SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Saturday, October 15, 2011

தூத்தேறி… முச்சந்தியில் சிரிக்கும் வாச்சாத்தி!


‘’வாச்சாத்தி’’… சமீபகாலத்தில் மீடியாக்கள் வெளிச்சம் காட்டிய பிறகுதான் நம்மில் பலபேருக்கு இந்தப்பெயரே தெரிந்தது. நமது நாட்டின் சட்டஅமைப்பின் கேலிக்கூத்துக்கு இந்த வாச்சாத்தி வழக்கும் ஒரு சிறந்த உதாரணம்தான்.

முதலில் இந்த வழக்கு சம்மந்தமாக எனக்குத் தெரிந்த ஒரு சிறு முன்னோட்டம். தமிழகத்தில் தர்மபுரிக்கு அருகிலிருக்கும் ஒரு மலைவாழ் மக்களின் கிராமம்தான் ‘’வாச்சாத்தி’’. சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு இந்த கிராம மக்கள் சந்தன மரத்தை தங்கள் வீடுகளில் பதுக்கி வைத்திருப்பதாய்க் கூறி அரசாங்கக்கூலிகள் சோதனை என்ற பெயரில் இந்தக்கிராமத்துக்குள் நுழைந்திருக்கிறார்கள். அந்த சோதனைக்கு வாச்சாத்தி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே… காவல்துறை, வனத்துறை, வனக்காவலர்கள் மற்றும் இன்னும் சில அரசுத்துறைகளைச் சேர்ந்த ஒரு வெறிநாய்க்கூட்டம் கிராமத்துக்குள் நுழைந்திருக்கிறது.

இந்த வெறிநாய்க்கூட்டம் செய்த அக்கிரமங்கள்தான் இன்று வாச்சாத்தி வழக்காய் உருவெடுத்து நிற்கிறது. கிராமத்துக்குள் நுழைந்த இந்தக்கூட்டம் முதலில் கண்ணில்படும் ஆண்களையெல்லாம் அடித்து துவம்சம் பண்ணி துரத்தியிருக்கிறது. பின்னர் கிராமத்திலிருந்த ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் புகுந்து பொருட்களையும் வீட்டையும் சூறையாடியிருக்கிறது. ஒருகட்டத்தில் வெறி கட்டுக்கடங்காமல் தலைக்கேறவே கண்ணில் பட்ட வாச்சாத்தி கிராம பெண்களிடமெல்லாம் தனது அக்கிரமங்களை அரங்கேற்றத்துவங்கியிருக்கிறது இந்த வெறிநாய்களின் கூட்டம். பெண்களை கூட்டம் கூட்டமாய் தூக்கிச்சென்று கேங் ரேப் எனப்படும் காட்டுமிராண்டி கற்பழிப்புகளை அரங்கேற்றியிருக்கிறது.

இந்தக் கற்பழிப்பில் பாதிக்கப்பட்டதில் வயதுக்கு வராத பெண்களும் அடக்கம் என்பதே அந்த வெறிநாய்க்கூட்டத்தின் கொடுமைகளுக்கான முக்கிய சான்று. ஜூன் 20ம் தேதி 1992ம் வருடம் நிகழ்த்தப்பட்ட இந்தக்கொடுமையில் அன்றைய அரசு இயந்திரம் மூடிமறைக்கும் வேலையை மட்டும் கச்சிதமாகச்செய்திருக்கிறது. லோக்கல் அரசியல் அல்லக்கைகள் அன்றைய முதல்வரிடம் கெஞ்சி இந்த நாசவேலைக்கு சட்டப்படி எதுவும் நடவடிக்கை பாயாமல் அமுக்கியிருக்கிறார்கள். இறுதியில் உயர்நீதிமன்றத்தில் இந்த வெறிக்கூட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒரு பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வருவாய்த்துறையினர் மூலம் விசாரணை நடத்த(!) உத்தரவிடப்பட்டிருக்கிறது.

அந்த உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்திய வருவாய்த்துறை அதிகாரி சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் எவரிடமும் விசாரணை நடத்தாமலேயே தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார் (எப்படியும் அந்தப்பரதேசிக்கு நல்ல சாவு வந்திருக்காதென்று நம்புவோம்). அந்த விசாரணை அறிக்கையில் ‘’காவல்துறையோ இல்லை வனத்துறையோ எதையும் எவரையும் தாக்கவில்லை. அவர்கள் அனைவரும் வாயில் விரல் வைத்து சப்பிக்கொண்டிருந்தனர். வாச்சாத்தி கிராம மக்கள்தான் அவர்களே தங்கள் வீடுகளை தாங்களே உடைத்துக்கொண்டனர்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் (நல்லவேளை வயதுக்கு வராத பெண்களெல்லாம் தங்களைத்தாங்களே கற்பழித்துக்கொண்டனர் என்று அறிக்கை அளிக்கவில்லை)!.

அதற்கு பின்னர் ஏதோ விழித்துக்கொண்ட உயர்நீதிமன்றம் 1995ம் ஆண்டு சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.(அப்பாடா… இதாய்யா உங்க டக்கு?)!. சி.பி.ஐ விசாரணையின் முடிவில் நடந்த குற்றங்கள் உண்மைதான் என்பதோடு 18 பெண்கள் கற்பழிக்கப்பட்டதாய் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. உடனே பொங்கியெழுந்த உயர்நீதிமன்றம் 1996ம் ஆண்டு மே மாதம் கற்பழிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூபாய் பத்தாயிரம்(!) இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது (விவேக் காமெடியில் மைனர் குஞ்சுக்கு குடுத்த தண்டனை மாதிரியே இல்ல?)!.

சி.பி.ஐ யின் அறிக்கையின்படி காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் வனத்துறையைச் சார்ந்த 269பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த 269 பேரில் 4பேர் ஐ.எப்.எஸ் அதிகாரிகள். 10பேர் காவல்துறையில் உயரதிகாரிகள்.

என்ன தீர்ப்பளித்தாலும் சரி… இது இந்தியா என்று எள்ளி நகையாடும் விதத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்ட அனைவரும் பெயிலில் வந்து வாழ்க்கையை என்ஜாய் பன்னினர்.

இப்போது கிட்டதட்ட 20வருடங்களுக்குப்பிறகு தர்மபுரி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 269பேருக்கும் குற்றத்தை உறுதிப்படுத்தி சிறைத்தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டி (!) இருக்கிறார்கள். இந்த விரைவான வழக்கு விசாரணை மற்றும் நீதியில் நாம் கவனிக்கத்தக்க சில முக்கிய விஷயங்கள் என்ன தெரியுமா?...

# தர்மபுரி நீதிமன்றத்தில் இந்த நீதி(!) வழங்கப்படும் போது குற்றஞ்சாட்டப்பட்ட மற்றும் தண்டனை வழங்கப்பட்ட 269பேரில் 54பேர் ஏற்கனவே வாழ்ந்து முடிந்து டாட்டா காட்டிவிட்டு போயாகிவிட்டது.

# கற்பழிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பல பெண்கள் வாலிபம் இழந்து அரைக்கிழவிகளாக மாறியாகிவிட்டது.

# இது எல்லாவற்றுக்கும் மேலாக நமது மேலான சட்டம் குற்றவாளிகளுக்கு உயர்நீதிமன்ற மேல்முறையீடு மற்றும் உச்சநீதிமன்ற மேல்முறையீடு என்று இன்னும் இரண்டு பெரிய ஓட்டைகளை வழங்கியிருக்கிறது.

# மேல்முறையீட்டுக்குப்பிறகு உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும்போது அநேகமாக குற்றவாளிகளில் இன்னும் ஒரு நூறுபேராவது இறந்திருப்பார்கள். பாதிப்புக்குள்ளான பல பெண்களின் சார்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பைக்கேட்க அவர்களின் பேரப்பிள்ளைகள் வரக்கூடும் (ஒருவேளை அந்த பேரப்பிள்ளைகள் தங்கள் நண்பர்களிடம் ‘’மச்சி எங்க ஆயாவ கெடுத்துட்டாங்கடா… அந்த வழக்கு தீர்ப்புக்காக நான் இன்னக்கி மெட்ராஸ் போறேன்டா’’ அப்பிடின்னு சொல்ற நெலமை வருமோ?! பெவிகால் விளம்பரத்துல வர்ற கோர்ட் சீன்தான் நியாபகம் வருது!)

காலம் கடந்து வழங்கப்படும் நீதியும் குற்றத்துக்கு சமம் என்று ஒரு சொல் நமது பயன்பாட்டில் உள்ளது. அப்படிப்பார்க்கும்போது இப்படி காலம் தாழ்த்தி வழங்கப்படும் நீதிக்கான தண்டனையை யார் வழங்குவது?... யாருக்கு வழங்குவது? இப்படிப்பட்ட சட்ட ஓட்டைகளை அடைக்க மக்களாகிய நாம் என்ன செய்யப்போகிறோம்?... அப்பீல், பெயில் போன்ற குற்றத்தை வளர்க்கும் காரணிகளை எப்போது களையெடுக்கப்போகிறோம்?...

இல்லை, ஒருவேளை… பரபரப்பான செய்திகளை படித்தும் பார்த்தும் வெறுமனே நேரத்தைக் கடத்திவிட்டு ‘’தூத்தேறி… இதுவொரு சட்டமா? இதெல்லாம் ஒரு நாடா?’’ என்று துடைத்துப்போட்டுவிட்டு நமது வேலையை பார்த்துக்கொண்டு வாழ்க்கையை பயணித்துக் கொண்டேயிருப்பதுதான் கடைசிவரை நமது தலைவிதியா?...

தொடர்ந்து பேசலாம்…

8 comments:

 1. சுயநலம் இது போன்ற நிகழ்ச்சிகளை வருங்காலங்களிலும் வளர்த்தெடுக்கும்... அநீதியை கண்டு பொங்கினா பொங்க சோறு இருக்காது என்று மௌனியாக படித்தவர்களே இருக்கும் போது... தேவை ஒன்றே ஒன்று தான்... மானிடம் அனைத்தும் இழந்து இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்று தைரியம் வரும் பொழுது இந்த களைகள் களையப் பட்டிருக்கும்.. அது வரை தேவை நம் போன்ற உள்ளங்களின் உரத்தக் குரல், கழுத்தை நெருக்கும் கேள்விகள்... மாற்று சிந்தனைகள்... இறந்த பிறகும் வாழ்வதற்கு இதை விட வழி எது?

  ReplyDelete
 2. மிகச்சரியான கருத்து தோழரே... தலைவணங்குகிறேன்...

  ReplyDelete
 3. //
  பரபரப்பான செய்திகளை படித்தும் பார்த்தும் வெறுமனே நேரத்தைக் கடத்திவிட்டு ‘’தூத்தேறி… இதுவொரு சட்டமா? இதெல்லாம் ஒரு நாடா?’’ என்று துடைத்துப்போட்டுவிட்டு நமது வேலையை பார்த்துக்கொண்டு வாழ்க்கையை பயணித்துக் கொண்டேயிருப்பதுதான் கடைசிவரை நமது தலைவிதியா?...
  //

  கண்டிப்பா

  ReplyDelete
 4. சட்டங்கள் கடுமையாக இருக்கவேண்டும்

  ReplyDelete
 5. நாய்களை நிற்க வைத்துச் சுட வேண்டும்

  ReplyDelete
 6. cases are delayed because of adjournment(vaithaa).without the vaithaa the advocates cannot run the show.realizing this factor, one chief justice(chennai)brought a rule that this vaithaa system must be controlled.what happened?the advocates made a big hue and cry (poraattam)and transfered him from chennai high court!

  ReplyDelete
 7. இல்லை, ஒருவேளை… பரபரப்பான செய்திகளை படித்தும் பார்த்தும் வெறுமனே நேரத்தைக் கடத்திவிட்டு ‘’தூத்தேறி… இதுவொரு சட்டமா? இதெல்லாம் ஒரு நாடா?’’ என்று துடைத்துப்போட்டுவிட்டு நமது வேலையை பார்த்துக்கொண்டு வாழ்க்கையை பயணித்துக் கொண்டேயிருப்பதுதான் கடைசிவரை நமது தலைவிதியா?...// இல்லை இந்த மக்கள் ஒற்றுமையை என்று நிலை நட்டுகிரார்களோ அன்று நமது விழிப்பு அடையும் சிறந்த ஆக்கம் பாராட்டுகள் .

  ReplyDelete