SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Wednesday, August 8, 2012

மாறுபட்டதொரு மழை...

மழை – இது
வெறும் தண்ணீர் மட்டுமேயல்ல,
மாறுபட்டதொரு உணர்வுகளின் கலவை!
 
 
வானம் தெரியும் பொத்தல் ஓடுகளில்
கிராமத்து பள்ளிக்குழந்தைகளுக்கு – இது
விடுமுறைக்கான மகிழ்ச்சி!
வகுப்பறையிலும் ஏசியுடன்
மழை வெயில் தெரியா பட்டணத்துக்குழந்தைக்கு – இது
ஏக்கத்துடனான எரிச்சல்!

வறண்டுகிடக்கும் வாய்க்கால் குளத்துடன்
தவித்துகிடக்கும் கிராமங்களுக்கு – இது
மண்வாசனை மகிழ்ச்சி!
வடிகால் வசதி உருப்படியில்லா
வாகன நெரிசல் நகரங்களுக்கு – இது
வெறுப்புடனான எரிச்சல்!
 
 
விதைத்துவிட்டு காத்திருக்கும்
வானம் பார்த்த விவசாயிக்கு – இது
வரம் கொடுக்கும் மகிழ்ச்சி!
விளைந்து கிடக்கும் பயிரை
விற்கத்துடிக்கும் விவசாயிக்கு – இது
வயிற்றலடிக்கும் எரிச்சல்!

வீட்டிலிருக்கும் புதுமண ஜோடிக்கு
சாரலடிக்கும் குளிர்காற்றில் – இது
காதலுடனான மகிழ்ச்சி!
பீச்சில் அமரும் காதல் ஜோடிக்கு
வெயில் பிரிக்காத காதலை – இது
வெறுப்பேற்றி பிரிக்கும் எரிச்சல்!

அலுவலக விடுப்பெடுத்தோர்க்கு
சூடான தேநீருடன் ஜன்னல் வழி ரசனைக்கு – இது
சொர்க்கம் தரும் மகிழ்ச்சி!
முன்னேற்பாடுகள் எதுவுமில்லாத
இரு சக்கர வாகன பயணிகளுக்கு – இது
நாள் முழுதுமான எரிச்சல்!

மழையடித்தாலும் வெயிலடித்தாலும்
கருநிறசாலைகள் மட்டுமே
கருவிழிக்குள் காட்சியளிக்கும்
பட்டணத்துக்கு தெரியாமலிருக்கலாம்...

- ஆனால்
கண்ணீர் சிந்திய பொட்டல் காட்டையும்
தண்ணீர் நனைத்து மணக்கச்செய்து
பச்சைப்பசேல் காட்சிகளுடன்
பருவநிலை மாற்றம் காட்டும்
கிராமத்து மழை உணர்த்தும் - இது
வெறும் தண்ணீர் மட்டுமேயல்ல,
மாறுபட்டதொரு உணர்வுகளின் கலவை!

எரிச்சலும் ஏக்கமும்
எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியும்
மாறி மாறி எகிரவைத்து
சாரலடிக்கும் மழைக்கு...
எவ்வித கவலைகளுமின்றி
காகித கப்பல்களுடன்
இன்னமும் கூடிக்குலவும்
குழந்தைகள் மட்டும்தான்
எக்காலத்திலும் மாறாத
எதிர்பார்ப்பில்லா நண்பர்களோ?...
பட்டணத்துவாசிகள் பலபேருக்கு
மழை உண்டாக்கும் மண்வாசனை
இனம் புரியா மன உணர்வுகளையும்
குழந்தைப்பருவ மன நிலையையும்
இன்னமும் கூட உண்டாக்குவதுதான்
மழைக்கான தனித்திறனோ?...
உண்மைதான்...
மழை – இது
வெறும் தண்ணீர் மட்டுமேயல்ல,
மாறுபட்டதொரு உணர்வுகளின் கலவை!

3 comments:

  1. அத்தனையும் அழகு...

    மழையின் நவரசங்கள் அழகுடன்...

    ReplyDelete
  2. //வறண்டுகிடக்கும் வாய்க்கால் குளத்துடன்
    தவித்துகிடக்கும் கிராமங்களுக்கு – இது
    மண்வாசனை மகிழ்ச்சி!
    வடிகால் வசதி உருப்படியில்லா
    வாகன நெரிசல் நகரங்களுக்கு – இது
    வெறுப்புடனான எரிச்சல்!///

    இரண்டு வார்க்க சமூக சூழல் மறுபட்ட நிலைப்பாடுகளை கவிதையின் ஊடாக கொடுத்திருக்கிறீர்கள் அருமை

    கவிதைக்கு நன்றி

    ReplyDelete
  3. உங்களின் “மழை“ கவிதை
    எழுத்துக்களின் கொர்வை மட்டுமல்ல.
    மாறுபட்டதொரு உணர்வுகளின் கலவை

    அருமைங்க நட்பே!

    ReplyDelete