SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, May 5, 2011

பேசுவதால் மட்டுமே வளர்ந்து விடுமா பெண்ணியம்?...


அந்தக்காலத்திலிருந்து இந்தக்காலம் வரை பெண்கள் அடிமைகளாகவும், போகப்பொருளாகவும், ஆண்களுக்கு கட்டுப்பட்டவர்களாகவும் மட்டுமே சமுதாயத்தால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் சமுதாயம் என்பதற்கு ஆண்கள் மட்டுமே என்று எடுத்துக் கொள்ள வழியின்றி பெண்ணியத்திற்கு எதிரியாய் சில பெண்களும் அமைந்திருப்பது ஒளிந்திருக்கும் ஒரு உண்மையாகும். பெண்ணியம் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தமாய் இருக்கக்கூடும்?

இன்று சில பெண்கள் அடங்க மறு… அத்து மீறு என்பது போல் கற்பு நெறி, பெரியவர்களை மதித்தல், குடும்பத்தைக் கட்டிக்காத்தல், கணவனை அனுசரித்தல் போன்ற எல்லாவற்றையும் பெண் விடுதலை என்ற பெயரில் சுக்கு நூறாக்கித் திரியும் தான்தோன்றித்தனமான தலைக் கர்வம்தான் பெண்ணியமா? இல்லை… ஆணுக்குப் பெண் சமமென முழங்கி இன்று பல பெண்கள் டிஸ்கொத்தேக்களிலும், மதுபார்களிலும் ஆண்களுக்கு அதிகமாய் ஆடித் தீர்ப்பதுதான் பெண்ணியமா?. எடுத்ததெற்கெல்லாம் சண்டையிட்டு இதுதான் பெண்விடுதலையென்று விவகாரத்து பெற்றுச் செல்வதுதான் பெண்ணியமா?. இல்லை… இஷ்டப்படி வாழ நினைத்துக் கண்ட கண்ட ஆண்களுடன் ஊர் சுற்றித் திரிவதுதான் பெண் விடுதலையா?

பெண்களை அடிமைகளாக, ஆணுக்குக் கட்டுப்பட்டவர்களாக நடத்தாமல் ஆணும் பெண்ணும் சமமென்ற நிலை வேண்டுமென்பதுதான் பெண்ணியமாகும். ஆதிகாலத்திலிருந்து பெண்ணிற்கு மட்டுமே உரித்தானதாய் வரையறுக்கப்பட்ட சில பழமையான அடிமைத் தனங்களிலிருந்து பெண்மையை மீட்பதுதான் பெண்ணியமாகும்.

நாகரீக வளர்ச்சிகள் உச்சத்தை தொடப்போகும் இக்காலத்திலும் பெண்ணியம் பேசுவதன் அவசியம் மட்டும் மாறாமலிருப்பதன் மர்மம்தான் என்ன? இன்று ஆணுக்கு நிகராய் பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை. ஆணைவிட அதிகமாய் சம்பாதிக்கும் பெண்களையும் ஆண்களுக்கே மேலதிகாரியாய் திகழும் பெண்களையும் சர்வ சாதாரணமாய் ஒவ்வொரு அலுவலகத்திலும் பார்க்கமுடிகிறது. ஆட்சிப்பொறுப்பிலிருந்து ஆகாய விமானம் வரை பெண்கள் சாதித்திருந்தாலும் இன்னும் ஏன் ஒவ்வொரு வீட்டின் சமையலறையும் பெண்ணின் சொத்தாக அவள் கால்களிலேயே கட்டப்பட்டிருக்கிறது? திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் கட்டுண்டிருக்கும் ஏதாவதொரு பெண்ணாவது (பெண்ணியம் பேசிக்கொண்டிருப்பவர்களையும் சேர்த்துதான்) நான் எந்தவொரு வகையிலும் ஆணைச் சார்ந்தோ அவனுக்குக் கட்டுப்பட்டோ இல்லாமல் சரிநிகராகத்தான் இருக்கிறேனென்று மனசாட்சியில் கைவைத்துக் கூறமுடியுமா? அப்படியென்றால் எங்கேயிருக்கிறது பெண்ணியத்தின் எதிரி? நமது கலாச்சாரத்திலா? சமூகத்திலா? இல்லை நம் ஒவ்வொருவரின் மனதுக்குள்ளா?

என்னதான் கல்வியறிவும் சமூக அறிவும் பெண்களிடம் உயர்ந்தாலும் இன்று வரதட்சனை என்ற அசிங்கமின்றி எத்தனை கல்யாணங்கள் நடத்தப்படுகின்றன. கரும்பினைத் தின்ன கைக்கூலியும் கொடுக்கும் இந்த அடிமைத்தனம் மாறாமலிருக்க பெற்ற மகனையே திருமணச் சந்தையில் விற்கும் தாயென்றொரு பெண்தானே காரணம். நான் அந்தக் காலத்திலேயே அவ்வளவு வரதட்சனை கொண்டு வந்தவள். எனக்கு அதைவிட அதிகம் கொண்டு வரும் மருமகள்தான் வேண்டுமென்ற பேராசைப் பெண்கள் இருக்கும்வரை பெண்ணியத்திற்கு எதிரியாய் பெண்ணும் ஒரு காரணமாய் இருப்பது மாறப்போவதேயில்லை.

எவ்வளவுதான் சாதித்தாலும் சமுதாயத்தில் பெண்களின் மீதான பார்வையில் இதுவரை பெரிதாய் மாற்றங்கள் ஏதுமில்லை. அந்தக் காலத்தில் பெண் விடுதலைக்காகப் போராடியவர்கள் பெண் கல்விக்கே முக்கியத்துவம் அளித்தார்கள். பெண்கள் கல்வியில் முன்னேறினால் பெண் விடுதலை பெற்று பெண்ணியமும் பேணப்படுமென்று நம்பினார்கள். ஆனால் இன்று பெண்கள் கல்வியில் முன்னேறியும் பெண் விடுதலை மலர்ந்ததாய்த் தெரியவில்லை.

வீக்கர் செக்ஸ் என்ற வகையில் இன்றும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் உலகம் முழுவதும் அரங்கேறிக்கொண்டேதான் இருக்கின்றது. பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகளுக்கு ஒரு நிரந்தரத்தீர்வு உண்டாகாத வரையில் பெண்விடுதலையும், பெண்ணியமென்பதும் வெறும் பேச்சினில் மட்டுமே இருக்கக்கூடும். பெண் என்றாலே அவள் மீது விழும் சமூகப்பார்வை பெரும்பாலும் பாலியல் சம்பந்தப்பட்ட வக்கிர உணர்வாகவே இருப்பது இயற்கையாகவே உருவானாதா? இல்லை, வாழ்க்கைமுறை என்ற பெயரில் ஆணாதிக்கத்தால் உருவாக்கப்பட்டதா? அன்று முதல் இன்று வரையிலும் திரைப்படங்கள், விளம்பரங்கள் போன்ற ஊடகங்களிலெல்லாம் பெண் என்பவள் வெறும் போகப்பொருளாகவே காட்டப்படும் நிலை மாறாதது ஏன்? ஆண் என்பவன் கதையின் நாயகனாகவும் பெண் என்பவள் வெறும் காதலியாகவும், கவர்ச்சிக்காகவும் மட்டுமே திரைப்படங்களில் தொடர்ந்து காட்டப்படுவது ஏன்? பெண் என்பவளுக்கு ஆணுடன் சேர்ந்து ஆடுவதையும் பாடுவதையும் தவிர வேறெந்த சமுதாய உணர்வுகளும் இருக்கக் கூடாதென்பது ஊடகங்களின் எழுதப்படாத விதியா? கவர்ச்சிக்காக உபயோகப்படுத்தப்படும் பெண்களே நடிக்க மறுக்கின்ற வரை ஊடகங்கள் தங்களை ஒருநாளும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை. ஊடகங்கள் தங்களை மாற்றிக் கொள்ளாதவரை பெண்ணென்பவளை காமத்தின் வடிகாலாகவே பார்க்கும் சமூகத்தின் பார்வையும் பெரிதாய் ஒன்றும் மாறப்போவதில்லை.

இன்று பெண்ணியம் பேசும் எந்தவொரு ஆணாவது உண்மையான மனதுடன் பெண் விடுதலையை ஆதரிப்பதாய் நம்ப முடியுமா? ‘’பெண் என்பவள் ஆணுக்குக் கட்டுப்பட்டவள், என்னதானிருந்தாலும் பெண் என்பவள் ஆணுக்குக் கீழேதான்… குடும்பத்தில் சமைப்பது, துவைப்பது, பிள்ளைகளை வளர்ப்பது போன்ற பெண்ணுக்காய் வரையறுக்கப்பட்ட வேலைகளை பெண்ணே செய்ய வேண்டும்’’ என்பன போன்ற எண்ணங்கள் ஆண்களின் மனதினில் சிலரிடம் வெளிப்படையாகவும், பெண் விடுதலை பேசும் சிலரிடம் ஆழ் மனதிலும் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன. ஏழை, பணக்காரன், படித்தவன் என்று எந்தவொரு வித்தியாசமுமின்றி எல்லா ஆண்களுமே இன்றும் தங்கள் மனைவியின் மீது தங்கள் விருப்பங்களை திணிப்பதுடன் ஏதோவொரு வகையில் அவர்களைக் கட்டுப்படுத்தியே வைத்திருக்கின்றனர். விருப்பப்பட்ட இடத்திற்கு, விருப்பப்பட்ட நேரத்தில், விருப்பப் பட்டவர்களுடன் போய் வரும் ஆண்கள் கூட்டம் தங்கள் மனைவியையோ இல்லை மகளையோ அவ்வாறான சுதந்திரத்திற்கு அனுமதிப்பார்களா? ஆணுக்கு ஒரு பார்வை, பெண்ணுக்கு ஒரு பார்வை என்பதே பெண்ணடிமைத்தனத்தின் ஆணி வேராக இருக்கக்கூடும். பெண்ணடிமைத்தனம் என்பது நமது பரம்பரை வழியாக நம் புத்திக்குள் புரையோடிப் போயிருக்கும் சமுதாய நோயேயன்றி வேறேதுமில்லை.

வெறுமனே பேசுவதாலும், எழுதுவதாலும் மட்டுமே மாறிவிடாது இந்நிலை. என்னால் நிச்சயமாய் கூறமுடியும்… பெண்விடுதலையும் பெண்ணிய வளர்ச்சியும் முழுவதுமாய் பெண்கள் கையில் மட்டுமேயில்லை. ஒவ்வொரு ஆண்மகனும் தன் தாயை, மனைவியை, மகளை எப்போது ஒரு நல்ல நண்பராய் நடத்த ஆரம்பிக்கிறானோ அப்பொழுதுதான் பெண்ணியம் மலரத் தொடங்கும். சமுதாயத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் பெண் என்பவள் வெறும் காமத்திற்கான வடிகால் அல்ல… அவளும் நம்மைப் போன்றே உணர்ச்சிகளும் உருவமும் கொண்ட ஒரு உயிரே என்ற பார்வை உண்டாகவேண்டும். ஆண்டாண்டு காலமாய் நம் சமூகத்தில் ஆழ வேரூன்றியிருக்கும் பெண்ணடிமைத் தனத்தை ஒரே நாளில் ஒழித்து விட இயலாததுதான். பெண் என்பவள் ஆணுக்குக் குறைந்தவளே என்ற எண்ணம் இனியும் வேண்டாம். கொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும் கொஞ்ச கொஞ்சமாய் நாம் மாறினால் சமுதாயமும் தானாய் மாறும்.

பெண்களின் தனிமனித சுதந்திரம் காக்கப்பட்டு, ஆண் பெண் சுய ஒழுக்கமும் பேணப்படுகின்ற நிலை உருவாகும் நாளே உண்மையான பெண்விடுதலையும், பெண்ணியமும் மலரப் போகின்ற நாளாகும்.

1 comment:

  1. விவாதத்திற்கு யாரேனும் உண்டா? நான் ரெடி...

    ReplyDelete