SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Friday, June 24, 2011

ஆவின் பால், அமலா பால் தெரியும்... அதென்னங்கது லோக்பால்?


ஆவின் பால், அமலா பால் தெரியும். என் ஃபிரெண்டு தனபால் கூடத்தெரியும். ஆனா அதென்னங்க லோக்பால்னு கேக்கிறவரா நீங்க? வாங்க முதல்ல படிச்சி தெரிஞ்சிக்கலாம்!

நேத்தைக்கு காலைல நம்ம நாயர் கடையில டீ குடிச்சிட்டிருக்கும்போது யாரோ ரெண்டு படிச்சபுள்ளைங்க லோக்பாலு, லோக்பாலுன்னு பேசிட்டிருந்தாங்க. துண்டை மடிச்சி கக்கத்துல வச்சிக்கிட்டு டீயைக் குடிச்சிக்கிட்டே அவங்க பேச்சக்கேட்டனுங்க.

இம்புட்டுநாளா ஆவின் பாலு, அர்ஜீனோட அம்மா நாலரைப்பாலு மாதிரி லோக் பாலுன்றது மார்க்கெட்டுக்கு புதுசா வந்திருக்கிற ஏதோ லோக்கல் பாலுன்னுதான் நெனச்சிட்டிருந்தேனுங்க. இந்தப் பசங்க பேச்சக் கெட்டதும்தான் ‘’அடப்பாவிமக்களா... இதுதான் லோக் பாலான்னு’’ தெரிஞ்சிக்கிட்டேனுங்க.

யாரோ அன்னா ஹசாரேன்னு சமூக ஆர்வலராம். அவர்தான் இந்த லோக் பால் ஹீரோங்களாம். ஊழலுக்கும், ஊழல் செய்ஞ்ச பணத்தை முழுங்கிட்டு எந்த தண்டனையும் இல்லாம ஹாயா சுத்திட்டிருக்கிற ஊழல்வாதிகளுக்கும் எதிரா மக்களுக்காக போராடுற ரெண்டாவது காந்தின்றாங்க இவரை. ஊழலுக்கு எதிரா 1969ல லோக்சபால நிறைவேத்துன லோக்பால் மசோதாவ அப்பவே ராஜ்ய சபாவுல கெடப்புல போட்டுட்டு இன்னக்கி வரைக்கும் இந்த அரசியல்வாதிங்கலாம் யார் ஆட்சிக்கு வந்தாலும் கமிட்டி, குழுவுன்னு வழக்கம்போல மாத்தி மாத்தி மக்களுக்கு அல்வா குடுத்துட்டு இருந்திருக்காங்க. தகவல் அறியும் உரிமைச்சட்டம்னு ஒன்னு கொண்டு வந்துட்டு இவனுங்க படுறானுங்களே பாடு… அந்தச்சட்டம் வர்றதுக்குகூட இந்த அன்னாவோட பங்கு இருந்திச்சின்னு இப்போதான் பேசிக்கிறாங்க. பத்மபூஷன் விருது வாங்கியிருக்கிற நம்ம சமூக ஆர்வலர் அன்னாதான் திடீர்னு இந்த வருஷம் ஏப்ரல் மாசத்தில லோக்பால மறுபடியும் பத்த வெச்சாருங்களாம்.

இண்டியா அகெய்ன்ஸ்ட் கரெப்ஷன்ற சமூக அமைப்பு உருவாக்கின ஜன லோக்பால உடனடியா மத்திய சர்க்கார் நிறைவேத்தனும்னு ஏப்ரல் 5ம் தேதியிலயிருந்து உண்ணாவிரதமிருந்த நம்ம அன்னாவுக்கு நாடு முழுவதும் எழுந்த மக்கள் ஆதரவப்பாத்த மத்திய அரசு வழக்கம் போல பத்துநபர் கமிட்டின்னு ஒன்னை அமைச்சு உண்ணாவிரதத்தை ஊத்தி மூடுனாங்களாம்.
அடப்பாவிகளா… கமிட்டி அமைச்சாலே விஷயத்தை ஆறப்போட்டு ஊறப்போடுறதுதான்னு படிக்காதப்பய எனக்கே தெரியும்போது நம்மாளுங்க எப்பிடி ஏமாந்தாங்கன்னு தெரியலீங்க!

பத்து நபர் கமிட்டியில மத்திய அரசு சார்பா போடுற அஞ்சு பேரு யாருன்னு அறிவிச்ச உடனேயே உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்க வேண்டாமா இது உருப்படப்போறதில்லைனு?. அப்பிடி யாருங்க அந்த அஞ்சு பேருன்னு கேக்குறீங்களா?... பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், வீரப்பமொய்லி, கபில் சிபல், சல்மான் குர்ஷித்துங்களாம். இப்போ சொல்லுங்க… முதல்ல இருக்கிற நாலு பேரப் பாத்ததுமே புரியுமே… நானு சொன்னது கரெக்ட்தானுங்களே?. உருப்படுமா அந்தக்கமிட்டி?.

இப்போ பலகட்டமா பேசிப்பேசி டயர்டாயிப் போயி அன்னாவே மறுபடியும் உண்ணாவிரதத்தை அறிவிச்சிட்டாருங்களாம்.
நியாந்தானுங்களே! ஆனா இந்த ரெண்டாவது காந்தியோட ரெண்டாவது உண்ணாவிரதம் எந்தளவுக்கு வெற்றியடையுங்கிறது டவுட்டுதானுங்க. ஏன்னா நம்ம மக்கள் எந்த விஷயத்திலுமே சூடு ஆறிடுச்சுன்னா சொரணை கெட்டுப்போன வரலாறு ஏராளமுங்க. ஒருவேளை மத்திய அரசும் இதைத்தெரிஞ்சிக்கிட்டுதான் அப்போ உண்ணாவிரதத்தை அமுக்கிட்டு இப்போ கண்டுக்காம விடுறாங்களோ என்னவோ?. சரி... இதைப்பத்தி தொடர்ந்து தெரிஞ்சிருக்கிறதுக்கு முன்னாடி ‘’ஜன லோக்பால் னா என்ன? அன்னா ஏன் மறுபடியும் உண்ணாவிரதமிருக்கப்போராருன்னு’’ நானு தெரிஞ்சிக்கிட்டதை சொல்லிப்புடுறேனுங்க.

1969ல மத்திய அரசு கெடப்புல போட்டுச்சே அது ‘’லோக்பால்’’ மசோதா. இப்போ அன்னா ஹசாரே குழுவினர் அமல்படுத்தச் சொல்லிக் கேக்கிறது ‘’ஜன லோக்பால்’’ மசோதா. இந்த ‘’ஜன லோக்பால்’’ன்றது சமூக சேவர்கள், நீதிபதிகள், படித்த பண்பான நேர்மையாளர்கள் ஆகியோரை உறுப்பினராகக் கொள்ளும் ஒரு சுதந்திரமான அமைப்பாம். மாநிலங்களில் லோக்யுக்தான்னும் மத்தியில் ஜன லோக்பால்னும் (உதாரணமாச் சொன்னா நம்ம ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் மாதிரி) அமையுற இரட்டை அமைப்பு இது. தேர்தல் கமிஷன் மாதிரியே இவங்களும் அரசாங்கத்தாலும் அரசியல்வாதிகளாலும் கட்டுப்படுத்த முடியாத அமைப்பாம். தேசத்தில எவ்வளவு பெரிய ஆளானாலும் சரி… இல்லை அரசியல்வாதியானாலும் சரி… யார் ஊழல் செய்ஞ்சாலும் இவங்க கம்ப்ளெயின்ட் பதிவு பண்ணி விசாரணை நடத்திக் குறைஞ்சது ஒரு வருடத்திலயிருந்து ரெண்டு வருடத்துக்குள்ள ஊழல் பண்ணவங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கி அவங்க ஊழல்ல சேத்த பணத்தையும் சொத்தையும் கூட புடுங்கி நாட்டுக்கே திரும்ப ஒப்படைக்க முடியும். மக்கள் தாங்கள் பாதிக்கப்படுற ஊழல் சம்பந்தமான எந்த பிரச்சனையையும் இந்த அமைப்புகிட்ட நேரடியாப் புகார் பண்ணலாமாம். இதுதாங்க ஜன லோக்பாலாம். இப்போ புரியுதுங்களா அரசியல்வாதிங்க இதை ஏன் ஒத்துக்க மாட்டேங்கிறாங்கன்னு?

சரி… அன்னா ஏன் மறுபடியும் உண்ணாவிரதத்தை அறிவிச்சிருக்கிறாரு. மத்திய அரசுக்கும் அவருக்கும் பத்து நபர் கமிட்டியில ஏன் ஒத்துவரலை? அங்கதாங்க இருக்கு… ஒவ்வொரு இந்தியனும் தெரிஞ்சிக்கவேண்டிய சமாச்சாரமே!.

நம்ம அன்னா கேக்குற ‘’ஜன லோக்பால்’’ ஊழலை வேட்டையாடுற சிங்கம் மாதிரி. நம்ம மத்திய அரசு தர்றேன்னு சொல்ற ‘’லோக்பால்’’ வெறும் பல்லு புடுங்குன பாம்பு மாதிரி. பல்லப்புடுங்கின பாம்பை வச்சிக்கிட்டு வித்தைதான் காட்ட முடியுமே தவிர உறுப்படியா வெறென்னத்துக்கு உதவும் அது? மத்திய அரசின் லோக்பாலுக்கும் அன்னா கேக்குற ஜன லோக்பாலுக்கும் உள்ள முக்கிய வித்தியாசங்களை அடுக்கிப்புடுறேனுங்க. அதைப்புரிஞ்சிக்கிட்டாலே அடுத்து என்ன பண்ணலாம்னு என்ன மாதிரியே உங்களுக்கும் ஞானம் பொறக்குமுங்க!.

1) லோக்பால் – மக்கள் ஊழல் புகாரை லோக்சபா அல்லது ராஜ்ய சபாவின் சபாநாயகரிடம் மட்டுமே அளிக்கனுமாம். அவராப்பாத்து முடிவு பண்ணி விசாரிக்கலாம்னு நெனக்கிற கேசை மட்டும் லோக்பால் அமைப்புக்கு அனுப்புவாராம். (நடக்கிற காரியமா இது!)

ஜன லோக்பால் – இதுல ஊழல் பத்தி தானாவே புகார் பதிவு பண்ணவும், மக்கள் நேரடியா அளிக்கிற புகார்களைப் பதிவு பண்ணவும் அதிகாரமுண்டாம்.

2) லோக்பால் – இது வெறும் ஆலோசனை மட்டுமே சொல்ல வேண்டிய அமைப்பாம். சபாநாயகர் அனுப்புற புகார் சம்பந்தமா விசாரணை நடத்தி அந்த அறிக்கையை உரிய அரசு அதிகாரிகளுக்கு அனுப்பனுமாம். (எப்படியிருக்கு? இதையும் ஆன்னா ஊன்னா நீங்க அமைக்கிற கமிட்டி மாதிரியே ஆக்கிரலாம்னு திட்டமா?)

ஜன லோக்பால் – இதுக்கு விசாரிக்கிறதோட மட்டுமல்லாம ஊழல் பண்ணவங்களுக்கு தண்டனை வழங்குற அதிகாரமும் உண்டு.

3) லோக்பால் – இதுக்கு போலீஸ் பவர் ஒன்னுமே கெடயாதாம். சும்மா டம்மியாம். (அப்போ… இது என்ன நாக்கு வழிக்கவா?)

ஜன லோக்பால் – இதுக்கு போலீசுக்கு இருக்கிற அத்தனை பவரும் உண்டாம். எஃப்.ஐ.ஆர் போடறதிலயிருந்து விசாரணை பன்றது வரைக்கும் போலீஸ் மாதிரியே எல்லாப் பவரும் இதுக்கும் உண்டாம்.

4) லோக்பால் – சி.பி.ஐ க்கும் இதுக்கும் சம்மந்தமே கெடயாதாம்.

ஜன லோக்பால் – சி.பி.ஐ யின் ஊழல் தடுப்பு பிரிவும் இதுக்கு கீழேதான் இயங்குமாம். (அப்படிப்போடு அருவாள!)

5) லோக்பால் – இதுல யாராவது தவறான புகார் அளிச்சா கடுமையான ஜெயில் தண்டனை உண்டாம். ஆனா புகாருக்கு உள்ளாகும் அதிகாரப் பதவியிலிருப்பவருக்கு ஜெயில் தண்டனை எதுவும் கெடயாதாம். அதே மாதிரி இதுல பதிவு பன்ற புகாரை லோக்பாலும், ஏற்கனவே இயங்கிட்டிருக்கிற அரசு ஊழல் தடுப்பு பிரிவுகளும் தனித்தனியா விசாரிக்குமாம். (அப்போதானே முதல்லயே எல்லா ஆவனங்களையும் அரசு ஊழல் தடுப்பு பிரிவுகளை வச்சு அழிச்சிரலாம். லோக்பால் அமைப்பு விசாரணைக்கு எந்த ஒத்துழைப்பும் கெடைக்காம வெறுங்கைய நக்கிட்டு நிக்க வேண்டியதுதான்!)

ஜன லோக்பால் – இது புகார் குடுக்குற சாதாரண மக்களுக்கான பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அம்சங்களையும் உள்ளடக்கியதாம். இதுல நாட்டுல இருக்கிற எல்லா அரசு ஊழல் தடுப்பு பிரிவுகளும் இதோட நேரடிக்கட்டுப்பாட்டுல வந்துருமாம். இதுக்கு அனைத்து மந்திரிகள் முதல் பிரதம மந்திரி வரைக்கும், எல்லா அரசு அதிகாரிகளையும், நீதிபதிகளையும் கூட புகார்ல விசாரிச்சு தண்டனை வழங்குற அதிகாரம் உண்டாம். (அதான் ஒத்துக்கமாட்டேன்றானுக!)

6) லோக்பால் – இதுல விசாரணைக்கும் தீர்ப்புக்கும் எந்தக் கால வரையறையும் கெடயாதாம்.(வழக்கம் போல கேச ஜவ்வா இழுக்கலாம்ல?!) லஞ்சம் வாங்குற அதிகாரிகளுக்கு எதிராவும் எந்த சரத்தும் இல்லையாம். அதுவுமில்லாம இது எல்லாத்தையும் தாண்டி ஏதோவொரு அதிசயமா ஊழல் நிரூபிக்கப்பட்டாக்கூட அதுக்கான தண்டனை வெறும் ஆறு மாசத்திலயிருந்து ஏழு வருஷம் வரைக்கும்தானாம். அதுமட்டுமில்லாம ஊழல்ல தண்டனை பெற்றவன்கிட்டயிருந்து எந்தப்பணத்தையும், சொத்தையும் ரெகவரி பண்ண மாட்டாங்களாம். அவன் ஜெயில் தண்டனை முடிஞ்சி வந்ததும் ஊழல்ல சம்பாதிச்சதெல்லாம் ஹாயா அனுபவிக்கலாமாம். (த்த்தூ… சொரணை கெட்ட ஜென்மங்களா… உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட வெக்கம் மானம் கெடயாதா?!)

ஜன லோக்பால் – இதுல பதிவு பன்ற புகாருக்கு ரெண்டு வருஷத்துக்குள்ள கேஸ் முடிஞ்சி தண்டனையும் வழங்கப்படுமாம். லஞ்சத்தால பாதிக்கப்படுற பொதுமக்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தே ஃபைன் வசூலிச்சி இழப்பீடு வழங்குவதோடு லஞ்சம் வாங்குற அரசு அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யவும் இதுக்கு அதிகாரம் உண்டாம். ஊழல் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சமாக ஐந்து வருடம் முதல் ஆயுள் தண்டனை வரைக்கும் வழங்க வழிவகைகள் உண்டாம். அதுமட்டுமில்லாம ஊழல் நிரூபிக்கப்பட்டவரிடமிருந்து அவர் ஊழலில் சம்பாதித்தவை மொத்தமும் ரெக்கவரி செய்யப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படுமாம்.

இப்போ தெரியுதுங்களா… ஏன் நம்ம அரசியல்வாதிகளும் அரசாங்கமும் அன்னாவோட ஜன லோக்பால ஏத்துக்க மாட்டேங்குறாங்கன்னு? எப்பிடிய்யா… தனக்குத்தானே ஆப்பு வச்சிக்க எவனாவது சம்மதிப்பானா? அதான் எப்பாடுபட்டாவது இந்த அன்னா ஹசாரேவையும் அவரோட போராட்டத்தையும் அடக்கி ஜன லோக்பாலுக்கும் சமாதி கட்டியே ஆகனும்னு அரசியல்வாதிகளால் நடத்தப்படும் அரசாங்கம் மும்முரமா பல குள்ளநரித்தனங்களை யோசிச்சிட்டிருக்குதாம்.

எல்லாத்தையும் கேட்டபிறகு படிக்காத முட்டாள் எனக்கே ஒரு ஞானோதயம் வந்தமாதிரி இருந்திச்சிங்க. டீயைக்குடிச்சிட்டு அந்தப் பசங்ககிட்டப்போயி ‘’தம்பி… அந்த அய்யா எப்போ உண்ணாவிரதம் இருக்கப்போறாங்களாம்?’’னு கேட்டேனுங்க. ஆகஸ்ட் 16ம் தேதியாம்.
கக்கத்துல இருந்த துண்டை உதறி தோள்ல போட்டுட்டு நிச்சயமா அந்தப்பெரியவருக்கு ஆதரவா கலந்துக்கனும்னு முடிவு பண்ணிட்டு நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமா நடக்க ஆரம்பிச்சேனுங்க... நாட்டுக்காக நாமதான் போராடமாட்டோம். போராடுறவங்களுக்கும் ஆதரவு குடுக்கலைனா அப்புறம் நாமெல்லாம் ‘’இந்தியா என் தாய்நாடு, நானொரு இந்தியன்’’னு சொல்லிக்கிறதுல என்னதாங்க அர்த்தமிருக்கமுடியும்?.

3 comments:

  1. கட்டுரை சூப்பரப்பு.

    ReplyDelete
  2. நன்றி. படிச்சதோட நிக்காம ஆதரவு குடுத்து ஆதரவு திரட்டவும் செய்ங்க அப்பு... எனக்கில்ல,அன்னாவுக்கு!

    ReplyDelete
  3. Really i don't know this lokbal but i just now read wow super man Mr.anna i will full support the anna team...

    ReplyDelete