SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Wednesday, May 18, 2011

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் இரண்டு இமாலயத் தவறுகள்...


மே18 நிகழ்வால் தமிழ் தேசியக் கனவுகளை தகர்த்தெறிந்ததாக நினைத்து இனவாத இலங்கை அரசு வேண்டுமானால் கொக்கரித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பழி வாங்கி விட்டதாக மகிழ்ச்சியடைந்தால் இந்திய அரசு தான் செய்த இமாலயத் தவறுகளை இன்னமும் புரிந்து கொள்ளாததாகவே அர்த்தமாகிப்போகும்.

இலங்கை விவகாரத்தைப் பொருத்தவரை இந்திராகாந்திக்குப் பிறகு அதை சரியான ராஜதந்திரத்தோடு அணுகிய தலைவர்கள் இந்திய அரசியலில் எவருமில்லை என்பதே நிஜமாகும். இந்தியாவின் இரும்புப் பெண்மணியாய் அமெக்காவிற்கே அடிபணியாமல் விளங்கிய இந்திரா இலங்கை விவகாரத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாடுடனே விளங்கியது ஏன்?
இந்தியா ஒரு தீபகற்ப நாடென்பது நாமெல்லோரும் அறிந்ததே. இயற்கையாகவே நாம் வடக்கே இமய மலையையும் மீதி மூன்று திசைகளிலும் கடற்பரப்பையும் நமது நாட்டுக்குப் பாதுகாப்பாய் அமையப் பெற்றிருக்கிறோம். தெற்கு ஆசியாவையும், இந்தியாவையும் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் எந்த நாடுகளுக்கும் சரி… இந்தியாவை போர் பய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் நாடுகளுக்கும் சரி… தெற்கு பகுதியில் அவர்களின் படைத்தளத்தை நிறுவ ஒரு நிலப்பரப்பு இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அவ்வாறான நிலப்பரப்பு?… அது இலங்கை மட்டுமே!
நீண்ட காலமாகவே அமெரிக்கா தனது படைத்தளத்தை இலங்கையில் நிறுவ பெருமுயற்சி எடுத்து வருவதே இதற்கான சாட்சி. இலங்கையின் சென்ற தேர்தலில் கூட ராஜபக்சேவிற்கு எதிராக பொன்சேகா களமிறங்கியதே அமெரிக்காவின் கைங்கரியத்தில்தான். ஒருவேளை பொன்சேகா அந்தத் தேர்தலில் ஜெயித்திருந்தால் இந்நேரம் அமெரிக்காவின் படைத்தளம் இலங்கையில் நிறுவப்பட்டிருக்கும். அவ்வாறு நிறுவப்பட்டிருப்பின் அது இந்தியாவுக்கு மட்டுமல்ல… வேகமான வளர்ச்சியில் அமெரிக்காவையே மிஞ்சிக் கொண்டிருக்கும் சீனாவுக்கும் அது மிகப்பெரிய செக் பாயிண்ட்டாய் அமைந்திருக்கும். சரி… அதான் பொன்சேகா தோத்துட்டாருல்ல… அப்புறம் என்ன பிரச்சின? அப்படின்னு கேட்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாய் கட்டுரையை மேற்கொண்டு படிக்கவேண்டும்.

மேற்கூறிய இந்திய தேசிய பாதுகாப்பு விஷயம் கருதியே இந்திராகாந்தி இலங்கை மண்ணில் எவரையும் கால் பதித்து விடாதபடி செய்யும் நோக்கில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் விளங்கினார். ரஷ்யாவுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டு அமெரிக்காவையே ஒரு சமயம் இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடத் தகுதியில்லை என்று மூக்கறுத்த இந்திரா காந்தியின் இரும்புக் கரத்துக்குள் இலங்கை அரசுகள் கொஞ்சம் பயத்துடன் அடங்கியேக் கிடந்தன. இந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு ஏதேனும் நிலைப்பாட்டை எடுத்தால் இந்தியா உடனடியாக விடுதலைப் புலிகளுக்கு உதவி தனி ஈழம் அமைத்துக் கொடுக்கும் என்ற ராஜதந்திரத்தையே இந்திராகாந்தி இலங்கை அரசுகளுக்கு எதிராகக் கையில் வைத்திருந்தார்.
தமிழர்களின் துரதிர்ஷ்டம் என்னவென்றால் இந்திராவின் அகால மரணம்தான். இந்திராவும், எம்.ஜி.ஆரும் இன்னும் கொஞ்ச காலம் உயிரோடிருந்திருந்தால் எப்போதோ தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் என்பதை நிச்சயமாக மறுப்பதற்கில்லை.

இந்திராவின் மரணத்துக்குப் பிறகு இந்திய ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ராஜீவ் காந்தியே தற்போதைய மே18 நிகழ்வு வரை அனைத்து விஷயங்களுக்கும் காரணகர்த்தாவாகும். ராஜீவ் காந்தியைக் கூட பெரிதாய்க் குறை கூறுவதற்கில்லை. ஏனென்றால் ராஜீவ் காலத்திலிருந்துதான் மலையாளிகள் தமிழர்களின் வாழ்வில் விளையாடத் துவங்கினார்கள். எப்போதுமே தமிழர்கள் மலையாளிகளை எதிரியாகவோ, வெறுப்பாகவோ, இழிவாகவோ பார்ப்பதில்லை. ஆனால் இன்று வரை மலையாளிகளுக்கு தமிழன் என்றால் ஒரு வெறுப்பு, இழிவு, பகை என்று அவர்கள் உள் மனதினில் எதனால் வஞ்சம் ஏற்றிக் கொண்டார்களென்று தெரியவில்லை. ராஜீவ் ஆட்சியிலும் அவரைச் சுற்றியிருந்த மலையாளிகள் கூட்டம்தான் இலங்கை விவகாரத்தில் அவரைத் தவறாய் வழி நடத்தியது. அவர்களின் ஆலோசனைப்படிதான் ராஜீவ் அவருடைய மரணத்திற்கே காரணமாகிப் போன இந்தியாவின் முதல் இமாலயத் தவறான இந்திய அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பிய வேலையைச் செய்தார். அமைதிப்படை என்ற பெயரில் போனவர்களின் அத்துமீறல்கள் இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்ச் சகோதரிகளின், தாய்மார்களின் கற்பைச் சூறையாடியது தமிழ் வரலாற்றில் ராஜீவ் காந்தியின் பெயர் மீது அழிக்க முடியாதக் கரையாய்ப் படிந்து போனது. ராஜீவ் காந்தியின் வார்த்தையையும், அமைதிப் படையையும் நம்பி ஆயுதங்களைக் கீழே போட்ட விடுதலைப் புலியினர் மீண்டும் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டதோடு தங்கள் சகோதரிகளின், தாய்மார்களின் கற்பு பறிபோன கொடூர நிகழ்வுகளுக்கு பழிவாங்கும் விதமாக ராஜீவ் காந்தியின் படுகொலையையும் அரங்கேற்றினர்.(விடுதலைப்புலிகளின் இந்த மாபெரும் தவறுதான் உலக ரீதியில் அவர்களுடைய பின்னடைவுக்கு மிக முக்கியக் காரணமாகிப் போனது. அதே போல் விடுதலைப் புலிகளின் மற்றொரு தவறாய் நான் நினைப்பது கடைசியாய் நடந்த போரில் அவர்கள் பயன்படுத்திய போர் யுத்திகள்தான்.
அவர்களுடைய இறுதிக் கட்டப் போர் வரை தங்களிடம் இருந்த நீர்மூழ்கிக்கப்பல், போர் விமானங்கள், ராட்சத குண்டுகள் என எதையுமே பயன்படுத்தாமல் இலங்கைப்படைகள் ஒவ்வொரு நகரமாய் வீழ்த்த வீழ்த்த பெரிதாய் எதிர்ப்புகள் ஏதும் காட்டாமல் பின் வாங்கிப் போனதன் ரகசியம்தான் இதுவரை ஏனென்று தெரியவில்லை…!)

அதற்கு பின் வந்த அரசுகளில் சோனியா காந்தியின் கட்டுப்பாட்டுக்குள் பதவிக்கு வந்த காங்கிரஸ் அரசே இந்தியாவின் இரண்டாவது இமாலயத் தவறை அரங்கேற்றியிருக்கிறது. அமைதிப் படையை அனுப்பி தமிழர்களைச் சிதைத்தது முதல் தவறென்றால் இப்போது இலங்கைக்கு ராணுவ உதவிகளைச் செய்து தனித் தமிழீழக் கனவுகளைச் சிதைத்ததோடு இந்திய தேசியத்தின் பாதுகாப்புக்கும் கேள்விக் குறியை உருவாக்கி தனது இரண்டாவது இமாலயத் தவறை அரங்கேற்றியிருக்கிறது இந்தியா.
சோனியா காந்தி தனது கணவரின் மரணத்துக்குப் பழிவாங்கும் செயலாகத்தான் இலங்கை அரசுக்கு உதவினாரா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த கேள்வி. (எனக்குக் கூட சிறு வயதிலிருந்தே ஒரு சந்தேகம்! எப்படி ராஜீவ் காந்தியின் மரணத்தின் போது அவரும், அவருடைய மெய்க்காப்பாளர்களும், சில போலீஸ்காரர்களும், பொது மக்களும் மட்டுமே இறந்து போயினர். ஒரு கட்சியின் தேசியத் தலைவர் தமிழகத்தில் வந்து குண்டு வெடிப்பில் சிக்கி இறக்கும் நிகழ்வில் எந்தவொரு அரசியல்வாதியும் அவருடன் நடந்து சென்று இறந்து போனதாய்ச் செய்திகள் இல்லாத மர்மம்தான் என்ன? இதையும் சோனியாகாந்தி கொஞ்சம் புலனாய்வு செய்து கண்டுபிடித்துச் சொன்னால் எனது நீண்ட நாளைய சந்தேகம் தீர உதவியாய் இருக்கும்!)

இந்தியா உதவ வில்லையென்றால் இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தானுடன் கைகோர்ப்போம் என்று இந்தியாவையே மிரட்டத் துணிந்து, போரின்போது பாகிஸ்தானிடம் உதவி கேட்டு ஓடியது இலங்கை அரசு. இன்றைய சூழலில் வளர்ந்து வரும் சீனாவுக்கு உலக அளவில் நிகரான ஒரே போட்டியாளர் இந்தியா மட்டும்தான். இன்றில்லையென்றாலும் ஆசியப் பிராந்தியத்தில் என்றாவது எதிர்காலத்தில் சீனாவை மிஞ்சும் வல்லமை இந்தியாவுக்கு மட்டுமே உண்டென்பதை சீனாவும் அறிந்து வைத்துள்ளது. நமது இராணுவ ஜெனரல் அளத்திருந்த ஒரு பேட்டியில் ‘’சீனா தனது எல்லை முழுவதிலும் சாலை வசதிகளையும், இராணுவத் தளவாடங்களையும் மேம்படுத்தி வைத்துள்ளது. தற்போதைய சூழலில் சீனா நம் மீது படையெடுத்தால் 35 நிமிடங்களுக்குள் சீனப்படைகள் டெல்லி வரை வந்து விடும். ஆனால் நமது எல்லையோர சாலை வசதிகளின்படி நமது இராணுவத் துருப்புகள் எல்லையைச் சென்றடையவே 36 மணி நேரங்களுக்கு மேலாகும்’’ என்று கூறியிருந்ததைப் பற்றி இன்றளவும் விவாதிக்கவும், கவலைப்படவும், நடவடிக்கையெடுக்கவும் எவருமில்லை என்பது இந்தியாவின் துரதிர்ஷ்டமே. இந்தச் சூழலிலும் சோனியா காந்தியின் அரசு இலங்கையிடம் பாகிஸ்தானையோ, சீனாவையோ அண்டவிடாதுச் செய்யும் ராஜதந்திரமாக நினைத்து இலங்கைக்கு அவ்வளவு உதவிகள் செய்தும் இன்றளவும் இலங்கை அரசு இந்தியாவை மதிக்காமல் சீனாவின் வால் பிடித்துக்கொண்டு திரிந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரிலும் தமிழர்களைப் பழிவாங்குவதாய் நினைத்துக் கொண்டு காங்கிரஸ் அரசுக்கு தவறான ராஜதந்திர வழிகாட்டுதல்களை நடத்தியது மலையாளிகளின் கூட்டமே. இன்று சீனா மறுசீரமைப்புப் பணிகள் என்ற பெயரில் எண்பதாயிரத்துக்கும் மேற்பட்ட சீனர்களை இலங்கையில் குவித்திருக்கிறது. என்ன செய்யப் போகிறது இந்தியாவின் ராஜதந்திரம்?. ஒரு சிலரின் சொந்த விறுப்பு வெறுப்புகள் மற்றும் பழி வாங்கும் நடவடிக்கைகளுக்காக நமது நாட்டின் தென் திசைப் பாதுகாப்புக்கு ஆப்படித்தாகிவிட்டது.

இனி என்ன செய்தும் பலனில்லை. இனவாத இலங்கை அரசு சீனாவின் தைரியத்தில் இந்தியாவை மதிப்பதில்லை. இலங்கைக்கு ஏதாவது செக் வைக்கலாமென்றால் விடுதலைப் புலிகளும் இன்றில்லை. விடுதலைப்புலிகள் நினைத்திருந்தால் எப்போதோ அமெரிக்காவின் ஆயுத உதவியோடு தனி ஈழம் அமைத்துக் கொண்டு அதற்கு கைமாறாக அமெரிக்காவின் படைத்தளத்தை தமீழீழத்தில் நிறுவ அனுமதி கொடுத்திருக்கலாம். ஆனால் இந்தியாவுக்கு எதிரான காரியத்தை ஒரு போதும் செய்வதில்லை என்று அமெரிக்காவின் உடன்படிக்கையையே மறுத்தவர்கள் விடுதலைப்புலிகள். அவர்களுக்கு இருந்த அக்கறை கூட நம் சொந்த நாட்டின் பாதுகாப்பின் மீது நம் அரசுக்கு இல்லாமல் போய் சில தவறானவர்களின் வழிகாட்டுதலால் இரண்டு இமாலயத் தவறுகளைச் செய்து விட்டு இப்போது சிறிலங்கா என்ற குட்டி நாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.

காலம் என்ன பதில் சொல்லப் போகிறதென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்….!

1 comment:

  1. காலம் கடந்து விட்டது. சிங்கள அரசு முடிந்தளவு சீன தேசத்தவரை பல விடயங்களில் உள்வாங்கி விட்டது. தொழிலாளர் தொழில் தருணர் பங்குதாரர் என்ற வேசத்தில் இலங்கையில் நிறையவே சீன வேவுப் படை நுழைந்து விட சி்ங்கள அரசு இடம் கொடுத்து விட்டது, அன்று விடுதலைப் புலிகள் இருந்தவரை இது முடியாதிருந்தது. ஒரு விதத்தில் இந்தியாவை பாதுகாத்தது. இந்தியா என்ற நாசகார நாடு சிங்களத்துடன் சேர்ந்து சொற்ப ஆசைகளுக்காக தன் தலையிலே மண்வாரி் கொட்டிக் கொண்டு விட்டது, இனி ஓரு யுத்தம் சீனாவுடன் ஏற்படின் சிங்க அரசு முற்றும் முழுதாக சீனாவிற்கே உதவிடும்.

    ReplyDelete