SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Friday, May 6, 2011

தூத்தேறி... இனியும் எழுதனுமா ப்ளாக்கரில்?...கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டும்!


இது ப்ளாக்கரில் எழுதும் என்னுடைய தனிப்பட்ட உணர்வுகளைப் பற்றியதே ஒழிய யாரையும், எதையும் குறை சொல்வதற்காக எழுதவில்லை.

ப்ளாக்கரில் எழுதும் பழக்கம் எனது தோழி ஒருவரால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டு 2010ம் வருடம் ஜனவரியில் எனக்கான வலைத்தளத்தை அமைத்தேன். அந்த ஒரு மாதம் மட்டும் ஏதோ கொஞ்சம் படைப்புகளை எழுதிவிட்டு பின்பு பணி நிமித்தம் மற்றும் கணினியில்லாமை காரணமாக ப்ளாக்கரிலிருந்து ஒதுங்கிக் கொண்டேன். அப்போது எனக்கு ப்ளாக்கரின் கமெண்ட்ஸ், ஸ்டட்ஸ், லிங்க்ஸ் என்பன பற்றியெல்லாம் எதுவுமே தெரியாது.

சிறு வயது முதலே எனக்குள் கனன்று கொண்டிருந்த எழுத்துத் தாகத்தை தணிப்பதற்காகவே 2011ல் புதிதாக ஒரு மடிக்கணினியை வாங்கி எனது ப்ளாக்கர் தளத்தை புதுப்பித்தேன். எனது படைப்புகளை மீண்டும் எழுதத் தொடங்கியதிலிருந்து ஏதோவொரு மனநிம்மதி… மனதுக்குள் பல கனவுகள்… கொஞ்ச கொஞ்சமாக ப்ளாக்கர் உலகத்தைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன்..

எனது ப்ளாக்கர் தளத்தை தமிழ்மணம் போன்ற பிற தளங்களிலும் இணைத்துக் கொண்டேன். ஒவ்வொரு படைப்பையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கினேன். ஆரம்பத்தில் எனது படைப்புகளுக்குப் பெரிதாய் ஆதரவோ, விமர்சனமோ இல்லையென்றாலும் போகப்போக நிச்சயம் எனது வலைத்தளம் ஒரு ஆரோக்கியமான விவாதக்களமாக மாறுமென்று நம்பினேன்.

வாசகர்களைக் கவர படைப்புகள் தரமாய் இருந்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு படைப்புக்கும் பார்த்ததும் சுண்டியிழுக்கும் வகையில் வித்தியாசமான பெயரையும் சூட்டவேண்டும் என்பதால் படைப்புகளுக்கு ஒதுக்கும் நேரத்தின் அளவு பெயர்களுக்காகவும் ஒதுக்கி ஒவ்வொரு படைப்பிற்கும் ஒவ்வொருவிதத் தலைப்பாய் யோசித்து வைக்கத் தொடங்கினேன். அப்படியும் பெரிதாய் மாற்றம் ஒன்றுமில்லை.

சரியென்று எனது ப்ளாக்கர் வலைத்தளத்தின் முகவரியையும் தலைப்பையும் கூட மாற்றினேன். சனியன் காலில் சலங்கை கட்டிக்கொண்டு ஆடும்போது நாம் என்ன செய்தாலும் சரியில்லாமலே போகுமென்பது எனக்குப் புரியவில்லை. பார்த்துப் பார்த்துப் படைக்கும் எனது கட்டுரைகளும், கவிதைகளும் கோடான கோடி வலைத்தளங்களுக்கு மத்தியில் காணாமல் போன நிகழ்வாவதே வாடிக்கையாகிப்போனது. ஒரு சில ஆதரவளித்த வாசக நண்பர்களைத் தவிர பெரிதான விமர்சனங்கள் எதுவும் கிட்டவில்லை எனது எந்தவொரு படைப்புகளுக்கும்.

சரி… இனி என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் காமசூத்திரம் பற்றி எழுதலாம் என்று தோன்றியது. ‘’கலவிப்பொருத்தம் – என்ன சொல்கிறது காமசூத்திரம்’’ என்ற தலைப்பில் காமசூத்திரத்திலிருந்து எனது முதல் படைப்பை அரங்கேற்றினேன். என்ன ஆச்சர்யம்… அது வரை தீண்டாமைக் கொடுமையிலிருந்த எனது வலைத்தளம் ஒரே நாளில் ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்களால் பார்வையிடப்பட்டது. சரி… காமசூத்திரம் படிப்பதற்காகவாவது நமது வலைத்தளத்திற்கு வரும் வாசகர்கள் அப்படியே நமது மற்ற படைப்புகளையும் படிப்பார்கள் என்ற நம்பிக்கையில் மீண்டும் ‘’காமசூத்திரம் கற்று கொடுக்கும் கலவி நிலைகள் எத்தனை?’’ என்றொரு கட்டுரையை எழுதினேன். அதற்கும் அமோக வரவேற்புதான். என்னடா இது நாம் எழுதும் நல்ல நல்ல படைப்புகளெல்லாம் விமர்சனங்களும் விவாதங்களுமின்றி கடந்து கொண்டிருக்கையில் காமசூத்திரம் மட்டும் இத்தனை பேரால் வாசிக்கப்படுகிறதென்றால் எங்கே நம் மீது செக்ஸ் எழுத்தாளர் என்ற முத்திரை விழுந்து விடப்போகிறதென்று முதன் முறையாகக் கொஞ்சம் கவலைப்படத் தொடங்கினேன்.

இருப்பினும் தளரா மனதுடனும் விடாமுயற்சியுடனும் மீண்டும் பல நல்ல படைப்புகளை தொடர்ந்து எழுதினேன். போட்டோஷாப் சாஃப்ட்வேரில் கொஞ்சம் திறமையை வளர்த்துக்கொண்டு எனது ஒவ்வொரு படைப்புகளுக்கும் புகைப்படங்களை வெகுசிரத்தையாய் தேர்வு செய்து இணைத்தேன். காப்பி பேஸ்ட் பதிவர்கள் பற்றியெல்லாம் பதிவுலகத்தில் நடமாடிய செய்திகள் சொந்தமாய் எழுதும் பதிவர்களை எந்தளவுக்குக் கவலையுறச் செய்திருக்குமோ அதே கவலைகள் எனக்கும் இருந்தது. எக்காலத்திலும், எதிலிருந்தும், எவரிடமிருந்தும் எதையும் திருடி எழுதக்கூடாது. நமது ஒவ்வொரு படைப்பும் நம் சொந்த எழுத்தாகவே இருக்கவேண்டும் என்று எனக்குள் நானே உறுதியெடுத்துக் கொண்டே இன்று வரை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

‘’தேர்தல்-2011-வாக்களிப்போம் வாருங்கள்’’, ‘’கடவுளா…வெறும் கல்தானா?...’’, ‘’நல்லாட்சியென்பது யாதெனில்…’’, ‘’எப்படி வளர்க்கலாம் குழந்தைகளை-ஓர் எளிய வழிகாட்டல்’’, ‘’பேசுவதால் மட்டுமே வளர்ந்து விடுமா பெண்ணியம்?’’ என்பன போன்ற கருத்தாளமிக்க எனது கட்டுரைகளும், ‘’பெண்மை’’, ‘’என் பால்ய பருவத்துத்தோழி’’, ‘’நத்தைப்பெண்’’, ‘’பட்டாளத்தான் பொண்டாட்டி நான்’’, ‘’வாடகைக்கு ஒரு மலர்’’, ‘’ஓர் ஈழத்து இடிந்த வீடு’’, ‘’பெத்தமனசும்…தனிமைப்பரிசும்’’, ‘’தலைவன் வருவான்’’, ‘’ஆணுமாகி பெண்ணுமாகி…-ஒரு திருநங்கையின் குரலில்’’, என்பன போன்ற சமுதாய உணர்வுமிக்க எனது கவிதைகளும், இன்னபிற எனது படைப்புகளும் வலைத்தள உலகத்தில் நிரந்தரமாய் நிர்க்கதியாக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக என் நட்பு வட்டத்திலேயே எவரொருவரும் எனது படைப்புகள் மீதான விமர்சனத்திலோ, விவாதத்திலோ ஈடுபாடு காட்டவில்லை.

யாரையும் குறை சொல்வது எப்போதும் எனக்குப் பழக்கமில்லை. வலைத்தள உலகத்தில் எனது எழுத்துக்கள் எடுபடாமல் போனதற்கு என்ன காரணமாயிருக்கும்? எனக்கு சரியாக எழுதத் தெரியவில்லையா? எனது எழுத்துக்கள் படிப்பவர்களுக்கு புரிவதில்லையா? இல்லை… எனது கருத்துக்கள் தவறானவையா?

இந்தச் சின்ன வயதிலேயே எனக்கும் வலைத்தள வாசகர்களுக்குமிடையே ஏதேனும் தலைமுறை இடைவெளியா? எனது கருத்துக்களில் விமர்சிக்குமளவுக்கு ஏதுமில்லையா? விமர்சிக்கத் தகுதியற்றவையா? இல்லை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா?

புகழுக்காகவும் இல்லை வேறெதற்காகவும் நான் விமர்சனங்களை விரும்பவில்லை. எந்தவொரு கலைஞனின் விமர்சனமற்ற படைப்புகளும் வெறும் கானல் நீராய்த்தான் ஆகிப்போகும். விமர்சனங்களும் விவாதங்களுமின்றிப் போனால் எனது படைப்புகளுக்கு என்னவொரு அர்த்தமிருக்கக்கூடும்?

ஒருவேளை எனது எழுத்துகள் எடுபடாமல் போனதற்கு வேறேதும் காரணங்கள் கூட இருக்கலாம். ஆயினும் ‘’எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்… இவன் ரொம்ப நல்லவேண்டா… ‘’ எனுமளவுக்கு இன்னும் எத்தனை காலம்தான் ‘’யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துறே?’’ என்பது போல் நான் மட்டும் எழுதிக்கொண்டேயிருப்பது?.

‘’முதல் இரவும் உச்சக்கட்டமும்-காமசூத்திரம் கற்றுக்கொடுப்பதென்ன?’’ என்ற எனது கட்டுரை மீண்டும் எனக்கு கற்றுக் கொடுத்த செய்திதான் இந்தக் கட்டுரையை எழுத வேண்டியதாயிற்று. ஒரே நாளில் அறுநூறுக்கும் மேற்பட்டவர்கள் காமசூத்திரம் பற்றிய இந்தக் கட்டுரையையும் வாசித்திருக்கிறார்கள்.

அப்படியென்றால்… எனது மற்ற கட்டுரைகளும், கவிதைகளும்?... கண்ணாடியைப் பார்த்து எனக்கு நானே கேட்டபோது உள்ளிருந்த எனது பிம்பம் என்னைக் கேட்டது… ‘’தூத்தேறி… இன்னுமா எழுதப்போறே ப்ளாக்கரில் நீ?’’

கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது…!

13 comments:

 1. பெரும்பாலானவர்களுக்கு பின்னூட்டமிட நேரமிருக்காது. மார்க்கெட்டிங் வேளைகள் செய்பவர்களுக்கும் ஒரே கூட்டமாக கும்மியடிப்பவர்களுக்கும் அவர்களே கூட்டமாய் போய் பின்னூட்டம் போட்டுக்கொள்வார்கள். உங்கள் கூற்றுப்படி 20 30பேர் கள் படித்திருக்கிறார்கள் என்பதே ஒரு ஊக்கப் படுத்தும் செய்திதானே

  ReplyDelete
 2. சோர்த்து விடாதீர்கள் மேலும் எழுதுங்கள் நாம் இருக்கிறோம் :)
  நீங்களும் மற்ற வலைப்பூக்களை வாசித்து கருத்திடுங்கள் அது அவர்களை உங்கள் பக்கம் ஈர்க்கும்

  ReplyDelete
 3. அவசரப்பட வேண்டாம். தங்கள் இ-மெயில் முகவரி என்ன? pls send it to madrasminnal@gmail.com. தங்களை தொடர்பு கொள்கிறேன்.

  ReplyDelete
 4. வீராங்கன் அவர்கள் கருத்து தான் எனது கருத்தும்.பின்னூட்டம் இடுவதற்கு எனக்கு நேரம் இருப்பதில்லை.தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

  ReplyDelete
 5. வணக்கம் நண்பரே,
  இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன் இனி தான் மற்ற பதிவுகளையும் பார்க்க வேண்டும்.
  ஆனால்
  ஏன்.. ஏனிந்த விரக்தி
  உங்களுக்கு திருப்தி தரும் விஷயங்களை மட்டுமே எழுதுவதில் என்ன பிரச்னை
  மற்றவர்கள் பாராட்டவேண்டும் என் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்

  //சிறு வயது முதலே எனக்குள் கனன்று கொண்டிருந்த எழுத்துத் தாகத்தை தணிப்பதற்காகவே//
  அதைத் தணிப்பதற்காக எழுத நேர்கையில் பிறரைப்பற்றி ஏன் நினைப்பு வர வேண்டும்
  ஒரு நாற்பது பேர் கை தட்டினால்தான் பாராட்டா
  ஒரு நாலு பேர் மட்டும் கை தட்டினால் உங்களின் எழுத்துக்கு என்ன அவமானம்
  உங்கள் எண்ணங்களை தொடர்ந்து எதைப்பற்றியும் கவலைப்படாமல் பதிவு செய்திட வேண்டுகிறேன்.

  இறுதியாக
  //கண்ணாடியைப் பார்த்து எனக்கு நானே கேட்டபோது உள்ளிருந்த எனது பிம்பம் என்னைக் கேட்டது… ‘’தூத்தேறி… இன்னுமா எழுதப்போறே ப்ளாக்கரில் நீ?’’//
  « நாதாறி, தொடர்ந்து நான் எழுதத்தான் போறேன். உன்னால் என்ன செய்ய முடியுமோ, செய்துகொள் ! » என்று உங்கள் பிம்பத்திற்கு பதில் கூறுவீர்கள் என்று நம்புகிறேன்

  நட்புடன்

  ReplyDelete
 6. அடப்பாவமே..இன்று தான் உங்க வலிப்பூவைப் பார்க்கிறேன்..எழுதுபவர்கள் இரண்டு வகை தான்,,யார் படிச்சாலும் சரி, படிக்கலேன்னாலும் சரி, நான் இப்படித் தான் எழுதுவேன்..கூறு இருந்தா ப்டிங்க..இல்லேன்னா எனக்கு ஒன்னும் இழப்பு இல்லேன்னு எழுதுறது..பதிவுலகில் நிறைய நல்ல எழுத்துகள் அப்படித் தான் எழுதப்படுகின்றன..மற்றொரு வகை நமக்குப் பிடித்ததை மட்டும் எழுதாமல் பொது வாசகனுக்கும் பிடித்த விசயங்களையும் எழுதுவது..அதற்கு கொஞ்சம் இளகிய தன்மை வேண்டும்.எனது ஆரம்பக் காலங்களில் எனக்கும் உங்க நிலை தான்..காம சூத்திரத்தை விட சினிமா விமர்சனம் எழுதலாம்..நண்பர் சிவகுமாரைத் தொடர்பு கொள்ளுங்கள்..தொடர்ந்து எழுதுங்கள்!

  ReplyDelete
 7. Mahesh and Team, Neyveli - Jawahar arts and science collegeMay 6, 2011 at 6:09 PM

  கல்லூரி மாணவர்கள் நாங்கள் ஒரு குழு அமைத்து கடந்த 20௦ நாட்களாக தமிழகத்தின் பல தொகுதிகளில் மக்களை சந்தித்து சேகரித்த முடிவின் படி கணிப்பு இது.

  சர்வே குழு - 38 ,
  மொத்த தொகுதிகல் சென்றது - 110
  மொத்த மக்கள் - 12000+

  3 கேள்விகள் தான் முன் வைத்தோம்

  1. எந்த கட்சிக்கு வாக்களித்தீர்
  2. யாருக்கு வாக்களிப்பதாக நினைத்திருந்தீர்
  3. முக்கிய பிரச்னை எது

  முடிவுகள்

  தி மு க விற்கு வாக்களித்தோம் - 40%
  அதி மு க விற்கு வாக்களித்தோம் - 51௧
  ப ஜ க - 6
  மற்றவை - 3

  தி மு க விற்கு வாக்களிக்க நினைத்து அதிமுக விற்கு மாறியவர்கள் - 17%

  அதிமுக விற்கு வாக்களிக்க நினைத்து திமுக விற்கு மாறியவர்கள் - 9%

  திமுக அதிமுக விற்கு வாக்களிக்க நினைத்து ஆனால் இரண்டும் பிடிக்காமல் மற்ற கட்சிக்கு வாகளிதவர்கள் 6%

  தொகுதிகள்

  தி மு க 28
  அதிமுக 81
  BJP 1

  இதன் படி பார்த்தல் தி முக 60௦ம் அதிமுக 172௦ம் , BJP -2

  முக்கிய பிரச்சனையாக மக்கள் சொன்னது :

  மின் வெட்டு, விலையேற்றம்

  spectrum , ஈழம் ஒரு சில தொகிதிகளில் மட்டுமே பிரச்சனையாக சொல்லப்பட்டது.. பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை

  மதிமுக வெளியேற்றப்பட்டதால் அதிமுகக்கு வாக்களிக்க நினைத்ததில் 4% பேர் வேறு கட்சிகளுக்கு வாகளித்துள்ளனர்

  மதிமுகவினர் பலரும் திமுக விற்கும், சிலர் பாஜக விற்கும் வாக்களித்துள்ளனர், குறிப்பிட்ட சதகிவிததினர் வாகளிக்கவே இல்லை

  விஜயகாந்த் பிரச்சாரம் எடுபட வில்லை - விஜயகாந்த் அதிமுக கூட்டணி வைத்தது பிடிக்காமல் தேமுதிக வாக்குகள் சில ப ஜ க விற்கு சென்றுள்ளது

  ஜெயலலிதா போக்கில் மற்றம் இல்லை எனினும் இன்றைய சூழலுக்கு அவரே சரியானவர் என்று பலர் சொன்னார்கள்

  கருணாநிதி நல்லவர் சுற்றி இருப்பவர்கள் சரி இல்லை என்ற கருத்தும் உள்ளது

  இலவச திட்டங்கள் கிராமங்களில் நல்ல வரவேற்பு ஆனால் மின்தடை விலை வாசி ஆகியவை பலனை குறைத்துள்ளது

  வடிவேலு பிரசாரம் சில தொகுதியில்
  எடுப்பட்டுள்ள போதிலும்.. பல இடங்களில் அவரை வேடிக்கை பார்க்க மட்டுமே கூட்டம்

  கிராமபுரத்தில் திமுகவிற்கு சற்று வலு கூடியுள்ளது
  நகர்ப்புறங்களில் அதிமுக முந்துகிறது.

  பிரசாரத்தில் பிடித்தது - கலைஞர், ஸ்டாலின், நல்லகண்ணு, நெப்போலியன்.

  ஊனமுற்றோர் பலர் தி மு க விற்கு வாகளித்துள்ளனர்

  மதுரையில் இந்த முறை ஆசாகிரிக்கு இறங்கு முகம்
  கொமுக பெரிய அளவில் தி மு கவிற்கு உதவிட
  வில்லை

  அதே போல ச ம க மற்றும் புதிய தமிழகம் அதிமுகக்கு உதவிடவில்லை

  Note: Any bloggers can make this as a seperate post in their blog, please

  ReplyDelete
 8. நண்பா உங்கள் வருத்தம் புரிகிறது, எனினும் எதிர்பார்ப்பு இருக்குமிடத்தில் ஏமாற்றமும் இருக்கும், மனம் தளர வேண்டாம், வலையுலகில் ஒரு நிலையான இடத்தை பிடிக்கும் வரையில்தான் இந்த போராட்டமெல்லாம், அதுவரை காமசூத்திரமும், சினிமா விமர்சனமும் தேவைப்படும், பிறகு பாருங்கள் உங்களது படைப்புகள் கண்டிப்பாக போற்றப்படும், எனவே எப்பொழுதும் போல தொடருங்கள், இன்றிலிருந்து நானும் தொடர்கிறேன், நன்றி

  ReplyDelete
 9. நண்பரே! எதைப்பற்றியும் கவலைப்படத்தேவையில்லை.
  சாய் ரோஸ் சாயாத ரோஸாக ஒரே வழி:
  நீங்கள் நீங்களாக இருப்பது தான்

  ReplyDelete
 10. தொடர்ந்து எழுத ஊக்கமளித்த நல்லுணர்வு கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி... கொஞ்சம் அவசரப்பட்டதாய்தான் உணருகிறேன். என் எழுத்துக்கள் நிச்சயம் ஒரு நாள் வெல்லும் என்ற நம்பிக்கையுடன் தொடருகிறேன். ஒரு கை பார்க்கலாம்...!!!

  ReplyDelete
 11. //எழுத்துக்கள் நிச்சயம் ஒரு நாள் வெல்லும் என்ற நம்பிக்கையுடன் தொடருகிறேன். ஒரு கை பார்க்கலாம்.// இது அழகு.

  ReplyDelete
 12. அப்படி சொல்லுங்க. வெற்றி உங்களுக்கே!

  ReplyDelete
 13. KEEP WRITING.EVEN WE HAVE NO TIME TO COMMENT,WE WILL FOLLOW YOUR POSTS.DONT DISCOURAGE YOURSELF.THANK YOU.

  ReplyDelete