SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Sunday, September 9, 2012

கலாச்சாரமும் காரசாரமும்...

 
இன்றைய நாகரீக உலகில் கலாச்சாரம் காரசாரமின்றி கவனிப்பாரற்று நகரத்தொடங்கியாகிவிட்டது. தெய்வீகக் காதலெல்லாம் மலையேறி மாமாங்கம் ஆகிவிட்டது. டிஸ்கோத்தேகளும், பார்களும், அவுட் ஸ்கர்ட் பார்ட்டிகளும் சாதாரணமாகிப்போனது. சரக்கடிக்காத சனி, ஞாயிறைப் பார்ப்பது இனிக்கனவுகளில்தான் சாத்தியமோ என்னவோ தெரியவில்லை.

எங்கோ ஒருமுறை நான் கேள்விப்பட்டு இன்றளவிலும் என் மனதில் பதிந்து போன வார்த்தை ஒன்று உண்டு. ‘’கலாச்சாரம், பண்பாடு, புண்ணாக்கெல்லாம் கிராமமும் நகரமும் ஒட்டாமலிருக்கும் வரையில்தான். என்றைக்கு நகரங்கள் வளர்ந்து கிராமத்தைத் தொடுகிறதோ அத்தோடு எல்லாம் டமால்தான்’’... எவ்வளவு நிதர்சனமான உண்மை. நகரத்தின் நாகரீக வளர்ச்சியில்தான் கலாச்சார புண்ணாக்கு மிக வேகமாக காலாவதி ஆகிக்கொண்டிருக்கிறது. நகரங்களும் கிராமங்களும் இனி ஒட்டுவதற்கு ஒன்றுமில்லை. தகவல் தொடர்பின் அதீத வளர்ச்சி ஏற்கனவே கிராமங்களையும் நகரங்களையும் ஒட்டியாகிவிட்டது.

 ஒருகாலத்தில் ‘’பெங்களூருவில் இருக்கும் பெண்ணைக் கல்யாணம் பண்ணாதே...நகரத்தில் இருக்கும் பெண்ணை கல்யாணம் பண்ணாதே’’ என்றும்... நகரத்தில் வேலை பார்க்கும் பையன் என்றால் நிச்சயம் ஏதாவது கெட்டபழக்கங்கள் இருக்கும்...எப்படி பெண்ணைக் கட்டிக்கொடுப்பது என்று யோசிப்பதுவும் நடந்தது. இன்று கிராமம், நகரம் என்றில்லாமல் பெரும்பாலும் பையனும் பொண்ணும் கெட்டுக் குட்டிச்சுவராகி நாளாகிவிட்டது. இன்டர்நெட்டில் பல கிராமத்துப் பையன் பொண்ணுகளின் சேட்டைகள் சிரிப்பாய் சிரிக்கிறது. திருமண பந்தத்தையும் மீறிய உறவுகள் நகரத்தில் மட்டுமின்றி, கிராமங்களிலும் எவ்விதக்குற்ற உணர்ச்சியுமின்றி நடக்கிறது.

கலாச்சார பிரதிபலிப்பாக கொண்டாடிய பண்டிகைகளும், திருவிழாக்களும் இன்று வெறும் கேளிக்கை கொண்டாட்டங்களாக மாறிப்போய்விட்டது. தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை நாட்களில்தான் கிராம நகர பாகுபாடு ஏதுமின்றி டாஸ்மாக் வியாபாரம் களை கட்டும் ரிப்போர்ட்கள் மீடியாக்களில் வெளிச்சமாகிறது.  இதாவது பரவாயில்லை... கிராமங்களின் கோயில் திருவிழாக்களின் இன்றைய நிலை?... கரகாட்டமும், மயிலாட்டமும், தப்பு ஆட்டமும், வில்லுக் கச்சேரிகளும் நடந்து கொண்டிருந்த காலங்கள் போய், கோயில் திருவிழா என்று கூட பார்க்காமல் நடுராத்திரிக்கு மேல் நடனநிகழ்ச்சி என்ற பெயரில் நடைபெறும் கூத்திருக்கிறதே... யப்போவ்!

காதலுக்காக நிகழ்ந்த மரணங்கள் மலையேறிவிட்டது. காதல் ஜோடிகளின் உருக்கமான மரணங்கள் நிகழ்ந்த கொடைக்கானல் பள்ளத்தாக்குகள் இன்று மனைவியே கணவனைத் தீர்த்துக் கட்டும் கதைகளின் பிறப்பிடமாகிப்போனது நமது பிறவிப் புண்ணியமோ என்னவோ தெரியவில்லை. காதல் திருமணங்கள் குடும்ப நல கோர்ட் படிக்கட்டுகளில் நிரம்பி வழியத் தொடங்கியாகிவிட்டது. இன்றைய இளைய சமுதாயத்தில் ஆணாகட்டும், பெண்ணாகட்டும்... காதல் என்பது கொஞ்ச நாட்களுக்கு ஒருமுறை மாற்றவேண்டிய கட்டாயப் பொழுது போக்காகிவிட்டது. இன்று எந்தக்காதலும் உள்ளக்குமுறலோடு பிரிவதில்லை. ஜஸ்ட் லைக் தட்... அட இது வேலைக்காகாதுப்பா... வேற பாக்கலாம் என்றுதான் பிரிகிறது.

வரையறை தாண்டாத சினிமாக்கள் வேலிதாண்டி நாளாகிவிட்டது. இன்னமும் குறைப்பதற்கு சினிமாக்காரர்களுக்கு ஏதாவது புது உடைகள் கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். சினிமாப்பாடல்கள் சொல்லவே வேண்டாம்... அதைப்பற்றி தனியே ஒரு பதிவே போடலாம் என்றிருக்கிறேன்.

விளம்பரங்களின் இன்றைய நிலைகூட நம்மை வெளிறச்செய்கிறது. சாதாரணமான விளம்பரங்கள் இன்று எவரையும் கவருவதில்லை. காண்டம்களுக்கும், பாடி ஸ்பிரேக்கும் இன்று வரும் விளம்பரங்கள்... யம்மாடியோவ்... கலாச்சாரமாவது மண்ணாங்கட்டியாவது... 

சரி... ஒருகாலத்தில் கலாச்சாரம் என்ற மாற்றுப் பெயரில் பெண்ணடிமைத்தனமும் நடந்துகொண்டிருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம்... இன்றைய நிலை?... பெண் விடுதலை, சுதந்திரம் என்பதன் எல்லை தெரியாமல் சர்வநாசம் அடைந்து கொண்டிருக்கும் பெண்களை என்ன சொல்வது?... செக்ஸ் பற்றி வெளிப்படையாய் எழுதுவதும், இஷ்டப்பட்டவனோடு விருப்பப்பட்டதை செய்வதும், புரட்சி என்ற பெயரில் சில பெண்கள் எழுதும் வரைமுறை மீறிய கவிதைகளும்தான் பெண்விடுதலையா?...

சரி... கலாச்சாரம் என்பதுதான் என்ன?... கட்டுப்பெட்டித்தனம்தான் கலாச்சாரமா? என்பதும் கட்டாயம் சிந்திக்க வேண்டிய கேள்வியே. அதே நேரத்தில் அளவிற்கு மீறிய எல்லை மீறல்களும் அவசியம்தானா என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.

அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடும் கலாச்சாரம் பெண்களின் ஆரோக்கியத்திற்காக வகுக்கப்பட்டது. இன்று அது குத்துயிரும் குலையுயிருமாகி... வாசலில் கோலமிடும் பழக்கமே பெரும்பாலும் அழிந்ததோடு மட்டுமில்லாமல் இருக்கும் ஒரு சில இடங்களிலும் இரவில் படுக்கும் முன்னரே வாசல் தெளித்து கோலம் போட்டுவிட்டுத் தூங்கும் கூத்துக்களும் நடக்கிறது.

அட... இதுகூட சேலைதான்ப்பா... நம்புங்கப்பா...!

நமது உடைகளில் கூட கலாச்சாரம் காலவாதியானது தெள்ளத் தெளிவாகத் தெரியத்தொடங்கிவிட்டது. இது தவறில்லை என்று வாதிட நினைப்பவர்கள் வேஷ்டிக்கும் ஜீன்ஸ்க்குமான வித்தியாசத்தை கண்டிப்பாய் தெரிந்துகொள்ளவேண்டும்.
 வேஷ்டி கட்டும் கலாச்சாரம் நமது தட்பவெப்ப நிலைக்கேற்ப வகுக்கப்பட்டது. இன்று ஜீன்ஸ் என்ற டைட்டான உடைக்குள் நமது விந்தணு உற்பத்தி காலாவதியாகிக்கொண்டிருப்பது எத்தனை பேருக்குத்தெரிகிறது?...

கலாச்சாரம் என்பது ஒன்றும் வானத்திலிருந்து வந்துவிடவில்லை. மனிதர்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களுக்கேற்ப தங்களுக்கான கட்டுப்பாடுகளுக்காக வகுத்துக்கொண்டதுதான் கலாச்சாரம்... அதில் ஆரம்ப காலத்திலிருந்தே சில கட்டுப்பெட்டித்தனங்களும் அடங்கிப்போய்விட்டது. அந்த கட்டுப்பெட்டித்தனங்களை மட்டும் களையெடுத்து... கலாச்சாரத்தை காலமாற்றத்திற்கேற்ப அவ்வப்போது மெருகூட்டி... பாதுகாக்க வேண்டிய, ஃபாலோ பண்ண வேண்டிய விஷயங்களை எக்காலத்திலும் அழிக்காமல், அழியாமல் பின்பற்றினால் நிச்சயம் அது மனித சமூகத்திற்கு உதவியாய்த்தான் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் ஏதுமிருக்காது என்று நம்புகிறேன்...!
 

5 comments:

 1. கலாச்சாரத்தை காலமாற்றத்திற்கேற்ப அவ்வப்போது மெருகூட்டி... பாதுகாக்க வேண்டிய, ஃபாலோ பண்ண வேண்டிய விஷயங்களை எக்காலத்திலும் அழிக்காமல், அழியாமல் பின்பற்றினால் நிச்சயம் அது மனித சமூகத்திற்கு உதவியாய்த்தான் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் ஏதுமிருக்காது என்று நம்புகிறேன்.

  மிக மிக அழகாக கலாச் சாரச் சீரழிவையும்
  சீர் செயய வேண்டிய அவசியத்தையும் மிக
  மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. உங்களை நிறையப்பின்னூட்டங்களில் பார்த்திருக்கிறேன்... முதன் முறையாக எனது தளத்திலும் நீங்கள் பின்னூட்டமிட்டது எனக்கு மிக்க மகிழ்ச்சி... மனமார்ந்த நன்றிகள்...

  ReplyDelete
 3. //வேஷ்டி கட்டும் கலாச்சாரம் நமது தட்பவெப்ப நிலைக்கேற்ப வகுக்கப்பட்டது. இன்று ஜீன்ஸ் என்ற டைட்டான உடைக்குள் நமது விந்தணு உற்பத்தி காலாவதியாகிக்கொண்டிருப்பது எத்தனை பேருக்குத்தெரிகிறது?//
  நீங்கள் சொல்வது சரியாகவே தோன்றுகிறது. இதெல்லாம் வந்ததிற்கு பிறகு தான் குழந்தையில்லா பிரச்சனைகள் அதிகமாக இருப்பதாக தோன்றுகிறது!

  ReplyDelete
 4. கலாச்சாரம், பண்பாடு என்பது அனைவருக்கும் சமம், ஆணுக்கும் பெண்ணுக்கும் கலாச்சார சீர்கேட்டில் சரி பங்கு உள்ளது. இதில் நீங்கள் பெண்களை மட்டும் குற்றம் சுமத்துவது முறையாகாது தோழரே!

  //புரட்சி என்ற பெயரில் சில பெண்கள் எழுதும் வரைமுறை மீறிய கவிதைகளும்தான் பெண்விடுதலையா?//
  இந்த கருத்தை நான் ஏற்றக்கொள்ள முடியாது, கவிதை சிந்தனை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வேறு கிடையாது. கற்பனைக்கும் கலைக்கும் இன பேதங்கள் கிடையாது. ஆணாதிக்கத்தின் வெளிபாடு தான் உங்களின் இந்த படைப்பு.

  என் வலைபதிவில் "ஒரு தாயின் பிராத்தனை".....

  ReplyDelete
 5. காலப்போக்கின் நிதர்சனத்தை எடுத்துரைக்கும் பதிவு..எதை வளர்ச்சி எனக்கருதுகிறோமோ..அது வளர்ச்சியின் வீழ்ச்சி...அருமையா தொகுத்து வழங்கியுள்ளீர்கள் தோழரே..

  ReplyDelete