SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Sunday, September 2, 2012

செல்லுலாய்டு தேவதைகள் – சினிமாக்காரி!


அழகு பொம்மையாய் எங்களை
வாங்கி வைத்து அழகுபார்க்க
தொழிலதிபர்கள் என்ற பெயரில்
ஏராளமானோர் இங்குண்டு;

ஆன்மாவின் காதலாய் எங்களை
மனைவியாக்கி அரவணைக்க
ஆண்மகன்கள் என்றிங்கு
எவரேனும் ஊரில் உண்டோ?... 

விளக்கணைந்த திரையரங்குகளின்
வெள்ளைத்திரைகளோடு
எங்களின் வாழ்க்கையின் வண்ணங்களும்
கரைந்து போவது யாருக்குத் தெரியும்?...

விளம்பரப்படங்களின்
வியாபாரப் பொருட்களுக்குள்
எங்களின் போலி முகங்கள்
புதைந்து கிடப்பது எவருக்குப் புரியும்?...

திரைவண்ணத்தில் ஜொலிக்கும்
வண்ணமலர்கள் நாங்கள்
திரைமறைவில் உள்ளம்
கருகிக்கிடக்கும் சாம்பல்;

காகிதப்பூக்கள் நாங்கள்
எத்தனைமுறை கசங்கினாலும்
வாலிபம் உள்ளவரையிலும்
வாடகைக்கு விற்கப்படுவோம்...

உடல் முழுக்க ஒப்பனைகளும்
ஊரறியும் பணமும் புகழும்
இளமையது உள்ளவரையிலே...
சீண்டுவார் எவருமுண்டோ
நடிகையின் இயலாமையிலே?...

விளக்கைத்தேடி விழுந்த
விட்டில் பூச்சிகள் நாங்கள்
தொட்டிக்குள் அடங்கிப்போன
நட்சத்திர மீன்கள்... 

ஒவ்வொரு சூட்டிங்குகளின்
விளக்கணைந்த பொழுதுகளில்
எத்தனைமுறை எங்கள்
கற்புகள் களவாடப்படுகின்றன?...

வேட்டை நாய்களின் கூட்டத்திற்குள்
சிக்கிக்கொண்ட புள்ளி மான்கள்
ஊராரின் பார்வையிலே
ஒருபோதும் தெரிவதில்லை... 

எங்கள் வீட்டு மெத்தைகளில்
எங்கள் தூக்கங்கள் தொலைந்திருந்தாலும்
ஒவ்வொரு வீட்டின் கட்டில்களிலும்
எங்கள் நினைவுகள் புரண்டு கொண்டிருக்கும்...

கதைகளின் காதலோடு
எங்கள் கனவுகள் முடியக்கூடும்
வாழ்க்கையில் காதல் என்பது
வெறும் கானல் நீராய் வற்றிப்போகும்...

விதவிதமாய் எங்களுக்கு
புனைப்பெயர்கள் சூட்டிக்கொண்டாலும்
இன்னமும்கூட எண்ணங்கள் மாறாத
அடையாளப்பெயர் 'சினிமாக்காரி'!

ஒரு நடிகையின் கதையையும்
அந்தரங்கச் செய்திகளையும்
ஆவலோடு படிக்கும் கூட்டம்
எங்களுக்கும் உள்ளம் உண்டென்று
எப்போதேனும் நினைத்ததுண்டா?...

சீதைக்காவது பரவாயில்லை
ஒரு முறைதான் தீக்குளித்தாள்...
பக்கம் பக்கமாய் கதைகள் போடும்
பத்திரிக்கைகளின் கிசுகிசுக்கு
பேதைகள் நாங்கள் இங்கு
எத்தனைமுறை தீக்குளிக்க?...

ஊராரின் பார்வையிலே
ஒளிவிளக்காய் தெரியும் நாங்கள்
உணர்ச்சிகள் செத்துப்போன
வெறும் செல்லுலாய்டு தேவதைகள்!

 

2 comments:

  1. இந்தக்கவிதை கண்டிப்பாய் எல்லாரையும் ரீச் ஆகும்னு ரொம்ப எதிர்பார்ப்போட எழுதினேன். ஆனாலும் சீண்டுவார் யாருமின்றிப்போனது ஏனென்று புரியவில்லை....

    ReplyDelete
  2. நடிகைகளின் உள்ளத்தின் உணர்வுகளை
    அருமையான உங்கள் எழுத்துகளால் வெளிப்படுத்தி உள்ளீர்கள் ..

    தொடரட்டும் உங்கள் வெற்றி பதிவுகள் .

    ReplyDelete