கவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது! விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...
Saturday, December 17, 2011
முல்லைப்பெரியாறு – மூலவரலாறும், மூக்கணாங்கயிறும் ஒரு முழுத்தீர்வும்...
நீண்ட நாட்களாக முல்லைப்பெரியாறு பற்றி பதிவெழுதலாமா… வேண்டாமா என யோசித்து யோசித்து இறுதியாய் எழுதலாம் என முடிவெடுத்து அலசியபோது சில விஷயங்கள் நெருடத்தான் செய்கிறது. கொழுந்துவிட்டு எரியும் முல்லைப்பெரியாறு பிரச்சினையை ஒரு தமிழனாய் நின்று அலசினால் எனக்குள்ளிருக்கும் இனப்பற்று தமிழகத்திற்கு ஆதரவாய் மட்டுமே பதிவெழுத வைத்துவிடும் என்பதால் மனதளவில் நான் ஒரு நடுநிலையான மூன்றாம் மனிதனாக மாறி இரு தரப்பு பொது ஜனங்களின் ஊடக கருத்துக்களை வெகுவாய் அலசினேன். அடிப்படை வாழ்வாதாரமான நீருக்காக தமிழர்களும் (பொதுமக்கள்), வாழ்க்கைக்கே அடிப்படையான உயிருக்காக கேரளத்தவரும் (பொதுமக்கள் மட்டுமே) தங்கள் உள்ளங்களில் விதைத்துக்கொண்ட பயமும் அத்தோடு ஒவ்வொரு மனிதனிடமும் இயல்பாகவே இருக்கும் இனப்பற்றும் ஒன்று சேர்ந்து இன்று தீராத பிரச்சினையாக உருவெடுத்து நிற்கிறது. எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றும் கணக்காய் இந்தப் பிரச்சினையை வைத்து அரசியல் செய்யும் அற்பர்கள் இருபக்கமும் இருப்பதால் உடைந்து போன இருமாநிலத்தவரின் உணர்வுகள் இனி ஒட்டுவதென்பது கஷ்டமே!
இந்தப்பிரச்சினையின் ஆதி அந்தம் தெரியாதவர்களுக்கு மட்டும் ஒரு சிறு முன்னோட்டம். அது ஏற்கனவே தெரிந்தவர்கள் அடுத்த பத்திக்கு தாவிக்கொள்ளுங்கள். முல்லைப்பெரியாறு என்பது முல்லையாறும் தமிழகத்தின் சிவகிரி மலையில் உற்பத்தியாகும் பெரியாறும் இணைந்து பாயும் பகுதிகளாகும்.
1789ம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சிக்கு முன்னரே அப்போதைய ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் அமைச்சரவையைச் சேர்ந்த திரு.முத்திருளப்பபிள்ளை என்பவர்தான் கேரளாவின் வழியாக பெரியாற்றின் பெரும்பகுதி நீர் கடலில் வீணாய்க் கலப்பதைக் கண்டு அதைத் தமிழ்நாட்டுக்குத் திருப்பி விடும் சாத்தியக்கூறுகளை முதன் முதலில் ஆராய்ந்து கண்டறிந்து சொன்னவர். அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாய் தெரிந்தும் பெருந்தொகை செலவு செய்யவேண்டியதிருந்ததால் அத்திட்டம் தொடங்காமலேயே கைவிடப்பட்டது. அதற்கு பின் வந்த ஆங்கிலேய அரசாங்கத்தால் மீண்டும் தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கு திருப்பும் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டது. இப்போதிருக்கும் முல்லைப்பெரியாறு அணைப்பகுதி கேப்டன் ஜே.எல்.கால்டுவெல் என்பவரால் 1808ம் ஆண்டு முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியாகும். ஆனால் அவர் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திருப்ப பல மைல் தூரம் மலைகளைக் குடைந்து குகைகளை ஏற்படுத்தவேண்டியிருப்பதால் இத்திட்டம் விரயமானது என்று கூறி ஃபைலை மூடியிருக்கிறார். 1850ம் ஆண்டு முதலே அணை கட்டுவதற்கான பல்வேறு திட்டவரையறைகள் சமர்ப்பிக்கப்பட்டு வந்த போதிலும் 1882ம் ஆண்டு அணை கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டு மேஜர் பென்னி குயிக் என்பவரை இன்சார்ஜ் ஆக நியமித்து புதிய திட்டமும் திட்டமதிப்பும் தயார் செய்து சமர்ப்பிக்குமாறு பணித்திருக்கிறது அன்றைய ஆங்கிலேய அரசு. அவரால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய திட்டம் 1884ம் ஆண்டு அப்ரூவல் ஆகியிருக்கிறது. 1886ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் நாள் ஆங்கிலேய அரசுக்கும் அன்றைய திருவாங்கூர் மகாராஜாவுக்கும் இடையே முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக 999 வருடம் செல்லுபடியாகும் விதத்தில் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டிருக்கிறது (DAM-999 படத்தின் தலைப்பும் இது சம்மந்தமானதாகவே பார்க்கப்படுகிறது). அதன்படி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிக்கு 8000 ஏக்கரும் அணை அமையும் பகுதிக்கு 100 ஏக்கரும் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான வரியாக ஏக்கருக்கு ரூபாய் ஐந்து வீதம் வருடத்திற்கு ரூபாய் நாற்பதாயிரம் திருவாங்கூர் ராஜாவுக்கு ஆங்கிலேய அரசால் வழங்கப்படவேண்டும் என்பதும் அணையும் அதன் நீரும் முழுக்க முழுக்க ஆங்கிலேய அரசுக்கே சொந்தம் என்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்தாகும்.
1887ம் ஆண்டு மே மாதம் முல்லைப்பெரியாறு அணையின் கட்டுமானம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த அணை 19ம் நூற்றாண்டின் ஆரம்பகால கட்டுமான முறைப்படி சுண்ணாம்புக்கலவையால் கட்டப்பட்டிருக்கிறது. அணை கட்ட ஆரம்பித்த காலத்திலிருந்து தொடர்ந்து பாய்ந்த ஆறுதான் மிகப்பெரிய சவலாய் இருந்திருக்கிறது. கட்டுமானப்பணிக்காக தடுப்பணை கட்டி ஆற்றை திசைதிருப்பியிருக்கிறார்கள். ஆனால் அவ்வப்போது ஏற்பட்ட மழை மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் தடுப்பணை மற்றும் புது கட்டுமானப்பணிகளும் ஆற்றோடு அடித்துச்செல்லப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக ஒரு கட்டத்தில் ஆங்கிலேய அரசு அணைகட்டுமானப்பணிக்கான மூலதனத்தை நிறுத்திக்கொண்டது. ஆனால் தனது பணியின் மீதான அக்கறையினால் பென்னிகுயிக் உடனடியாக தனது தாய்நாடு சென்று தனது மனைவியின் நகைகள் மற்றும் தனது சொத்துக்களை விற்று அந்தப்பணத்தை எடுத்து வந்து முல்லைப்பெரியாறு அணையை கட்டி முடித்திருக்கிறார். (இப்பொழுதும் மதுரையில் பெரும்பாலான கடைகள் மற்றும் வீடுகளில் பென்னிகுயிக்கின் புகைப்படத்தை வைத்து வழிபடுகின்றனர்).
முல்லைப்பெரியாறு அணையானது புவிஈர்ப்பு விசையை அடிப்படையாகக் கொண்ட கிராவிட்டி டேம் வகையைச் சார்ந்தது. அதாவது தனது சுய எடையினால் நீரின் அழுத்தத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அணையின் முன் பக்கமும் பின் பக்கமும் கருங்கல்லினால் கட்டப்பட்டிருக்கிறது. நடுப்புறம் முழுவதும் சுண்ணாம்புக் கலவையினால் ஆன கான்கிரீட்டால் நிரப்பப்பட்டிருக்கிறது. இதே போன்ற வடிவமைப்பைக் கொண்டு இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கும் அணைகள் இந்தியாவில் மிகக்குறைவே. முல்லைப்பெரியாறு அணை 176 அடி உயரமும் 1200 அடி நீளமும் கொண்டது. Crest எனப்படும் அணையின் தலைப்பகுதி 12அடி அகலமும் அடிப்பகுதி 138அடி அகலமும் கொண்டது.
இது ஒரு முக்கிய அணை, அதன் இடப்பக்கம் ஸ்பில்வே எனப்படும் நீர்வெளியேற்றும் வழி மற்றும் வலப்பக்கம் பேபி அணை ஆகியவை உள்ளடங்கியது.
அணையில் தேக்கப்படும் நீரானது முதலில் ஒரு மைல் தூரத்தை வெட்டப்பட்ட ஆழமான கால்வாய் வழியாக கடந்து அதன்பின்னர் 5704அடி தூரத்தை மலையைக்குடைந்து உருவாக்கிய குகைப்பாதை வழியாகக் கடந்து தமிழக எல்லைக்குள்ளான குமுளியில் இருக்கும் ஃபோர்பே டேம்க்கு வந்தடைகிறது.
பின் ராட்சத குழாய்களின் வழியாக 1956ம் ஆண்டு கட்டப்பட்ட பெரியார் நீர்மின் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படும் தண்ணீரானது நீர் மின் உற்பத்திக்கு பிறகு சுருளியாற்றின் வழியாக வைகை ஆற்றை சென்றடைகிறது. இவ்வாறு வைகை ஆற்றை சென்றடையும் நீர்தான் தமிழ்நாட்டின் தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் குடிநீர் மற்றும் விவசாய நீர் ஆதாரம்.
சரி… இதில் கேரளாவுக்கும் நமக்கும் பிரச்சினை எங்கிருந்து முளைத்தது? அங்குதான் விசயமும் விஷமமும் கொட்டிக்கிடக்கிறது. சுதந்திரத்திற்கு பின் ஆங்கிலேய அரசு திருவாங்கூர் சமஸ்தானத்துடன் 999 வருடங்களுக்கு செய்து கொண்ட ஒப்பந்தம் செயலிழந்தது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு 1958லிருந்து முயன்று இறுதியாக 1970ல் அப்போதைய கேரள முதலமைச்சர் அச்சுதமேனனுடன் அந்த ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொண்டது. இந்த புது ஒப்பந்தப்படி ஒரு ஏக்கருக்கு தமிழக அரசு கேரள அரசுக்கு செலுத்த வேண்டிய வரியானது ரூபாய்.முப்பது என்று நிர்ணயிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் முல்லைப்பெரியாறு தண்ணீரை உபயோகித்து தமிழக அரசு உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கும் ஒரு கிலோவாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூபாய்.12 கேரள அரசுக்கு வழங்கப்படவேண்டும் என்றும் ஒப்பந்தமிடப்பட்டு இன்றைய தேதிவரை இதற்கான தொகை தமிழக அரசால் கேரள அரசுக்கு செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. இருப்பினும் இப்போது கேரளா இந்த நீட்டிக்கப்பட்ட ஒப்பந்தத்தையும் செல்லாது என்று முரண்டு பிடித்து அது சம்மந்தமான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இன்றைய பிரச்சினையின் மூலகாரணம் கேரளாவின் மலையாள மனோரமா நாளிதழால் பிள்ளையார் சுழி இடப்பட்டிருக்கிறது. 1976ல் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து 50கி.மீ தூரத்துக்கு கீழே கேரள அரசால் ஆர்ச் வடிவ அணை ஒன்று இடுக்கியில் கட்டப்பட்டிருக்கிறது. இது முல்லைப்பெரியாறு அணையைக் காட்டிலும் எட்டு மடங்கு பெரியது. இதிலிருந்து மின்சாரம் உற்பத்திசெய்யவும் கேரள அரசு திட்டங்கள் நிறைவேற்றியிருக்கிறது. ஆனால் முல்லைப்பெரியாறு அணையின் காரணமாக அதற்கு அடுத்தாற்போல் கீழிருக்கும் இடுக்கி அணைக்கு, கேரள அரசு மின்சாரம் உற்பத்தி செய்யுமளவுக்கு போதுமான நீர் வந்தடையவில்லை. அப்போதுதான் முதன் முதலாக கேரள அரசின் விரோதப்பார்வை முல்லைப்பெரியாறு அணை மீது விழுந்திருக்கிறது. முல்லைப்பெரியாறு அணையை எப்படி முடித்துக்கட்டலாம் என்று கேரள அரசு முயன்று கொண்டிருந்தபோது அவர்களின் முக்கிய நாளிதழான மலையாள மனோரமா முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும் எந்த நேரத்திலும் உடைந்து கேரள மக்கள் இலட்சக்கணக்கில் பலியாகக்கூடும் என்றும் 16-10-1979ல் முதன் முதலில் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிரான பரப்புரையை தொடங்கியிருக்கிறது. அதைத்தொடர்ந்து CWC எனப்படும் மத்திய நீர்வள ஆணைய அமைப்பின் சேர்மன் திருவனந்தபுரத்தில் வைத்து தமிழக மற்றும் கேரள அதிகாரிகளைக் கொண்டு ஒரு கலந்துரையாடல் நடத்தியிருக்கிறார். அந்தக்கூட்டத்தில் அதற்கடுத்த மழைக்காலத்துக்குள் முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்துவது என்பதும், அதுவரை அணையின் நீர்மட்டத்தை ஸ்பில் வே மூலமாக நீரை வெளியேற்றி 136அடியாக வைத்துக்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டு இருதரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
அதற்கு பிறகு 29-04-1980ல் புதுடில்லியில் வைத்து நடத்தப்பட்ட மீட்டிங்கில் அணையை கேபிள் ஆங்கரிங் முறைப்படி பலப்படுத்திய பிறகு நீர்மட்டத்தை 145அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. 25-03-1986ல் CWC அமைப்பால் அனுப்பப்பட்ட முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்தும் திட்டவரையறைகள் தமிழகத்தால் நிறைவேற்றப்பட்டது. கேபிள் ஆங்கரிங் வேலையும் அணையின் முன்புற தாங்கும் பகுதி கான்கிரீட்டும், தலைப்பகுதி கான்கிரீட்டும் அணையை பலப்படுத்திய முக்கிய அம்சங்களாகும். முல்லைப்பெரியாறு அணை சொந்த எடையைக் கொண்டு நீரின் அழுத்தத்தை தாங்கும் வகையைச் சேர்ந்தது என்பதால் முதலில் அணையின் மேல்பகுதியில் 20அடி அகலத்துக்கு 3அடி உயரத்துக்கு கான்கிரீட் தொப்பிபோல போடப்பட்டது. இதன் மூலம் அணையின் எடை மீட்டருக்கு 35டன் வீதம் மொத்த எடை 12000டன் அதிகரித்துள்ளது. அத்தோடு நில்லாமல் பிரீஸ்ட்ரெஸ்டு கான்கிரீட் முறையில் கேபிள் ஆங்கரிங் செய்வதற்காக அணையின் மேல்பகுதியிலிருந்து 4இன்ச் விட்டத்துக்கு அணையின் அடிப்பகுதியில் இருக்கும் பாறைக்குள் 30அடி ஆழம் வரை செல்லுமளவு டிரில்லிங் செய்யப்பட்டு அந்தத்துளையில் 34எண்ணிக்கை கொண்ட 7mm ஸ்டீல் ராடுகளை கட்டாக உட்செலுத்தி அவை 120டன் விசையில் இழுக்கப்பட்டு கான்கிரீட்டால் நிரப்பப்பட்டது. இந்த பிரீஸ்ட்ரெஸ்டு கான்கிரீட்டானது அணையை அடியில் உள்ள பாறைகளுடன் இணைத்து 120டன் விசை வரை தாங்கிப்பிடித்துக்கொள்ளும். இதுபோல மொத்தம் 95 கேபிள் ஆங்கரிங் சீரான இடைவெளியில் செய்யப்பட்டு அணை பலமூட்டப்பட்டது. அதற்கும் மேலாக அணையின் முன் புறத்தில் அதாவது நீர் தேங்கும் பக்கத்திற்கு எதிர்புறத்தில் தாங்கும் அணை என்ற தொழில் நுட்பத்தில் 145அடி உயரம் வரை ஏற்கனவே இருக்கும் அணையுடன் அதைத்தாங்கி பிடிக்கும் வகையில் கான்கிரீட்டால் தாங்குஅணை ஏற்படுத்தப்பட்டது. பழைய அணையும் புதிய தாங்கிப்பிடிக்கும் அணையும் மிகுந்த தொழில்நுட்ப சிரத்தையுடன் இணைக்கப்பட்டு(Proper Construction joints)ஒரே அணை போல செயல்படுமாறு கட்டப்பட்டது இதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும். அத்தோடு நில்லாமல் அணையின் நீர்க்கசிவை ஆராய இரண்டு டிரெயினேஜ் கேலரிகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து ஆராயப்பட்டுவரும் நீர்க்கசிவின் அளவானது அங்கீகரிக்கப்பட்ட வரையறைக்குள்தான் இன்றுவரையிலும் இருக்கிறது.
அணை பலப்படுத்தப்பட்ட பிறகு...
தமிழக அரசு முக்கிய பலமூட்டும் நடவடிக்கைகள் அனைத்தையும் முடித்த பிறகும் கேரள அரசு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கவே இது சம்பந்தமாக தமிழக மற்றும் கேரள உயர்நீதிமன்றங்களில் இருபுறமும் ஏகப்பட்ட வழக்குகள் தொடரப்பட்டு அவையனைத்தும் உச்சநீதிமன்றத்தின் ஒரே பென்ச்சுக்கு மாற்றப்பட்டது. 28-04-2000ல் உச்சநீதிமன்றம் மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு இருமாநில முதல்வர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுமாறு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து 19-05-2000ல் நடந்த இரு மாநில முதல்வர்கள் கூட்டத்தில் அணையின் பலத்தைப்பற்றி ஆராய்ந்து அறிக்கையளிக்க ஒரு பொதுவான குழுவை அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அவ்வாறு அமைக்கப்பட்ட அந்தக்குழு எல்லாவித ஆய்வுகளையும் மேற்கொண்டு 2001ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடி உயரமாக கூட்டிக்கொள்ளலாம் என்றும், எஞ்சிய பராமரிப்புப்பணிகள் அனைத்தும் முடிந்தபிறகு அணையின் நீர்மட்டத்தை 152அடியாக உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் அறிக்கையளித்தது. அதற்குப்பிறகும் கேரள அரசு தொடர்ந்து எதிர்ப்பு காட்டவே மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவாகி பல்வேறு விசாரணைகளுக்குப்பிறகு உச்சநீதிமன்றம் 27-02-2006ம் ஆண்டு அணையின் நீர்மட்டத்தை தமிழகம் 142அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும், எஞ்சிய பராமரிப்புப்பணிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப்பிறகும் பிடிவாதம் காட்டிய கேரளஅரசு உடனே தனது சட்டமன்றத்தை கூட்டி ‘’கேரள நீர்வள பாதுகாப்பு சிறப்புச்சட்டம் 2006’’ என்று ஒன்றை இயற்றி அதற்கு ஆளுநரின் ஒப்புதலையும் பெற்றது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136அடிக்குமேல் உயர்த்தக்கூடாது என்பதும், கேரளாவில் இருக்கும் அணைகளில் பாதுகாப்பில்லாத அணைகள் வரிசையில் முல்லைப்பெரியாறு அணையை முதலிடத்தில் சேர்த்ததும் கேரள அரசு இயற்றிய இந்தச்சட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
இதைக்கண்ட தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகியபோது உச்சநீதிமன்றம் கேரள அரசின் சிறப்புச்சட்டத்தை தடை செய்யாமல் அதற்கு பதிலாக இருமாநில அரசுகளும் இதைப் பேசித்தீர்த்துக் கொள்ளுமாறு கைகழுவியது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற எல்லாவித கூட்டங்களும் கேரளாவின் பிடிவாதத்தால் தோல்வியிலேயே முடிந்தன. இதற்கிடையில் கேரள அரசு முல்லைப்பெரியாறு அணைக்குப்பதிலாக புதிதாக ஒரு அணை கட்ட அனைத்துவித முயற்சிகளையும் தொடங்கியது. 31-07-2009ல் நடந்த இருமாதில அதிகாரிகள் கூட்டத்தில் கேரள அரசு சார்பாக பங்கேற்ற அதிகாரிகள் புதிய அணை கட்டியபிறகும் இப்போதிருக்கும் ஒப்பந்தம் செல்லுபடியாகும் விதத்தில் அதே வரைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படும் என்று உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து தமிழக அதிகாரிகள் கேரள அரசு புதிய அணை பற்றிய திட்டத்தை சமர்ப்பித்தால் அதை பரீசீலிப்பதாக தெரிவித்தனர். அதன் பின்னர் இந்த சந்திப்பின் Minutes of meeting இரு மாநிலங்களின் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டபோது கேரள அரசு மீண்டும் பல்டியடித்தது. புதிய அணை கட்டினாலும் தமிழ்நாட்டுக்குத்தண்ணீர் தருவோம்… ஆனால் பழைய ஒப்பந்தமும் அதன் வரையறைகளும் செல்லுபடியாகாது என்று ஆட்சேபித்தது. மொத்தத்தில் புதிய அணை கட்டி மொத்தத்தண்ணீரையும் தங்களது இடுக்கி அணைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்பதுதான் கேரள அரசின் கனவுத்திட்டம்.
சரி… சிறிது சிறிதாக புகைந்து கொண்டிருந்த இந்தப்பிரச்சினை திடீரென்று விஸ்வரூபம் எடுக்கக்காரணமென்ன?
டேம்-999 சினிமாவும், கேரள அரசும், கேரள மீடியாக்களும்தான் முக்கிய காரணம். 1979லிருந்தே அணை உடையப்போவதாக பரப்பிக்கொண்டிருந்த கேரள அரசு, ஏதோ விடிந்தால் டேம் உடையப்போவது போல திடீரென நடத்திய அரசியல் காய்நகர்த்தலும் அதே நேரத்தில் நடந்த டேம்-999 படத்தின் ரிலீசும், அத்தோடு கேரள மீடியாக்களும் கைகோர்த்ததில் கேரளத்தின் சாதாரண பொதுமக்கள் ஒவ்வொருவரும் தமிழகத்தை தங்களது உயிரோடு விளையாடும் வில்லனாய் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். போதாக்குறைக்கு மலையாளிகள் ஒவ்வொருவரும் இணையதளத்தில் பரப்பிய கிராபிக்ஸ் புகைப்படங்களும், முல்லைப்பெரியாறு அணை உடைவது போன்ற வீடியோக்களும் சாதாரண மலையாள மக்களிடம் பெரும் பீதியையும் பாதுகாப்பற்ற மனநிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அரசியல் ஸ்டண்ட்டுகாக கேரள பா.ஜ.க.வினர் சிலர் சம்மட்டியை எடுத்துக்கொண்டு முல்லைப்பெரியாறு அணையை உடைக்கப்போவதாக தடையை மீறி அணைக்குள் நுழைந்தது அனுமார் வாலில் தீவைத்த கதையாய் மாறி நிற்கிறது. முதன் முதலில் கேரளாவில்தான் தமிழர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர். அதுவும் சில கேரள அரசியல் கட்சிகள்தான் செய்திருக்கின்றன.
அதைத்தொடர்ந்து தமிழகத்தில் நீண்ட காலத்துக்குப்பிறகு மெல்ல மெல்ல மக்கள் எழுச்சி மீண்டிருப்பது இந்த முல்லைப்பெரியாறு விஷயத்தில்தான் என்பது நிச்சயமாய் ஒரு தமிழனாய் சந்தோஷப்படவேண்டிய விஷயமாகும். பழைய பழம் தின்று கொட்டைபோட்ட ஆட்சியாளராய் இருந்திருந்தால் மக்கள் எழுச்சியை தனது ராஜதந்திரத்தினால் எப்போதோ மண்ணோடு மண்ணாய் மக்கிப்போகச் செய்து தமிழர்களை மீண்டும் ஒரு சொரணை கெட்ட ஜென்மமாய் அறிமுகப்படுத்தியிருப்பார். அந்த விதத்தில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மக்கள் எழுச்சியை மட்டுப்படுத்தாத தற்போதைய முதல்வர் ‘’ஜெ’’வுக்கு நிச்சயமாய் ஒரு ஜே போடலாம்.
கேரளாவில் தமிழ்ப்பெண்கள் பாலியல் ரீதியாக அவமானப்படுத்தப்பட்டதாக வந்த செய்திதான் முதன் முதலில் தமிழகத்தில் மலையாளிகள் மீதான தாக்குதலுக்கு ஆரம்ப விதையானது. இனியும் பொறுத்திருந்தால் இலங்கை விஷயத்தில் இறுதியில் ஏமாந்தது போல இதிலும் தமிழர்கள் வேரறுக்கப்படுவோம் என்று இங்கொன்றும் அங்கொன்றுமாய் தமிழர்கள் களத்தில் இறங்கினர். அதற்கு எதிர்வினையாய் கேரளாவிலும் தமிழர்கள் மீதான தாக்குதல் அதிகரித்ததும், தொடர்ந்து கேரள அரசு இந்த நிமிடம் வரை முல்லைப்பெரியாறு அணையை உடைத்து புதிய அணை கட்டியே தீருவோம் என்று கொக்கரிப்பதும் தமிழகத்தில் முல்லைப்பெரியாறு அணையை நம்பியிருக்கும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. இப்போது தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் சாலைகள் அனைத்தும் தமிழர்களால் மறிக்கப்படுகிறது.
முல்லைப்பெரியாறு அணை உடைக்கப்பட்டால் அதை நம்பியிருக்கும் நான்கு மாவட்ட தமிழ்மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு அவர்கள் வாழ்வு பாலைவனமாகிப்போகும் என்பது மட்டும் மறுக்க முடியாத நிஜமே. அதே நேரத்தில் முல்லைப்பெரியாறு அணை உடைந்தால் மலையாளிகள் 35 இலட்சம் பேர் வெள்ளத்தில் பலியாவார்கள் என்று கேரள பொதுஜனத்திடம் நிலவும் அச்சத்தையும் அவர்கள் இடத்திலிருந்து பார்த்தால் தவறாய் தெரியாது. அவர்களுக்கு அணையின் பாதுகாப்புத்தன்மை குறித்த உண்மை நிலையை அவர்களது அரசாங்கம் எடுத்துரைக்காமல், மேலும் மேலும் அவர்களுடைய பயத்தின் அளவைக்கூட்டுவது போலவே கேரள அரசின் நடவடிக்கைகள் அமைவதே மலையாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு பக்கம் 65 இலட்சம் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்துக்காக போராடும் தமிழர்கள். மற்றொரு பக்கம் 35 இலட்சம் மலையாள மக்களின் உயிருக்காக போராடும் மலையாளிகள். இதற்கு நடுவில் மக்களின் உணர்ச்சிகளை மேலும் தூண்டும் இருபுறத்து அரசியல் கட்சிகள் என எல்லாம் சேர்ந்து தீராப்பகையாக உருவெடுத்து நிற்கிறது. ஒன்று மட்டும் நிச்சயம்… என்ன செய்தாலும் சரி… இனி தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் ஒட்டப்போவதில்லை.
என்ன நடந்தாலும் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மத்திய அரசை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எங்கேயோ ஆஸ்திரேலியாவில் சிங்குகள் தங்களுக்குள் அடித்துக்கொண்டால் நடுராத்திரியில் எழுந்து பிரதமர் அலுவலகத்துக்கு ஓடும் மாண்புமிகு மன்மோகன் சிங், தெலுங்கானா பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினை, லோக்பால் விஷயம், முல்லைப்பெரியாறு பிரச்சினை என்று கொழுந்து விட்டெரியும் விஷயங்களிலெல்லாம் குறட்டை விட்டுத்தூங்குவதே வாடிக்கையாகிவிட்டது. முல்லைப்பெரியாறு பிரச்சினை பற்றி பெரிதாய் ஏதும் அலட்டிக்கொள்ளாமல் கூலாக ரஷ்யாவுக்குப் பறந்து விட்டார் மாண்புமிகு மன்மோகன். இப்போது தமிழகத்தில் மலையாளிகளின் சொத்துக்கள் அடித்து நொறுக்கப்படுவதும், கேரளத்திலிருந்து தமிழர்கள் அடித்து வெளியேற்றப்படுவதும் அரசாங்கங்களால் தடுக்க இயலாத சென்சிட்டிவ் விஷயமாய் அன்றாட நிகழ்வாய் கொதித்துக்கொண்டிருக்கிறது.
இனி அணையை தமிழகம் பராமரிப்பது என்பதோ.. இல்லை கேரளா முல்லைப்பெரியாறு அணையை உடைப்பதென்பதோ… இரண்டுமே முடியாத சமாச்சாரம்தான். அதேபோல அணையின் நீர்மட்டத்தை தமிழகம் உயர்த்த நினைப்பதும் கேரள மக்களால் இனி ஒத்துக்கொள்ளப்படாத விஷயமே.
‘’முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பானதே. உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டதால் அதை நிறைவேற்றியே ஆகவேண்டும். முப்பது ஆண்டுகாலமாய் அணை உடையப்போவதாய் கேரள அரசு கூறிவரும் நிலையிலும் அணை இன்னமும் உடையாமல் இருப்பதே கேரள அரசு கூறுவது அப்பட்டமான பொய் என்பதற்கான சாட்சி. அது மட்டுமில்லாமல் கேரள அரசு கூறுவது போல அணை உடைந்தாலும் அந்தத் தண்ணீர் அதற்கு கீழ்புறம் இருக்கும் இடுக்கி அணையால் தடுத்து நிறுத்தப்படுமேயொழிய கேரள அரசு கூறுவது போல 35 இலட்சம் மக்கள் இறப்பார்கள் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதையே. கேரள அரசு தனது இடுக்கி அணைக்கு மின்சாரம் தயாரிக்க தேவையான தண்ணீரை நிரப்பிக்கொள்வதற்காக கேரள மக்களிடையே முல்லைப்பெரியாறு அணையின் பலம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பி பிரச்சினையை பெரிதாக்கிக்கொண்டிருக்கிறது’’ என்பதுதான் தமிழக மக்கள் முன்வைக்கும் முக்கிய வாதங்கள்.
‘’முல்லைப்பெரியாறு அணை உடைந்தால் அதிலிருந்து வேகமாய் வெளியேறும் நீரின் அழுத்தத்தால் இடுக்கி அணையும் உடைந்து கேரளாவுக்கு மிகப்பெரிய பேரழிவு ஏற்படும். அதுமட்டுமில்லாமல் முல்லைப்பெரியாறு அணை வெறும் முப்பது ஆண்டுகால ஆயுளுக்கான வடிவமைப்பேயொழிய அது 999வருடம் நிலைத்து நிற்கும் என்பதெல்லாம் கற்பனைக்கதையே. முழுதாய் பலமிழந்த ஒரு அணையை வெறுமனே சிமெண்ட் கலவையை பூசி வர்ணமடித்துவிடுவதால் மட்டும் அது பலமானதாக மாறிவிடாது.நாங்கள் தமிழர்களுக்கு தண்ணீர் தரமாட்டோம் என்று கூறவில்லை. எங்கள் உயிரோடு விளையாடும் முல்லைப்பெரியாறு அணையை உடைத்துவிட்டு புதிய அணையை கட்டி அப்போதும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருகிறோம் என்றுதான் கூறுகிறோம். ஆனாலும் தமிழர்கள்தான் பிடிவாதமாய் எங்கள் உயிரோடு விளையாடுகிறார்கள்’’ என்பதுதான் கேரள மக்களின் வாதங்கள்.
சரி… முல்லைப்பெரியாறு பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?...
கீழ்க்காணும் பொதுவான தீர்வுகள் முல்லைப்பெரியாறு பிரச்சினைக்கும் பொருந்தக்கூடியதே.
முல்லைப்பெரியாறு அணை மட்டுமில்லாமல், இந்தியாவில் உள்ள அனைத்து அணைகளும், ஆறுகளும் தேசியமயமாக்கப்படவேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்துக்கான நீர் பங்கீடு… சம்பந்தப்பட்ட அணை (அ) ஆற்று நீரை உபயோகிக்கும் மக்கள் தொகை மற்றும் விவசாய நிலத்தின் பரப்பளவு ஆகியவற்றை மட்டும் அடிப்படையாகக்கொண்டு அதற்கேற்ப வரையறுக்கப்பட்டு, சட்டமாக்கப்பட்டு அதுவும் மத்திய அரசின் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் இயக்கப்படவேண்டும். (மற்ற திட்டங்களை கணக்கில் கொள்ளாமல் மக்களின் தேவை+விவசாயத்தேவை இரண்டுக்கும் தகுந்தாற்போல் பங்கிடப்படுவதால் பொதுமக்களிடையேயான மனவேறுபாடு களையப்படும். சட்டமாக்கப்பட்டு செயல்படுத்தப்படுவதால் மத்தியில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் மாநிலங்களுக்கிடையே பேதம் பார்த்து செயல்படமுடியாது.)
மத்திய அரசின் நீர்வள ஆணையம் தகுந்த சர்வேக்களையும், ஆய்வுகளையும் மேற்கொண்டு இந்தியா முழுவதிலும் உள்ள அணைகளின் பாதுகாப்பு குறித்து (Periodical monitoring) தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். தேவைப்படும் பராமரிப்பு பணிகளையும் மத்திய அரசே நிறைவேற்றவேண்டும். பாதுகாப்பில்லாத மற்றும் பலமிழந்த அணைகளை இடிப்பதும், அதற்கான புதிய அணையை கட்டி மக்கள் தொகை மற்றும் விவசாய நிலப்பரப்பின் அடிப்படையில் நீரைப்பங்கிட்டு அளிப்பதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே சட்டரீதியாக நடைமுறைப்படுத்துதல் வேண்டும். (இதன்படி தேவைப்பட்டால் முல்லைப்பெரியாறு அணையை இடித்து மலையாளிகளின் அச்சத்தை போக்கியும், புதிய அணை கட்டி தமிழகத்தின் மக்களுக்கும், விவசாயத்துக்கும் தேவையான நீரை வரையறுக்கப்பட்ட சட்டப்படி வழங்கி தமிழர்களின் பிரச்சினையை தீர்த்தும் நடவடிக்கை எடுக்கலாம்)
இது மட்டுமில்லாமல் நீண்டகால நடவடிக்கையாக மழைக்காலத்தில் வீணாய் கடலில் கலக்கும் வெள்ளநீரை இன்னும் சிறந்த முறையில் சேமிக்க, தேவைப்பட்ட ஆய்வுகளையும், சர்வேக்களையும் நடத்தி நாடு முழுவதும் புதிய அணைகளையும், தடுப்பணைகளையும் கட்ட மத்திய அரசு தனது ஒவ்வொரு வருட பட்ஜெட்டிலும் தகுந்த நிதி ஒதுக்கீடு செய்து நடைமுறைப்படுத்துதல் வேண்டும்.
தேசிய நதிநீர் இணைப்புத்திட்டமும் முழுவீச்சில் மத்திய அரசால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படவேண்டும்.
மத்திய அரசு மக்களுக்காக செயல்படாமல், மண்ணாங்கட்டித்தனமாய் அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் வரையில் முல்லைப்பெரியாறு அணையின் இடியாப்பச்சிக்கல்கள் ஒருபோதும் தீர்க்கப்படாததோடு, இரு மாநிலங்களுக்கிடையேயான மிகப்பெரிய மக்கள் கலவரமாய் எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடும்…
தமிழர்களே நமது உரிமையை ஒருபோதும் விட்டுத்தரவேண்டாம். அதே நேரத்தில் அணை உடைந்தால் ஏற்படும் உயிரிழப்புக்கு பயப்படும் மலையாளிகளைப்பற்றியும் கொஞ்சம் சிந்தியுங்கள். நிஜமோ இல்லையோ… நம்மிடம் யாராவது வந்து ஒரு அணை உடையப்போகிறது… நீங்கள் உங்கள் குடும்பம் குழந்தைகளோடு ஜலசமாதி ஆகப்போகிறீர்கள் என்று செய்தி பரப்பினால் நமது மனநிலை எப்படியிருக்கும்?...
மலையாளிகளே உங்கள் உயிரும், பாதுகாப்பும் நிச்சயம் முக்கியம்தான். அதே நேரத்தில் குடிநீர் மற்றும் விவசாய வாழ்வாதாரங்களுக்கு முல்லைப்பெரியாறு அணையையே நம்பியிருக்கும் 65இலட்சம் தமிழர்களின் நிலைமையையும் கொஞ்சம் சிந்தியுங்கள்… புது அணையை கட்டினாலும் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமாறு எந்தவித எழுத்துப்பூர்வ உறுதிமொழிகளும் இல்லாத பட்சத்தில் தனது நிலத்தை பாலைவனமாக்க எந்தவொரு மனிதனும் எப்படி சம்மதிப்பான்?...
தமிழக, கேரள மக்களே… நமக்கான தீர்வு நம்மிடம்தான் இருக்கிறது. அதை விடுத்து வெறுமனே அரசியல் காய் நகர்த்தும் கேவலமானவர்களிடம் சிக்கி நமது சகோதரத்தன்மையை இழக்கவேண்டாம்… சிந்தியுங்கள்!!!
தொடர்ந்து பேசலாம்…
Labels:
சமூகம்,
தகவல் பெட்டகம்,
வரலாறு
Subscribe to:
Post Comments (Atom)
A WONDERFUL ARTICLE. SAMY
ReplyDeleteஆழ்ந்த சிந்தனை..இத்தனை விவரங்களை உங்கள் பதிவில்தான் தெரிந்துகொண்டேன் பாரதி கூறியதுபோல ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு! அனைவரும் தாழ்வின்றி வாழ ஒற்றுமை நிலைக்க நல்வழி பிறக்க வேண்டுகிறேன்.
ReplyDeleteA balanced approach.
ReplyDeleteகருணாநிதி ஆட்சியில் இருந்திருந்தால் பிரச்சினையை எப்படி திசை திருப்பியிருப்பார் என்ற உங்கள் கருத்து சரியே.கூடவே தமிழக சட்டசபையில் முல்லைப்பெரியாறு தீர்மானத்திற்கு இணங்கிய கருத்தோடு செயல்படும் தி.மு.கவின் நிலைப்பாட்டை வரவேற்போம்.இதுக்குப் போய் அலட்டிக்கலாமா என்ற மன்மோகனின் செயலும் கண்டிக்கத் தக்கதே.பிரச்சினையை தீர்க்காதே!ஆறப்போடு என்ற காங்கிரஸின் நிலைப்பாடு நரசிம்மராவ் காலம் தொட்டு தொடர்கிறது.இதுபோன்ற விசயங்களில் தடாலடியாக முடிவெடுப்பதால் மட்டுமே இந்திராகாந்தி வித்தியாசப்படுகிறார்.
படங்கள் சொல்பவைகள் பொய்யுரையா,பிரச்சாரமா என்பது மனிதன் தமிழனா,மலையாளியா என்ற வட்டத்தைப் பொறுத்தது.
பகிர்வுக்கு நன்றி.
///புது அணையை கட்டினாலும் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமாறு எந்தவித எழுத்துப்பூர்வ உறுதிமொழிகளும் இல்லாத பட்சத்தில் தனது நிலத்தை பாலைவனமாக்க எந்தவொரு மனிதனும் எப்படி சம்மதிப்பான்?../// இந்த அணை கட்டியபின்தான் தேக்கடி ஏரி உருவாக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்த அணையின் சிறப்பே அதன் இருப்பிடத்தை பொறுத்துத்தான் சிறப்படைகிறது.ஆகவே ஒரு பத்தடி கீழே இறக்கி கட்டப் பட்டாலும் தமிழகத்துக்குப் பயன்படாது.
ReplyDeletethe story of the dam made the kerala people more horror.......if like this......think about the people who are living in the area of near by sea. and the construction near by sea....... also over the sea..........everything for the vote bank.......and the byelection to prove their politics not the dam .........ok, if i agreed ur statement why are u wasting 600 crore rupees for a new dam construction........spend 100 crore rupees for strengthening of the existing mullai periyar dam.......
ReplyDeletenice story... it is a fact... I also written a kavithai about mullai periyaar.. please read on my tamilkavithaigal blog www.rishvan.com
ReplyDelete