SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Friday, May 27, 2011

பெட்ரோல்-ரூ.100?, டீசல்-ரூ.100?, சிலிண்டர்-ரூ.500? நல்லாயிருக்கே இது...!


பொதுவாகவே காங்கிரஸ் என்பது பணக்காரர்களுக்காகப் பணக்காரர்களால் நடத்தப்படும் பணக்காரர்களின் கட்சி என்று நம் தாத்தா காலத்திலிருந்தே கூறப்படுவதுண்டு. சுதந்திரமடைந்த காலகட்டத்திலிருந்து காங்கிரஸ் ஆட்சியிலிருந்த எந்தக் காலக்கட்டத்தை ஆராய்ந்தாலும் அப்போதைய பணவீக்கம் ஒன்றே அதற்கானச் சிறப்பானதொரு சான்றாகும்.

சரி... ஒரு சாமான்யனா நம்ம வவுத்தெரிச்சலைச் சொல்லப்போற இந்தக் கட்டுரையில நாம எதுக்கு பணவீக்கம் பத்தியெல்லாம் ஆராய்ஞ்சிக்கிட்டு?...

ரொம்ப நாளாவே நிறையப்பேரு என்ன சொன்னாய்ங்கன்னா… காங்கிரஸ் கட்சியையும், ஆட்சியையும் நடத்துறது மன்மோகன் சிங்கோ, சோனியாவோ இல்லை… அம்பானி பிரதர்சும், டாட்டா மாதிரி ஆளுங்களும்தான்னாய்ங்க! அட நான் நம்பவேயில்லைங்க. நம்ம சோனியா மேடம், சின்னய்யா ராகுல் காந்தியெல்லாம் எவ்வளவு பவர்ஃபுல்லான ஆளுங்க? அவிங்களை மீறி அம்பானியாவது… டாட்டாவாவதுன்னு அப்பாவியாத்தான் நம்பிட்டு இருந்தேங்க இம்புட்டு நாளா!

என்னிக்கி மொதமொதல்ல பெட்ரோல் விலைய பெட்ரோல் கம்பெனிகளே நிர்ணயிச்சிக்கலாம்னு சட்டம் போட்டீங்களோ… அப்போத்தாங்க லைட்டா ஒரு சந்தேகம் எட்டிப்பாத்துச்சி. அரசியல்ன்ற பேருல எங்க அண்டராயரைக் கூட அவுத்து அம்மணமா ஓடவிட ரெடியாயிட்டிருக்கும் அய்யாமார்களே… அம்மாமார்களே… எனக்கொரு சந்தேகமுங்க. ரொம்பகாலமா கஷ்ட ஜீவனத்திலயிருக்கும் விவசாயிங்களுக்கு இதுவரைக்கும் அவங்க பொருளுக்கு அவங்களே வெலவைக்கிற உரிமையைக் குடுக்காத நீங்க… எப்பிடீங்க இவ்வளவு சீக்கிரம் பெட்ரோல் விலை உரிமையை மட்டும் டகார்னு தூக்கிக் குடுத்தீங்க? அம்பானிதான் ஏதோ சொன்னாருன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாய்ங்க… ஆமாங்களா?

சரி… பெட்ரோல் வெலயத்தான் அப்பிடிப்பண்ணீங்க… டீசலையாவது உங்க கட்டுப்பாட்டுலதானே வைச்சிருக்கீங்கன்னு மனசத் தேத்திக்கிட்டுச் சந்தோஷமாத்தான் இருந்தேன்ங்க. ஆனா எப்பவும் போலவே இப்பவும் தாங்கமுடியாத நஷ்டத்தில கதறிட்டிருக்கிற எண்ணைக் கம்பெனிங்களைக் காப்பாத்துறதுக்கு வேற வழியே இல்லைன்னு சொல்லி டீசலும், சமையல் கேஸும் மறுபடியும் வெலய உசத்தப்போறேன்றீங்க. நீங்க என்ன பண்ணாலும் ஊருக்குள்ள கேக்கிறதுக்கு ஆளில்லைன்றது நெஜந்தாங்க. அதுக்காக இப்பிடியா?

காங்கிரஸ் ஆட்சியில பல பொருளாதாரப் புலிகள் இருக்குதுன்னு மெத்தப்படிச்ச மேதாவிங்க பலபேரு பேசிக்கிறப்பல்லாம் கொட்ட எடுத்ததா…எடுக்காததா?ன்னு யோசனை பண்ண முட்டாளுங்க நானு! அப்புறமா புரிஞ்ச பிறகுதாங்க தெரிஞ்சது… பொருளாதாரத்தச் சரியாக் கையாளத் தெரியாத உங்களையெல்லாம் பொருளாதாரப் புலிகள்னு சொன்னா... என்ன மாதிரி ஆளுங்க கொட்ட எடுத்ததா, எடுக்காததா?ன்னு கேட்டா அது தப்பேயில்லதானுங்களே?

ஒரு நாட்டோட பொருளாதாரத்தயும் பொதுமக்களையும் பாதிக்கிறதுல முக்கியச் சமாச்சாரமே விலையேற்றம்தாங்க. எல்லாப் பொருளோட விலையேற்றத்துக்கும் அடிப்படையான முக்கியக் காரணத்துல போக்குவரத்துச் செலவும் ஒண்ணுங்க. அப்படிப்பட்ட போக்குவரத்துச் செலவு விலை ஏறுச்சின்னா ஆட்டோமேட்டிக்கா நாடு முழுவதும் வெலவாசி உயரும்னு உங்களுக்கெல்லாம் தெரியாதுங்களா? நீங்க வுடுற ராக்கெட்டுங்கெல்லாம் மேல பறக்காம கீழ வுழுந்துக்கிட்டு இருக்கிறதும், வெலவாசி மட்டும் ராக்கெட்ட விட வேகமா மேலேப் போறதுமாயிருக்கிற இந்த நேரத்துல மறுபடியும் டீசல் வெலய ஏத்தப்போறேன்றீங்களே? நீங்களெல்லாம் தெரிஞ்சேதான் பண்றீங்களா? இல்ல… தெரியாத மாதிரியே நடிக்கனும்னு யாராவது ஆர்டர் போட்டாய்ங்களா?!

உங்களச் சொல்லிக் குத்தமில்லைங்க. தேசிய அளவுல உங்களுக்குச் சரியான எதிர்க்கட்சியோ… எதிர்க்கட்சித் தலைவரோ இல்லாமப் போயிட்டாங்க. அடுத்த எலெக்சன்ல உங்களுக்குச் சரியானப் போட்டியா பிரதமர் வேட்பாளரா நிறுத்தக்கூட எதிரணிக் கூடாரத்துல யாருமில்லாமப் போயிட்டாங்க. அட அப்படியே எதிர்க்கட்சிங்க யாரையாவது கொண்டு வந்து நிறுத்துனாலும், உங்க சின்னய்யா ராகுல்காந்திய நிறுத்திப்புட்டீங்கன்னா… அட அப்பிடியே ராஜீவ் காந்தி மாதிரியே இருக்காருய்யான்னு சொல்லி ஓட்டுப் போடுறதுக்கு பெரும்கூட்டம் ஒன்னு காத்திக்கிட்டுருக்குங்க! அதுனால நீங்க வைக்கிறதுதான் சட்டமுங்க. நீங்க சொல்றதுதான் உண்மையுமுங்க!

வெளிநாட்டுக் கம்பெனிங்களுக்கெல்லாம் தாராளமா வரிச்சலுகைய வாரி வழங்குறீங்கன்னு சொல்றாங்க. ஆனா மாசச் சம்பளம் வாங்குறவன் தலைல மட்டும் எப்போ பாத்தாலும் முளகா அரைக்கிறீங்களாமே… அப்படீங்களா? அட… மாசச் சம்பளம் வாங்குற பயலுக நாம கட்சி நடத்துறதுக்கு நிதி குடுக்குறானுகளா? இல்ல… நமக்குத் தேர்தல் செலவுக்காவது கைகுடுக்குறானுகளா? எல்லா உதவியும் செய்யுற பணக்காரங்களுக்கு மட்டும்தான் நாம திட்டங்கள் போடுவோம்றதும், இந்தப் பரதேசிப் பயலுகளப்பத்தி நமக்கென்ன கவலைன்னு நீங்க பொருளாதாரத்தப் பிரிச்சி மேயுறதும்… அட்டா… ஓரமா நின்னு வேடிக்கை பாக்கிரதத் தவிர உருப்படியா எங்களால என்னங்க செய்யமுடியுது?

கருப்புப் பணத்தை நெனச்சவுடனே இந்தியாவுக்கு கொண்டு வர முடியாதுன்றீங்க. கருப்புப்பணம் லிஸ்ட்ல இருக்குற பேரைக்கூட வெளிய சொல்ல மாட்டோம்ன்றீங்க. வெளிநாட்டு பேங்க்ல இருக்குற வெவரத்தையெல்லாம் நமக்குத் தரமாட்டாங்கன்றீங்க. இந்த ஒப்பந்தம்ன்றீங்க... அந்தச் சட்டம்ன்றீங்க! கொஞ்சம் கூட வெக்கமில்லாம உங்க அறிவு ஜீவி நிதியமைச்சரை வைச்சிக்கிட்டு நாளுக்கொரு அறிக்கை வுடுறீங்க! அட எங்களுக்குத் தெரியுமுங்க… திருடனே போயி எங்கயாவது திருட்டக் கண்டு புடிப்பானுங்களா? கருப்புப்பணமோ… வெள்ளப்பணமோ நாங்க என்ன உங்க சட்டயப் புடிச்சி கேக்கவாப்போறோம்? எதுவுமே சொரணையில்லாம எவ்வளவுதான் நாங்க ஒதுங்கி நின்னாலும், ஒண்ணுக்குப் பத்தா எங்க மேலயே துரத்தித் துரத்தி பாரம் ஏத்துறீங்களே… உங்களுக்கு ஓட்டுப் போட்ட பாவத்துக்காவது ஒருநாளாவது எங்கள நினைக்கலாமில்லியா?

பெட்ரோல் வெலய நீங்க எவ்வளவு ஏத்துனாலும் வாங்கி வைச்சிருக்கிற வண்டிய பழைய இரும்புக்கா போடமுடியும்ன்னு உங்களையும் உங்க பரம்பரையையும் கெட்டவார்த்தைல திட்டிப்புட்டுப் பல்லக் கடிச்சிக்கிட்டு நாங்க பெட்ரோல போட்டுக்கிறோம்ங்க. ஆனா டீசல்ல நீங்க ஏத்துற வெலயையும் நாங்களேதான் அழுவனும்னு எங்கள்ல நெறயப்பேருக்கு எப்பவுமேத் தெரியறதில்லைங்க! பணக்காரனுக்கு இதப்பத்தி எப்பவுமே கவலையில்லைங்க. பத்துத் தலைமுறைக்குச் சொத்து வெச்சிருக்கிறவனுக்கு பெட்ரோலுக்கும் தண்ணிக்கும் பெரிசா வித்தியாசமில்ல! லாரி வெச்சிருக்கிறவன் பொழப்பு கூட பெரிசா பிரச்சினையில்லைங்க! அவன் என்ன பண்ணுவான் பாவம்?... டீசல்ல ஏறுற வெலய வாடகைல ஏத்திட்டு போகப்போறானுங்க. எங்கள மாதிரி அப்பாவிங்க தலைலயே எல்லா வெலவுயர்வும் விடியறதுதான் சகிக்க முடியாத விதியாயிப் போச்சிங்க. உங்க சிறப்பான வெவசாயக் கொள்கையால வெவசாயமும், வெவசாயியும் கொஞ்ச கொஞ்சமா அழிஞ்சிட்டு வர்றதால, நீங்க டீசலை வெலயேத்துனாலும் வெவசாயிங்களுக்குக் கவலையில்லைங்க. இந்த மீனவங்க பொழப்பு? ம்ம்ம்ம்… என்ன பன்றது? கேக்க நாதியில்லைன்னு ஆனப்புறம் என்ன ஆனாதான் என்ன?

உங்களுக்குப் புண்ணியமா போகட்டும் தர்மப்பிரபுக்களே… உங்களுக்கு ஓட்டுப் போட்ட குத்தத்துக்காக ஒரேயொரு உதவி செய்ங்கய்யா! ஆறு மாசத்துல ஒம்போது வாட்டி வெலயேத்தி, ஒவ்வொருவாட்டியும் எங்களுக்கு பிபிய எகிரவைக்கிறதுக்குப் பதிலா ஒரேவாட்டியா வெலயெல்லாம் நான் சொல்ற மாதிரி ஏத்திப்புட்டு மிச்சமிருக்கிற உங்க மூணு வருஷ ஆட்சியில எங்களக் கொஞ்சம் நிம்மதியாவாது இருக்கவுடுங்க! நாடு தழுவிய போராட்டம் வந்துரும்னோ… மக்களெல்லாம் புரட்சி பண்ணிருவாங்கன்னோ நீங்க பயப்பட வேண்டியதேயில்லைங்க. ஏன்னா இது நம்ம இந்தியாங்க! இது உங்களுக்கும் தெரியுமுங்க! என்ன ஒன்னு… ஒவ்வொரு காசையும் செலவு பண்ணும் போதும் மனசுக்குள்ளயே கெட்டவார்த்தைல உங்களையெல்லாம் திட்டிப்போம்ங்க. அது மட்டும்தானே எங்களால முடிஞ்சதுங்க!

பெட்ரோல்-ரூ.100, டீசல்-ரூ.100, சிலிண்டர்-ரூ.500, நல்லாயிருக்கே இது…!ன்னு நீங்க யோசிக்கிறது புரியுதுங்க. தைரியமா ஏத்துங்க. ஆனா ஒரேவாட்டியா ஏத்திருங்க. ஏன்னா எப்படியும் கொஞ்ச கொஞ்சமா எங்களைக் குனிய வைச்சுக் குத்திக் கோமணத்த உருவறதுக்குப் பதிலா… ஒரேவாட்டியா முடிச்சிட்டீங்கன்னா உங்களுக்கும் சந்தோஷம்… உங்கள ஆட்டுவிக்கறவங்களுக்கும் சந்தோஷம் பாருங்க… அப்ப நான் உத்தரவு வாங்கிக்கிட்டுங்களா எசமான்? மறுபடியும் பெட்ரோல் போடும் போது திட்டனும்ல…? அப்போ உங்கள நெனச்சிக்கிறேன்… வரட்டுங்களா?...

No comments:

Post a Comment