SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, August 21, 2012

பாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்!


தமிழர்கள் எங்கள் கூரிய வாட்கள்
துருப்பிடித்து தூங்கத்தொடங்கி
நாட்களாச்சு !

தமிழர்கள் எங்கள் வீரிய நாக்கள்
தடம் புரண்டு பேசப்பழகிய
வாழ்க்கையாச்சு !

தமிழ்த்தாய் வாழ்த்தை
மெல்லக்கொன்று
கொஞ்ச கொஞ்சமாய்
சமாதி கட்டினோம்;

சங்கே முழங்கை
சத்தியமாய் மறந்து
நாக்க மூக்கக்கு
நடனங்கள் ஆடினோம் !

கம்பு, கேழ்வரகு, கடலை உருண்டையோடு
உணவே மருந்தாய் உண்டதை மறந்து
பீஸா, பர்கர், பெப்சி, கோக்கென
வயிறு வளர்க்க பழகியாச்சு !

அம்மா என்றழைத்த அழகுத்தமிழும்
மம்மி என்றிங்கே மாறிப்போச்சு ;
அம்மியில் அரைத்த நாட்டுக்கோழி குழம்பும்
மேரி பிரௌன், கே.எப்.ஸியில் மறைஞ்சேப் போச்சு ;

வீட்டுக்கு வெளியில் திண்ணையும்
விருந்தாளிக்கு முதலில் தண்ணியுமான
தமிழர் பண்பாடுமிங்கே
காணாமப்போச்சு ;

காசு கொடுத்து வாங்கும்
மினரல் வாட்டர் கேனுக்குள்ள
தாகத்தோடு பண்பாடும்
மூழ்கித்தான் போச்சு ;

நெல்லினில் எழுதி
பழகிய காலத்தை
பழங்கதையென்று ஒதுக்கியாச்சு ;

தமிழ்ச்சொல்லினில்
பாடங்கள் பயில்வதுமிங்கே
அறிவிலித்தன்மையின்
அடையாளமாச்சு ;

சங்கம் வைத்து தமிழை வளர்த்த கதைகளெல்லாம்
வெறும் வரலாற்றில் மட்டும்தான் மீதமாச்சு ;
பாரதியும், பாரதிதாசனுமிங்கே
வெறும் ஃபேஷன் பேச்சாத்தான் மாறிப்போச்சு ;

மரபுக்கவிதை எல்லாமிங்கே
மாண்டுதானே போச்சுது ;
புதுக்கவிதை என்ற பெயரில்
தமிழுமிங்கே சாகுது ;

செம்மொழி அந்தஸ்து கிடைச்சும் கூட
வெறும் செல்லாக் காசாத்தான் கிடக்குது ;
உலகத்தமிழ் மாநாடுமிங்கே
ஒருத்தருக்காய்த்தான் நடந்தது ;

இனத்தின், மொழியின் பற்றுகூட
இங்கே வியாபாரமாத்தான் போச்சுது ;
புதுப்பட ரிலீசும், ஜ.பி.எல்லும்தான்
எங்கள் நேரத்தில் முக்கியமாச்சுது ;

வேட்டியும், பாவாடை தாவணியும்
வெளிநாட்டு உடையாத்தான் தெரிஞ்சுது ;
ஜீன்ஸ் பேண்ட்டும் லெக்கின்ஸ்ம்தான்
எங்க உடம்புக்கு ஏத்ததா புரிஞ்சது ;

தாலி கட்டுற கல்யாணமெல்லாம்
வேலியாத்தான் புளிச்சது ;
வேண்டியதப்போ பிரிஞ்சிக்கிற
சேர்ந்து வாழ்தல் இனிச்சது ;

யாழ், பறை, உருமிமேளம்
ஒன்னுமில்லாமப் போச்சுது ;
கீ போர்டு, கிட்டார், டிரம்ஸ்தான்
உடம்பு முழுக்க அதிருது ;

பக்கத்து வீட்டு மூஞ்சியெல்லாம்
அந்நியமாத் திரியுது ;
ஃபேஸ்புக்கு பிரெண்டுங்கதான்
ஆயிரத்த தாண்டுது ;

அரிசி குடுத்து கீரை வாங்கும்
பழக்கமெல்லாம் போச்சுது ;
அஞ்சு ரூவா கீரை வாங்க
காருமிங்கே போகுது ;

அரசாங்கக் கல்வி இங்கே
தனியார் மயமாச்சுது ;
தனியாரின் கள்ளுக்கடை
அரசே ஏத்து நடத்துது ;

அடுத்து என்ன இலவசமுன்னு
மனசு ஏங்கிக் கிடக்குது ;
இலவசங்கள் கிடைக்குமுன்னுதான்
ஆட்சி மாற்றமும் நடக்குது ;

லஞ்சம் கொடுக்க கூச்சமின்றி
வாழக்கூட பழகியாச்சு ;
சுயவொழுக்கம் என்பதெல்லாம்
காத்தோட போயி நாளாச்சு ;

பாரம்பரிய வரலாற்றை
பக்கம் பக்கமா எழுதலாம் ;
பாழாப்போன பழக்கத்தை
எத்தனை பக்கம் எழுதறது?...

பாழாய்ப்போகும் தமிழையும்
வீணாப்போகும் தமிழனையும்
காக்கப்போவது யாருங்கோ?...
தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்கோ...!!!5 comments:

 1. உங்களுடைய விரக்தியை புரிந்து கொள்ள முடியுது சாய்ரோஸ். இருந்தாலும் கால மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து நாமும் மாற வேண்டியது அவசியமானதே. ஆனால். மத கலாச்சாரங்களைப் போல் தேவைப்படாத அந்நிய கலாச்சாரங்களின வலுக்கட்டாய தினிப்பை தடுத்து நம்மை பாதுகாக்க வேண்டியதும் நம் கடமை.


  "அரசாங்க கல்வி இங்கே
  தனிமயார் மயமாச்சுது

  தனியாரின் கள்ளுக்கடை
  அரசே ஏத்து நடத்துது."
  சரியான சவுக்கடி.

  பகிர்வுக்கு மிக்க நன்றி சாய்ரோஸ்.

  ReplyDelete
 2. நீங்கள் கூறுவது சரிதான் தோழரே... நானும் மாற்றங்களுக்கு எதிரானவன் அல்ல... ஆனால் மாற்றங்கள் ஆரோக்கியமானதாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக்கொள்ளலாம்... ஆபத்தான மாற்றங்கள் பற்றி கவலைப்படத்தானே வேண்டியிருக்கிறது... கருத்திட்டமைக்கு நன்றி தோழரே...

  ReplyDelete
 3. சிறந்த படைப்பு.

  ReplyDelete
 4. ஹ ஹா ஹா
  உண்மைதான் ..
  நம்ம என்னக பண்றது ,,,,,,,
  மாற்றம்தான் வாழ்க்கை ..
  ஆனால் இது ரொம்ப மாற்றம்

  தொடரட்டும் உங்கள் வெற்றி பதிவுகள்

  ReplyDelete
 5. unmaithan nanparea ethu tamilar entralea oru matheppu ellatha sulnilai solarkalaga,pandiyarkalaga,serarkala eruntha naam entru entha nelaiyel eruka karanam namath otrumai enmaithan mattum arasin thavarana kolkaikalum

  ReplyDelete