SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Sunday, June 19, 2011

பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?...

பத்திரிக்கையாளர்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களும், பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்புகள் குறித்த பல்வேறு சர்வே முடிவுகளும் தொடர்ந்து கவலை கொள்ளத்தக்க நிலைமையையே உணர்த்திக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் மும்பையில் ஜெ தேய் என்ற மிட்-டே பத்திரிக்கையின் புலனாய்வு நிருபர் சுட்டுக் கொல்லப்பட்டு நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சி அலை உண்டாக்கப்பட்டிருக்கிறது. அதைப் போலவே கேரளாவிலும் மாத்ருபூமி பத்திரிக்கையின் கொல்லம் நிருபர் உன்னிதன் கூலிப்படைகளின் கொலை முயற்சியில் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைக் கொலை செய்ய கூலிப்படைகளை ஏவியதாக கேரளாவின் ஆயுதப்படைப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி ஒருவரே கைது செய்யப்பட்டிருப்பது எல்லாவற்றையும் விட அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.

உண்மையிலேயே இந்தியாவில் பத்திரிகையாளர்களின் நிலை என்ன? பத்திரிக்கை சுதந்திரம் நிலை நாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறதா? இல்லை… எழுத்துரிமை கொஞ்ச கொஞ்சமாய் அடிமைப்படுத்தப்படுமா? பத்திரிக்கை சுதந்திரம் குறித்த சமீபத்திய உலகளாவிய ஆய்வு ஒன்றின் முடிவில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பில்லாத உலகின் டாப்20 நாடுகளில் இந்தியாவும் இடம் பிடித்திருப்பது உண்மையிலேயே நாமெல்லாம் கவலைப்பட வேண்டிய விஷயமென்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதே போன்ற மற்றுமொரு ஆய்வில் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகள் வரிசையில் இந்தியா மூன்றாம் இடம் பிடித்திருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாயிருக்கிறது.

எதனால் இந்தியாவில் இது போன்ற சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது என்று ஆராயத் தொடங்கினால் கீழ் வரும் காரணங்கள் வெகு எளிதாய் புரிபடத் தொடங்கும்.

# சமீபத்திய ஆண்டுகளில் அரசியல்வாதிகளுக்கு எதிராக பத்திரிக்கையாளர்கள் நடத்திய பல அதிரடி ஸ்பை கேமரா ஆபரேஷன்களால் ஊழல்வாதிகளுக்கு பத்திரிக்கைகள் மீதான கோபமும் வெறுப்பும் அதிகரித்திருக்கிறது.

# அரசியலையும், ஊழல்களையும் அக்கு அக்காய் பிரிக்கும் பல புலனாய்வுப் பத்திரிக்கைகள் மாநிலம் தோறும் உருவாகிக் கொண்டிருப்பது அரசியல்வாதிகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் எரிச்சலை உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறது.

# பத்திரிக்கைகள் முகத்திரைகளைக் கிழிக்க முயன்று மோதுவது அதிகார பலமும் பண பலமும் கொண்ட பல பெரிய கைகளிடம் என்ற காரணமும் பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதலின் அடிப்படையே.

# எந்தவொரு விஷயத்தின் உண்மை முகத்தையும் படித்தவர் முதல் பாமரன் வரை உடனுக்குடன் கொண்டு சேர்த்து விடும் பத்திரிக்கை உலகத்தின் அதிவேக வளர்ச்சியால் பல விஷயங்களை மூடி மறைத்துவிட முடியாமல் திணரும் அதிகாரவர்க்கத்தின் வெறுப்பு.

# மாநில மற்றும் மத்திய அரசை தேர்ந்தெடுக்கும் தேர்தல்களிலும் மக்களின் மனநிலையை மாற்றும் சக்தி கொண்ட அளவுக்கு பத்திரிக்கைகள் வளர்ந்திருப்பது அரசியல்வாதிகளின் கண்களை உறுத்தத் தொடங்கியிருக்கிறது.

# எல்லாவற்றுக்கும் மேலாக தனிமனித ஒழுக்கத்தைப் பேணாத நமது கலாச்சாரமும், கடுமையான தண்டனைகள் இல்லாத, எந்தக் குற்றத்தில் இருந்தும் எளிதில் தப்பித்துக் கொள்ளக்கூடிய நமது சட்டங்களும்கூட பத்திரிக்கையாளர்களின் மீதான தாக்குதல்களுக்கு ஒரு முக்கிய காரணமே.

பத்திரிக்கைகள் போன்றே இந்தியாவில் அதிவேக வளர்ச்சியில் இருக்கும் மற்றொரு விஷயம் இணையதளத்தின் பதிவுலகம். பத்திரிக்கைகளுக்கு கொஞ்சமும் சளைக்காமல் ஆட்சியாளர்களையும், அரசியல்வாதிகளையும் விமர்சிக்கும் பணியை பதிவுலகமும் செய்து வருவதை இப்போதுதான் அரசியல்வாதிகள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். அதுவும் பதிவுலகத்தின் வானளாவிய சுதந்திரம் காரணமாக இங்கே ஊழல்வாதிகள் பத்திரிக்கைகளை விட மிக மோசமாய் விமர்சிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தின் சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்கு பதிவுலகமும் ஒரு முக்கிய காரணமென்ற செய்தி மத்திய அரசை எட்டியிருப்பதாய் கேள்வி. ஏற்கனவே நாடு முழுவதும் பதிவுலகத்தை கண்காணிக்கும் பணியை ஆரம்பித்துவிட்ட மத்திய அரசுக்கு இந்தச் செய்தியால் பதிவுலகத்தின் மேலான வெறுப்பு இன்னும் அதிகரித்திருக்கவே செய்திருக்கிறது. பதிவுலகத்தை இந்தியாவில் மொத்தமாய் தடை செய்ய முடியுமா என்று ஏற்கனவே மத்திய அரசின் சட்டவல்லுனர்களைக் கொண்டு ஆராயத் தொடங்கியாகிவிட்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால் எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என்ற பாகுபாடுகள் எதுவுமின்றி அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பது பதிவுலகத்தை முளையிலேயே கிள்ளியெறியும் முயற்சியில் மட்டுமே. ஏனென்றால் எல்லா அரசியல்வாதிகளுமே நாளை பதிவுலகம் நமக்கும் எதிரிதான் என்பதைப் புரிந்து கொண்டுவிட்டார்கள். எளிதாய்ப் பிடுங்கி வீசலாம் என்று எண்ணிக்கொண்டு வந்தவர்கள் பதிவுலகம் ஆலமரமாகிப் போனதைக் கண்டு இப்போது கோடாலியைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

வெறும் காமெடியும், கவிதைகளும், சினிமா விமர்சனமும், சமையல் குறிப்புகளும் எழுதிக்கொண்டிருக்கும் பதிவர்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் வரப்போவதில்லை. ஆனால் அரசியல் எழுதும் பதிவர்கள் கவனிக்க வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது. இதுவரை பதிவுலகத்தில் நீங்கள் எழுதும் அரசியல் கட்டுரைகள் சம்பந்தப்பட்டவர்களை சென்றடைந்திருக்காது என்று நீங்கள் நம்பினால்…ஸாரி,அது தவறென்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆங்கிலமானாலும் சரி… மாநில மொழிகளானாலும் சரி… பதிவுலகத்தின் அரசியல் கட்டுரைகள் மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசுகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை. இப்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் நீங்கள் என்ன புனைப்பெயரில் எழுதினாலும் அரசு நினைத்தால் ஒரு சில மணித்துளியில் உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து நிற்கலாம்.

உங்களது கட்டுரைகளால் பாதிக்கப்படும் அதிகாரவர்க்கம் உங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கமுடியாமல் போகும் பட்சத்தில் அவர்களது வழக்கமான பாணியில் உங்களுக்கு பரிசளிக்க முயலுவார்கள். ஏற்கனவே பதிவுலகம் குறிவைக்கப்பட்டுவிட்டதால் இனி வரும் நாட்களில் கவனமாக இல்லாத பதிவர்கள் நிச்சயமாய் பாதிக்கப்படக்கூடும். இது நிச்சயமாய் அரசியல் எழுதும் பதிவர்களை இனி எழுதவேண்டாம் என்று கூறும் செய்தியல்ல. இனி வரும் நாட்களில் கவனமாக இருங்கள் என்பதான வெறும் எச்சரிக்கை செய்தி மட்டுமே. மேலும் மத்திய அரசும் பதிவுலகத்தை தீவிரமாகக் கண்காணித்து வருவதால் அரசியல் எழுதும் ஒவ்வொரு பதிவர்களும் கொஞ்சம் உஷாராய் இருப்பதில் தவறொன்றுமில்லை.

பதிவர்களுக்காக ஒரு சக பதிவராய் எனக்குத் தெரிந்ததைக் கூறியிருக்கிறேன். இதை அக்கறையான எச்சரிக்கையாய் எடுத்துக்கொள்வதும்… இல்லை எள்ளி நகையாடுவதும் அவரவர் விருப்பத்தைச் சார்ந்தது.

ஜாக்கிரதை நண்பர்களே… இனி பதிவர்களும் குறிவைக்கப்படலாம்!

12 comments:

 1. U r welcome my dear friend... its my duty.

  ReplyDelete
 2. உண்மையை சொல்பவர்களை என்றுமே நாடும் சமுக விரோதிகளும் விடுவதில்லை...

  ReplyDelete
 3. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் மிடியவை தொடர்ந்து இந்த பதிவர்களும் கண்காணிக்கப்படுவார்கள் என்பது உண்மைதான்..

  ReplyDelete
 4. //எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என்ற பாகுபாடுகள் எதுவுமின்றி அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பது பதிவுலகத்தை முளையிலேயே கிள்ளியெறியும் முயற்சியில் மட்டுமே. //

  சரியான கணிப்பு. நாம என்ன செய்யப்போறோம்?

  ReplyDelete
 5. சில விடப்பட்ட தகவல்கள்...
  ௧. ஏற்கனவே இரு மாநிலங்களில் அமுலுக்கு வந்திருக்கும் information technology act என்னும் சட்டத்தை இந்திய அரசாங்கம் அமுல்படுத்தியிருக்கிறது.. தேசிய இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்தாய் என்று ஏழு ஆண்டுகள் உள்ளே தள்ளவும் இந்த சட்டம் வழி வகுக்கிறது..
  ௨. வலைப்பூவில் இடம் பெரும் கருத்துக்களுக்கு எழுதுபவர்கள் மட்டும் பொறுப்பு அல்ல என்றும் அதை பதிவேற்றம் செய்யும் அனைத்து இணையதளங்களும் பொறுப்பு என்பதும் அந்த சட்டத்தில் உள்ள சின்ன ஒரு சங்கதி...
  ௩. சட்டத்துறை மூலமாகவே உங்களை சின்ன பின்னப் படுத்தலாம் என்னும் பொழுது கட்டப் பஞ்சாயத்து தேவை இருக்காது என்று நினைக்கிறேன்..
  மேலும் இது பற்றி அறிய கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...

  http://suryajeeva.blogspot.com/2011/04/blog-post_5436.html

  ReplyDelete
 6. சரியான விஷயம்.நன்று.

  ReplyDelete
 7. பகிர்வுக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 8. ஒவ்வொரு பதிவர்களும் கொஞ்சம் உஷாராய் இருப்பதில் தவறொன்றுமில்லை.பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 9. ALERTING ARTICLE.MY DEAR BRAVE BLOGGERS,WILL SUSTAIN ANYTHING,I THINK.

  ReplyDelete
 10. http://blogintamil.blogspot.com/2011/06/2_23.html

  தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

  ReplyDelete