SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, July 14, 2011

மும்பையும் இந்தியாவில்தானே இருக்கிறது?...!!!

இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் என்றால் முதலில் நினைவுக்கு வருவது மும்பைதான். இந்தியாவில் மதக்கலவரம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது மும்பைதான். இந்தியாவில் அண்டர்வேர்ல்டு டான்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது மும்பைதான். இந்தியாவில் இந்துக்கள் என்றாலும் முதலில் நினைவுக்கு வருவது மும்பைதான்.

எங்கேயோ எல்லையோரம் பனிமலையில் இருக்கும் காஷ்மீரைவிட இங்கே நாட்டின் நடுவிலேயே தீவிரவாதம் எப்போதும் விளையாடிக்கொண்டேயிருப்பதும், ‘’வீரமிக்க’’ மாநில மற்றும் மத்திய அரசுகள் ஒவ்வொரு தாக்குதல் நடந்து முடிந்த பிறகும் முழு உஷார் நிலையில் இருப்பதாய் வெட்கமில்லாமல் பேட்டி கொடுப்பதும், ஒவ்வொரு மக்களின் மனதிலும் எழுப்புகின்ற அடிப்படைக்கேள்வி… ‘’மும்பை இன்னமும் இந்தியாவில்தான் இருக்கிறதா?’’…

தீவிரவாதத் தாக்குதலானாலும் சரி, மதக்கலவரமானாலும் சரி… மும்பை எங்களுக்கேச் சொந்தமெனும் மராட்டிக் கலவரமானாலும் சரி… எப்போதும் உயிரிழப்பதும், பாதிக்கப்படுவதும் அப்பாவி பொதுஜனம்தான் என்பதே மும்பையின் சாபமாகிப்போய்விட்டது. ஒவ்வொரு தாக்குதலின் போதும் நாமெல்லாம் நாடு முழுவதும் பரபரப்பாய் செய்திகள் படிப்பதும், இரங்கல் தெரிவிப்பதும், உச்சு கொட்டுவதுமாய் கடந்து கொண்டிருக்கிறோம். உலகநாடுகள் எல்லாம் ஒவ்வொரு தாக்குதலின் போதும் கண்டனம் தெரிவிக்கும் ‘’உருப்படியான’’ காரியத்தை மட்டும் தவறாமல் செய்கின்றன.

இது எல்லாவற்றுக்கும் மேலாக நம்மை ஆள்வோர்… அடேங்கப்பா, ராஜதந்திரம் என்ற பெயரில் ஒவ்வொரு தாக்குதலையும் சொரணையற்று கடந்து செல்வது எப்படியென்று இவர்கள் ஒரு புத்தகமே போடலாம். ஒவ்வொரு தாக்குதலின் போதும் பாகிஸ்தான் மீது பழி சொல்வதையும், தாக்குதலுக்குப்பின் நாடு முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாய், கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாய் வெட்கமில்லாமல் பேட்டி கொடுப்பதையும், அதையும் நம் மீடியாக்கள் ஏன் முதலிலேயே கண்காணிப்புகள் பலப்படுத்தப்படவில்லை என்று எதிர்கேள்வி எழுப்பாமல் வெறுமனே செய்தியாய் வெளியிடுவதையும் எப்போதுதான் நிறுத்தப்போகிறோமோ தெரியவில்லை…

ஏற்கனவே நடந்த மும்பைத் தீவிரவாதத்தாக்குதலை பல அப்பாவி உயிர்களை பலிகொடுத்து, நமது எண்ணற்ற வீரர்களின் உயிர்த்தியாகத்தையும் சமர்ப்பித்து முறியடித்தோம் என்று சொல்வதைவிட முடித்துவைத்தோம் என்பதே பொருத்தமானதாய் இருக்கும். உலக நாடுகள் எல்லாம் இரங்கலும் கண்டனமும் தெரிவித்தன. அந்தத் தாக்குதலில் கசாப் என்ற தீவிரவாதியை உயிருடன் கைது செய்தோம். நம்மேல் நடந்த தாக்குதலுக்கு இத்தனைகாலமாய் நமது நாட்டு நீதிமன்றத்தில் நாமே வழக்கு நடத்தியதைத் தவிர உருப்படியாய் ஒரு ம…யும் புடுங்கமுடியவில்லை.

நாம் எந்தத் தாக்குதல் நடந்தாலும் வெட்டியாய் காலம் கடத்திக் கொண்டிருக்கும் வரை குனியும் முதுகு குத்தப்பட்டுக் கொண்டேதானிருக்கும். அதற்காக உடனே மற்ற நாட்டின் மீது போர்தொடுக்கவேண்டும் என்பதல்ல இதன் அர்த்தம். தீவிரவாதத் தாக்குதலில்கூட வெறுமனே வாய் ஜம்ப அரசியல் நடத்தாமல் வரும் காலங்களில் தீவிரவாதத் தாக்குதலின்றி பொதுமக்களைக் காப்பதற்கான நிரந்தரத்தீர்வுகளை, பாதுகாப்பு ஏற்பாடுகளை அமல்படுத்தவேண்டும். ஒன்று தாக்குகிறவனை முற்றிலுமாய் அழிக்கவேண்டும். முடியாத பட்சத்தில் தாக்கமுடியாதவாறு நம்மை நாமே இரும்புக்கோட்டையாய் மாற்றிக்கொள்ளவேண்டும். இதைச்செய்யாமல் வெறுமனே தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஒவ்வொருமுறையும் அரசு அளிக்கும் நிவாரணம், உயிரோடிருக்கும் மற்ற மக்களுக்கும் போடுகின்ற வாய்க்கரிசியாகத்தான் இருக்கமுடியும்.


ஒருவிஷயத்தில் தமிழர்கள் நிம்மதியடையலாம். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு சரியான நடவடிக்கைகள் எடுத்து இலங்கைத் தமிழர்களைக் காக்கவில்லை என்று வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறோமே… தமிழர்கள் மட்டுமல்ல… இங்கே சொந்த நாட்டு மக்களைத் தாக்கினாலும் கூட மக்கிய மண்ணாகத்தானிருக்கிறது மத்திய அரசு. சொந்த நாட்டை, சொந்த மக்களைத் தாக்கும் தீவிரவாத தேசத்துக்கு எதிராகவே எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்த மத்திய அரசா, இலங்கை மீது நடவடிக்கை எடுத்திருக்கப்போகிறது?...ம்ம்ம்ம், வேடிக்கைதான்!.

மும்பையிலேயே இந்து மதத் தீவிரவாதிகளும் இருக்கிறார்கள்… மும்பையிலேயே முஸ்லிம் மதத் தீவிரவாதிகளும் இருக்கிறார்கள்… மும்பையிலேயே அண்டர்வேர்ல்டு டான்களும் இருக்கிறார்கள். இவர்களை முதலில் ஒழித்தால்தானே தீவிரவாதிகள் எந்தத் துணையுமின்றி உள்புகாமல் காக்க முடியும். எங்கேயோ காடுகளுக்குள் திரியும் மாவோயிஸ்ட்களையும், நக்ஸல்களையும் கட்டுப்படுத்த முடியாமல் போனாலும்… மும்பை நாட்டுக்குள் இருக்கும் ஒரு நகரம்தானே… அதையுமா கட்டுப்பாட்டில் வைத்திருக்கமுடியாது? எல்லா விஷயத்திலும் அரசியல் செய்யும் கட்சிகள் இந்த ஒரு விஷயத்திலாவது இணைந்து செயல்பட்டு முதலில் உள்நாட்டில் களை எடுத்தால் பிறகு வெளிநாட்டு தலையீடுகள் தானாய் நின்று போகும். டான்களையும், மதத்தையும் தங்கள் அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ளும் கட்சிகள் இருக்கும்வரை மும்பைத் தாக்குதல்கள் நிற்கப்போவதேயில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை…

குண்டு வெடித்தபின் அதற்குக் காரணமானவர்களைக் கண்டறிய இயங்கும் உளவுத்துறை, குண்டு வெடிக்கும் முன்பும் கொஞ்சம் செயல்பட்டிருந்தால் குண்டே வெடிக்காமல் செய்திருக்கலாமல்லவா?... ஒவ்வொரு முறையும் தூங்கி வழிந்து தாக்குதல் நடந்தபின் உஷாராகும் பாதுகாப்பைப் பெறுவதே நாட்டு மக்களாகிய நம் தலையெழுத்தா?...

ஆட்சியாளர்களுடன் நேருக்கு நேர் மோதத் துப்பில்லாமல், பொது இடங்களில் பொது மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் தீவிரவாதிகளுக்கும் கவலையில்லை… எத்தனைமுறை தாக்குதல் நடந்தாலும் எருமை மாட்டின் மீது மழை பெய்த கணக்காய் எதிர்க்கட்சிகளை சமாளிப்பதை மட்டுமே யோசிக்கும், பக்கா பாதுகாப்பில் திரியும் ஆட்சியாளர்களுக்கும் கவலையில்லை…

அப்பாவி மக்களாகிய நாம்தான் கவலைப்படவேண்டும். மும்பை கைவிட்டுப்போனால் அப்படியே அடுத்தடுத்து நமக்கும் வருமென்பதால் அவ்வப்போது கேட்டு தெரிந்து கொள்வது நல்லது… இன்னமும் மும்பை இந்தியாவில்தான் இருக்கிறதா என்று…!!!

தொடர்ந்து பேசலாம்…

2 comments:

  1. Why should Italy worry if an Indian dies.samy

    ReplyDelete
  2. //எத்தனைமுறை தாக்குதல் நடந்தாலும் எருமை மாட்டின் மீது மழை பெய்த கணக்காய் எதிர்க்கட்சிகளை சமாளிப்பதை மட்டுமே யோசிக்கும், பக்கா பாதுகாப்பில் திரியும் ஆட்சியாளர்களுக்கும் கவலையில்லை…//unmai

    ReplyDelete