SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Monday, June 20, 2011

புட்டப்பர்த்தியும் ஒரு புண்ணாக்கு தேசமும்...

‘’புட்டப்பர்த்தியில் ‘பகவான்’ சாய்பாபாவின் அறையில் குவியல் குவியலாய் பொக்கிஷங்கள்’’ பெரும்பாலான ஊடகங்களின் சமீபத்திய தலைப்புச் செய்தியிது. 97கிலோ தங்கம், 307கிலோ வெள்ளி, 12கோடி ரொக்கப்பணம் என்பதெல்லாம் எப்படி பொக்கிஷம் என்று அழைக்கப்படுகிறதென்று மிகப்பெரிய சந்தேகம் எனக்கு.

அட முட்டாள்களே… எங்கேயாவது ஊழல் மற்றும் கணக்கில் வராத பணமோ, நகையோ பிடிபட்டால் ‘’கத்தை கத்தையாய் ஊழல் பணம் சிக்கியது’’, ‘’கட்டுக்கட்டாய் கறுப்புப்பணம் சிக்கியது’’, என்று செய்தி வாசிக்கும் நீங்கள் சாய்பாபா விஷயத்தில் மட்டும் பொக்கிஷம் என்று ஜால்ரா தட்டுவதேன்? பொக்கிஷம் என்ற வார்த்தைக்கு உங்களுக்கெல்லாம் அர்த்தம் தெரியாதா? ஒருவேளை 2ஜி ஊழலிலும் ஏதாவது பணம் சிக்கினால் பொக்கிஷம் கிடைத்ததாய்தான் செய்தி பரப்புவீர்களா நீங்கள்? இவ்வளவு பணமும், நகைகளும் தன்னைக் கடவுள் என்று நம்பச்செய்து செத்துப்போன ஒரு சாமியாரின் அறையில் இருந்திருக்கிறது.

பெரும்பாலான முட்டாள்கள் ஒன்று கூடி ஒரு ஊழல் செய்தியை நாட்டு மக்களிடம் ஆச்சர்யச் செய்தியாக, அபூர்வசக்திச் செய்தியாக மாற்றிப் பரப்ப முயலுகிறார்கள். இந்தப்பணம் மற்றும் நகைகளுக்கான மூலத்தை பொருளாதாரக் குற்றப்பிரிவின் கீழ் விசாரித்து உண்மையை மக்களுக்கு உணர்த்த வேண்டிய அரசு வழக்கம் போல தூங்கிக்கொண்டிருக்கிறது. எவனாவது ஒரு சாமான்யன் தனது சொந்த உழைப்பில் சம்பாதித்த நகையையும் பணத்தையும் எடுத்துச் செல்லும்போது சிக்கினால் விசாரணை மேல் விசாரணை என்று துளைத்தெடுக்கும் சட்டமும் அதன் கைத்தடிகளும், சாமியாரின் அறையில் சிக்கினால் மட்டும் வாய் மூடி மௌனம் காத்து சம்பந்தம் இல்லாதவர்கள் போல ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் கொடுமை கூத்தடிப்பது நமது தேசத்திலன்றி வெறெங்கும் நடக்குமா என்பது சந்தேகமே!

படித்தவர்களே முட்டாள்களாக பல ஆசாமிகளை சாமிகளாக நம்பிக் கொண்டிருக்கையில் பரவலான மக்களின் மீது குற்றம் சொல்லுதல் தவறே. ஆனால் சாமான்யன்களை சாமிகள் அல்ல என்று உணர்த்தி மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் அரசுகளும் இந்தச் சாமியார்களின் காலில் நிர்க்கதியாகும் வெட்கக்கேட்டிற்கு எப்போது விடிவு பிறக்கப்போகிறதோ தெரியவில்லை?. பிரேமானந்தா, நித்யானந்தா என்று வரிசை வரிசையாய் எத்தனை ஆனந்தாக்கள் வந்தாலும் சரி… இல்லை, சாய் பகவான், கல்கி பகவான், அம்மா பகவான் என்று எத்தனை பகவான்களும், பாபாக்களும் முளைத்தாலும் சரி… அத்தனையும் ஏமாற்றுவேலையே என்பது இந்த தேசத்தில் இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு புரியாமலே போகுமோ தெரியவில்லை?! இது இந்தச் சாமியார்களுக்கு கிடைத்த வரமா?, இல்லை… தேசத்துக்கு கிடைத்த சாபமா? என்றும் புரியவில்லை.

சாமியார் என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் மறந்துபோனதா? இல்லை… மறக்கடிக்கப்பட்டதா? சாமியார் என்றாலே எல்லாம் துறந்தவர். கட்டிய துணியோடு கடவுளை வணங்கி சாமான்யன்களுக்கும் ஆன்மீகத்தைப் பரப்பி சேவை செய்பவர். காசு, பணம், ஆடம்பரம் மீதெல்லாம் ஆசை கொள்ளாத பற்றற்றவர் என்பதெல்லாம் இங்கே எத்தனை பேருக்கு தெரியுமென்பது சத்தியமாய் சந்தேகமே! பல சாமியார்கள் தங்கள் குடும்பத்தோடு குதூகலமாய் வாழ்வதோடு மட்டுமல்லாமல், தங்கள் தர்ம பத்தினிகளையும் கடவுளாய் அறிவித்து இணைந்து கொடுக்கும் போஸ்கள் இத்தேசத்தின் அறியாமைக்கான உச்சக்கட்ட சாட்சியாக இன்றும் பல வீட்டு பூஜையறைகளில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

ஜிகு ஜிகு பட்டாடைகளும், பளபளக்கும் கார்களும், ஆடம்பர பங்களாக்களும், அரசின் கஜானாவை விட அதிகமாய் குவித்து வைக்கப்படும் சொத்துக்களும், பணமும், நகையும்தான் இன்றைய சாமியார்களின் அடையாளங்கள் ஆகிப்போய் வெகு காலமாகிவிட்டது. சாமியார் என்பது துறவறம் பூண்டு ஆன்மீகம் வளர்க்கும் சேவையென்பது மாறி, சாமியார் என்பது சொத்துக்களைக் குவிக்கும் கார்ப்பரேட் தொழிலாகிவிட்டது. அதிலும் இது வரி கட்ட அவசியமில்லாத வருமானம் குவியும் தொழில் என்பது மேலுமொரு சிறப்பம்சமாகும்.

ஒவ்வொரு சாமியார்களிடமும் ஒவ்வொரு கட்டணம். பாதபூஜைக்கு ரூ.50000 முதல் ரூ.3லட்சம் வரையும், சாமியாரின் அருகில் முன் வரிசையில் இரண்டு மணிநேரம் அமர்ந்திருக்க ரூ.5லட்சமென்பதும், இந்தச்சாமியார்களின் பாதம் ஏதாவது ஒரு ஊரில் படவேண்டினால் அங்கு அவரின் வருமானம் ஊரைப்பொறுத்து ரூ.1லட்சம் முதல் ரூ.10லட்சத்திற்கு குறையாமல் இருக்கவேண்டும் என்பதும் இவர்களின் ‘’சேவை’’ கட்டணங்களாகும். இதெல்லாம் தெரிந்தும்கூட இவர்களின் தீவிர பக்தர்கள் தொடர்ந்து ஆள்பிடித்துக் கொண்டிருப்பது இவர்களின் வருமானங்கள் வற்றவே வற்றாது என்பதற்கான மிகச்சிறந்த சாட்சியாகி நிற்கிறது!

உணர்ச்சிகளை அடக்கி வாழவேண்டிய சாமியார் வாழ்க்கையில் இன்று பெரும்பாலான சாமியார்கள் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி நாறினாலும் அதற்கு பின்னும் அவர்களைத் தொடரும் பெரும் மூடர் கூட்டத்தைக் கொண்டது இத்தேசத்தின் துரதிர்ஷ்டமே! சரி…ஏதோ சேவை செய்யும் மனப்பான்மையுடன் இயங்கும் டிரஸ்ட்களுக்காக அவர்களின் வருமானத்துக்கு வரிவிதித்தல் கூடாது எனும் சட்டம் எப்போதோ இயற்றப்பட்டிருக்கிறது இத்தேசத்தில். ஆனால் அதே சட்டத்தை வைத்துக்கொண்டே இன்று வரிவிதிப்பின்றி சொத்துக்களைக் குவித்துக் கொண்டிருக்கிறது பல சாமியார் மடங்கள். எப்போது சாமியார் மடங்களை இச்சட்டத்திலிருந்து நீக்கி நாட்டுக்குச் சேரவேண்டிய தொகைகளை இவர்களிடமிருந்து பெறப்போகிறோம்? இந்தியாவில் இருக்கும் எல்லா சாமியார் மடங்களின் சொத்துக்களையும் நாட்டுடமையாக்கினால் அடுத்த கணமே இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாகமுடியும். ஆனால் இதை எந்தக் காலத்திலும் எந்த அரசிலும் நினைத்துக் கூடப்பார்க்க விரும்பாத புண்ணாக்குகளைக் கொண்ட புண்ணிய தேசமிது! பழித்துப்பேசினால் சாமி கண்ணைக்குத்திடும் என்ற சிறு வயதுக்கதைகள் இப்போது எதிர்த்துப்பேசினால் சாமியார் கூலிப்படைகளைக் கொண்டு குத்திவிடுவார் எனுமளவுக்கு நாறியாகிவிட்டது.

கோடிக்கணக்கான கடனைக் கொண்ட தேசத்தில், தங்கக் கோவில்கள் கட்டிக் கைகூப்பித்தொழும் விந்தைகளும் கேட்பாரின்றி அரங்கேறிக்கொண்டேதான் இருக்கிறது. புட்டப்பர்த்தி சாய்பாபாவின் அறக்கட்டளைச் சொத்துக்களின் மதிப்பு 2ஜி ஊழல் தொகையைவிட அதிகமென்று தெரிகிறது. ஆனால் இந்தச் சொத்துக்களால் நாட்டுக்கு என்ன நன்மை என்று கேட்கும் தைரியம் இங்கே எந்த ஆட்சியாளர்களுக்கும் இல்லை!

தமிழ்நாட்டில் மேல்மருவத்தூர், ஶ்ரீபுரம்… ஆந்திராவில் புட்டப்பர்த்தி, திருப்பதி… கர்நாடகாவில் நித்யானந்தா மடம் என்று கண்ணுக்குத்தெரிந்தும், தெரியாமலும் கடவுளின் பெயரில் நாடு முழுவதும், மாநிலம் தோறும் இங்கே தேசத்தின் சொத்துக்கள் வெளிவராமல் முடங்கிக்கிடக்கிறது. இந்தச் சொத்துக்களை எல்லாம் நாட்டுடமையாக்கலாம் என்ற எந்தவொரு சீர்திருத்தச் சிந்தனையுமின்றி சாமியார்களின் கால்களில் சரணாகதியாகிக் கிடக்கும் முட்டாள்களைக் கொண்ட புண்ணாக்கு தேசமிது.

‘’என்றாவது விடிவு வருமா? என்று யாரைக்கேட்பதென்றே தெரியவில்லை!!!’’

1 comment:

  1. சாமியார்னா ரமணரும், ராகவேந்திரரும். அரசியல்வாதினா காமராசரும் அண்ணாதுரையும்தான்

    ReplyDelete