SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Saturday, August 13, 2011

வைகோ ஒரு முடிந்து போன சகாப்தமா?


‘’வைகோ’’… இந்தப் பேரைக் கேட்டாலே எழுச்சியடையும் இளைஞர் கூட்டம் இருந்தது ஒரு காலம். ம.தி.மு.க.வை நிஜமாகவே தமிழகத்திற்கான மறுமலர்ச்சியாக படித்தவர் முதல் நடுநிலைமையாளர்கள் வரை நம்பியது ஒரு காலம். பம்பரம் என்ற தேர்தல் சின்னம் மிக வேகமாய் மக்களிடம் பரவியது ஒரு காலம்.

ஆனால் இன்றைய நிலை?...

வைகோ என்ற தனிப்பெரும் சக்தி அறிமுகமான அளவுக்கு ம.தி.மு.க. என்ற பேரும், பம்பரம் என்ற சின்னமும் மக்களிடம் நிலைப்படாமல் மறந்தேபோனது. தேர்தல் சின்னம் பலமிழக்கும் போது கட்சி பலமும் கபளீகரமாகிப்போகும். (வேட்பாளரைப் பார்க்காமல் வெறும் சின்னத்துக்காக மட்டுமே வாக்களிக்கும் கூட்டம் இன்னமும் மாறவில்லை நம் நாட்டில்) கட்சி பலம் இல்லாதபோது அரசியல் பலமும் அழிந்து போகக்கூடும். அரசியல் பலமின்றி வெறுமனே ஒரு தனிமனிதரின் செல்வாக்கினால் மட்டும் இங்கே பெரிதாய் மக்களுக்காக எதையும் சாதித்து விடமுடியாது.

ஒரு காலத்தில் தி.மு.க. என்ற மிகப்பெரிய திராவிடக்கட்சியின் போர்வாளாய், பிரச்சாரப்பீரங்கியாய், தளபதியாய், கலைஞரின் அன்புத்தம்பியாய் விளங்கியவர்தான் வை.கோபால்சாமி என்ற ‘’வைகோ’’. எப்படி அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் ராஜதந்திரத்துடன் கலைஞர் கட்சியைக் கைப்பற்றினாரோ, அதே ராஜதந்திரத்துடன் தனக்குப்பிறகு கட்சி தனது வாரிசுகளுக்கே சொந்தம் என்ற நிலையை உருவாக்கியதுதான் தி.மு.க.வை விட்டு வைகோ வெளியேறியதற்கான ஒரே காரணம். தி.மு.க.விலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டார் என்பதே வைகோவின் வளர்ச்சியைப்பார்த்து மிரண்ட கலைஞரால் வரலாற்றில் பதியப்பட்ட செய்தி. அவர் வெளியேற்றப்பட்டாரோ… இல்லை வெளியேறினாரோ… எப்படியிருந்தாலும் சரி… அந்நேரத்தில் தி.மு.க… இல்லையன்றால் அ.தி.மு.க. என்று சலித்துப் போயிருந்த தமிழக மக்களுக்கு வைகோ ஒரு மாபெரும் மாற்று சக்தியாகத் தோன்றத் தொடங்கியது, காலம் அவருக்கு வழங்கி அவர் சரியாய் உபயோகப்படுத்திக் கொள்ளாத மிகப்பெரிய வாய்ப்பு.

1944ல் பிறந்த வைகோ, 1994ல் ம.தி.மு.க என்ற தனிக்கட்சியின் தலைவரானார். தனிக்கட்சி தொடங்கிய வைகோவின் பின்னால் அப்போது அணி திரளத்தொடங்கிய இளைஞர் கூட்டம் தமிழக வரலாற்றில் மறக்கமுடியாத செய்தி. அவருடைய கட்சியின் கொள்கைகளை விளக்க தமிழகம் முழுவதும் முதன் முதலில் அவர் மேற்கொண்ட நடைப்பயணம் அவருக்கு வழங்கிய அரசியல் வளர்ச்சியை பிற்காலத்தில் அவர் மேற்கொண்ட எந்த நடைப்பயணமும் வழங்கவில்லை. இனிமேலும் அவர் எத்தனை நடைப்பயணம் மேற்கொண்டாலும் எதுவும் நடக்கப்போவதுமில்லை.

அக்காலக்கட்டத்தில் வைகோவின் வளர்ச்சியைப் பார்த்த நடுநிலையாளர்கள், அரசியல் பார்வையாளர்கள் அனைவருமே தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரண்டுக்கும் மாற்றாக மக்கள் வைகோவை ஆதரிக்கத்தொடங்கியதால், வெகுவிரைவிலேயே வைகோ தமிழக முதல்வராகும் நிகழ்வு நடக்கும் என்றே நம்பினர். (அவ்வாறு நம்பிய கூட்டத்தில் நானும் ஒருவன். ஆனால் அப்போது எங்களுக்குத்தெரியாது அதை வைகோ இப்படி புஷ்வானமாக்குவாரென்று!)

வைகோ எதிர்கொண்ட அப்போதைய சட்டசபைத் தேர்தலில் அவர் வெளியிட்ட ஓர் அறிக்கைதான் அவருடைய அரசியல் அழிவுக்கான பிள்ளையார் சுழியைப் போட்டது. ‘’ம.தி.மு.க ஜெயித்து ஆட்சியைப் பிடித்தால், ஜெயலலிதா மற்றும் அனைத்து அ.தி.மு.கவினரிடமிருந்தும் அவர்கள் ஊழல் செய்த அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று பகிரங்கமாக அறிவித்து தேர்தலை எதிர்கொண்டார். அந்தத்தேர்தலில் ம.தி.மு.க பெரிதாய் எதையும் சாதிக்கவில்லை. அ.தி.மு.க.வும் ஜெயலலிதாவின் ஊழலினால் அத்தேர்தலில் படுதோல்வியைத் தழுவியது. அதன் பிறகு வைகோவின் அரசியல் களம் மெள்ள மெள்ள வளர்ச்சியடைந்து கொண்டேயிருந்தது. வைகோ என்ற தனிமனிதர் ஒரு நேர்மையாளராய், புரட்சியாளராய், தமிழினத்திற்காக போராடும் ஒரு தலைவனாய் மக்கள் மனதில் ஆழப்பதிந்து போனார். கறைபடியாத ஒரே அரசியல்வாதியாய் அவருடைய பிம்பம் மக்கள் மனதில் இன்றளவும் நிலைத்திருக்கிறது.

மிகச்சிறந்த அரசியல் அடித்தளம் கிடைத்தும், வைகோ அதைச் சரியாக உபயோகப்படுத்தத் தவறிய மனிதராகிப்போனார். 2001ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியது. 2002ல் வைகோ தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப்பேசியதாக போடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அதன் பிந்தைய நிகழ்வுகள்தான் மெள்ள மெள்ள வைகோவின் அரசியல் வளர்ச்சிக்கு மூடுவிழா நடத்தத்தொடங்கியது.

சிறையிலடைக்கப்பட்ட வைகோவை அரசியல் சாணக்கியர் கலைஞர் ஒருசில அரசியல் ஆதாயத்துக்காக சந்தித்துப்பேசி ஆதரவளித்தார். அதன் பின்னர் வைகோ சிறையிலிருந்து வெளியில் வந்ததும் கலைஞருடனே பல பொது மேடைகளில் தோன்றினார். பாசத்தம்பி… அப்படி இப்படியென்று மேடையிலேயே கண்ணீர் விட்டு பல பச்சோந்தி நாடகங்கள் அரங்கேறின. அப்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டம். ஏற்கனவே கலைஞருடன் மீண்டும் இணைந்து தோன்றியதில் வைகோவின் இமேஜ் மக்கள் மனதில் சரியத்தொடங்கியிருந்தது. வைகோவும் ஒரு சாதாரண சந்தர்ப்ப அரசியல்வாதிதானா என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் முளைத்தது. இது எல்லாவற்றுக்கும் மேலாக தி.மு.க. கூடாரத்திலிருந்த வைகோ கடைசி நிமிடத்தில் அ.தி.மு.க கூடாரத்துக்குத் தாவினார். வைகோ தனது அரசியல் வளர்ச்சியை தானே குழி தோண்டி புதைத்துக்கொண்டது அப்போதுதான்.

தி.மு.க விலிருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கி, மீண்டும் தி.மு.க.வுடன் ஒரே மேடையில் தோன்றி, இறுதி நிமிடத்தில் அத்தனை நாள் எதிர்த்து வந்த ஜெயலலிதாவின் அ.தி.மு.க கூட்டணிக்குத்தாவி… இப்படி திடீரென்று பைத்தியக்காரத்தனமான பல முடிவுகளை அமல்படுத்தி ம.தி.மு.க. என்ற ஒரு கட்சியை மீட்டெடுக்க முடியாத அதள பாதாளத்துக்குள் தள்ளியது வைகோதான். மக்கள் வைகோ மீது வைத்திருந்த நம்பிக்கை அனைத்தும் மறைந்து போனது. வைகோ ஒரு மறுமலர்ச்சி மாற்றுசக்தியல்ல என்ற நிலைமை வைகோவாலேயே உருவாக்கிக் கொள்ளப்பட்டது.

இன்று விஜயகாந்த் மக்களால் ஒரு மாற்று சக்தியாய் உணரப்படுகிறார். ஆனால் இந்நேரம் மிகப்பெரிய சக்தியாய் வளர்ந்திருக்கவேண்டிய ம.தி.மு.க அழிவின் விளிம்புக்கு வந்தாகிவிட்டது. அ.தி.மு.க.வுடன் கூட்டு வைத்துக்கொண்டு தேர்தலில் தோற்றபின்பு கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமாய் வைகோவுக்கு தோன்றிய ஞானோதயங்கள் எல்லாம் மக்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது. அரசியல் பல்டிகளால் தானே கெடுத்துக்கொண்ட தனது இமேஜை நிலைநிறுத்த தொடர்ந்து ஒரே கூடாரமாய் அ.தி.மு.க வுடனே இருந்த காலகட்டத்தில்தான் ம.தி.மு.க தனது தனித்துவத்தை சுத்தமாய் இழந்து போனது. கட்சியையே ஜெயலலிதாவின் காலடியில் அடகு வைத்து நசுக்கிய கதையாகிவிட்டது. இன்று இறுதியாய் ஜெயலலிதாவாலும் ம.தி.மு.க கைவிடப்பட்டாகிவிட்டது.

வைகோவின் இன்றைய நிலை என்ன? வைகோ ஒரு சிறந்த பேச்சாற்றல் மிக்க மனிதர். நாடாளுமன்றத்தில் கருத்துப்பூர்வமான விவாதங்களை எடுத்து வைக்கும் திறமைமிக்க மனிதர். இளைஞர்களை இப்போதும் தன்வசமிழுக்கும் நாவன்மை மிகுந்தவர். இவ்வளவும் வைகோ என்ற தனிமனிதனுக்கு மட்டுமே இன்னமும் மீதமிருக்கிறதேயொழிய ம.தி.மு.க.வும், பம்பரமும் காணாமல் போய் வெகு காலமாகிவிட்டதால் அரசியல் பலம் எதுவுமின்றி வெறும் ஈழ ஆதரவு கோஷமிட்டுக்கொண்டிருப்பது மட்டும்தான் இனி வைகோவின் வேலையா?

வைகோ என்ற தனிப்பெரும் சக்தி நிச்சயமாய் முடிந்து போன சகாப்தமல்ல. ஆனால் ம.தி.மு.கவும் பம்பரமும் சத்தியமாய் மீட்டெடுக்க முடியாத ஒரு முடிந்து போன சகாப்தமே…!

தொடர்ந்து பேசலாம்….Tuesday, August 9, 2011

அது வேற வாய்...இது நாற வாய்!


ஒருவழியா வழக்கம்போலவே ஐயா மருத்துவர் ராமதாஸ் தி.மு.க கூட்டணியிலேயிருந்து வெளியேறி வீர டயலாக்கா விட்டு காமெடிய ஸ்டார்ட் பண்ணிட்டாரு. அவருக்கு துணையா திருமாவளவனும் பொங்கியெழுந்து ஜிங்ஜாங் போடறத தொடங்கிட்டாரு. என்னவொரு கவலைன்னா இவங்கெல்லாம் தமிழ்நாட்டு ஜனங்க இன்னும் வாயில விரலை வச்சி சப்பிட்டிருப்பாங்கன்னு நெனச்சிக்கிட்டே அரசியல் நடத்துறத எப்போதான் நிறுத்துவாங்களோ தெரியலை.

உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னாடி டாஸ்மாக் கடையெல்லாம் அடிச்சி நொறுக்கிற போராட்டத்தை ஐயா அனொவ்ன்ஸ் பண்ணியிருக்காரு. நல்லவேளை சினிமா தியேட்டரை அடிச்சி நொறுக்குறதுன்னும், பொட்டிய தூக்குற போட்டி வைக்கிறதுன்னும் எந்த போராட்டத்தையும் அறிவிக்கலடா சாமின்னு சினிமாக்காரன்லாம் பெருமூச்சு விட்டுக்கலாம்! ஐயா மருத்துவரே… பண்ணுறத உள்ளாட்சி தேர்தலுக்கு அப்புறம்தான் பண்ணனும்னு எதாவது ரூல்ஸ் இருக்கா? ஏன் தேர்தலுக்கு முன்னாடியே அந்த வீரச்செயலை ஸ்டார்ட் பண்ணிப்பாக்கிற தில்லு இல்லையா உங்ககிட்ட?... எப்படியிருக்கும்?... சாராயமும், கறிச்சோறும் இல்லாம நான் கட்சி நடத்துறேன்னு எவனாவது சொன்னா பச்சப்புள்ளகூட பால்பாட்டில கீழே போட்டுட்டு சிரிக்காது? 21ம் நூற்றாண்டுலயும் மதுவிலக்குன்னு சொல்லி இன்னமும் காமெடி பண்றதுல வடிவேலு, விவேக், சந்தானம்னு எல்லாரும் உங்ககிட்ட லைன் கட்டி பிச்சையெடுக்கலாம்.

சரி இதுதான் இப்படின்னா இன்னைக்கு இன்னொரு பேச்சு பேசியிருக்கீங்க பாருங்க… அடேங்கப்பா அசத்திட்டீங்க போங்க! இலங்கைத் தமிழர்களை காக்க தி.மு.க மற்றும் அ.தி.மு.க போன்ற திராவிட கட்சிகள் எல்லாம் எப்பவுமே எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. ஆனா பா.ம.க.தான் இலங்கைத் தமிழர்களுக்காக தொடர்ந்து போராடுதுன்னு சொல்லியிருக்கீங்க. சூப்பரா சொன்னீங்கய்யா நீங்க… ஆனா எனக்கொரு சின்ன டவுட்டு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி சட்டமன்ற தேர்தல்ல இலங்கைத் தமிழர்களுக்காக போராடாத திராவிடக் கட்சியான தி.மு.க.வோட கூட்டு வச்சிக்கிட்டீங்களே… அது எதுக்குங்கய்யா? தமிழர்களுக்காக போராடாத திராவிடக் கட்சி கூட கூட்டு வச்சீங்கன்னா கூட பரவாயில்ல… ஆனா தமிழர்களை லட்சலட்சமா கொன்னு குவிக்கத் துணையாயிருந்த காங்கிரஸ் கட்சி இருந்த கூட்டணியில சேந்துக்கிட்டீங்களே… அதுக்கு பேருதான் அரசியலுங்களாய்யா?

இன்னக்கி வெக்கமே படாம மறுபடியும் இலங்கைத்தமிழர்… அது இதுன்னு பேசுறீங்களே… தமிழ்நாட்டு மக்கள் என்ன உங்க கட்சிக்காரங்கன்னு நெனச்சிக்கிட்டீங்களா… நீங்க என்ன பண்ணாலும், என்ன பேசுனாலும் ஐயா சொல்றதுதான் சரின்னு சொல்ல? நீங்க நெனச்சா தமிழர்களுக்கு எதிரான கட்சிகள் இருந்த கூட்டணியில சேர்ந்து எலெக்ஷன்ல நிப்பீங்க. அப்புறமா அந்த கூட்டணியிலயிருந்து வெளிய வந்துட்டு அவங்களையே குறை சொல்லுவீங்க. உங்க புள்ளைக்கு பதவி கிடைக்கனும்னா யார்கூட வேணும்னாலும் கூட்டணியை மாத்துறீங்க. அப்போ அற்ப அரசியலுக்காகவும், கட்சியை வளர்க்கவும் நீங்களும் எல்லாரையும் மாதிரி சாதாரண சாக்கடை அரசியல்தான் நடத்துறீங்கன்னு சொல்லலாமா, கூடாதுங்களாய்யா?

பயபுள்ளைக என்ன சொன்னாலும் நம்பாது போலயிருக்கே...!

ஐயா, ரொம்ப நாளா உங்ககிட்ட கேக்கனும்னு ஒரு கேள்வி என் மண்டைக்குள்ளயே குடைஞ்சிட்டு நிக்கிது. கேக்கட்டுங்களா?... இதுவரைக்கும் எத்தனை முறை தி.மு.க.வோட கூட்டணி வைச்சிருக்கோம்?... எத்தனை முறை அ.தி.மு.க.வோட கூட்டணி வைச்சிருக்கோம்?... எத்தனை முறை பல்டி அடிச்சிருக்கோம்னு உங்களுக்கே நினைவுயிருக்குமாய்யா? ‘’அது போன மாசம்… இது இந்த மாசம்’’னு சொல்ற ரேஞ்சுக்கு விட்டா மாசத்துக்கு ஒரு கட்சியோட கூட்டணி வைச்சிப்பீங்க போல?! கலைஞர் ஈழத்தமிழர்களைக் காக்க எதுவும் செய்யலைன்றீங்க. கொஞ்ச நாள் கழிச்சு அவர் கூடவே கூட்டணி வைச்சிக்கிட்டு கலைஞர்தான் தமிழினப் பாதுகாவலர்ன்றீங்க… மறுபடியும் அவர்கிட்டயிருந்து பிரிஞ்சி வந்திட்டு அவரையே குறை சொல்றீங்க… ஒருவேளை இதையெல்லாம் உங்க கிட்ட யாராவது கேட்டா ‘’அது வேற வாய்… இது நாற வாய்’’னு வடிவேல் மாதிரியே பதில் சொல்லுவீங்களோ என்னவோ தெரியலை!

அட நீங்கதான் இப்பிடின்னா… வீரத்திலகம் திருமா இருக்காரு பாருங்க… அவருதாங்க எதிர்காலத்துல உங்களுக்கு சரியான காமெடி போட்டியா இருப்பாரு போல! இலங்கைத்தமிழர்னாரு... பொதுக்கூட்டம்னாரு… மாநாடுன்னாரு… அட பரவாயில்லைய்யா இவருன்னு நெனச்சிக்கிட்டு இருக்கும்போதே காங்கிரஸ் கூட்டணியிலேயே சேந்துக்கிட்டு பாராளுமன்ற தேர்தல்ல நின்னு எம்.பி.யாவும் ஆயிக்கிட்டாரு. எம்.பி. பதவியையும் விடாம கெட்டியா பிடிச்சிக்கிட்டு, காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில இருந்துக்கிட்டே இலங்கைத் தமிழர்களுக்காக போராடுற சீனைப் போட்டுக்கிட்டேயிருக்காரு பாருங்க… அடேங்கப்பா அடுத்த ஆஸ்கார் அநேகமா இவருக்குத்தான் கொடுக்கனும்போல!

நம்பள காமெடி பீஸா ஆக்கிருவாங்க போலயிருக்கே...!


இதுக்கெல்லாம் மேல அண்ணன் திருமா, மருத்துவரய்யா நீங்க என்ன சொன்னாலும் சரி… உடனே அதுக்கு ஜிங்ஜாங் போட்டு பா.ம.க.வும் விடுதலை சிறுத்தைகளும் இலங்கைத்தமிழர் விஷயத்தில் இணைந்து செயல்படும்னு இன்னமும் பேட்டி குடுத்துட்டேதான் இருக்காரு. அட இன்னமும் வீரத்தோட இன்னைக்கு இன்னொன்னு சொல்லியிருக்காரு பாருங்க… தேவைப்பட்டா இலங்கைத் தமிழர்களுக்காக அவரோட எம்.பி.பதவியையும் ராஜினாமா செய்யத்தயாராம். அப்பிடி ராஜினாமா செய்யுறதா இருந்தா எப்பவோ ராஜபக்சேவை சந்திக்க போன குழுவுல திருமாவும் போயிட்டு வெறுங்கைய வீசிட்டு வந்தாரே… அப்பவே பண்ணியிருக்கனும். அதவிட்டுட்டு இப்பவும் அதைச் சொல்லியே சீன் போட்டு அரசியல் நடத்துறதை அற்பப் புத்தின்றதா… இல்ல என்னன்றது? தி.மு.க.வை துரோகின்னு சொன்னா உங்களையெல்லாம் நம்பிக்கை துரோகின்னு சொல்றதா?

ராமதாஸ் எப்பவோ பல கூட்டணி மாறி மாறி தனக்கு கட்சியும், பதவியும், தன் மகனும்தான் முக்கியம்னு நிரூபிச்சிட்டாரு. ஆனா தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட இயக்கம் ஆரம்பிச்ச திருமாவும் இப்ப இலங்கைத்தமிழர் விஷயங்களில் தடுமாறி தனக்கு கட்சி அரசியல்தான் முக்கியம்னு நிரூபிக்க ஆரம்பிச்சிருக்காரு.

மொத்தத்துல ஒன்னு மட்டும் நல்லா தெரியுது… இலங்கை தமிழர்களும், இடிந்து போன தமிழக தமிழர்களும், தமிழினம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலேயும் தமிழக அரசியல் கட்சிகள் எதையும் நம்பாம தமக்கான போராட்டங்களை தாமே முன்னெடுப்பது மட்டுமே அவர்களின் விடுதலை மற்றும் சமஉரிமைகளை பெறுவதற்கான ஒரே வழியாகும். தமிழக அரசியல்வாதிகளிடம் இல்லாத இனவுணர்வு ஒற்றுமைதான், இன்னைக்கி வரைக்கும் தனித்தமிழீழம் கிடைக்காததுக்கு ஒரு முக்கிய காரணாமாகும். மக்களை மாக்களாக்கும் சாக்கடை அரசியல் ஒழிந்து நாகரீக மற்றும் தன்னலமற்ற சேவை அரசியல் வர தமிழர்கள் நாம் இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் காத்திருப்பதோ தெரியவில்லை. அதுவரை இதுபோன்ற காமெடித்தலைவர்களையும், காட்சிகளையும் சகித்துத்தான் ஆகவேண்டும் என்பதே நமது எழுதப்படாத தலைவிதியாகும். தொடர்ந்து பேசலாம்…