SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, May 5, 2011

பேச்சிலர்ஸ் கிச்சன் – ஆண்களும் சமைக்கலாம்-2...(பேச்சிலர்ஸ் சிக்கன் போன்லெஸ் ட்ரை)


நீங்கள் குடும்பத்தை பிரிந்து வெளியூரில் தனியாய்த் தங்கி வேலை செய்து கொண்டிருக்கும் ஆணா?

கோடை விடுமுறைக்கு மனைவி குழந்தைகளை ஊருக்கு அனுப்பிவிட்டு ஹோட்டல் உணவால் வயிறும் நாக்கும் கெட்டுப்போய் தவித்துக் கொண்டிருப்பவரா?

நமக்கு சமையல் தெரிந்தால் வாய்க்கு ருசியாய் நாமே வீட்டில் சமைத்துச் சாப்பிடலாமே என்று எண்ணுபவரா?

என்றாவது சில விடுமுறை நாட்களில் மனைவிக்கு ஓய்வளித்து நீங்களே சமைத்துப்போட்டு அவளை அசத்த நினைக்கிறீர்களா?

அட… கவலையை விடுங்க பாஸ். பொம்பளைங்களெல்லாம் ஏரோப்ளேனே ஓட்டுறாங்க… நம்மால இந்த சமையலை பண்ண முடியாதா என்ன?

இங்கே நான் கூறும் அனைத்து சமையல்களும் ஏதோ புத்தகத்திலிருந்து எழுதப்பட்டதோ… இல்லை செய்து பார்க்காமல் ஏனோதானோவென்று எழுதியதோ அல்ல. எல்லாமே என் வாழ்வில் நானே கற்றுக்கொண்டு அன்றாடம் உபயோகிக்கும் அசல் சமையல்களே.
வாங்க… கலக்குவோம்!

பேச்சிலர்ஸ் சிக்கன் போன்லெஸ் ட்ரை:- (இரண்டு பேருக்கான அளவு)

தேவையான பொருட்கள் :-
1. சன் ஃப்ளவர் ஆயில் = 3/4 குழிக்கரண்டி
2. சிக்கன் = ½ கிலோ (சிறு துண்டுகளாய் வெட்டப்பட்ட போன்லெஸ்)
3. கிராம்பு = 04 துண்டுகள்
4. பட்டை = 02 துண்டுகள்
5. இஞ்சி பூண்டு விழுது = 50கிராம்
6. ஆச்சி/சக்தி சிக்கன் குழம்பு மசாலா = 1டீஸ்பூன்
7. மிளகாய்த்தூள் = 2 டீஸ்பூன்
8. மஞ்சள் தூள் = ½ சிட்டிகை
9. உப்பு = தேவையான அளவு (3/4 டீஸ்பூன்)

எளிதான எட்டு ஸ்டெப் செய்முறை :-
சமையல் செய்யக் கற்றுக் கொள்ளும் முன் அடுப்பை பற்ற வைக்கவும் தீயைக் கூட்டக் குறைக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.

1. அடுப்பை பற்ற வைத்து மீடியம் சைஸ் அலுமினியக் கடாயை அடுப்பில் வையுங்கள். அடுப்பு மிதமான தீயில் இருக்கட்டும். கடாய் சற்று சூடானதும் முக்கால் குழிக்கரண்டி சன்ஃப்ளவர் ஆயிலை அதில் ஊற்றுங்கள்.
2. எண்ணெய் சூடானதும் 04 துண்டு கிராம்பு 02 துண்டு பட்டையை எண்ணையில் போட்டு வதக்கவும்.
3. பட்டை கிராம்பு ஓரளவு வதங்கியதும் நன்கு கழுவப்பட்ட போன்லெஸ் சிக்கன் துண்டுகளை தண்ணீரைப் பிழிந்து கடாயில் போடவும். சிக்கன் துண்டுகள் வெண்ணிறமாகும் வரை இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்குப் புரட்டவும்.
4. இப்போது இஞ்சி பூண்டு விழுது (பேஸ்ட்) 50கிராம் அளவு கடாயில் வேகத் தொடங்கியிருக்கும் சிக்கன் மீது போட்டு நன்கு புரட்டி மூன்று முதல் ஐந்து நிமிடமளவுக்கு வதக்குங்கள்.
5. அடுப்பை சிலிம் செய்துகொண்டு வதங்கிக் கொண்டிருக்கும் சிக்கனில் 01 ஸ்பூன் சிக்கன் குழம்பு மசாலா, 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், ½ சிட்டிகை மஞ்சள் தூள், தேவையான அளவு (3/4 டீஸ்பூன்) உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்கு புரட்டவும்.
6. பின்னர் அடுப்பை சிலிம்மிலேயே வைத்து கடாயை மூடிவையுங்கள். பாத்திரத்தின் அடிபிடிக்காமல் இருக்க அவ்வப்போது சிக்கனை மெதுவாக கிளறி விடுங்கள்.
7. சிலிம்மிலேயே செய்யவேண்டியிருப்பதால் சிக்கன் வேகுவதற்கு குறைந்த பட்சம் 30 நிமிடங்களுக்கு மேலாகும். சிக்கன் நன்றாக வேகுவதுடன் ட்ரை பதத்தையும் அடையவேண்டும். அவ்வாறு ஆனதும் அடுப்பை அணைத்து கடாயை இறக்கிவிடுங்கள்.
8. இப்போது தயாராயிருக்கும் பேச்சிலர்ஸ் சிக்கன் போன்லெஸ் ட்ரை மீது கொஞ்சம் மல்லி இலைகளைத்தூவி பறிமாறிக் கொள்ளலாம். இந்த வெரைட்டி சிக்கனை உங்கள் விருப்பத்திற்கேற்ப எதனுடன் சாப்பிட்டாலும் சரியான காம்பினேசனாகவே இருக்கும்.

சமையல் செய்ய சோம்பேறித்தனம் படாமல் ஒருமுறை இதை முயற்சி செய்யுங்கள். முதல் முறை சரியாய் வராமல் போனாலும் நிறை குறைகள் தெரிந்து கொண்டு அடுத்தடுத்த முறைகளில் நிச்சயமாய் உங்கள் கைப்பக்குவம் மிளிரத் தொடங்குமென்பது எனது சொந்த அனுபவம் உணர்த்திய பாடமாகும்.

தொடர்ந்து கலக்குவோம்…

No comments:

Post a Comment