SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Saturday, August 25, 2012

உலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்


மர்மங்கள் என்று எடுத்துக்கொண்டால் இவ்வுலகம் முழுவதும் விதவிதமாக கொட்டிக்கிடக்கும். பல மர்மங்களில் ஒரு சில காலப்போக்கில் விடை காணப்பட்டிருக்கின்றன. ஆனால் சில மர்மங்கள் பலவிதமான ஆராய்ச்சிகளுக்குப் பின்னரும் இன்னமும் விடையின்றி தீரா மர்மங்களாகவே நீடித்துக்கொண்டிருக்கின்றன. இந்த தீரா மர்மங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று இணையத்தை அலசினால் வியத்தகு தகவல்கள் வந்து வியாபிக்கின்றன. உடனே இதைப்பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தின் விளைவு மட்டுமே இந்தப் பதிவே தவிர மற்றபடி இதை மூடநம்பிக்கையை வளர்ப்பதாகவோ, வேறு எந்த நோக்கத்துடனோ எழுதவில்லை என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்வது எனது கடமையாகும்.

சரி... முதலில் உலகின் சில டாப் லிஸ்ட் தீரா மர்மங்களைப் பற்றி பார்க்கலாம்...
எகிப்தும் பிரமிடுகளும்
எகிப்தின் பிரமிடுகளைப்பற்றி நம்மில் சிலபேர் முன்னரும் பலபேர் மம்மி பார்ட்-1 மற்றும் பார்ட்-2 திரைப்படங்கள் பார்த்த பின்னரும் அறிந்திருப்போம். பிரமிடுகள் என்றாலே இன்றளவும் ஒரு மலைப்பும் ஆச்சர்யமும் உண்டாவது நிச்சயமாய் அவற்றின் தனிச்சிறப்பே.

எகிப்து நாட்டில் காணப்படும் இந்தப்பிரமிடுகள் கற்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டங்கள். 2008ம் ஆண்டு வரையிலும் கிட்டத்தட்ட 138 பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.


பிரமிடுகளுக்குப் பின்னாலான மர்மங்கள் கணக்கிலடங்காதவை. பிரமிடுகள் என்றாலே சட்டென நம் நினைவில் நிழலாடும் உருவம் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான கிரேட் பிரமிடுதான். கிங் குஃபு வின் பிரமிடு என்றும் இது அழைக்கப்படுகிறது.

இதுவரை கண்டறியப்பட்ட பிரமிடுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவிலானது. இதன் உயரம் 146 மீட்டர் (கிட்டத்தட்ட 500அடி). கிட்டத்தட்ட 4600 வருடங்களுக்கு முன்னர் இது கட்டப்பட்டதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் முதன் முதலில் கட்டப்பட்டது கிரேட் பிரமிடு அல்ல.  கிங் குஃபு வின் தந்தை கிங் ஸ்நெஃப்ரு வினால் கட்டப்பட்ட ஸ்டெப் பிரமிடுதான் முதன் முதலில் கட்டப்பட்ட பிரமிடாகும்.


கிரேட் பிரமிடு 2.3 மில்லியன் எண்ணிக்கையிலான கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. இவற்றின் மொத்த எடை 5.9 மில்லியன் டன்கள்.

பிரமிடு போலவே இன்னுமொரு தீராத மர்மம் அதன் முன்னால் இருக்கும் Sphinx சிற்பம். மிகப்பிரமாண்டமான அளவில் கட்டப்பட்டிருக்கும் இந்த சிற்பம் கிரேட் பிரமிடை பாதுகாக்கத்தான் கட்டப்பட்டிருக்கிறது என்ற வாதங்களையும் தாண்டி காலச்சிதைவுகளுடன் அமர்ந்திருக்கிறது.


ஒரு சராசரி பிரமிடின் எடையென்று எடுத்துக்கொண்டால் அது 54 இலட்சம் டன்னாகும். பிரமிடுகள் கட்ட உபயோகித்திருக்கும் ஒரு கல்லின் சராசரி எடை இரண்டரை டன்னாகும். மிஸிரினஸ் பிரமிடில் உபயோகித்திருக்கும் ஒரேயொரு கல்லின் எடை மட்டும் 285 டன் என்பதும், சக்கரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் இவ்வளவு எடையுள்ள கல்லை எப்படி கையாண்டிருப்பார்கள் என்பதும் ஆராயமுடியாத மர்மமாகவே நீடிக்கிறது. சில ஆராய்ச்சியாளர்கள் கிரேட் பிரமிடு நாலு இலட்சம் மனிதர்களைக்கொண்டு சுமார் 20 ஆண்டுகள் கட்டப்பட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். (சிலர் பிரமிடுகளை கட்டியது மனித சக்தியே அல்ல… நிச்சயமாய் ஏதோவொரு சூப்பர் பவரோ... இல்லை... வேற்றுக்கிரக வாசிகளோதான் கட்டியிருக்கவேண்டும் என்றும் வாதிக்கின்றனர். ஏனென்றால் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட மனிதர்களால் கிரேட் பிரமிடு போன்ற ஒன்றை உருவாக்குவது சாத்தியமில்லாதபோது 5000 வருடங்களுக்கு முன் இது எப்படி மனித சக்தியால் கட்டப்பட்டிருக்கும் என்ற கேள்வியும் வாதத்திற்கு வலு சேர்ப்பதாய்த்தான் இருக்கிறது)
பிரமிடுகள் கட்டப்பட்ட கற்களின் அளவை இந்தப்படத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்...

பிரமிடுகள் கட்டப்பட்ட விதமும் கட்டப்பட்டதற்கான காரணங்களும் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளுடன் தொடர்ந்து கொண்டேயிருக்கும் மர்மங்கள். இறந்து போன மன்னர், மகாராணி ஆகியோரின் சடலங்கள் பதப்படுத்தப்பட்டு அவர்கள் உபயோகிக்கும் பொருட்களுடன் பிரமிடுக்குள் அமைக்கப்பட்டிருப்பது இறப்பிற்கு பின்னாலான வாழ்க்கை குறித்த மர்மமாகவே ஆராயப்படுகிறது.
எகிப்தின் மர்மங்கள் வெறும் பிரமிடுகளுடன் முடிந்து விடுவதல்ல. மம்மிகள் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உடல்கள், பிரமிடுக்குள் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே ஃபிளையிங் மெஷின் மற்றும் பல்பு போல செதுக்கப்பட்டிருக்கும் உருவங்கள், மனித உடலும் விலங்கு தலையுமான உருவங்கள் என நீளும் விஷயங்கள் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் தீர்க்க முடியாத எகிப்தின் மர்மங்களே!!!

பயிர் வட்டங்கள்

2012 வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த பயிர் வட்டங்கள் ஒரு சுவாரசியமான மர்மங்கள். விளைந்திருக்கும் பயிரில் ஒரே இரவில் ஏதோவொரு அமானுஷ்ய சக்தி இதுபோன்ற உருவங்களை உருவாக்கிச் செல்வதாய் கதைகள் நீள்கின்றன. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இந்த பயிர் வட்டங்கள் தோன்றியிருக்கும் போதும் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் அதிகம் பதியப்பட்டிருப்பது இங்கிலாந்தில்தான்.


பெரும்பாலான உருவங்கள் ஒரே இரவில் மனிதர்கள் உருவாக்க சாத்தியமேயில்லாத முறையில் உருவாக்கப்பட்டிருப்பது இதன் மர்மத்தை மேலும் கூட்டுகிறது. இரவுப்பொழுதில் வெளிச்சம் இல்லாமல் சுற்றியிருக்கும் பயிருக்கு எந்தவொரு சிறு சேதமும் இல்லாமல் எந்தவொரு வாகனமோ, மனிதக்காலடியோ, இல்லை இயந்திரத்தின் தடயமோ இல்லாமல் இப்படிப்பட்ட படைப்புகள் உருவாக்கப்படுவது மர்மத்திலும் மர்மமே. அதுவும் சில ஆராய்ச்சிகளில் இந்த பயிர்வட்டங்கள் உருவாக்கப்பட்ட இடத்தின் மண் மட்டும் பாறைப்படிவம் போல மாறியிருப்பது மர்மத்தின் உச்சம். ஏனென்றால் ஒரு சாதாரண மண் இறுகிப் பாறைபடிவம் போல மாறவேண்டுமென்றால் அதற்கு இயற்கையாய் 1000 ஆண்டுகளுக்குமேல் தேவைப்படும். இப்படி ஒரேயிரவில் பாறைப்படிவம் போல மாறவேண்டுமானால் கிட்டத்தட்ட 8000 டிகிரி வெப்பத்தில் மண்ணை சூடுபடுத்தவேண்டும். அவ்வாறு வெப்பம் உண்டாக்கப்படும் பட்சத்தில் அந்த இடமே சின்ன புல் பூண்டு கூட இல்லாமல் பஸ்பமாகிவிடும். மேலும் இதேப்போன்ற பயிர் வட்டங்களை மனிதர்களைக்கொண்டு உருவாக்க நடந்த ஆராய்ச்சிகளின் முடிவில் ஒரு சாதாரண உருவத்தை பகல் வெளிச்சத்தில் உருவாக்கவே 5நாட்களுக்கும் மேல் ஆகியிருக்கிறது. அதைவிட முக்கிய விஷயம் மனிதர்களைக்கொண்டு இந்த முயற்சியைச் செய்தபோது பயிர்கள் நிறைய உடைபட்டிருக்கின்றன. மனிதர்களின் சேற்றுக்காலடித்தடங்கள் பயிர்களில் பதிந்திருக்கின்றன. ஆனால் உண்மையான பயிர்வட்டங்களில் பயிர்கள் மடக்கப்பட்டிருந்தாலும், வளைக்கப்பட்டிருந்தாலும் இதுவரை ஒரு பயிர்கூட சேதப்பட்டிருக்கவில்லை என்பது கூடுதல் ஆச்சர்யம்.

இந்தப் பயிர் வட்டங்கள் இரவு நேரத்தில் வானத்திலிருந்து வரும் ஒரு ஒளிக்கற்றையால் உருவாக்கப்படுவதாகவும், வேற்றுக்கிரக வாசிகளின் வாகனம் இறங்கிச் சென்ற தடையங்களே இந்தப்பயிர் வட்டங்கள் என்றும், இந்தப்பயிர் வட்டங்களுக்குள் செல்லும் மிருகங்கள் மிரண்டு ஓடுவதாகவும், இந்தப்பயிர் வட்டங்களுக்குள் கடிகாரம் வேகமாகவும், மெதுவாகவும் மாறி மாறிச்சுற்றுவதாகவும், சில மனிதர்களுக்கு இந்தப்பயிர் வட்டங்களுக்குள் நுழையும்போது தலைச்சுற்றல் வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றுவதாகவும், சில மனிதர்களுக்கு இந்தப்பயிர் வட்டத்துக்குள் நுழைந்ததும் தங்கள் உடம்பிலிருந்த நோய்கள் சரியானதாகவும் வித விதமான மர்மக்கதைகள் நமக்கு மயக்கத்தையே வர வைக்கின்றன.

எனினும் வெறும் காகிதத்திலேயே வரையச் சிரமப்படும் பல டிசைன்கள், பயிர்களில் சேதமில்லாமல் உருவாகியிருப்பது மர்மமான ஆச்சர்யம்தான்.

பயிர் வட்டங்கள் பற்றிய மேலும் பல சுவாரசியத்தகவல்களுக்கும், புகைப்படங்களுக்கும் இந்த வெப்சைட்டில் பார்க்கவும்...
ஸ்டோன் ஹென்ஜ்

உலகின் தீரா மர்மங்களில் ஸ்டோன் ஹென்ஜ் முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. தோராயமாக இதன் வயதை 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கணித்திருக்கிறார்கள். இன்றைய பிரிட்டனின் மிகப்பழமையான புராதனச்சின்னங்களில் இதுதான் முதலிடம் என்பது கூடுதல் சிறப்பு.
ஸ்டோன் ஹென்ஜ் பார்க்க எண்ணி பயணீத்தீர்களேயானால், ஒரு சில மலைகளைத் தாண்டிச் செல்லும் பயணத்தில் திடீரென இந்த அமானுஷ்ய இடத்துக்குள் நுழைவீர்கள். இந்த இடத்தின் மயான அமைதியும், வீசும் வித்தியாசமான காற்றும் உங்களுக்குள் ஒரு மர்மத்தாக்கத்தை நிச்சயம் உண்டாக்கும்.  


இது உருவாக்கப்பட்ட விதமாக ஆராய்ச்சியாளர்களால் கணிக்கப்பட்ட தகவல்கள் இதுதான்...

1)   முதலில் கி.மு.3100ம் ஆண்டில் மதச்சடங்குகளுக்காக தொடர் பள்ளங்கள் தோண்டப்பட்டிருக்கின்றன.

2)   அதன் பின்னர் ஆயிரம் ஆண்டுகள் கழித்துதான் இந்த கல் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. வேல்ஸ் மலையிலிருந்து பெரிய பெரிய கருங்கற்கள் கிட்டத்தட்ட 240மைல் தொலைவுக்கு எடுத்துவரப்பட்டிருக்கிறது. சக்கரம் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் எதற்காக, யாரால், எப்படி இந்தக் கற்கள் இவ்வளவு தூரம் எடுத்து வரப்பட்டிருக்கும் என்பது மர்மமே. இவ்வாறு எடுத்து வரப்பட்ட கற்கள் முற்றுபெறாத ஒரு இரட்டை வட்ட வடிவில் மிட்சம்மர் சூரிய உதயத்திற்கு அலைன்மெண்ட் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கிறது.

3)   இதன் முன்னர் மூன்றாவது நிலையாக கி.மு.2000வது ஆண்டில் மேலும் சில கற்கள் 25மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்திலிருந்து எடுத்துவரப்பட்டிருக்கிறது.

4)   இதன் பின்னர் மேலும் 500 ஆண்டுகளுக்குப் பிறகு யாரோ ஒரு சிலரால் இன்றைய குதிரைக் குளம்பு போன்ற வட்ட வடிவத்தில் இந்தக்கற்கள் மறுஒழுங்கு செய்யப்பட்டு அடுக்கப்பட்டிருக்கிறது.


இன்று வரையிலும் இந்தக்கற்கள் அடுக்கப்பட்டிருப்பதன் அர்த்தம் எந்தவொரு முடிவையும் எட்டவில்லை. இது ஒரு வழிபாட்டுத்தலம், வானவெளி சம்பந்தப்பட்ட காலண்டர், சுடுகாட்டு மயானம் என்று விதவிதமான கதைகள் திரிந்தாலும் இது இன்னமும் தீர்க்கப்படாத ஒரு மர்மம்தான்!!!

நகரும் கற்கள்
செயிலிங் ஸ்டோன் என்றழைக்கப்படும் இந்த கற்கள் விலங்குகளோ இல்லை மனிதர்களோ இல்லாமல் தானாகவே நகர்ந்து நீண்டதொரு பாதையில் பயணித்துக்கொண்டேயிருக்கின்றன. இவைகளைப் பற்றிய தகவல்கள் பலவிதமான எண்ணிக்கையில் அமேரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ரேஸ் ட்ராக் பிளேயா, டெத் வேலி என்ற இடத்தில் ஆராயப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தக் கற்கள் வெறும் நேர் கோட்டில் மட்டுமே நகராமல் வளைவுகளுடன் நகர்வது மேலும் மர்மமே. இவற்றில் ஒரு சில கற்கள் 700 பவுண்டு வரை எடை உள்ளவை என்பது கூடுதல் தகவல். இவைகளின் நகர்வுக்கு பின்னால் உள்ள சக்தி இன்னமும் கண்டுபிடிக்கப்பட முடியாமல் ஆராய்ச்சிக்குரியதாகவே நீடித்துக் கொண்டிருப்பது தீராத மர்மமே!
இரும்புத்தூண் – டெல்லி

ஆச்சர்யத்திற்குரிய விஷயமிது. உலகின் தீரா மர்மங்களைப்பற்றி அலசிக்கொண்டிருந்தபோது அதில் இடம் பெற்றிருக்கும் நமது இந்தியாவின் இரும்புத்தூண் நான் எதிர் பார்க்காத... என்னை வியக்க வைத்த விஷயம்.

டெல்லியில் இருக்கும் குதுப்மினார் பற்றி நம்மில் பலபேர் அறிந்திருப்போம். அதன் அருகில்தான் இந்த இரும்புத்தூணும் அமைந்திருக்கிறது. 2000 வருடங்களுக்கும் மேலாக பழமையானதாக கருதப்படும் இந்தத்தூண் 98% சுத்தமான இரும்பினால் செய்யப்பட்டு எவ்வித பாதுகாப்பு பூச்சுகளுமின்றி திறந்தவெளியில் துளியளவும் துருப்பிடிக்காமல் இருப்பது இன்றளவும் தீர்க்கப்படாத மர்மமே !.

இரும்புத்தூணையும், ஃஈபிள் டவரையும் பற்றிய ஒரு சிறிய ஒப்பீடு உங்கள் பார்வைக்கு...பிமினி ரோடு

பிமினி ரோடு அல்லது பிமினி சுவர் என்றழைக்கப்படும் இந்த விஷயம் பஹாமா மாகாணத்தின் வடக்கு பிமினித்தீவில் தண்ணீருக்கடியில் கண்டறியப்பட்ட ஒரு பாறைப்படிவமாகும். 0.8 கி.மீ நீளமுடன் கூடிய இந்தச்சுண்ணாம்பு பாறை படிவத்தில் காணப்படும் சதுரமான பாறைகளாலான ரோடு போன்ற அமைப்பும், படிக்கட்டுகள் போன்ற அமைப்பும், தூண்கள் போன்ற அமைப்பும் இதைச்சுற்றிய ஏராளமான மர்மக்கதைகளுக்கு காரணமானதாய் அமைந்திருக்கிறது.


அட்லாண்டிஸ் என்ற புராதன நகரம் காணாமல் போனதான வரலாறுகள் மேலைநாட்டில் திரைப்படங்களிலும், நாவல்களிலும் பிரசித்தபெற்றவை. கதைகளில் இருக்கும் புராதன அட்லாண்டிஸ் நகரம்தான் பிமினியின் தண்ணீருக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட படிவங்கள் என்ற கதையும், இது இயற்கையாக உருவான படிவமா... இல்லை மனிதர்களால் உருவாக்கப்பட்டு கடலுக்குள் புதையுண்ட நகரமா என்பது இன்றளவும் ஆராய்ச்சிகளுக்கு உட்பட்ட தீரா மர்மமாகவே நீடிக்கிறது.

இந்தியாவிலும் இதேப் போல துவாரகா என்ற புராதன நகரம் கடலுக்கடியில் மூழ்கியிருப்பதாய் நிலவும் கதைகள் உங்களுக்கான கூடுதல் தகவல்!

இன்கா தங்கப்புதையல்

 லத்தின் அமெரிக்காவில் மத்திய ஈகுவடாரில் அமைந்திருக்கும் அடர்ந்த மலைப்பிரதேசத்தின் குகைகளில் டன் கணக்கில் தங்கப்புதையல் இருப்பதான கதைகளின் பின்னனி சுவாரசியமான வரலாறு.

1532ம் ஆண்டு ஃபிரான்சிஸ்கோ பிஸ்ஸாரோ என்பவரின் தலைமையில் ஸ்பானீஷ் படையொன்று இன்கா பேரரசரை சிறைபிடிக்கும் முயற்சியில் முன்னேறியது. ஏற்கனவே இன்கா பேரரசில் அப்போதுதான் சகோதர யுத்தம் நடந்து தனது சகோதரர் குயாஸ்கரை வீழ்த்தி அரியணையில் அமர்ந்திருக்கிறார் அதூல்பா. ஏற்கனவே நடந்த உள்நாட்டு யுத்தத்தில் களைப்படைந்து போயிருந்த இன்கா படைகள் ஸ்பானீஷ் படைகளிடம் எளிதாய் வீழ்ந்திருக்கிறது. அதூல்பா இன்கா தலைநகரான கஜமார்காவில் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்.

தன்னை விடுவித்தால் அதற்கு ஈடாக மலை மலையாக தங்கம் தருவதாக பிஸ்ஸாரோவிடம் பேரம் முடித்திருக்கிறார் அதூல்பா. அதன்படி தங்கள் அரசரை விடுவிப்பதற்காக இன்கா பேரரசு முழுவதுதிலுமுள்ள மக்களிடமிருந்து தங்கமும் வெள்ளியுமாய் பெறப்பட்டு அவை இரண்டு தவணையாக பிஸ்ஸாரோவிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. விதவிதமான தங்க கைவினைப்பொருட்கள் முதல் தவணையில் ஒப்படைக்கப்பட்டவுடன் பிஸ்ஸாரோ அந்த அழகிய தங்க வைவினைப்பொருட்கள் அனைத்தையும் உருக்கி தங்கக்கட்டிகளாய் ஸ்பெயினுக்கு அனுப்பி விட்டு இரண்டாவது தவணையைப் பற்றி அறியாமல் தனது வாக்குறுதியைக் மீறி இன்கா பேரரசர் அதூல்பாவை ஆகஸ்ட்-29, 1533 அன்று இன்கா தலைநகரான கஜமார்காவிலேயே கொன்று தீயிலிட்டு கொளுத்தியிருக்கிறான்.

கிட்டத்தட்ட 60,000 பணியாட்கள் மூலம் 750 டன் தங்க கைவினைப்பொருட்களை இன்கா தலைநகரை நோக்கி சுமந்து வந்து கொண்டிருந்த இன்கா ஜெனரல் ருமினாஹீய், இன்கா பேரரசர் கொல்லப்பட்ட செய்தியை அறிந்ததும் தங்கம் மொத்தத்தையும் ல்லங்கானேட்ஸ் என்ற  ஈகுவடாரின் மலைப்பிரதேசத்துக்கு எடுத்துச்சென்று மறைத்துவிட்டார். அதற்குப் பின்னர் இன்கா ஜெனரல், ஸ்பானீஷ் படைகளுடன் தொடர்ந்து போரிட்டு, சிறைபிடிக்கப்பட்டு, பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டும் இன்கா தங்கத்தை வைத்த இடம் பற்றி எவ்விதத் தகவலையும் கூறாமல் அந்த மர்மப்புதையலை தனது மரணத்தோடு சேர்த்தே மறைத்து கொண்டார்.


தொடர்ந்து வந்த காலங்களில் இன்று வரையிலும் தங்க வேட்டைக்காக பலவிதமான தேடல்கள் நடந்து கொண்டேயிருந்தாலும் எல்லாமே வெறுங்கையாகவே முடிந்த கதைகள் இன்கா தங்கப்புதையலை இன்னமும் தீரா மர்மமாகவே நீட்டித்திருக்கிறது.

நாஸ்கா கோடுகள்

 புராதன உலகத்தின் முக்கிய மர்மங்களுள் ஒன்றாக விளங்கும் நாஸ்கா கோடுகள் தெற்கு பெருவில் உள்ள நாஸ்கா சமவெளியில் காணப்படுகின்றன. இந்தக்கோடுகள் முதன்முதலில் உலகுக்குத்தெரிய வந்தது கமெர்ஷியல் ஏர்லைன்ஸ் சேவைகள் பெரு சமவெளியின் மீது பறக்கத்தொடங்கிய 1920ம் ஆண்டில்தான். இந்தக்கோடுகள் கி.பி.400 லிருந்து 600ம் ஆண்டுக்கு மத்தியில் வரையப்பட்டதாய் கணக்கிடப்பட்டிருக்கிறது. உலகில் இதுபோல இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில வரைபடங்கள் காணப்பட்டாலும் முன்னூறுக்கும் அதிகமாய் ஒரேயிடத்தில் மிகப்பெரிய அளவில் வரையப்பட்ட காரணம்தான் நாஸ்காவின் முக்கியத்துவத்துக்கு அடிப்படையாகும். வானத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே புலப்படக்கூடிய அளவுக்கு சில வரைபடங்கள் 1000அடி நீளத்திற்கும் மேல் வரையப்பட்டிருப்பது அறிவியல் கண்டுபிடிப்புகளற்ற 400ம் வருடத்தில் என்பதுதான் நம்ப முடியாத ஆச்சரியம்.


இதே காரணம்தான் இதைப்பற்றிய பல மர்மகதைகளுக்கும் வித்தாகிப்போனது. பலர் இதை வேற்று கிரகவாசிகளின் விமானத்தளம் என்றே வாதிக்கின்றனர். அதற்கு காரணம் இதன் ஒருசில வரைபடங்கள் மாடர்ன் விமானநிலையத்தின் பார்க்கிங் அமைப்பை ஒத்திருப்பதாய் அமைந்திருப்பதேயாகும்.


ஒரு சிலர் இதை நாஸ்கா மக்கள் தண்ணீருக்காக கடவுளிடம் வழிபாட்டு நடத்துவதற்காக உருவாக்கிக்கொண்ட வரைபடம் என்கிறார்கள். ஒருசிலர் இதை ஈமச்சடங்குகளுக்கான ஏரியாவாக வாதிக்கின்றனர்.

ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் இதை வானவெளி பற்றிய காலண்டர் என்று வாதிக்கின்றனர்.


எது எப்படியிருந்தாலும் வெறும் மணல்வெளியில் வரையப்பட்டிருக்கும் இந்த கோடு வரைபடங்கள் காலங்கள் பல கடந்தும் அழியாமல், முழுக்காரணமும், வரையப்பட்ட விதமும் தெரியாமல் வீற்றிருப்பது நிச்சயமாய் மர்மமே!


பெர்முடா முக்கோணம் 

பெரும்பாலும் இதைப் பற்றிய தகவல் தெரியாதவர் யாரும் இருக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். நார்த் அட்லாண்டிக் கடலின் மேற்கு பகுதியில் இருக்கும் இந்த கடற்பரப்பில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்களும், விமானங்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும்  மர்மமான முறையில் காணாமல் போயிருக்கின்றன. குறிப்பிட்ட இந்த முக்கோணப்பகுதிக்குள் நுழையும் கப்பல்களோ... இல்லை இதற்கு நேர் மேற்பரப்பில் பறந்த விமானங்களோ இதுவரை என்னவாயிற்று என்றே தெரியாமல் ஆராயப்பட்டுக்கொண்டிருக்கிறது.

பலவித ஆராய்ச்சிகளுக்குப்பிறகும் பெர்முடா முக்கோணம் அறிவியல் சம்பந்தப்பட்ட காரணமா... இல்லை அமானுஷ்ய சக்திகளின் காரணமா என்பது இன்னமும் புரிபடாமல் நீடிப்பது கண்டிப்பாய் தீராத மர்மம்தான் !


மாயன் காலண்டர் 

மாயன் காலண்டர்... 2012ம் ஆண்டை பற்றிய மர்மத்தை தாங்கி நிற்கும் கல்வெட்டு இது. ஒரு சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி மாயன் என்ற இனத்தால் கடைபிடிக்கப்பட்டு வந்த காலண்டர் இது என்றும், இந்த காலண்டர் டிசம்பர் 21, 2012 அன்றோடு முடிவதாகவும் அதுதான் உலகம் அழியும் நாளாக மாயன் இனத்தவரால் கணிக்கப்பட்ட நாள் என்றும் பரவிய செய்திதான் இன்று இந்த விஷயத்தை உலகின் டாப் லிஸ்ட் மர்மங்களில் ஒன்றாக்கியிருக்கிறது.

இருந்தாலும் பல அறிவியலாளர்களால் மாயன் காலண்டர் சமாச்சாரம் உண்மையில்லை என்று மறுக்கப்பட்டிருக்கிறது. நமது காலண்டர் எப்படி டிசம்பர்-31 ல் முடிகிறதோ அதேப்போல இந்த காலண்டருக்கும் இருக்கும் முடிவுதான் இது. மற்றப்படி டிசம்பர்-21, 2012ல் உலகம் அழிவதற்கான எவ்வித அறிவியல் கூறுகளும் இல்லை என்று திட்டவட்டமாக மறுக்கப்பட்டிருக்கிறது.


எனினும் 2012 திரைப்படம் உலகம் முழுக்க வசூலை அள்ளிக் குவித்த காரணமே மக்கள் மனதில் மாயன் காலண்டர் விதைத்த மர்மம்தான் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை...

பறக்கும் தட்டுகள்

உலகின் தீர்க்கப்படாத மர்மங்களின் டாப் லிஸ்ட்டில் இந்தப் பறக்கும் தட்டுகள் பற்றிய செய்தியும் இடம் பெறுவதற்கு இதைப் பற்றிய கதைகளும், மக்களுக்கு வேற்று கிரகவாசிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களின் மீதிருக்கும் ஈர்ப்புமே முக்கியக்காரணம்.

பறக்கும் தட்டை பார்த்ததாய் பதியப்பட்ட முதல் செய்தி 1878ம் ஆண்டுதான். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் விவசாயி ஒருவர் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது வட்டவடிவில் ஏதோவொன்று மிக அதிவேகத்தில் பறந்து சென்றதை பார்த்ததாகக் கூறினார். அதன் பின்னர் 1916ம் ஆண்டு இங்கிலாந்தின் ஃபைலட் ஒருவர் தான் விமானம் ஓட்டிக்கொண்டிருந்தபோது நெருப்பு பந்து போன்ற ஏதோவொன்று பயங்கர வெளிச்சத்துடன் பறந்ததை பார்த்ததாகத் தெரிவித்தார்.


1950களுக்குப் பிறகு சயின்ஸ் ஃபிக்சன் கதைகளின் மூலம் இந்தப்பறக்கும் தட்டுகள் மேலும் பிரபலமடைந்தன. பறக்கும் தட்டுகள் அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட உளவு விமானம் என்றும், ரஷ்யாவினால் ஏவப்பட்ட உளவு விமானம் என்றும் எதிர்வாதங்களும் கிளம்பின.
இந்தியாவிலும் பறக்கும் தட்டை பார்த்ததாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்...
டெல்லியில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள்...


தமிழ்நாட்டில் பொள்ளாச்சி அருகே எடுக்கப்பட்ட புகைப்படம் இது...

என்னதான் ஆராய்ச்சிகளும், மறுப்புகளும் தொடர்ந்து உருவானாலும் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதாய் நம்பும் பூமிக்கிரகவாசிகளின் மனதில் பறக்கும் தட்டுகள் பற்றிய செய்திகளும், படங்களும் இன்னமும் அவிழாத மர்ம முடிச்சாகவே நீடித்திருக்கிறது.

இதுவரை பார்த்தவை உலகின் வெறும் ஹிட் லிஸ்ட் தீரா மர்மங்கள் மட்டுமே... மற்றபடி உலகின் மொத்த மர்மங்களையும் பற்றி அறிய நினைத்தால் அது கணக்கிலடங்கா கதைகளுடன் நமது தெரு எல்லை வரைகூட வரலாம்... உண்மையிலேயே இவை மர்மங்களோ... இல்லையோ... ஆனால் இவற்றைப்பற்றிய செய்திகளும், படங்களும் ஒரு சிறந்த மர்மப் பொழுதுபோக்குகள் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் ஏதுமிருக்காது என்று நம்புகிறேன்...

முடிந்தால் அடுத்த பதிவில் ‘’இந்தியாவின் தீரா மர்மங்கள் – டாப் லிஸ்ட்’’ பற்றி எழுதுகிறேன் (அதுவரையிலும் யாராவது எழுதாமல் இருந்தால்!!!)

26 comments:

 1. good job keep it up
  karikaalan

  www.karikaalan.blogspot.com

  ReplyDelete
 2. ம்ம்ம்... வழக்கம்போல கஷ்டப்பட்டு தொகுத்து எழுதிய இந்தப்பதிவும்... பதிவுலகின் ஆயிரக்கணக்கான பதிவுகளுக்கு நடுவில் சிக்கி காணாமல் போயிருக்கிறது... பதிவுலகில் நிலைக்க பதிவுகள் தரமாக இருந்தால் மட்டும் போதாது... கூடி கும்மியடிக்கவும் கற்றுக்கொண்டாக வேண்டுமோ?!!!...

  ReplyDelete
 3. உங்கள் பதிவு படித்தேன்.வெகு அழகாக எளிமையாக புரியும் விதத்தில் உலகின் ஆச்சர்யங்களை பற்றி எழுதி உள்ளீர்கள்.இதில் நாஸ்கா கோடுகளும் கிராப் சர்கில்களும் பயங்கர திகைப்பை கொடுப்பவை,பிரமிட் கண்டிப்பாக மனித முயற்சியில் உண்டானது அல்ல என்று நிறைய பேருக்கு தெரியாது. இணையத்தை தகவலுக்காக பயன்படுத்துபவர்கள் இந்த பதிவை விரும்பி படிப்பார்கள். மற்றபடி எல்லாம் சினிமா தான். நீங்கள் கூட ஏதாவது சினிமா நடிகையை பற்றி எழுதினால் நிறைய ஆசாமிகள் படிக்கலாம்.

  ReplyDelete
 4. கோவி கண்ணன் கூகுள் ப்ளஸ் ல் இணைத்து இருந்தார். ரொம்ப அற்புதமாக பல வற்றை எழுதியிருக்கீங்க. நானும் அந்த காம சூத்திரத்தை முதலில் படித்தேன். ரொம்ப அற்புதம். இத்தனை எளிமையாக கோடு தாண்டாமல் எழுதியதற்கே உங்களுக்கு தனியான பாராட்டுரை வழங்க வேண்டும். ஏழெட்டு கட்டுரைகள் படித்தேன். மிக்க நன்றி. கூகுள் பள்ஸ் ல் இணைங்க. இன்னும் பலரும் உள்ளே வருவார்கள்.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. உங்கள் தளத்தை இன்றுதான் படித்தேன் நன்றாக இருக்கிறது, வரலாறு, அறிவியல் இரண்டையும் கலக்கி கொடுக்கிறீர்கள், உண்மையில் நல்ல ஆக்கபூர்வமான விஷயங்களை கொடுத்தால் நம் மக்கள் படிக்க மாட்டார்கள் அதனால்தான் நம்ம ஊடகங்கள் எப்போதும் சினிமா காரர்கள் பின்னாடி போகிறார்கள்
  உங்கள் தளத்தை பார்வையிடுவது சிலரானாலும் அவர்கள் சிந்திக்க தெரிந்தவர்கள், சான்றோர்கள் அதிகம் பேர் வரவேண்டும் என்பதற்காக நீங்களும் குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்க வேண்டாம்.
  உங்களை போன்று கலையரசன் ஒருவர் இருக்கிறார் kalaiy.blogspot.com உலக வரலாறுகளை மிக தெளிவாக எளிமையாக கொடுப்பதில் சிறந்தவர், அவர் தளத்திற்கும் சிலரே வருவர்.
  ஆனாலும் உங்கள் தளங்கள் காலத்தை தாண்டி நிற்கும். வரும் சந்ததியனருக்கு அறிவியல் வரலாறை அள்ளி கொடுக்கும் பொக்கிஷங்கள்
  மற்ற தளங்களில் வரும் பதிவுகள் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பின் குப்பைகளாக மாறி விடும். கவலை வேண்டாம் தொடருங்கள் உங்கள் பணியை
  இதோடு facebook link கொடுங்கள் முகநூல வாசகர்களுக்கு முடிந்த அளவு சென்று சேர்க்க என்ன முடிந்த அளவு செய்கிறேன்

  ReplyDelete
 6. அன்புடையீர் வணக்கம்
  இத்தகைய ஒரு பதிவு தருவதற்கு நீங்கள் எத்தனை உழைத்திருப்பீர்களன் என்று எண்ணிப்ார்த்தால் வியப்பாக இருக்கிறது.
  ம்ம்ம்... வழக்கம்போல கஷ்டப்பட்டு தொகுத்து எழுதிய இந்தப்பதிவும்... பதிவுலகின் ஆயிரக்கணக்கான பதிவுகளுக்கு நடுவில் சிக்கி காணாமல் போயிருக்கிறது... பதிவுலகில் நிலைக்க பதிவுகள் தரமாக இருந்தால் மட்டும் போதாது... கூடி கும்மியடிக்கவும் கற்றுக்கொண்டாக வேண்டுமோ?!!!... என்பது உண்மைதான். இருந்தாலும் படிப்பவர்களும் வேண்டும்.
  நமக்கு நல்ல விஷயங்களில் அத்தனை நாட்டம் இருப்பதில்லை.
  டாக்டர் அப்துல்கலாம் வருகிறார் அதே சமயத்தில் திரைப்பட நடிகை வருகிறாள் என்றால் கூட்டம் முழுவதும் திரைப்படநடிகையைப் பார்ப்பதற்குத்தான் முண்டி அடிக்கும். இது தான் தமிழகத்தின் நிலை. இதற்காக வருத்தப்படவேண்டாம். நம் கடன் பணி செய்து கிடப்பதே. இன்றைய காலகட்டத்தில் நமது மாணவர்களுக்கு திரிஷாவைப் பற்றித் தெரிந்தஅளவிற்குத் திருவள்ளுவரைப் பற்றி தெரியுமா ? அதனால் திருவள்ளுவருக்கா அவமானம் ? அல்லது நஷ்டம் ?
  பணி சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. அன்புடையீர் வணக்கம்
  இத்தகைய ஒரு பதிவு தருவதற்கு நீங்கள் எத்தனை உழைத்திருப்பீர்களன் என்று எண்ணிப்ார்த்தால் வியப்பாக இருக்கிறது.
  ம்ம்ம்... வழக்கம்போல கஷ்டப்பட்டு தொகுத்து எழுதிய இந்தப்பதிவும்... பதிவுலகின் ஆயிரக்கணக்கான பதிவுகளுக்கு நடுவில் சிக்கி காணாமல் போயிருக்கிறது... பதிவுலகில் நிலைக்க பதிவுகள் தரமாக இருந்தால் மட்டும் போதாது... கூடி கும்மியடிக்கவும் கற்றுக்கொண்டாக வேண்டுமோ?!!!... என்பது உண்மைதான். இருந்தாலும் படிப்பவர்களும் வேண்டும்.
  நமக்கு நல்ல விஷயங்களில் அத்தனை நாட்டம் இருப்பதில்லை.
  டாக்டர் அப்துல்கலாம் வருகிறார் அதே சமயத்தில் திரைப்பட நடிகை வருகிறாள் என்றால் கூட்டம் முழுவதும் திரைப்படநடிகையைப் பார்ப்பதற்குத்தான் முண்டி அடிக்கும். இது தான் தமிழகத்தின் நிலை. இதற்காக வருத்தப்படவேண்டாம். நம் கடன் பணி செய்து கிடப்பதே. இன்றைய காலகட்டத்தில் நமது மாணவர்களுக்கு திரிஷாவைப் பற்றித் தெரிந்தஅளவிற்குத் திருவள்ளுவரைப் பற்றி தெரியுமா ? அதனால் திருவள்ளுவருக்கா அவமானம் ? அல்லது நஷ்டம் ?
  பணி சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. Wonderful Saai. Pleasee keep up your good work..I introduced your blog to some of my friends here in usa.

  ReplyDelete
 9. தங்களின் இந்த உண்மை படைப்பு அருமை

  ReplyDelete
 10. As a blogger , i too understand the pain u have taken to write this blog post .. I appreciate your great effort and expect more such posts from you in future

  Thanks for this information !!

  ReplyDelete
 11. அருமை தொடருங்கள்

  ReplyDelete
 12. நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் '

  ReplyDelete
 13. nalla article..

  http://www.livescience.com/32616-how-were-the-egyptian-pyramids-built-.html

  more info..

  ReplyDelete
 14. Hats off.
  Very informative .
  T.N.Balasubramanian

  ReplyDelete
 15. சூப்பர் சூப்பர் சூப்பர்!!! தரமான பதிவு. தொடர்ந்து இது போன்று எழுதுங்க...

  ReplyDelete
 16. ஒரு சில விபரங்களை தவிர மற்றவை எல்லாம் புதியவை ! தொடருட்டும் உங்கள் எழுத்து பணி ! புதுமை ! அருமை !

  ReplyDelete
 17. niraia visaiangal therindhu kondane pagirvukku nandri......

  ReplyDelete
 18. thanks super sama intresting. put some ghost mystrey too.really good effort.

  ReplyDelete
  Replies
  1. Thanks for your comments...
   I have already written about ghost mystery... if u want pls read the following link....
   http://jeevanathigal.blogspot.com/2012/08/blog-post_19.html

   Delete
  2. very good search and very good research ..............the study should to be continued,,,,,,,,,,
   svganesan_2000@yahoo.com

   Delete
 19. நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் '

  ReplyDelete