SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Sunday, November 27, 2011

எங்கே போகிறது இந்தியநாடு? - சில்லறை வர்த்தகத்திலும் உலகமயமாக்கலா?...

ஏற்கனவே கோமாளிகளின் கூடாரமாய் கூடிக் கும்மியடித்துக் கொண்டிருக்கும் மத்திய காங்கிரஸ் ஆட்சியில் புதிதாய் ஒரு அதிமேதாவித்தன முடிவை அறிவித்திருக்கிறார்கள்.

‘’சில்லறை வர்த்தகத்தில் அந்நியமுதலீடு’’….

இதுவரை நாறிக்கொண்டிருக்கும் நடந்த ஊழல்கள் போதாதென்று அடுத்து எங்கே ஆட்டையைப் போடலாம்?... எவரிடம் நாட்டை அடகு வைத்து பெட்டியை நிரப்பிக்கொள்ளலாம்?... என்று ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ என்னவோ தெரியவில்லை.

நாட்டின் பொருளாதாரத்தை கனவிலும் நினைக்காத அளவுக்கு மேம்படுத்தலாம்… கறுப்புப்பணத்தை மீட்டுக்கொண்டு வாருங்கள் என்றால் அதிமேதாவி நிதி அமைச்சர் ஆயிரத்தெட்டு முனகல்களை வெட்கம் இல்லாமல் முனுமுனுக்கிறார். அவ்வப்போது தான்தான் நிதியமைச்சர் என்பதை நிரூபித்துக்கொள்ள ‘’பணவீக்கம் கவலையளிக்கிறது’’… ‘’விலைவாசி உயர்வு கவலையளிக்கிறது’’… என்று மூன்றாம்தர மனிதன்போல பேட்டியளிக்கிறார். பணவீக்கத்தையும், விலைவாசி உயர்வையையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும், சிக்கல்களை திறம்படத்தீர்த்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும்தான் நிதியமைச்சர் என்ற பதவி என்பது இவர்களுக்கெல்லாம் எப்போது புரியுமோ தெரியவில்லை?... விலைவாசி உயர்வையும், பணவீக்கத்தையும் நினைத்து வெறுமனே கவலை மட்டும் பட்டுக்கொண்டிருக்க வீணே ஒரு அமைச்சரவை எதற்கு?

இது எல்லாவற்றுக்கும் மேல் நமது மேதகு பாரதப்பிரதமர்… அலுங்காமல் குலுங்காமல் பவனி வருவதோடு சரி… பொருளாதாரப்புலி என்று ஒருகாலத்தில் புகழப்பட்ட பழங்கதையோடு சரி…. பிரதமரான பின் உருப்படியாய் சாதித்தது என்று ஒரு மண்ணாங்கட்டியும் இருப்பதாய் தெரியவில்லை. விவசாயம், நீர்வளமேம்பாடு, விலைவாசி மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் என்று கவனத்தில் கொள்ளவேண்டிய எந்த விஷயங்களையும் கவனித்ததாய் தெரியவில்லை. சீனாவுக்கு எதிரான ராஜதந்திரமாய் நினைத்துக்கொண்டு சிறிலங்காவிற்கு உதவிக்கொண்டிருக்கும் முட்டாள்தனமும் புரியவில்லை. ஊழல் மேல் ஊழலாய் சந்தி சிரித்தாலும், ஊழலுக்கு எதிராய் மத்தியஅரசு உறுதியான நடவடிக்கைகளையும் நிலைப்பாடுகளையும் எடுத்து வருவதாய் அவ்வப்போது அறிக்கை வாசிக்கும் பிரதமரை நினைத்து நாட்டு மக்களாகிய நாமெல்லாம் அழுவதா… சிரிப்பதா என்றே தெரியவில்லை!.

பயபுள்ளக நம்மள நோண்டாம விடாது போலயிருக்கே...!!!

ஏற்கனவே விலைவாசி உயர்வைப்பற்றி நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டே டீசலையும், பெட்ரோலையும் மாறிமாறி விலையை உயர்த்திக்கொண்டிருப்பது போதாதென்று இப்போது புதிதாய்… சில்லறை வர்த்தகத்தில் பொருளாதாரப்புரட்சி செய்ய புத்திசாலித்தன முடிவெடுத்திருக்கிறார்கள் இந்த மேதாவிக்கூட்டத்தினர்.

சரி... சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் நமக்கென்ன நஷ்டம் என்று கேட்கும் மக்கள் கூட்டமும் இருக்கக்கூடும். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? என்றொரு அலசல் நிச்சயம் அவசியமானதுதான்.

சில்லறை வர்த்தகம் என்றால் என்ன?...

மக்களாகிய நாம் நமது அன்றாடத் தேவைகளை நமக்கு விருப்பப்பட்ட கடைகளில் வாங்கிக்கொண்டிருக்கிறோமே… அதுதான் சில்லறை வர்த்தகம். மொத்த விற்பனையாளர்(whole sale merchant)… சில்லறை விற்பனையாளர்(Retail merchant) இது இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் நமக்கு தெரிந்திருக்கும். அதுதான் சில்லறை வர்த்தகம். இன்னும் எளிதாகச் சொல்லவேண்டுமானால் அண்ணாச்சிக்கடையில் அன்றாடம் நாம் மளிகைச்சாமான்களை வாங்குகிறோமே… அதுதான் சில்லறை வர்த்தகம். ரோட்டோரக்கடைகளில் காய்கறி மற்றும் பழங்கள் வாங்குகிறோமே… அதுதான் சில்லறை வர்த்தகம்.

சரி… இப்போது சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் என்ன பெரிதாய் குடி முழுகிவிடப்போகிறது என்று கேட்பவரும் இருக்கலாம். இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமை நாடாக்கினர் என்பதுதான் நாம் சிறுவயது முதலே நமது பாடப்புத்தகங்களில் படித்துவரும் செய்தி. அவ்வாறான பாடங்களை நமது கல்வியில் புகுத்திய அரசாங்கமே இன்று நமது நாட்டில் வியாபாரம் செய்வதற்கு வெளிநாட்டவரை அனுமதிக்கிறது. ஏற்கனவே உலகமயமாக்கல் பொருளாதாரத்தை இந்தியாவுக்குள் புகுத்திய மாமேதைகள் அதே உலகமயமாக்குதலில் நாட்டுக்கு தேவையான நல்லனவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு தேவையற்றவைகளை, நமது மக்களை நேரடியாக பாதிப்பவைகளை நாட்டுக்குள் அண்டாமல் பாதுகாத்தால் உலகமயமாக்கல் ஒரு வேளை வரமாய் அமையலாம். ஆனால் கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையுமே உலகமயமாக்கும் பட்சத்தில் நமது நாட்டின் பொருளாதாரம் நிச்சயமாய் ஒருநாளில் அதளபாதாளத்தில் வீழ நேரலாம். உலகமயமாக்குதலே கூடாது என்பதல்ல எனது கருத்து. உலகமயமாக்கலில் நமது வளர்ச்சிக்கு தேவையானவற்றை மட்டும் செயல்படுத்தலாம். உதாரணமாக உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையால் நமது இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் பல தரமானப்பொருட்கள் உலகச்சந்தையில் இடம் பெறலாம். நன்மைகளும் தீமைகளும் கலந்து கிடக்கும் உலகமயமாக்குதல் கொள்கையில் நன்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஆராய்ந்து செயல்படுத்துவதுதான் உண்மையிலேயே மக்களுக்காக செயல்படும் ஒரு அரசு செய்யவேண்டிய கடமையாகும். ஆனால் அதை விடுத்து வெளிநாட்டு முதலாளிகளிடமிருந்து தனது பெட்டியை மட்டும் நிரப்பிக்கொண்டு நாட்டையே அவர்களிடம் அடகு வைக்கலாம் என்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ளமுடியாததுதான்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்தால் நடக்கப்போவது என்ன?... முதலில் நமது சில்லறை வர்த்தகத்தில் நுழையும் அந்நிய நிறுவனங்கள் நமது சுதேசி விற்பனையாளர்களை விட கூடுதல் கொள்முதல் விலையில் பொருட்களை வாங்கி குறைந்த விலைக்கு மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள். நம்மைப்பற்றி சொல்லவேண்டுமா?... மற்ற இடங்களைவிட ஒரு பொருள் ஒரு இடத்தில் குறைந்த விலைக்கு கிடைக்கிறதென்றால் அந்த இடத்தை மொய்த்துவிடமாட்டோமா என்ன? ஒரு கட்டத்தில் சுதேசி சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் வாடிக்கையாளரின்றி நஷ்டத்தை சமாளிக்க இயலாமல் கடைகளை மூடிவிட்டு நடையைக்கட்டும் நிலை உருவாகும். அதையே எதிர்பார்த்து காத்திருக்கும் அந்நிய நிறுவனங்கள் சுதேசி விற்பனையாளர்களின் கொள்முதல் நின்ற பிறகு, தான் மட்டும்தான் என்ற நிலை வந்த பிறகு தனது கொள்முதல் விலையை அதிரடியாகக் குறைக்கும். விற்பனை விலையை அதிரடியாக உயர்த்தும். பாதிக்கப்படப்போவது இந்தியர்களாகிய நாம்தான்.

உதாரணத்துடன் சொல்லவேண்டுமானால் காய்கறி வியாபாரத்தை எடுத்துக்கொள்ளலாம். காய்கறி வியாபாரத்தில் சில்லறை வணிகத்தில் நுழையும் நிறுவனமானது முதலில் காய்கறியை விளைவிக்கும் விவசாயிடமிருந்து அதிக விலைக்கு கொள்முதல் செய்து மக்களாகிய நம்மிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வார்கள். இதனால் அதிக விலை கிடைக்கும் காரணத்தால் விவசாயிகள் இந்த நிறுவனங்களிடமே தங்கள் விளைச்சலை கொடுக்கத்தொடங்குவார்கள். குறைந்த விலையில் கிடைப்பதால் மக்களாகிய நாமும் நமது உள்ளூர் வியாபாரிகளை புறக்கணித்துவிட்டு இந்த நிறுவனங்களிடமே காய்கறி வாங்கத்துவங்குவோம்.
இதனால் நமக்கு நன்மைதானே என்று நினைக்கலாம். ஆரம்பத்தில் நன்மைதான்… ஆனால் ஒருகட்டத்தில் உள்ளூர் வியாபாரிகளெல்லாம் நஷ்டத்தில் நொடிந்தபிறகு இந்த நிறுவனங்களை விட்டால் வேறு கதியில்லை என்ற நிலைமை விவசாயிகளுக்கும் மக்களாகிய நமக்கும் உருவாகும். அந்தச்சூழலில் கொள்முதல் மற்றும் விற்பனை விலை இரண்டையும் நிர்ணயிக்கும் உரிமை இந்த நிறுவனங்களின் கால்களில் கிடக்கும். விளையும் பொருட்களை விவசாயி இந்த நிறுவனங்கள் நிர்ணயிக்கும் தரைமட்டமான விலைக்கு விற்றே ஆகவேண்டும். மக்களாகிய நாம் இந்த நிறுவனங்கள் நிர்ணயிக்கும் அநியாய விலைக்கு வாங்கியே ஆகவேண்டும்.

இதனால்… சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதென்பது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ஆப்புதானேயொழிய இதன் மூலம் விலைவாசி கட்டுக்குள் வரும் என்பதெல்லாம் வெட்டிவிவாதங்களே!.

ஏற்கனவே நமது பிராவிடண்ட் ஃபண்டு போன்ற பணங்களை பங்குச்சந்தையிலும் வெளிநாட்டு வங்கிகளிலும் முதலீடு செய்யும் முட்டாள்தனத்தை யோசித்துக்கொண்டிருக்கும் நமது அரசு, நல்ல இலாபத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பொதுவுடமை நிறுவனமான எல்.ஐ.சி.யை தனியார் மயமாக்கும் முட்டாள்தனத்தை முனைந்து கொண்டிருக்கும் நமது அரசு, சில்லறை வர்த்தகத்திலும் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதித்து நமது உழைப்பையும், பணத்தையும் அடுத்தவன் சுரண்டிக்கொண்டு போக பட்டுக்கம்பளம் விரிக்கத்தயாராகிறது. அரசே மக்கள் நலனை அலட்சியப்படுத்தி இதை அனுமதிக்கும் பட்சத்தில், மக்களாகிய நாம்தான் இது போன்ற நிறுவனங்களின் வியாபாரச்சூழ்ச்சிக்குள் சிக்கி விடாமல் உஷாராய் இருந்தாகவேண்டுமே தவிர வெறொன்றும் வழியிருப்பதாய் தெரியவில்லை.

மற்றபடி… தமிழகத்தின் பால்விலை உயர்வு, பேருந்துகட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு பற்றியெல்லாம் நான் பதிவு எழுதாததற்கு இதெல்லாம் தேர்தலுக்கு முன்னரே நான் எழுதிய கதம்ப மாலை...: மே13…? ’ஜெ’க்கு கிட்டினால்…? கப்பித்தனமாயிருக்கு… போய் புள்ள குட்டிய படிக்கவைங்கய்யா…! என்ற பதிவில் முன்னமே கணித்து எழுதியதுதான் காரணம். அந்தப்பதிவை படித்துவிட்டு அட..பரவாயில்லையே…நாம் கூட முதல்வர் ‘’ஜெ’’வை நன்றாகத்தான் கணித்துள்ளோம் என்று எனக்கு நானே சபாஷ் போட்டுக்கொண்டேன்…

தொடர்ந்து பேசலாம்... !

Monday, November 7, 2011

புலம் பெயர்ந்தவர்கள் உயிருக்குப்பயந்து ஒளிந்தவர்களா?-ஈழம் இன மான உணர்வா? இல்லை வெறும் இழிவா?- ஒரு பின்னூட்டத்தின் பதில்!!!

இப்பொழுதெல்லாம் இனத்திற்கும் ஈழத்திற்கும் எதிராக கருத்துரை இடுவதென்பது இணையத்தில் ஒரு ஃபேஷன் போல ஆகிவிட்டதா என்று தெரியவில்லை… அங்கே சுத்தி, இங்கே சுத்தி கடைசியில் எனது தளத்திலும் நண்பர் ஒருவர் கருத்துரையிட்டிருக்கிறார்… அவருக்கான பதிலை அவருக்கு மட்டுமே கூறியிருக்கலாம்… ஆனால் அவரைப்போன்றே இன்னும் ஏராளமானோர் தமிழினத்தில் இருப்பதால் அவருக்கான பதிலை அவரைப் போன்ற எல்லோருக்குமான பதிலாக ஒரு பதிவாகவே வெளியிடும் நிர்பந்தத்திற்கு ஆளானேன்...

எனது தளத்தில்... ‘’தமிழ்நாடு தனிநாடாகுமா?... முருகன், சாந்தன், பேரறிவாளன் ஒரு பார்வை’’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதன் பின்னூட்டத்தில் திரு.நெல்லை கிருஷ்ணன் என்பவர் எழுதிய கருத்துக்களும் அதற்கான எனது பதில்களும் அப்படியே கீழே... ...

1 – 25 of 200 Older ›உங்கள் வயது எனக்கு தெரியாது சாய்ரோஸ் ஆனால் எனக்கு தெரிந்து 1983 முதல் ஈழ பிரச்னை தீவிரமடைந்தது முதல் வைகோ அவ்வபோது இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு இருக்காது என்பார், தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும என்பார்.துப்பாக்கிகளின் சத்தத்தை சங்கீதமாக நினைப்பவர்கள் நாங்கள் என்பார். இப்போது இந்திய விடுதலை 2047ல் நூற்றாண்டுகளை கொண்டாடும்போது இந்தியாவில் தமிழ்நாடு இருக்காது என்கிறார். ஒன்றும் நடக்காது. 2047 ல் இவர் இருப்பாரா? இல்லையேல் நானோ நீங்களோ இருப்போமா? ஏன் நீங்கள் ஐநா மூவர் குழு அறிக்கையை முழுமையாக படித்ததில்லையா? www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf இந்த பகுதியை download செய்து படியுங்கள். குறிப்பாக 65 மற்றும் 115 வது பக்கங்களை படியுங்கள். புலிகளின் அராஜகம் தெரிய வரும்.www.spur.asn.au/prominent_tamil_leaders_killed.htm இந்த பகுதியை படியுங்கள். இது ஆஸ்திரேலியா நாட்டின் வலைத்தளம்.அதனால் ஈழ பிரச்சனையில் தமிழகத்தில் வெறிக்கூச்சல் போடுபவர்கள், உயிருக்கு பயந்து மேற்கத்திய நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே ஓடிபோய் வாழ்கையை வளமாக்கி கொண்டவர்கள் (இவர்களுக்கு பெயர் புலம்பெயர்ந்தவர்கள்) இவர்களின் பார்வையில் மட்டும் உங்களை போன்றவர்கள் ஈழ பிரச்சினையை பார்க்கின்றனர். ஆனால் ஆரம்பம் முதல் இந்த பிரச்சனையின் பல்வேறு பரிணாமங்களை அறிந்தவர்கள், புரிந்தவர்கள் அதாவது கிட்டதட்ட நாற்பது வயதை கடந்தவர்கள் தமிழகத்தில் நிறையவே உண்டு. அதனால்தான் இது போன்ற பிரச்சனைகளை கிளப்பும் கட்சிகளுக்கு தமிழகத்தில் வாக்கு வங்கி பெரிதாக இல்லை. ஆரம்பத்தில் ஒரு பெரிய இயக்கத்தில் இருந்தும், 18 ஆண்டுகள் தனி இயக்கம் நடத்தியும் 2% கூட வாக்கு வங்கி இல்லாதவர்களின் மிரட்டல் இந்திய இறையாண்மையை சீண்ட கூட முடியாது. ராஜீவ் காந்தி மரணத்தின் போது காங்கிரஸ் தலைவர்கள் யாரும் உடன் இல்லை என்பது இருக்கட்டும். இந்த மூவரை தவிர இந்த செயலில் ஈடுபட்ட சிவராசன், சுபா போன்றவர்கள் பெங்களுரு அருகே கொனனகுண்டே என்ற இடத்தில சுற்றிவளைக்கப்பட்ட போது தற்கொலை செய்து கொண்டார்களே, எந்த புலி ஆதரவாளரும் சேர்ந்து சாகவில்லையே. பிரபாகரன் கூட மண்டை பிளந்த நிலையில் தனியாக குட்டையில் இருந்து பிணமாக எடுக்கப்பட்டார். போர் தீவிரமடைந்த போது போது இங்குள்ள வாய்ச்சொல் வீரர்கள் தத்தமது தொண்டர்களுடன் சென்று பிரபாகரனோடு சேர்ந்து போரிட்டு சாகவில்லையே அது ஏன்? ஜெயலலிதா எப்படி உங்களை ஆதரிப்பார்? இந்த கொலைகார கும்பலின் கொலை பட்டியலில் 1991 முதல் அவர் பெயரும் இருந்து வந்தது. அதனால்தான் அவருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டது. நிச்சயம் உங்கள் கோரிக்கை நிறைவேறப்போவதில்லை. அன்று நடந்தது RDX குண்டு வெடிப்பு. பேரறிவாளன் மற்றும் சாந்தன் இருவர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இதோ. ரெண்டு பாட்டரி வாங்கி கொடுத்தது மட்டும் குற்றச்சாட்டு அல்ல Sivarasan, who planned the operation in Madras from January 1990, left for Jaffna in February 1991 and returned to India in March 1991 with enough gold to finance the operation. In February 1991, V Siriharan, alias Thass, alias Indu Master, alias Murugan, an LTTE expert in explosives, arrived in Madras. Meanwhile, it was reported that G Perarivalan, alias Arivu, a computer wizard and an expert in electronics and the brother-in-law of Jayakumar, designed the belt bomb, with Murugan's guidance. Six grenades containing cyclonite explosives, known as C4-RDX, each fitted with 2,800 splinters of 2 mm were secretly flown from Singapore. Arivu held them in a denim belt using a silver wire connected to the nine-volt battery and two goggle switches to detonate it. The whole device was enclosed in a casing of Trinitrotoluene (TNT). Dhanu and her stand in Subha were both members of the women's wing. மேலும் நாம் கருதுவது போல் பாட்டரி என்பது சாதாரண கடைகளில் கிடைக்கும் கடிகாரம், PEN TORCH விளக்குகளில் பயன்படுத்தும் உருளை வடிவ பாட்டரி அல்ல. இந்த வகை பாட்டரி சதுர வடிவில் அக்காலத்தில் குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் ரிமோட் பொம்மைகளில் கிடைக்கும். மேலும் இந்த அறிவு உங்கள் பாஷையில் அறியாத சிறுவனாக இருக்கும் போதே கொலைக்கு முன்பு யாழ்ப்பாணம் சென்று தங்கி புலிதலைவரை சந்தித்து வந்திருக்கிறார். சென்னையில் இருந்து கொண்டு சாத்தானின் படைகள் என்ற புத்தகத்தை அச்சிட்டு பிரிட்டனில் அச்சிட்டதாக நாடகமாடியிருக்கிறார். இந்த அப்பாவியை பற்றி இந்த கொலையை விசாரித்த விசாரணை அதிகாரி பல்வேறு தகவல்களை தெரிவித்து இருக்கிறார்.உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான். தப்பு செய்தவன் தண்டனை பெறுவான். இம்மூவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். நீதி வெல்லும்.
By நெல்லை கிருஷ்ணன் on தமிழ் நாடு தனி நாடாகுமா?... முருகன், சாந்தன், பேரற... on 11/6/11


அன்பு நண்பர் திரு.நெல்லை கிருஷ்ணன் அவர்களுக்கு, உங்களது நீண்ட விவாதங்களையும், சான்றாக நீங்கள் அளித்த இணைய முகவரிகளையும் அலசிவிட்டு உங்களுக்கான பதிலை எழுதுகிறேன்... முதலில் ஒன்றை தெளிவுபடுத்துகிறேன்... நான் தமிழின தீவிர உணர்வாளன் மட்டுமேயொழிய விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் அல்ல... உங்களது பின்னூட்டத்தில் ஐ.நா அறிக்கையை முழுமையாக படித்ததில்லையா என்று என்னைக்கேட்டிருந்தீர்கள்….. அதுவும் குறிப்பாக பக்கங்கள் 65ம்,115ம் படிக்குமாறு வினவினீர்கள்… உங்கள் வழிகாட்டலுக்கு நன்றி… அதே அறிக்கையை நானும் படித்தேன்… அதன்பின்தான் புரிந்தது… பலபேர் அவரவர் நிலைப்பாடுகளுக்கேற்ப அந்த அறிக்கையிலிருந்து தங்களுக்கு சாதகமான விஷயங்களை மட்டும் தங்கள் விவாதங்களுக்கான பின்புலமாக கூட்டு சேர்த்துக்கொள்கிறார்கள் என்பது… இவ்வளவு விரிவாக விவாதம் பண்ணும் நீங்கள் அதே அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் அப்பாவி பொதுமக்களின் மீது வீசப்பட்ட க்ளஸ்ட்டர் மற்றும் பாஸ்பரஸ் குண்டுகள்… சிங்களப்படையினரால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட தமிழ்ப்பெண்கள்… மருத்துவமனையின் மீதுகூட சிங்கள இராணுவத்தால் குண்டு வீசப்பட்ட நிகழ்வுகள்… பெற்றோரை இழந்த பிஞ்சுக்குழந்தைகள்கூட ஊனமாகித் தவிக்கும் கொடூரங்கள்… இதெல்லாம் படிக்காமல் மனசாட்சியைக் கழற்றிவைத்துவிடுவீர்களா?... முதலில் உங்களது விவாதங்களை ஒரு வேளை நிஜமான ஆரோக்கியமான விவாதமாய் இருக்குமோ என்று நம்பினேன்… ஆனால் நீங்கள் சான்றாய் சுட்டிக்காட்டிய பல விஷயங்களையும் உட்சென்று ஆராய்ந்தபிறகு உங்கள் மீது ‘’நீங்களும் ஒரு சராசரி காங்கிரஸ் கட்சிக்காரராய்த்தான் இருக்கவேண்டும்’’ என்ற எண்ணம் வருகிறது.

ராஜீவ் காந்தியின் மரணத்தை நான் எனது பல்வேறு கட்டுரைகளில் விடுதலைப்புலிகளின் மாபெறும் தவறு என்றுதான் முன்னிறுத்தியிருக்கிறேனேயொழிய அதைச்சரியென்று சொல்லவரவில்லை. ராஜீவ் காந்தி மரணத்தின் போது எந்த காங்கிரஸ்காரனும் இறக்கவில்லை என்பது நான் எழுப்பிய சந்தேகம் மட்டுமேயொழிய அவர்கூடச்சேர்ந்து எல்லா காங்கிரஸ் தலைவரும் சாகவேண்டும் என்று எழுதவில்லை… ஒரு கட்சியின் தேசியத்தலைவர் இறக்கும்போது, குண்டு வெடிக்கும் தருணத்தில் மட்டும் அந்தக் கட்சிக்காரர்கள் ஒருவர்கூட அவர் அருகில் இல்லாமல் குண்டு வெடித்தபிறகு அவரது உடலை அடையாளம் கண்டு… துணியால் போர்த்தி… என்று எல்லாம் செய்தார்களே எப்படி? ஒருவேளை குண்டு வெடிக்கப்போவதும் ராஜீவ் இறக்கப்போவதும் முன்னரே தெரிந்து அரசியல்வாதிகள் அவர் அருகில் போகாமல் ஒதுங்கிக்கொண்டார்களா என்ற ரீதியில் நான் கேட்ட கேள்விக்கு சிவராசன், சுபா போன்றோர் தற்கொலை செய்து கொண்டபோது எந்தப்புலி இயக்கத்தினரோ…ஆதரவாளரோ உடன் சேர்ந்து சாகவில்லையே என்ற அர்த்தமில்லாத தர்க்கத்தை எழுப்பியிருக்கிறீர்கள்… பிரபாகரன் மண்டைபிளந்து தனியாகத்தானே உயிர்விட்டு கிடந்தார்… இங்குள்ள தமிழின ஆதரவாளர் எவரும் பிரபாகரனோடு சேர்ந்து சண்டையிட்டுச்சாகவில்லையே என்று கேட்டிருந்தீர்கள்…. தமிழர்கள் கொத்துக்கொத்தாய் மாண்டாலும், தமிழக மீனவர்கள் நித்தம் நித்தம் செத்துப்பிழைத்தாலும் எந்தவித சொரணையுமின்றி வீண்விவாதம் செய்யும் கூட்டமும் தமிழகத்திலேயே பரவிக்கிடக்கிறதே… பிரபாகரனோடு யாரும் சாகவில்லை என்று கருத்துரை சொன்ன நெல்லை கிருஷ்ணரே… ஈழ விடுதலைப்போராட்டத்தில் இதுவரை இழந்த பல லட்சம் உயிர்களும் பிரபாகரன் என்ற ஒற்றைத்தலைமையின் வழிக்காட்டலில் போராடி மாண்டவர்கள்தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்…

அதேப்போல புலம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றியும் உயிருக்குப் பயந்து மேற்கத்திய நாடுகளில் ஓடி ஒளிந்து சம்பாதித்து தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக்கொண்டவர்கள் என்று எழுதியிருக்கிறீர்கள்… மிகத்தவறு நண்பரே… ஒரு இனத்திற்கான சுதந்திரப் போராட்டத்தில் அந்த இனத்தைச் சேர்ந்த அத்தனை பேருமே களத்தில் நின்று போராடி மடியவேண்டும் என எந்த முட்டாளும் சொல்லமாட்டான்… திறமையானவர்கள் தங்கள் இனத்திற்கான போராட்டத்தில் பின்னால் நின்று உதவுவார்கள்… நீங்கள் குறிப்பிட்ட புலம் பெயர்ந்தவர்களும் அப்படித்தான்… தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தின் ஒருபகுதியை தங்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு கொடுத்து பலப்படுத்துபவர்கள்தான் புலம் பெயர்ந்தவர்கள்… என்றாவது தங்களுக்கென தனிச்சுதந்திரநாடு கிட்டாதா?… தாங்கள் இறக்கும்முன் தங்கள் சுதந்திர மண்ணில் ஒருமுறையாவது கால்வைப்போமா என்று ஏங்கிக்கொண்டிருப்பவர்கள்தான் புலம் பெயர்ந்தவர்கள்… அவர்களைப்பற்றிய உங்கள் தவறான கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான். தப்புசெய்தவன் தண்டனை பெறுவான் என்று எழுதியிருந்தீர்கள்… தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை… அதுவும் கடுமையான தண்டனைகள் அளிக்கப்படவேண்டும் என்பதுதான் எனது பார்வையும். அப்போதுதான் நமது பாரதத்திருநாட்டில் குற்றங்கள் குறையும்… ஊழல்கள் குறையும்… ஆனால் ராஜீவ் காந்தியைக் கொன்றது இந்த மூவர் மட்டும்தானா?.. இந்தியாவில் இவர்களுக்குப் பின்னால் வேறேதும் அரசியல் சக்திகள் இல்லையா?... இருபது வருடங்களுக்கும் மேலாக கடும்சிறை தண்டனை அனுபவித்து தங்களது இளமையையே தொலைத்து நிற்கும் இந்த மூவருக்கும் இன்னமும் மரணதண்டனை விதித்து மனித குலத்தில் இன்னமும் நாகரீகம் வளரவில்லை என்பதை நிரூபிக்கவேண்டுமா?... என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடைதேடிக்கொள்வதில் தவறேதும் இருப்பதாய் தோன்றவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக நண்பர் நெல்லை கிருஷ்ணன் அவர்களே… தயவு செய்து நீங்கள் சுட்டிக்காட்டிய அதே ஐ.நா அறிக்கையை நீங்கள் முதலில் முழுவதும் படியுங்கள். சிங்கள அரசால் அப்பாவித்தமிழினம் எப்படியெல்லாம் வேரறுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் படியுங்கள். போருக்குப்பின்னாலான தமிழினத்தின் நிலையும் அதே அறிக்கையில் அளவிடப்பட்டிருக்கிறது. வெறுமனே ஏதோ இரண்டு பக்கங்களை மட்டும் சாட்சிக்குச் சேர்த்துக்கொண்டு மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு வீண் விவாதம் செய்து மற்றவர்கள் மனதையும் புண்படுத்தாதீர்கள்…

ஈழம் என்பது ஒரு குறிப்பிட்ட இன மக்களின் சுதந்திரப் போராட்டக்களம். அதைக் கொச்சைப்படுத்தி தீவிரவாதமாய், தீவிரவாதிகளாய் சித்தரிக்க மேலும் மேலும் முயலாதீர்கள்...

இவ்வளவு விரிவாய் கருத்துரையிடும் நீங்கள், இன்றும் சிங்களத்தாரால் அல்லல்படும் தமிழக மீனவர்கள் நிலையில் என்ன கருத்து வைத்திருக்கிறீர்கள்?... தமிழகத்தில் ஈழ ஆதரவு பேசும் எந்தக்கட்சிக்கும் வாக்கு வங்கியிருக்காது என்பதை மட்டும் கூறி அதனால் ஈழம் மீதான இனவுணர்வு நிலைப்பாடே தவறானது என்று நீங்கள் சுட்டிக்காட்ட நினைப்பது ஏற்கத்தக்கதல்ல. தமிழர்களிடமும், தமிழக அரசியல் கட்சிகளிடமும் இல்லாத ஒற்றுமையும், ஆட்சியின் மீது கொண்ட பற்றுக்காக தமிழினத்திற்கு ஒரு சிலர் விளைத்த துரோகமும், தமிழ்நாட்டிலேயே தமிழின உணர்வுக்கு எதிராக ஒரு கூட்டம் கருத்திடுவதும்தான் ஈழத்திற்கு எதிரான தமிழகத்தின் தடைக்கற்கள்.

நீங்கள் கூறிய மற்றொரு ஆஸ்திரேலிய வலைத்தளத்தில் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் இருந்தது. அந்தப்பட்டியலை மட்டுமே பார்க்காமல் அந்தப்பட்டியலில் இருந்த ஒவ்வொருவரும் தமிழினத்திற்கு எதிராய் இழைத்த துரோகம் என்னவென்பதையும் அலசினால்தான் நியாயம் யார் பக்கம் என்பது புரியும்.

மற்றபடி ‘’மூவரும் தண்டிக்கப்படுவார்கள். நீதி வெல்லும்.’’ என்றெல்லாம் நீங்கள் முழங்கியிருப்பது காங்கிரஸ் கட்சியின் இளங்கோவன் போலவே உள்ளது.

தமிழினத்திற்கு தமிழினமே எதிரி என்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளிறிக்கொண்டிருக்கிறது... சரியான வழிகாட்டும் இன, மத, அரசியல் சார்பற்ற தலைவர் ஒருவர் தமிழினத்திற்கு கிடைக்கும்வரை இங்கொன்றும் அங்கொன்றுமாய் சிதறிக்கிடக்கும் தமிழின உணர்வாளர்கள் ஒருங்கிணைந்து செயலாற்றுவதும், ஈழத்திற்கான குரலை தமிழகத்திலிருந்து எழுப்புவதும் சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆனால் காற்று எப்போதும் ஒரே திசையில் வீசாது. விடுதலைக்கான காலம் எவராலும் கணக்கிடமுடியாத போராட்ட அளவுகோல்…

தொடர்ந்து பேசலாம்...

Friday, November 4, 2011

சென்னை நம்மை போடா வெண்ணை என்கிறதா?...!!!


மழை தனது வேலையை செவ்வனே தொடங்கிவிட்டது. தேனாறு ஓடும்… பாலாறு ஓடும் என்று வாக்குறுதிகள் வீசப்பட்ட உள்ளாட்சி தேர்தலையெல்லாம் மறக்குமளவுக்கு எங்கு பார்த்தாலும் தேங்கிய மழைநீரும் சாக்கடையும் நாறிக்கொண்டிருக்கிறது சென்னை மாநகரத்தில். பிட்டுபிட்டாய் ரோட்டை ஒட்டு போடும் ஒப்பந்தக்காரர்களெல்லாம் உளம் மகிழும் அளவுக்கு சாலைகள் சிதைந்து கிடக்கின்றன. இன்னும் கொஞ்சநாளில் அங்கங்கே சாலைகளில் நாற்று நடும் போராட்டங்கள் அரங்கேறும். துரைசாமி விடிவு தருவார் என்று நம்பும் அப்பாவி மக்களுக்கு ஒருபோதும் புரியாது… இங்கே சுப்பிரமணிகளும் துரைசாமிகளும் வேண்டுமானால் மாறலாம்… ஆனால் சென்னையில் ஒரு மண்ணும் மாறப்போவதில்லை என்பது.

ஒரே தடவையில் சாலைகளை ஒழுங்காக போட்டுவிட்டால் கட்சிக்காரர்களும், ஒப்பந்தக்காரர்களும், இவர்களுக்கு கூஜா தூக்கும் அரசு அதிகாரிகளும் அவ்வப்போது எப்படி சம்பாதிக்க இயலும்?!. எளிதாகப்புரியும் வகையில் சொல்லவேண்டுமானால் தங்க முட்டையிடும் வாத்தை யாராவது வயிற்றைக் கிழிப்பார்களா?...

என்ன ஒரே வயித்தெரிச்சல் என்றால் இந்தப் புறம்போக்குகள் சம்பாதிக்க தரமற்ற சாலைகள் நமது வரிப்பணத்தில் தாரைவார்க்கப்படுகிறது. அட... அதாவது பரவாயில்லை… நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கி உபயோகப்படுத்தும் நமது காரும் பைக்கும் இந்த குண்டும் குழியுமான சாலைகளில் சிக்கி படும் பாடிருக்கிறதே… அடப்பாவிகளா… எங்க வயித்தெரிச்சல் நிச்சயம் உங்களை சும்மாவிடாதுடான்னு புலம்புறதைத்தவிர வேறென்ன செய்யமுடியும்னு தெரியலை!

இது ஒருபுறம் என்றால்… மழைநேரத்தில் சாலைகள் பல்லைக் காமித்து விடுவதில் சென்னை முழுவதும் எந்தப் பாகுபாடுமின்றி டிராபிக் நெருக்கடியில் சிக்கி மூச்சுத் திணறும் அவலமிருக்கிறதே… எந்த சுவற்றில் போய் முட்டிக்கொள்வதோ தெரியவில்லை. போகிற போக்கைப்பார்த்தால் காலை 9.30மணிக்கு ஆபீசுக்கு செல்ல வேண்டுமானால் வீட்டிலிருந்து அதிகாலை 5 மணிக்கே கிளம்பினால்தான் முடியும் என்ற நிலைமை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏற்கனவே மழையில் தரமில்லாத சாலைகள் சேதாரப்பட்டுக்கிடக்கும்போது மேலும் மேலும் உண்டாகும் டிராபிக்நெருக்கடியால் சாலைகள் சுத்தமாய் செயலிழக்கிறது.

எப்பொழுது சாலைகள் சேதப்படும்போது தரமில்லாத சாலையை அங்கீகரித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் தண்டிக்கப்படுவோம் என்று பயப்படுமளவுக்கு சட்டங்களோ வரைமுறைகளோ வகுக்கப்படுகிறதோ அப்போதுதான் இதற்கு விடிவு கிடைக்கும். அதுவரையிலும் தரமில்லாத சாலைகள் சேதமடையும்போது அதை வருமானம் வரும் வழியாக மட்டுமே பார்த்து சந்தோஷப்படும் அதிகாரிகளை யாரும் எதுவும் செய்வதற்கில்லைதான்.

சமீபகாலமாய் சென்னையில் நான் கவனித்த மற்றுமொரு முக்கிய விஷயம்… பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள். பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கென ஏகப்பட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தும், எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு விதவிதமான வாகனங்களில் எமனுக்குச் சமமாய் குழந்தைகளைச் சுமந்து செல்லும் வாகனங்களைப் பார்த்தவுடன்தான் இந்தக்கட்டுரையின் தலைப்பே என் மனதில் தோன்றியது.

விதவிதமான வண்ணங்களில் விதவிதமான வேன்கள். இதில் கொடுமை என்னவென்றால்… இந்த வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் அனைவருமே வாயில் பான்பராக்கை அடக்கிக்கொண்டு பருவத்தில் திரியும் பொறுக்கிப்பயல்களே. ஒருசில வேன்களில் கதவை மூடாததோடு படிக்கட்டிலும் குழந்தைகள் அமர்ந்து சென்றதை பார்க்கும்போது யாரைக் குறை சொல்வதென்றே தெரியவில்லை.

பள்ளிவாகனங்களுக்கென்ற தனிப்பட்ட விதிமுறைகளை மீறிச்செல்லும் வாகனங்களை கண்டுகொள்ளாமல் வருகிற போகிற லாரிகளிடமெல்லாம் சிக்னலுக்கு சிக்னல் பத்தும் இருபதுமாய் பிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் போக்குவரத்து போலீசாரை குறை சொல்வதா?...

தங்கள் பிள்ளைகளின் உயிரைப்பற்றி துளியளவும் பிரக்ஞையின்றி எதுவானால் என்னவென்று ஏதோவொரு வாகனத்தில் பிஞ்சுகளை ஏற்றி அனுப்பும் புத்திகெட்ட பெற்றோர்களைக் குறை சொல்வதா?...

குழந்தைகளின் உயிரையும் பாதுகாப்பையும் பற்றி துளியளவும் அக்கறையின்றி ஏதோவொரு வாகனத்தில் குழந்தைகள் குப்பைகள் போல வந்திறங்கும் அவலத்தை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகங்களைக் குறை சொல்வதா?...

இல்லை… கும்பகோணம் தீவிபத்து, கன்னியாகுமரி நாகர்கோவிலில் பள்ளி வாகனம் குளத்துக்குள் பாய்ந்த விபத்து, இங்கொன்றும் அங்கொன்றுமாய் நடக்கும் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் விபத்துக்கள் என்று எதையும் கண்டுகொள்ளாமல், எந்த தனியார் பள்ளி நிர்வாகத்திடம் எவ்வளவு லஞ்சம் வாங்கலாம் என்று வெட்கம் கெட்டுத் திரியும் கல்வித்துறை அதிகாரிகளைக் குறை சொல்வதா?...

இவர்களில் யாருக்குமே மனசாட்சி என்று ஒன்று கிடையவே கிடையாதா?... பணம் கிடைக்குமென்றால் என்னவேண்டுமானாலும் செய்வார்களா? அட, புறம்போக்குகளா… வேறு எந்த துறையிலும், எதற்காக வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் லஞ்சம் வாங்கி உங்களுக்கு வாய்க்கரிசி போட்டுக்கொள்ளுங்கள். ஆனால் தயவுசெய்து இப்படி பள்ளி செல்லும் பிஞ்சுகளின் உயிரோடு உங்கள் லஞ்ச விளையாட்டை விளையாடாதீர்கள்.

அடுத்தது… சென்னை தியாகராயநகரில் விதிமுறைகளை மீறிக்கட்டப்பட்ட வணிக வளாகங்களுக்கு சீல்வைக்கப்பட்ட விவகாரம்… அரசு அதிகாரிகள் போல் சட்டதிட்டங்களை காக்கும் நோக்கில் செயல்படாமல் பெரும் முதலாளிகளின் அல்லக்கைகள் போல செயல்பட்டவர்களால்தான் இந்தக்கட்டிடங்கள் உயர்ந்து நிற்கின்றன என்பதுதான் நிர்க்கதியான நிஜம். சைதை துரைசாமியின் அதிரடி நடவடிக்கை என்றோ… அ.தி.மு.க அரசின் நீதி, நேர்மை,நியாயம் என்றோ இந்த சீல்வைப்பு விவகாரத்தை யாரும் தயவுசெய்து தவறாய் புரிந்துகொள்ளவேண்டாம். டிராபிக் ராமசாமியின் பொதுநலவழக்கின் விளைவாய் நிகழ்ந்ததே இந்த சீல்வைப்பு வைபோகம்.
ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்ட கதையாய் இப்போது இந்தக்கடைகளின் முதலாளிகள் தங்கள் கடைகளில் வேலைபார்க்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்வைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் தங்கள் கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கின்றனர். உண்மையிலேயே உங்கள் ஊழியர்களின் மேல் உங்களுக்கு அக்கறை இருந்திருந்தால் உங்கள் கடைகளை கட்டும்போதே ‘’அய்யோ… நாளைக்கு திடீரென கடைக்கு சீல் வைக்கப்பட்டால் நமது ஊழியர்களின் வாழ்வு என்னவாகும்’’ என்று எண்ணிப்பார்த்து விதிமுறைகளை மீறாமல் கட்டியிருக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு இப்போது வந்து முதலைக்கண்ணீர் வடிப்பது உங்களுக்கே அசிங்கமாய்த்தெரியவில்லை?...

சரி… சீல் வைத்துவிட்டதால் மட்டும் இந்தக்கடைகளை இடித்துவிடுவார்கள் என்று நம்பமுடியுமா? அப்படி நம்பினால் நம்மைவிட இ.வா இந்த 21ம் நூற்றாண்டில் வேறு யாரும் இருக்கமுடியாது!. அ.தி.மு.க அரசின் உண்மை நிலைப்பாட்டை இந்த ஒரு விஷயத்திலேயே புரிந்துகொள்ளும் வாய்ப்பு மக்களாகிய நமக்கு இருக்கிறது. இது பண முதலைகளுக்கு ஆதரவளிக்கும் ஆட்சியா? இல்லை… மக்களுக்கான ஆட்சியா என்பதை இந்த விவகாரத்தின் முடிவைப் பொறுத்துத் தெரிந்து கொள்ளலாம். இந்தக்கடைகள் எந்தப் பிரச்சினையுமின்றி மீண்டும் திறக்கப்பட்டால் ‘’நீ கவனிச்சது இதுக்கு முன்னாடி இந்த சீட்டுல இருந்தவனைத்தான், இப்போ புதுசா வந்த என்னையும் கவனிக்கனும்ல’’ன்னு ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வரும் டயலாக்கை நாமெல்லாம் நியாபகப்படுத்திக்கலாம்.

இல்லை… ஒருவேளை சீல் வைக்கப்பட்ட இந்தக்கட்டிடங்கள் விதிமுறைகளின் படி இடிக்கப்பட்டால்… அப்போதும் சில கேள்விகள் விடைகேட்டுத் தொங்கிக்கொண்டுதானிருக்கும்…

சரி… விதிமுறைகளை மீறிக்கட்டியதாக இப்போது சீல் வைக்கப்பட்டு இடிக்கப்படுமானால்… விதிமுறைகளை மீறிக்கட்ட இவர்களுக்கு அனுமதி கொடுத்த அல்லக்கைகள் யார் யார்?... விதிமுறைகளை மீறிக்கட்டியபிறகும் கண்டு கொள்ளாமல் விட்ட அல்லக்கைகள் யார் யார்?... விதிமுறைகளை மீறிக்கட்டப்பட்ட கட்டிடம் இத்தனை நாளாய் இயங்கும் வகையில் அனுமதியளித்த, ஆதரவளித்த அல்லக்கைகள் யார் யார்?... இந்த விவகாரத்தில் இப்படி விதவிதமான கேள்விகளுடன் சம்பந்தப்படும் அரசு அதிகாரிகள் என்ற பெயரிலிருக்கும் அல்லக்கைகளுக்கு தண்டனைகள் வழங்கப்படுமா? அப்படி வழங்கப்படுமானால் என்ன தண்டனை?... இது போன்ற விவகாரங்கள் தொடர்ந்து நடைபெறாமல் தடுக்க அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? சீல் வைக்கப்பட்ட கடைகள் மட்டுமின்றி சென்னை மாநகரம் முழுவதும் வியாபித்திருக்கும் பணமுதலைகளின் ஆக்கிரமிப்புகளின் மீதும், விதிமுறைகளை மீறிக்கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களின் மீதும் கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படுமா?...

விவேக் காமெடியில் வருவதைப் போல சென்னை நம்மை போடா வெண்ணை எனும் பட்சத்தில் எதைப்பற்றியும் பிரக்ஞையின்றி வேலையைப் பார்த்துக்கொண்டு திரியலாம். ஆனால் இந்த லஞ்ச லாவண்ய ஊழல் சாம்ராஜ்யத்தில் நமது கேள்விகளால் ஏதேனும் விழிப்புணர்வு உண்டாகுமானால் விடையின்றிப் போனாலும் பரவாயில்லையென்று கேள்விகளைத் தொடர்ந்து கொண்டேயிருப்போம்…

தொடர்ந்து பேசலாம்…!