SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Saturday, May 19, 2012

அரசியல் என்ன கோமாளிகளின் கூடாரம்தானா?...!


நீண்ட நாட்களாக பதிவெழுத நேரம் ஒதுக்கமுடியாமல் போனது. இருப்பினும் தற்போதைய அரசியல் நிலவரங்களை கவனித்து… கவனித்து… ஒரு சாமன்யனாய் அடக்கமுடியாத ஆற்றாமையுடனும் ஆத்திரத்தினுடனும் இக்கட்டுரையை எழுதியே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தில் எழுதுகிறேன்.

முதலில் 2ஜி விவகாரம். கனிமொழிக்கு ஜாமீன்... விடுதலைப்போராட்டத்துக்குச் சிறை சென்ற தியாகிபோல பலத்த வரவேற்புடன் வெளியில் வந்து கட்சிப்பணியில் ஐக்கியமாகிவிட்டார்.

இப்போது திருவாளர் ஆ.ராசாவும் வெற்றிகரமாக ஜாமீனில் வந்து பார்லிமெண்ட் கூட்டத்திலும் கலந்து கொண்டாகிவிட்டது (ஜனநாயகம் வாழ்க!). வழக்கம் போல மீடியாக்களும் 2ஜி க்கான முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்டு சூடான செய்திகளைத்தேடும் வேலையை மும்முரமாய் செய்து கொண்டிருக்கிறது. சி.பி.ஐ… அது பாவம் என்ன செய்யும்... ஆள்வோரின் அடுத்த கையசைவுக்கு காத்துக்கிடக்கும்.                                                   
ஊத்தி மூடப்பட்ட மெகா ஊழல்களின் வரிசையில் வெகு விரைவிலேயே 2ஜி யும் இணைந்துவிடும் என்பதில் அரசியல் தெரிந்த எவருக்கும் ஐயமிருக்க வாய்ப்பில்லை. ஆதங்கங்கள் அனைத்தையும் மனதிற்குள்ளேயே அடக்கிக்கொண்டு சொரணை கெட்டு வாழப்பழகிக்கொண்ட வெகுஜன கூட்டத்திற்குள் நானும் என்னை அடக்கிக்கொள்வதைத் தவிர வேறேதும் வழியில்லை என்ற கசப்பான உண்மையை வெட்கம் கெட்டுப்போய் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

அடுத்து ஈழ விவகாரம்... அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது என்றதும் தமிழீழமே மலர்ந்து விட்டதைப்போன்று பெருமகிழ்ச்சி கொண்ட அப்பாவித் தமிழ்க்கூட்டத்தில் நானும் ஒருவன். மத்திய அரசு தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் அனைத்தும் நான் நீ... என்று போட்டி போட்டுக்கொண்டு பொங்கியெழுந்தது அப்பட்டமான பச்சோந்தித்தன அரசியல் காய் நகர்த்தல் என்றாலும் மத்திய அரசு அந்தத்தீர்மானத்தை ஆதரித்தது எப்படியென்பது புரிபடாத ஆச்சர்யம்தான். சரி... ஒருவழியாய் அமெரிக்கத்தீர்மானம் வெற்றியடைந்தாகிவிட்டது. அடுத்து என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளலாம் என்றால் வழக்கம் போல பழைய செய்தியாய் அதுவும் பரண்மேல் ஏறி படுத்துக்கொண்டது. நாடு கடந்த தமிழீழ அரசு, போர்க்குற்ற விசாரணை, சர்வதேச தீர்மானங்கள், பாரளுமன்றக்குழுக்கள், நினைவேந்தல் நிகழ்வுகள், அரசியல் கபட நாடகங்கள் என்று என்னவெல்லாமோ நடந்து கொண்டிருந்தாலும்... சுதந்திரம் தொலைத்த எம் தமிழ்க்கூட்டம் ஈழத்தின் எச்சங்களின் மேல் எதிர்காலத்தின் திக்குகளின்றி தலைவன் வருவானா?... இல்லை தமிழ் தேசம்தான் வருமா? என்று சுதந்திர வேடமிட்டுக்கொண்ட அடிமைகளாய் கனவுகளுடன் நாட்களை நரகமாய் நகர்த்திக்கொண்டுதானிருக்கிறது.

இங்கேயோ சொரணையற்றுப்போன ஜென்மங்கள் வழக்கம்போல ஐ.பி.எல் கிரிக்கெட் முதல் அஜீத்தின் பில்லா-2வா?... இல்லை விஜய்யின் வேலாயுதமா என்பது வரை அவரவர் வேலைகளில் எவ்வித பிரக்ஞையுமின்று செவ்வனே பயணித்துக்கொண்டேயிருக்கிறோம். இனி ஒவ்வொரு வருடமும் மே-18ல் அங்கங்கே போஸ்டர்களில் மட்டும்தான் தமிழீழத்தையும் தமிழுணர்வையும் காண முடியுமோ என்ற சந்தேகம் ஆங்கிலப்பள்ளிகளின் வாசல்களில் அட்மிஷனுக்காகக் காத்துக்கிடக்கும் கூட்டங்களைப்பார்க்கும்போது தவிர்க்க முடியாமல் எழுந்து நிற்கிறது. ஆங்கிலம் பேசுவதுதான் அறிவு... தாய்மொழியில் பேசுவது அறிவின்மையின் அடையாளம் என்ற தவறான கருத்து நம் மக்கள் மனதில் எப்படி வேறூன்றிப்போனதென்று தெரியவில்லை. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பிச்சையெடுப்பவர்களும் பிக்பாக்கெட்காரர்களும்கூட ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள் என்பதை நமக்கு யாராவது விளக்கிச்சொல்லி விதைத்துவிட்டால் பரவாயில்லை. (ஆங்கிலமே கூடாது என்பதல்ல என் வாதம்... தாய்மொழியை ஒதுக்கக்கூடாது என்பது மட்டுமே என் கருத்து).

அடுத்து தி கிரேட் கருணாநிதி... ஆட்சி மற்றும் அதிகாரம் ஒரு மனிதனுக்கு எவ்வளவு போதையென்பது தனது வாரிசுகளுக்கு வழி விடாமலும்... கட்சியையும் குடும்பத்தையும் கட்டுக்குள் வைக்காமலும்... இறுதி வயதிலும் தலைமைப்பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். பதவியில் இருந்த காலத்தில் தமிழகத்தை தனது கொள்ளுப்பேரன்கள் வரை கூறுபோட முயன்றது மட்டுமின்றி... ஈழ விவகாரத்திலும், முல்லைப்பெரியாறிலும், பாலாற்றிலும், காவிரியிலும் தமிழர்களுக்கு வாய்க்கரிசி போட்டு பிண்டம் கரைத்தது வரை கனகச்சிதமாக காரியங்களை அரங்கேற்றினார். அப்போதெல்லாம் ஈழ விவகாரத்தில் மாநில அரசால் எதுவும் செய்யமுடியாது என்று அரைநாள் உண்ணவிரத நாடகங்களோடு தனது கடமையை முடித்துக்கொண்ட பெரிய மனிதர் இப்போது திடீர் ஞானோதயத்தில் மீண்டும் ‘’டெசோ’’வை தூசு தட்டியிருக்கிறார். அரசியல் சாணக்கியர் என்ற பெயருக்கு முழுத்தகுதியும் உண்டு இந்த இனமானத் தலைவருக்கு என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணங்களைத் தேடவேண்டிய அவசியங்களேயில்லை.

மயானமாகிப்போன இனத்தின் சாம்பல்மீது மீண்டும் தமிழுணர்வுத்தாண்டவமாடுவது எந்தவிதமான அரசியல் காய் நகர்த்தலோ... அவருக்குத்தான் வெளிச்சம்!. வழக்கமாக இவருக்குப் பல்லக்குத்தூக்கும் அடங்க மறுத்து அத்துமீறச்சொல்லும் தலைவருக்கு ‘’டெசோ’’ விஷயத்தில் இவர் கொடுத்த அல்வா... ஆஹா செம இனிப்பு. சேகுவாராவையும், பிரபாகரனையும் கட்சி பேனர்களிலும், போஸ்டர்களிலும் நம்முடன் சேர்த்து போட்டுக்கொள்ளும் முன் அதற்கான முழுத்தகுதியும் நமக்குண்டா என்று ஒரு முறையேனும் சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள் தலைவா என்று யாராவது இவருக்கு எடுத்துச்சொன்னால் புண்ணியமாய்ப்போகும். அதே போலத்தான் சுயமரியாதை முழக்கத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு வெட்கம் கெட்டுத்திரியும் கி.வீரமணியும்... என்னதான் மந்திரமோ... மாயமோ... தெரியவில்லை... என்ன நடந்தாலும் கருணாநிதிக்குத் துதிபாடும் இவரது செயலுக்கு இவரிடம் மட்டுமே நியாயம் இருக்கக்கூடும். ஜென்மங்கள் எப்போதுதான் திருந்துமோ... ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!

மு.க.ஸ்டாலின்... மு.க.அழகிரி... பாவம்... பதவிக்காக இவர்கள் படும் பாடும்... மன உளைச்சலும் இருக்கிறதே... அப்பப்பப்பா... இவர்களைக் குறைகூற எனக்கு மனமேயில்லை...

அடுத்து பா.ம.க. பாட்டாளிகள் என்றால் அது வெறுமனே உழைக்கும் வர்க்கமா? அல்லது வன்னியர்கள் மட்டும்தான் பாட்டாளிகளா? என்று மருத்துவரிடமும், சின்ன அய்யாவிடமும் யாராவது கேட்டுச்சொன்னால் உதவியாய் இருக்கும்.

கூட்டணிக்குதிரையில் சவாரி மீது சவாரி செய்த அரசியல் பயணத்தில் திடீரென தனியாளாய் கழற்றி விடப்பட்டதும் பா.ம.க இனி மக்கள் விரோத திராவிடக்கட்சிகளுடன் கூட்டணி வைக்காது என்று அறிக்கை விடும் அய்யாவுக்கு இதற்கு முன்னரெல்லாம் திராவிடக்கட்சிகளைப்பற்றி தெரியாது போல... அய்யோ பாவம்! இது எல்லாவற்றுக்கும் மேல் ‘’காடு வெட்டி குரு’’. கலப்புத்திருமணம் செய்யும் வன்னியர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடச்சொல்லி தூண்டும் இவரது பேச்சைக் கேட்கும் போதுதான், பேச்சு சுதந்திரத்தில் தீமைகளும் அடங்கியிருப்பதை உணர முடிகிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் பா.ம.க வந்தாகிவிட்டது. ஆனாலும் இன்னமும் வெட்கப்படாமல் 2016 நமக்குத்தான் எனும் இவர்களது கோஷங்களை மிஞ்சும் கோமாளித்தனம் வேறேதும் இருப்பதாய் தெரியவில்லை.

மத்தியில் அன்னையும், சிங்கும்... அடேங்கப்பா! இந்திய வரலாறும், இரண்டு முறை இவர்களை அரியாசனத்தில் அமர்த்திய மக்களும் போதும் போதும் என மூச்சுத்திணறும் அளவுக்கு இவர்கள் சாதனைகளை அரங்கேற்றியிருக்கிறார்கள்!. இவர்களது அடுத்த சாதனை... தங்களுக்கான (நாட்டுக்கான அல்ல) ஜனாதிபதியை எப்படி தேர்ந்தெடுப்பதென்பதுதான். ஊழல் மேல் ஊழலாய் நாடு முழுவதும் நாறினாலும், எதுவுமே நடக்காதது போல அலட்டிக்கொள்ளாமல் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முழுவீச்சில் மத்திய அரசு செயல்படுத்துவதாக வெட்கமின்றி அறிவிக்கும் பிரதமர் மன்மோகனா?... இல்லை வெறும் களிமண்ணா?...

அரசியல் என்ன கோமாளிகளின் கூடாராமா?... என்ற கேள்விக்கு மத்தியில் ஆளும் காங்கிரசும், அவர்களுடைய அதிமேதாவி அமைச்சர்களுமே தக்க பதிலை நமக்கு உணர்த்தியாகிவிட்டது. அதிலும் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், சல்மான் குர்ஜித், நாராயணசாமி, கிருஷ்ணா இவர்களெல்லாம் கூடாரத்தின் மிக முக்கியத்தூண்கள்... இவர்களது நிர்வாகத்திறமைகளையெல்லாம் நினைத்து கருமம் கருமம் என்று தலையில் அடித்துக்கொள்ளும் போதெல்லாம் ‘’இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப்போகட்டும்’’ என்ற பி.எஸ்.வீரப்பாவின் பழைய பட டயலாக்தான் மனதில் ஓடுகிறது. பிரணாப் முகர்ஜி... அடேங்கப்பா! வெளிநாட்டு வங்கிகளில் தூங்கும் இந்தியர்களின் கருப்புப்பணத்தை மீட்பதில் நிதியமைச்சராய் மிளிறுகிறார். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்காமல் விலைவாசி உயர்வும், பணவீக்கமும் தமக்கு மிகுந்த கவலையளிப்பதாய் கண்ணீர் விடுகிறார் பாருங்கள்... சே…நமது நிதியமைச்சருக்குத்தான் நாட்டு மக்களின் மீது என்னேவொரு பாசம்?.

இப்படியொரு நிதியமைச்சர் கிடைக்க நாமெல்லாம் எப்பிறவியில் புண்ணியம் செய்தோமோ தெரியவில்லை! இந்த இலட்சணத்தில் இப்போது லேட்டஸ்ட்டாக பொருளாதார மேம்பாட்டிற்காக சிக்கன நடவடிக்கைகளை வேறு அறிவித்திருக்கிறார். இவர் மட்டுமின்றி ஞாபக மறதி வெளியுறவுத்துறை அமைச்சரும், அரைவேக்காடு கபில் சிபலும், காமெடி பீஸ் நாராயணசாமியும்... அய்யய்யோ... சுந்தர்.சி யின் காமெடி படங்களெல்லாம் இவர்களிடம் வரிசையில் நின்று பிச்சை வாங்கும்.

ஒருவேளை அரசியல் கட்சிகளெல்லாம் திறமையானவர்களை அமைச்சராக்கினால் எங்கே தலைமையையே விஞ்சி விடுவார்களோ என்ற பயத்தில்தான் இது போன்ற அமைச்சரவைகளையே விரும்பி அமைத்துக்கொள்கிறார்களோ என்னவோ தெரியவில்லை!

போபால் விஷவாயுக்கசிவு குற்றவாளிகளைத்தான் மக்களையும் நாட்டையும் பற்றி சிந்திக்காமல் எளிதாய் தப்பவிட்டார்களென்றால்... இப்போது இந்தியர்களைச் சுட்டுக்கொன்ற இத்தாலிக்கப்பலை விடுவிக்கப் போராடிய மத்திய அரசை நினைத்தால் மெய் சிலிர்த்துப்போகிறது. விட்டால் இந்தியாவையே இத்தாலியுடன் இணைத்துவிட்டாலும் ஆச்சர்யமில்லைபோல! பார்லிமெண்ட்டில் தூங்குவதையும், கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதையும், சட்டசபையில் ஆபாசப்படம் பார்த்ததையும் கண்ட நமக்கு, இந்த ஜனநாயகத்தில் இன்னும் என்னவெல்லாம் கொடுப்பினைகள் காத்திருக்கிறதோ தெரியவில்லை.


இறுதியாய் நமது தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா... அம்மம்மா என்னவொரு ஆட்சி?... இப்போது இவருடைய ஒரு வருட ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களும், வாழ்த்து தூபங்களும் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இதைப்பற்றி தனியாக ஒரு பதிவே எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நேரமின்மை காரணமாக இந்தப்பதிவிலேயே அம்மாவின் ‘’ஒரு வருட சாதனை’’( ! )களை நானும் எழுதிவிடுகிறேன்.        

ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சரவையில் பொறுக்கி பொறுக்கித் தேர்ந்தெடுத்து பல புதுமுகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மக்களும், மீடியாவும் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தோம். பல நேர்மையான அதிகாரிகள் அரசு நிர்வாகத்தில் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டனர். நிலமோசடி விவகாரத்தில் அம்மாவின் ஆணித்தரமான நடவடிக்கைகள் தி.மு.க.வை பழிவாங்க மட்டுமே என்றாலும்கூட பழைய ஆட்சியின் ஆட்டங்களைக் கண்டு மனம் வெதும்பிப் போயிருந்த நம்மைப்போன்ற இதயங்களுக்கு அது கொஞ்சம் ஆறுதலாகத்தான் இருந்தது. ‘’கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தானாம்’’ என்றொரு பழமொழி உண்டு. அதுபோல நமது வரிப்பணத்தை எடுத்து அரிசி, ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி, தாலி, லேப்டாப், இத்யாதி என விதவிதமான இலவசத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆரம்பத்தில் கொஞ்ச நாட்கள் நல்லாத்தான் போயிட்டிருந்தது. திடீரென ‘’உங்கிட்ட ஸ்டார்ட்டிங்கெல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா ஃபினிஷிங் சரியில்லையேப்பா...’’ என்ற வடிவேலு டயலாக்போல வேலைகள் நடக்கத்தொடங்கின.

முதலில் புதிய தலைமைச்செயலகத்தை ஊத்திமூடி தலைமைச்செயலகத்தை பழைய இடத்திற்கே மாற்றி சாதனையைத் தொடங்கி பிள்ளையார் சுழி போடப்பட்டது. அடுத்து எந்த புத்திசாலி அம்மாவிடம் வந்து ஐடியா கொடுத்தானோ தெரியவில்லை... சமச்சீர் கல்விக்கு ஆப்படிக்கும் திட்டம் தீட்டப்பட்டது. ஒருவழியாக நீதிமன்றங்களின் குட்டுக்குப்பிறகே தலையைச்சொறியும் நிலை உண்டானது.

அந்நியன் படத்தில் வருகிற விக்ரம் மாதிரி அவ்வப்போது அவதாரங்களை அம்மா மாற்றிக்கொண்டேயிருந்தார். முதலில் முருகன், சாந்தன், பேரறிவாளன் விஷயத்தில் மாநில அரசு ஏதும் செய்வதற்கில்லை என்று கைவிரித்தார். பின்னர் தமிழுணர்வாளர்களின் மனநிலையை அம்மாவிடம் யார் எடுத்துச்சொன்னார்களோ தெரியவில்லை... திடீரென அவர்களின் தூக்கு தண்டனைக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ் இதயங்களை குளிரச்செய்தார். தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படை நடத்தும் துப்பாக்கிச்சூடுகளுக்கு கடும் கண்டனங்களை எழுப்பினார். ஆரம்பத்தில் சட்டசபையில் அ.தி.மு.க ஆட்கள் யாராவது பேசத்தொடங்கும் போது நேரே விஷயத்திற்கு வராமல் அம்மா துதி பாடினால், ஜெயலலிதாவே அவர்களின் பேச்சில் குறுக்கிட்டு எந்த புகழாரமும் செய்து சட்டசபையின் நேரத்தை வீணாக்கத் தேவையில்லை, விஷயத்தை மட்டும் பேசுங்கள் என்று தலையில் குட்டி மிகச்சிறந்த முதலமைச்சராக மிளிரினார்.

முல்லைப்பெரியாறு மற்றும் கூடங்குளம் பிரச்சினைகளில் மக்களின் உணர்ச்சிகளுக்கு தமிழக முதல்வராக மிகச்சிறந்த முறையில் மதிப்பளித்து போராட்டத்தை மட்டுப்படுத்தும் எந்த வேலையையும் செய்யாமல் மக்கள் தலைவியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.

கொஞ்சநாட்கள்தான்... நமது சந்தோஷங்களெல்லாம். எத்தனை நாள்தான் பூனையை மடியில் கட்டி மறைத்து வைக்கமுடியும். கொஞ்ச கொஞ்சமாக முதல்வரம்மாவின் பழைய சுயரூபம் தலைகாட்டத் தொடங்கியபோது கூட மக்கள் நாமெல்லாம் அதற்கும் சப்பைகட்டு கட்டி சமாளிக்கத்தான் செய்தோம். முதலில் பால் விலையும், பஸ் கட்டணமும் உயர்த்தப்பட்டபோது மெத்தப்படித்த மேதாவிகள் நாம் அதை பொருளாதாரத்தை மேம்படுத்தும் நிர்வாகத்திறமையாகவே பேசி மனதை திடப்படுத்திக்கொண்டோம். போக்குவரத்து கழகத்தை காப்பாற்றவே பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாக பஸ்சிலேயே பயணம் செய்திராத பல பருப்புகள் அதையும் போற்றிப்பாராட்டினர். பொருளாதாரத்தை மேம்படுத்த பணக்கார முதலைகளிடமும், நமது வளங்களைச் சுரண்டிக்கொண்டிருக்கும் வெளிநாட்டு கம்பெனிகளிடமும் விதவிதமாய் வரிவிதித்து அரசு கஜானாவை நிரப்பிக்கொண்டால் யாரும் எதையும் கேட்கப்போவதில்லைதான். ஆனால் ஏற்கனவே ‘’டாஸ்மாக்’’ என்ற சுரண்டலின் மூலம் சொந்த மக்களின் பணத்தையே விழுங்கிக்கொண்டிருக்கும் ஒரு மாநில அரசு மீண்டும் மீண்டும் ஏழைகளின் தலையிலேயே பாரத்தை ஏற்றுவதென்பது தவறான நிர்வாகமென்பது இவர்களுக்கெல்லாம் எப்போதுதான் விளங்குமோ தெரியவில்லை.

உண்மையிலேயே பொருளாதாரத்தை திறம்படச் சீர் செய்யவேண்டுமானால் இவர்கள் வழங்கும் இலவசங்களையும், கட்சிக்காரர்கள் செய்யும் ஆடம்பரச்செலவுகளையும் நிறுத்தினாலே போதும்... பொருளாதாரம் அதுவாகவே மேம்படும். ம்ம்ம்... என்ன சொல்லி என்ன பயன்?... ஓட்டுப்போட்ட மக்களுக்கு ஆப்பு வைத்தே பழகிப்போன நமது அரசியல்வியாதியை குணப்படுத்துவது கடினம்தான்.

சரி…இது பரவாயில்லை என்று மனதைத்தேற்றிக்கொண்டு சமாளிக்கும் முன்னரே... உள்ளாட்சி தேர்தலில் மக்கள் வாக்களித்த மை காயும் முன்னரே, கூடங்குளத்தில் வைத்தாரே ஆப்பு... ஜெயலலிதாவின் ஒரிஜினல் முகம் இதுதானா?... தேர்தல் முடிந்ததும் காவல்துறையை ஏவி கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கியவர் அதைத்தேர்தலுக்கு முன்னமே செய்திருந்தால்கூட ஏதோ ஒரு முடிவில் நிலையாக இருக்கும் முதல்வர் என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சாதாரண அரசியல்வாதியைப்போல நடந்து கொண்ட அம்மாவின் இந்த இரட்டைவேடச் செயலுக்குப் பின்னால் ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் மக்களின் மனதிலும், மீடியாக்களிலும் அம்மா எதிர்ப்புக்கு அவரே வித்திட்டுக்கொண்ட முதல் சம்பவம் இது.

அடுத்து அவரது தோழி சசிகலா விஷயம்... ம்ம்ம்... சசிகலாவை மட்டும் ஒதுக்கிவிட்டால் போதும்... இந்தியாவிலேயே நம்பர் ஒன்னாக வரக்கூடிய திறமை ஜெயலலிதாவிடம் இருக்கிறதென்பது பல நடுநிலையாளர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருந்தது. ஏனென்றால் ஜெயலலிதா ஆட்சியின் பல முக்கிய ஊழல்கள் சசிகலா&கோ வினாலேயே நிகழ்த்தப்பட்டது. ஜெயலலிதாவுடன் சசிகலாவைச்சேர்த்து பார்க்கும் போதெல்லாம் மூஞ்சை சுழிக்காதவர்கள் எவரும் இருக்கமுடியாது. அப்படிப்பட்ட நிலைமையில் திடீரென சசிகலா&கோ வை அம்மா ஒதுக்கியது சொந்த கட்சிக்காரர்கள், எதிர்க்கட்சிக்காரர்கள், மீடியாக்கள், சாதாரண பொதுமக்கள், அரசியல் நடுநிலையாளர்கள் என்று அனைவரையுமே ஆச்சர்யத்திலும், சந்தோஷத்திலும் ஆழ்த்தியது. ஆனால் அந்த நாடகமும் கொஞ்ச நாட்களிலேயே மேடையிறக்கப்பட்டு அனைவருடைய சந்தோஷத்திலும் மண் அள்ளிப்போடப்பட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக... பவர்கட் எனும் பூதம் இப்போது விஸ்வரூபம் எடுத்து ஆடுவது ஜெயலலிதாவே எதிர்பார்க்காத ஒன்று. எத்தனை அரசியல் ஆட்டங்கள் நடந்தாலும் ஜெயலலிதா தனது பாதையை மாற்றிக்கொள்ளாமல் மீண்டும் தனது பழைய பாணியிலேயே பயணிக்கத் தொடங்கியாகிவிட்டது.

சட்டசபையில் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு மறுப்பது, மீண்டும் புகழ்மாலை, துதிபாடல்கள் என மூழ்கிக்கிடப்பது, குற்றங்கள் ஒறுபுறம் பெருகிக்கொண்டேயிருந்தாலும் காவல்துறை முழுவீச்சில் முடுக்கிவிடப்படாமல் இருப்பது, அ.தி.மு.க காரர்கள் எல்லா வழிகளிலும் தங்களது சம்பாத்தியத்தை தொடங்கியது என அரசு இயந்திரம் பழுதடையத்தொடங்கியாகிவிட்டது. மீடியாக்களும் இப்போது கொஞ்ச கொஞ்சமாக அம்மாவின் ஆட்சியை விமர்சிக்கத்தொடங்கியாகிவிட்டது. இப்போதுகூட ஒன்றும் கைமீறிப்போகவில்லை. அம்மா நினைத்தால் தேவையில்லாத விஷயங்களை ஒதுக்கி மக்கள் நலத்திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தி இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரி முதல்வராகத்திகழலாம். ஆனால் இது சாத்தியமா இல்லையா என்பதையும், 2016தேர்தல் அவருக்குச்சாதகமா இல்லையா என்பதையும் தீர்மானிக்கும் சக்தி அவரது கையில் மட்டும்தான் உள்ளது.

கடந்த தி.மு.க ஆட்சியின்போது சாலைகளில் அ.தி.மு.க கொடி கட்டிய வாகனங்களைப் பார்ப்பதென்பது வெகு அரிது. ஆனால் தேர்தல் முடிவு தெரிந்து அம்மாதான் முதல்வர் என்று தெரிந்த சில மணி நேரங்களிலேயே ஆட்டோக்கள், காரர்கள் என பல வாகனங்களிலும் அ.தி.மு.க கொடி பறக்கத்தொடங்கியது. இப்போது தி.மு.க கொடி கட்டிய வாகனங்களைப் பார்ப்பதே ரோட்டில் அரிதாகிவிட்டது. அரசியல் என்பது பணம் சம்பாதிக்கும் வியாபாரமாக சுயநலவாதிகளால் மாற்றப்பட்டு வெகுநாட்களாகிப்போனது.

இங்கே இனி காமராஜரையும், கக்கன்ஜியையும் வரலாற்றில்கூட மறக்கும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை என்பதே நிஜம்.

அரசியல் கோமாளிகளின் கூடாராமோ இல்லையோ... ஆனால் மாறி மாறி இவர்களுக்கு வாக்களித்து மாற்றங்களுக்காக ஏங்கிக்கிடக்கும் மக்கள் கூட்டம் நாம் எதுவும் செய்ய இயலாத கோமாளிகளின் கூடாரம்தான்...!