SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Friday, June 17, 2011

ஊழல் மேல் ஊழல்… நாம வெட்கம் கெட்ட ஆட்கள்!

ஸ்ஸ்ஸ்… யப்பா, என்னா வெயில்லுன்ற மாதிரி… எப்பா என்னா ஊழலு. எறும்பு புத்துல இருந்து கெளம்புற எறும்புங்க மாதிரி… மழை ஓய்ஞ்ச ஈசல் கூட்டம் மாதிரி… நாளொறுமேனி பொழுதொரு வண்ணமா கொசகொச கொசன்னு ஊழல்ங்க கெளம்பி நாறிக்கிட்டேயிருக்குதே… இங்க யாருக்குமே வெட்கம் கிடையாதா? இந்த அக்கப்போரே தாங்க முடியாத நேரத்தில கண்ட கண்ட காவிப்பயலுக வேற விளம்பர ஸ்டண்ட்டுக்காக அடிக்குறானுங்க பாரு கூத்து… என்னதாங்க நடக்குது இங்கே?

மத்தியில சில முக்கிய அறிவுஜீவிங்க இருக்காங்க பாருங்க… யப்போவ்… சூப்பருங்க! வெட்கம், மானம், சூடு, சொரணையெல்லாம் தூக்கி வீசிட்டு எல்லா விஷயத்தையும் எப்படி ‘’டேக் இட் ஈஸியா’’ எடுத்துக்கிறது?... எந்தப் பிரச்சனையா இருந்தாலும் எப்படி ஆறப்போட்டு ஊறப்போடுறது?ன்னு இவங்கல்லாம் வாழ்க்கை வரலாறே எழுதலாங்க! பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், கபில் சிபல் இவங்களுக்கெல்லாம் மேல பிரதமர் மன்மோகன் சிங், அட அவருக்கும் மேல நம்ம சோனியா மேடம் இவங்களெல்லாம் நமக்கும் நம்ம நாட்டுக்கும் ஆத்திட்டிருக்கிற தொண்டுகளப்பத்தி கண்டிப்பா நாம எல்லாரும் தெரிஞ்சிக்கனுங்க! அய்யோ பாவம் மன்மோகன் சிங்… நிதியமைச்சராயிருந்து பொருளாதார மேதைன்னு எடுத்த பேரோடவே அரசியல விட்டு விலகியிருக்கலாம். என்ன பண்றது அவருக்கு ஏழரை சோனியா உருவத்துல இருந்திருக்குது! அட இந்த சோனியா காந்தியாவது தானே பிரதமர் ஆகி தன் இஷ்டப்படி ஆடியிருக்கலாம். அத விட்டுப்புட்டு என்னாத்துக்குத்தான் பொம்மை மாதிரி மன்மோகனை உக்காரவச்சு மண்டகாய வைச்சிக்கிட்டு இருக்குதுன்னு தெரியலை! அவரு பாவம்… சொன்ன வேலையைச் செய்யுறாரு. தர்ம சங்கடமான நேரத்துல வாய மூடிக்கிறாரு. இல்லை… வெளிநாட்டுக்கு எஸ்ஸாயிடுறாரு. இதுவரைக்கும் மன்மோகன் சிங்கே உறுதியா, தெளிவா, உருப்படியா எடுத்த முடிவுன்னு ஏதாவது இருக்கான்னு தேடிப்பாத்தா வெறும் ஏமாத்தம்தாங்க மிஞ்சுது.

இதுல வேற வெக்கமே இல்லாம ‘’ஊழலை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது’’ன்னும், ‘’விலைவாசி வெகு விரைவில் கட்டுப்படுத்தப்படும்’’னும் அப்பப்போ பிரதமர் அறிக்கை வேற விட்டுக்கிறாரு! இவங்க அறிக்கை விடவிட விலைவாசியும் ஏறிக்கிட்டேதான் இருக்கு. ஊழலும் புதுசுபுதுசா வெளிய வந்துக்கிட்டுதான் இருக்கு. அடிக்கடி அறிக்கை விட்டுட்டிருக்கீங்களே… ஆனா இன்னும் வெலவாசி கொறஞ்ச பாடில்லையேன்னு யாராவது கேட்டா ‘’அது போன மாசம்… இது இந்த மாசம்’’னு வடிவேலு பாணியில பதில் சொன்னாலும் சொல்லுவாருங்க நம்ம மேதகு பிரதமர்!

அதேமாதிரிதாங்க சோனியா காந்தியும். அப்பப்போ காங்கிரஸ் கட்சிக்கூட்டத்தில ‘’ஊழலுக்கு காங்கிரஸ் எதிரி’’னு பயங்கரமா காமெடி பண்றாங்க! இந்த இத்தாலியில குவாத்ரோச்சி…குவாத்ரோச்சின்னு ஒருத்தர் இருந்தாராம். அதைப்பத்தியெல்லாம் படிச்ச பல பேருக்கே தெரியாதபோது நம்ம பாமர சனங்களுக்கு மட்டும் என்ன தெரிஞ்சிரப்போவுதுன்ற தைரியத்துலதான இப்படியெல்லாம் காமெடி பன்றீங்க சோனியா மேடம்னு யாரும் கேக்கப்போறதில்லதான். ஆனா எப்படித்தான் இவங்கெல்லாம் ஒன்னுமே தெரியாத உத்தமர்கள் மாதிரியே நடிக்கிறாங்கன்னு தெரியல!

சினிமாவுல நடிக்கிறவங்கெல்லாம் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு சொல்ற சில கோமாளி அரசியல்வாதிங்ககிட்ட ஒன்னு கேக்கனும்… சினிமாவுல நடிக்கிறவங்க அரசியலுக்கு வரக்கூடாது. ஆனா அரசியல்வாதிங்க மட்டும் யோக்கியம் மாதிரியே நடிப்பீங்க. அது மட்டும் சரியா?!

அடுத்த காமெடி கிங்குகள்… கபில் சிபலும், பிரணாப் முகர்ஜியும்தான். கபில் சிபல் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரா கிழிச்ச கிழிப்பு போறாதுன்னு இவருக்கு தொலைதொடர்புத்துறையையும் கூடுதல் பொறுப்பா தூக்கிக்குடுத்த கொடுமையை என்னான்னு சொல்றது?! 2ஜி அலைவரிசைல ஊழல் நடந்துருக்குதின்னு ஒருநாள் பேட்டி கொடுக்குறாரு. கொஞ்ச நாள் கழிச்சு ஊழல் நடந்திருக்க வாய்ப்பேயில்ல. எல்லாம் முறைப்படிதான் நடந்திருக்குதுன்றாரு. அப்போ முதல்ல ஊழல் நடந்திருக்குதுன்னு பேட்டி குடுத்த அன்னிக்கி தண்ணிய கிண்ணிய போட்டுட்டு பேட்டி கொடுத்தீங்களான்னு கேட்டா தப்பா? ரைட்டா?!

இந்த பிரணாப்முகர்ஜி இருக்காரு பாருங்க… யப்பா! வயசானவங்கல்லாம் அக்கடான்னு வீட்டுல உக்காராம நாட்டோட தலையெழுத்தோட விளையாடறதுக்கு எப்போதான் தடைச்சட்டம் வரப்போவுதோ தெரியலை! இவரு பேசுறப்போ பார்லிமெண்ட்ல யாராவது குறுக்க பேசினாலோ இல்ல… கிராஸ் கொஸ்டின் பண்ணாலோ இவருக்கு உடனே கோவம் வந்துருமாம். ஆனா இவரு மட்டும் கறுப்பு பணத்தையெல்லாம் மீட்க முடியாதுன்னு சொல்லிக்கிட்டே நிதியமைச்சரா இருப்பாராம். நமக்கெல்லாம் கோவமே வரக்கூடாதாம்.

எதுக்கு இவங்களப்பத்தியெல்லாம் எழுத வேண்டியிருக்குன்னா… எத்தன ஊழல் வெளிவந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காம எருமை மாட்டு மேல மழை பெய்ஞ்ச கணக்கா எதுவுமே நடக்காத மாதிரியே ஆட்சி நடத்துறாங்களேன்ற ஆதங்கத்துனாலதான். ஊழல் செய்றவங்களுக்கு தேர்தல்ல மக்கள் வாக்களிக்காம தண்டனை குடுக்கலாம். ஆனா அவங்க ஊழல் செய்ஞ்ச பணத்தை எப்படி திரும்ப மீட்கிறது. அந்த நடவடிக்கையெல்லாம் இந்த மாதிரி அரசியல்வாதிங்களோட அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டுத்தானே இருக்கு.

போஃபர்ஸ் ஊழல், பங்குச்சந்தை ஊழல், பத்திரப்பேப்பர் ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமென்வெல்த் ஊழல், 2ஜி ஊழல் இப்படி கண்ணுக்கு தெரிஞ்ச ஊழலானாலும் சரி… வெளிய தெரியாமலே போன ஊழலானாலும் சரி… எல்லாத்துக்கும் ரிசல்ட் ஒன்னுதான்.
‘’நாட்டுக்கு நாமம்…செஞ்சவனுக்கு லாபம்’’!

2ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல்லயெல்லாம் சம்பந்தப்பட்டவங்களுக்கு பயங்கர தண்டனை கிடைக்கும்னு யாராவது நம்பிக்கிட்டிருந்தா அவங்களவிட அப்பாவி இந்த உலகத்துல எங்கயும் இருக்கமுடியாது! இதுவரைக்கும் எந்த ஒரு ஊழல்லையாவது சம்பந்தப்பட்டவங்களுக்கு தண்டனை கிடைச்சிருக்குதா நம்ம நாட்டுல? விசாரணைக்கமிஷன், சிபிஐ என்கொயரி, அப்படி இப்படின்னு கொஞ்ச நாளைக்கு சீன் காமிப்பாங்க. அப்புறமா அந்த விஷயங்களையெல்லாம் மீடியாக்களும் மறந்துட்டு மக்களையும் மறக்க வைச்சிருவாங்க. அட எவ்வளவு பைனான்ஸ் கம்பெனிங்க மக்களுக்கு ஆப்படிச்சாங்க? இதுவரைக்கும் அதுல ஒரு கேஸ்… ஒரே ஒரு கேசுலயாவது மக்கள் பணத்தை மீட்டிருக்காங்களா? இல்லை… குற்றவாளிகளுக்குதான் தண்டனை கிடைச்சிருக்குதா? அதிகாரத்தில இருக்கிற எல்லாருக்கும் தெரியும்… ஏமாத்துன பைனான்ஸ் கம்பெனிகாரன் எங்கயிருக்கான்னு. ஆனா சத்தமில்லாம அவங்கவங்க ஷேரை வாங்கிக்கிட்டு கண்டுக்காம விடல?. அப்பிடித்தாங்க எல்லாம். 100கோடி லவட்டுண பைனான்ஸ் கம்பெனிகாரன் 50கோடிய லஞ்சமா செலவு பண்ணிட்டு மீதிப்பணத்துல எங்கயாவது நிம்மதியா செட்டில் ஆகிக்கலாம். போலி மருந்து வித்து மக்களோட உயிரோட விளையாண்டு கோடிகோடியா சம்பாதிச்சவனே நிம்மதியா வாழுமளவுக்கு கடுமையான(!) சட்டம் கொண்ட நாடிது.

ஏதோ 2ஜி ஊழல்ல விதிவிலக்கா உச்சநீதிமன்றம் பொங்கி எழுந்ததால கொஞ்ச நாளைக்கு பரபரப்பா ஓடிட்டிருக்கு. ஆனா எத்தனை நாளைக்கு இத நம்பமுடியும்? போபால் விஷவாயுக்கசிவு முக்கியக் குற்றவாளிய பத்திரமா வழியனுப்பி வச்சப்ப எந்த உச்சநீதிமன்றம் என்ன செஞ்சது? இப்போகூட உச்சநீதிமன்ற பெஞ்ச் மாறுற வரைக்கும்தான் 2ஜி பரபரப்பெல்லாம். எப்படா உச்சநீதிமன்றத்தோட பல்லைப் புடுங்கலாம்னு அரசியல்வாதிங்க எல்லாம் கட்சிப்பாகுபாடு இல்லாம காத்திட்டு இருக்காங்க!

இங்கே எப்பவும் இப்படித்தான். அதிகாரமும் பணபலமும் நிறைந்தவர்கள் செய்யும் எந்த ஊழலுக்கும் எப்பொழுதும் தண்டனைகள் கிடையாது. ஊழலில் சம்பாதித்த பணத்தைக் கொண்டே ஊழலை ஊத்தி மூடிவிடலாம் என்பது நம் நாட்டின் எழுதப்படாத சட்டமாகிப்போனது! யார் என்ன ஊழல் செய்ததாய் செய்திகள் வந்தாலும் அதை பரபரப்பாய் படிப்பதோடு, தெரிந்து கொள்வதோடு நமது கடமையை முடித்துக்கொள்ளும் பொறுப்புமிக்க குடிமக்களாய் நாமெல்லாம் வாழப்பழகி வெகுநாட்களாகிப்போனது!

ஊழல் மேல் ஊழல்… இங்கே யாவருமே வெட்கம் கெட்ட ஆட்கள்!!!

No comments:

Post a Comment