SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Monday, September 26, 2011

தமிழர்கள் நாமென்ன உயிரா? வெறும் மயிரா?...

அமைதிப்படையென்ற பெயரில்
அழிந்ததும் நம் உயிர்தான்;
கற்புகளின்றி ஈழத்தில்
சிதைந்ததும் நம் உயிர்தான்;

ராஜீவ் காந்தி கொலைக்களத்தில்
போனதும் நம் உயிர்தான்;
கொலைக்குற்ற நீதியுடன்
போராடுவதும் நம் உயிர்தான்;

இலங்கைத்தமிழர் விஷயத்தில்
முத்துக்குமரன் ஈந்ததும் நம் உயிர்தான்;
மூன்று தமிழர் உயிர் காக்க
செங்கொடி இழந்ததும் நம் உயிர்தான்;

முள்ளிவாய்க்கால் கொடூரத்தில்
மாண்டதும் நம் உயிர்தான்;
முள்வேலி சித்திரவதையில்
மாள்வதும் நம் உயிர்தான்;

நாள்தோறும் கடலுக்குள்
இழப்பதும் நம் உயிர்தான்;
காவிரியும் கிடைக்காமல்
கொடுப்பதும் நம் உயிர்தான்;

தமிழர்கள் என்றால்
வெறுப்பாய் இளப்பமாய்
கன்னடனும் தெலுங்கனும்
மலையாளத்தானும் பார்த்ததுபோக
மத்திய அரசாங்கமும்
சிங்களனுடன் கைகோர்த்தும்
மானம்கெட்டு ஈனப்பிறவியாய்
அரசியலுக்கும் சினிமாவுக்கும்
இன்னமும் பல்லக்குத்தூக்கி
எத்தனைகாலம்தான் அடிமாடாய்
வாழ்ந்து மாள்வது?

இனத்துரோகிகள் பலபேர்
வீழ்ந்து கொண்டிருக்கும் தமிழினத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கும் வரையிலும்
தமிழர்களின் உயிரை
மதிக்காத மத்திய அரசு
ஒருபோதும் நம்மை
மயிராய்க்கூட மதிக்காது;

தமிழினத்தையும் தாய்மொழியையும்
காக்கும் கடமை நமக்கிருப்பதாய்
நம்பக்கூடிய தமிழர்கள் மட்டும்
ஒருமுறையாவது சிந்தியுங்கள்…
நாள்தோறும் பல வழியில்
பலவிதமாய் வீழ்ந்து கொண்டிருக்க
தமிழர்கள் நாமென்ன உயிரா?...
இல்லை வெறும் மயிரா?...

Thursday, September 1, 2011

தமிழ் நாடு தனி நாடாகுமா?... முருகன், சாந்தன், பேரறிவாளன்-ஓர் பார்வை

பேரறிவாளன், சாந்தன், முருகன்... கொஞ்ச நாட்களாய் இந்த மூன்று பெயர்களும் தமிழின உணர்வாளர்களுக்கு மட்டுமல்ல… நல்ல முறையில் மக்களாட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவுக்கும் பெரும் மன உளைச்சலையும், மனப்போராட்டத்தையும் உண்டு பண்ணிக்கொண்டிருக்கும் விஷயமாகும். இந்த மூன்று பேர்களின் தூக்குதண்டனையும், மத்தியிலும் மாநிலத்திலும் பல காங்கிரஸ் கோமாளிகளின் கருத்துக்களும் சூட்டைக் கிளப்பிக்கொண்டிருக்கும் நிலையில் இதைப்பற்றிய ஒரு கண்ணோட்டத்தையும், தமிழக மக்களை நம்பி முதல்வரம்மா எடுக்கவேண்டிய முன்னெடுப்புகளையும் பற்றிய பதிவுதான் இது.

சமீபத்தில் நடந்த ஒரு போராட்டத்தில் வைகோ மத்திய அரசை எச்சரிக்கும் விதமாக ‘’தொடர்ந்து தமிழர்களை புறக்கணித்து தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளாக மத்திய அரசு எடுத்துவந்தால் 1947 இந்தியாவுக்கு சுதந்திரம் போல 2047 தமிழகத்திற்கான சுதந்திரமாக மாறக்கூடும்’’ என்று முழங்கியிருக்கிறார். (போகிறபோக்கைப் பார்த்தால் தமிழர்களுக்கு கொஞ்சகொஞ்சமாக சூடு சொரணை வர ஆரம்பித்திருப்பதால் வைகோவின் பேச்சு நிஜமானாலும் ஆகலாம்!!!)

முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி அணுகுமுறை இந்தமுறை ஆரம்பத்திலிருந்தே அமர்க்களமாக உள்ளது. தொடர்ந்து தி.மு.க.வின் ஊழல் முதலைகளை களிதின்ன அனுப்பிக்கொண்டிருப்பதை தி.மு.க.வைத்தவிர இதுவரை எவருமே எதிர்க்கவில்லை. நடுநிலைமையான மீடியாக்களும்கூட தவறென்று சொல்லவில்லை. எல்லோருக்குமே தெரியும் அந்த ஆப்புகள் சரியானதுதான் என்பது. ஒவ்வொரு விஷயத்தையும் மக்கள் பார்வையில் முதல்வர் கையாண்டு கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசின் குள்ளநரித்தனத்தால் இப்போது பேரறிவாளன், முருகன்,சாந்தன் ஆகிய மூவரின் கருணைமனுக்கள் ஏறத்தாழ 11ஆண்டுகளுக்குப்பிறகு ஜெயலலிதாவின் ஆட்சிகாலத்தில் குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்பட்டு அவர்களைத் தூக்குக்கு அனுப்பும் திட்டம் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. முதலில் அவர்களைக்காக்க தன் கைகளில் எதுவுமில்லை என்று மறுத்த முதல்வர் தமிழின உணர்வாளர்களின் எழுச்சியைப்பார்த்து அவர்களின் தூக்குதண்டனைக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்.

உண்மையிலேயே மனதாரக்கூறுகிறேன்… தமிழினத்தலைவர்… மூத்த அரசியல்வாதி… அரசியல் சாணக்கியர் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் கருணாநிதி போன ஆட்சியில் நாற்காலியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தமிழர்களுக்காக எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றாமல் போன துரோகத்தோடு ஒப்பிடும்போது ஜெயலலிதா எவ்வளவோ மேல் என்றுதான் கூறவேண்டும். ஏற்கனவே இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். இப்போது இரண்டாம் முறையாக தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். ஆனால் அவர் தீர்மானம் நிறைவேற்றியவுடனேயே மத்திய அரசின் புதிய கோமாளி ஒன்று தமிழக அரசின் தீர்மானம் எங்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்று பேட்டியளிக்கிறது. இங்கே தமிழகத்தில் காங்கிரஸ் அரைவேக்காடுகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் தூக்கலிடவில்லையென்றால் தமிழகத்தில் தீவிரவாதம் தலையெடுக்கும். ஆகவே ராஜீவ்காந்தியைக் கொன்ற அவர்கள் மூவரையும் உடனடியாக தூக்கிலிட்டு தமிழகத்தை அமைதிப்பூங்காவாக மாற்றவேண்டும் என்று வாய்கிழிய முழங்குகின்றனர். முட்டாள்கள்… ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் என்று இந்த மூவரையும் கூறுகிறார்களே… நான் ஏற்கனவே எனது மற்றொரு கட்டுரையில் கேட்ட கேள்வியையே இங்கே மீண்டும் கேட்கிறேன்… எப்படி ராஜீவ் காந்தியின் மரணத்தின் போது அவரும், அவருடைய மெய்க்காப்பாளர்களும், சில போலீஸ்காரர்களும், பொது மக்களும் மட்டுமே இறந்து போயினர். ஒரு கட்சியின் தேசியத் தலைவர் தமிழகத்தில் வந்து குண்டு வெடிப்பில் சிக்கி இறக்கும் நிகழ்வில் எந்தவொரு அரசியல்வாதியும் (காங்கிரசைச் சேர்ந்தவர்களும்கூட) அவருடன் நடந்து சென்று இறந்து போனதாய்ச் செய்திகள் இல்லாத மர்மம்தான் என்ன? இதற்கான பதிலையும் காங்கிரஸ் கோமாளிகள் முழங்குவார்களா?!

ஏற்கனவே நளினியின் விடுதலை மீதான கேள்விக்கு ‘’நளினியின் வீடு அமைந்திருக்கும் ஏரியாவில் அரசியல்வாதிகள் மற்றும் உயரதிகாரிகளின் வீடுகளும் இருப்பதால் நளினியை விடுதலை செய்வது ஆபத்தானது’’ என்று கருணாநிதி அரசு அளித்த கோமாளித்தனமான பதிலால் இன்னமும் சிறைக்குள் வாடுகிறார் நளினி. அவரது வீடு அமைந்திருக்கும் ஏரியாதான் அவரது விடுதலை மறுப்புக்கு நிஜமான காரணமென்றால் அவரை விடுதலை செய்யுங்கள். உடனடியாக உங்கள் கோமாளிகள் இல்லாத நாட்டிற்கேகூட அவரது குடியிருப்பை மாற்றிக்கொள்வார். அதேபோல ஒவ்வொரு முறை தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போதும் இந்தியாவிலிருந்து யாரோவொரு அதிகாரி ஒருநாள் பயணமாக ராஜபக்சேவை சந்தித்து விருந்துண்டு வரும் வேலையை மட்டும் கச்சிதமாகச் செய்கிறார்கள். மத்திய அரசின் பழிவாங்கும் தனத்தை இது போன்ற நிகழ்வுகள் மூலம் பட்டவர்த்தனமாய் அறிய முடிகிறது. காங்கிரசுக்கு இன்னமும் புரியவில்லை. கருணாநிதிக்கு சென்ற சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் வழங்கிய தீர்ப்புதான் வரும் மாநிலங்களவைத் தேர்தலில் மத்தியில் காங்கிரசுக்கும் வழங்கப்படப்போகிறது என்பதே நிஜம். என்ன செய்தாலும் தமிழன் சொரணை கெட்டுக்கிடப்பான் என்று மத்திய அரசும், அக்கம் பக்கத்து மாநில அரசுகளும் போடும் ஆட்டம் இனி கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களாலேயே அடக்கப்படும்.

மத்திய அரசு முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு முட்டுக்கட்டையாகவே தொடர்ந்து சில நடவடிக்கைகளை எடுப்பதாக நடுநிலையாளர்களால் விவாதிக்கப்படுகிறது. இவ்வளவு நாள் இல்லாத அவசரமாய் திடீரென இப்போது கருணைமனுக்களை நிராகரித்து தூக்கு தண்டனையை நிறைவேற்ற துடிப்பதே ஜெயலலிதாவின் ஆட்சிக்கு கரும்புள்ளி வைத்து தமிழின ஆதரவாளர்களை ஜெயலலிதாவுக்கு எதிராக திருப்புவதற்கான முயற்சியாகத்தான் பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஜெயலலிதா அந்த மூன்று பேரின் தூக்குதண்டனைக்கு எதிராக ஏதாவது பலமான நடவடிக்கை எடுத்தால் அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி ஜெயலலிதாவின் ஆட்சி கலைக்கப்படும் வாய்ப்பும் இருப்பதாக முதல்வருக்கே செய்தி அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நேரத்தில் முதல்வரம்மா ஒன்று மட்டும் மனதில் கொண்டால் போதுமானது… தமிழர்கள் என்றென்றும் நன்றி மறவாதவர்கள். தமிழர்களுக்கான நடவடிக்கையாக நீங்கள் எத்தகைய முடிவுகளையும் தமிழர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து தைரியமாக எடுக்கலாம். ஒருவேளை தமிழர்களுக்காக நீங்கள் எடுக்கும் நடவடிக்கையால் உங்கள் ஆட்சி கலைக்கப்பட்டால் மீண்டும் வரும் தேர்தலில் நூறு சதவிகித வெற்றியுடன் உங்களை ஆட்சிப்பொறுப்பில் அமர்த்தவேண்டியது தமிழர்கள் எங்கள் ஒவ்வொருவரின் கடமை. யார் யாரையெல்லாமோ தமிழினத்தலைவர்களாக நம்பி மோசம் போனவர்கள் நாங்கள். இப்போது தமிழினத்திற்காக பாடுபடுவீர்கள் என்று உங்கள் மீது நம்பிக்கை பிறந்திருக்கிறது. தமிழர்களுக்காக பாடுபடும் தலைமைக்குப்பின் நிற்க வேண்டுமென்பது ஒவ்வொரு தமிழனும் கற்றுத்தரமாலேயே கற்றுக்கொண்ட விஷயமாகும். முதல்வரம்மா… நீங்கள் தமிழர்களுக்கான முடிவெடுக்கும் சந்தர்ப்பங்களில் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் இந்திராகாந்தி போன்ற தைரியத்தோடு முடிவெடுங்கள்.

தமிழர்களுக்காக உண்மையாய் போராடும் எவர் பின்னாலும் தமிழன் நிற்பான். தமிழகமும், தமிழர்களும் மத்திய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால் வைகோ கூறியது போல நாம் 2047 வரைகூட காத்திருக்கத்தேவையில்லை. அதற்கு முன்னரே அதற்கான விதைகள் அதாகவே முளைக்கப்போவதுதான் காலத்தின் கட்டாயம். காலமாற்றமும் தமிழின உணர்வும் தமிழர்களுக்கு நியாயம் வழங்குமா?... இல்லை…தமிழ்நாட்டை தனிநாடாக்குமா?... பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்…

தொடர்ந்து பேசலாம்…