SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, July 28, 2011

அவள் புன்னகையே என் புதுக்கவிதைகள்…


இரவுக்குள் இறங்கும் முன்னர்
இரு கண்மூடி நின் முகமே;
விழிகளுக்குள் நீயின்றி
விடியலுக்கும் வந்ததில்லை;

உயிராக என்னுடலில்
உன் பெயர் மட்டுமே!

சூரியனின் சந்தடியில்
நிலா தரும் நிழல் ஓரத்தில்
நிதமும் நாமிறங்கி
சந்தோஷமாய் சாய்ந்தாட
சாய்வானம் வெறித்ததுண்டு;

சாகும் முன் உன் மடியில்
ஓய்வாக ஒரு நிமிடம்
தலை சாய்த்து வாழ்ந்தால் போதும்...
தன்யத்தில் திளைத்திடுவேன்
சொர்க்கத்தில் நிதமும் நானும்!

இரவுக்குள் இறங்காமல்
விடியல்கள் எட்டாது;
இமைகளை மூடாமல்
கனவுகள் கிட்டாது;

இருளான பாதையில்-நான்
எங்கோ தொலைந்து கொண்டிருக்கிறேன்,
இதயத்தின் பாதைக்கு-நான்
உன்னிடமே முகவரி கண்டிருக்கிறேன்;

கரையோரம் காத்திருக்கிறேன்…
முத்தமிட்டு அனுப்பிடு-காற்றுவழி
கன்னங்களில் பெற்றுக்கொள்வேன்!

நெருப்பிட்டு எந்தன்
உடல் வேகும் போதும்
நிலைத்திருக்கும் என் விழிகளில்
நின் பூ முகம் மட்டுமே!

புரிந்து கொள்ளடி புதியவளே…
உன் புன்னகையே
என் புதுக்கவிதைகள்…!

Wednesday, July 27, 2011

ஜெயலலிதாவை விமர்சிக்கலாமா?...

புரட்சித்தலைவி, அம்மா, தங்கத்தாரகை, தைரியலட்சுமி என்று பலவிதமாய் காலகாலமாய் புகழப்பட்டுக் கொண்டிருக்கும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு மேல் ஓடிவிட்ட நிலையில் இதுவரை தமிழகத்தில் நடந்த ஆக்கப்பூர்வமான விஷயங்கள் ஏதேனுமுண்டா?... தி.மு.க வுக்கு எதிராக அவர் செய்யும் விஷயங்களும், நடவடிக்கைகளுமே ஆக்கப்பூர்வமானதுதானே என்று அவரது கட்சிக்காரர்கள் வேண்டுமானால் சொல்லலாம்… சாமானியர்களான நாமும் அதே ஜால்ராவைத் தட்ட முடியுமா?...

இந்தமுறை பதவியேற்றவுடன் ஊழலற்ற ஒளிவு மறைவற்ற நேர்மையான ஆட்சி நடத்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். அவருக்கு வாக்களித்த சாமான்யர்களும், நடுநிலையாளர்களும் நிஜமான சந்தோஷம் கொண்டனர். இந்த முறை ஜெயலலிதா நிச்சயம் ஒரு நல்லாட்சியைத் தருவார் என்றுதான் நம்பினர். இன்னமும் நம்பிக்கொண்டுதான் இருக்கின்றனர். கலைஞரும் அவருடைய குடும்பமும் அடித்த கூத்துக்களை மனம் வெம்பி பார்த்துச் சலித்த ஒவ்வொரு தமிழனும் இனி நிச்சயம் நல்ல நேர்மையான, திறமையான நிர்வாகம் நடக்கும் என்று நம்பினர். படித்த பண்பாளர்களும், அரசியல் நோக்கர்களும் கூட ஏற்கனவே கருணாநிதியின் தோல்வியில் நிச்சயம் ஜெயலலிதாவும் பாடம் கற்றிருப்பார். எனவே எதுவும் அநாவசிய ஆட்டம் போடாமல் உருப்படியான திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்துவார் என்று நம்பினர்.

ஒருவேளை அரசியல்வாதிகளே நினைத்தாலும் திருந்த முடியாத சாக்கடைதான் அரசியலோ என்னவோ தெரியவில்லை. ஒவ்வொரு முறை ஆட்சி மாறும் போதும் பழைய ஆட்சியாளர்களால் தொடங்கப்பட்ட பல நல்ல திட்டங்களையும் கூட அரசியல் சாக்கடையில் அமிழ்த்து அழிக்கும் அவல மனப்பான்மை அரசியல்வாதிகளிடம் எப்போதுதான் மாறப்போகிறதோ தெரியவில்லை. ஜெயலலிதா மட்டும் விதிவிலக்கா என்ன? அவருடைய ஒரு மனது மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டும் என்று விரும்புவதாகவும், இன்னொரு அடி மனது நான் இன்னமும் பழைய ஜெயலலிதாதான் என்பதை நிரூபிப்பது போலவும் காரியங்கள் மாறி மாறி நடக்கின்றன.

எடுத்த எடுப்பிலேயே மக்களின் வரிப்பணத்திலிருந்து கோடிகளைக் கொட்டிக் கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை நிராகரித்தார்.ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கிய கருணாநிதிக்குப் போட்டியாய் இலவச அரிசித்திட்டத்தை உடனடியாக அமல்படுத்தினார். தமிழகத்தில் மீண்டும் மேலவையைக் கொண்டு வரும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இலவசத் தொலைக்காட்சி வழங்கிய கருணாநிதிக்குப் போட்டியாக மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்துக்கு மும்முரமாய் காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதிகாரிகள் இங்கும் அங்குமாய் மாற்றி மாற்றி பந்தாடப்பட்டனர். ஜெயலலிதாவுக்கு அருகிலிருக்கும் பல முட்டாள் ஆலோசனையாளர்களால் இன்றும் அவரால் சரியான நேர்திசையில் நிலையான முடிவெடுக்க முடியாமல் அதிகாரிகளை மாற்றிக்கொண்டேயிருக்கிறார். செயலிழந்து கிடந்த காவல்துறை தி.மு.க.வுக்கு எதிராக மட்டுமே முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. மதுபான விற்பனையை தொடர்ந்து அரசே நடத்திக்கொண்டு மேலும் அரசின் வருமானத்தை பெருக்கும் வழியாய் 4200 கோடி ரூபாய்க்கு மேல் வரிவிதிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. (யாருக்கு என்ன வரி விதித்தாலும் அது இறுதியாய் விடிவது மக்கள் தலையில்தான் என்ற உண்மை மட்டும் இங்கே பெரும்பாலானவர்களுக்கு உரைப்பதேயில்லை.)

ஆரம்பத்தில் இதெல்லாம் சகஜம்தான் என்று கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பிய சந்தோஷத்திலிருக்கும் பத்திரிக்கைகளும், பொதுமக்களும், நடுநிலையாளர்களும் இன்னமும் மனதைத் தேற்றிக் கொண்டேயிருக்கிறோம். ஆனாலும் பெரிதான மாற்றங்களை, நிர்வாகச் சீர்திருத்தங்களை இன்னமும் ஜெயலலிதாவால் கொண்டுவர முடியவில்லை. இனிமேலும் கொண்டு வருவாரா என்பதும் சந்தேகமாகிக் கொண்டேயிருக்கிறது.

எப்போதோ படித்த ஞாபகம்… ‘’வேட்டி கட்டிய ஜெயலலிதாதான் கருணாநிதி, சேலை கட்டிய கருணாநிதிதான் ஜெயலலிதா’’. எவ்வளவு நிதர்சனமான தீர்க்கதரிசன வரிகள் என்பது ஆழ யோசித்தால் மட்டுமே விளங்கும் உண்மை.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் கருணாநிதி கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்துக்காக தனது கூட்டணிக் கட்சிகள், பொதுமக்கள், நடுநிலையாளர்கள் என அனைத்து தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி எப்படியாவது சமச்சீர் கல்வியை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்று மும்முரமாய் துடித்துக்கொண்டிருக்கிறார். உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சமச்சீர் கல்வியை ஆராய அரசு அமைத்த குழுவில் பணத்துக்காக கல்வியை விற்கும் தனியார் பள்ளி முதலாளிகளும் கல்வியாளர்கள் என்ற போர்வையில் இடம் பிடித்தனர். இதைவிடக்கொடுமை அதில் இடம்பெற்ற ஒரு புறம்போக்கு முதலாளி தனது பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் ‘’சமச்சீர் கல்வி வந்தால் ஏழைக்குழந்தைகளையும் உங்கள் குழந்தைகளோடு அமரவைத்து கற்பிக்கப்படுமோ என்று பயப்படவேண்டாம். அப்படியொரு நிலைமையை வரவிடமாட்டோம். அப்படியே வந்தாலும் உங்கள் குழந்தைகளைப் பாதிக்காதவாறு ஏழைக்குழந்தைகளுக்கு பேருக்கு ஏதாவது மாலைநேரத்தில் தனியாக வகுப்புகள் நடத்தப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட புறம்போக்கை சமச்சீர் கல்வியை ஆராய அமைத்த குழுவில் இடம்பெறச் செய்தது யார்?. இது ஜெயலலிதாவுக்கு தெரிந்தே நடந்ததா?... இல்லை, அவருக்கு தெரியாமல் அவரின் நிழல்களால் நிகழ்த்தப்பட்டதா?...

யார் என்ன சொன்னாலும் சரி… சமச்சீர் கல்வியை வரவிடமாட்டேன் என்று ஜெயலலிதா காட்டும் பிடிவாதமே அவர் பெரிதாய் மாறாமல் இன்னும் பழைய ஜெயலலிதாவாகவே இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சினிமாவுக்கு தமிழில் பெயர் வைப்பதால் மட்டுமே வரிவிலக்கு பெறும் திட்டத்தில் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டிருக்கும் சீர்திருத்தங்களும், தி.மு.க.வுக்கு எதிரான நடவடிக்கையாக இருந்தாலும் கூட தனிநாடு போல இருந்த மதுரையை மீட்டு பொதுமக்களை நிம்மதியாக வாழச்செய்ய அவரால் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நடவடிக்கைகளும், தமிழர்களின் அடையாளமாய் தன்னைத்தானே சொல்லிக் கொள்ளும் கலைஞரே செய்யாத விஷயமாய், தமிழக சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா போட்ட தீர்மானங்களும், பல திரையுலக ஜால்ராக்கள் பாராட்டுவிழா நடத்த அனுமதி கேட்டும் அதை ஜெயலலிதா நாசூக்காய் தவிர்ப்பதும் நிச்சயமாய் மனதாரப் பாரட்டப்படவேண்டியதே.

ஆனால் வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே நல்ல விஷயங்களும், மீதி தொன்னூறு சதவிகிதம் பழிவாங்கலும், உறுப்படாத விஷயங்களுமாய் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தால்… ஊடகங்களும், பொதுமக்களும், கூட்டணிக்கட்சிகளுமே ஜெயலலிதாவுக்கு எதிராக எப்போது வேண்டுமானாலும் திரும்பக்கூடும் என்பதுதான் நிதர்சனம். ஏற்கனவே கருணாநிதி எதிர்ப்பை வைத்து அரசியல் வளர்த்த விஜயகாந்த், இப்போது பரபரப்பில்லாமல் சத்தமின்றி கிடக்கிறார். எப்போது வேண்டுமானாலும் அவருக்கு அரசியல் வளர்க்க ஆளுங்கட்சி எதிர்ப்பு தேவைப்படலாம் என்பதை மறக்கக்கூடாது.

சமச்சீர் கல்வியை எதிர்க்கும் ஜெயலலிதா உண்மையிலேயே நல்லாட்சி தர விரும்பினால் தமிழகத்தில் கல்விக்கொள்ளை நடத்திக்கொண்டிருக்கும் தனியார் பள்ளிகளையும், கல்லூரிகளையும் முடிந்தால் அரசுடமை ஆக்கும் வழிகளைப் பார்க்கட்டும். இலவச திட்டங்கள் தவறில்லை. ஆனால் அது இடைத்தரகர்களும், ஊழல்வாதிகளும் கமிஷன் சம்பாதிக்கும் வழியாய் மட்டும் அமைந்து விடாமல் நேர்மையான முறையில் செயல் படுத்தப்பட்டு, போன ஆட்சியில் டி.வி வைத்திருக்கும் எல்லா வீட்டிற்கும் மீண்டும் ஒரு டி.வி வழங்கி மக்கள் பணத்தை நாசமாக்கியதைப் போலல்லாமல் நிஜமாகவே ஏழைப்பயனாளிகளைச் சென்றடையும் வகையில் செயல்படுத்தும் வழிகளைப் பார்க்கட்டும். விவசாயத்தையும், வேலை வாய்ப்புகளையும் பெருக்கி வளர்க்கும் வழிகளைப் பார்க்கட்டும்.

ஒரு பக்கம் தி.மு.க.வை பழி வாங்கிக்கொண்டே இன்னொரு பக்கம் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் வழிகளைப் பார்த்தால் மட்டுமே ஜெயலலிதா தனது ஆசைகளையும், மக்களின் ஆசைகளையும் ஒருசேர நிறைவேற்ற இயலும் என்பதைப் புரிந்து கொள்வாரா? மக்களும், ஊடகங்களும் இன்னமும் அவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை குறையாமல் காப்பாற்றுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்…!

Saturday, July 16, 2011

மீண்டு(ம்) எப்படி வாழ?-ஒரு சாதாரணமானவனின் க(வி)தை!

வலிகளற்ற வாழ்க்கைப் பயணத்தைத் தேடி
முட்களின் பாதைகளில் பயணித்திருக்கிறேன்;
வழிகளற்ற வாழ்க்கையாகும் பயத்தினில்
வாலிப சுகங்களையெல்லாம் தொலைத்திருக்கிறேன்;

பணிக்குச் சென்ற பெற்றோரின் வாழ்க்கையினில்-என்
பால்யபருவம் தனிமையில் கரைந்தது!
படி… படி… என்ற பெற்றோரின் வார்த்தைகளில்-என்
பள்ளிப்பருவம் சிறகொடிந்தது!

எதிர்காலம் குறித்த கனவு பயங்களில்-என்
கல்லூரி நாட்கள்கூட வெற்றுக் காகிதமானது!
எப்போதும் வெல்லும் உறவு வேலிக்குள்-என்
திருமண வாழ்க்கையும் சிக்கிக் கிழிந்தது!

நம்பி வந்தவளை காக்கும் கடமையில்-என்
தன்மானம் கொஞ்சம் தொலைந்து போனது!
நண்பர்களுக்கான நேரங்கள் கூட-என்
பொருளாதாரச் சேமிப்பினில் சிதைந்து போனது!

சின்னச் சின்ன சுயவிருப்பங்களும்-என்
குழந்தைகளின் மகிழ்ச்சிக்கான தியாகமானது!
நிம்மதியும், தூக்கமும் நிரந்தரமாய்-என்
வாழ்வினில் தூரமாய் விலகிப்போனது!

என் மகனின் படிப்பு…
என் மகளின் திருமணம்…
என் மனைவியின் விருப்பம்…-இப்படி
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும்
இவ்வுலகம் எனக்கானதாயன்றி
எனக்கானவர்களின் கனவுக்கால்களில்
எப்படியெல்லாம் நசுங்கியிருக்கிறது?!

உடன்கட்டை ஏறும் வழக்கம்
ஒழிந்துவிட்டதாய் நினைப்போரெல்லாம்
ஒரு ஆணுடன் பெண்ணும்
பெண்ணுடன் ஆணும்
உடன்கட்டை ஏறும் சிதைதான்
ஒவ்வொரு திருமணத்தின்
ஓமகுண்ட நெருப்பென்பதை
ஒருபோதும் உணர்வதில்லை!

நரைமுதிர்ந்த முடியும்,
நடைதளர்ந்த வயதும்,
விட்டுப்பிரிந்த மகளும்,
வேண்டாவெறுப்பாய் மகனுமான
மனைவியிழந்த தனிமை தருணங்களில்
உள்ளுக்குள் விசும்பும் மௌனங்களுக்கு
விடைதெரியாமல் தவிக்குமெனக்கு
குடும்பத்திற்கான வாழ்க்கையே
சொர்க்கமென்று சொல்வோரிடம்
ஏதேனும் விடையிருந்தால்
தாராளமாய் சொல்லிப்போகலாம்…

பால்யபருவம், பள்ளிப்பருவம்
இளமைப்பருவமென்று-எல்லாப்
பருவங்களுமே இலையுதிர்க்காலமாய்
கழிந்துபோனக் கசடானபின்னும்
வாழ்க்கை மீண்டும்
வந்தவழியில் திரும்பி
இறந்து போன நொடிகளில்
கரைந்துபோன ஆசைகொண்ட
எனக்கானதொரு வாழ்க்கையை
மீண்டு(ம்) எப்படி வாழமுடியும்?...

Thursday, July 14, 2011

மும்பையும் இந்தியாவில்தானே இருக்கிறது?...!!!

இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் என்றால் முதலில் நினைவுக்கு வருவது மும்பைதான். இந்தியாவில் மதக்கலவரம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது மும்பைதான். இந்தியாவில் அண்டர்வேர்ல்டு டான்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது மும்பைதான். இந்தியாவில் இந்துக்கள் என்றாலும் முதலில் நினைவுக்கு வருவது மும்பைதான்.

எங்கேயோ எல்லையோரம் பனிமலையில் இருக்கும் காஷ்மீரைவிட இங்கே நாட்டின் நடுவிலேயே தீவிரவாதம் எப்போதும் விளையாடிக்கொண்டேயிருப்பதும், ‘’வீரமிக்க’’ மாநில மற்றும் மத்திய அரசுகள் ஒவ்வொரு தாக்குதல் நடந்து முடிந்த பிறகும் முழு உஷார் நிலையில் இருப்பதாய் வெட்கமில்லாமல் பேட்டி கொடுப்பதும், ஒவ்வொரு மக்களின் மனதிலும் எழுப்புகின்ற அடிப்படைக்கேள்வி… ‘’மும்பை இன்னமும் இந்தியாவில்தான் இருக்கிறதா?’’…

தீவிரவாதத் தாக்குதலானாலும் சரி, மதக்கலவரமானாலும் சரி… மும்பை எங்களுக்கேச் சொந்தமெனும் மராட்டிக் கலவரமானாலும் சரி… எப்போதும் உயிரிழப்பதும், பாதிக்கப்படுவதும் அப்பாவி பொதுஜனம்தான் என்பதே மும்பையின் சாபமாகிப்போய்விட்டது. ஒவ்வொரு தாக்குதலின் போதும் நாமெல்லாம் நாடு முழுவதும் பரபரப்பாய் செய்திகள் படிப்பதும், இரங்கல் தெரிவிப்பதும், உச்சு கொட்டுவதுமாய் கடந்து கொண்டிருக்கிறோம். உலகநாடுகள் எல்லாம் ஒவ்வொரு தாக்குதலின் போதும் கண்டனம் தெரிவிக்கும் ‘’உருப்படியான’’ காரியத்தை மட்டும் தவறாமல் செய்கின்றன.

இது எல்லாவற்றுக்கும் மேலாக நம்மை ஆள்வோர்… அடேங்கப்பா, ராஜதந்திரம் என்ற பெயரில் ஒவ்வொரு தாக்குதலையும் சொரணையற்று கடந்து செல்வது எப்படியென்று இவர்கள் ஒரு புத்தகமே போடலாம். ஒவ்வொரு தாக்குதலின் போதும் பாகிஸ்தான் மீது பழி சொல்வதையும், தாக்குதலுக்குப்பின் நாடு முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாய், கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாய் வெட்கமில்லாமல் பேட்டி கொடுப்பதையும், அதையும் நம் மீடியாக்கள் ஏன் முதலிலேயே கண்காணிப்புகள் பலப்படுத்தப்படவில்லை என்று எதிர்கேள்வி எழுப்பாமல் வெறுமனே செய்தியாய் வெளியிடுவதையும் எப்போதுதான் நிறுத்தப்போகிறோமோ தெரியவில்லை…

ஏற்கனவே நடந்த மும்பைத் தீவிரவாதத்தாக்குதலை பல அப்பாவி உயிர்களை பலிகொடுத்து, நமது எண்ணற்ற வீரர்களின் உயிர்த்தியாகத்தையும் சமர்ப்பித்து முறியடித்தோம் என்று சொல்வதைவிட முடித்துவைத்தோம் என்பதே பொருத்தமானதாய் இருக்கும். உலக நாடுகள் எல்லாம் இரங்கலும் கண்டனமும் தெரிவித்தன. அந்தத் தாக்குதலில் கசாப் என்ற தீவிரவாதியை உயிருடன் கைது செய்தோம். நம்மேல் நடந்த தாக்குதலுக்கு இத்தனைகாலமாய் நமது நாட்டு நீதிமன்றத்தில் நாமே வழக்கு நடத்தியதைத் தவிர உருப்படியாய் ஒரு ம…யும் புடுங்கமுடியவில்லை.

நாம் எந்தத் தாக்குதல் நடந்தாலும் வெட்டியாய் காலம் கடத்திக் கொண்டிருக்கும் வரை குனியும் முதுகு குத்தப்பட்டுக் கொண்டேதானிருக்கும். அதற்காக உடனே மற்ற நாட்டின் மீது போர்தொடுக்கவேண்டும் என்பதல்ல இதன் அர்த்தம். தீவிரவாதத் தாக்குதலில்கூட வெறுமனே வாய் ஜம்ப அரசியல் நடத்தாமல் வரும் காலங்களில் தீவிரவாதத் தாக்குதலின்றி பொதுமக்களைக் காப்பதற்கான நிரந்தரத்தீர்வுகளை, பாதுகாப்பு ஏற்பாடுகளை அமல்படுத்தவேண்டும். ஒன்று தாக்குகிறவனை முற்றிலுமாய் அழிக்கவேண்டும். முடியாத பட்சத்தில் தாக்கமுடியாதவாறு நம்மை நாமே இரும்புக்கோட்டையாய் மாற்றிக்கொள்ளவேண்டும். இதைச்செய்யாமல் வெறுமனே தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஒவ்வொருமுறையும் அரசு அளிக்கும் நிவாரணம், உயிரோடிருக்கும் மற்ற மக்களுக்கும் போடுகின்ற வாய்க்கரிசியாகத்தான் இருக்கமுடியும்.


ஒருவிஷயத்தில் தமிழர்கள் நிம்மதியடையலாம். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு சரியான நடவடிக்கைகள் எடுத்து இலங்கைத் தமிழர்களைக் காக்கவில்லை என்று வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறோமே… தமிழர்கள் மட்டுமல்ல… இங்கே சொந்த நாட்டு மக்களைத் தாக்கினாலும் கூட மக்கிய மண்ணாகத்தானிருக்கிறது மத்திய அரசு. சொந்த நாட்டை, சொந்த மக்களைத் தாக்கும் தீவிரவாத தேசத்துக்கு எதிராகவே எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்த மத்திய அரசா, இலங்கை மீது நடவடிக்கை எடுத்திருக்கப்போகிறது?...ம்ம்ம்ம், வேடிக்கைதான்!.

மும்பையிலேயே இந்து மதத் தீவிரவாதிகளும் இருக்கிறார்கள்… மும்பையிலேயே முஸ்லிம் மதத் தீவிரவாதிகளும் இருக்கிறார்கள்… மும்பையிலேயே அண்டர்வேர்ல்டு டான்களும் இருக்கிறார்கள். இவர்களை முதலில் ஒழித்தால்தானே தீவிரவாதிகள் எந்தத் துணையுமின்றி உள்புகாமல் காக்க முடியும். எங்கேயோ காடுகளுக்குள் திரியும் மாவோயிஸ்ட்களையும், நக்ஸல்களையும் கட்டுப்படுத்த முடியாமல் போனாலும்… மும்பை நாட்டுக்குள் இருக்கும் ஒரு நகரம்தானே… அதையுமா கட்டுப்பாட்டில் வைத்திருக்கமுடியாது? எல்லா விஷயத்திலும் அரசியல் செய்யும் கட்சிகள் இந்த ஒரு விஷயத்திலாவது இணைந்து செயல்பட்டு முதலில் உள்நாட்டில் களை எடுத்தால் பிறகு வெளிநாட்டு தலையீடுகள் தானாய் நின்று போகும். டான்களையும், மதத்தையும் தங்கள் அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ளும் கட்சிகள் இருக்கும்வரை மும்பைத் தாக்குதல்கள் நிற்கப்போவதேயில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை…

குண்டு வெடித்தபின் அதற்குக் காரணமானவர்களைக் கண்டறிய இயங்கும் உளவுத்துறை, குண்டு வெடிக்கும் முன்பும் கொஞ்சம் செயல்பட்டிருந்தால் குண்டே வெடிக்காமல் செய்திருக்கலாமல்லவா?... ஒவ்வொரு முறையும் தூங்கி வழிந்து தாக்குதல் நடந்தபின் உஷாராகும் பாதுகாப்பைப் பெறுவதே நாட்டு மக்களாகிய நம் தலையெழுத்தா?...

ஆட்சியாளர்களுடன் நேருக்கு நேர் மோதத் துப்பில்லாமல், பொது இடங்களில் பொது மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் தீவிரவாதிகளுக்கும் கவலையில்லை… எத்தனைமுறை தாக்குதல் நடந்தாலும் எருமை மாட்டின் மீது மழை பெய்த கணக்காய் எதிர்க்கட்சிகளை சமாளிப்பதை மட்டுமே யோசிக்கும், பக்கா பாதுகாப்பில் திரியும் ஆட்சியாளர்களுக்கும் கவலையில்லை…

அப்பாவி மக்களாகிய நாம்தான் கவலைப்படவேண்டும். மும்பை கைவிட்டுப்போனால் அப்படியே அடுத்தடுத்து நமக்கும் வருமென்பதால் அவ்வப்போது கேட்டு தெரிந்து கொள்வது நல்லது… இன்னமும் மும்பை இந்தியாவில்தான் இருக்கிறதா என்று…!!!

தொடர்ந்து பேசலாம்…

Wednesday, July 13, 2011

லஞ்சம் கொடுக்காம காரியம் சாதிக்கனுமா?...


ஊழலை ஒழிக்கனும்னும், லஞ்சத்தை ஒழிக்கனும்னு நாமெல்லாம் வாய்கிழிய கத்திட்டிருக்கோம். ஊழல் கதைய விடுங்க… இந்த லஞ்சத்தை ஒழிக்கிறது நடக்கிற காரியமான்னு நெனச்சிப்பாத்தா உதட்டைப் பிதுக்கிறத தவிர உருப்படியா ஒன்னும் தோனலை.

நம்ம நாட்டைப் பொறுத்தவரைக்கும் லஞ்சத்தை ஒரு குற்றமா பாக்கிற நெலமை மாறி, லஞ்சத்தை காரியம் வேகமா ஆகிறதுக்கான ஸ்பெஷல் ஃபீஸா அங்கீகரிச்சு வாழப்பழகியாச்சு. பைசாவை நகட்டலைன்னா இங்க அரசு ஆபீஸ்ல ஒரு துரும்புகூட அசையறதில்ல. லஞ்சம் வாங்குறவன் “அவங்க கொடுக்கிறதாலதான் வாங்குறோம்”னும், லஞ்சம் கொடுக்கிறவன் “அவங்க கேக்கிறதாலதான் கொடுக்கிறோம்”னும் குத்தம் சொல்லியே காலம் கடந்துபோச்சு.

இயக்குனர் ஷங்கர் ஒரு படத்தில அழகா ஒரு டயலாக் வச்சிருப்பார். ‘’வெளிநாடுகள்லேயும் லஞ்சம் இருக்கத்தான் செய்யுது. ஆனா அங்கெல்லாம் கடமையை மீறுறதுக்கு மட்டும்தான் லஞ்சம் வாங்குறாங்க. ஆனா இங்கே… கடமையைச் செய்யறதுக்கே லஞ்சம் கேக்குறீங்களடா?’’ன்னு சொல்ற அந்த டயலாக் எம்புட்டு நெசம்னு கொஞ்சம் யோசிச்சாதாங்க விளங்கும்.

சரி, நம்ம நாட்டுல நம்மளமாதிரி படிச்ச பருப்புங்கல்லாம் லஞ்சம் கொடுக்கிறத நிப்பாட்டுனாக்கா லஞ்சத்தை ஒழிச்சிரலாமா?... சும்மா காமெடி பண்ணாதீங்கன்னு நீங்க சொல்றது எனக்கும் கேக்குதுங்க. அதான் உண்மையும் இல்லையா?...

அவசரமா ஆபீசுக்கோ, இல்லை ஆபீசுக்கு லீவு போட்டுட்டு ஏதோவொரு பெர்சனல் வேலைக்கோ, கார்லயோ இல்லை பைக்லயோ போயிட்டுருக்கோம்னு வைங்க… அப்போபாத்து எங்கயாவது ஒரு டிராபிக்போலீஸ் நிப்பாட்டுவாங்க. (அதுவும் ஒவ்வொரு மாசமும் 20ம்தேதிக்குமேலதான் இவங்க வேட்டை வீரியமாயிருக்கும். சம்பளம் வாங்குற மொத பத்துநாள் பெரிசா யாரையும் கண்டுக்கமாட்டாங்க! மாசக்கடைசிலதான் பேருக்கு கொஞ்சம் கேஸ் புடிக்கவும், செலவுக்கு காசு தேத்தவும் புல் பிசியாயிடுவாங்க.) நாம எல்லா டாகுமெண்ட்சையும் கரெக்டா எடுத்துக்காட்டுனாலும், கறக்கனும்னு முடிவுல இருந்தாக்கா ஏதொவொரு ரூல்ஸ் பேசுவாங்க. அப்போ நாம என்ன பண்ணமுடியும்?. அவங்ககிட்ட வாதாடி, டைமை வேஸ்ட் பண்ணி, நாம போற வேலைய விட்டுப்புட்டு நீதி,நேர்மைன்னு கோர்ட்லபோயி ஃபைன் கட்டுறேன்னு சொல்லுவோமா?... இல்லை அவன் கேக்குற அம்பதோ, நூறோ குடுத்துட்டு பொழப்ப பாக்கப்போவோமா?

யதார்த்தம் என்னான்னு கேட்டீங்கன்னா… ஒரு நாள் ஆபீசுக்கு போடுற லீவுக்கு நாம இழக்கிற துட்டு இவனுங்க கேக்குற லஞ்சத்தைவிட பல மடங்கு இருக்கும். அன்னைக்கு பொழப்புகெட்டுப்போயி இன்னொரு நாளும் லீவு போடவேண்டிய நெலமை வந்துருமோன்னு பயந்து, ஆளை விட்டாச் சரின்னு அவங்க கேக்குற காசை அழுதுட்டு இடத்தைக் காலி பண்ணுவோம்ன்றதுதான் யதார்த்தம். இது தப்பு… அவங்களுக்கு லஞ்சம் தராம, நீதிக்காக போராடனும்னு இப்போதைய காலகட்டத்துல நாம பேசினா அதைக்கேக்கிறவன் வாயால சிரிக்கமாட்டான்…!!!

இது மாதிரி அனுபவத்தை நம்மில் பல பேர் பல ரூபத்தில வாழ்க்கைல சந்திச்சிருப்போம். ஆனா எத்தனைபேரு இந்த மாதிரியான பல சந்தர்ப்பத்துல லஞ்சம் தரமாட்டேன்னு நீதிக் கொடியப் பிடிச்சிருப்போம்னு நம்ம மனசாட்சிக்கே தெரியும். லட்சத்துல ஒருத்தரக்கூட அடையாளம் காட்டமுடியாதுன்றதுதான் நெசம். அப்புறம் என்னாத்துக்கு நாமெல்லாம் லஞ்சத்தை ஒழிக்கனும்னு வாய்கிழிய வாதாடனும்?...

இன்னிக்கி நம்ம நாட்டுல லஞ்சமேயில்லாத ஏதாவதொரு அரசுத் துறையைக் காட்டமுடியுமா?... லஞ்சம் வாங்காத அதிகாரிங்களைக்கூட இங்கொன்னும் அங்கொன்னுமா பாத்திரலாம். ஆனா லஞ்சமேயில்லாத அரசு அலுவலகத்தை எந்த ஊர்லயாவது, யாராவது பாத்தீங்கன்னா அதை உடனே நாம கின்னஸ் சாதனைக்கு தெரியப்படுத்தனும்… மறத்திராதீங்க!

கொடுக்கிறத கொடுத்து வேலைய சீக்கிரம் முடிச்சிக்கனும்னு நெனக்கிற மக்களும், கொடுக்கிறது கொடுத்தாதான் வேலைய முடிச்சிக் கொடுக்கனும்னு நெனக்கிற மாக்களும் இருக்கிறவரைக்கும் லஞ்சம் கொடுக்காம காரியமாகனும்னா அது கனவுல மட்டும்தான் நடக்கும்!!!

அதனால லஞ்சம் கொடுக்காமல் காரியமாகனும்னு சும்மா காமெடி பண்ணிட்டுத் திரியாம போயி பொழப்பப் பாருங்க…!

தொடர்ந்து பேசலாம்…

Saturday, July 2, 2011

சுட்டுப்போட்டாலும் வராதா சுயவொழுக்கம்?...


இது நான் மட்டுமில்லை. பெரும்பாலானவங்க அனுபவிச்சு ஆதங்கப்படுற விஷயம். நாம ஒவ்வொருத்தருமே நம்ம வாழ்க்கைல அன்றாடம் இதெல்லாம் பாத்தாலும் மனவருத்தத்தோடயே வாழப்பழகிட்டோம். கொஞ்சபேரு ‘’நிர்வாண நகரத்தில கோமணம் கட்டுறவன் பைத்தியக்காரன்’’னு தாங்களும் அதுமாதிரியே திரிய ஆரம்பிச்சதுதான் கொடுமையிலும் கொடுமை! அப்பிடி என்னதான் மேட்டருன்னு கேக்குறீங்களா?...

அதாங்க… பல வெளிநாடுகள்ல இருக்கிற… நம்ம இந்தியாவுல என்னன்னே தெரியாத சுயவொழுக்கம் பத்திதாங்க சொல்றேன்! சுயவொழுக்கம் பத்தி தெரியாதவங்களாலும், தெரிஞ்சாலும் அதைப்பத்திக் கவலைப்படாதவங்களாலும் அடுத்தவங்க படற பாடிருக்கே… யப்பப்பா… அதைப்பத்தி ஒரு புத்தகமே போடலாம்!

நம்மள்ல பலபேரும் பலவிதத்தில பல விஷயங்கள்ல சுயவொழுக்கம் இல்லாதவங்களால பாதிக்கப்பட்டுக்கிட்டேதான் இருக்கோம். அப்படி சுயவொழுக்கம் இல்லாம திரியிற சில தருதலைங்க பண்ற வேலைங்க என்னென்ன தெரியுமா?...

# துவைச்சு அயர்ன் பண்ண வெள்ளைச் சட்டையைப் போட்டுக்கிட்டு நாம டிப்டாப்பா பைக்ல ஆபீஸ் போயிட்டிருக்கும் போது, முன்னாடி போற பஸ்சுல இருந்து ஜன்னல் வழியா எவனாவது ஒரு பன்னாடை பான்பராக்கையோ, மாவாவையோ துப்புவான் பாருங்க… வெள்ளைச்சட்டை டிசைன் சட்டையா மாறுறது கூடப்பரவாயில்லீங்க… ஆனா வீட்டுக்குப்போயி வேற சட்டைய மாத்திட்டு போலாம்னா ஆபீசுக்கு டைம் ஆயிருமேன்னும், அப்பிடியே போறதுக்கு மனசில்லாமலும் நடுரோட்டுல கேவலமா நிக்கனும் பாருங்க! அடப்பாவிகளா…

# ஒவ்வொரு சிக்னல்லேயும் ரைட்டுல திரும்பவேண்டிய சில பரதேசிப்பயலுக லெஃப்ட் ஓரத்துல நின்னுட்டு சிக்னல் விழுந்ததும் நேராப்போற வண்டிங்களுக்கு வழிவிடாம மடார்னு அந்த ஓரத்துலயிருந்து இந்த ஓரத்துக்கு திரும்புவான் பாருங்க… அட முட்டாக்கூ…ங்களா (கூ-கூமுட்டை!), ரைட்டுல திரும்பனும்னா சிக்னலுக்கு கொஞ்ச தூரம் முன்னாடியே ரைட்டு டிராக் மாறிக்கனும்னு எப்போடா கத்துக்கப்போறீங்க நீங்கள்லாம்?...

# வயசுப்பசங்க ரோட்டுல பண்ற சர்க்கசைகூட ஏதோ குரங்கு வித்தையா நெனச்சி சமாளிச்சிரலாம். ஆனா இந்த ஆட்டோக்காரனுங்க அடிக்கிற கூத்திருக்கு பாருங்க… டிராபிக் ஜாம்ல மாட்டிக்கிட்டு முழிபிதுங்கிட்டு காரை ஓட்டிக்கிட்டு இருக்கும்போது கூட, சந்துக்குள்ள நுழைஞ்சி இலட்சங்களைக் கொட்டி வாங்குன காருல ஸ்கிராட்ச்ச போட்டுறுவானோன்னு நம்மள பிபியை எகிர வெப்பானுங்க பாருங்க… அனுபவிச்சவனுக்குத்தாங்க தெரியும் அந்த டார்ச்சர் என்னான்றது?!

# ஹைவேஸ்ல காரை ஓட்டிக்கிட்டு வரும்போது ‘’மெதுவாய்ப்போகிற மற்றும் கனரக வாகனங்கள் இடதுபுறமாகச் செல்லவும்’’னு வழிநெடுக போர்டு வச்சும் லெப்ட், ரைட்டுனு மாறிமாறி உங்களுக்கு வழிவிடாம போறபயலுக நேரா இருக்கிற ரோட்டுலயே உங்களை “S”பெண்டு, “Z”பெண்டுனு எல்லா டிரைவிங்கையும் பண்ண வெக்கிற கொடுமையிருக்கு பாருங்க…

# எங்கயாவது ஊருக்கு பஸ்ல போகும்போது பக்கத்தில உக்காரவனுக பண்ற அக்கப்போர் இருக்குதே… கொஞ்சபேரு லாங் & நைட் டிராவல்னா தண்ணியப்போட்டுட்டுதான் பஸ்ல காலையே வெப்பானுங்க. இவனுங்க நிம்மதியா விடிய விடிய மப்புல தூங்குவானுங்க. ஆனா இவனுங்க அக்கம் பக்கத்து சீட்டுல இருக்கிறவனெல்லாம் தண்ணியடிக்காமலேயே போதையாகிற அளவுக்கு நாத்தத்துலேயே ஊர் வந்து சேரனும்.

இன்னும் கொஞ்ச பயலுக இருக்கானுக. பஸ்ல ஏறுனதும் பக்கத்துல இருக்கிறவன் தோள்ல தூங்கி விழ ஆரம்பிச்சிருவானுங்க. விடிய விடிய நம்ம தூக்கமும் போயி தொள்வலியோடதான் வீடு வந்து சேரனும். அதேமாதிரிதான் கொஞ்சம் பொம்பளைங்க… பஸ்ல ஏறுனா வாந்தி வரும்னு தெரிஞ்சிருந்தும் வீட்டுல இருந்து கெளம்பும்போதே புல் கட்டு கட்டிட்டுதான் கெளம்புவாங்க. பஸ்லேயும் முன்னாடி சீட்டுல உக்காந்துகிட்டு ஜன்னல் வழியா இவங்க எடுக்கிற ஆஃப்பாயில் இருக்கு பாருங்க… பஸ்ல ஜன்னலோரமா உக்காந்திருக்கிற அத்தனைபேருக்கும் அபிஷேகம்தான் போங்க! ஒரு கவரைக்கொண்டு வந்து அதுல வாந்தி எடுத்திட்டு இறங்கிற இடத்துல தூக்கிப்போட்டுட்டு போலாம்னு இவங்கெல்லாம் எப்போதான் கத்துக்கப்போறாங்களோ தெரியலை…

# நம்ம பொண்டாட்டியையோ, பொண்ணையோ வெளியில கூட்டிக்கிட்டுப்போகும்போது நாம பாக்கிறோம்னு தெரிஞ்சாலும் கொஞ்சம் கூட கவலைப்படாம கண்ணுலயே கற்பழிக்கிற அளவுக்கு உத்துப்பாக்கிற ஊதாரிங்களுக்கு எப்போதான் புரியப்போகுதோ… அவங்களுக்கும் இதேமாதிரி ஒரு நெலமை வரும்ன்றது…

# நாம பைக்லயோ இல்ல கார்லயோ ஏதோவொரு ஏரியாவுக்குள்ள போகும்போது வேலைவெட்டி இல்லாம சுத்துற கூட்டத்தைச் சேர்ந்த வெறும்பய எவனாவது வண்டிக்கு வழியே விடாம எருமை மாட்டைவிட மோசமா நடந்து போவானுக. தப்பித்தவறி நாம ஹார்ன் அடிச்சிட்டோம்… அவ்வளவுதான். என்னமோ நாம ஒரு புள்ளப்பூச்சி மாதிரியும் அவன்தான் சிட்டிக்கே தாதா மாதிரியும் நம்மள முறைப்பான் பாருங்க… வர்ற ஆத்திரத்துக்கு இறங்கிப்போய் ரைய்யின்னு நாலு அப்பு அப்பலாம்னு நெனச்சாலும் நமக்குள்ளேயே அடக்கிட்டுப் போயிர்ர கொடுமையிருக்கே…

# இந்த டெரெய்ன்லப் போறதும் சும்மாயில்ல. நமக்கு அப்பர் பெர்த் கெடச்சிதுன்னா தப்பிச்சோம். ஆனா குடும்பத்தோடு போகும்போது குழந்தைங்களுக்காக லோயர் பெர்த் வாங்கிட்டு படனும்பாருங்க பாடு… பரதேசிப்பயலுக நைட்டு பத்து மணி ஆனாலும் லைட்ட அணைச்சிட்டு பெர்த்ல ஏறி படுக்காம கீழேயே உக்காந்துக்கிட்டு நம்ம குழந்தைங்களையும் தூங்க விடாம படுத்துவானுங்க பாருங்க… இன்னும் கொஞ்சம் எருமைமாடுங்க இருக்குது. நாம ஏறவேண்டிய இல்லை… இறங்கவேண்டிய ஸ்டேசன்ல ட்ரெய்ன் வாசல்லயே நின்னுக்கிட்டு வழிவிடாம நமக்கு கெளப்புவானுங்க பாருங்க டென்ஷன்…

# என்னைக்காவது மனசக்கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு பீச்சுக்கு போயிட்டோம்… முடிஞ்சோம்! தனியா போனாலும் சரி… குடும்பத்தோட போனாலும் சரி… அங்கங்கே ‘’ஓருடல் ஈருயிரா’’ ஐக்கியமாகியிருக்கவங்களப் பாத்து ‘சனியன்ங்க பப்ளிக்லேயே இப்பிடி இருக்குதுங்களே’ன்னு இன்னும் டென்ஷன் ஆகாம வரவே முடியாதுங்க. பீச்சு மணல்ல ரிலாக்ஸா உக்காரலாம்னு சரியா செக் பண்ணாம உக்காந்தாலோ இல்லை… உக்காந்துருக்கிற மணல்ல கையவிட்டு அள்ளி வெளயாடற வேலையை வச்சிக்கிட்டாலோ… உவ்வேன்னு கொமட்டிக்கிட்டுதான் வரனும். இயற்கை கடன்களை பீச்சுல கழிச்சி அசிங்கம் பண்றதோட மட்டுமில்லாம அதை மணலைப்போட்டு மூடிவச்சிட்டு போற முட்டாப்பயலுக ஏராளம்!

# எல்லாத்தையும் விட இந்த கண்ட கண்ட இடத்துல எச்சி துப்புறதும்… குப்பையைக் கொட்டுறதும்... ஒன்னுக்கு அடிக்கிற வேலையும் இருக்கே… அடேங்கப்பா… சுயவொழுக்கத்துல உலக நாடுகள் எல்லாம் நம்மகிட்ட பிச்சைதாங்க வாங்கனும்!

நான் மேலே சொன்ன விஷயம்லாம் நாம அன்றாடம் சந்திக்கிறதுல சிலது மட்டும்தான். மத்தபடி நம்ம ஆளுங்களோட சுயவொழுக்கம் பத்தி சொல்லனும்னா… மொத்தப்பதிவுலகமும் பத்தாதுன்றதுதான் நெஜம்.

இதை நான் எழுதிட்டதால மட்டும் இந்தியாவுல சுயவொழுக்கம் வந்திரப்போறதில்லதான். இருந்தாலும் இதப்படிக்கிற கொஞ்ச பேராவது இந்தியாவுலயும் நூறு சதவிகிதம் சுயவொழுக்கம் வரனும்னு ஆசைப்படமாட்டாங்களான்னு ஏதோவொரு ஆதங்கம்… அவ்ளோதான்.