SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Sunday, August 26, 2012

பஞ்சபூதக் கற்பழிப்புகள்...


பஞ்சபூதக் கற்பழிப்புகள்... இந்தத் தலைப்பைப் பார்த்ததும் ஏதோ வித்தியாசமான விவகாரமாக நினைத்து நீங்கள் உள் நுழைந்திருந்தாலும் ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கி இந்தக்கட்டுரையை முழுமையாகப் படிப்பது நாளைய சமுதாயத்திற்கு நாம் செய்யப்போகும் ஒரு மிகப்பெரிய வித்திடலுக்கு ஆரம்பமாகலாம்... கொஞ்சம் படியுங்கள்... ப்ளீஸ்!

     நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு… இந்த ஐந்தும்தான் பஞ்சபூதங்கள் என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான்… மனிதனின் வாழ்வுக்கான அடிப்படை ஆதாரத்தேவைகளும் இவைகள்தான்.

ஆனால்… இந்த பஞ்சபூதங்களின் இன்றைய நிலை என்ன?... நமக்கு அப்புறமான நமது எதிர்கால சந்ததியினரின் வாழ்வில் இந்த பஞ்சபூதங்களின் பங்கு என்னவாக இருக்கப்போகிறது?... (எதைப்பற்றிய பிரக்ஞையுமற்று குழந்தைத்தனத்துடன் பள்ளிப்பருவத்தில் சிட்டாய்த் திரிந்து கொண்டிருக்கும் உங்களது மகனும், மகளும் மற்றும் அவர்கள் வளர்ந்து வாழ்க்கைக்குள் நுழைந்ததும் அவர்களுக்குத் துளிர்க்கப்போகும் உங்களது பேரக்குழந்தைகளும்தான் எதிர்கால சந்ததியினரே தவிர அது ஏதோ நமக்கு சம்மந்தமில்லாத மூன்றாம் மனிதர்களல்ல என்பதே முதலில் நாம் உணரவேண்டியது…)

வேகமாய் மாறிவரும் நமது வாழ்க்கை முறைகளாலும் எதிர்காலத்தைப் பற்றிய கவலையில்லாத நமது அலட்சியப்போக்காலும் நாளைய தலைமுறைக்கு பாதுகாப்பாய் நாம் கைமாற்ற வேண்டிய நமது இயற்கையை எவ்வாறெல்லாம் சிதைத்துக்கொண்டிருக்கிறோம்… அதனாலான விளைவுகள் என்னவாய் இருக்கக்கூடும்… அதைத்தவிர்ப்பதற்கான நமது கடமைகள் என்னென்ன… என்பதற்கான ஒரு சிறிய விழிப்புணர்ச்சிக்கட்டுரை மட்டுமே இது...

விஸ்வரூபமெடுத்த தொழில் மயமாக்கலினால் காற்றில் கலக்கும் நச்சுப்புகைகளை கட்டுப்படுத்துவது வேண்டுமானால் அரசாங்கத்தின் கைகளில் இருக்கலாம்... ஆனால் ஒரு தனிமனிதராக நாம் ஒவ்வொருவரும் இயற்கையை சிதைக்கும் வேலையை நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ என்னென்ன வழிகளில் செய்து கொண்டிருக்கிறோம் என்பது நாம் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

இயற்கையையும், எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்தையும் நாம் சிதைத்துக்கொண்டிருப்பதில் முக்கிய பங்கு… பிளாஷ்டிக் கழிவுகள்! அதிலும் கேரி பேக் என்று நாம் அழைக்கும் நமது அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகிப்போன பிளாஷ்டிக் பேக்குகள்தான் இயற்கைக்கு எதிரான சவால்களின் தலையாய எமன்! சரி… அப்படி என்னதான் பிரச்சினை என்கிறீர்களா?... இந்த பிளாஷ்டிக் பேக்குகளின் முக்கிய தன்மை இவைகள் பல நூறு ஆண்டுகளானாலும் மட்கும் தன்மையற்றவை என்பதுதான்.

ஒரு காலத்தில் கடைகளுக்குச்செல்லும் போது மக்கள் வீடுகளிலிருந்தே வாங்கும் பொருள்களுக்கேற்ப தேவையான பைகளை எடுத்துச்செல்வதுதான் வழக்கமாய் இருந்தது. ஆனால் இன்றைய நிலைமையில் கடைகளுக்குச் செல்லும் போது பைகளை எடுத்துச்செல்வது கவுரவக் குறைச்சலான காரியமாகவே பார்க்கப்படுகிறது. நாளைய சந்ததியினர்க்கு தெரிந்தே நாம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு விதமான சாவு மணிதான் இந்த பிளாஷ்டிக் பேக்குகள்... இன்று பிளாஷ்டிக் பேக்குகள் இல்லாத குப்பைகளையும் குப்பை மேட்டையும் பார்ப்பதென்பது கனவிலும் நடக்காத காரியமாகிப்போனது. ஒவ்வொரு மாநாகராட்சிகளிலும் கையாளப்படும் குப்பைகளில் இன்று 60 சதவீதத்திற்கும் அதிகமாய் நிறைந்திருப்பது இந்த பிளாஷ்டிக்கழிவுகள்தான் என்பது சாமான்யன்கள் உணராத அபாயச்சங்கு. ஆனால் அரசாங்கங்களும் இந்த பிளாஷ்டிக்கழிவுகள் பற்றி பெரிதாய் அலட்டிக்கொள்ளாமல் இருப்பது நமது துரதிர்ஷ்டம் மட்டுமேயன்றி வெறெதுவும் சொல்வதற்கில்லை.
 
 
 

இந்தியாவில் இன்று சராசரி உபயோகம் வருடத்திற்கு ஒரு மனிதருக்கு ஒரு கிலோ பிளாஷ்டிக் பேக் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதே உலக அளவில் பார்க்கும் போது வருடத்திற்கு ஒரு மனிதரின் சராசரி உபயோகம் 18 கிலோ என்ற அதிர்ச்சித்தகவல் கிடைக்கிறது. பேப்பர் பேக்குகள் தயாரிக்க மரங்களை அழிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் பிளாஷ்டிக் பேக்குகள் தயாரிக்க இயற்கையில் எதையும் அழிக்கவேண்டியதில்லை என்றும் சில அறிவு ஜீவிகள் வாதிக்கின்றனர். பிளாஷ்டிக் பேக்குகளை உபயோகிப்பதில் தவறில்லை. ஆனால் அதைத் தகுந்த மறுசுழற்சிக்கு உட்படுத்தாமல் ‘’ யூஸ் & த்ரோ ’’ பாலிசியில் அவரவர் இஷ்டத்துக்கு வரைமுறையின்றி வீசியெறிவதுதான் பிளாஷ்டிக் பேக்குகள் நமது இயற்கைக்கு மிகப்பெரிய சவாலாய் மாறிக்கொண்டிருப்பதற்கான முக்கிய காரணமாகும்.

இந்த பிளாஷ்டிக் கழிவுகளினால் உண்டாகும் சில முக்கிய பாதிப்புகள் –

1)   ஏற்கனவே தார்ச்சாலைகளாலும் கான்கிரீட் கட்டிடங்களாலும் சுருங்கிக்கொண்டிருக்கும் மண்பரப்பில் இந்த பிளாஷ்டிக்கழிவுகள் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி நீக்கமற நிறையத் தொடங்கியிருக்கிறது. மண்ணுக்குள் புதையுறும் பிளாஷ்டிக்கழிவுகள் மழைக்காலத்தில் நிலத்தடிக்கு செல்லவேண்டிய நீருக்கு வழிவிடாமல் அதை நிலத்தின் மேற்பரப்பிலேயே வழிந்தோடச்செய்து நிலத்தடி நீர்மட்டத்திற்கு சங்கு ஊதும் வேலையைச்செவ்வனே செய்கிறது. கிடைக்கும் கொஞ்ச நஞ்ச சந்துகளில் நிலத்தடிக்குள் நுழையும் மழைநீர் கூட இந்த பிளாஷ்டிக் கழிவுகளைத் தாண்டிச் செல்லும்போது நச்சுநீராய்த்தான் நிலத்தடி நீர்மட்டத்தை சென்றடையும் என்பதும் கூடுதல் அபாயமே. 

2)   இந்த பிளாஸ்டிக் கழிவுகள் நீர்நிலைகளில் கலக்கும்போது அதை ஏதோ உணவுக்கழிவாக நினைத்து உட்கொள்ளும் ஜீவராசிகள் செத்து மிதப்பதும் சாதாரண விஷயமாகிப்போனது. இது மட்டுமேயில்லாமல் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை தெரியாமல் உட்கொள்ளும் கால்நடைகளும் உயிரைவிட்ட சம்பவங்கள் அங்கங்கே நடக்கிறது.  

3)   இதையெல்லாவற்றையும்விட மிகப்பெரிய பாதிப்பு... இந்த பிளாஷ்டிக்கழிவுகளை தீயிலிட்டு எரிப்பது. இது நம்நாட்டில் சர்வசாதாரணமாய் குப்பை மேடுகளிலும், சாலை ஓரங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பிளாஷ்டிக் கழிவுகளை தீயிலிட்டு எரிக்கும்போது உண்டாகும் புகையில் கலந்திருக்கும் நச்சு வாயுக்கள் பெரிய பெரிய தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையைவிட ஆபத்தானவை. 

4)   இந்த பிளாஸ்டிக்கழிவுகளினால் நிலத்தில் தானாக முளைக்கும் செடி கொடி மரங்கள் வேறூன்ற வழியின்றி முளைக்காமல் போவதும் நடந்துகொண்டிருக்கிறது.


நம்மில் பலபேர் அறியாத ஒரு அதிர்ச்சி செய்தி இருக்கிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு இன்டர்நேஷனல் சர்வே ரிப்போர்ட்டின் படி உலகின் டாப் 10 மாசுபட்ட இடத்தின் வரிசையில் நமது இந்தியாவின், நமது தமிழகத்தின் ராணிப்பேட்டை 6ம் இடத்தைப் பிடித்திருக்கிறது – நியூயார்க்கை சேர்ந்த பிளாக் ஸ்மித் இன்ஸ்டியுட் சர்வே. (ஆஹா என்னவொரு சாதனை?...) இது மட்டுமில்லாமல் 2005ம் ஆண்டு இந்திய அரசால் நடத்தப்பட்ட ஒரு சர்வேயில் அதிக மாசுபட்ட இடங்களின் வரிசையில் ராணிப்பேட்டை இந்தியாவிலேயே முதலிடத்தைப் பிடித்திருக்கிறது !!!

பிளாஷ்டிக் பேக்குகளுக்கு அடுத்தபடியாய் இன்று மிகப்பெரிய சவாலாய் விளங்குவது ஈ-வேஸ்ட் எனப்படும் எலக்ட்ரானிக் கழிவுகள்தான். அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகள்தான் வல்லரசு நாடுகளின் எலக்ட்ரானிக் கழிவுகளுக்கான குப்பைத் தொட்டியாய் திகழ்கிறது. இந்த எலக்ட்ரானிக் குப்பைகள் நமக்கும் நம் சந்ததிகளுக்கும் விளைவிக்கப்போகும் ஆபத்தைப்பற்றி அறியாமலேயே நமது அரசியல்வாதிகளும் தங்கள் பாக்கெட்டை மட்டும் நிரப்பிக்கொண்டு இந்தியாவை ஆபத்தான குப்பைத்தொட்டியாய் மாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

எலக்ட்ரானிக் குப்பைகளும், அதிலிருக்கும் நச்சுகளும், அவை விளைவிக்கும் நோய்களும் உங்கள் பார்வைக்காக சில...

1)   மெர்க்குரி – ஃபியூஸ் போனதும் நாம் சர்வசாதாரணமாய் தூக்கியெறியும் டயூப் லைட்டுகள் மற்றும் CFL பல்புகளிலிருப்பதுதான் இது. நமது உடல் நலத்திற்கு இது விளைவிக்கும் தீங்குகள் என்னென்ன தெரியுமா?... தொடு உணர்ச்சிக்குறைபாடு, நியாபக சக்தி குறைபாடு, சதைத்தளர்ச்சி. விலங்குகளுக்கு இது விளைவிக்கும் தீங்குகள்... மலட்டுத்தன்மை, வளர்ச்சிக்குறைபாடு, மரணம்!!!

2)   சல்ஃபர் – லெட்-ஆசிட் பேட்டரிகளில் இருப்பது – லிவர் டேமேஜ், கிட்னி டேமேஜ், ஹார்ட் டேமேஜ் மற்றும் கண் எரிச்சல் ஆகியவை இதனால் ஏற்படும் முக்கிய தீங்குகள்.

3)   கேட்மியம் – நிக்கல்-கேட்மியம் பேட்டரியில் இருப்பது. ஐரோப்பிய யூனியனில் மெடிக்கல் உபயோகத்திற்கு மட்டுமே நிக்கல்-கேட்மியம் பேட்டரிகள் அனுமதிக்கப்பட்டு மற்றவைகளுக்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. இது கிட்னிக்கும், நுரையீரலுக்கும் மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவிக்கக்கூடியது.

4)   லெட் (Lead) – லெட்-ஆசிட் பேட்டரிகளிலும், CRT பிக்சர் டியூப் கொண்ட நமது பழையமாடல் டிவிக்களிலும், கம்ப்யூட்டர்களிலும் மிக அதிக அளவில் காணப்படும் இந்த லெட் நமது ஈரலுக்கும், கிட்னிக்கும் மட்டுமல்லாது நமது உடலின் நரம்பு சிஸ்டத்திற்கும் வெடிவைக்கும் எமன்.

5)   லித்தியம் – பல மாடல் பேட்டரிகளில் இருக்கும் இந்த லித்தியம் திறந்தவெளியில் எளிதில் தீப்பிடிக்க மற்றும் வெடிக்கக்கூடிய ஆபத்து நிறைந்தது.

6)   இவை மட்டுமில்லாமல் மேங்கனீஷ், ஆர்சானிக், சின்க், குரோமியம் போன்றவைகளும் ஈ-வேஸ்ட் குப்பைகளின் இன்னபிற எமன்களே!

சென்னையில் சேகரிக்கப்படும் ஒருநாளைய குப்பையின் எடை என்னவென்று தெரியுமா உங்களுக்கு... மயக்கம் போட்டு விடாதீர்கள்... கிட்டத்தட்ட 3500டன்!.

ஒரேயொரு நகரத்தின் நிலைமையே இப்படியென்றால் மொத்தமாகக் கூட்டிக்கழித்துப்பார்த்தால்... யப்போவ்!

இதேபோலத்தான்... நிலத்திலிடப்படும் உரங்கள்... இயற்கை உரங்களைப்பற்றிய விழிப்புணர்வு இன்னமும் மக்களிடம் முழுமையாக ஏற்படுத்தப்படாமல் செயற்கை உரங்களை இஷ்டத்துக்குத்தூவி மண்ணை மலடியாக்கிக்கொண்டிருக்கிறோம் என்பது எப்போதுதான் நமக்கு உரைக்கப்போகிறதோ தெரியவில்லை.

இதுவொரு பக்கம் என்றால் நமது நீர் ஆதாரங்களை நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக நாசம் பண்ணும் நிகழ்வுகள் இன்னும் கொடுமை. தமிழகத்தின் நீர் ஆதாரங்களை 1950, 1975, 2012 என்ற விதத்தில் பிரித்து ஆராய்ந்தால் 2012ன் நிலைமை என்னவாகயிருக்குமென்று நினைக்கிறீர்கள். பெரும்பாலான ஏரிகளும், குளங்களும் இன்று ஆக்ரமிப்பு நிலங்களாக மாறியாகிவிட்டது.

இன்றைய ஜீவநதிகளின் நிலைமை அதைவிட மோசம். சர்வசாதாரணமாய் அரசும் மக்களும் பாகுபாடின்றி நதிகளின் வயிற்றில் நச்சுகளைக் கொட்டிக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் மிகப்பெரிய நீர்வழித்தடமாக வந்திருக்கவேண்டிய சென்னையின் கூவம் நதியின் இன்றைய நிலைமை மட்டுமே நமது அலட்சியங்களின் மிகச்சிறந்த அடையாளம்.  

எதிர்காலச் சந்ததியினரின் அடிப்படை வாழ்வாதார நதிகளை சிதைத்துக்கொண்டிருக்கும் இன்றைய நிகழ்வுகளுக்கு எதிர்காலம் கொடுக்கப்போகும் விலை மிக அதிகம். ஏற்கனவே தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலைமை வந்து பல வருடங்களாகிவிட்டது. இன்னும் எதிர்காலத்தில் தண்ணீரை இறக்குமதி செய்யப்போகும் நிலைமை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
 
நொய்யலாற்றில் ஓடும் சாயக்கழிவுகள்...
 
 
வைகை ஆற்றங்கரையின் இலட்சணம்...
 
 
தாமிரபரணியில் கலக்கும் சாக்கடை...
 
 
இது யமுனை நதியின் கரையில் எடுத்த புகைப்படம் என்றால் நம்புவீர்களா?..
 

சாக்கடைகளையும், குப்பைகளையும், சாயக்கழிவுகளையும், தோல் கழிவுகளையும் நதிகளின் வயிற்றில் கலந்து நமக்கு நாமே விதைத்துகொண்டிருக்கும் வினை, எதிர்காலத்தில் நமக்கு வழங்கப்போகும் பரிசு நம்மால் நிச்சயமாய் தாங்க இயலாத அளவில் இருக்கப்போவது மட்டும் உண்மை!

அடுத்து... உலக வெப்பமயமாதல். நம்மில் பலபேருக்கு இந்த வார்த்தை தெரிந்திருக்கும். ஆனால் இந்த வார்த்தையின் ஆரம்பம் நமது வீட்டில் எரியும் குண்டு பல்புகளிலும் உண்டு என்பது தெரியுமா?... வாகனப் புகைகளும், தொழிற்சாலை புகைகளும், காற்றை மாசுபடுத்துவதோடு மட்டுமில்லாமல் உலக வெப்பமயமாதலுக்கும் வித்திடுகிறது.

இன்று உலக வெப்பமயமாதல் என்ற நிகழ்வு பூமியின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கும் கடலின் நீர் மட்டத்தை கொஞ்ச கொஞ்சமாக அதிகரித்து நம்மை மூழ்கடிக்கப்போகும் வேலையை செவ்வனே நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது.

பலவிதமான ஆய்வு முடிவுகளின்படி ஒரு வருடத்திற்கு சராசரியாய் 0.8 மி.மீ முதல் 3 மி.மீ வரை கடல் மட்டம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. என்றைக்கு அண்டார்டிகாவின் மொத்த பனிப்பாறைகளும் உருகி முடிக்குமோ அன்று பூமியில் நிலப்பரப்பே இருக்காது என்பது நிதர்சனமான உண்மை.

சரி... அரசாங்கம் செய்வது இருக்கட்டும். ஒரு தனிமனிதராக சுற்றுச்சூழலுக்கு நம்மால் செய்யமுடிந்தது என்ன?...

1)   கடைகளுக்குச் செல்லும்போது கவுரவக்குறைச்சலாக எண்ணாமல் நாம் என்ன பொருள் வாங்கப்போகிறோமோ அதற்கேற்ப வீட்டிலிருந்தே பைகளை எடுத்துச்செல்ல பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.

2)   எனது வருங்கால சந்ததிகளுக்காக எந்தவொரு சூழ்நிலைகளிலும் பிளாஸ்டிக் பேக்குகளை உபயோகிப்பதில்லை என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம்.

3)   நமது வீடுகளில் முடிந்தவரை குண்டுபல்புகள் உபயோகிப்பதை தவிர்க்கலாம்.

4)   பேட்டரிகள் உபயோகிக்கும்போது எப்போதும் ரீ-சார்ஜ் பேட்டரிகளை மட்டுமே உபயோகித்தால் அடிக்கடி பேட்டரிகளை குப்பைகளில் வீசுவதைத் தவிர்க்கலாம்.
 
5) யூஸ் & த்ரோ பிளாஸ்டிக் கப்புகளில் டீ மற்றும் கூல் டிரின்க்ஸ் குடிக்கும் பழக்கத்தை நிறுத்தி பேப்பர் கப் என்று கேட்கத்தொடங்குங்கள்.

6)   உங்களது வீடுகளிலிருக்கும் பழைய பொருட்களை குப்பையில் வீசாமல் எடைக்குப் போட்டு காசாக்க பழக்கிக்கொள்ளுங்கள்.

7)   முடிந்தவரை உங்கள் வாகனங்களை சரியான தவணைகளில் சர்வீஸ் செய்து அதிலிருந்து வெளிப்படும் புகையின் அளவுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.

8)   விவசாயிகள் ரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்தலாம்.

9)   நமது குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் சீர்கேடுகளைப் பற்றிய விழிப்புணர்வை கற்றுக்கொடுங்கள்.


நிலத்தை குப்பைகளையும், நஞ்சுக்கழிவுகளையும், ரசாயன உரத்தையும் கொட்டிக் கொட்டி தினம் தினம் கற்பழித்துக்கொண்டிருக்கிறோம்.

நீரை ஊரிலிருக்கும் சாக்கடைகளையும், சாயக்கழிவுகளையும், தொழிற்சாலைக்கழிவுகளையும் கலந்து கொஞ்ச கொஞ்சமாக கற்பழித்துக்கொண்டிருக்கிறோம்.

ஆகாயத்தைக் கற்பழித்ததை ஓசோன் படலத்தில் விழுந்திருக்கும் ஓட்டை உணர்த்திக்கொண்டிருக்கிறது.

காற்றை மட்டும் விட்டுவிட்டோமா என்ன?... வாகனப்புகைகளும், தொழிற்சாலைப்புகைகளுமாய் விதவிதமான நஞ்சுகளை அனுப்பி அதையும் அசுரவேகத்தில் கற்பழித்துக்கொண்டேயிருக்கிறோம்.

நெருப்பை மட்டும்தான் இன்னும் விட்டு வைத்திருக்கிறோம். அதுவும் சூரியனின் மேற்பரப்பில் நிகழும் மாற்றங்களை கவனிக்கும்போது சந்தேகமாகத்தான் இருக்கிறது.


தொடர்ந்து நிகழும் கற்பழிப்புகள் இறுதியில் உயிரிழப்பில்தான் முடியும் என்பதை அரசாங்கமும், தனிமனிதனும் உணர்ந்து செயல்படும் நேரம் வந்தால் மட்டுமே சிறுகச்சிறுகச் செத்து கொண்டிருக்கும் நமது சுற்றுச்சூழலையும், எதிர்கால சந்ததியினர்க்கான வாழ்வாதாரத் தேவைகளையும் கொஞ்சமாவது காப்பாற்றமுடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை... கொஞ்சம் யோசிப்போம் நண்பர்களே...!

 

No comments:

Post a Comment