SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, May 5, 2011

‘’மனிதம்’’ – மனதைச் சுட்ட ஓர் உண்மைச் சம்பவம்...


‘’மனிதநேயம்’’ என்றால் கிலோ என்ன விலை? அது எந்தக் கடையில் கிடைக்கும்? என்று கேட்குமளவுக்கு கொஞ்ச கொஞ்சமாய் அழிந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் மனிதத்தை எனக்கு உணர்த்திய ஒரு உண்மைச் சம்பவமே இது.

சிங்காரச் சென்னையின் ஒரு ஓரத்தில் குடும்பமின்றி நான் தனித்து தங்கியிருந்த நாட்கள் அது. மூன்று வேளை சாப்பாடும் ஓட்டல் கடைகளில்தான். சென்னை பேச்சிலர்களின் பசி தீர்க்கும் நூற்றுக் கணக்கான மெஸ்களில் நான் வழக்கமாய் பசியாறும் கிருஷ்ணா மெஸ்சும் ஒன்று. அக்கவுண்ட் வைத்துச் சாப்பிட்டு மாதமொருமுறை சம்பளம் வாங்கியதும் செட்டில் செய்யும் அளவுக்கு பழகிப்போன கடை அது. அந்த மெஸ் முதலாளி திருநெல்வேலிக்காரர் என்பதால் அவரை நான் அண்ணாச்சி என்றழைப்பதே வழக்கம்.

கிருஷ்ணா மெஸ் முன்பாக அண்ணாச்சியே சிகரெட், பழங்கள் போன்றவை விற்கும் பெட்டிக்கடையையும் நடத்தி வந்தார். ஓட்டலின் கல்லாவில் உட்கார்ந்திருக்கும் அண்ணாச்சிக்கு நேர் எதிரில் அவர் பார்வைக்கு படும்படி பெட்டிக்கடையை அமைத்திருந்தார். பெட்டிக்கடைக்கென்று தனியாய் ஆளெதுவும் நியமிக்காமல் அண்ணாச்சியே அதையும் கவனித்துக் கொண்டதால் அப்படியொரு ஏற்பாடு. பெட்டிக்கடையை அண்ணாச்சியின் பார்வையில் படும்படி அமைத்துக் கொண்டதால் அதற்கு வாடிக்கையாளர் எவரேனும் வந்தால் கல்லாவில் இருந்து எழுந்து பெட்டிக்கடைக்குச் சென்று அதை கவனித்துத் திரும்புவார் அண்ணாச்சி. பெரும்பாலும் ஓட்டலில் சாப்பிடுவோரே பெட்டிக்கடைக்கும் வாடிக்கையாளரென்பதால் அண்ணாச்சிக்கு இரண்டையும் கவனித்துக் கொள்வதில் பெரிதாய்ச் சிரமமில்லை.

அன்று இரவுச் சாப்பாட்டுக்கு நண்பர்கள் எவருமின்றி தனியாய்ச் சென்றிருந்தேன் நான். சாப்பிட்டு முடித்ததும் அண்ணாச்சியின் பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி அதன் ஒரு ஓரமாய் நின்று புகைத்துவிட்டு அதன் பின்னர் அறைக்குத் திரும்புவதே எனது அப்போதைய பழக்கம்.

அன்றும் அப்படித்தான். இரவு எட்டரை மணியளவில் சாப்பிட்டுவிட்டு அண்ணாச்சிக் கடையில் சிகரெட் வாங்கி பற்ற வைத்தேன். எனக்கு சிகரெட் எடுத்துக் கொடுத்து விட்டு மீண்டும் ஓட்டலுக்குள் சென்று விட்டார் அண்ணாச்சி. சாப்பிட்டவுடன் சிகரெட் பிடிப்பதில் இருக்கும் சுகம் அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமேத் தெரியும். நானும் அப்படித்தான். பெட்டிக்கடையின் ஒரு ஓரமாய் நின்று சிகரெட்டை ரசித்து ஊதிக் கொண்டிருந்தேன். ஓட்டலுக்கு முன்னால் ரோட்டோரத்தில் மாடுகள் வழக்கம்போல் கூட்டமாய்ப் படுத்திருந்தன.

அப்போது எழுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் அந்த பெட்டிக் கடைக்கு வந்தார். அழுக்கான, அங்கங்கே கிழிந்திருந்த உடையும் அவரது அக்குளில் சுருட்டி வைத்திருந்த துணி மூட்டையும் அவரைப் பிச்சைக்காரராகவே அடையாளம் காட்டியது எனக்கு. அவரது மெலிந்த தேகமும் தளர்ந்த நடையும் அவரது வறுமையையும் வயோதிகத்தையும் எடுத்துணர்த்தியது. அவரைத் தாங்கி பிடிக்கும் பக்கபலமாய் ஊன்றுகோல் போன்ற கம்பு ஒன்றும் அவர் கையிலிருந்தது.

பெட்டிக்கடையின் முன்னால் வந்து நின்ற அவர் எதுவும் பேசாமல் கொஞ்ச விநாடிகள் கடையையேப் பார்த்துக் கொண்டு நின்றார். மத்தியில் ஒருமுறை ஓரமாய் நின்று சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தார். அவரைப் பிச்சைக்காரராகப் பார்த்த நான் எங்கே என்னிடம் பிச்சை கேட்பாரோ என்று எண்ணி முகத்தைத் திருப்பிக் கொண்டேன். அண்ணாச்சி ஓட்டலின் உள்ளே மும்முரமாய் வேலைசெய்து கொண்டிருந்ததில் பெட்டிக்கடையில் நின்று கொண்டிருந்த இந்தப் பெரியவரைக் கவனிக்கவேயில்லை. பெரியவரும் அமைதியாய் புன்னகையான முகத்துடன் பெட்டிக்கடையின் முன்னாலேயே காத்து நின்றார்.

சரி… இந்தப் பெருசு அண்ணாச்சியின் ஓட்டலில் தின்பதற்கு ஏதாவது பிச்சை கேட்டு வந்திருக்கும் என்ற எண்ணத்துடன் நான் சத்தமாக ‘’அண்ணாச்சி… உங்களுக்காக இங்க கஸ்டமர் ஒருத்தர் வெயிட்டிங்’’ என்று கிண்டலாக அண்ணாச்சியை அழைத்தேன். எனது சத்தத்தினால் அந்தப் பெரியவரைப் பார்த்தபின்பும் அண்ணாச்சி உள்ளேயிருந்து வேலைகளை முடித்து சில நிமிடங்கள் தாமதமாகவே பெட்டிக்கடைக்கு வந்தார். அந்தப்பெரியவரிடம் அண்ணாச்சி ‘’என்ன வேணும் பெரியவரே’’ என்றார்.

அந்தப் பெரியவர் எதுவும் பேசாமல் அமைதியாக புன்னகைத்தவாரே நின்றார்.

அண்ணாச்சியோ ‘’ பெரியவரே என்ன வேணும்னு சீக்கிரம் சொல்லும். மனுசனுக்கு ஆயிரம் சோலி கெடக்கு. சாப்பாடு ஏதாவது வேணும்னா போயிட்டு ஒரு பத்து மணிக்கு வாரும் ‘’ என்றார்.

அப்போதும் அந்தப் பெரியவர் பேசாமல் புன்னகைத்துக் கொண்டே நின்றார். அவரது பார்வை மட்டும் பெட்டிக்கடையின் மீதே பதிந்திருந்தது. அண்ணாச்சி அவரிடம் காசு ஏதாவது வேணுமா பெரியவரே என்று ஒரு இரண்டு ரூபாய் நாணயத்தை எடுத்து நீட்டினார்.

அதை வாங்கிக் கொள்ளாத அந்தப் பெரியவர் மெல்ல தன் விரல்களை தொங்கிக் கொண்டிருந்த வாழைப் பழத்தை நோக்கிக் காட்டினார்.

அண்ணாச்சியோ ‘’இத முதல்லயே சொல்ல வேண்டியதுதானய்யா… என்ன வேணும்னு வாயத் தொறந்து சொன்னாதானே தெரியும்’’ என்றவாறே இரண்டு பழங்களை பிய்த்து அந்தப் பெரியவரிடம் நீட்டினார்.

அப்போதும் புன்னகையுடனே அதை வாங்கிக் கொண்ட பெரியவர் எவ்வளவு என்பது போல் கையை ஆட்டி அண்ணாச்சியை வினவினார். அவரால் பேச முடியவில்லையா? இல்லை பேச விரும்பவில்லையா? என்பதை கடைசிவரை அவரது புன்னகை உணர்த்தவேயில்லை.

அண்ணாச்சி அவரிடம் ‘’காசெல்லாம் வேண்டாம் பெரியவரே. பழத்த சாப்பிட்டுட்டு இடத்தக் காலிபண்ணும்’’ என்றார்.

அண்ணாச்சியின் வார்த்தைகளைக் காதில் வாங்காதவராய் அந்தப் பெரியவர் அவரது அழுக்கான உடையிலிருந்து சில்லரைகளைத் தேடிச் சேர்த்து எடுத்து மூன்று ரூபாயை ஒரு மிட்டாய் பாட்டிலின் மீது வைத்து விட்டு என்னைப் பார்த்து மீண்டும் ஒரு முறை புன்னகைத்து விட்டு மெல்ல நகரத் தொடங்கினார். எனக்கு ஒரு கணம் செருப்பால் அடித்தாற்போல் இருந்தது.

மெல்ல நகர்ந்தவர் ரோட்டோரத்தில் படுத்துக் கிடந்த மாடுகள் கூட்டத்தினருகில் சென்று நின்றார். எங்கே மாடுகள் ஏதாவது அவரைக் கீழே தள்ளப் போகிறது என்று நான் பதறிப்போய் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே கன்றுடன் நின்று கொண்டிருந்த ஒரு பசுவிடம் சென்ற அந்தப் பெரியவர் தன் கையிலிருந்த பழத்தில் இரண்டில் ஒன்றைப் பிய்த்து அதை இரண்டாக உடைத்து ஒரு பாதியை தாய்ப்பசுவிற்கும் மீதிப்பாதியை கன்றுப்பசுவிற்கும் வாயில் ஊட்டினார். மீதமிருந்த ஒரு பழத்தை அவர் தின்று விட்டு அந்தத் தோலையும் மற்றொரு பசுவிற்கு ஊட்டினார். பின்னர் ஏதோவொரு ஆத்ம திருப்தி அடைந்தவராய் இருளான சாலையில் மெல்ல நடக்கத் தொடங்கினார்.

என்னை அக்கணம் ஏதேதோ உணர்வுகள் ஆக்கிரமித்துக் கொள்ள என்னவென்று புரியாத மௌனத்தோடு கொஞ்ச நேரம் விக்கித்து நின்றவனாய் ஆகிப்போனேன். சிறிது நிமிடங்களில் ஏதோ உணர்ந்தவனாய் யாரந்தப் பெரியவர் என்று அண்ணாச்சியை வினவினேன். அந்தப் பெரியவருக்கு இரண்டு மகன்கள் என்றும் இருவரும் திருமணமானவுடன் அவரைச் சரியாகக் கவனிக்காததால் வீட்டை விட்டு அந்தப்பெரியவர் வெளியேறி, கிடைக்குமிடத்தில் உண்டு உறங்கி நாட்களை நகர்த்துவதாய்க் கூறினார் அண்ணாச்சி.

ஏதோவொரு வேகத்துடன் எனது யமாகாவை உதைத்து ஸ்டார்ட் செய்து அவசரமாய் அந்தப் பெரியவர் போன பாதையில் அவரைத் தேடிப் போனேன். அரைமணி நேரத்திற்கும் மேல் அலைந்தும் அந்தப் பெரியவரை என்னால் பார்க்கக் குடுப்பினையில்லை.

அன்றிலிருந்து இன்றுவரை அந்த நிகழ்வு எனக்குள் ஏதோ ஒரு விதமாய் உறுத்திக் கொண்டேயிருக்கிறது. ஒரேயொரு முறை அந்தப் பெரியவரைப் பார்த்திருந்தாலோ இல்லை அவரிடம் மன்னிப்பு கேட்டிருந்தாலோ என் மனம் ஒருவேளை சாந்தப்பட்டிருக்கக் கூடும். ஆனாலும் என் துரதிர்ஷ்டமா? இல்லை சாபமா? என்று தெரியவில்லை அதற்கு பின் அந்தப்பெரியவர் என் கண்ணில் படவேயில்லை...

பொய், புரட்டு, பித்தலாட்டங்கள் என்று மனிதரை மனிதரே ஏய்த்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்திலும் இங்கொன்றும் அங்கொன்றுமாய் இப்படிப்பட்ட மனிதர்களும் நமக்கு மனிதத் தன்மையை உணர்த்துவதற்காகவே வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் போலும்.

சக உயிர்களுக்கு உதவுவோம். மனிதம் காப்போம்… நன்றி

3 comments:

 1. அருமையான பதிவு!

  நிகழ்ச்சியை கண் முன்னால் கொண்டுவந்து காட்டி விட்டீர்கள்

  ReplyDelete
 2. உண்மைதான் இது போன்ற சில காரக்டர்கள் இந்த அதிவேக வாழ்க்கயின் நகர்தலின் ஊடே அவ்வப்போது
  தென்படத்தான் செய்யும் அவை புரியாத புதிராகவே நம் நினைவில் நிலைத்து நிற்கும்

  ReplyDelete
 3. மனிதர்களை நாம் தப்பாகவே தான் பார்த்துப் பழகி விட்டோம். அதற்கேற்றார்போல சிலர் நம்மை ஏமாற்றியும் போகிறார்கள்.
  அந்தப் பெரியவர் பற்றிய பதிவை மிக அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.. சபாஷ்.

  ReplyDelete