SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, September 13, 2012

பொண்டாட்டியா அவ?....


வழக்கம்போல வேலை முடிந்து வீட்டுக்குள் நுழையும்போது இரவு பத்து மணி. மகள் தேவதை போல அழகாகத் தூங்கிக்கொண்டிருந்தாள். காலையில் அறுபது கி.மீ... மாலையில் அறுபது கி.மீ... என தினமும் மூன்று மணி நேரத்திற்கும் மேல் எனது வேலைக்கான பயணநேரமே முழுங்கிக்கொள்ளும். காலையில் நான் வீட்டை விட்டுக்கிளம்பும்போது குழந்தைகள் இருவருமே அயர்ந்து தூங்கிக்கொண்டிருப்பார்கள். இரவில் நான் வீடு திரும்பும்போது பெரும்பாலும் மகள் தூங்கியிருப்பாள். மகன்... குட்டிப்பையன்... மூன்று வயது. பெரும்பாலும் இரவு எந்நேரமானாலும் எனக்காக முழித்துக்கொண்டு காத்திருப்பான்.

வீட்டுக்குள் நுழைந்ததுமே அப்பா என்று எனது காலை கட்டிக்கொண்டான். ‘’அப்பா என்னைத்தூக்குப்பா’’ என்றான்.

‘’இருடா குட்டி... டாடி பேக்கெல்லாம் வச்சிட்டு இருக்கேன்ல... உன்னை எப்படி தூக்குறது?... எல்லாத்தையும் வீட்டுக்குள்ள வச்சிட்டு உன்னைத் தூக்கிக்கிறேன்டா செல்லம்’’ என்றேன்.

கேட்டைத்திறந்ததோடு சரி... எனது மூஞ்சைப்பார்க்காமலேயே கோபமாக வீட்டுக்குள் போய்விட்டாள் எனது மனைவி. இது பழகிப்போன நிகழ்வென்பதால் என்னிடம் எந்தவிதமான எதிர் உணர்ச்சியும் எழவில்லை.

மகனின் கையைப்பிடித்தவாறே வீட்டுக்குள் நுழைந்தேன். மனைவி அவள்பாட்டுக்கு மகளுடன் சென்று படுத்துக்கொண்டு போர்வையை இழுத்து மூடிக்கொண்டாள். நான் ஒரு சின்னக்குளியல் போட்டுவிட்டு உடை மாற்றிக்கொண்டு எனது பையனை தூக்கிக்கொண்டேன். காலையில் கம்பெனி கேண்டீனில் சாப்பிட்ட மூணு இட்லிதான்... அத்தோடு இன்றைய போழுது முழுவதுமே முடிந்துவிட்டதால் பசி வயிற்றைக்கிள்ளியது. மனைவியிடம் டின்னர் எதாவது செஞ்சி வச்சிருக்கியாப்பா?... என்று கேட்டேன். அவ்வளவுதான் தாமதம்...

ஒரு மண்ணும் இல்லை. நான் என்ன மனுஷியா இல்லை மெஷினா?... காலையில இருந்து எவ்வளவு வேலை தெரியுமா?... நான் படுற பாடு இங்க யாருக்குப்புரியுது. ஒரு நாளாவது வீட்டுல இருந்து நான் செய்யுற வேலையெல்லாம் நீ செஞ்சிப்பாரு... அப்போதான் என் கஷ்டம் என்னான்னு உனக்கு புரியும். இந்த ரெண்டையும் சமாளிக்கிறதுக்குள்ள நான் சீக்கிரம் செத்துருவேன் போல... இந்த லட்சணத்தில் புதுசா ஒரு நாய்க்குட்டி வேற வாங்கி விட்டுட்டே... உனக்கென்ன நீ பாட்டுக்கு காலைல கெளம்பி போனீனா இராத்திரிதான் வர்றே. நான் இருக்கிற வரைக்கும் என் அருமை தெரியாது உனக்கு. ஒரு நாள் நான் மொத்தமா போயிரப்போறேன். அப்போ இதுங்களை வச்சிட்டு படப்போறேப்பாரு பாடு... அப்போதான் என் அருமை உனக்கு தெரியும்...

சாப்பிட எதாவது செஞ்சி வச்சிருக்கியான்னு கேட்டதுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும்னு எனக்குத் தெரியாமப்போச்சு. பேசாமத்தண்ணிய குடிச்சிட்டு படுத்திருக்கலாம்னு தோணுச்சு.

அதுக்குள்ள என் பையன் என்கிட்ட வந்து ‘’டாடி... ஜெனி எப்போ பாத்தாலும் என்னை கடிக்க வருது டாடி... நீ அது என்கிட்ட விளையாடும்னு சொன்னே?... ஆனா அது ஏன் என்னை கடிக்க வருது?’ன்னு மழலை மொழியில கேட்டான்.

சில நேரத்துல ‘’அப்பா’’ன்னு தமிழ்லேயும், சில நேரத்துல ‘’டாடி’’ன்றதும் அவனோட ஸ்பெஷாலிட்டி. ஜெனின்றது ரெண்டு நாளைக்கு முன்னாடி நான் எட்டாயிரம் ரூபா குடுத்து வாங்கிட்டு வந்த ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய்க்குட்டி. அதுக்கு வயசு நாப்பத்திரண்டு நாள்தான். என் மகள் ஆசையாய் வைத்த பெயர் ‘’ஜெனி’’. எனது வேலையின் நேரம் குறித்த கவலையில் வீட்டுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டுமே என்ற எண்ணத்திலும், செல்லப்பிராணிகள் மீது இயற்கையாகவே எனக்கிருக்கும் ஒரு பிரியத்திலும்... நான் எடுத்த முடிவுதான் ஜெனி எங்கள் வீட்டுக்கு வந்தது. ஆனால் அதற்கு என் மனைவியிடம் இவ்வளவு எதிர்ப்பு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. எனது மகன் நினைவுபடுத்தியல்தான் எனக்கும் ஜெனியின் நியாபகமே வந்தது.

ஜெனி சாப்பிட்டுச்சா இல்லையான்னு?... என் மனைவியிடம் கேட்க விருப்பமில்லாமல் எனது மகனையே கேட்டேன்.  

‘’அதுக்கு புவா குடுத்தாச்சுப்பா... சாப்பிட்டிடுச்சுப்பா’’ என்றான்.

புவா என்றதும் பயந்து போனவனாய் ‘’அது சின்னக்குட்டிப்பா... அதுக்கு சோறு குடுக்கக்கூடாது’’ என்று என் மகனிடம் சொன்னதற்கு... ‘’சோறு இல்லைப்பா... அதோட புவா சாப்பிட்டுச்சு’’ என்றதும் சரி பெடிகிரி குடுத்திருக்கிறார்கள் என்று புரிந்துகொண்டேன். பல நேரங்களில் மழலை பாஷை நமக்கு வித்தியாசமானதாய் விரும்பக்கூடியதாய் இருப்பதும் நமது வாழ்வின் ஒரு சில சந்தோஷங்களில் ஒன்றே!

காதலித்து கல்யாணம் பண்ணும் வரையில்தான் எனது வாழ்க்கையில் எனக்கான சுயவிருப்பங்கள் என்னைச்சுற்றி வந்தது. கல்யாணம் முடிந்த கணம் முதலே விட்டுக்கொடுத்தலே வாழ்க்கை என்ற எனது முடிவில் எனது சுயவிருப்பங்கள் பாதியாய் அழிந்து போனது. எனது வாழ்வில் குழந்தைகள் நுழைந்த பிறகு மிச்சம் மீதியிருந்த சுயவிருப்பங்கள் முழுவதுமே மண்ணோடு மண்ணாய் புதைந்து போனது. வெகு நாட்களுக்குப்பிறகு ஆசைப்பட்டு ஒரு நாய்க்குட்டியை வாங்கிய எனது சுயவிருப்பம்கூட கல்யாணம் என்ற பந்தத்தில் சிக்கிச் சின்னாபின்னமாக வேண்டுமா?... ஓய்வின்றி உழைத்து உழைத்து குடும்பத்திற்கான எதிர்காலத்திலேயே எனது வாழ்க்கை முழுவதும் இயந்திரத்தனமாய் எவ்வித உணர்ச்சிகளுமற்று முடிந்து போகவேண்டியதுதான் எனது தலையெழுத்தா?...

 மனதில் ஏதோவொரு இனம் புரியா பாரம். வெளியில் ஒரு வாக் போய்வரலாம் என்று தோணியது. ஜெனியைப்போய் பார்த்தேன். கூட விளையாட யாருமின்றி அந்த இரவுப்பொழுதிலும் அது மட்டும் தனியாக துள்ளிக்குதித்து விளையாடிக் கொண்டிருந்ததை பார்க்கையில் மனதுக்குள் இனம் புரியாத உணர்ச்சிகள் ஒரு கணம் உருவாகிப்போனது.

ஜெனியின் கண்கள் அதையும் என்னோடு கூட்டிச் செல்லத்தூண்டியது. செருப்பை மாட்டிக்கொண்டு ஒரு கையில் மார்போடு அணைத்து ஜெனியைத் தூக்கிக்கொண்டு கிளம்பினேன்.

‘’அப்பா... எங்கப்பா போறே?... நானும் வர்றேனே... என்னையும் கூட்டிட்டு போப்பா... பிளீஸ்’’ என்ற எனது மகனின் வேண்டுகோளை தட்டிக்கழிக்க மனது வருமா என்ன?... ‘’

டாடி உன்னைக் கூட்டிட்டு போறேன்ப்பா... ஆனா டாடிய தூக்கச்சொல்லக்கூடாது. ஜெனி குட்டிப்பாப்பா இல்லையா... டாடி அதை தூக்கிட்டுத்தான் வரனும்... அதானால நீ நடந்துதான்ப்பா வரனும்’’ னு சொன்னேன்.

‘’டாடி... நான் பெரிய பையனா ஆயிட்டேன் டாடி... உன்னத் தூக்கச்சொல்லமாட்டேன்... நடந்தே வருவேன் டாடி’’ ன்னான்.

ஜெனியை மார்போடு அணைத்துக்கொண்டு, குழந்தையை ஒரு கையில் பிடித்துக்கொண்டு கேட்டைப்பூட்டிவிட்டு தெருவில் இறங்கி நடக்கத்தொடங்கினேன். இரவு பத்து மணி தாண்டிப்போனதால் பெரும்பாலான வீடுகளில் விளக்கணைந்து தெரு முழுவதும் நிசப்தமே குடி கொண்டிருந்தது. அவ்வப்போது தாண்டிச்சென்ற ஒரு சில பைக்குகளைத்தவிர பெரிதாய் ஆளரவமேயில்லை.

எனது மூன்று வயது மகனின் பலவித தேடல் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டே மெல்ல நடந்து மெயின் ரோட்டை அடைந்தேன். மெயின் ரோடு இன்னமும் முழுதாய் இரவுக்குள் மூழ்காமல் பல கடைகள் திறந்திருந்தன. ஜன நடமாட்டம் மட்டும் கொஞ்சம் கம்மியாய் இருந்தது.

என் கையிலிருந்த ஜெனியைப்பார்த்த ஒரு தெருநாய் ஆவேசமாய் குரைத்துக்கொண்டே என்னருகில் வந்தது. எனது மகன் எனது கால்களை இறுகக்கட்டிக்கொண்டான். ஜெனி அந்த தெருநாயின் உணர்ச்சிகளை பற்றி ஏதுமறியா குழந்தையாய் கொஞ்சம் பயத்துடனும், கொஞ்சம் பாசத்துடனும் அதைப்பார்த்து வாலை ஆட்டி எனது கைகளில் இருந்து துள்ளிக்குதிக்க முயன்றது. ஜெனி... என்ற அதட்டலோடு எனது மகனையும், ஜெனியையும் டைட்டாக பிடித்துக்கொண்டு குனிந்து ஒரு கல்லை எடுத்து அந்தத் தெருநாயின் மீது எறிவது போல பாவ்லா செய்து அதை பக்கத்தில் வரவிடாமல் பயமுறுத்தினேன்.

அந்தத்தெருநாயின் முகத்தில்தான் எத்தனைவிதமான உணர்ச்சிகள்...!

தனக்கு கிடைக்காத வாழ்வு தன்னைப்போன்ற மற்றொரு ஜீவராசிக்கு கிடைத்திருப்பதாய் அதன் ஏக்கமும், கோபமும், ஏமாற்றமும், வெறுப்பும், இயலாமையுமாய் இப்படியொரு கலவையான உணர்ச்சியை நம்மில் எத்தனை பேர் கவனித்திருப்போம் என்று தெரியவில்லை.

அது உண்மையிலேயே எனது மிரட்டலுக்கு பயந்ததா?... இல்லை அதுவே ஏதோவொரு எண்ணத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டதா என்று தெரியவில்லை. எங்களை திரும்பிக்கூட பார்க்காமல் சென்றுவிட்டது.

எனக்கும்கூட கொஞ்சம் இதயம் படபடவென்றுதான் அடித்துக் கொண்டிருந்தது. அது எனது பயம் அல்ல... எனது கால்களுக்குள் ஒளிந்து கொண்ட எனது மகனின் பயம். ஒரு தந்தையின் பொறுப்புகளும் உணர்ச்சிகளும் நான் மகனாய் இருந்தவரையில் உணராதது. எனக்கென குழந்தைச்செல்வங்கள் வந்தபிறகுதான் எனது தந்தையின் அருமை எனக்கு வெகு அழகாக ஆழப்புரிந்தது.

தெருவோரமாய் ஒரு வயதான அம்மா சிறியதொரு மரப்பலகையில் விற்றதுபோக இறுதி வியாபாரத்துக்காக காத்திருக்கும் பூக்களோடு அமர்ந்திருந்தார். அவரைக் கடந்து நடந்தபோது அவருக்கு என்ன தோணியதோ தெரியவில்லை...

‘’ராசா... பூ வேணுமா ராசா?’’ என்றார்.

நம்ம கதையே சிரிப்பாய் சிரிச்சிட்டு இருக்கு... பூவை வாங்கிட்டுப்போயி நாம என்னப் பண்ணப்போறோம்னு மனசுக்குள்ளேயே நினைச்சிக்கிட்டு ‘’இல்லைம்மா... வேண்டாம்மா’’ என்றேன்.

‘’ஏன் கண்ணு வூட்டுல சம்சாரத்தோட ஏதாவது சண்டையா?...’’

என்னடா இது?... கிழவி தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கேன்னு எரிச்சலோட ‘’ஏம்மா உனக்கெதுக்கும்மா அதெல்லாம்?... என்றேன்.

‘’கோவிச்சிக்காத கண்ணு... எம்புள்ள மாதிரி இருக்கே நீயி?... இது யாரு உன் புள்ளையா?...’’ என்று எனது மகனைக்கேட்டார். ‘’சம்சாரத்துகூட சண்டை போடாத கண்ணு... இன்னக்கி எல்லா வூட்டுலேயும் இப்பிடித்தான் கண்ணு நடக்குது... எடுத்தோம் கவுத்தோம்னு சண்டய போட்டுட்டு கோர்ட்வாசல்ல போயி நின்னுக்கிறீங்க... குடும்பம்னா என்னன்னு புரிஞ்சிக்கிற பக்குவம் ரொம்ப கம்மியாயிப்போச்சுப்பா...

படிப்பறிவில்லாத அந்த அம்மாவிடம் எனது விடை தெரியாது எனது வாழ்க்கை தேடல்களுக்கான விஷயங்கள் ஏதாவது நிச்சயம் இருக்கும் என்று நம்பினேன்.

‘’ஏம்மா உங்களுக்கு புள்ளைங்க யாரும் இல்லையாம்மா?... இந்த வயசான காலத்திலேயும் பூ கட்டி சம்பாதிச்சு உங்க பொழப்ப நடத்திட்டு இருக்கீங்களே?...’’ ன்னு கேட்டேன்.

ஏங்கண்ணு இல்லாம... ஒன்னுக்கு நாலு புள்ளைங்க கண்ணு எனக்கு. அதுவும் அல்லாம் ஆம்புளப்புள்ளைங்க... அதுங்கள வளக்கும் போதெல்லாம் கடைசி காலத்துல எனக்கு கால் வவுறு கஞ்சியாவது ஊத்தி நல்லபடியா வழியனுப்பி வைப்பானுங்கனு நெனச்சிக்கினுதான் கண்ணு வளத்தேன். இதுங்க இருக்கிற நம்பிக்கையில எங்க வூட்டுக்காரர எப்பவுமே எடுத்தெறிஞ்சி பேசிக்கினுதான்ப்பா இருந்தேன்... அது மவராசன் போயி சேந்திடுச்சி... எம்பொழப்புதான்ப்பா இப்படி ஆயிப்போச்சு...’’

அதோட நெத்தியில இருக்கிற பெரிய குங்குமத்தையே நான் பாக்கிறேன்னு தெரிஞ்சதும் ‘’இதுதான் கண்ணு என் பொழப்பு... நம்ம வியாபாரத்துக்கு பூவும் பொட்டும்தான் கண்ணு ரொம்ப முக்கியம்... இல்லேன்னா அபசகுணமா நெனச்சிக்கினு நம்மளாண்ட யாரும் பூ வாங்கிறது இல்லேப்பா... நான் மட்டும் இல்லே கண்ணு... பூ விக்கிறதுல முக்காவாசி பேர் இப்பிடித்தான் கண்ணு...  புருஷன் சரியில்லாதவ... புருசனை பறிகொடுத்தவ... இப்படிப்பட்டவங்களுக்கெல்லாம் தையல் மெஷினோ இல்லே பூ கட்டி வித்து வாழறதோதான் கண்ணு கவுரதையா வாழறதுக்கு இருக்கிற வழி...’’

ஏம்மா உங்க புள்ளைங்க வீட்டுல தங்கியிருந்து கடைசி காலத்தை நிம்மதியா கழிக்கலாமேமா?...

எங்க கண்ணு?... இந்த காலத்துல அப்பன் ஆத்தால கடைசி காலத்துல வச்சிக் காப்பாத்துற எண்ணம் எத்தினி புள்ளைங்களுப்பா இருக்குது?... அப்பிடியே அவுங்க நெனச்சாக்கூட வர்றவளுக எங்கப்பா வுடுறாளுக?... ம்ம்ம் யாரையும் கொற சொல்றதுல பிரயோசனமில்லப்பா... எல்லாம் நான் பண்ண பாவம்... இன்னக்கி என்னைச் சுத்தி சுத்தி அடிக்குதுப்பா... எங்க வூட்டுக்காரரு தெனம் கஷ்டப்பட்டு சம்பாதிச்சிட்டு வந்து காக்காசோ... அரக்காசோ... எதானாலும் என் கையில கொடுக்கும்... ஆனா பாவி நான் ஒருநா கூட அவருக்கு வாய்க்கு ருசியா சம்பாதிச்சிப்போட்டது இல்லப்பா... நெறய நாள் அது ஓட்டல்ல போயித்தின்னுட்டு வந்துதான் படுக்கும். தெனம் நான் சண்ட போட்டாலும் ஒரு நா கூட என் மேல கோவப்படாம தனக்குள்ளேயே அடக்கிட்டு போயிரும். நாலு புள்ளங்கள வச்சி வூட்டு வேலையெல்லாம் செஞ்சிக்கிட்டு நான் கஷ்டப்படுறேன்னுதான் அது என்கிட்ட சண்டபோடாமலே போயிருதுக்கின்றது அது போனதுக்கப்புறம்தான்ப்பா இந்த மரமண்டக்கு உரச்சுது... ஒரு வாழ்க்கை பூரா அதுகூட வாழ்ந்து நான் புரிஞ்சிக்காத வெவரமெல்லாம் ஒரு வயித்து கஞ்சிக்கு நான் படுறபாடுதான்ப்பா எனக்கு புரியவைச்சுது. வாழ்க்கை ரொம்ப வித்தியாசமானது கண்ணு. வாழும்போதெல்லாம் நாம புரிஞ்சிக்கவே மாட்டோம்... முடியப்போற நேரத்துலதான் கண்ணு எல்லாத்தயும் உணருவோம்... அதான் கண்ணு சொல்றேன்... ஒன்னயப்பாத்தா நல்ல புள்ளையாத்தெரியுது... வாழறப்பவே வாழ்க்கைய புரிஞ்சிக்கோ கண்ணு’’...

ஏனோ தெரியவில்லை... என்னையறியாமலேயே எனது கண்கள் கலங்கியது. அது அந்த அம்மாவுக்கானதா?... இல்லை எனக்கானதா என்பது விளங்கவில்லை.

அம்மா அந்த மிச்சப்பூவெல்லாம் எனக்கே குடுங்கம்மான்னேன். இலையில் மடித்து கட்டிக்கொடுத்து ஒரு கவரில் போட்டு நீட்டி நாப்பது ரூவா குடு கண்ணு என்றார். நூறு ரூபாய் தாள் ஒன்றை கொடுத்துவிட்டு அந்த அம்மா எவ்வளவோ மறுத்தும் கேளாமல் மீதிச்சில்லறை வாங்காமல் நகர்ந்தேன்.

அந்த அம்மா சொன்ன மாதிரியே... வாழ்க்கை வித்தியாசமானதுதான். அது நமக்கான செய்திகளை நம்மை சுற்றியே நிறுத்தியிருக்கும். அந்தச் செய்திக்கும் நமக்குமான இடைவெளிதான் வாழ்க்கையை பற்றிய நமது தவறான கண்ணோட்டம்.

யோசித்துக்கொண்டே நடந்தபோது ஒரு பெரியவர் தள்ளுவண்டியில் வாழைப்பழங்கள் வைத்து விற்றுக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட எழுபது வயதுக்கும் மேலிருக்கும் அந்தப்பெரியவருக்கு. சரி... பசிக்கு ரெண்டு பழமாவது சாப்பிடலாம் என்று அவரிடம் ஒதுங்கினேன்.

பெரியவரே இப்போ சாப்பிடற மாதிரி ரெண்டு பழம் குடுங்க என்றேன். அவரும் மெல்லத்தேடி எடுத்து இரண்டு பழங்களை என் கையில் கொடுத்தார். அப்பு பழம் சாப்பிடறியாடா?... என்று என் மகனிடம் கேட்டேன். வேண்டாம்ப்பா... நீயே தின்னு என்று கூறிவிட்டு பெரிய பெரிய கடைகளின் வண்ண விளக்குகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். ஒரு பழத்தை தின்றவாறே அந்தப்பெரியவரை பார்த்துக்கொண்டிருந்தேன். அவரது பார்வை முழுவதும் எனது கையிலிருந்த ஜெனி மீதே இருந்தது.

ஏன் தம்பி... இந்த நாய் மேல அவ்வளோ பிரியமா உங்களுக்கு?... என்றார்.

ஆமாங்கய்யா... ஏன்யா கேக்குறீங்க?... என்றேன்.

இல்ல தம்பி... சும்மாதான் கேட்டேன்... வர வர மனுசங்களுக்கு ஒருத்தர் மேல ஒருத்தருக்கு இருக்கிற பிரியமெல்லாம் கொறஞ்சிக்கிட்டே வருது. பெரிய பெரிய பணக்காரங்க வீட்டுல எல்லாம் ஒரே வீட்டுல இருந்துக்கிட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் மூஞ்சிய பாத்து பேசுறதுகூட கொறஞ்சிடுச்சு... ஆனா ஆளாளுக்கு ஒரு செல்லப்பிராணிய வச்சுக்கிட்டு பாத்து பாத்து கொஞ்சுறாங்க அதான் கேட்டேன்... ஆனா நான் உங்கள சொல்றேன்னு தப்பா நெனச்சிக்காதீங்க தம்பி...

‘’இல்லப்பெரியவரே... அது பரவாயில்லை’’ என்றேன். ஏன் பெரியவரே உங்க வயசு என்னங்க?...

எனக்குத்தெரிஞ்சு எழுபத்தி மூணு வயசுன்னு நெனக்கிறேன் தம்பி...

இவ்வளோ வயசுலேயும் வண்டி தள்ளி வியாபாரம் பண்ணி பொழக்கிறீங்களே?... உங்களுக்கு புள்ளைங்க யாரும் இல்லையா?...
இருக்கிறாங்க தம்பி... இரண்டு பொண்ணுங்க... பையன் ஒருத்தன்... எல்லாத்தையும் கட்டிக்குடுத்தாச்சு... அது அது பொழப்ப பாத்துக்கிட்டு வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்குதுங்க. வயசான காலத்துல நாம போயி யாருக்கும் பாராம இருக்கக்கூடாதுன்னுதான் இப்படி ஒரு பொழப்பு தம்பி... உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் எல்லாம் பரவாயில்ல... என்னவொன்னு... இந்தச்சோறுதான் பிரச்சினை... வயசான காலத்துல ஓட்டல்ல சாப்பிடறதும்... ஏதாவது நோவுன்னு படுத்துட்டா பக்கத்துல ஆளில்லாம தவிக்கிறதும்தான் தம்பி பெரிய ரோதனையே...

உங்க சம்சாரம் இல்லையா பெரியவரே?...

நான் கேட்ட கேள்வி அவரது முகத்தில் பலவித பாவனைகளை உண்டு பண்ணியது.

இல்ல தம்பி அந்த மகராசி போயி பத்து வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு. எந்தவொரு விஷயத்துக்கும் நம்மகிட்ட இருக்கிறவரைக்கும் நமக்கு அதோட மதிப்பும் மரியாதையும் புரியாது தம்பி... போனப்புறம்தான் நாம எல்லாத்தையும் நெனச்சு அழுவனும்... என் பொண்டாட்டி இருந்தப்போ புள்ளைங்களை கண்ணா பாத்து வளர்த்து ஆளாக்கி... நான் கொடுக்குற காக்காசு, அரைக்காசையும் பாத்து பாத்து செலவு பண்ணி சேத்து வச்சு அதுங்களையெல்லாம் கரை சேத்துட்டா... அவளுக்குன்னு அவ வாழ்ந்து நான் பாத்ததேயில்லை தம்பி... நான்தான் எப்போ பாத்தாலும் என்னோட விருப்பங்களையெல்லாம் வாழ்ந்து அனுபவிச்சவன் தம்பி... அவளுக்கு ஆசையா ஒரு நாள்கூட ஒரு துணிமணிகூட நான் வாங்கிக்கொடுத்தது இல்ல... ஒருநாள்கூட அவள சாப்பிட்டியான்னு நான் கேட்டதில்ல தம்பி... எங்கேயோ பொறந்து, நமக்கு வாக்கப்பட்டு நம்ம வாரிசுங்களை பெத்து ஆளாக்கி... கடைசிவரைக்கும் கட்டுனவனையும் ஒரு புள்ளையாவே நெனச்சிட்டு வாழற பொண்டாட்டியோட அருமை அவ இருக்கிற வரைக்கும் எந்த ஆம்பிளைக்குமே தெரியறதில்லை தம்பி... இன்னக்கி அவ இருந்திருந்தா என்னோட கடைசி காலமே வேறமாதிரி இருந்திருக்கும் தம்பி... இந்த மாதிரி வருத்தப்பட்டு சாவுக்கு காத்திட்டிருக்கிற நெலம இருந்திருக்காது... எல்லாம் விதி தம்பி... யாரைச்சொல்லியும் குத்தமில்லை...

பெரியவரின் வார்த்தைகள் எனது நெஞ்சைப் பிசைந்தது. இரண்டாவது பழத்தை தின்னுமளவுக்கு மனதில் இடமில்லை. அவரிடம் காசு கொடுத்துவிட்டு வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினேன்...

இதுதான் வாழ்க்கையா?... வீட்டிலிருந்து வெளியேக் கிளம்பும்போது ‘’பொண்டாட்டியா இவ?... சனியன் நாம எப்போ பண்ண பாவமோ?... இவளைப்போய் காதலிச்சுக்கட்டிக்கிட்டோமே?...’’ என்ற கோபத்துடன் கிளம்பினேன்.

இப்போ வீடு திரும்பும் போது ‘’பொண்டாட்டியா இவ?... இல்லைய்யா நம்ம வாழ்க்கையை வாழவைக்க வந்த மகாலட்சுமியா இவ... தெய்வம்யா இவ...’’ என்ற எண்ணம்தான் என் மனது முழுக்க நிரம்பியிருக்கிறது.

ஜெனியின் முகத்திலும், எனது மகனின் முகத்திலும் வீட்டிலிருந்து கிளம்பும்போது இருந்த உணர்ச்சிகள் எதுவும் மாறாமல் அப்படியேதான் இருந்தது. எனது முகத்தில் மட்டும் மாறிப்போன உணர்ச்சிகள் எனக்கே தெள்ளத்தெளிவாய் தெரிந்தது.

எப்போதோ சிறுவயது ஆங்கிலப்பாடத்தில் படித்த போயம் ஒன்றின் தமிழர்த்தம் நினைவுக்கு வந்தது.

‘’மனிதர்கள் தோன்றலாம்,
 மனிதர்கள் மறையலாம்,
 ஆறு தனக்கானதொரு பாதையில்
 எப்போதும் போலவே சலனமற்றுப்
 பயணித்துக் கொண்டேயிருக்கும்’’...!!!


 

8 comments:

 1. அனுபவம் மிக அருமை, மனைவியின் அருமைகளை தெறிந்துகொள்வது என்றால் திரு.அடிகளார் எழுதிய "மனைவி" என்ற புத்தகத்தையும்"எந்தன்துனைமயில்" என்ற புத்தகத்தையும் வாங்கி படியுங்கள் வாழ்க்கை புரியும்!


  உண்மைவிரும்பி.
  மும்பை.

  ReplyDelete
 2. அனுபவிச்சு எழுதுன மாதிரி இருக்கே....என்ன பாஸ் பாதி நிஜம பாதி கற்பனைதானே..

  ReplyDelete
 3. எழுத்து நடையும், உணர்வுகளை வெளிப்படுத்திய விதமும் மிகவும் அருமை.

  ReplyDelete
 4. சதீஷ் செல்லதுரை... வில்லங்கமான ஆளுய்யா நீங்கள்லாம்... பல விஷயங்களை பப்ளிக்கா ஒத்துக்க முடியாது பாஸ்...!!!

  ReplyDelete
 5. We get the medicines to our ailments like worries,mis-understandings etc.,only from the people who are around us.A very nice post. Thanks.

  ReplyDelete
 6. இந்த பொண்டாட்டிகளே இப்படித்தான்...
  எழுத எழுத வந்துகொண்டே இருப்பார்கள்...

  ReplyDelete
 7. இதுதான் வாழ்க்கையா?... i dont no how many times i read your post... rompa etharthama irukku.. rompa nal munnadi na intha kadhai padichathukkum ippo padikkurathukkum enakkul pala changes.. may be innum koncham nal kalichu paarkkum pothu intha kadhai vera mathri irukkum... life oru puriyatha oru puthirtan sir... thanks..

  ReplyDelete