SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Friday, June 24, 2011

ஆவின் பால், அமலா பால் தெரியும்... அதென்னங்கது லோக்பால்?


ஆவின் பால், அமலா பால் தெரியும். என் ஃபிரெண்டு தனபால் கூடத்தெரியும். ஆனா அதென்னங்க லோக்பால்னு கேக்கிறவரா நீங்க? வாங்க முதல்ல படிச்சி தெரிஞ்சிக்கலாம்!

நேத்தைக்கு காலைல நம்ம நாயர் கடையில டீ குடிச்சிட்டிருக்கும்போது யாரோ ரெண்டு படிச்சபுள்ளைங்க லோக்பாலு, லோக்பாலுன்னு பேசிட்டிருந்தாங்க. துண்டை மடிச்சி கக்கத்துல வச்சிக்கிட்டு டீயைக் குடிச்சிக்கிட்டே அவங்க பேச்சக்கேட்டனுங்க.

இம்புட்டுநாளா ஆவின் பாலு, அர்ஜீனோட அம்மா நாலரைப்பாலு மாதிரி லோக் பாலுன்றது மார்க்கெட்டுக்கு புதுசா வந்திருக்கிற ஏதோ லோக்கல் பாலுன்னுதான் நெனச்சிட்டிருந்தேனுங்க. இந்தப் பசங்க பேச்சக் கெட்டதும்தான் ‘’அடப்பாவிமக்களா... இதுதான் லோக் பாலான்னு’’ தெரிஞ்சிக்கிட்டேனுங்க.

யாரோ அன்னா ஹசாரேன்னு சமூக ஆர்வலராம். அவர்தான் இந்த லோக் பால் ஹீரோங்களாம். ஊழலுக்கும், ஊழல் செய்ஞ்ச பணத்தை முழுங்கிட்டு எந்த தண்டனையும் இல்லாம ஹாயா சுத்திட்டிருக்கிற ஊழல்வாதிகளுக்கும் எதிரா மக்களுக்காக போராடுற ரெண்டாவது காந்தின்றாங்க இவரை. ஊழலுக்கு எதிரா 1969ல லோக்சபால நிறைவேத்துன லோக்பால் மசோதாவ அப்பவே ராஜ்ய சபாவுல கெடப்புல போட்டுட்டு இன்னக்கி வரைக்கும் இந்த அரசியல்வாதிங்கலாம் யார் ஆட்சிக்கு வந்தாலும் கமிட்டி, குழுவுன்னு வழக்கம்போல மாத்தி மாத்தி மக்களுக்கு அல்வா குடுத்துட்டு இருந்திருக்காங்க. தகவல் அறியும் உரிமைச்சட்டம்னு ஒன்னு கொண்டு வந்துட்டு இவனுங்க படுறானுங்களே பாடு… அந்தச்சட்டம் வர்றதுக்குகூட இந்த அன்னாவோட பங்கு இருந்திச்சின்னு இப்போதான் பேசிக்கிறாங்க. பத்மபூஷன் விருது வாங்கியிருக்கிற நம்ம சமூக ஆர்வலர் அன்னாதான் திடீர்னு இந்த வருஷம் ஏப்ரல் மாசத்தில லோக்பால மறுபடியும் பத்த வெச்சாருங்களாம்.

இண்டியா அகெய்ன்ஸ்ட் கரெப்ஷன்ற சமூக அமைப்பு உருவாக்கின ஜன லோக்பால உடனடியா மத்திய சர்க்கார் நிறைவேத்தனும்னு ஏப்ரல் 5ம் தேதியிலயிருந்து உண்ணாவிரதமிருந்த நம்ம அன்னாவுக்கு நாடு முழுவதும் எழுந்த மக்கள் ஆதரவப்பாத்த மத்திய அரசு வழக்கம் போல பத்துநபர் கமிட்டின்னு ஒன்னை அமைச்சு உண்ணாவிரதத்தை ஊத்தி மூடுனாங்களாம்.
அடப்பாவிகளா… கமிட்டி அமைச்சாலே விஷயத்தை ஆறப்போட்டு ஊறப்போடுறதுதான்னு படிக்காதப்பய எனக்கே தெரியும்போது நம்மாளுங்க எப்பிடி ஏமாந்தாங்கன்னு தெரியலீங்க!

பத்து நபர் கமிட்டியில மத்திய அரசு சார்பா போடுற அஞ்சு பேரு யாருன்னு அறிவிச்ச உடனேயே உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்க வேண்டாமா இது உருப்படப்போறதில்லைனு?. அப்பிடி யாருங்க அந்த அஞ்சு பேருன்னு கேக்குறீங்களா?... பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், வீரப்பமொய்லி, கபில் சிபல், சல்மான் குர்ஷித்துங்களாம். இப்போ சொல்லுங்க… முதல்ல இருக்கிற நாலு பேரப் பாத்ததுமே புரியுமே… நானு சொன்னது கரெக்ட்தானுங்களே?. உருப்படுமா அந்தக்கமிட்டி?.

இப்போ பலகட்டமா பேசிப்பேசி டயர்டாயிப் போயி அன்னாவே மறுபடியும் உண்ணாவிரதத்தை அறிவிச்சிட்டாருங்களாம்.
நியாந்தானுங்களே! ஆனா இந்த ரெண்டாவது காந்தியோட ரெண்டாவது உண்ணாவிரதம் எந்தளவுக்கு வெற்றியடையுங்கிறது டவுட்டுதானுங்க. ஏன்னா நம்ம மக்கள் எந்த விஷயத்திலுமே சூடு ஆறிடுச்சுன்னா சொரணை கெட்டுப்போன வரலாறு ஏராளமுங்க. ஒருவேளை மத்திய அரசும் இதைத்தெரிஞ்சிக்கிட்டுதான் அப்போ உண்ணாவிரதத்தை அமுக்கிட்டு இப்போ கண்டுக்காம விடுறாங்களோ என்னவோ?. சரி... இதைப்பத்தி தொடர்ந்து தெரிஞ்சிருக்கிறதுக்கு முன்னாடி ‘’ஜன லோக்பால் னா என்ன? அன்னா ஏன் மறுபடியும் உண்ணாவிரதமிருக்கப்போராருன்னு’’ நானு தெரிஞ்சிக்கிட்டதை சொல்லிப்புடுறேனுங்க.

1969ல மத்திய அரசு கெடப்புல போட்டுச்சே அது ‘’லோக்பால்’’ மசோதா. இப்போ அன்னா ஹசாரே குழுவினர் அமல்படுத்தச் சொல்லிக் கேக்கிறது ‘’ஜன லோக்பால்’’ மசோதா. இந்த ‘’ஜன லோக்பால்’’ன்றது சமூக சேவர்கள், நீதிபதிகள், படித்த பண்பான நேர்மையாளர்கள் ஆகியோரை உறுப்பினராகக் கொள்ளும் ஒரு சுதந்திரமான அமைப்பாம். மாநிலங்களில் லோக்யுக்தான்னும் மத்தியில் ஜன லோக்பால்னும் (உதாரணமாச் சொன்னா நம்ம ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் மாதிரி) அமையுற இரட்டை அமைப்பு இது. தேர்தல் கமிஷன் மாதிரியே இவங்களும் அரசாங்கத்தாலும் அரசியல்வாதிகளாலும் கட்டுப்படுத்த முடியாத அமைப்பாம். தேசத்தில எவ்வளவு பெரிய ஆளானாலும் சரி… இல்லை அரசியல்வாதியானாலும் சரி… யார் ஊழல் செய்ஞ்சாலும் இவங்க கம்ப்ளெயின்ட் பதிவு பண்ணி விசாரணை நடத்திக் குறைஞ்சது ஒரு வருடத்திலயிருந்து ரெண்டு வருடத்துக்குள்ள ஊழல் பண்ணவங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கி அவங்க ஊழல்ல சேத்த பணத்தையும் சொத்தையும் கூட புடுங்கி நாட்டுக்கே திரும்ப ஒப்படைக்க முடியும். மக்கள் தாங்கள் பாதிக்கப்படுற ஊழல் சம்பந்தமான எந்த பிரச்சனையையும் இந்த அமைப்புகிட்ட நேரடியாப் புகார் பண்ணலாமாம். இதுதாங்க ஜன லோக்பாலாம். இப்போ புரியுதுங்களா அரசியல்வாதிங்க இதை ஏன் ஒத்துக்க மாட்டேங்கிறாங்கன்னு?

சரி… அன்னா ஏன் மறுபடியும் உண்ணாவிரதத்தை அறிவிச்சிருக்கிறாரு. மத்திய அரசுக்கும் அவருக்கும் பத்து நபர் கமிட்டியில ஏன் ஒத்துவரலை? அங்கதாங்க இருக்கு… ஒவ்வொரு இந்தியனும் தெரிஞ்சிக்கவேண்டிய சமாச்சாரமே!.

நம்ம அன்னா கேக்குற ‘’ஜன லோக்பால்’’ ஊழலை வேட்டையாடுற சிங்கம் மாதிரி. நம்ம மத்திய அரசு தர்றேன்னு சொல்ற ‘’லோக்பால்’’ வெறும் பல்லு புடுங்குன பாம்பு மாதிரி. பல்லப்புடுங்கின பாம்பை வச்சிக்கிட்டு வித்தைதான் காட்ட முடியுமே தவிர உறுப்படியா வெறென்னத்துக்கு உதவும் அது? மத்திய அரசின் லோக்பாலுக்கும் அன்னா கேக்குற ஜன லோக்பாலுக்கும் உள்ள முக்கிய வித்தியாசங்களை அடுக்கிப்புடுறேனுங்க. அதைப்புரிஞ்சிக்கிட்டாலே அடுத்து என்ன பண்ணலாம்னு என்ன மாதிரியே உங்களுக்கும் ஞானம் பொறக்குமுங்க!.

1) லோக்பால் – மக்கள் ஊழல் புகாரை லோக்சபா அல்லது ராஜ்ய சபாவின் சபாநாயகரிடம் மட்டுமே அளிக்கனுமாம். அவராப்பாத்து முடிவு பண்ணி விசாரிக்கலாம்னு நெனக்கிற கேசை மட்டும் லோக்பால் அமைப்புக்கு அனுப்புவாராம். (நடக்கிற காரியமா இது!)

ஜன லோக்பால் – இதுல ஊழல் பத்தி தானாவே புகார் பதிவு பண்ணவும், மக்கள் நேரடியா அளிக்கிற புகார்களைப் பதிவு பண்ணவும் அதிகாரமுண்டாம்.

2) லோக்பால் – இது வெறும் ஆலோசனை மட்டுமே சொல்ல வேண்டிய அமைப்பாம். சபாநாயகர் அனுப்புற புகார் சம்பந்தமா விசாரணை நடத்தி அந்த அறிக்கையை உரிய அரசு அதிகாரிகளுக்கு அனுப்பனுமாம். (எப்படியிருக்கு? இதையும் ஆன்னா ஊன்னா நீங்க அமைக்கிற கமிட்டி மாதிரியே ஆக்கிரலாம்னு திட்டமா?)

ஜன லோக்பால் – இதுக்கு விசாரிக்கிறதோட மட்டுமல்லாம ஊழல் பண்ணவங்களுக்கு தண்டனை வழங்குற அதிகாரமும் உண்டு.

3) லோக்பால் – இதுக்கு போலீஸ் பவர் ஒன்னுமே கெடயாதாம். சும்மா டம்மியாம். (அப்போ… இது என்ன நாக்கு வழிக்கவா?)

ஜன லோக்பால் – இதுக்கு போலீசுக்கு இருக்கிற அத்தனை பவரும் உண்டாம். எஃப்.ஐ.ஆர் போடறதிலயிருந்து விசாரணை பன்றது வரைக்கும் போலீஸ் மாதிரியே எல்லாப் பவரும் இதுக்கும் உண்டாம்.

4) லோக்பால் – சி.பி.ஐ க்கும் இதுக்கும் சம்மந்தமே கெடயாதாம்.

ஜன லோக்பால் – சி.பி.ஐ யின் ஊழல் தடுப்பு பிரிவும் இதுக்கு கீழேதான் இயங்குமாம். (அப்படிப்போடு அருவாள!)

5) லோக்பால் – இதுல யாராவது தவறான புகார் அளிச்சா கடுமையான ஜெயில் தண்டனை உண்டாம். ஆனா புகாருக்கு உள்ளாகும் அதிகாரப் பதவியிலிருப்பவருக்கு ஜெயில் தண்டனை எதுவும் கெடயாதாம். அதே மாதிரி இதுல பதிவு பன்ற புகாரை லோக்பாலும், ஏற்கனவே இயங்கிட்டிருக்கிற அரசு ஊழல் தடுப்பு பிரிவுகளும் தனித்தனியா விசாரிக்குமாம். (அப்போதானே முதல்லயே எல்லா ஆவனங்களையும் அரசு ஊழல் தடுப்பு பிரிவுகளை வச்சு அழிச்சிரலாம். லோக்பால் அமைப்பு விசாரணைக்கு எந்த ஒத்துழைப்பும் கெடைக்காம வெறுங்கைய நக்கிட்டு நிக்க வேண்டியதுதான்!)

ஜன லோக்பால் – இது புகார் குடுக்குற சாதாரண மக்களுக்கான பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அம்சங்களையும் உள்ளடக்கியதாம். இதுல நாட்டுல இருக்கிற எல்லா அரசு ஊழல் தடுப்பு பிரிவுகளும் இதோட நேரடிக்கட்டுப்பாட்டுல வந்துருமாம். இதுக்கு அனைத்து மந்திரிகள் முதல் பிரதம மந்திரி வரைக்கும், எல்லா அரசு அதிகாரிகளையும், நீதிபதிகளையும் கூட புகார்ல விசாரிச்சு தண்டனை வழங்குற அதிகாரம் உண்டாம். (அதான் ஒத்துக்கமாட்டேன்றானுக!)

6) லோக்பால் – இதுல விசாரணைக்கும் தீர்ப்புக்கும் எந்தக் கால வரையறையும் கெடயாதாம்.(வழக்கம் போல கேச ஜவ்வா இழுக்கலாம்ல?!) லஞ்சம் வாங்குற அதிகாரிகளுக்கு எதிராவும் எந்த சரத்தும் இல்லையாம். அதுவுமில்லாம இது எல்லாத்தையும் தாண்டி ஏதோவொரு அதிசயமா ஊழல் நிரூபிக்கப்பட்டாக்கூட அதுக்கான தண்டனை வெறும் ஆறு மாசத்திலயிருந்து ஏழு வருஷம் வரைக்கும்தானாம். அதுமட்டுமில்லாம ஊழல்ல தண்டனை பெற்றவன்கிட்டயிருந்து எந்தப்பணத்தையும், சொத்தையும் ரெகவரி பண்ண மாட்டாங்களாம். அவன் ஜெயில் தண்டனை முடிஞ்சி வந்ததும் ஊழல்ல சம்பாதிச்சதெல்லாம் ஹாயா அனுபவிக்கலாமாம். (த்த்தூ… சொரணை கெட்ட ஜென்மங்களா… உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட வெக்கம் மானம் கெடயாதா?!)

ஜன லோக்பால் – இதுல பதிவு பன்ற புகாருக்கு ரெண்டு வருஷத்துக்குள்ள கேஸ் முடிஞ்சி தண்டனையும் வழங்கப்படுமாம். லஞ்சத்தால பாதிக்கப்படுற பொதுமக்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தே ஃபைன் வசூலிச்சி இழப்பீடு வழங்குவதோடு லஞ்சம் வாங்குற அரசு அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யவும் இதுக்கு அதிகாரம் உண்டாம். ஊழல் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சமாக ஐந்து வருடம் முதல் ஆயுள் தண்டனை வரைக்கும் வழங்க வழிவகைகள் உண்டாம். அதுமட்டுமில்லாம ஊழல் நிரூபிக்கப்பட்டவரிடமிருந்து அவர் ஊழலில் சம்பாதித்தவை மொத்தமும் ரெக்கவரி செய்யப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படுமாம்.

இப்போ தெரியுதுங்களா… ஏன் நம்ம அரசியல்வாதிகளும் அரசாங்கமும் அன்னாவோட ஜன லோக்பால ஏத்துக்க மாட்டேங்குறாங்கன்னு? எப்பிடிய்யா… தனக்குத்தானே ஆப்பு வச்சிக்க எவனாவது சம்மதிப்பானா? அதான் எப்பாடுபட்டாவது இந்த அன்னா ஹசாரேவையும் அவரோட போராட்டத்தையும் அடக்கி ஜன லோக்பாலுக்கும் சமாதி கட்டியே ஆகனும்னு அரசியல்வாதிகளால் நடத்தப்படும் அரசாங்கம் மும்முரமா பல குள்ளநரித்தனங்களை யோசிச்சிட்டிருக்குதாம்.

எல்லாத்தையும் கேட்டபிறகு படிக்காத முட்டாள் எனக்கே ஒரு ஞானோதயம் வந்தமாதிரி இருந்திச்சிங்க. டீயைக்குடிச்சிட்டு அந்தப் பசங்ககிட்டப்போயி ‘’தம்பி… அந்த அய்யா எப்போ உண்ணாவிரதம் இருக்கப்போறாங்களாம்?’’னு கேட்டேனுங்க. ஆகஸ்ட் 16ம் தேதியாம்.
கக்கத்துல இருந்த துண்டை உதறி தோள்ல போட்டுட்டு நிச்சயமா அந்தப்பெரியவருக்கு ஆதரவா கலந்துக்கனும்னு முடிவு பண்ணிட்டு நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமா நடக்க ஆரம்பிச்சேனுங்க... நாட்டுக்காக நாமதான் போராடமாட்டோம். போராடுறவங்களுக்கும் ஆதரவு குடுக்கலைனா அப்புறம் நாமெல்லாம் ‘’இந்தியா என் தாய்நாடு, நானொரு இந்தியன்’’னு சொல்லிக்கிறதுல என்னதாங்க அர்த்தமிருக்கமுடியும்?.

Wednesday, June 22, 2011

எனக்கொரு கேர்ள் ஃபிரெண்ட் வேணுமே...!

இன்னய ரேஞ்சுல வாலிப முறுக்குல வருத்தப்படாத வாலிபர் சங்க உறுப்பினர் மாதிரி சுத்திட்டிருக்கிற ஒவ்வொரு பசங்களுக்கும் பெரிய கவலையே என்னான்னா… ஒரு நல்ல கேர்ள் ஃபிரண்டு கிடைக்காதா?ன்றதுதான்!

நம்மாளு ஒவ்வொருத்தனும் கேர்ள் ஃபிரண்டு ஆசைல அடிக்கிற கூத்துருக்கே… அப்பப்பா… இவனுங்களோட திருவிளையாடலைச் சொல்லனும்னா நிஜமாவே திருவிளையாடல் படத்துல வர்ற ‘’ஒரு நாள் போதுமா?’’ன்ற பாட்டத்தான் பாடனும்!

அட நம்ம பய யோக்கியமா கேர்ள் ஃபிரண்டுல்லாம் வேண்டாம்னு திரிஞ்சாக்கூட இந்த கூடத்திரியிற சில குரங்குங்க இருக்கு பாருங்க… அதுங்க பண்ற அட்ராசிட்டிதான் நம்ம பயலையும் ‘’இந்தக் குரங்கே கும்முனு பிகரப் பிடிச்சுட்டு சுத்துறானே? நமக்கென்னடா குறைன்னு’’ கேர்ள் ஃபிரண்டத் தேடி அலைய வைக்குது!

பிகருங்க எங்கே செட்டாகும்னு எப்படியெல்லாம் கஷ்டப்படுறானுங்கன்னு பாத்தா கண்ணுலே தண்ணியில்லங்க… குற்றால அருவியே தோத்துப்போற அளவுக்கு ரத்தமே கொட்டும் போங்க! ஆனா யாருக்குன்னு கேக்காதீங்க!

சொந்தமா பைக் இல்லாட்டியும் கூட யாருகிட்டயாவது கெஞ்சிக் கூத்தாடியாவது பைக்க வாங்கிக்கிட்டு ஹெல்மெட் போட்டா மூஞ்சி தெரியாதுன்னு மூஞ்சிக்கு சம்பந்தமே இல்லாத ஒரு முப்பது ரூவா கூலிங்கிளாஸ மாட்டிக்கிட்டு நம்மாளு சிட்டி பூரா சுத்துவான் பாருங்க… ஃபிகர் மாட்டுதோ இல்லையோ… அந்நேரத்துல போலீஸ்காரங்க மட்டும் தேடிட்டிருக்கிற குற்றவாளிங்க போட்டா எதையாவது இவன் கையில குடுத்து விட்டாங்கன்னா கண்டிப்பா புடிச்சிட்டு வர்ற அளவுக்கு சிட்டியையே சல்லடை போட்டுட்டுதான் வருவான்ங்க நம்ம ஆளு!

காலேஜ்ல கூடபடிக்கிறதுல எதையாவது மடக்கலாம்னு பாத்தா நம்மாளப் பத்தி தெரிஞ்சவ எவளும் திரும்பிக் கூட பாக்கிறது இல்லீங்க! மச்சான் நம்ம காலேஜ்ல எல்லாம் அட்டுப்பிகருங்கடா… என் ரேஞ்சிக்கு இங்கெல்லாம் செட்டாகாதுடான்னு… அவன் மனச அவனே தேத்திக்கிறதப் பார்த்தா கொஞ்சம் பாவமாத்தாங்க இருக்கும்!

மண்டையில இருக்கிற நாலு மயிருக்குக்கூட விதவிதமா கலரடிச்சிட்டு, ஒத்தக்காதுல கஷ்டப்பட்டு ஒரேயொரு ரிங்க வாங்கி மாட்டிக்கிட்டு அவனா நீய்யின்னு? கேக்குற அளவுக்கு கெட்டப்ப போட்டுட்டு திரியறான் பாருங்க… எங்க போயி சொல்லி அழுவுறதுன்னுதான் தெரியலைங்க!

கடை கடையா தேடி அலைஞ்சு கடைசியில எங்கயாவது சாயம் போன பழையத் துணி மாதிரி ஒரு ஜீன்ஸ் பேண்ட்ட வாங்கிட்டு ‘’செம பேண்ட்டுடா… இத்தன நாள் இந்தமாதிரி தேடியும் இப்பத்தான்டா கிடைச்சிருக்கு. இனிமே பாரு எப்படி கலக்குறேன்னு’’ அநியாயக் கான்ஃபிடன்ஸ்ல அள்ளி விடுவான் பாருங்க. தள்ளி நின்னு பாத்தா சிரிக்கிறதா, அழுவுறதான்னே தெரியாதுங்க!

நல்லாயிருக்கிற பேண்ட்ட முக்காவா கட் பண்ணிக்கிறதும், புதுசா வாங்குன ஜீன்ஸ் பேண்ட்ட பிச்சைக்காரன் மாதிரி கிழிச்சு விட்டுத் தைச்சுக்கிறதும்… 8 பாக்கெட் கார்கோ பேண்ட், 16 பாக்கெட் கார்கோ பேண்ட்டுல்லாம் பத்தாம இன்னும் பத்துப் பாக்கெட் தைக்க முடியுமான்னு யோசிக்கிறதும், சட்டையைக் காலர என்னா பண்ணலாம்? கைய எப்படித் தைக்கலாம்னு எடிசன் ரேஞ்சுக்கு யோசனை பன்றதும்… இவன் நார்மலா இருக்கானோ இல்லையோ… இவன்கிட்ட மாட்டுற டெய்லர் மெரிசலாகிறது மட்டும் சத்தியமுங்க!

பாக்கெட்லயே சீப்பை வச்சுக்கிட்டுத் திரியறதும், பத்தடி தூரம் நடந்து போய் நின்னாக் கூட உடனே சீப்பை எடுத்து சீவிக்கிறதும், எங்கே எவன் பைக் நின்னாலும் கண்ணாடில பாத்து கையாலயே முடியைக் கோதிக்கிறதும்… வழுக்கை மண்டை ஸ்டார்ட் ஆகிறவரைக்கும் தெரியாம, முழுசா காலியாகிறக் கண்டிஷன்லதான் அய்யோ அடிக்கடித் தலையச் சீவித்தான் முடி கொட்டிப் போச்சான்னு ஞானோதயம் வருங்க நம்மாளுக்கு! கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணாலும் குதிரைக்கு கொம்பு முளைக்கிறதும் வழுக்கை மண்டைல முடி முளைக்கிறதும் நடக்கிற காரியமாங்க?

எப்படியாவது அப்பன் காச ஆட்டயப் போட்டோ, இல்லை அம்மாகிட்ட எதையாவது அள்ளி விட்டோ கஷ்டப்பட்டு அமௌன்ட்ட தேத்தி, மூஞ்சைக் கலரா மாத்தும்னு புதுசு புதுசா எத்தனை க்ரீம் வந்தாலும் சரி… அத்தனையையும் வாங்கி அலமாரியில அடிக்கிப்பான்ங்க நம்மாளு. தங்கத்தை வச்சுத் தேச்சாலும் எருமை நிறம் கருப்புதான்றது இந்த எடுபட்ட பயலுக்கு யார் சொன்னாலும் புரியவாப்போகுது?

காசு பணம் ஜாஸ்தியில்லனாலும் சிட்டில ஒரிஜினல் பிராண்டடு ஷீ, டி-சர்ட்ஸ் மாதிரியே ஒன்றரையணா சமாச்சாரமெல்லாம் எங்கே கிடைக்கும்னு நம்மாள்கிட்ட எல்லோ பேஜ் போடுற அளவுக்கு மொத்த டீட்டெயிலும் கலெக்ட் பண்ணி வைச்சிருப்பான்ங்க! டூப்ளிக்கேட்ட மாட்டிக்கிட்டு ஒரிஜினல் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி பீலா உடுவான் பாருங்க… பரவாயில்ல, பயபுள்ள நல்லாத்தான் மெயிண்டெய்ன் பன்றான்னு நீங்களே சர்ட்டிஃபிகேட் குடுப்பீங்க, ஜாக்கிரதை!

ஒவ்வொரு தடவை சினிமா பாத்துட்டு வந்ததும், சிக்ஸ் பேக் ஹீரோக்கள் நம்மாளு மண்டைக்குள்ள படுத்துற பாடிருக்கே… கண்ணாடியில உத்து உத்து உடம்பப் பாத்துட்டு உடனே கிளம்பி ஃப்ரைடு ரைஸோ இல்லை பிரியாணியோ சாப்பிட ஓடுவான் பாருங்க… பலபேர் கடை ஓடுறதே இந்த மாதிரிப் பயலுகளாலதான்!

வீட்டுக்கு காய்கறி வாங்கக் கூட கடைக்குப் போகாத நம்மாளு, பிகருங்க வீட்டுல இருக்கும் பெரிசுங்க ஏதாவது உதவி கேக்காதான்னு ஏங்கிக் கிடப்பான் பாருங்க… தமிழ் சினிமாவப் பாத்து இவனுங்க கெட்டானுங்களா? இல்லை இவனுங்களப் பாத்துத்தான் தமிழ் சினிமாவுல எடுத்தாங்களான்னு நாமளே கன்ஃப்யூஸ் ஆயித்தான் யோசிக்கனுங்க!

நம்மாளு ஒரு யூனிஃபார்ம் போடாத கமாண்டோங்க. என்ன புரியலியா? ஏதாவது ஒரு பொண்ணு தெரிஞ்சோ தெரியாமலோ நம்மாள ஒரு வாட்டி லுக் விட்டுட்டான்னு வையுங்க… அவ்ளோதான் போச்சு. அன்னைலயிருந்து அந்த பொண்ணுக்கு எஸ்கார்ட், ஒய்கார்ட், இசட்கார்ட்னு எல்லாக் கார்ட்ம் நம்மாளுதான் போங்க!

என்னதான் கண்ணாடியில டெய்லி தன் மூஞ்சைப் பாத்தாலும் தன்னம்பிக்கை விஷயத்துல நம்மாள அடிச்சிக்க ஆளேயில்லைன்றதுதான் உண்மைங்க!

நம்மாளு பலநாளா ஃபாலோ பண்ண ஃபிகரு ஏதாவது இவன்கிட்ட வந்து ‘’எனக்கு உன்னப்பிடிக்கலை… சும்மா என்னை ஃபாலோ பண்ணாதே’’ன்னு சொன்னாலும் சரி, இல்லை இவன்கிட்ட நல்லாச் சிரிச்சி சிரிச்சி பேசற பொண்ணு ‘’அய்யோ நான் உங்கள ஒரு பிரதர் மாதிரிதான் நெனச்சேன்’’னு கழட்டிவுட்டாலும் சரி… ‘’வெற்றிப் பாதையில் தொடர்ந்து ஏறுவது எப்படின்னு?’’ புக் எழுதுற அளவுக்குப் புதுசு புதுசாப் ஃபிகரத் தேடிப் போயிட்டே இருப்பான்ங்க நம்மாளு!

ஒவ்வொரு வருஷமும் பிப்ரவரி 14 தாங்க நம்மாளுக்கு தீபாவளி. அன்னைக்கு பச்சைக்கலர் டிரெஸ்ஸா போட்டுக்கிட்டு கையில ரோஜாப்பூவையும் கிரீட்டிங்ஸ் கார்டையும் வச்சிக்கிட்டு ஊரெல்லாம் சுத்தி தரிசனம் குடுப்பான் பாருங்க… உண்மையிலேயே இவன்தாங்க பசுமை விஞ்ஞானி!

அலைஞ்சு திரிஞ்சி அலுத்துப் போயி கடைசியா நம்மாளு… வத்தலோ, தொத்தலோ… பொண்ணாயிருந்தா சரின்னு ஏதோவொன்ன கேர்ள்ஃபிரண்டா பிக்கப் பண்ணிக்கிட்டு, அதுங்களோட சேத்து அது ஃபிரண்டு கூட்டத்துக்கும் வாங்கிப் போட்டே அப்பன் சொத்தைக் கரைப்பான் பாருங்க… இந்த விஷயத்தில மட்டும் அல்வா குடுக்கிறது ஆம்பிளைங்க இல்ல… பொண்ணுங்கதான்றது இவனுக்கெல்லாம் எப்போங்க புரியும்?

உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்குற ஸ்டைலுல நம்மாளுகிட்ட அந்தப் பொண்ணு நீ நிறைய சம்பாதிச்சாதான் எனக்கு உன்னைப் பிடிக்கும்னு சொன்னதக் கேட்டுட்டு நம்மாளும் வாழ்க்கைல முதமுறையா உருப்படியாத் திங்க் பண்ணி வெல்டரோ, ஹெல்ப்பரோ எதுவாயிருந்தாலும் சரின்னு பாஸ்போர்ட் எடுத்திட்டு ஃபாரினுக்கு ஓடுவான். ரெண்டு வருஷமோ, மூனு வருஷமோ… கஷ்டப்பட்டு சம்பாதிச்சுட்டு ஆசையா வந்து பாக்குறவனுக்கு புருஷனோட பைக்ல உக்காந்து டாட்டா காட்டிட்டு போவா பாருங்க… அடடா இது ரொம்ப காலமா நடந்துட்டுதானேயிருக்குன்னு நாமெல்லாம் உச் கொட்டுவோங்க!
ஃபாரின்ல சம்பாதிச்ச காசெல்லாம் உள்ளூர் டாஸ்மாக்ல செலவு பண்ணிட்டு புல்போதையில வீட்டுக்கு வர்ற நம்மாளு கண்ணாடி முன்னாடி போய் நின்னுக்கிட்டு கேப்பான் பாருங்க ஒரு கேள்வி…
அட உட்டாலங்கடிங்களா… நீங்களெல்லாம் உருப்படுவீங்களா?

ஆமா… இந்தக் கேள்வி இவன மாதிரி சுத்துறப் பசங்களுக்கா? இல்லை…பசங்களைத் தொங்க வைச்சு தொங்க வைச்சே சந்தோஷமாத் திரியுற பொண்ணுங்களுக்கா?...

Tuesday, June 21, 2011

ஆணுறை,பெண்ணுறை...இதுக்குமா ஒரு அணியுரை?

வீடு தோறும் இலவச காண்டம்ஸ்…!

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அதிரடிச்செய்தி ஒன்றை வெளியிட்டிருப்பதை படித்தவுடன் இதைப்பற்றி அலசியே ஆகவேண்டும் என்று தோன்றியது.

திரு.குலாம் நபி ஆசாத் அவர்கள் ‘’இனி இந்தியாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காக ASHA அமைப்பினரைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் ஆணுறை மற்றும் பெண்ணுறை மக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று இலவசமாய் வழங்கப்படும்!’’ என்றும் ‘’இது நாடு முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்!’’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்தச் செய்தியைப் படித்ததும் ஒரு சாதாரண குடிமகனாய் எனக்குள் பல சந்தேகங்கள் முளைத்தது. அதை அமைச்சரிடம் நேரடியாக கேட்க முடியாவிட்டாலும் பிளாக்கிலாவது கேட்கலாமில்லையா?...

# உண்மையிலேயே வீட்டிற்கே சென்று இலவசமாய் காண்டம்ஸ் வழங்கும் இத்திட்டத்தால் இந்தியாவின் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படும் என்று நம்புகிறீர்களா?!!!

# எய்ட்ஸ் வராமல் பாதுகாக்க காண்டம்ஸ் அவசியம் என்பது படித்தவர் முதல் பாமரன் வரையிலும் சென்றடைந்து விட்ட விழிப்புணர்வுச் செய்தி. ஆனால் அந்தச் செய்திக்கு கிடைத்த அதே வெற்றி இத்திட்டத்திற்கும் பொருந்துமென்று நம்புகிறீர்களா?
# எய்ட்சுக்காக காண்டம் அணிவதற்கும், குழந்தை வேண்டாம் என்பதற்காக காண்டம் அணிவதற்கும் இடையே மக்களின் மனதில் இருக்கும் மிகப்பெரிய இடைவெளியை வெறுமனே வீட்டிற்கே சென்று இலவசமாய் காண்டம்ஸ் வழங்குவதால் மட்டுமே மாற்றிவிடமுடியுமா?

# ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தளரா மனதுடனும்(!) விடா முயற்சியுடனும்(!) அடுத்தடுத்து பெண் குழந்தைகளை பெற்றுத் தள்ளிக் கொண்டிருக்கும் பெற்றோரிடம் இந்த இலவச காண்டம்ஸ் திட்டம் எடுபடுமா என்று எப்போதாவது யோசித்தீர்களா?

# காசு கொடுத்து கடையில் போய் காண்டம்ஸ் வாங்க வழியில்லாததால் மட்டுமே இந்தியாவில் மக்கள் தொகை பெருகிக் கொண்டிருப்பதாய் எந்த முட்டாள் உங்களுக்கு ஐடியா சொன்னது?!

# அதிக எண்ணிக்கையில் குழந்தை பெறுவதால் ஒரு தனிமனிதனின் பொருளாதாரத் தேவைகள் எப்படியெல்லாம் அவனை துன்புறுத்தும்? அவனின் குடும்ப மகிழ்ச்சி எப்படியெல்லாம் சீர்குலையக்கூடும்? என்பன பற்றியெல்லாம் கிராமம் கிராமமாய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வழிகளை ஆராய்ந்து அமல்படுத்துவதை விட்டுவிட்டு வெறுமனே இலவச காண்டம்களை வீட்டிற்கே சென்று விநியோகித்து விடுவதால் மட்டுமே எல்லாம் நடந்து விடக்கூடுமா?

# ஆணுறை கூடப்பரவாயில்லை… பெண்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?. பெண்ணுறையையும் வீடு வீடாய் இலவச விநியோகம் செய்யுமளவுக்கு இந்திய கிராமங்களில் விழிப்புணர்ச்சி வளர்ந்து விட்டதாய் நம்புகிறீர்களா?

இதுதான் பெண்ணுறை...

# உச்சநீதீமன்றம் கண்டனத்திற்கு மேல் கண்டனம் எழுப்பியும் மத்திய அரசின் சேமிப்புக் கிடங்குகளில் புழுத்து நாறி எலிகளுக்கு உணவாகிக் கொண்டிருக்கும் தானியங்களை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க முன்வராத உங்கள் அரசில் வீடு தோறும் இலவச காண்டம்ஸ் என்பது கொஞ்சம்கூட முரண்பாடாகத் தோன்றவில்லையா உங்களுக்கு?

# ஒருவேளை… தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட அரசு காண்டம்களை காலாவதியாகும்முன் காலி செய்வதற்கான திட்டமா இது?. இல்லை…ஏதாவது தனியார் காண்டம்ஸ் கம்பெனிகளுடன் கொள்முதல் உடன்பாடு ஏதேனும் செய்து கொண்டீர்களா?

அமைச்சரே… மக்கள் மனதில் எந்தவொரு விழிப்புணர்ச்சியும் ஏற்படுத்தாமல் வெறுமனே வீடு வீடாய்ச் சென்று இலவசமாய் காண்டம்களை விநியோகிப்பதால் மட்டுமே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திவிட முடியுமென்று கனவு கண்டு கொண்டிருந்தீர்களானால், அந்தக் கனவை கொஞ்சம் உற்று நோக்கினால் நீங்கள் வழங்கும் இலவச காண்டம்ஸ் எல்லாம் வீதி தோறும் சிறுவர்களால் ஊதிப்பறக்கவிடப்பட்டு பலூன்களாய்ப் பறக்கும் காட்சிகளும் கனவினில் தெரியக்கூடும்!.

இல்லாவிட்டால் ஏற்கனவே டெல்லியில் சென்ற வருடம் ஒருத்தர் காண்டம்ஸ் உடையை உருவாக்கியது போல நீங்கள் இலவசமாய் வழங்கும் காண்டம்களைக் கொண்டு செய்த பொருட்கள் பஜாரில் தினமும் குவிந்து கைவினைப் புரட்சி நடக்கலாம்!

ரூம் போட்டு உக்காந்து யோசிச்சு புதுசு புதுசா பீதியக் கெளப்பாம உருப்படியா ஏதாவது செய்ஞ்சீங்கன்னா உங்களுக்கு புண்ணியமாப் போகும்னு சொல்லிக்கிட்டு, உங்கள் இலவச காண்டம்ஸ் விநியோகத் திட்டம் வெற்றி பெற வாழ்த்துறேன்ங்க… காண்டம், ச்சீ வணக்கம்!

Monday, June 20, 2011

புட்டப்பர்த்தியும் ஒரு புண்ணாக்கு தேசமும்...

‘’புட்டப்பர்த்தியில் ‘பகவான்’ சாய்பாபாவின் அறையில் குவியல் குவியலாய் பொக்கிஷங்கள்’’ பெரும்பாலான ஊடகங்களின் சமீபத்திய தலைப்புச் செய்தியிது. 97கிலோ தங்கம், 307கிலோ வெள்ளி, 12கோடி ரொக்கப்பணம் என்பதெல்லாம் எப்படி பொக்கிஷம் என்று அழைக்கப்படுகிறதென்று மிகப்பெரிய சந்தேகம் எனக்கு.

அட முட்டாள்களே… எங்கேயாவது ஊழல் மற்றும் கணக்கில் வராத பணமோ, நகையோ பிடிபட்டால் ‘’கத்தை கத்தையாய் ஊழல் பணம் சிக்கியது’’, ‘’கட்டுக்கட்டாய் கறுப்புப்பணம் சிக்கியது’’, என்று செய்தி வாசிக்கும் நீங்கள் சாய்பாபா விஷயத்தில் மட்டும் பொக்கிஷம் என்று ஜால்ரா தட்டுவதேன்? பொக்கிஷம் என்ற வார்த்தைக்கு உங்களுக்கெல்லாம் அர்த்தம் தெரியாதா? ஒருவேளை 2ஜி ஊழலிலும் ஏதாவது பணம் சிக்கினால் பொக்கிஷம் கிடைத்ததாய்தான் செய்தி பரப்புவீர்களா நீங்கள்? இவ்வளவு பணமும், நகைகளும் தன்னைக் கடவுள் என்று நம்பச்செய்து செத்துப்போன ஒரு சாமியாரின் அறையில் இருந்திருக்கிறது.

பெரும்பாலான முட்டாள்கள் ஒன்று கூடி ஒரு ஊழல் செய்தியை நாட்டு மக்களிடம் ஆச்சர்யச் செய்தியாக, அபூர்வசக்திச் செய்தியாக மாற்றிப் பரப்ப முயலுகிறார்கள். இந்தப்பணம் மற்றும் நகைகளுக்கான மூலத்தை பொருளாதாரக் குற்றப்பிரிவின் கீழ் விசாரித்து உண்மையை மக்களுக்கு உணர்த்த வேண்டிய அரசு வழக்கம் போல தூங்கிக்கொண்டிருக்கிறது. எவனாவது ஒரு சாமான்யன் தனது சொந்த உழைப்பில் சம்பாதித்த நகையையும் பணத்தையும் எடுத்துச் செல்லும்போது சிக்கினால் விசாரணை மேல் விசாரணை என்று துளைத்தெடுக்கும் சட்டமும் அதன் கைத்தடிகளும், சாமியாரின் அறையில் சிக்கினால் மட்டும் வாய் மூடி மௌனம் காத்து சம்பந்தம் இல்லாதவர்கள் போல ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் கொடுமை கூத்தடிப்பது நமது தேசத்திலன்றி வெறெங்கும் நடக்குமா என்பது சந்தேகமே!

படித்தவர்களே முட்டாள்களாக பல ஆசாமிகளை சாமிகளாக நம்பிக் கொண்டிருக்கையில் பரவலான மக்களின் மீது குற்றம் சொல்லுதல் தவறே. ஆனால் சாமான்யன்களை சாமிகள் அல்ல என்று உணர்த்தி மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் அரசுகளும் இந்தச் சாமியார்களின் காலில் நிர்க்கதியாகும் வெட்கக்கேட்டிற்கு எப்போது விடிவு பிறக்கப்போகிறதோ தெரியவில்லை?. பிரேமானந்தா, நித்யானந்தா என்று வரிசை வரிசையாய் எத்தனை ஆனந்தாக்கள் வந்தாலும் சரி… இல்லை, சாய் பகவான், கல்கி பகவான், அம்மா பகவான் என்று எத்தனை பகவான்களும், பாபாக்களும் முளைத்தாலும் சரி… அத்தனையும் ஏமாற்றுவேலையே என்பது இந்த தேசத்தில் இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு புரியாமலே போகுமோ தெரியவில்லை?! இது இந்தச் சாமியார்களுக்கு கிடைத்த வரமா?, இல்லை… தேசத்துக்கு கிடைத்த சாபமா? என்றும் புரியவில்லை.

சாமியார் என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் மறந்துபோனதா? இல்லை… மறக்கடிக்கப்பட்டதா? சாமியார் என்றாலே எல்லாம் துறந்தவர். கட்டிய துணியோடு கடவுளை வணங்கி சாமான்யன்களுக்கும் ஆன்மீகத்தைப் பரப்பி சேவை செய்பவர். காசு, பணம், ஆடம்பரம் மீதெல்லாம் ஆசை கொள்ளாத பற்றற்றவர் என்பதெல்லாம் இங்கே எத்தனை பேருக்கு தெரியுமென்பது சத்தியமாய் சந்தேகமே! பல சாமியார்கள் தங்கள் குடும்பத்தோடு குதூகலமாய் வாழ்வதோடு மட்டுமல்லாமல், தங்கள் தர்ம பத்தினிகளையும் கடவுளாய் அறிவித்து இணைந்து கொடுக்கும் போஸ்கள் இத்தேசத்தின் அறியாமைக்கான உச்சக்கட்ட சாட்சியாக இன்றும் பல வீட்டு பூஜையறைகளில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

ஜிகு ஜிகு பட்டாடைகளும், பளபளக்கும் கார்களும், ஆடம்பர பங்களாக்களும், அரசின் கஜானாவை விட அதிகமாய் குவித்து வைக்கப்படும் சொத்துக்களும், பணமும், நகையும்தான் இன்றைய சாமியார்களின் அடையாளங்கள் ஆகிப்போய் வெகு காலமாகிவிட்டது. சாமியார் என்பது துறவறம் பூண்டு ஆன்மீகம் வளர்க்கும் சேவையென்பது மாறி, சாமியார் என்பது சொத்துக்களைக் குவிக்கும் கார்ப்பரேட் தொழிலாகிவிட்டது. அதிலும் இது வரி கட்ட அவசியமில்லாத வருமானம் குவியும் தொழில் என்பது மேலுமொரு சிறப்பம்சமாகும்.

ஒவ்வொரு சாமியார்களிடமும் ஒவ்வொரு கட்டணம். பாதபூஜைக்கு ரூ.50000 முதல் ரூ.3லட்சம் வரையும், சாமியாரின் அருகில் முன் வரிசையில் இரண்டு மணிநேரம் அமர்ந்திருக்க ரூ.5லட்சமென்பதும், இந்தச்சாமியார்களின் பாதம் ஏதாவது ஒரு ஊரில் படவேண்டினால் அங்கு அவரின் வருமானம் ஊரைப்பொறுத்து ரூ.1லட்சம் முதல் ரூ.10லட்சத்திற்கு குறையாமல் இருக்கவேண்டும் என்பதும் இவர்களின் ‘’சேவை’’ கட்டணங்களாகும். இதெல்லாம் தெரிந்தும்கூட இவர்களின் தீவிர பக்தர்கள் தொடர்ந்து ஆள்பிடித்துக் கொண்டிருப்பது இவர்களின் வருமானங்கள் வற்றவே வற்றாது என்பதற்கான மிகச்சிறந்த சாட்சியாகி நிற்கிறது!

உணர்ச்சிகளை அடக்கி வாழவேண்டிய சாமியார் வாழ்க்கையில் இன்று பெரும்பாலான சாமியார்கள் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி நாறினாலும் அதற்கு பின்னும் அவர்களைத் தொடரும் பெரும் மூடர் கூட்டத்தைக் கொண்டது இத்தேசத்தின் துரதிர்ஷ்டமே! சரி…ஏதோ சேவை செய்யும் மனப்பான்மையுடன் இயங்கும் டிரஸ்ட்களுக்காக அவர்களின் வருமானத்துக்கு வரிவிதித்தல் கூடாது எனும் சட்டம் எப்போதோ இயற்றப்பட்டிருக்கிறது இத்தேசத்தில். ஆனால் அதே சட்டத்தை வைத்துக்கொண்டே இன்று வரிவிதிப்பின்றி சொத்துக்களைக் குவித்துக் கொண்டிருக்கிறது பல சாமியார் மடங்கள். எப்போது சாமியார் மடங்களை இச்சட்டத்திலிருந்து நீக்கி நாட்டுக்குச் சேரவேண்டிய தொகைகளை இவர்களிடமிருந்து பெறப்போகிறோம்? இந்தியாவில் இருக்கும் எல்லா சாமியார் மடங்களின் சொத்துக்களையும் நாட்டுடமையாக்கினால் அடுத்த கணமே இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாகமுடியும். ஆனால் இதை எந்தக் காலத்திலும் எந்த அரசிலும் நினைத்துக் கூடப்பார்க்க விரும்பாத புண்ணாக்குகளைக் கொண்ட புண்ணிய தேசமிது! பழித்துப்பேசினால் சாமி கண்ணைக்குத்திடும் என்ற சிறு வயதுக்கதைகள் இப்போது எதிர்த்துப்பேசினால் சாமியார் கூலிப்படைகளைக் கொண்டு குத்திவிடுவார் எனுமளவுக்கு நாறியாகிவிட்டது.

கோடிக்கணக்கான கடனைக் கொண்ட தேசத்தில், தங்கக் கோவில்கள் கட்டிக் கைகூப்பித்தொழும் விந்தைகளும் கேட்பாரின்றி அரங்கேறிக்கொண்டேதான் இருக்கிறது. புட்டப்பர்த்தி சாய்பாபாவின் அறக்கட்டளைச் சொத்துக்களின் மதிப்பு 2ஜி ஊழல் தொகையைவிட அதிகமென்று தெரிகிறது. ஆனால் இந்தச் சொத்துக்களால் நாட்டுக்கு என்ன நன்மை என்று கேட்கும் தைரியம் இங்கே எந்த ஆட்சியாளர்களுக்கும் இல்லை!

தமிழ்நாட்டில் மேல்மருவத்தூர், ஶ்ரீபுரம்… ஆந்திராவில் புட்டப்பர்த்தி, திருப்பதி… கர்நாடகாவில் நித்யானந்தா மடம் என்று கண்ணுக்குத்தெரிந்தும், தெரியாமலும் கடவுளின் பெயரில் நாடு முழுவதும், மாநிலம் தோறும் இங்கே தேசத்தின் சொத்துக்கள் வெளிவராமல் முடங்கிக்கிடக்கிறது. இந்தச் சொத்துக்களை எல்லாம் நாட்டுடமையாக்கலாம் என்ற எந்தவொரு சீர்திருத்தச் சிந்தனையுமின்றி சாமியார்களின் கால்களில் சரணாகதியாகிக் கிடக்கும் முட்டாள்களைக் கொண்ட புண்ணாக்கு தேசமிது.

‘’என்றாவது விடிவு வருமா? என்று யாரைக்கேட்பதென்றே தெரியவில்லை!!!’’

Sunday, June 19, 2011

பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?...

பத்திரிக்கையாளர்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களும், பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்புகள் குறித்த பல்வேறு சர்வே முடிவுகளும் தொடர்ந்து கவலை கொள்ளத்தக்க நிலைமையையே உணர்த்திக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் மும்பையில் ஜெ தேய் என்ற மிட்-டே பத்திரிக்கையின் புலனாய்வு நிருபர் சுட்டுக் கொல்லப்பட்டு நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சி அலை உண்டாக்கப்பட்டிருக்கிறது. அதைப் போலவே கேரளாவிலும் மாத்ருபூமி பத்திரிக்கையின் கொல்லம் நிருபர் உன்னிதன் கூலிப்படைகளின் கொலை முயற்சியில் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைக் கொலை செய்ய கூலிப்படைகளை ஏவியதாக கேரளாவின் ஆயுதப்படைப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி ஒருவரே கைது செய்யப்பட்டிருப்பது எல்லாவற்றையும் விட அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.

உண்மையிலேயே இந்தியாவில் பத்திரிகையாளர்களின் நிலை என்ன? பத்திரிக்கை சுதந்திரம் நிலை நாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறதா? இல்லை… எழுத்துரிமை கொஞ்ச கொஞ்சமாய் அடிமைப்படுத்தப்படுமா? பத்திரிக்கை சுதந்திரம் குறித்த சமீபத்திய உலகளாவிய ஆய்வு ஒன்றின் முடிவில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பில்லாத உலகின் டாப்20 நாடுகளில் இந்தியாவும் இடம் பிடித்திருப்பது உண்மையிலேயே நாமெல்லாம் கவலைப்பட வேண்டிய விஷயமென்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதே போன்ற மற்றுமொரு ஆய்வில் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகள் வரிசையில் இந்தியா மூன்றாம் இடம் பிடித்திருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாயிருக்கிறது.

எதனால் இந்தியாவில் இது போன்ற சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது என்று ஆராயத் தொடங்கினால் கீழ் வரும் காரணங்கள் வெகு எளிதாய் புரிபடத் தொடங்கும்.

# சமீபத்திய ஆண்டுகளில் அரசியல்வாதிகளுக்கு எதிராக பத்திரிக்கையாளர்கள் நடத்திய பல அதிரடி ஸ்பை கேமரா ஆபரேஷன்களால் ஊழல்வாதிகளுக்கு பத்திரிக்கைகள் மீதான கோபமும் வெறுப்பும் அதிகரித்திருக்கிறது.

# அரசியலையும், ஊழல்களையும் அக்கு அக்காய் பிரிக்கும் பல புலனாய்வுப் பத்திரிக்கைகள் மாநிலம் தோறும் உருவாகிக் கொண்டிருப்பது அரசியல்வாதிகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் எரிச்சலை உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறது.

# பத்திரிக்கைகள் முகத்திரைகளைக் கிழிக்க முயன்று மோதுவது அதிகார பலமும் பண பலமும் கொண்ட பல பெரிய கைகளிடம் என்ற காரணமும் பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதலின் அடிப்படையே.

# எந்தவொரு விஷயத்தின் உண்மை முகத்தையும் படித்தவர் முதல் பாமரன் வரை உடனுக்குடன் கொண்டு சேர்த்து விடும் பத்திரிக்கை உலகத்தின் அதிவேக வளர்ச்சியால் பல விஷயங்களை மூடி மறைத்துவிட முடியாமல் திணரும் அதிகாரவர்க்கத்தின் வெறுப்பு.

# மாநில மற்றும் மத்திய அரசை தேர்ந்தெடுக்கும் தேர்தல்களிலும் மக்களின் மனநிலையை மாற்றும் சக்தி கொண்ட அளவுக்கு பத்திரிக்கைகள் வளர்ந்திருப்பது அரசியல்வாதிகளின் கண்களை உறுத்தத் தொடங்கியிருக்கிறது.

# எல்லாவற்றுக்கும் மேலாக தனிமனித ஒழுக்கத்தைப் பேணாத நமது கலாச்சாரமும், கடுமையான தண்டனைகள் இல்லாத, எந்தக் குற்றத்தில் இருந்தும் எளிதில் தப்பித்துக் கொள்ளக்கூடிய நமது சட்டங்களும்கூட பத்திரிக்கையாளர்களின் மீதான தாக்குதல்களுக்கு ஒரு முக்கிய காரணமே.

பத்திரிக்கைகள் போன்றே இந்தியாவில் அதிவேக வளர்ச்சியில் இருக்கும் மற்றொரு விஷயம் இணையதளத்தின் பதிவுலகம். பத்திரிக்கைகளுக்கு கொஞ்சமும் சளைக்காமல் ஆட்சியாளர்களையும், அரசியல்வாதிகளையும் விமர்சிக்கும் பணியை பதிவுலகமும் செய்து வருவதை இப்போதுதான் அரசியல்வாதிகள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். அதுவும் பதிவுலகத்தின் வானளாவிய சுதந்திரம் காரணமாக இங்கே ஊழல்வாதிகள் பத்திரிக்கைகளை விட மிக மோசமாய் விமர்சிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தின் சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்கு பதிவுலகமும் ஒரு முக்கிய காரணமென்ற செய்தி மத்திய அரசை எட்டியிருப்பதாய் கேள்வி. ஏற்கனவே நாடு முழுவதும் பதிவுலகத்தை கண்காணிக்கும் பணியை ஆரம்பித்துவிட்ட மத்திய அரசுக்கு இந்தச் செய்தியால் பதிவுலகத்தின் மேலான வெறுப்பு இன்னும் அதிகரித்திருக்கவே செய்திருக்கிறது. பதிவுலகத்தை இந்தியாவில் மொத்தமாய் தடை செய்ய முடியுமா என்று ஏற்கனவே மத்திய அரசின் சட்டவல்லுனர்களைக் கொண்டு ஆராயத் தொடங்கியாகிவிட்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால் எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என்ற பாகுபாடுகள் எதுவுமின்றி அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பது பதிவுலகத்தை முளையிலேயே கிள்ளியெறியும் முயற்சியில் மட்டுமே. ஏனென்றால் எல்லா அரசியல்வாதிகளுமே நாளை பதிவுலகம் நமக்கும் எதிரிதான் என்பதைப் புரிந்து கொண்டுவிட்டார்கள். எளிதாய்ப் பிடுங்கி வீசலாம் என்று எண்ணிக்கொண்டு வந்தவர்கள் பதிவுலகம் ஆலமரமாகிப் போனதைக் கண்டு இப்போது கோடாலியைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

வெறும் காமெடியும், கவிதைகளும், சினிமா விமர்சனமும், சமையல் குறிப்புகளும் எழுதிக்கொண்டிருக்கும் பதிவர்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் வரப்போவதில்லை. ஆனால் அரசியல் எழுதும் பதிவர்கள் கவனிக்க வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது. இதுவரை பதிவுலகத்தில் நீங்கள் எழுதும் அரசியல் கட்டுரைகள் சம்பந்தப்பட்டவர்களை சென்றடைந்திருக்காது என்று நீங்கள் நம்பினால்…ஸாரி,அது தவறென்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆங்கிலமானாலும் சரி… மாநில மொழிகளானாலும் சரி… பதிவுலகத்தின் அரசியல் கட்டுரைகள் மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசுகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை. இப்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் நீங்கள் என்ன புனைப்பெயரில் எழுதினாலும் அரசு நினைத்தால் ஒரு சில மணித்துளியில் உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து நிற்கலாம்.

உங்களது கட்டுரைகளால் பாதிக்கப்படும் அதிகாரவர்க்கம் உங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கமுடியாமல் போகும் பட்சத்தில் அவர்களது வழக்கமான பாணியில் உங்களுக்கு பரிசளிக்க முயலுவார்கள். ஏற்கனவே பதிவுலகம் குறிவைக்கப்பட்டுவிட்டதால் இனி வரும் நாட்களில் கவனமாக இல்லாத பதிவர்கள் நிச்சயமாய் பாதிக்கப்படக்கூடும். இது நிச்சயமாய் அரசியல் எழுதும் பதிவர்களை இனி எழுதவேண்டாம் என்று கூறும் செய்தியல்ல. இனி வரும் நாட்களில் கவனமாக இருங்கள் என்பதான வெறும் எச்சரிக்கை செய்தி மட்டுமே. மேலும் மத்திய அரசும் பதிவுலகத்தை தீவிரமாகக் கண்காணித்து வருவதால் அரசியல் எழுதும் ஒவ்வொரு பதிவர்களும் கொஞ்சம் உஷாராய் இருப்பதில் தவறொன்றுமில்லை.

பதிவர்களுக்காக ஒரு சக பதிவராய் எனக்குத் தெரிந்ததைக் கூறியிருக்கிறேன். இதை அக்கறையான எச்சரிக்கையாய் எடுத்துக்கொள்வதும்… இல்லை எள்ளி நகையாடுவதும் அவரவர் விருப்பத்தைச் சார்ந்தது.

ஜாக்கிரதை நண்பர்களே… இனி பதிவர்களும் குறிவைக்கப்படலாம்!

Friday, June 17, 2011

ஊழல் மேல் ஊழல்… நாம வெட்கம் கெட்ட ஆட்கள்!

ஸ்ஸ்ஸ்… யப்பா, என்னா வெயில்லுன்ற மாதிரி… எப்பா என்னா ஊழலு. எறும்பு புத்துல இருந்து கெளம்புற எறும்புங்க மாதிரி… மழை ஓய்ஞ்ச ஈசல் கூட்டம் மாதிரி… நாளொறுமேனி பொழுதொரு வண்ணமா கொசகொச கொசன்னு ஊழல்ங்க கெளம்பி நாறிக்கிட்டேயிருக்குதே… இங்க யாருக்குமே வெட்கம் கிடையாதா? இந்த அக்கப்போரே தாங்க முடியாத நேரத்தில கண்ட கண்ட காவிப்பயலுக வேற விளம்பர ஸ்டண்ட்டுக்காக அடிக்குறானுங்க பாரு கூத்து… என்னதாங்க நடக்குது இங்கே?

மத்தியில சில முக்கிய அறிவுஜீவிங்க இருக்காங்க பாருங்க… யப்போவ்… சூப்பருங்க! வெட்கம், மானம், சூடு, சொரணையெல்லாம் தூக்கி வீசிட்டு எல்லா விஷயத்தையும் எப்படி ‘’டேக் இட் ஈஸியா’’ எடுத்துக்கிறது?... எந்தப் பிரச்சனையா இருந்தாலும் எப்படி ஆறப்போட்டு ஊறப்போடுறது?ன்னு இவங்கல்லாம் வாழ்க்கை வரலாறே எழுதலாங்க! பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், கபில் சிபல் இவங்களுக்கெல்லாம் மேல பிரதமர் மன்மோகன் சிங், அட அவருக்கும் மேல நம்ம சோனியா மேடம் இவங்களெல்லாம் நமக்கும் நம்ம நாட்டுக்கும் ஆத்திட்டிருக்கிற தொண்டுகளப்பத்தி கண்டிப்பா நாம எல்லாரும் தெரிஞ்சிக்கனுங்க! அய்யோ பாவம் மன்மோகன் சிங்… நிதியமைச்சராயிருந்து பொருளாதார மேதைன்னு எடுத்த பேரோடவே அரசியல விட்டு விலகியிருக்கலாம். என்ன பண்றது அவருக்கு ஏழரை சோனியா உருவத்துல இருந்திருக்குது! அட இந்த சோனியா காந்தியாவது தானே பிரதமர் ஆகி தன் இஷ்டப்படி ஆடியிருக்கலாம். அத விட்டுப்புட்டு என்னாத்துக்குத்தான் பொம்மை மாதிரி மன்மோகனை உக்காரவச்சு மண்டகாய வைச்சிக்கிட்டு இருக்குதுன்னு தெரியலை! அவரு பாவம்… சொன்ன வேலையைச் செய்யுறாரு. தர்ம சங்கடமான நேரத்துல வாய மூடிக்கிறாரு. இல்லை… வெளிநாட்டுக்கு எஸ்ஸாயிடுறாரு. இதுவரைக்கும் மன்மோகன் சிங்கே உறுதியா, தெளிவா, உருப்படியா எடுத்த முடிவுன்னு ஏதாவது இருக்கான்னு தேடிப்பாத்தா வெறும் ஏமாத்தம்தாங்க மிஞ்சுது.

இதுல வேற வெக்கமே இல்லாம ‘’ஊழலை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது’’ன்னும், ‘’விலைவாசி வெகு விரைவில் கட்டுப்படுத்தப்படும்’’னும் அப்பப்போ பிரதமர் அறிக்கை வேற விட்டுக்கிறாரு! இவங்க அறிக்கை விடவிட விலைவாசியும் ஏறிக்கிட்டேதான் இருக்கு. ஊழலும் புதுசுபுதுசா வெளிய வந்துக்கிட்டுதான் இருக்கு. அடிக்கடி அறிக்கை விட்டுட்டிருக்கீங்களே… ஆனா இன்னும் வெலவாசி கொறஞ்ச பாடில்லையேன்னு யாராவது கேட்டா ‘’அது போன மாசம்… இது இந்த மாசம்’’னு வடிவேலு பாணியில பதில் சொன்னாலும் சொல்லுவாருங்க நம்ம மேதகு பிரதமர்!

அதேமாதிரிதாங்க சோனியா காந்தியும். அப்பப்போ காங்கிரஸ் கட்சிக்கூட்டத்தில ‘’ஊழலுக்கு காங்கிரஸ் எதிரி’’னு பயங்கரமா காமெடி பண்றாங்க! இந்த இத்தாலியில குவாத்ரோச்சி…குவாத்ரோச்சின்னு ஒருத்தர் இருந்தாராம். அதைப்பத்தியெல்லாம் படிச்ச பல பேருக்கே தெரியாதபோது நம்ம பாமர சனங்களுக்கு மட்டும் என்ன தெரிஞ்சிரப்போவுதுன்ற தைரியத்துலதான இப்படியெல்லாம் காமெடி பன்றீங்க சோனியா மேடம்னு யாரும் கேக்கப்போறதில்லதான். ஆனா எப்படித்தான் இவங்கெல்லாம் ஒன்னுமே தெரியாத உத்தமர்கள் மாதிரியே நடிக்கிறாங்கன்னு தெரியல!

சினிமாவுல நடிக்கிறவங்கெல்லாம் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு சொல்ற சில கோமாளி அரசியல்வாதிங்ககிட்ட ஒன்னு கேக்கனும்… சினிமாவுல நடிக்கிறவங்க அரசியலுக்கு வரக்கூடாது. ஆனா அரசியல்வாதிங்க மட்டும் யோக்கியம் மாதிரியே நடிப்பீங்க. அது மட்டும் சரியா?!

அடுத்த காமெடி கிங்குகள்… கபில் சிபலும், பிரணாப் முகர்ஜியும்தான். கபில் சிபல் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரா கிழிச்ச கிழிப்பு போறாதுன்னு இவருக்கு தொலைதொடர்புத்துறையையும் கூடுதல் பொறுப்பா தூக்கிக்குடுத்த கொடுமையை என்னான்னு சொல்றது?! 2ஜி அலைவரிசைல ஊழல் நடந்துருக்குதின்னு ஒருநாள் பேட்டி கொடுக்குறாரு. கொஞ்ச நாள் கழிச்சு ஊழல் நடந்திருக்க வாய்ப்பேயில்ல. எல்லாம் முறைப்படிதான் நடந்திருக்குதுன்றாரு. அப்போ முதல்ல ஊழல் நடந்திருக்குதுன்னு பேட்டி குடுத்த அன்னிக்கி தண்ணிய கிண்ணிய போட்டுட்டு பேட்டி கொடுத்தீங்களான்னு கேட்டா தப்பா? ரைட்டா?!

இந்த பிரணாப்முகர்ஜி இருக்காரு பாருங்க… யப்பா! வயசானவங்கல்லாம் அக்கடான்னு வீட்டுல உக்காராம நாட்டோட தலையெழுத்தோட விளையாடறதுக்கு எப்போதான் தடைச்சட்டம் வரப்போவுதோ தெரியலை! இவரு பேசுறப்போ பார்லிமெண்ட்ல யாராவது குறுக்க பேசினாலோ இல்ல… கிராஸ் கொஸ்டின் பண்ணாலோ இவருக்கு உடனே கோவம் வந்துருமாம். ஆனா இவரு மட்டும் கறுப்பு பணத்தையெல்லாம் மீட்க முடியாதுன்னு சொல்லிக்கிட்டே நிதியமைச்சரா இருப்பாராம். நமக்கெல்லாம் கோவமே வரக்கூடாதாம்.

எதுக்கு இவங்களப்பத்தியெல்லாம் எழுத வேண்டியிருக்குன்னா… எத்தன ஊழல் வெளிவந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காம எருமை மாட்டு மேல மழை பெய்ஞ்ச கணக்கா எதுவுமே நடக்காத மாதிரியே ஆட்சி நடத்துறாங்களேன்ற ஆதங்கத்துனாலதான். ஊழல் செய்றவங்களுக்கு தேர்தல்ல மக்கள் வாக்களிக்காம தண்டனை குடுக்கலாம். ஆனா அவங்க ஊழல் செய்ஞ்ச பணத்தை எப்படி திரும்ப மீட்கிறது. அந்த நடவடிக்கையெல்லாம் இந்த மாதிரி அரசியல்வாதிங்களோட அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டுத்தானே இருக்கு.

போஃபர்ஸ் ஊழல், பங்குச்சந்தை ஊழல், பத்திரப்பேப்பர் ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமென்வெல்த் ஊழல், 2ஜி ஊழல் இப்படி கண்ணுக்கு தெரிஞ்ச ஊழலானாலும் சரி… வெளிய தெரியாமலே போன ஊழலானாலும் சரி… எல்லாத்துக்கும் ரிசல்ட் ஒன்னுதான்.
‘’நாட்டுக்கு நாமம்…செஞ்சவனுக்கு லாபம்’’!

2ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல்லயெல்லாம் சம்பந்தப்பட்டவங்களுக்கு பயங்கர தண்டனை கிடைக்கும்னு யாராவது நம்பிக்கிட்டிருந்தா அவங்களவிட அப்பாவி இந்த உலகத்துல எங்கயும் இருக்கமுடியாது! இதுவரைக்கும் எந்த ஒரு ஊழல்லையாவது சம்பந்தப்பட்டவங்களுக்கு தண்டனை கிடைச்சிருக்குதா நம்ம நாட்டுல? விசாரணைக்கமிஷன், சிபிஐ என்கொயரி, அப்படி இப்படின்னு கொஞ்ச நாளைக்கு சீன் காமிப்பாங்க. அப்புறமா அந்த விஷயங்களையெல்லாம் மீடியாக்களும் மறந்துட்டு மக்களையும் மறக்க வைச்சிருவாங்க. அட எவ்வளவு பைனான்ஸ் கம்பெனிங்க மக்களுக்கு ஆப்படிச்சாங்க? இதுவரைக்கும் அதுல ஒரு கேஸ்… ஒரே ஒரு கேசுலயாவது மக்கள் பணத்தை மீட்டிருக்காங்களா? இல்லை… குற்றவாளிகளுக்குதான் தண்டனை கிடைச்சிருக்குதா? அதிகாரத்தில இருக்கிற எல்லாருக்கும் தெரியும்… ஏமாத்துன பைனான்ஸ் கம்பெனிகாரன் எங்கயிருக்கான்னு. ஆனா சத்தமில்லாம அவங்கவங்க ஷேரை வாங்கிக்கிட்டு கண்டுக்காம விடல?. அப்பிடித்தாங்க எல்லாம். 100கோடி லவட்டுண பைனான்ஸ் கம்பெனிகாரன் 50கோடிய லஞ்சமா செலவு பண்ணிட்டு மீதிப்பணத்துல எங்கயாவது நிம்மதியா செட்டில் ஆகிக்கலாம். போலி மருந்து வித்து மக்களோட உயிரோட விளையாண்டு கோடிகோடியா சம்பாதிச்சவனே நிம்மதியா வாழுமளவுக்கு கடுமையான(!) சட்டம் கொண்ட நாடிது.

ஏதோ 2ஜி ஊழல்ல விதிவிலக்கா உச்சநீதிமன்றம் பொங்கி எழுந்ததால கொஞ்ச நாளைக்கு பரபரப்பா ஓடிட்டிருக்கு. ஆனா எத்தனை நாளைக்கு இத நம்பமுடியும்? போபால் விஷவாயுக்கசிவு முக்கியக் குற்றவாளிய பத்திரமா வழியனுப்பி வச்சப்ப எந்த உச்சநீதிமன்றம் என்ன செஞ்சது? இப்போகூட உச்சநீதிமன்ற பெஞ்ச் மாறுற வரைக்கும்தான் 2ஜி பரபரப்பெல்லாம். எப்படா உச்சநீதிமன்றத்தோட பல்லைப் புடுங்கலாம்னு அரசியல்வாதிங்க எல்லாம் கட்சிப்பாகுபாடு இல்லாம காத்திட்டு இருக்காங்க!

இங்கே எப்பவும் இப்படித்தான். அதிகாரமும் பணபலமும் நிறைந்தவர்கள் செய்யும் எந்த ஊழலுக்கும் எப்பொழுதும் தண்டனைகள் கிடையாது. ஊழலில் சம்பாதித்த பணத்தைக் கொண்டே ஊழலை ஊத்தி மூடிவிடலாம் என்பது நம் நாட்டின் எழுதப்படாத சட்டமாகிப்போனது! யார் என்ன ஊழல் செய்ததாய் செய்திகள் வந்தாலும் அதை பரபரப்பாய் படிப்பதோடு, தெரிந்து கொள்வதோடு நமது கடமையை முடித்துக்கொள்ளும் பொறுப்புமிக்க குடிமக்களாய் நாமெல்லாம் வாழப்பழகி வெகுநாட்களாகிப்போனது!

ஊழல் மேல் ஊழல்… இங்கே யாவருமே வெட்கம் கெட்ட ஆட்கள்!!!