SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, September 18, 2012

பதிவுலகமும்... குழாயடிச்சண்டையும்...


அல்லாருக்கும் வணக்கமுங்கோ...

அய்யய்யோ... நான் ஏதோ ஊர் பாஷையில ‘’அல்லா’’ருக்கும்னு சொல்லிப்புட்டேன்... உடனே ஏய் இவன் இஸ்லாமியப் பதிவர்டா... விடக்கூடாதுடா இவனைன்னு காதை சொறியறேன்... மூஞ்சை நக்குறேன்னு யாராவது பதிவு போட்டிரப்போறீங்க சாமீ...

இன்னொரு கும்பல்லேயிருந்து உடனே அதுக்கு எதிரா... ‘’டேய் இவன் நம்ம ஆளுடா... தமிழ்மணத்துல ஓட்டைப்போட்டு இவனை டாப்புக்கு தூக்கி வுடுங்கடா’’ன்னு கெளம்பிரப்போறாய்ங்க...!!!

தாய் புள்ளையா பழகிட்டு நல்லாத்தானேய்யா இருந்தீக... என்னய்யா திடீருனு ஒரு பத்து நாளா சந்தைக்கடை சிரிப்பா சிரிக்குது... சென்னை பதிவர் சந்திப்பு... அப்படி இப்படின்னு... ஆஹா ஓஹோன்னு பரபரப்பு அடங்குறதுக்குள்ளாவே ஒருத்தருக்கு ஒருத்தர் உரச ஆரம்பிச்சிட்டீகளே... பூனையை ரொம்ப நாளா மடியில கட்டிட்டு இருக்க முடியாம வெளிய குதிச்சிடுச்சா?... இல்லை இது சும்மா வெறும் புகைதானா?...

எனக்கு முன்னாடியே தெரிஞ்சிபோச்சுய்யா... நான் எழுத ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லேயே இது எனக்கு நல்லாவே புரிஞ்சிபோச்சுய்யா... அதுவும் தமிழ்மணத்துலதான் இந்த மாதிரி கூடிக்கும்மியடிக்கிற அட்டூழியமெல்லாம் நடக்குதுன்னும் தெரிஞ்சிக்கிட்டேன்... அப்பவே அரசல் புரசலா நான் தெரிஞ்சிக்கிட்ட விஷயத்தால 2011 மே மாசத்துலேயே ‘’பதிவர்களின் தொடரும் கடமைகள்’’னு ரொம்ப அக்கறையோட பாத்து பாத்து ஒரு பதிவு எழுதினேன்... இன்னக்கி அதை நானே திரும்பப் படிக்கும்போது இப்போ நடந்திட்டிருக்கிற குழாயடிச்சண்டைக்கு அன்னைக்கே நான் எழுதுனது ரொம்பப் பொருத்தமாத்தான் இருக்குது. அதை பலபேர் படிக்காம வுட்டுருப்பீக... ப்ளீஸ் கொஞ்சம் படிங்க... அதுவும் வாசகர்களைவிட பதிவு எழுதுற மேதாவிக எல்லாம் தயவு செய்ஞ்சி இதப்படிங்கய்யா... இதப்படிச்சதுக்கு அப்புறம் கீழே மறுபடியும் தொடர்ந்து எழுதுறேன்...

சத்தியமா இது என் பழைய பதிவுகளுக்கான பப்ளிசிட்டி இல்லை சாமீ... நல்ல மாட்டுக்கு ஒரு சூடுன்னு சொல்லுவாக... ஆனா நான் நிறைய சூடு போட்டும் அது செவிடன் காதுல ஊதுன சங்கு மாதிரி ஆகிப்போச்சு... நமக்கெல்லாம் எதையும் நேரா யோசிச்சிதான் பழக்கமுங்க!!!

 கதம்ப மாலை...: பதிவர்களின் தொடரும் கடமைகள்...

 தேர்தல் முடிந்து, முடிவுகளும் தெரிந்து புது அரசு(சையு)ம் அரியணையில் (ற்)றியாகிவிட்டது. ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு விதமான எழுத்து நடையில் நமது ப்ளாக்கர் சமூகம் சமுதாய உணர்வு கொண்டதென்பதை உலகுக்கு நிருபித்துக் கொண்டே இருக்கிறோம்.

நம்மில் பலர் சிறு வயதிலிருந்தே சமூக மாற்றத்திற்கான ஏக்கத்துடனே வளர்ந்து, வாழ்க்கை சக்கரத்தின் வேகச் சுழற்சியில் வேவ்வேறு பாதையில் சிதறிப்போன போதும் நமது சிந்தனைப் புரட்சிகளுக்கு மேடையமைத்த ப்ளாக்கர்ஸ் தளத்தின் மூலம் இப்போதுதான் ஒன்று படமுடிந்திருக்கிறது. நம்மில் எத்தனையோ பேரின் சமூகம் மீதான மனக்குமுறல்களை ப்ளாக்கர்ஸில் மட்டுமே வெளிப்படுத்த முடிந்திருக்கிறது. இணையதள எழுத்துச் சுதந்திரம் இன்னமும் இடைஞ்சல்களின்றி காக்கப்பட்டு வருவது நமக்கு கிடைத்த முதல் வரமென்பதை மறுப்பதற்கில்லை. மாறிவரும் காலவளர்ச்சியில் இணையதள வாசகர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவது நம்மைப் போன்ற பதிவர்களுக்கான மற்றுமொரு வரப்பிரசாதமாகும்.

ப்ளாக்கர்ஸ் தளம் ஒரு சக்திமிக்க சமூக மறுமலர்ச்சிக்கான மேடையாய் மாறத் துவங்கியிருக்கிறது. ப்ளாக்கர்கள் நாம் சமூகத்தின் சிந்தனைகளைத் தூண்டும், சமுதாய மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை படைத்த கூட்டமாய் உலகத்தின் பார்வையில் மதிக்கப்படத் தொடங்கியிருக்கிறோம். ஆரோக்கியமான வளர்ச்சியை எட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையிலாவது எழுத்துச் சுதந்திரத்தை எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் நமக்கென்று சில வரைமுறைகளையும் கடமைகளையும் வகுத்துக் கொள்வதில் தவறேதும் இருப்பதாய் தெரியவில்லை. வரைமுறையின்றி செய்யப்படும் எந்தவொரு செய்கைகளும் பிறரை முகம் சுளிக்க வைப்பதாய் மாறக்கூடுமென்பதால் வரைமுறைகளென்பது நம்மை நாமே செப்பனிட்டுக் கொள்ள நிச்சயமாய் உதவக்கூடும்.

வரைமுறைகள் என்பது இதைத்தான் எழுதவேண்டும், அதை எழுதக்கூடாது என்பன போன்றதல்ல. ஒவ்வொரு ப்ளாக்கருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு. ஒரு சிலர் சினிமாவை மிக நேர்த்தியாய் விமர்சிப்பார்கள். இது படத்தை பார்க்கும் சாமான்யனுக்கும் நல்ல சினிமா என்பது எப்படியிருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாய் இருக்கும். ஒரு சிலர் வாழ்க்கையின் மிகச்சாதாரண நிகழ்வுகளைக்கூட வெகு நகைச்சுவையாய் எல்லோரும் விரும்பும் வண்ணம் எழுதுவார்கள். ஒரு சிலர் கவிதைகளின் வழியே இலக்கியம் வளர்ப்பார்கள். ஒரு சிலர் சிறுகதைகள் எழுதக்கூடும். ஒரு சிலர் பல்வேறு ஊடகங்களில் தாங்கள் ரசித்தவற்றை பிறரும் ரசிக்க அப்படியே ப்ளாக்கரில் எடுத்து எழுதுவார்கள். பெரும்பான்மை ரகத்தார் சமுதாய விழிப்புணர்வு கட்டுரைகள், அரசியல் அலசல் கட்டுரைகள் என்று புரட்சி மேடையில் பயணிப்பார்கள். இன்னும்சமையல் குறிப்புகள், மருத்துவக்குறிப்புகள், சட்ட உதவிகள், பயண அனுபவங்கள் என்று எண்ணற்ற வகையான எழுத்துக்களும் ப்ளாக்கர்ஸில் உண்டு.

எந்தவொரு ஊடகமும் பொழுதுபோக்கு அம்சங்களின்றிப் போனால் சாமான்யன் வரை சென்றடையும் வெற்றியை ஈட்டுவதென்பது இயலாத காரியமே. எப்படி வெறும் அரசியல் மற்றும் சமுதாய விழிப்புணர்வுக் கட்டுரைகள் மட்டுமே எல்லாவித வாசகர்களையும் கவருவதாக இருக்காதோ அப்படித்தான் ஒவ்வொரு வகை எழுத்துக்களுமே. வெறும் கவிதைகளாகவோ, வெறும் சிறுகதைகளாகவோ இல்லை வெறும் சினிமா விமர்சனம் மட்டுமாகவோ இருந்தால் ப்ளாக்கர்ஸ் இந்தளவு வளர்ச்சியை எட்டியிருக்குமா என்பது கேள்விக்குறியே. எந்தவொரு துறைக்கும், எந்தவொரு பிரிவுக்கும் பதிவுகளை எழுதும் வண்ணம் நம்மில் பல திறமைசாலிகளிருப்பதே ப்ளாக்கர்ஸ் உலகத்தின் வெற்றிக்கான காரணமாகும்.

மிகச்சிறந்த வெற்றியில் பயணித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் வெறுமனே ‘’லவ் பண்ணுவது எப்படி?’’, ‘’கடலை போடுவது எப்படி?’’, ‘’கேரளா பிகரை மடிப்பது எப்படி?’’, ‘’மலையாளிப் பெண்களுக்கு மனசு பெரிசு’’, ‘’பல்லு விளக்குகிறேன்’’, ‘’வாய் கொப்பளிக்கிறேன்’’ என்பன போன்ற கட்டுரைகளை மட்டுமே எழுதி ப்ளாக்கர்ஸ் மீதான சமூகப் பார்வையைக் கெடுத்துக் கொண்டிருக்காமல் அவ்வப்போது உருப்படியான விஷயங்களையும் கொஞ்சம் எழுதுங்கள்.

இதுவரை ஆளுங்கட்சியை பெரும்பான்மையாய் விமர்சித்து எழுதி, நாம் விரும்பிய ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொண்டதோடு முடிந்து விடவில்லை நமது வேலைகள். இனிவரும் காலங்களில் ப்ளாக்கராய் நமது முக்கிய கடமை புது அரசுக்கும், அதன் அரசிக்கும் கூட மிகச்சிறந்த கடிவாளமாய் நமது விமர்சனங்களை எடுத்து வைப்பதுதான். ஆளுங்கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கும் அதே நேரத்தில் ஆளுங்கட்சியின் நல்ல திட்டங்கள் ஏதேனுமிருப்பின் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் அரசியல் எழுதும் ஒவ்வொரு பதிவரின் கடமையாகும்.

நாம் எழுதும் எந்தவொரு பதிவானாலும் அதை வெளியிடும் முன் கீழ்க்காண்பவற்றை ஒரு முறை உறுதிபடுத்திக் கொண்டு வெளியிடுவது நிச்சயமாய் நல்லதொரு ப்ளாக்கரின் கடமை என்பதை மறுப்பதற்கில்லை.

#
உங்கள் பதிவில் தனிமனித விமர்சனம் ஏதுமில்லை.
(
கருணாநிதி, ஜெயலலிதா, சோனியா காந்தி போன்ற எந்தவொரு அரசியல்வாதியையும் அரசியல் சார்ந்து விமர்சித்தல் தவறில்லை. அதே போல் எந்தவொரு நடிகர் நடிகைகளையும் சினிமா சார்ந்து விமர்சித்தல் தவறில்லை. ஆனால் அவர்களுடைய தனிமனித வாழ்க்கையை விமர்சித்தல் நாகரீகமற்றது என்பது என் தாழ்மையான கருத்து)

#
உங்கள் பதிவில் படிப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் அநாகரிகமான வார்த்தைகள் ஏதுமில்லை.

#
உங்கள் பதிவில் எவரொருவர் பற்றிய செய்தியிலும் அவரை மரியாதையில்லாது விளிக்கும் ஒருமையில் எழுதிய சொற்கள் ஏதுமில்லை.

#
உங்கள் பதிவில் எழுதப்பட்ட விஷயம் ஏதோவொரு வகையில் வாசகனுக்கு பயனளிக்குமே ஒழிய உருப்படியில்லாத குப்பைச் செய்திகள் ஏதுமில்லை.
(
கவிதை மற்றும் சிறுகதை என்றால் இலக்கியம் வளர்க்கும். படிக்கும் வாசகனின் மனதில் நிறைவைத் தரும். சினிமா விமர்சனம் சாமான்யனுக்கு நல்ல சினிமாவை மட்டும் பார்க்கவும் உருப்படியில்லாத சினிமாக்களைத் தவிர்த்து அவன் பணத்தை வீணாகாமல் மிச்சப்படுத்தவும் உதவும். அரசியல் மற்றும் சமுதாய விழிப்புணர்வுக் கட்டுரைகள் என்றால் சமூக மாற்றத்துக்கு உதவும். இப்படி எந்த வகைப் பதிவானாலும் ஏதோவொரு வகையில் சாமான்யனுக்கும் சமூகத்துக்கும் உதவும் வகையில் இருத்தல் மேலானது).

#
உங்கள் பதிவு எந்த விஷயமான படைப்பானாலும், நடுநிலைமையான கருத்துக்களோடு இருக்கிறதே ஒழிய ஒரு தலைப்பட்சமான கருத்துக்கள் ஏதுமில்லை.

#
உங்கள் பதிவு எதிலிருந்தாவது எடுத்து எழுதப்பட்டதானால் அதைப்பற்றித் தெரிவிக்காமல் மறைக்கப்பட்ட விவரம் ஏதுமில்லை.

மேற்கூறிய விஷயங்கள் அனைத்தையும் ஒவ்வொரு பதிவின் போதும் ஒவ்வொரு பதிவரும் கடைப்பிடித்தலைக் கடமையாக நிறைவேற்றும் பட்சத்தில் வேகமான வளர்ச்சியிலிருக்கும் நம் ப்ளாக்கர்ஸ் சமூகம் இன்னும் மரியாதைக்குரிய நிலையைச் சென்றடையும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது சத்தியமான நிச்சயம்.

பின்குறிப்பு :- ஆரோக்கியமான விமர்சனங்களும் விவாதங்களுமின்றி வெறுமனே நக்கல், நையாண்டித்தனம் செய்து கொண்டிருக்கும் பின்னூட்டப் புலிகளை நான் பதிவர்களாகவே கருத்தில் கொள்ளாததால் அவர்களைப் பற்றி எழுதத் தேவையில்லாததாகவே உணர்கிறேன்.

என்ன படிச்சீகளா?... நான் எதுவும் தப்பா எழுதலேன்னு நெனக்கிறேன்... நான் அன்னக்கி எழுதினது இன்னக்கி நெலமைக்கு கூட பொருத்தமா இருக்கிற மாதிரி பண்ணி வச்சிருக்கிற நம்ம பதிவுலக அண்ணாச்சிங்க மற்றும் அக்காங்களுக்கெல்லாம் நம்மளோட வணக்கமுங்க...!!!

 இப்போ வெகு சமீபத்திலகூட பதிவுலக போக்கப்பாத்து மனசு வெறுத்துப்போயி ஒரு பதிவு எழுதினேன்... கோவிச்சுக்காமா அதையும் ஒரு வாட்டி படிச்சிறீகளா?...

 கதம்ப மாலை...: தமிழ் மணமா?... தமிழ்வெளியா?... தரமானது எது? – ஒரு சீரியஸ் பதிவு!

சரி... இப்போ என்னங்கிறீங்களா?... நான் சொல்லித்தான் தெரியனுமா உங்களுக்கெல்லாம்?...

நாமெல்லாம் ஒரே குடும்பம்ய்யா... எழுத்தாளர் குடும்பம்ய்யா... அதுவும் பத்திரிக்கை மாதிரி இல்லாம முழு எழுத்துச் சுதந்திரத்தோட உலா வர்ற குடும்பம்ய்யா இது... (அன்புடையீர்... குருவி கட்டும் கூட்டுக்குள்ளே குண்டு வைக்கலாமா?... நாமெல்லாம் சண்டையிட்டால் சர்ப்பம்தான் கர்ப்பம் தரிக்குமா? இல்லை... எறும்புதான் கரும்பு திங்குமா?...’’ அப்படீன்லாம் கலாய்க்கக்கூடாதுங்கோ!!!)

யாரோ என்னமோ எழுதிட்டு போறாய்ங்கய்யா... ஒருத்தருக்கு சரின்னு படுறது இன்னொருத்தருக்கு தப்பா படலாம்... அதுக்காக வரிஞ்சி கட்டிக்கிட்டு ஒருத்தர் மேல ஒருத்தர் சாக்கடைய அள்ளி வீசனுமா?...

நம்மளோட எழுத்து என்ன?... அதை மட்டும் அழகா சொல்லிட்டு போலாமே?... ஒருத்தர் தன்னோட மதத்தை பத்தி எழுதுனா... நீயும் உன்னோட மதத்தைப்பத்தி எழுது. அதவுட்டுப்புட்டு அவனோட மதத்தை தாக்கி எழுதி உன்னோட தரத்தை நீயே ஏன்யா குறைச்சிக்கனும்?... நீ பண்ற ஒவ்வொரு எதிர்வினையும் உனக்கு பிடிக்காத பதிவைக்கூட பாப்புலர் லிஸ்ட்ல கொண்டுபோய் பலபேருக்கு ரீச் ஆகுறதுன்றது எப்பய்யா புரிஞ்சிக்கப்போறீக?...

இவ்வளவு நாள் கும்பல் கும்பலா ஒன்னு கூடி புதுசா உருப்படியா எழுதுற எவனையும் மேல வந்திராம பாத்துக்கிட்டீக... இன்னக்கி உங்க கும்பல்களுக்குள்ளேயே மதத்தை வைச்சு ஒரு கும்பலை பிரிச்சிப்புட்டீக... அடுத்து சாதிய வச்சும் பிரிப்பீகளோ என்னவோ தெரியலை?...!

என்னாத்துக்குய்யா இந்த அசிங்கமெல்லாம்?... அண்ணாந்து படுத்துட்டு காரித்துப்புனா நம்ம மூஞ்சிதான்யா நாறிப்போகும்... உலகம் முழுக்க பதிவுலகத்தை உத்துப்பாத்திட்டிருக்கிற காலம்யா இது... இன்னமும் ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கிட்டு அதுக்கு அவுங்கங்க கும்பல் ஓட்டு போட்டு தமிழ்மணத்துல டாப்ல வர்ற வச்சு... ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு அக்காவும் அண்ணனும் மாறி மாறி திட்டிக்கிட்டதுதான் தமிழ்மணத்துல சூடான பதிவுகள் வரிசைல டாப் 2ல இருக்குது...(என்ன கொடுமை சரவணன் இது?...!!!)

போதும்யா இந்த அசிங்கமெல்லாம்... சில குரூப்பீஸம் இருக்கத்தான் செய்யுது பதிவுலகத்துல... அதுக்காக அள்ள அள்ளக் குறையாத புதையல் மாதிரி விதவிதமான எழுத்துக்கள் குவிஞ்சி கிடக்கிற பதிவுலகத்தில அதையெல்லாம் வுட்டுப்புட்டு இந்த சண்டைங்களுக்கு முக்கியத்துவம் குடுத்து அத டாப் லிஸ்ட்ல வேற வர வச்சு உலகம் முழுக்க பரப்பனுமா இந்த அசிங்கத்த?...

பலபேரு நடுநிலைமையோடு இந்த மாதிரி புகைச்சலை நமக்கென்ன என்ற ரீதியில் கண்டுகொள்ளாமல் இருப்பதும் மிகத்தவறே... இந்த மாதிரி சண்டைகளும், அதை நம்மை மாதிரி பதிவர்கள் கண்டுக்காம இருப்பதும் ‘’சொந்தக்காசுல சூனியம் வச்சிக்கிற கதைதான்றதை புரிஞ்சிக்கனுங்கோ’’...!

ஜால்ரா போட்டே உசுப்பேத்ற அல்லக்கைகளும்... ஆதிக்க சக்தி குரூப்புகளும் அவங்களாவே திருந்தனும்... இல்லை பதிவுலகத்தில சக்தி மிக்கதா இருக்கிற தமிழ்மணம்தான் அவுகளை திருத்தனும்...

பாக்கலாம்... இந்த குழாயடிச்சண்டையில இன்னும் என்னென்ன ரகசிய(நாத்த)மெல்லாம் வெளிய வரப்போவுதோ?... தமிழ்மணமே நீயே துணை!!!



 

8 comments:

  1. மிகச் சரியாகவே எழுதியிருக்கிறீர்கள்.

    நம்மைப் போன்றவர்களின் விருப்பம் எளிதில் நிறைவேறாது.

    தமிழ் மணம் மனது வைத்தால் ‘குழாயடிச் சண்டையைத் தடுத்து நிறுத்தலாம்.

    தங்களின் பதிவு மிக நல்ல நோக்கம் கொண்டது.

    பாராட்டுகள்.

    ReplyDelete
  2. நல்லா செல்லிக்கீனிங்க தல...

    ஆனா நம்ம ஆளுங்க எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாங்க என்ன செய்யறது...

    நானும் பாக்குறேங்க இந்த தமிழ் மணத்தில் முதல் 10 பேர் மட்டும்தான் இந்த பிரச்சனையெல்லாம்...

    ReplyDelete
  3. சில நாட்களாகவே மணம் இல்லை.துர்நாற்றம் தான்.நல்லதொரு பதிவு.

    ReplyDelete
  4. 'தமிழ்மணம்' சக்திமிக்கதொரு அற்புதமான ஊடகம்.. அதை பதிவர்கள் தவறாக பயன்படுத்திக்கொண்டிருப்பது வருந்தத்தக்கது!



    ReplyDelete
  5. தமிழ் மணம் பார்த்து இதே யோசிச்சிட்டு வரும் போது நீங்களும் அதையே எழுதுறீங்க... என்னத்த சொல்ல சகோ ஒன்னும் சிலாக்கியமா இல்ல..ஹ்ம்ம்.
    என்னுடைய ஒரு கொள்கை தான் பொதுவிடத்திலோ அல்லது பொதுவெளியில் அரசியல் அல்லது மதம் பற்றி விவாதம் செய்வதில்லை என்பது. செய்வதால் விளைவதெல்லாம் சர்ச்சைகள் மட்டும் தான் புரிந்துணர்வு இல்லை.

    ReplyDelete
  6. வணக்கம்

    கூகிள்சிறி திரட்டி இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படுகிறது.உங்களுடைய பதிவுகள் தமிழ்மக்கள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் எவ்வாறு இணைப்பது என்று அறிய rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்புங்கள்.

    யாழ் மஞ்சு

    ReplyDelete
  7. நன்று
    இன்று என் தளத்தில் “பைத்தியம் தெளிவதில்லை”

    ReplyDelete
  8. நல்ல பதிவு ....அதற்கு ஏற்ற படம்

    ReplyDelete