SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Monday, May 16, 2011

பதிவர்களின் தொடரும் கடமைகள்...


தேர்தல் முடிந்து, முடிவுகளும் தெரிந்து புது அரசு(சையு)ம் அரியணையில் ஏ(ற்)றியாகிவிட்டது. ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு விதமான எழுத்து நடையில் நமது ப்ளாக்கர் சமூகம் சமுதாய உணர்வு கொண்டதென்பதை உலகுக்கு நிருபித்துக் கொண்டே இருக்கிறோம்.

நம்மில் பலர் சிறு வயதிலிருந்தே சமூக மாற்றத்திற்கான ஏக்கத்துடனே வளர்ந்து, வாழ்க்கை சக்கரத்தின் வேகச் சுழற்சியில் வேவ்வேறு பாதையில் சிதறிப்போன போதும் நமது சிந்தனைப் புரட்சிகளுக்கு மேடையமைத்த ப்ளாக்கர்ஸ் தளத்தின் மூலம் இப்போதுதான் ஒன்று படமுடிந்திருக்கிறது. நம்மில் எத்தனையோ பேரின் சமூகம் மீதான மனக்குமுறல்களை ப்ளாக்கர்ஸில் மட்டுமே வெளிப்படுத்த முடிந்திருக்கிறது. இணையதள எழுத்துச் சுதந்திரம் இன்னமும் இடைஞ்சல்களின்றி காக்கப்பட்டு வருவது நமக்கு கிடைத்த முதல் வரமென்பதை மறுப்பதற்கில்லை. மாறிவரும் காலவளர்ச்சியில் இணையதள வாசகர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவது நம்மைப் போன்ற பதிவர்களுக்கான மற்றுமொரு வரப்பிரசாதமாகும்.

ப்ளாக்கர்ஸ் தளம் ஒரு சக்திமிக்க சமூக மறுமலர்ச்சிக்கான மேடையாய் மாறத் துவங்கியிருக்கிறது. ப்ளாக்கர்கள் நாம் சமூகத்தின் சிந்தனைகளைத் தூண்டும், சமுதாய மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை படைத்த கூட்டமாய் உலகத்தின் பார்வையில் மதிக்கப்படத் தொடங்கியிருக்கிறோம். ஆரோக்கியமான வளர்ச்சியை எட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையிலாவது எழுத்துச் சுதந்திரத்தை எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் நமக்கென்று சில வரைமுறைகளையும் கடமைகளையும் வகுத்துக் கொள்வதில் தவறேதும் இருப்பதாய் தெரியவில்லை. வரைமுறையின்றி செய்யப்படும் எந்தவொரு செய்கைகளும் பிறரை முகம் சுளிக்க வைப்பதாய் மாறக்கூடுமென்பதால் வரைமுறைகளென்பது நம்மை நாமே செப்பனிட்டுக் கொள்ள நிச்சயமாய் உதவக்கூடும்.

வரைமுறைகள் என்பது இதைத்தான் எழுதவேண்டும், அதை எழுதக்கூடாது என்பன போன்றதல்ல. ஒவ்வொரு ப்ளாக்கருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு. ஒரு சிலர் சினிமாவை மிக நேர்த்தியாய் விமர்சிப்பார்கள். இது படத்தை பார்க்கும் சாமான்யனுக்கும் நல்ல சினிமா என்பது எப்படியிருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாய் இருக்கும். ஒரு சிலர் வாழ்க்கையின் மிகச்சாதாரண நிகழ்வுகளைக்கூட வெகு நகைச்சுவையாய் எல்லோரும் விரும்பும் வண்ணம் எழுதுவார்கள். ஒரு சிலர் கவிதைகளின் வழியே இலக்கியம் வளர்ப்பார்கள். ஒரு சிலர் சிறுகதைகள் எழுதக்கூடும். ஒரு சிலர் பல்வேறு ஊடகங்களில் தாங்கள் ரசித்தவற்றை பிறரும் ரசிக்க அப்படியே ப்ளாக்கரில் எடுத்து எழுதுவார்கள். பெரும்பான்மை ரகத்தார் சமுதாய விழிப்புணர்வு கட்டுரைகள், அரசியல் அலசல் கட்டுரைகள் என்று புரட்சி மேடையில் பயணிப்பார்கள். இன்னும்… சமையல் குறிப்புகள், மருத்துவக்குறிப்புகள், சட்ட உதவிகள், பயண அனுபவங்கள் என்று எண்ணற்ற வகையான எழுத்துக்களும் ப்ளாக்கர்ஸில் உண்டு.

எந்தவொரு ஊடகமும் பொழுதுபோக்கு அம்சங்களின்றிப் போனால் சாமான்யன் வரை சென்றடையும் வெற்றியை ஈட்டுவதென்பது இயலாத காரியமே. எப்படி வெறும் அரசியல் மற்றும் சமுதாய விழிப்புணர்வுக் கட்டுரைகள் மட்டுமே எல்லாவித வாசகர்களையும் கவருவதாக இருக்காதோ அப்படித்தான் ஒவ்வொரு வகை எழுத்துக்களுமே. வெறும் கவிதைகளாகவோ, வெறும் சிறுகதைகளாகவோ இல்லை வெறும் சினிமா விமர்சனம் மட்டுமாகவோ இருந்தால் ப்ளாக்கர்ஸ் இந்தளவு வளர்ச்சியை எட்டியிருக்குமா என்பது கேள்விக்குறியே. எந்தவொரு துறைக்கும், எந்தவொரு பிரிவுக்கும் பதிவுகளை எழுதும் வண்ணம் நம்மில் பல திறமைசாலிகளிருப்பதே ப்ளாக்கர்ஸ் உலகத்தின் வெற்றிக்கான காரணமாகும்.

மிகச்சிறந்த வெற்றியில் பயணித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் வெறுமனே ‘’லவ் பண்ணுவது எப்படி?’’, ‘’கடலை போடுவது எப்படி?’’, ‘’கேரளா பிகரை மடிப்பது எப்படி?’’, ‘’மலையாளிப் பெண்களுக்கு மனசு பெரிசு’’, ‘’பல்லு விளக்குகிறேன்’’, ‘’வாய் கொப்பளிக்கிறேன்’’ என்பன போன்ற கட்டுரைகளை மட்டுமே எழுதி ப்ளாக்கர்ஸ் மீதான சமூகப் பார்வையைக் கெடுத்துக் கொண்டிருக்காமல் அவ்வப்போது உருப்படியான விஷயங்களையும் கொஞ்சம் எழுதுங்கள்.

இதுவரை ஆளுங்கட்சியை பெரும்பான்மையாய் விமர்சித்து எழுதி, நாம் விரும்பிய ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொண்டதோடு முடிந்து விடவில்லை நமது வேலைகள். இனிவரும் காலங்களில் ப்ளாக்கராய் நமது முக்கிய கடமை புது அரசுக்கும், அதன் அரசிக்கும் கூட மிகச்சிறந்த கடிவாளமாய் நமது விமர்சனங்களை எடுத்து வைப்பதுதான். ஆளுங்கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கும் அதே நேரத்தில் ஆளுங்கட்சியின் நல்ல திட்டங்கள் ஏதேனுமிருப்பின் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் அரசியல் எழுதும் ஒவ்வொரு பதிவரின் கடமையாகும்.

நாம் எழுதும் எந்தவொரு பதிவானாலும் அதை வெளியிடும் முன் கீழ்க்காண்பவற்றை ஒரு முறை உறுதிபடுத்திக் கொண்டு வெளியிடுவது நிச்சயமாய் நல்லதொரு ப்ளாக்கரின் கடமை என்பதை மறுப்பதற்கில்லை.

# உங்கள் பதிவில் தனிமனித விமர்சனம் ஏதுமில்லை.
(கருணாநிதி, ஜெயலலிதா, சோனியா காந்தி போன்ற எந்தவொரு அரசியல்வாதியையும் அரசியல் சார்ந்து விமர்சித்தல் தவறில்லை. அதே போல் எந்தவொரு நடிகர் நடிகைகளையும் சினிமா சார்ந்து விமர்சித்தல் தவறில்லை. ஆனால் அவர்களுடைய தனிமனித வாழ்க்கையை விமர்சித்தல் நாகரீகமற்றது என்பது என் தாழ்மையான கருத்து)

# உங்கள் பதிவில் படிப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் அநாகரிகமான வார்த்தைகள் ஏதுமில்லை.

# உங்கள் பதிவில் எவரொருவர் பற்றிய செய்தியிலும் அவரை மரியாதையில்லாது விளிக்கும் ஒருமையில் எழுதிய சொற்கள் ஏதுமில்லை.

# உங்கள் பதிவில் எழுதப்பட்ட விஷயம் ஏதோவொரு வகையில் வாசகனுக்கு பயனளிக்குமே ஒழிய உருப்படியில்லாத குப்பைச் செய்திகள் ஏதுமில்லை.
(கவிதை மற்றும் சிறுகதை என்றால் இலக்கியம் வளர்க்கும். படிக்கும் வாசகனின் மனதில் நிறைவைத் தரும். சினிமா விமர்சனம் சாமான்யனுக்கு நல்ல சினிமாவை மட்டும் பார்க்கவும் உருப்படியில்லாத சினிமாக்களைத் தவிர்த்து அவன் பணத்தை வீணாகாமல் மிச்சப்படுத்தவும் உதவும். அரசியல் மற்றும் சமுதாய விழிப்புணர்வுக் கட்டுரைகள் என்றால் சமூக மாற்றத்துக்கு உதவும். இப்படி எந்த வகைப் பதிவானாலும் ஏதோவொரு வகையில் சாமான்யனுக்கும் சமூகத்துக்கும் உதவும் வகையில் இருத்தல் மேலானது).

# உங்கள் பதிவு எந்த விஷயமான படைப்பானாலும் நடுநிலைமையான கருத்துக்களோடு இருக்கிறதே ஒழிய ஒரு தலைப்பட்சமான கருத்துக்கள் ஏதுமில்லை.

# உங்கள் பதிவு எதிலிருந்தாவது எடுத்து எழுதப்பட்டதானால் அதைப்பற்றித் தெரிவிக்காமல் மறைக்கப்பட்ட விவரம் ஏதுமில்லை.

மேற்கூறிய விஷயங்கள் அனைத்தையும் ஒவ்வொரு பதிவின் போதும் ஒவ்வொரு பதிவரும் கடைப்பிடித்தலைக் கடமையாக நிறைவேற்றும் பட்சத்தில் வேகமான வளர்ச்சியிலிருக்கும் நம் ப்ளாக்கர்ஸ் சமூகம் இன்னும் மரியாதைக்குரிய நிலையைச் சென்றடையும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது சத்தியமான நிச்சயம்.

பின்குறிப்பு :- ஆரோக்கியமான விமர்சனங்களும் விவாதங்களுமின்றி வெறுமனே நக்கல், நையாண்டித்தனம் செய்து கொண்டிருக்கும் பின்னூட்டப் புலிகளை நான் பதிவர்களாகவே கருத்தில் கொள்ளாததால் அவர்களைப் பற்றி எழுதத் தேவையில்லாததாகவே உணர்கிறேன்.

5 comments:

 1. >>அவர்களுடைய தனிமனித வாழ்க்கையை விமர்சித்தல் நாகரீகமற்றது என்பது என் தாழ்மையான கருத்து)

  சரி தான்.. ஆனால் எல்லா சமயங்களிலும் இதை ஃபாலோ பண்றது கஷ்டம் தான். ஆனால் ட்ரை பண்ணனும்

  ReplyDelete
 2. "Need to try" is really a well said friend..!

  ReplyDelete
 3. இவ்வளவு கடமைகளா..
  முயற்சிப்பண்றேன்....

  ReplyDelete
 4. தேவையான சிந்தனைகள்தான்..

  ReplyDelete