SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, March 1, 2012

முடிவின்றி நீளுமொரு தேடல்...


வாழ்க்கை எனக்குணர்த்தும் செய்திகள் புரிபடாதவை…
எதைநோக்கி என் தேடல்கள் என்பதும் தெளிவில்லாதவை...
எங்கேயோ பிறந்து எங்கேயோ நகரும் என் வாழ்க்கை
முழுமையில்லாதொரு சாலையில்
முன்னகர்ந்து செல்லுமொரு வெறுமை...

எனக்கானவர்களாய் உணர்ந்தவர்களெல்லாம்
தனக்கானவர்களைத் தேடிக்கொண்டு
கலைந்துபோன கனவான பின்
எனக்கானவளாய் எண்ணி
கைப்பிடித்தவளிடமும் கை கோர்க்காமல்
முற்றுப்பெறாமல் நீள்கிறது
முன்னோக்கிச்செல்லும் என் தேடல்கள்...

தனக்கான வாழ்க்கையில்
தெளிந்து வாழ்பவளை நினைத்து
அப்போதே சொல்லியிருந்தால்
அவளுடனே வாழ்ந்திருக்கலாமென்ற
அபத்தமான எண்ணங்களை
அகற்றியெறிய மனமுமில்லை...

நட்பு வட்டத்தில் கூடி லயித்தாலும்
இதுதான் நிம்மதியென்று
நிச்சயமாய் சொல்வதற்கில்லை...

மதங்கள் கடந்து வணங்கி நின்றும்
சாந்தியடைந்த மனமென்று
சாத்தியக்கூறுகள் ஏதுமில்லை...

மனதைக் கரைக்கும் இசைக்குள் விழுந்தும்
இதுதான் முற்றும் என்று
ஒத்துக்கொள்ள உண்மையுமில்லை...

சமூக அக்கறையில் சகலமும் செய்தும்
இதுதான் தேடல் என்று
முடித்துக்கொள்ள மனமுமில்லை...

செய்யும் பணியில் உழைப்பைக் கொட்டியும்
இதுதான் உணர்வென்று
நம்பிக்கொள்ள எதுவுமில்லை...

வாழ்வுக்கும் ஈகைக்கும் பணத்தைச் சேர்த்தும்
வாழ்வின் அர்த்தம் இதுதானென்று
வகுத்துக்கொள்ள வழியுமில்லை...

மழலைச் செல்வங்களின் மகிழ்ச்சியில் திளைத்தும்
முழுதானதொரு மனமென்று
தேடல்கள் நின்ற திருப்தியுமில்லை...


அன்பா?... அரவணைப்பா?...
ஆன்மீகமா?... ஆத்மதிருப்தியா?...
நட்பா?... நிம்மதியா?...
காமமா?... காதலா?...
இயற்கையா?... இலக்கியமா?...
எதுதான் என் தேடலென்று
எப்படி யோசித்தும் புரியாமல்
கடிவாளமற்ற குதிரைபோல
கண்டபடி ஓடித்திரியும்
மனக்குதிரையைக் கட்டிக்கொண்டு
வாழ்க்கை முழுவதும்
பயணித்தலென்பது
சாத்தியப்படும் நாள் வருமா?...
இல்லை… சாபமாகி சாய்த்து விடுமா?...

அறிந்தும் அறியாதவர்களாய்
புரிந்தும் புரியாதவர்களாய்
எனைச்சுற்றிப் பின்னிய கூட்டத்தில்
எனக்கானதொரு புரிதலாய்
எவருமின்றிப்போனதேன்?...

எத்தனை நாள்தான்
என் வாழ்க்கைப் பயணத்தை
கனவிலும் கடற்கரையிலும்
கவிதைகளின் வார்த்தைக்குள்ளும்
வழி தேடித்திரிந்து
விழி வாடிச்சோர்வது?...
அங்கேதான் இருக்கிறதென்று
அறுதியிட்டுக்கூறிவிட்டால்
விக்கிரமாதித்தன் கதைகள்போல
ஏழு மலைகள், ஏழு கடல்களென்று
எதை வேண்டுமானாலும் தாண்டிச்சென்று
எனக்கானதைத் தேடிவரலாம்…
எதுவென்பதே தெரியாதபோது
எங்கேயென்று தேடச்செல்வது?
எதையென்று தேடிச்செல்வது?!

இலட்சியமற்ற பயணம் போல
இலக்குகளற்ற தேடலைத்தேடி
எத்தனை நாட்களைத்தான்
நரகமாய் நகர்த்துவது?...

முடியாத கேள்விகள்
ஒன்றன் பின் ஒன்றாய்
கொக்கி போட்டுத் தொங்கிக் கொண்டு – எனை
நக்கலடித்து நாளும் சிரிக்கும்...

தேடல்கள் முற்றுப்பெறும் நாள்
வாழும் போதே எனைத் தழுவுமா? – இல்லை
வாழ்க்கையது முடியும் நாள்தான்
என் தேடல்களும் முடியுமா?...

No comments:

Post a Comment