இனமுன்னு லிஸ்ட் போட்டீகன்னா புண்ணியமா போகும் சாமீ!

ஆத்து மணலையெல்லாம் அள்ளி அள்ளி விக்கிறோம். பிளாஷ்டிக்கெல்லாம் கொட்டி நெலத்தையெல்லாம் மூடுறோம். கழிவுத்தண்ணியெல்லாம் கெடச்ச ஆத்துக்குள்ள கூச்சமில்லாம வுடுறோம். ஏன் எசமான்... ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னாடி இந்த பாட்டில்லேயும், கேன்லேயும் தண்ணிய விக்கிறதெல்லாம் இல்லியே?... அப்போல்லாம் நாம நல்ல தண்ணிய காசுகுடுத்து வாங்கமாலேயே குடிச்சிட்டிருந்தோமே... அதெல்லாம் மறந்தீட்டீகளா சாமீ?...


இந்தியா ஒரு வெவசாயநாடுன்னு நாங்க மழைக்கு ஒதுங்குன இஸ்கூல்லயிருந்து புள்ளைங்க படிக்கிற சத்தம் கேட்டுச்சு... சிரிப்பா சிரிக்கிற எங்க பொழப்ப நெனச்சப்ப சிரிப்புதான் வந்திச்சு எசமான். விதவிதமா சம்பா, பொன்னி, பாசுமதின்னு வெளயவைக்கிறது நாங்க. ஆனா எங்க வூட்டு புள்ளைக இன்னமும் ரேசன்ல போடுற புழுத்த அரிசிதான் சாப்பிடறோம்ன்றது உங்களுக்கெல்லாம் தெரியுமுங்களா? பொறுத்து பொறுத்து பாத்திட்டு நாங்களும் திருந்திட்டோமுங்க. எங்க வூட்டு புள்ளைகள இப்போல்லாம் வயல்ல இறக்கிறது இல்லைங்க. நாங்க படுற நாறப்பொழப்பு அவுகளுக்கும் வேண்டாமுன்னு கடனை உடனை வாங்கி கஷ்டப்பட்டாவது அவுகளை படிக்கவைக்கிறோமுங்க. எங்கள்ல பலபேரு கூலிவேலைக்கு போயிட்டாலும் ஏதோ படிப்பு ஏறாத பயபுள்ளைக கொஞ்சபேரு இன்னமும் பரம்பரைத்தொழிலை செய்யிறதால வெவசாயம் முழுசா சாவாம குத்துயிருமா குலையுயிருமா கெடக்குதுங்க.

வெளயறபூமியில பாதிக்கு மேல வித்தாச்சு. வருங்கால சந்ததியில வெவசாயம் பாக்க ஆளில்லாம குறைஞ்சாச்சு. நாங்க சேத்துல கால்வைக்கலன்னா நீங்க சோத்துல கை வைக்கமுடியாதுன்ற வசனமெல்லாம் மறந்தாச்சு. தண்ணியப்பத்தின கவலையெல்லாம் ஆட்சியாளர்களும் துறந்தாச்சு. உள்நாட்டுல உற்பத்தி பத்தலையா?... அதைப்பத்தியெல்லாம் ஆராய்ஞ்சிக்கிட்டு இருக்காம, இறக்குடா கப்பல்ல டன் டன்னா தானியத்தைன்னு இறக்குமதி பண்ணி பழகியாச்சு. இனிமே வெவசாயி எவன் எக்கேடு கெட்டா உங்களுக்கென்ன எசமான்?...

மிச்சமிருக்கிற எங்க கோவணத்தையும் உசிரையும் எப்படியும் காப்பாத்திக்க உழைச்சு உழைச்சு காய்ப்பு ஏறுன எங்க கைக்கு தெரியும் எசமான். ஆனா எனக்கு ஒரேயொரு உண்மை மட்டும் தெரிஞ்சாகனும் சாமீ... இருக்குற வெவசாயிக்கும் வெவசாயத்துக்கும் சமாதி கட்டிப்புட்டு எத்தனை நாளக்கித்தான் இறக்குமதியிலேயே ஓடப்போவுது உங்க வாழ்க்கைன்னு எங்களுக்காக இல்லாட்டியும்... உங்களுக்காக இல்லாட்டியும்... உங்க வருங்கால சந்ததிக்காகவாவது ஒரே ஒருமுறை யோசிச்சு சொல்லுங்க சாமீ...!!!
 
 
இல்லேன்னா இறக்குமதிக்கு வழியில்லாம நிச்சயமா போகப்போற ஒருநாளு உங்க வூட்டுல கார் இருக்கும். குளுகுளு வசதியிருக்கும். பொட்டி நெறய பணம் இருக்கும். ஆனா... பசிக்கிற வவுத்துக்கு போடறதுக்கு ஒருபுடி சோறு கெடைக்காது சாமீ!!!

 

Saturday, October 13, 2012

காமெடி கதம்பம்...!


என்னோட பழைய குப்பைகளையெல்லாம் சும்மா புரட்டிக்கிட்டு இருந்தப்போ சிரிக்கிறதுக்கும் கொஞ்சம் விசயங்கள் கிடைச்சுது. சரி நீங்களும் கொஞ்சம் சிரிப்பீங்களேன்னுதான் இதையும் பதிவாப்போடறேன். மத்தபடி இதிலிருக்கும் எந்தக் காமெடியும் என்னோட சொந்தப்படைப்பு இல்லை... இது வெறும் தொகுப்புதான் மக்களே...

         இந்தக் காமெடிக்கு சொந்தக்காரங்களுக்கெல்லாம் நன்றி சொல்லிக்கிறேன் சாமியோவ்...!

         சரி... இப்போ சிரிக்கலாம்...

வெள்ளக்காரன விஞ்சுற அளவுக்கு இங்கிலீஷ் பேசுற ஆளுங்க நம்ம நாட்டுல இருந்தாலும் கூட இன்னும் நம்ம பயபுள்ளைங்க கொஞ்சபேரு இந்த இங்கிலீஷை படுத்துற பாடு இருக்கே... அய்யய்யய்யய்யோ…

என்னதான் நம்ம ஆளுங்க இன்னிக்கு ஐ.டி கம்பெனிகள்ல சம்பளம் வாங்கிட்டு உக்காந்து இருந்தாலும் அவுக லீவு கேக்குற ஸ்டைல் இருக்குது பாருங்க... எங்கே உங்களால முடிஞ்சா இந்த லீவு லெட்டரையெல்லாம் சிரிக்காம படிங்க பாக்கலாம்!

1. Infosys, Bangalore : An employee applied for leave as follows:

Since I have to go to my village to sell my land along with my wife,
Please sanction me one-week leave.2. This is from Oracle Bangalore : From an employee who was performing the
"mundan" ceremony of his 10 year old son:


"as I want to shave my son's head, please leave me for two days.."


 

3. Another gem from CDAC. Leave-letter from an employee who was
performing his daughter's wedding
"as I am marrying my daughter, please grant a week's leave.."


4. From H.A.L. Administration dept:

"As my mother-in-law has expired and I am only one responsible for it, please grant me 10 days leave."


5. Another employee applied for afternoon half day leave as follows:

"Since I've to go to the cremation ground at 10 “O”-clock and I may not
return, please grant me half day casual leave"


 
6. Actual letter written for application of leave:

"My wife is suffering from sickness and as I am her only husband at
home I may be granted leave".

 

இதுதான் இப்பிடின்னா நம்ம ஆளுங்களோட கம்யூனிகேசன் ஸ்டைல் இருக்குது பாருங்க... வெள்ளைக்காரனெல்லாம் வரிசையில நின்னு பிச்சை வாங்கலாம் போங்க...!!!

1. Covering note:

"I am enclosed herewith..."

2. Another one:

"Dear Sir: with reference to the above, please refer to my below..."

3. Letter writing: -

"I am in well here and hope you are also in the same well."

4. A candidate's job application:

"This has reference to your advertisement calling for a ' Typist and an Accountant - Male or Female'... As I am both (!!) for the past several years and I can handle both with good experience, I am applying for the post


இந்த புத்திசாலித்தனத்தையெல்லாம் நம்ம பயலுவ ஆரம்பிக்கிறது ஸ்கூல் பருவத்திலேயேன்றதுதான் ஹை லைட்டு...!!!

1. An incident of a leave letter

"I am suffering from fever, please declare one day holiday."

2. A leave letter to the headmaster:

"As I am studying in this school I am suffering from headache. I
request you to leave me today"

3. Another leave letter written to the headmaster:

"As my headache is paining, please grant me leave for the day."
 

எவனோவொரு மாணவச்செல்வம் என்னமா ஃபீல் பண்ணி எழுதியிருக்கான் பாருங்க...!!!

மாணவர்களின் வளர்ச்சி... ஒரு பார்வை....

1 3rd Std.: தினமும் படிக்கிறேன்டா...

4th 6th: கொஞ்சம் கஷ்டம்டா...

7th 9th: முக்கியமான கொஸ்டின் மட்டும்தான் படிக்கிறேன்டா...

10th - +2: மைக்ரோ ஜெராக்ஸ் எடுதுக்கலாமாடா மச்சான்?

UG: இன்னிக்கு என்ன எக்ஸாம்’டா?

PG: என்னடா சொல்ற... இன்னிக்கு எக்ஸாமா? சொல்லவே இல்ல....

 

ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க?

ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான் சார்...!!!
                                      

வேடிக்கையான ஆனால் உண்மையான ஒன்று.....

உலகத்திலேயே மிகவும் நீளமான 5 நிமிடம்...

கிளாஸ்’ல பீரியட் முடியப்போற கடைசி 5 நிமிடம்..”

 

உலகத்திலேயே மிகவும் குறைவான 5 நிமிடம்...

எக்ஸாம் எழுதிகிட்டு இருக்குறப்ப கடைசி அந்த 5 நிமிடம்”

டேய் நீயெல்லாம் பெரிய ஆளா வருவடா... ஸ்ஸ்ஸ் யப்பா... போடா... போடா…!!!

இந்த சின்னபசங்க கதைகள் இருக்கு பாருங்க... படிக்க படிக்க திகட்டாத அளவுக்கு காமெடிங்க... !!!

ஒரு சின்ன பொண்ணு ஸ்கூல்ல அவ டீச்சர்கிட்ட அவ ஃபிரண்டு குமாரை திமிங்கலம் முழுங்கிடுச்சுன்னு சொல்றா.

டீச்சர் ;- ‘’இல்லைம்மா... திமிங்கலம் சைஸ்லதான் பெருசேயொழிய அதனோட தொண்டை ரொம்ப குறுகலானது. அதால மனுசங்கள முழுங்க முடியாது. கடிக்கதான் முடியும்’’

குட்டிப்பொண்ணு ;-  ‘’இல்லையில்லை, என் ஃபிரெண்டு குமார் திமிங்கலம் முழுங்கிதான் செத்துப்போயிட்டான்’’

டீச்சர் ;- சொன்னா புரிஞ்சிக்கமாட்டியா?... திமிங்கலத்தால மனுசங்கள முழுங்க முடியாது

குட்டிப்பொண்ணு ;- சரி... நான் சொர்க்கத்துக்கு போனதுக்கப்புறம் குமார்கிட்டேயே கேட்டுக்கிறேன்

டீச்சர் ;- ஒரு வேளை குமார் நரகத்துக்குப்போயிருந்தா?...

குட்டிப்பொண்ணு ;- அப்போ நீங்களே குமார்கிட்ட கேட்டுக்கோங்க!!!
                                   ---------------- X ----------------

இதேமாதிரி இன்னொரு குட்டிப்பொண்ணு... கிச்சன்ல உக்காந்துகிட்டு சமையல் பண்ணிட்டுயிருந்த அவங்க அம்மாகிட்ட வாயைக்கிண்டியிருக்கு!

அம்மா ஏம்மா உன் தலையில் கொஞ்சம் முடி மட்டும் வெள்ளையா இருக்கு?

அம்மா;- அதுவாடா கண்ணா... நீ ஒவ்வொருவாட்டி ஏதாவது தப்பு பண்ணும்போதும், பொய் சொல்லும்போதும், அம்மாவுக்கு பிடிக்காதது ஏதாச்சும் செய்யும்போதும் அம்மாவோட ஒவ்வொரு முடியாத வெள்ளையாகும். அதனால நீ இனிமே சேட்டை பண்ணாம ஒழுங்காக இருக்கனும் சரியா?...

குட்டிப்பொண்ணு ;- சரிம்மா... ஆனா ஏம்மா பாட்டியோட எல்லா முடியுமே வெள்ளையாயிருக்கு?...!!!
                              -------------------- X --------------------

ஒரு ஸ்கூல்ல குரூப் போட்டாவுக்கு அரேன்ஜ் பண்ணியிருந்திருக்காங்க. பசங்கெல்லாம் குரூப் போட்டாவை வாங்கனுங்கிறதுக்காக டீச்சர் எல்லாப்பசங்களையும் கூப்பிட்டு... பசங்களா, இந்த போட்டாவை வாங்கி நீங்க பத்திரமா வச்சிக்கிட்டீங்கன்னா நாளைக்கு நீங்கள்லாம் பெரியவங்களானதும் இந்த போட்டாவ பாக்கும்போது அதோ அதுதான் குமார்... பெரிய இன்ஜினியிராயிட்டான்... அதோ அதுதான் சித்ரா... பெரிய டாக்டராயிட்டா அப்பிடின்னு சொல்லிக்கலாம்’’ அப்பிடின்னு விளக்கிட்டு இருந்திருக்காங்க. அப்போ கூட்டத்துல பின்னாடியிருந்து ஏதோவொரு வாண்டுக்குரல் ‘’அதோ நடுவுல இருக்காங்களே அது தான் எங்க டீச்சர்... அவுங்க இப்போ செத்துட்டாங்க’’ ன்னு வந்திருக்கு!!!
                                 -------------------- X ----------------------

 
இப்பிடித்தான் ஒரு நாள் இன்னொரு வாத்தியார் பசங்களுக்கு இரத்த ஓட்டத்தைப்பத்தி பாடம் எடுத்திட்டு இருந்திருக்காரு...

பசங்களா இப்போ உதாரணத்துக்கு நான் தலைகீழா நின்னாக்க எல்லா இரத்தமும் என் தலைக்குள்ள வந்து என் மூஞ்சி சிவந்துபோயிரும் இல்லையா?...

ஆமா சார்...

ஆனா... நான் நேரா இருக்கும்போது மட்டும் ஏன் இரத்தம் என் பாதத்துக்குள்ள ஓடி பாதங்கள் சிவக்கிறது இல்லை?...

ஒரு வாண்டுப்பையன் சத்தமா சொல்லியிருக்கான்...

ஏன்னா உங்க பாதம் எம்ப்டி இல்லை சார்...!!!
                                    --------------------- X -----------------------

ஒருநாள் பசங்கள்லாம் ஒரு கிறித்துவ ஸ்கூல் ஃபங்க்ஷன்ல சாப்பிடறதுக்காக வரிசையில் நின்னிருக்காங்க. அது பஃபே டைப் ஏற்பாடு.

ஒரு குட்டிப்பையன் ஆப்பிள் அடுக்கி வச்சிருந்த இடத்துல எழுதியிருந்த அட்டைய பாத்திருக்கான். அதுல ‘’பசங்களா ஒருத்தருக்கு ஒரு ஆப்பிள்தான் எடுக்கனும். கடவுள் மேலயிருந்து பாத்திக்கிட்டேயிருக்காரு’’ன்னு எழுதியிருந்திருக்கு.

நம்ம பயபுள்ள வரிசையில நகர்ந்து அடுத்து சாக்லேட்டு அடுக்கி வச்சிருந்த ஏரியாவுக்கு போயிருக்கான். சும்மாயிருப்பானா?... கையில இருந்த ஒரு அட்டைய எடுத்து ‘’பசங்களா... யாருக்கு எவ்வளவு சாக்லேட் வேணுமின்னாலும் எடுத்துக்கோங்க. ஏன்னா கடவுள் ஆப்பிளைத்தான் பாத்திட்டிருக்காரு’’ன்னு  எழுதி வச்சிட்டு போயிட்டான்!!!
                                 ------------------- X -------------------
பெண் 1: அக்கா இன்னைக்கு என் புருஷன் ஊருக்கு போறாரு... இன்னைக்கு ராத்திரி மட்டும் என் கூட துணைக்கு படுங்களேன்...

பெண் 2: அடிப் போடி...உனக்கும் உன் புருஷனுக்கும் வேற வேலையே இல்ல! யார் ஊருக்கு போனாலும் என்னையே கூப்பிடுறீங்க!!
                                    --------------------- X --------------------

பேரன் ;- ஏன் தாத்தா கொட்டிப்போன உங்க பல்லையெல்லாம் பத்திரமா பொட்டிக்குள்ள எடுத்து வச்சிருக்கீங்க?

தாத்தா ;- பற்களை பத்திரமாக பாதுகாக்கனும்னு டி.வி.யில ஒரு டாக்டர் சொன்னார்டா...!!!
                                  ------------------------ X ---------------------

Mr. X reading a newspaper head lines... “American athlete lost gold medal in long jump”…

Mr. X :- Idiot… who told him to wear the gold medal while jumping?...!!!
                                 ------------------------ X -----------------------


எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா???
        ?

?

?

?

?

?

?

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

நல்லா
பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........
                                     ---------------------- X --------------------
எப்படிடா இப்புடியெல்லாம்?...


நாமெல்லாம் சின்ன வயசுல ‘’விறகுவெட்டியும் கோடாரியும்’’ கதை படிச்சிருப்போம். ஆனா அதையே இப்போ பயபுள்ளங்க என்னமா யோசிச்சிருக்காங்க தெரியுமா?...

ஒரு விறகு வெட்டி ஒரு நாள் ஆத்தோரமா நின்னு அழுதிட்டுயிருந்திருக்கான். அவன் மேல இரக்கப்பட்ட தேவதை அவன் முன்னால் வந்து ‘’மகனே ஏன் அழுகிறாய்?’’னு கேட்டிருக்கு.

அதுக்கு அவன் அம்மா நான் விறகு வெட்டிட்டு இருந்தப்போ என்னோட கோடாரி தவறி இந்த ஆத்துக்குள்ள விழுந்திடிச்சி. என்கிட்ட இருந்தது ஒரேயொரு கோடாரிதான். இனிமே நான் எப்படி விறகு வெட்டி சம்பாதிச்சு பொழப்பு நடத்துவேன்னு அழுதிருக்கான்.

உடனே அந்த தேவதையும் அழாதேப்பா உனது கோடாரியை நான் கண்டுபிடித்து தருகிறேன்னு சொல்லி ஆத்துக்குள்ள முங்கி ஒரு தங்கக்கோடாரிய எடுத்திட்டு வந்து ‘’இந்தா மகனே உனது கோடாரி’’ன்னு குடுத்திருக்கு.

அந்த விறகு வெட்டியோ ‘’ஐயோ இது எனது கோடாரி இல்லை. எனக்கு வேண்டாம்’’ என்று மறுத்திருக்கிறான்.

சரின்னு தேவதை மீண்டும் தண்ணிக்குள் மூழ்கி ஒரு வெள்ளிக்கோடாரியை எடுத்துட்டு வந்து ‘’இந்தா மகனே உனது கோடாரி’’ன்னு குடுத்திருக்கு.

அந்த விறகு வெட்டியோ ‘’ஐயோ இதுவும் எனது கோடாரி இல்லை. எனக்கு வேண்டாம்’’ என்று மறுத்திருக்கிறான்.

மூன்றாவது முறையாக தண்ணிக்குள்ள போன தேவதை இரும்புக்கோடாரியை எடுத்திட்டு வந்து ‘’இந்தா மகனே உனது கோடாரி’’ன்னு குடுத்திருக்கு.

அதப்பாத்ததும் விறகு வெட்டியும் சந்தோஷமாகி இதுதானம்மா எனது கோடாரி... என்று சந்தோஷமாக கத்தியிருக்கிறான்.

அவனது நேர்மையைக் கண்டு வியந்த தேவதை ‘’உன் நேர்மை எனக்கு ரொம்பப்புடிச்சிருக்கு’’ன்னு டைரக்டர் சசிகுமார் மாதிரி சொல்லிட்டு இந்தா மூன்று கோடாரிகளையும் நீயே வைத்துக்கொள் என்று குடுத்திருக்கிறது. விறகுவெட்டியும் மூன்றையும் பெற்றுக்கொண்டு சந்தோஷமாக வீடு திரும்பியிருக்கிறான்.

கொஞ்ச நாட்கள் கழித்து மீண்டும் அதே ஆற்றின் கரையோரமாய் அமர்ந்துகொண்டு அந்த விறகுவெட்டி அழுது கொண்டிருந்திருக்கிறான். அவன் முன்னால் தோன்றிய அந்தத்தேவதை உனக்கு என்ன பிரச்சினை?... ஏன் அழுகிறாய்?.. என்று கேட்டிருக்கிறது.

அதற்கு விறகுவெட்டி ‘’எனது மனைவி இங்கு குளித்துக் கொண்டிருந்தபோது ஆற்றில் மூழ்கிவிட்டாள்’’ என்று அழுதுகொண்டே சொல்லியிருக்கிறான்.

உடனே தேவதையும் ஆற்றுக்குள் மூழ்கி வெளியே வரும்போது ‘’மல்லிகா ஷெராவத்’’தோடு வந்து இந்தா மகனே உனது மனைவி அப்பிடின்னு சொன்னதுதான் தாமதம். அந்த விறகு வெட்டி நன்றிதாயே என்று மல்லிகா ஷெராவத்தை தன்னோடு அழைத்துப்போக தயாராகியிருக்கிறான்.

உடனே தேவதைக்கு கோபம் வந்து விட்டது. ‘’போனமுறை உனது கோடாரியை கண்டுபிடித்து தந்தபோது நீ மிக நல்லவனாக இருந்தாய். ஆனால் இப்போது என்னிடமே பொய் சொல்கிறாயா?... என்று கோபமாய் கத்தியிருக்கிறது.

பயந்துபோன விறகுவெட்டி தேவதையே... நீ தப்பா புரிஞ்சிக்கிட்டே. ஒருவேளை நீ மல்லிகா ஷெராவத்தை கூட்டிட்டு வந்தப்போ அது என் மனைவியில்லைன்னு நான் மறுத்திருந்தா அடுத்து நீ பிபாஷா பாசுவை கூட்டிட்டு வந்திருப்ப. அதுவும் என் மனைவியில்லைன்னு நான் மறுத்திருந்தா அடுத்துதான் நீ என் மனைவியை கூட்டி வந்திருப்பாய். கடைசியில போகும்போது போன முறை மூனு கோடாரிகளையும் எனக்கே குடுத்த மாதிரி இந்த முறை மூனுபேரையும் எனக்கே குடுத்துட்டு போனாலும் போயிருவே. ஒன்னை வச்சிட்டே என்னால சமாளிக்கமுடியல... இந்த இலட்சணத்துல மூணையும் என்கிட்ட குடுத்திட்டு போயிட்டேன்னா என் நிலமை என்ன ஆவது?... ன்னு அழுதுகிட்டே கேட்டிருக்கான்...

தேவதை தலைதெறிக்க ஓடி மறைந்திருக்கிறது!!!

 
 

Wednesday, October 10, 2012

கலைஞரும் கருப்பு காக்காவும்...!


அன்புள்ள ‘’தமிழினத்தலைவர்’’ கலைஞர் ஐயா அவர்களுக்கு...

ஐயா, உங்களைப்பற்றி நான் பதிவெழுதி வெகு நாட்களாகி விட்டது. ஏற்கனவே சமூக வலைத்தளங்கள் எல்லாம் ‘’எவ்வளவு அடிச்சாலும் தாங்குறார்யா... இவரு ரொம்ம்ம்பபபப நல்லவருய்யா’’ எனும் ரேஞ்சுக்கு உங்களைப்பற்றி போதும் போதும் எனுமளவுக்கு கருத்துக்களைக் கொட்டுவதால் நான் உங்களைப்பற்றி கடந்த சில மாதங்களாக எதுவும் எழுத விளைந்ததில்லை.

‘’தமிழர்களே... தமிழர்களே... நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப்போட்டாலும் கட்டுமரமாய்த்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம். கவிழ்ந்து விட மாட்டீர்...’’ என்ற உங்கள் கரகரக்குரல் கொஞ்ச நாட்களாக அடக்கி வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்த உங்கள் ‘’புதுமை’’ டிவியில் இப்போது உங்களது உத்தரவின் பேரில் மீண்டும் தூசு தட்டப்பட்டிருப்பது போலத்தெரிகிறது. தற்செயலாக இதையும், இத்தோடு இல்லாமல் உங்கள் அடிவருடிகளும், அல்லக்கைகளும் கருப்புச்சட்டை அணிந்துகொண்டு துண்டுபிரசுரங்கள் விநியோகித்ததையும் பார்க்க நேர்ந்தபோது மீண்டும் உங்களைப்பற்றி ஒரு பதிவெழுதும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.

ஒருகாலத்தில் உங்களை ஒரு அரசியல் சாணக்கியர் என்று அனைவரும் சொல்லக்கேட்டபோது நானும் வியந்திருக்கிறேன். ஆனால் அரசியல் சாணக்கியத்தனம் என்று எண்ணிக்கொண்டு நீங்கள் எடுக்கும் சில முயற்சிகள் சமூகத்தளங்கள் பல வளர்ந்து விட்ட இந்தத் தலைமுறையில் எடுபடாது என்பது இன்னமும் உங்களுக்கு புரியவில்லையே என்று வருந்துகிறேன். உங்களது வயதும், அரசியல் வாழ்க்கையும், நீங்கள் கொடுத்த பல ஆட்சி நிர்வாகங்களும்(எல்லாம் அல்ல) நிச்சயம் வணங்கத்தக்கவை என்பதில் மாற்றுக்கருத்துக்கள் ஏதுமில்லை. தமிழர்களின் மத்தியில் உங்கள் இமேஜ் சரிந்ததற்கு உங்களது கடந்த ஆட்சியில் ஈழத்தமிழர்கள் விசயத்தில் நீங்கள் நடத்திய நாடகங்களும், நாற்காலியை கெட்டியாகப் பற்றிக்கொள்ள நீங்கள் சாதித்த மௌனங்களும்தான் காரணம் என்பது இப்போதாவது நீங்கள் உணர்ந்தீர்களா என்பது சந்தேகம்தான். உங்களது காலத்திற்கு பிறகு நாளைய சந்ததியினர்க்கான வரலாற்றில் ஒரு சகாப்தமாய் நிலைத்திருக்கவேண்டிய உங்கள் பெயர், எப்போதும் மாறாத தமிழினத்துரோகத்தின் அடையாள வடுவாக ஆறாமல் புரையோடிப்போய் நாறிக்கிடக்கிறது. உங்களது அரசியல் எதிரி அ.தி.மு.கவின் ஆட்சியில் ஆயிரம் கெடுதல்கள் நடந்தாலும் சகித்துக் கொள்ளுமளவுக்கு இன்னமும் கூட மக்கள் ஆதரவு தி.மு.க பக்கம் திரும்பாமல் இருப்பதற்கு காரணம் உங்களது தமிழினத்துரோகமும், கடந்த ஆட்சியில் உங்கள் குடும்பமும், உங்கள் அடிவருடிகளும் அடித்த கொட்டமும்தான் என்பதை புரிந்துகொள்ளும் மனநிலை உங்களுக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை.

உங்கள் அரசியல் வாழ்வில் நீங்கள் எவ்வளவோ தோல்விகளை சந்தித்தும் ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டு வந்திருக்கிறீர்கள். ஆனால் கடந்தமுறை நீங்கள் பெற்ற தோல்வி எளிதில் மீளமுடியாத அதளபாதாளம் என்பதை நீங்கள் அறிவீர்களா?... ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக தமிழக மக்களின் மனநிலை இன்று இருந்தாலும்கூட அதற்கு மாற்றாக மீண்டும் தி.மு.கவை சிந்திக்க இங்கே எவரும் தயாரில்லை. ஒருவேளை வரப்போகிற தேர்தல்களில் உங்கள் இருவருக்கும் மாற்றாக மூன்றாம் சக்தி எதுவும் மக்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் அது பெரும்பாலும் ஜெயலலிதாவுக்கே சாதகமாக இருக்குமேயொழிய தி.மு.க பக்கம் திரும்புவதற்கு வழியில்லை ஐயா. இந்த இலட்சணத்தில் நீங்கள் ஏதோ விஜயகாந்த்தோடு கூட்டணி வைத்துக்கொள்ள முயல்வதாக வேறு செய்திகள் உலவுகிறது. விஜயகாந்த் உங்கள் இருவருக்கும் மாற்றான மூன்றாம் சக்தி என்று நம்பிக்கொண்டிருந்த மக்களுக்கு அது இல்லை என்பது விளங்கி வெகுகாலமாகிவிட்டது. அதனால் ஒருவேளை நீங்கள் விஜயகாந்த்தோடு கூட்டணி வைத்தாலும் அது மீண்டும் உங்கள் அரசியல் சாணக்கியர் பட்டத்துக்கு வைக்கப்பட்ட கரும்புள்ளியாகவே மாறிப்போகும் அபாயமுண்டு என்பதை உணர்ந்துகொள்ளுங்கள் ஐயா...

ஈழப்போரின் உச்சக்கட்டத்தின்போது வெறுமனே அரைநாள் உண்ணாவிரதத்தோடு வெற்றி வெற்றி என்று முழங்கிவிட்டு வீட்டுக்குச்சென்றுவிட்டீர்கள். இப்போது சாமரங்கள் பறிபோனபின்னர் டெசோவை தூசு தட்டி மாநாடு நடத்தினீர்கள். சரி அதாவது உங்களுடைய தன்மானத்துக்கு இழுக்கில்லாமல் நடத்த முடிந்ததா உங்களால்?... டெசோவின் அடிமட்ட கொள்கை, ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் எல்லாவற்றையும் நீங்களே மறந்து சோனியாவின் கோபத்துக்கு ஆளாக மனமில்லாமல் மாநாட்டின் பேரைக்கூட மாற்றி மாற்றி கும்மியடித்து கேலிக்கூத்தாக்கி முடித்தீர்கள். தமிழக சட்டசபையும் மத்திய அரசின் குடுமியும் உங்கள் கைகளில் இருந்தபோது மௌனம் சாதித்துவிட்டு இப்போது இழந்த உங்கள் தமிழின அடையாளத்தை தூக்கி நிறுத்துவதற்காக டெசோ நடத்தியதோடு இல்லாமல் அதன் தீர்மானங்களை வேறு ஐ.நா சபைக்கு அனுப்பப்போவதாக கேள்விப்பட்டேன். முதலில் எனக்குகூட என்னடா இது?... இவர் போட்ட தீர்மானத்தை ஐ.நா சபைக்கு அனுப்பப்போவதாக சொல்கிறாரே?... இவரையும் இவருடைய கட்சியையும் ஐ.நா சபைக்கு யாரென்று தெரியுமா?... என்று எண்ணினேன். அப்புறம்தான் எனக்கும் நியாபகம் வந்தது ஐயா... உங்கள் கட்சியைத்தான் 2ஜி ராசா உலகம் வியக்கும் அளவுக்கு பிரபலபடுத்தியிருக்கிறாரே... அதனால் ஐ.நா சபைக்கு நிச்சயம் உங்கள் கட்சியை பற்றிய பரிச்சயம் இருக்கும் என்பதால் நீங்கள் நம்பி அனுப்பலாம் ஐயா…!!!

ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக தி.மு.க இயக்கம் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தும் என்று முதலில் அறிவித்து, பின்னர் சுதாரித்துக்கொண்டு (ஏற்கனவே ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் நடத்திய உண்ணாவிரதமும், மனிதச்சங்கிலியும் உங்கள் நியாபகத்திற்கு வந்ததோ என்னவோ தெரியவில்லை!) தி.மு.க தொண்டர்கள் கருப்புச்சட்டை அணிந்து கொண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக துண்டுப்பிரசுரம் விநியோகிப்பார்கள் என்று அறிவித்தீர்கள். அத்தோடு நில்லாமல் நீங்களும் உடனே கருப்புச்சட்டை அணிந்து காட்சியளித்தீர்கள்! தமிழக மக்களின் நல்வாழ்வு மீது என்னே உங்கள் கரிசனம்?!!!

நீங்கள் வித்தியாசமாய்த்தான் யோசித்திருக்கிறீர்கள்... ஆனால் உங்கள் கூட்டங்கள் கருப்புச்சட்டை அணிந்து கொண்டு களத்தில் திரிந்ததைப் பார்க்கையில் சாதாரண மக்களுக்கெல்லாம் அவர்கள் தி.க காரர்களாகவே காட்சியளிப்பார்கள் என்பது முன்னமே உங்கள் சிந்தனைக்கு எட்டவில்லையா?... தி.க.விலிருந்து முன்னேறுவதற்காக உருவாக்கப்பட்ட உங்கள் கழகம், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நீங்களே எதிர்பார்க்காத அளவுக்கு முன்னேற்றியதால் நிச்சயம் உங்களுக்கது திராவிட ‘’முன்னேற்ற’’ கழகம்தான்!

என்னவொன்று... நீங்கள் கொஞ்சம் சுதாரித்திருந்தால் கருப்புச்சட்டைக்கு பதில், கருப்புவேட்டி அணியச்செய்திருக்கலாம். ஒருவேளை அதுவும் ஐயப்பசாமி பக்தர்கள் போல காட்சியளிக்கலாம். ஆகவே உங்கள் கழக கண்மணிகளை கருப்புவேட்டியும், சிவப்பு சட்டையும் அணிய வைத்திருப்பீர்களேயானால் அதை வீதியில் பார்க்கும் மக்கள் தி.மு.க காரங்க ஏதோ செய்யுறாங்கப்பா என்று உங்கள் கட்சிக்காவது விளம்பரம் கிடைத்திருக்கும் ( நீங்கள் உளியின் ஓசை படம் பார்த்திருப்பீர்கள். ஆனால் என்றாவது நேரமிருந்தால் கொஞ்சம் கரகாட்டக்காரன் படத்தின் காமெடி சீன்களை மட்டுமாவது பாருங்கள். அதில் செந்தில் ‘’அண்ணே... எல்லாம் ஒரு விளம்பரம்தாண்ணே’’... என்று சொல்லுவது உங்களுக்கு மிகவும் பிடித்தாலும் பிடிக்கலாம்... வடை போச்சே...!).

ஐயா... உங்கள் அடிவருடிகள் நீங்கள் என்ன செய்யச்சொன்னாலும் உடனே செயல்படுத்த தயாராய்த்தான் இருக்கிறார்கள். ‘’ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா?’’ என்ற பழமொழிக்கேற்ப பதவியிலும் பணத்திலும் சம்பாதித்து ருசி கண்ட உங்கள் ஆட்கள் மீண்டும் எப்போதுடா ஆட்சிக்கு வருவோம்... ஆட்டத்தை எப்போது ஆரம்பிப்பது என்று காய்ந்து போய் கிடப்பதால் நீங்கள் என்ன செய்யச் சொன்னாலும் செய்யத்தான் செய்வார்கள். ஆனால் நீங்கள் செயல்படுத்தவேண்டியது அது அல்ல... செய்த தவறுகளுக்கு மனமார பிராயச்சித்தம் தேட என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். வெறுமனே அரசியல் பல்டிகள் அடித்துக்கொண்டிராமல் உங்கள் இறுதிக்காலத்தில் தமிழர்களின் மனதில் அசைக்கமுடியாத வரலாற்றை பதித்துவிட்டுச்செல்ல என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்... தி.மு.க உண்மையிலேயே திராவிடர்களுக்கான கழகம்தான் என்று நிரூபியுங்கள்.

உங்களால் முடியாதது என்று எதுவுமே இல்லை ஐயா... அது உங்களுக்குத்தெரியுமோ இல்லையோ... எனது ஏழாவது வயதிலேயே தமிழகத்தின் தென்கோடித்தொகுதியில் உங்கள் கட்சிக்கொடியை நெஞ்சில் குத்திக்கொண்டு ஓட்டுபோட வருவோர் போவோரிடமெல்லாம் ‘’அண்ணேன் உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க... அக்கா உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க’’ என்று கெஞ்சிய எனக்குத் தெரியும். உங்களைப்போன்ற போர்க்குணமும், உங்களைப்போன்ற விமர்சனங்களை எதிர்கொள்ளும், ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் இந்தியாவில் வேறெந்த அரசியல்வாதியிடமும் நிச்சயமாயில்லை என்பது நிதர்சனமான உண்மை ஐயா. அதனால்தான் உங்களை விமர்சிக்கும் அளவுக்கு ஜெயலலிதாவையோ வேறெந்த அரசியல்வாதியையோ விமர்சிக்கும் தைரியம் இங்கே வெகுபலருக்கு இல்லை!

நீங்கள் மனமார ஆற்றவேண்டிய கடமைகள் எவ்வளவோ இருக்கிறது. அதைவிடுத்து வெறுமனே அறிக்கை விடுவதிலும், உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவதிலும், மனிதச்சங்கிலி... கருப்புச்சட்டை அது இது என்று வீண்காரியங்கள் செய்வதிலும் உங்கள் இறுதி வரலாற்றை வீணடிக்காதீர்கள் ஐயா... இன்னமும் கூட உங்களுக்கான வாசல்கள் இருக்கின்றன. அதைத்திறப்பதும்... இல்லை வெளியேயே நின்று கொண்டிருப்பதும் உங்கள் கைகளில்தான் ஐயா இருக்கிறது.

எங்கள் தெருவிலும் உங்கள் ஆட்கள் கருப்புச்சட்டை அணிந்து துண்டுப்பிரசுரங்களை கைகளில் திணித்து கடந்துபோனார்கள். தற்செயலாக வானத்தைப்பார்த்தேன்... காக்காக்கூட்டம் இங்கும் அங்குமாய் பறந்து கொண்டிருந்ததை ஏனோ என்னால் எழுதாமல் இருக்க இயலவில்லை!!!

வணக்கத்துடன் சிறுவயதில் உங்களை நெஞ்சில் குத்திய ஒரு அப்பாவித்தமிழன்...