SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Friday, November 4, 2011

சென்னை நம்மை போடா வெண்ணை என்கிறதா?...!!!


மழை தனது வேலையை செவ்வனே தொடங்கிவிட்டது. தேனாறு ஓடும்… பாலாறு ஓடும் என்று வாக்குறுதிகள் வீசப்பட்ட உள்ளாட்சி தேர்தலையெல்லாம் மறக்குமளவுக்கு எங்கு பார்த்தாலும் தேங்கிய மழைநீரும் சாக்கடையும் நாறிக்கொண்டிருக்கிறது சென்னை மாநகரத்தில். பிட்டுபிட்டாய் ரோட்டை ஒட்டு போடும் ஒப்பந்தக்காரர்களெல்லாம் உளம் மகிழும் அளவுக்கு சாலைகள் சிதைந்து கிடக்கின்றன. இன்னும் கொஞ்சநாளில் அங்கங்கே சாலைகளில் நாற்று நடும் போராட்டங்கள் அரங்கேறும். துரைசாமி விடிவு தருவார் என்று நம்பும் அப்பாவி மக்களுக்கு ஒருபோதும் புரியாது… இங்கே சுப்பிரமணிகளும் துரைசாமிகளும் வேண்டுமானால் மாறலாம்… ஆனால் சென்னையில் ஒரு மண்ணும் மாறப்போவதில்லை என்பது.

ஒரே தடவையில் சாலைகளை ஒழுங்காக போட்டுவிட்டால் கட்சிக்காரர்களும், ஒப்பந்தக்காரர்களும், இவர்களுக்கு கூஜா தூக்கும் அரசு அதிகாரிகளும் அவ்வப்போது எப்படி சம்பாதிக்க இயலும்?!. எளிதாகப்புரியும் வகையில் சொல்லவேண்டுமானால் தங்க முட்டையிடும் வாத்தை யாராவது வயிற்றைக் கிழிப்பார்களா?...

என்ன ஒரே வயித்தெரிச்சல் என்றால் இந்தப் புறம்போக்குகள் சம்பாதிக்க தரமற்ற சாலைகள் நமது வரிப்பணத்தில் தாரைவார்க்கப்படுகிறது. அட... அதாவது பரவாயில்லை… நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கி உபயோகப்படுத்தும் நமது காரும் பைக்கும் இந்த குண்டும் குழியுமான சாலைகளில் சிக்கி படும் பாடிருக்கிறதே… அடப்பாவிகளா… எங்க வயித்தெரிச்சல் நிச்சயம் உங்களை சும்மாவிடாதுடான்னு புலம்புறதைத்தவிர வேறென்ன செய்யமுடியும்னு தெரியலை!

இது ஒருபுறம் என்றால்… மழைநேரத்தில் சாலைகள் பல்லைக் காமித்து விடுவதில் சென்னை முழுவதும் எந்தப் பாகுபாடுமின்றி டிராபிக் நெருக்கடியில் சிக்கி மூச்சுத் திணறும் அவலமிருக்கிறதே… எந்த சுவற்றில் போய் முட்டிக்கொள்வதோ தெரியவில்லை. போகிற போக்கைப்பார்த்தால் காலை 9.30மணிக்கு ஆபீசுக்கு செல்ல வேண்டுமானால் வீட்டிலிருந்து அதிகாலை 5 மணிக்கே கிளம்பினால்தான் முடியும் என்ற நிலைமை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏற்கனவே மழையில் தரமில்லாத சாலைகள் சேதாரப்பட்டுக்கிடக்கும்போது மேலும் மேலும் உண்டாகும் டிராபிக்நெருக்கடியால் சாலைகள் சுத்தமாய் செயலிழக்கிறது.

எப்பொழுது சாலைகள் சேதப்படும்போது தரமில்லாத சாலையை அங்கீகரித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் தண்டிக்கப்படுவோம் என்று பயப்படுமளவுக்கு சட்டங்களோ வரைமுறைகளோ வகுக்கப்படுகிறதோ அப்போதுதான் இதற்கு விடிவு கிடைக்கும். அதுவரையிலும் தரமில்லாத சாலைகள் சேதமடையும்போது அதை வருமானம் வரும் வழியாக மட்டுமே பார்த்து சந்தோஷப்படும் அதிகாரிகளை யாரும் எதுவும் செய்வதற்கில்லைதான்.

சமீபகாலமாய் சென்னையில் நான் கவனித்த மற்றுமொரு முக்கிய விஷயம்… பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள். பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கென ஏகப்பட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தும், எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு விதவிதமான வாகனங்களில் எமனுக்குச் சமமாய் குழந்தைகளைச் சுமந்து செல்லும் வாகனங்களைப் பார்த்தவுடன்தான் இந்தக்கட்டுரையின் தலைப்பே என் மனதில் தோன்றியது.

விதவிதமான வண்ணங்களில் விதவிதமான வேன்கள். இதில் கொடுமை என்னவென்றால்… இந்த வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் அனைவருமே வாயில் பான்பராக்கை அடக்கிக்கொண்டு பருவத்தில் திரியும் பொறுக்கிப்பயல்களே. ஒருசில வேன்களில் கதவை மூடாததோடு படிக்கட்டிலும் குழந்தைகள் அமர்ந்து சென்றதை பார்க்கும்போது யாரைக் குறை சொல்வதென்றே தெரியவில்லை.

பள்ளிவாகனங்களுக்கென்ற தனிப்பட்ட விதிமுறைகளை மீறிச்செல்லும் வாகனங்களை கண்டுகொள்ளாமல் வருகிற போகிற லாரிகளிடமெல்லாம் சிக்னலுக்கு சிக்னல் பத்தும் இருபதுமாய் பிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் போக்குவரத்து போலீசாரை குறை சொல்வதா?...

தங்கள் பிள்ளைகளின் உயிரைப்பற்றி துளியளவும் பிரக்ஞையின்றி எதுவானால் என்னவென்று ஏதோவொரு வாகனத்தில் பிஞ்சுகளை ஏற்றி அனுப்பும் புத்திகெட்ட பெற்றோர்களைக் குறை சொல்வதா?...

குழந்தைகளின் உயிரையும் பாதுகாப்பையும் பற்றி துளியளவும் அக்கறையின்றி ஏதோவொரு வாகனத்தில் குழந்தைகள் குப்பைகள் போல வந்திறங்கும் அவலத்தை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகங்களைக் குறை சொல்வதா?...

இல்லை… கும்பகோணம் தீவிபத்து, கன்னியாகுமரி நாகர்கோவிலில் பள்ளி வாகனம் குளத்துக்குள் பாய்ந்த விபத்து, இங்கொன்றும் அங்கொன்றுமாய் நடக்கும் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் விபத்துக்கள் என்று எதையும் கண்டுகொள்ளாமல், எந்த தனியார் பள்ளி நிர்வாகத்திடம் எவ்வளவு லஞ்சம் வாங்கலாம் என்று வெட்கம் கெட்டுத் திரியும் கல்வித்துறை அதிகாரிகளைக் குறை சொல்வதா?...

இவர்களில் யாருக்குமே மனசாட்சி என்று ஒன்று கிடையவே கிடையாதா?... பணம் கிடைக்குமென்றால் என்னவேண்டுமானாலும் செய்வார்களா? அட, புறம்போக்குகளா… வேறு எந்த துறையிலும், எதற்காக வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் லஞ்சம் வாங்கி உங்களுக்கு வாய்க்கரிசி போட்டுக்கொள்ளுங்கள். ஆனால் தயவுசெய்து இப்படி பள்ளி செல்லும் பிஞ்சுகளின் உயிரோடு உங்கள் லஞ்ச விளையாட்டை விளையாடாதீர்கள்.

அடுத்தது… சென்னை தியாகராயநகரில் விதிமுறைகளை மீறிக்கட்டப்பட்ட வணிக வளாகங்களுக்கு சீல்வைக்கப்பட்ட விவகாரம்… அரசு அதிகாரிகள் போல் சட்டதிட்டங்களை காக்கும் நோக்கில் செயல்படாமல் பெரும் முதலாளிகளின் அல்லக்கைகள் போல செயல்பட்டவர்களால்தான் இந்தக்கட்டிடங்கள் உயர்ந்து நிற்கின்றன என்பதுதான் நிர்க்கதியான நிஜம். சைதை துரைசாமியின் அதிரடி நடவடிக்கை என்றோ… அ.தி.மு.க அரசின் நீதி, நேர்மை,நியாயம் என்றோ இந்த சீல்வைப்பு விவகாரத்தை யாரும் தயவுசெய்து தவறாய் புரிந்துகொள்ளவேண்டாம். டிராபிக் ராமசாமியின் பொதுநலவழக்கின் விளைவாய் நிகழ்ந்ததே இந்த சீல்வைப்பு வைபோகம்.
ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்ட கதையாய் இப்போது இந்தக்கடைகளின் முதலாளிகள் தங்கள் கடைகளில் வேலைபார்க்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்வைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் தங்கள் கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கின்றனர். உண்மையிலேயே உங்கள் ஊழியர்களின் மேல் உங்களுக்கு அக்கறை இருந்திருந்தால் உங்கள் கடைகளை கட்டும்போதே ‘’அய்யோ… நாளைக்கு திடீரென கடைக்கு சீல் வைக்கப்பட்டால் நமது ஊழியர்களின் வாழ்வு என்னவாகும்’’ என்று எண்ணிப்பார்த்து விதிமுறைகளை மீறாமல் கட்டியிருக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு இப்போது வந்து முதலைக்கண்ணீர் வடிப்பது உங்களுக்கே அசிங்கமாய்த்தெரியவில்லை?...

சரி… சீல் வைத்துவிட்டதால் மட்டும் இந்தக்கடைகளை இடித்துவிடுவார்கள் என்று நம்பமுடியுமா? அப்படி நம்பினால் நம்மைவிட இ.வா இந்த 21ம் நூற்றாண்டில் வேறு யாரும் இருக்கமுடியாது!. அ.தி.மு.க அரசின் உண்மை நிலைப்பாட்டை இந்த ஒரு விஷயத்திலேயே புரிந்துகொள்ளும் வாய்ப்பு மக்களாகிய நமக்கு இருக்கிறது. இது பண முதலைகளுக்கு ஆதரவளிக்கும் ஆட்சியா? இல்லை… மக்களுக்கான ஆட்சியா என்பதை இந்த விவகாரத்தின் முடிவைப் பொறுத்துத் தெரிந்து கொள்ளலாம். இந்தக்கடைகள் எந்தப் பிரச்சினையுமின்றி மீண்டும் திறக்கப்பட்டால் ‘’நீ கவனிச்சது இதுக்கு முன்னாடி இந்த சீட்டுல இருந்தவனைத்தான், இப்போ புதுசா வந்த என்னையும் கவனிக்கனும்ல’’ன்னு ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வரும் டயலாக்கை நாமெல்லாம் நியாபகப்படுத்திக்கலாம்.

இல்லை… ஒருவேளை சீல் வைக்கப்பட்ட இந்தக்கட்டிடங்கள் விதிமுறைகளின் படி இடிக்கப்பட்டால்… அப்போதும் சில கேள்விகள் விடைகேட்டுத் தொங்கிக்கொண்டுதானிருக்கும்…

சரி… விதிமுறைகளை மீறிக்கட்டியதாக இப்போது சீல் வைக்கப்பட்டு இடிக்கப்படுமானால்… விதிமுறைகளை மீறிக்கட்ட இவர்களுக்கு அனுமதி கொடுத்த அல்லக்கைகள் யார் யார்?... விதிமுறைகளை மீறிக்கட்டியபிறகும் கண்டு கொள்ளாமல் விட்ட அல்லக்கைகள் யார் யார்?... விதிமுறைகளை மீறிக்கட்டப்பட்ட கட்டிடம் இத்தனை நாளாய் இயங்கும் வகையில் அனுமதியளித்த, ஆதரவளித்த அல்லக்கைகள் யார் யார்?... இந்த விவகாரத்தில் இப்படி விதவிதமான கேள்விகளுடன் சம்பந்தப்படும் அரசு அதிகாரிகள் என்ற பெயரிலிருக்கும் அல்லக்கைகளுக்கு தண்டனைகள் வழங்கப்படுமா? அப்படி வழங்கப்படுமானால் என்ன தண்டனை?... இது போன்ற விவகாரங்கள் தொடர்ந்து நடைபெறாமல் தடுக்க அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? சீல் வைக்கப்பட்ட கடைகள் மட்டுமின்றி சென்னை மாநகரம் முழுவதும் வியாபித்திருக்கும் பணமுதலைகளின் ஆக்கிரமிப்புகளின் மீதும், விதிமுறைகளை மீறிக்கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களின் மீதும் கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படுமா?...

விவேக் காமெடியில் வருவதைப் போல சென்னை நம்மை போடா வெண்ணை எனும் பட்சத்தில் எதைப்பற்றியும் பிரக்ஞையின்றி வேலையைப் பார்த்துக்கொண்டு திரியலாம். ஆனால் இந்த லஞ்ச லாவண்ய ஊழல் சாம்ராஜ்யத்தில் நமது கேள்விகளால் ஏதேனும் விழிப்புணர்வு உண்டாகுமானால் விடையின்றிப் போனாலும் பரவாயில்லையென்று கேள்விகளைத் தொடர்ந்து கொண்டேயிருப்போம்…

தொடர்ந்து பேசலாம்…!

4 comments:

 1. இந்த லட்சணத்தில் வியாபாரிகள் சங்கத் தலைவர், இதே போல எல்லாக் கடைகளையும் இடிக்கப் போகிறார்களாம். அதனால் தமிழகத்தில் எல்லா வியாபாரிகளும் ஒன்று சேருங்கள் என்று அறைகூவல் விடுவதைப் பார்க்கும்போது ஓங்கி அறையலாம் போலத் தோன்றுகிறது.

  ReplyDelete
 2. சென்னை மட்டுமல்ல, நம் ஒட்டுமொத்த அரசு எந்திரமும் நம்மை போடா வெண்ணை என்றுதான் சொல்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது... ”பெட்ரோல் விலை ரூ1.80 உயர்வு”

  பகிர்வுக்கு மிக்க நன்றி...

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 3. உயர் நீதிமன்றம் இந்த விஷயத்தில் கொஞ்சம் வேகமாக இருப்பது போல் தெரிந்தாலும் உண்மை என்ன என்பது போக போக தான் தெரியும்.. cmda வில் இது வரை இருந்த உயர் அதிகாரிகள் அனைவருக்கும் உங்கள் மீது என் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என்று நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது... பொறுத்திருந்து வேடிக்கை பார்ப்போம்.. அது வரை ரௌத்திரம் பழகுவோம்

  ReplyDelete
 4. உங்கள் பதிவு உங்களுக்கு இந்த சமூகத்தின் மீது வைத்திருக்கும் அளவற்ற பற்றை காட்டுகிறது பாரட்டுகள் ஆனால் உளப்பூர்வமான மக்களுக்கான உள்கட்டமைப்பை மக்களின் தேவையை நிறைவேற்றுகிற வேலையை அரசுகள் செய்ய வேண்டுமானால் உண்மையில் மக்கள் தவறுகளுக்கு அநீதிக்கு எதிராக கூட வேண்டும் என்ற ஒரு உயர்ந்த தாக்கத்தை உண்டாக்கு கிறது இந்த இப்படிப்பட்ட தன்னலமில்லா உயரிக கருத்துகள் இந்த சமூகம் வரவேற்க வேண்டும் பரட்ட வேண்டும் பாராட்டுகள் நன்றி .

  ReplyDelete