SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Sunday, September 23, 2012

‘’பாரதப்பிரதமர்’’ – அடுத்த தகுதி யாருக்கு?...


இந்தப்பதிவின் மற்றுமொரு சிறப்பு(என்பார்வையில்)... இது எனது 100வது பதிவு. இதுவரை எனக்கு ஆதரவளித்த அனைத்து தோழமைகளுக்கும், பதிவுலகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...

 வழக்கம் போல ஒரு அரசியல் பல்டி. இந்தமுறை மம்தா பானர்ஜியால் அடிக்கப்பட்ட பல்டி இது. ஊடகங்களுக்கு ஒரு வாரத்திற்கு பரபரப்பு செய்திகள் கிடைத்ததை தவிர உருப்படியாய் ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பது அரசியல் தெரிந்த நடுநிலையாளர்களுக்கு முன்னமே புரிந்திருக்கும். கூட்டணியில் எவரோ ஒருவருக்கு திடீரென்று நாட்டு மக்களின் மீது பாசம் வரும். உடனே ஆதரவு வாபஸ் நாடகங்கள் அரங்கேறும். பணப்பெட்டி மற்றும் பதவி வியாபாரம் சூடுபிடிக்கும். பேரம் முடிந்ததும் வேறொரு கட்சி ஏதாவது மத்திய அரசை தாங்கிப்பிடிக்கும். இதுதான் காலம் காலமாய் நமது அரசியல் கட்சிகளால் காப்பாற்றப்பட்டு வரும் எழுதப்படாத அரசியல் விதி (இதையே ஒருசில கட்சிகள் அரசியல் சாணக்கியத்தனம் என்பது நமது தலையெழுத்து!).

இருந்தாலும் மத்தியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழப்போகும் ஆபத்தில் இருப்பதாக ஊடகங்கள் அலறியதும் எனக்குள் ஒரு பொறி... சரி, ஆட்சி கவிழ்ந்தாலும் சரி... கவிழாவிட்டாலும் சரி... எப்படியும் கண் மூடி கண் திறப்பதற்குள் 2014 வந்துவிடும். பாரதத்தின் அடுத்த பிரதமராகும் தகுதி யாருக்கு என்று ஒரு சின்ன அலசல் பார்த்துவிடலாம் என்று தோன்றியது.

அரசியல் என்றாலே... அது பவருடன் கூடிய பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறி வெகுகாலம் ஆகிவிட்டது. பதவிக்கு வரும் முன் சோத்துக்கு சிங்கியடித்துக் கொண்டிருந்த நமது லோக்கல் கவுன்சிலர்கள் பலரின் இன்றைய சொத்துமதிப்பை ஆராயத்தொடங்கினால் இதயநோய் மருத்துவமனைகள் எல்லாம் ஹார்ட் அட்டாக் நோயாளிகளால் நிரம்பிவிடும் அபாயம் உண்டாகலாம்!!!

கவுன்சிலர்களின் பிசினெஸ் மட்டுமே இப்படியென்றால்... எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், பிரதம மந்திரி என்று நீளும் பட்டியலின் பிசினெஸ் எந்த அளவில் இருக்கும் என்பது சாமான்யன்கள் பலபேருக்கு எள்ளளவும் தெரியாத ரகசியங்கள்தான்.

சரி... இன்னக்கு நிலைமைக்கு காமராஜ், கக்கன்ஜியை எல்லாம் கல்லறையிலிருந்து எழுப்பிக்கொண்டு வரமுடியாது. (போஸ்டர்களில் வேண்டுமானால் துளிகூட வெட்கமில்லாமல் ‘’வாழும் காமராஜரே’’... ‘’மீண்டும் வந்த கக்கன்ஜியே’’ என்றெல்லாம் அடைமொழி போட்டுக்கொள்ளலாம்!)

அதனால் பிரதமர் பதவிக்கு அடுத்த தகுதி யாருக்கு என்று அலசும்போது இருக்கிற திருடர்களில் நல்ல திருடன் யார் என்றுதான் அலசமுடியுமே ஒழிய நம்முடைய இறுதி முடிவில் நோ... நோ... இவர் மீது அந்தக்குற்றச்சாட்டு... இந்தக்குற்றச்சாட்டு என்று விவாதிக்கமுடியாது என்பதும் கணக்கில் கொள்ளப்பட வேண்டிய இந்தக் கட்டுரைக்கான அடிப்படை விதி!

முதல்ல நம்ம அண்ணன் ‘’மண்’’மோகன் சிங்... சாரிப்பா... டங்க் சிலிப் ஆயிடுச்சு... மன்மோகன்சிங்!

அவரே பாவம்... ‘’முதல்ல ஒரு அஞ்சு வருஷம்தான்னு சொன்னாங்க. நானும் நம்பிப்போனேன்... ஆனா மறுபடியும் ஒரு அஞ்சு வருஷம்... மூச்சுத்திணற திணற சமாளிச்சாச்சு’’ அப்படின்னு வடிவேலு மாதிரிதான் அவரு மனசுலேயும் டயலாக் ஓடிட்டிருக்குன்றது சத்தியமா நெசமுங்க. அதுமட்டுமில்லாம காங்கிரஸ் மறுபடியும் அவருக்கு சீட் கொடுத்தாலும் நாட்டு மக்கள் அய்யாவை நம்பி இன்னொரு வாட்டியும் நாட்டை ஒப்படைப்பாங்களான்றது டவுட்டுதான்ங்க. ஏன்னா 2ஜி, 3ஜி, காமன்வெல்த், சில்லறை வணிகம், பெட்ரோல் டீசல் விலை, மவுனச்சாமியார்ன்னு அய்யாவோட ரேட்டிங் வரலாறு காணாத அளவுக்கு எகிறிக்கிடக்கு. அதுனால இவரோட பத்து வருஷ ‘’சாதனை’’களைப் பாராட்டி நாமே கவுரவமா இவரை லிஸ்ட்ல இருந்து தூக்கிரலாமுங்க.
 
யப்பா... ஆளை வுடுங்கடா சாமீ...!

காங்கிரசுல அடுத்து யாரு?... மன்மோகனுக்கு வெடிவச்சிட்டு எப்படியாவது பிரதமர் ஆகிறனும்னு துடிச்சிட்டிருந்த ‘’பொருளாதாரப்புலி’’ நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜியை பிரதமர் இல்லம் என் பையனுக்காக புக் பண்ணி வச்சிருக்கேன். அதுனால நீ குடியரசுத்தலைவர் மாளிகையை எடுத்துக்கோன்னு சொல்லி சோனியா மேடமே கச்சிதமா காரியத்தை முடிச்சிட்டாக... அடுத்து யாரு?... அவுக இல்லாட்டி அவுக புள்ளையாண்டன்தான் காங்கிரசோட அடுத்த லிஸ்ட். அதைத் தவிர காங்கிரசோட வெறெந்த கோமாளியையும் நாட்டு மக்கள் ஏத்துக்க மாட்டாகன்றது நம்ம மேடம்ஜிக்கு நல்லாவே தெரியுமுங்கோவ்!
ஏற்கனவே நான் எழுதுன சில பதிவுகள்ல காங்கிரசோட ''சாதனை''களை தொகுத்து வழங்கியிருக்கேன்...
கதம்ப மாலை...: ஊழல் மேல் ஊழல்… நாம வெட்கம் கெட்ட ஆட்கள்!

சரி, அப்போ மேடம்ஜியே பிரதமர் பதவிக்கு நிப்பாகளா? அதெப்படிங்க முடியும்? அதான் ஏற்கனவே முதவாட்டியே சர்ச்சை வந்தப்ப வீராப்பா அந்தப்பதவிய தூக்கி அய்யா மன்மோகனுக்கு குடுத்திட்டாகல்ல?...!

அப்போ மீதியிருக்கிறது இளங்காளை திருவாளர் ராகுல்ஜிதான்! ராகுல்ஜி காங்கிரசோட பி.எம் கேன்டிடேட்டா மட்டும் பாத்தா அவுக கட்சிக்காரக எல்லாம் வேணா ஆஹா ஓஹோன்னு சொல்லலாம். அதேமாதிரி பாமர ஜனங்களோட பார்வையிலேயும் ராகுல்ஜிக்கு கொஞ்சம் வாய்ஸ் இருக்கலாம். ஆனா ஒரு நடுநிலைமையாளனா பாத்தா பாரதப்பிரதமர்ன்றது எவ்வளவு பெரிய பதவி... அதுக்கு இந்த சின்னவரோட தகுதி எந்தளவுக்கு சரியா இருக்கும்ன்றது டவுட்டுதாங்க. (‘’டேய் அதுக்கு நீ சரிப்படமாட்டடா’’ன்னு கடைசிவரைக்கும் எதுக்குன்னே சொல்லாத வடிவேலு காமெடிதான் நம்ம நெனப்புக்கு வருது!).

படிச்சவன்லாம் பெரும்பாலும் ஓட்டு போட போவமாட்டான்னு ஒரு நெலமை நம்ம நாட்டுல இருந்தாலும் இப்போதைய காலகாட்டத்தில படிச்சவங்ககிட்டகூட கண்டிப்பா ஓட்டு போடனும்னு ஒரு விழிப்புணர்ச்சி இருக்கிறது சின்னய்யாவுக்கு பின்னடைவுதான். அதுமட்டுமில்லாம இந்த அன்னா ஹசாரே ஆளுங்க வேற ஏற்கனவே காங்கிரசுக்கு எதிரா தீயா வேலை செய்ஞ்சிட்டு இருக்காய்ங்க. இந்த நிலைமைல குருவி தலையில பனங்காய வச்ச கதையா ராகுல்ஜிதான் பிரதமர் வேட்பாளர்னு காங்கிரஸ் அறிவிச்சுதுன்னா... சாரிங்க... நம்மோட அலசல்ல ராகுல்ஜி ரிஜெக்டடு... அம்புட்டுதேன் சொல்லமுடியும்!

நமக்கு தெரிஞ்சி ஒன்னு மன்மோகனையே காங்கிரஸ் மறுபடியும் பிரதமர் வேட்பாளரா முன்னிறுத்தும். இல்லாட்டி அன்னை சோனியாவே பிரதமர்னு அறிவிச்சு நின்னாகன்னா காங்கிரஸ் ஏதோ தலை தப்புமான்னு பாக்கலாம். மத்தபடி பிரதமர் பதவிக்கு தகுதியானவர்னு சர்ட்டிபிகேட் குடுக்குற அளவுக்கு காங்கிரசுல பெருசா எந்த அறிவுஜீவியும் இல்லைன்றதுதான் நெசமோ நெசம் சாமீ...!

சரி, காங்கிரஸ் கதைதான் இப்புடி. எதிர்கூடாரத்துல என்ன சங்கதின்னு எட்டிப்பாத்தாக்க அங்க ஓரளவுக்கு தகுதியான ஆளுங்க இருந்தும் ஏகப்பட்ட வீக்பாயிண்டுங்க.

பிரதான எதிர் கூடாரத்துல அத்வானி, நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, நரேந்திர மோடின்னு லிஸ்ட் பெருசா இருந்தாலும் உட்கட்சி விவகாரம், ஆர்.எஸ்.எஸ் தலையீடுன்னு பிரதமர் வேட்பாளர் தேர்வுல அவுக தலையில அவுகளே மண்ணள்ளிப் போட்டுக்கபோற சமாச்சாரங்கள் நெறய இருக்கு. பி.ஜே.பிய பொருத்தவரைக்கும் காங்கிரசுக்கு எதிரான மக்கள் மனசு அவுகளுக்கு வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்துனாலும்... பிரதமர் வேட்பாளரா பி.ஜே.பி யாரை நிறுத்தப்போறாகளோ அதவச்சிதான் முடிவுன்றது சாமான்யனுக்கும் தெரிஞ்ச சமாச்சாரம். இன்னைய சூழல்ல வாஜ்பாய் மாதிரி ஒரு தலைவர் நல்ல உடல் நலத்தோட இருந்து, பி.ஜே.பியும் அவுகளை பிரதமர் வேட்பாளரா அறிவிச்சாகன்னா காங்கிரஸ் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் ஜெயிக்க முடியாதுன்றது எல்லாருக்கும் தெரியும். ஆனா பி.ஜே.பியில நெலம அப்பிடியில்லை. வாஜ்பாய் அரசியல்ல இருந்து ஒதுங்கிட்டாக. அத்வானிக்கு நடுநிலைமையான ஆளுன்னு பேரு இல்லை. அதுமட்டுமில்லாம பழையமாதிரி வாய்ஸ் மக்கள்கிட்டேயும் இல்லை... அவுக கட்சிக்குள்ளேயும் இல்லை. அதுனால அவுகளும் ரிஜெக்டுதான்.

அப்புறமா நிதின் கட்காரி... பெரிசா நாடு பூராவும் மக்கள் செல்வாக்குள்ள சக்தியா இன்னமும் ரீச் ஆகலைன்றதால அவுகளும் ரிஜெக்டுதான்.  அடுத்து சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி... இவுகளையெல்லாம் கட்சிக்குள்ளேயே வளர விடமாங்கன்றதும், பிரதமர் வேட்பாளர் அளவுக்கு இவுகளுக்கு தகுதி இருக்குதான்றதும் சந்தேக லிஸ்ட்தான்.

அடுத்து யாரு?... நாடு பூரா பரபரப்பா எதிர்பார்த்திட்டிருக்கிற பி.ஜே.பி ஹீரோ... நரேந்திரமோடி! இவரு சாதனைகள் ஆஹா ஓஹோன்னு இணையதளங்கள்லேயும் இளைய சமுதாயத்திலேயும் பரவிக்கிடந்தாலும், இந்துத்வா மதச்சாயம் இவரோட மெயின் வீக் பாயிண்ட்டுன்றது மறுக்க முடியாத நெசம். ஆனாலும் காங்கிரசை எதிர்த்து பி.ஜே.பி தாக்கு பிடிக்கனும்னா நரேந்திரமோடி மட்டும்தான் அவுகளுக்கு இருக்கிற ஒரே சான்ஸ்ன்றதும் பி.ஜே.பி புரிஞ்சிக்க வேண்டிய முக்கிய சமாச்சாரம். இதவிட்டுப்புட்டு... ஆர்.எஸ்.எஸ் சொல்லிச்சு, கட்சி கமிட்டி முடிவு பண்ணிச்சு, அப்பிடி இப்பிடின்னு இவுக வேற யாரையாவது பிரதமர் வேட்பாளரா நிறுத்துனாக்க... அது காங்கிரசுக்கு பி.ஜே.பி யே வெற்றி விட்டுக்கொடுத்து தன் தலையில தானே கொள்ளிக்கட்டைய எடுத்து சொறிஞ்சிக்கிட்ட சமாச்சாரமாத்தான் ஆகிப்போகும். பாக்கலாம்... 2014ல பி.ஜே.பி காரக என்ன முடிவு எடுக்கிறாகன்னு?...

இந்தக்கட்டுரைப்படி பாத்தாக்க முழு மனசோட ஆதரிக்கலேன்னா கூட நம்மளோட கருத்தும் நரேந்திரமோடிக்கு ஒரு தடவை சான்ஸ் குடுத்து பாத்தாக்க தப்பில்லைன்னுதான் தோணுது. நீங்க என்ன நெனக்கிறீக?...

இந்த ரெண்டு கூடாரத்தையும் தவிர்த்து மத்த கூட்டணிக்கூடாரமுன்னு பாத்தாக்க பிரதமர் கனவுல இருக்கிறது... செல்வி.மாயாவதி, செல்வி.ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, முலாயம்சிங். இந்த நாலுபேருக்கும் கனவிருந்தாலும் அதையெல்லாம் நாம ‘’கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்’’ அப்பிடின்னு பாடிட்டு ரிஜெக்ட் பண்ணிட்டு போயிட்டேயிருக்கனுமேயொழிய பிரதமர் பதவிக்கு இவுகளையெல்லாம் கற்பனையில கூட கம்பேர் பண்ணி எழுதி ரிஸ்க் எடுக்கக்கூடாதுங்கோவ்...!!!

ஆனாலும் இதே மாதிரி ஒரு கூட்டணிக் கூடாரத்துல இன்னொருத்தரும் இருக்காருங்க. பீகார் முதல்வர் ‘’நிதிஷ்குமார்’’. நம்ம கட்டுரையோட முடிவு ஹீரோவும், நம்ம சாய்ஸ்ம்கூட இவருதாங்க. இவரு ஒருங்கினைந்த ஜனதா தளம் கட்சி சார்பாக முதலமைச்சரா இருக்காரு. இவரு இருக்கிறது பி.ஜே.பி கூட்டணியிலதான்றது கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம்.

நாடு முழுவதுமான மக்கள் செல்வாக்கு இவருக்கு முழுமையா இல்லாம இருக்கலாம். ஆனா ‘’பாரதப்பிரதமர்’’ என்ற பதவிக்கான திறமையையும், தகுதியையும் மட்டும் பாத்தாக்க இப்போதைய அரசியல் தலைவர்கள்ல இவருதான் டாப் லிஸ்ட் சாய்ஸ்ன்றது எத்தனை பேருக்குத் தெரியும்னு தெரியலை. லாலுவும், ராப்ரியும் வெறும் சாணி தட்டுற ஊரா, திருட்டுக் கும்பலோட ஊரா வச்சிருந்த பீகாரை, அந்த ஜனங்க இவருகிட்ட ஒப்படைச்சதுக்கு அப்புறமா என்னமா மாத்தியிருக்காரு மனுஷன்?...

1951ல பொறந்த இவருக்கு அரசியல்வாதி அப்பிடீன்றது மட்டும் இல்லாம சமூக சேவகர், விவசாயவிஞ்ஞானி, இன்ஜினீயர்ன்ற முகங்களும் உண்டு. (NIT-பாட்னால எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங் முடிச்சிருக்காரு இவரு) இவரோட முக்கியச்சாதனைகள் என்ன தெரியுமா?... முற்றிலும் சிதைஞ்சி போயிருந்த பீகார் ரோடுகளையெல்லாம் பளபளன்னு மாத்திருக்காரு. பல பாலங்கள் கட்டப்பட்டிருக்கு. ஒரு லட்சம் ஆசிரியர்களை புதுசா பணியிலமர்த்தியிருக்காரு. பிரைமரி ஹெல்த் சென்டர்கள்ல கிராமங்கள் வரைக்கும் கண்காணிச்சு டாக்டர்களோட அட்டெண்டன்சை உறுதிப்படுத்தியிருக்காரு. பீகார்னாலே கொள்ளைக் கும்பல்தான் நியாபகத்துக்கு வர்ற அளவுக்கு இருந்த நிலைமைய மாத்தி சட்டம் ஒழுங்க முழு கண்ட்ரோல்ல கொண்டு வந்திருக்காரு...

ஒரு மாநிலத்தோட வளர்ச்சிக்குத் தேவையான சாலை வசதி, மருத்துவ வசதி, கல்வி, சட்டம் ஒழுங்கு இவ்வளவையும் அதாள பாதாளத்துல கிடந்த ஒரு மாநிலத்தில சீர்படுத்தி கொண்டு வந்ததுன்றது எவ்வளவு கஷ்டமுன்னு கொஞ்சம் ஆழமா யோசிக்கிறவகளுக்குத்தான் புரியும்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை எலெக்ட்ரானிக் வெர்ஷனாக(ஜன்காரி ஸ்கீம்) மாற்றிய பெருமையும், கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை தொலைபேசி வழியில்(இ-சக்தி) தெரிந்து கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்திய பெருமையும் இவரையேச்சாரும். 2005ல் முதல்வராக பதவியேற்ற இவர் ஆசிரியர் பணியிடங்களுக்கும், போலஸ் பணியிடங்களுக்கும் வேலைவாய்ப்பை உறுவாக்கி அதிகப்படுத்தியிருக்கிறார். அனைத்து மாவட்ட நீதிபதிகளும் கலந்துகொள்ளும் வகையில் கட்டாய வாராந்திர மீட்டீங் இவருடைய அரசில் நடத்தப்பட்டு வழக்குகள் விரைவாய் முடிந்து குற்றங்கள் பெருகாமல் இருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பள்ளி மாணவிகளுக்கு சைக்கிளும் உணவும் வழங்கிய இவருடைய திட்டத்தால் பீகாரில் பெண் கல்வி அதிகரித்த புள்ளிவிவரங்கள் கணக்கிடப்பட்டிருக்கின்றன. (இந்த சைக்கிள் திட்டத்தில் ஊழல் நடந்ததாய் புகாரும் உண்டு!) இலவச மருந்துகள் வழங்கும் திட்டமும் கிராம்ப்புற ஹெல்த் ஸ்கீம்களும் இவருடைய ஆட்சியில்தான் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வெற்றியும் அடைந்திருக்கிறது. விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கும் திட்டமும் தேசிய வங்கிகளின் மூலமாக விரைந்து செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

GSDP எனப்படும் உற்பத்தி மற்றும் பொருளாதார குறியீட்டின் வளர்ச்சியில் பீகாரை இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தை பிடிக்கச்செய்தது நிதிஷ்குமாரின் சாதனையே. அதுமட்டுமில்லாமல் அதிக வரி கட்டுவோர் மாநில வரிசையிலும் கிழக்கிந்திய பிராந்தியத்தில் பீகார்தான் முதலிடத்தில் இருக்கிறது.

2010ம் வருட நடந்த தேர்தலிலும் பி.ஜே.பியுடனான கூட்டணியில் நிதிஷ்குமார் தனிப்பெரும்பான்மை பலத்தில் மீண்டும் முதல்வராக ஆட்சியிலமர்ந்திருக்கிறார். எவ்வித வன்முறையும் இல்லாமல் அமைதியாக நடந்த இந்தத்தேர்தலில் 25 இடங்கள் கைப்பற்றினால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்கும் என்ற நிலையில் வெறும் 22 இடங்கள் மட்டுமே பிடித்து லாலுவின் கட்சி மண்ணைக் கவ்வியிருப்பதே இவருடைய முதல் ஐந்தாண்டுகால மக்களாட்சிக்கான சான்றாக எடுத்துக்கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் பீகாரின் தேர்தல் வரலாற்றிலேயே இந்தத் தேர்தலில்தான் முதன் முறையாக பெண்களும், இளைய சமுதாயமும் அதிகளவில் வாக்களித்திருக்கின்றனர் என்பதும் இவருடைய நல்லாட்சிக்கான ஒரு சான்றே.

இவருக்கு வழங்கப்பட்டிருக்கும் விருதுகள் என்னென்ன தெரியுமா?...

1) XLRI - Jamshedpur "Sir Jehangir Gandhi Medal" for Industrial & Social Peace 2011

2) MSN Indian of the year 2010"

3) NDTV- Indian of the year– Politics, 2010

4) Forbes "India's Person of the Year", 2010

5) CNN-IBN "Indian of the Year Award" – Politics, 2010

6) NDTV-Indian of the year – Politics, 2009

7)Economics Times "Business reformer of the Year 2009"

8)'Polio Eradication Championship Award' 2009, by Rotary Internationals

9)CNN-IBN - Great Indian of the Year – Politics, 2008

10)The Best Chief minister according to the CNN-IBN and Hindustan Times State of the Nation Poll 2007.

நரேந்திர மோடிக்கான வாய்ப்புகள் அதிகமிருந்தாலும் பி.ஜே.பி மனது வைத்தால் கூட்டணியில் இருக்கும் நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம். ஆனால் அது அரசியலில் நிகழ சாத்தியமில்லை என்பது நிச்சயம்.

‘’பாரதப்பிரமர்’’ – அடுத்த தகுதி யாருக்கு?...

நம்ம சாய்ஸ்சில் ரேஸில் முந்துவது...

முதலிடம் ;- திரு.நிதிஷ்குமார்
 
 

இரண்டாமிடம் ;- திரு.நரேந்திரமோடி


மூன்றாமிடம் ;- சாரிங்க... இது நம்ம லிஸ்ட்டில் இன்னமும் காலியிடம்தான்!!!

 

3 comments:

 1. நல்லதொரு நடுநிலையான அலசல். தெளிவான கருத்துக்கள்.

  ReplyDelete
 2. my choice also nithish kumar, and for me there is no 2 and 3 choice both are vacant, and who ever occupies other than him might be a 2 grade pm only

  ReplyDelete
 3. || ஒரு மாநிலத்தோட வளர்ச்சிக்குத் தேவையான சாலை வசதி, மருத்துவ வசதி, கல்வி, சட்டம் ஒழுங்கு இவ்வளவையும் அதாள பாதாளத்துல கிடந்த ஒரு மாநிலத்தில சீர்படுத்தி கொண்டு வந்ததுன்றது எவ்வளவு கஷ்டமுன்னு கொஞ்சம் ஆழமா யோசிக்கிறவகளுக்குத்தான் புரியும்.||

  மிகவும் சீரழிந்திருக்கும் ஒரு இடத்தைக் கட்டமைப்பது எளிதுதான்;அரைகுறையாக இருப்பதைச் செப்பனிடுவதுதான் கடினம்.
  மேலும் நிதீஷ் குமாருக்கு பிரதமராகும் அளவுக்கான ஆளுமை இருக்கிறதா என்பது தெரியவில்லை.

  மோடிக்கு நிச்சயம் இருக்கிறது !

  ReplyDelete