SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Wednesday, May 11, 2011

பேச்சிலர்ஸ் கிச்சன் – ஆண்களும் சமைக்கலாம் - 3...(பேச்சிலர்ஸ் ப்ரேக்ஃபாஸ்ட் ப்ரெட் ஆம்லெட்)

நீங்கள் குடும்பத்தை பிரிந்து வெளியூரில் தனியாய்த் தங்கி வேலை செய்து கொண்டிருக்கும் ஆணா?

கோடை விடுமுறைக்கு மனைவி குழந்தைகளை ஊருக்கு அனுப்பிவிட்டு ஹோட்டல் உணவால் வயிறும் நாக்கும் கெட்டுப்போய் தவித்துக் கொண்டிருப்பவரா?

நமக்கு சமையல் தெரிந்தால் வாய்க்கு ருசியாய் நாமே வீட்டில் சமைத்துச் சாப்பிடலாமே என்று எண்ணுபவரா?

என்றாவது சில விடுமுறை நாட்களில் மனைவிக்கு ஓய்வளித்து நீங்களே சமைத்துப்போட்டு அவளை அசத்த நினைக்கிறீர்களா?

அட… கவலையை விடுங்க பாஸ். பொம்பளைங்களெல்லாம் ஏரோப்ளேனே ஓட்டுறாங்க… நம்மால இந்தச் சமையலை பண்ண முடியாதா என்ன?
இங்கே நான் கூறும் அனைத்து சமையல்களும் ஏதோ புத்தகத்திலிருந்து எழுதப்பட்டதோ… இல்லை செய்து பார்க்காமல் ஏனோதானோவென்று எழுதியதோ அல்ல. எல்லாமே என் வாழ்வில் நானே கற்றுக்கொண்டு அன்றாடம் உபயோகிக்கும் அசல் சமையல்களே.
வாங்க… கலக்குவோம்!

பேச்சிலர்ஸ் ப்ரேக்ஃபாஸ்ட் ப்ரெட் ஆம்லெட் :- (ஒருவருக்கான அளவு)


தேவையான பொருட்கள் :-
1. தேங்காய் எண்ணெய் (அ) வெண்ணை = 2 டீஸ்பூன்
2. சன்ஃப்ளவர் ஆயில் = 01 டீஸ்பூன்
3. தக்காளி = 01 (நன்கு பழுத்தது, சிறு சிறு துண்டுகளாய் வெட்டியது)
4. வெங்காயம் = பெரிய சைஸ் 01 (சிறு சிறு துண்டுகளாய் வெட்டியது)
5. ப்ரெட் = 04 ஸ்லைஸ்
6. முட்டை = 02
7. பச்சை மிளகாய் = ½ அளவு
8. உப்பு = தேவையான அளவு (1சிட்டிகை)
9. மல்லி இலை,கருவேப்பிலை = கொஞ்சம்



எளிதான செய்முறை :-
சமையல் செய்யக் கற்றுக் கொள்ளும் முன் அடுப்பை பற்ற வைக்கவும் தீயைக் கூட்டக் குறைக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.

1. அடுப்பை பற்ற வைத்து தோசைக்கல்லை அடுப்பில் வையுங்கள். அடுப்பு ஸ்லிம்மில் இருக்கட்டும். கல் சற்று சூடானதும் ஒரு டீஸ்பூன் சன்ஃப்ளவர் ஆயிலை அதில் ஊற்றி கல் முழுவதும் எண்ணெய் படுமாறு தடவிக்கொள்ளுங்கள்.
2. கல் சூடாகும் இடைப்பட்ட நேரத்தில் பொடித்துண்டுகளாய் வெட்டப்பட்ட வெங்காயத்தையும் சிறு துண்டுகளாய் வெட்டப்பட்ட தக்காளியையும் ஆம்லெட்டுக்கு அடிக்க வாட்டமான பாத்திரத்தில் போட்டு அதில் 02 முட்டையை உடைத்து ஊற்றுங்கள். அதில் பொடிதாய் நறுக்கி வைக்கப்பட்ட அரை பச்சை மிளகாயையும் கொஞ்சம் கறிவேப்பிலையையும் தேவையான அளவு உப்பையும் போட்டுக் கொள்ளுங்கள். இதை எஃக் பீட்டர் கொண்டோ இல்லை ஒரு ஸ்பூனைப் போட்டோ நன்றாக அடித்துக் கலக்குங்கள்.
3. இந்தக் கலவையை அடுப்பில் இருக்கும் தோசைக் கல்லில் ஊற்றி கல் முழுவதும் வருமாறு பரப்பிவிடுங்கள். தேவைப்படுவோர் மீண்டும் ஒரு ஸ்பூன் சன் ஃபிளவர் ஆயில் விட்டுக் கொள்ளலாம். தேவையான அளவு வெந்ததும் ஆம்லெட்டைப் புரட்டிப் போடுங்கள். அடுப்பை ஸ்லிம்மிலேயே வைத்து ஆம்லெட்டை வேக விடுங்கள். ஆம்லெட் இரு பக்கமும் பொன்னிறமாக வெந்தவுடன் ஆம்லெட்டை இரு பாதியாக வெட்டி கல்லிலிருந்து இறக்கி எடுங்கள்.
4. இப்போது அதே கல்லில் ப்ரெட் ஸ்லைஸ்களை போட்டு தேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணை தடவி இரு பக்கமும் புரட்டிப்போட்டு டோஸ்ட் செய்து கொள்ளுங்கள். விருப்பப்பட்டவர்கள் ப்ரெட் டோஸ்டரிலும் டோஸ்ட் செய்து கொள்ளலாம்.
5. ப்ரெட் பொன்னிறமாக டோஸ்ட் ஆன பிறகு அடுப்பை அணைத்து விட்டு ப்ரெட்டை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளுங்கள்.
6. இப்போது இரண்டு ஸ்லைஸ்களுக்கு நடிவில் ஒரு பாதி ஆம்லெட் வீதம் நான்கு ஸ்லைஸ்களையும் ரெடி செய்து கொள்ளுங்கள். தேவைப்படுவோர் இதன் மீது மல்லி இலைகளைத் தூவிக்கொள்ளலாம்.
7. காலையில் இந்த வகை ப்ரேக் ஃபாஸ்ட் உங்கள் நேரத்தைக் காப்பதுடன் உங்களுக்குத் தேவையான கலோரிகளையும் கச்சிதமாக அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

சமையல் செய்ய சோம்பேறித்தனம் படாமல் ஒருமுறை இதை முயற்சி செய்யுங்கள். முதல் முறை சரியாய் வராமல் போனாலும் நிறை குறைகள் தெரிந்து கொண்டு அடுத்தடுத்த முறைகளில் நிச்சயமாய் உங்கள் கைப்பக்குவம் மிளிரத் தொடங்குமென்பது எனது சொந்த அனுபவம் உணர்த்திய பாடமாகும்.

தொடர்ந்து கலக்குவோம்…

1 comment: