SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Saturday, April 30, 2011

பெத்த மனசும், தனிமைப் பரிசும்…ஒவ்வொரு வருட கோடை விடுமுறைக்கும்
காத்திருப்பது குழந்தைகள் மட்டுமல்ல,
பெரியவர்களாகிய நாங்களும்தான்!

எங்கள் குழந்தை படிக்கச்சென்றது
முதல் பிரிவு;
தூரதேச பணிக்குச் சென்றது
இரண்டாம் பிரிவு;
மூன்று முடிச்சால் விலகிப்போனது
மூன்றாம் பிரிவு;
அவர்கள் வாரிசுகளோடு
நாங்கள் வாழ வழியின்றிப்போனது
நான்காம் பிரிவு;

எங்கள் பெற்றோரிடம்
அவர்கள் வளர்ந்தபோது
ஒருபோதும் நினைத்ததில்லை
அவர்கள் குழந்தை
எங்களிடம் வளராதென்று;

அங்கே டெலிபோனில் வளரும்
பாட்டி, தாத்தா பாசமும்
இங்கே புகைப்படத்தில் சிரிக்கும்
குழந்தைகள் மீதான ஏக்கமும்
வித்தியாசமாய் தோன்றிய காலத்தில்
கோடைகால விடுமுறைகளையெண்ணி
மீதமுள்ள நாட்களை நகர்த்த
கற்றுக்கொண்ட வாழ்க்கையைத் தவிர
வேறொன்றும் செய்வதற்கில்லை;

பிள்ளைகள் பிறக்கும் முன்
நாங்கள் வாழ்ந்த தனிமை மகிழ்ச்சி
எப்போதும் உணர்த்தியதில்லை
இப்படியொரு தனிமையிருப்பதை!

வருடத்திற்கொருமுறை பெற்றோரை
தங்களுடன் கூட்டிச் செல்லும்
எங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை,
நாங்கள் ஆசையாய்ப்போவது
அந்நிய தேசத்தைச் சுற்றிப்பார்க்க அல்ல-எங்கள்
பேரக்குழந்தைகளுக்கு நாங்கள்
அந்நியர்களாய் ஆகிவிடக்கூடாதென்றே!

காலச்சுழற்சியின் வேகமாற்றத்தில்
பூமிப்பந்து கைக்குள் சுருங்கிப்போனது
அவர்கள் குற்றமுமில்லை;
வயோதிக நாட்களின் இறுதிக்காலத்தில்
வாழ்க்கை பந்தங்கள் விலகிப்போனது
எங்கள் தவறுகளுமில்லை;
விதியென்று சொல்லி ஒதுக்கி
சொந்தங்களின்றி வாழ்ந்து சாக
நெஞ்சில் உரமுமில்லை;
ஒருவருக்கொருவர் குழந்தையாய் மாறி
வாழ்ந்து தொலைப்பதுமின்றி
வேறொரு வழியுமில்லை;

கண்கள் பூத்திருக்க
நாங்கள் காத்திருப்பது
வருடத்திற்கொருமுறை வரும்
வசந்த நாட்களுக்காகவே;
எங்கள் வீட்டுக்கு
அவர்கள் வருவதும்,
எங்களைக் கூட்டிச்சென்று
அவர்களோடு வைப்பதும்,
எதுவாயினும் இன்பமே
குழந்தைகளோடு வாழ்வதென்றால்;
தீபாவளி, பொங்கல்
இன்ன பிற பண்டிகையெல்லாம்
எங்கள் பேரப்பிள்ளைகளோடு
நாங்கள் வாழும் நாட்கள்தான்;

எப்போதும் நாங்கள் ஏங்கித்தவிப்பது
ஒற்றைவரிக் கவலையோடுதான்…
எங்கே அடுத்த விடுமுறை
வரும் முன்னரே
மூச்சு நின்று வாழ்க்கை
முடிந்துவிடக் கூடுமோ?
பேரப்பிள்ளை முன்நடந்து
நெய்ப்பந்தம் பிடிக்குமா?-இல்லை
பெற்ற பிள்ளை மட்டுமே
பறந்து வந்து திரும்புமா?

ஒவ்வொரு வருட சந்திப்பின்போதும்
உணர்த்த நினைத்தும் மௌனம் காத்து
சொல்லாமலே விட்டு வருகிறோம்
நாங்கள் பெற்ற பிள்ளைகளிடம்…
‘’இன்று நாங்கள்…
நாளை நீங்கள்;
எப்போதாவது நேரம் கிடைத்தால்
இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்,
நாளை இந்த நிலை வரும் நாளில்
நெஞ்சில் கலக்கமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்’’;

3 comments:

 1. பிள்ளைகளை வேலைக்கு வெளிநாடு அனுப்பிவிட்டு ஏங்கி தவிக்கும் கோடிக்கான நல்லுங்களின் ஏக்கம் இந்த கவிதை...

  கவிதை அருமையாக வந்திருக்கிறது...
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. உங்கள் விமர்சனத்திற்கு நன்றி. காமசூத்திரம் மட்டுமன்றி இது போன்ற படைப்புகளையும் விரும்பும் உங்களைப் போன்றோராலே என் இலக்கியப்பசி சாகாமல் காக்கப்படுவதாய் நம்புகிறேன்...

  ReplyDelete
 3. It is really good.keep it up

  ReplyDelete