SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Friday, April 29, 2011

ஆடு நனைவதாக ஓநாய்க் கூட்டம் ஒப்பாரி…இலங்கைத் தமிழர் மீது தி.மு.க திடீர் கரிசனம் ஏன்?

ஆடு நனைவதாக ஓநாய்க் கூட்டம் ஒப்பாரி…
இலங்கைத் தமிழர் மீது தி.மு.க திடீர் கரிசனம் ஏன்?


சமீபத்தில் நடந்த தி.மு.க வின் உயர் நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் கனிமொழி விஷயம் மட்டுமன்றி இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகவும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. உயர் நிலை செயல் திட்டக்குழு என்ற பெயரில் கருணாநிதி என்ற தனிமனிதர் தனக்காக நிறைவேற்றிக்கொண்ட அந்தத் தீர்மானத்தின் சில பகுதிகள்;- கனிமொழி எனது மகள் என்பதால் மட்டுமே இந்த வளர்ச்சியை அடைந்து விடவில்லை. கட்சியின் அடிமட்டத்தொண்டர் என்ற நிலையிலிருந்தே இந்த வளர்ச்சியை எட்டியுள்ளார். வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி சமுதாயத்திற்கும், சங்கமம் விழா மூலம் கலைக்கும் அவர் ஆற்றிய அரும்பணிகள் அனைவருக்கும் தெரியும். எவ்வளவோ இன்னல்களை இன்முகத்தோடு ஏற்றுக் கொண்ட நான் எந்தவொரு சூழ்நிலையிலும் கட்சியைக் காட்டிக் கொடுக்கும் செயலைச் செய்யமாட்டேன். இனி வரும் சூழலில் கட்சி கனிமொழிக்காக அவர் ஒரு தி.மு.க உறுப்பினர் என்ற முறையில் அவருக்குப் பின்னால் பக்க பலமாய் நிற்கும். அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தமைக்காக இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கி இலங்கைக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு சமஉரிமை பெற்றுத்தர இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இப்படியாக நீளும் அந்தத் தீர்மானத்தில் எதனால் நுழைக்கப்பட்டது இலங்கை விவகாரம்? பழுத்த அரசியல் தந்திரியான கருணாநிதிக்கு திடீரென்று இலங்கைத் தமிழர் நலனில் அக்கறை பொத்துக்கொண்டு வருவதற்கு என்ன காரணங்கள் இருக்கக்கூடும்?

இலங்கையில் கொத்து கொத்தாக நம் இனம் மாண்ட போது உண்ணாவிரத நாடகமும் உடல் நிலை சரியில்லையென்று ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்ட நாடகமும் நடத்தியவர் இந்தக் கருணாநிதி. அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸை எதிர்த்து மூச்சு கூட விடாமல், இதயத்தைக் கழற்றி வைத்து விட்டு நாற்காலியை மட்டும் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட உண்மைத்தமிழன் என்று வரலாற்றில் இடம் பிடித்த வெட்கம் கெட்ட மாமனிதர் இவர். தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வல மக்கள் எழுச்சியை மத்திய அரசுக்காக மண்ணாக்கிய புண்ணியவான். எண்ணற்ற இன உணர்வாளர்களின் தீக்குளிப்புகளுக்கு பைத்தியக்காரப் பட்டம் கட்டிய தமிழினத்தலைவர்! ரத்த சொந்தங்கள் அங்கு வெந்து மடிகையில் இங்கு தனக்குத்தானே பல பாராட்டு விழாக்களை நடத்தி மகிழ்ந்த பாசக்காரத்தலைவன். இனமக்கள் மரணத்திலும் தம்மக்கள் பதவிக்காக டெல்லிக்கு பறந்த முதுகெலும்பைத் தொலைத்த மூத்த அரசியல்வாதி. தமிழர்களின் சமாதி மீது செந்தமிழ் மாநாடு நடத்திய தமிழ்க் கடவுள்! தமிழக மீனவர்களே சாகடிக்கப்பட்ட போதிலும் மத்திய அரசுக்கு எதிராக மௌனம் மட்டுமே காத்த இறையாண்மைக் காவலர். தமிழினச் சமாதிகளை இலவசங்களைக் கொண்டு மூடநினைத்த முற்போக்குச் சிந்தனையாளர். தனது குடும்ப நலனுக்காக மட்டுமே கட்சியை காங்கிரசின் காலில் அடகு வைத்த சுயமரியாதைச் சிங்கம்!

இப்போது மட்டும் எங்கிருந்து முளைத்தது திடீர் ஞானோதயமென்று தெரியவில்லை. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல இந்த உதயசூரியர்களின் திடீர்ப்பாசம் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லாத கண்துடைப்பே என்றாலும் இதன் பின்னனி குறித்து தெரிய முயல்வதில் தவறேதுமில்லை.

இலங்கைப்போரின் இறுதிக்கட்டச் சம்பவங்களாய் சமீபத்தில் வெளியான ஒரு செய்தியில் கருணாநிதி மற்றும் கனிமொழியின் கிழிந்து போன முகத்திரைகள் மேலும் கிழித்து கந்தலாக்கப்பட்டிருந்தது. இறுதி நேரத்தில் நடேசன் எத்தனையோ முறை கருணாநிதியையும் கனிமொழியையும் தொடர்பு கொண்டு அப்பாவித்தமிழர்கள் கொல்லப்படுவதை விளக்கிக்கூறி அதை தடுத்து நிறுத்த முயலுமாறுக் கெஞ்சியும் இவர்கள் பதவிக்குப் பங்கமின்றி காத்துக் கொள்ள மத்திய அரசுக்கு ஆதரவாக வாய் மூடி மௌனிகளாய்ப் போன இனத்துரோகம் வெளியிடப்பட்டிருந்தது. தனது தமிழினத் தலைவர் முகமூடி கிழிந்த போதிலும் மகள் கனிமொழிக்காவது சங்கமம் போன்ற ஏமாற்று வேலைகள் மூலம் தமிழினக் காவலர் அடையாளத்தை ஏற்படுத்தலாமென்ற கனவில் இருந்த கருணாநிதிக்கு இந்த சமீபத்திய செய்தி நிச்சயம் நிம்மதியைக் கெடுத்திருக்கக்கூடும். இந்நிலையில் 2ஜி அலைவரிசை வழக்கிலும் கனிமொழிக்கு கைவிலங்கு நெருங்கத் தொடங்க அவசரமாய் கூட்டப்பட்டிருக்கிறது தி.மு.க வின் உயர்நிலை செயல் திட்டக்குழு.

கனிமொழிக்காக கூட்டப்பட்ட இந்த கூட்டத்தில் காங்கிரசை நேரடியாகக் கண்டிக்காமல் நாங்கள் இவ்வளவு நாள் இலங்கை விவகாரத்தில் வாய் மூடி எப்படி உங்களுக்கு ஆதரவாய் இருந்திருக்கிறோம் பாருங்கள். நாங்கள் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் இலங்கை விவகாரத்தை வைத்து உங்களுக்கு குடைச்சல் கொடுக்க முடியும் என்பதை உணர்த்துவதற்காக இப்போது கையிலெடுக்கப் பட்டிருக்கக்கூடும் இலங்கை விவகாரம்.

இனி வரும் தேர்தல் முடிவுகள் ஒருவேளை நம்மைக் கைவிடக்கூடும் என்ற எண்ணம் கருணாநிதிக்கு தோன்றியிருக்கலாம். நாம் இவ்வளவு இலவசங்களை வாரி வழங்கியும் தேர்தல் முடிவுகள் நமக்கு எதிராய்ப் போகுமென்றால் என்ன காரணமிருக்கக்கூடும் என்று சிந்தித்த கருணாநிதிக்கு ஒருவேளை இலங்கை விவகாரம்தான் காரணமாயிருக்குமென்று புரிந்து போயிருக்கக்கூடும். அதனால் இந்த முறை தோற்றால் கூட அடுத்த முறை ஆட்சியைப் பிடிக்க உதவுமென்று இலங்கை விவகாரத்தை தொட்டிருக்கக்கூடும்.

ஒருவேளை 2ஜி விவகாரம் வில்லங்கமாய்ப் போனால் தமிழக மக்கள் ஆதரவு தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் தமிழினத்தலைவர் முகமூடியால் மட்டுமே சாத்தியமென்று திட்டமிட்டிருக்கலாம்.

ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நிச்சயம் பல காட்சி மாற்றங்களும் நிகழுமென்பது கருணாநிதிக்கு நன்றாய்த் தெரியும். காங்கிரசிலிருந்து தி.மு.க கழற்றி விடப்பட்டு அ.தி.மு.க வும் காங்கிரசும் உடன்பாடு செய்து கொள்ளக்கூடுமானால் அப்போது தமிழகத்தில் காங்கிரசுக்கு இடையூரளிக்க இலங்கை விவகாரத்தால் மட்டுமே முடியும். ஆனால் அப்படி ஒரு சூழலில் திடீரென்று இலங்கை விவகாரத்தை கையில் எடுத்தால் அது சந்தர்ப்பவாத அரசியலாக விமர்சனங்களை எழுப்பக்கூடுமென்பதால் இப்போதிருந்தே கொஞ்சம் தொட்டுவைக்கலாம் என்று இலங்கை விவகாரத்தை கையிலெடுத்திருக்கலாம்.

இத்தனை நாள் மௌனம் காத்த மனசாட்சி இப்போது ஒருவேளை சுட்டிருக்கக்கூடும். சரி… செய்யவேண்டிய நேரத்தில் செய்யாமல் போனாலும்கூட இப்போது மீதமிருக்கும் மக்களையாவது காப்பாற்ற நம்மால் ஆன முயற்சிகள் செய்து பார்ப்போம் என்று எண்ணியிருக்கலாம்.

நாமும் நமது குடும்பமும் தமிழக மக்களின் பணத்தை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்குச் சுரண்டியிருக்கிறோம். ஆட்சியில் இருக்கும் வரைதான் தமிழர்களுக்காக உருப்படியாய் எதுவும் செய்யவில்லை. ஆட்சியிலிருந்து இறங்கும் நேரத்திலாவது பணத்தை திருடிய நன்றி உணர்வுக்காக தமிழர்களுக்கு ஆதரவாய் ஒரு தீர்மானமாவது போடுவோம் என்று எண்ணியிருக்கலாம்.

இவை எதுவுமே காரணமில்லையென்றால் அவசரமாகக் கூட்டப்பட்ட உயர்நிலை செயல் திட்டக்குழுவில் மகள் கனிமொழியின் விஷயம் மட்டுமே அலசப்பட்டால் அது மகளுக்காக மட்டுமே கூட்டப்பட்ட கூட்டமாகிவிடும். பின்னர் முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு அல்வா கொடுத்து கடிதம் எழுத முடியாது என்று எண்ணி எதற்கும் இருக்கட்டுமென்று இலங்கைத்தமிழருக்கு ஆதரவாக ஒரு தீர்மானம் நிறைவேற்றி, கனிமொழிக்காக மட்டுமின்றி இலங்கை விவகாரத்துக்காகவும் கூட்டப்பட்ட கூட்டம்போல ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க முயன்றிருக்கலாம்.

எப்படியிருந்தாலும் சரி… என்னவாகயிருந்திலும் சரி… கருணாநிதியின் முகத்திரை கிழிந்த சுயரூபம் கடந்த ஐந்தாண்டுகளில் நன்றாகவே விளங்கியிருக்கும் மக்களுக்கு. எத்தனை எத்தனை நாடகங்கள்? எத்தனை எத்தனை ஊழல்கள்? தமிழ்நாட்டையே தங்களுக்கு மட்டுமே சொந்தமென்று மாற்ற நினைத்த குடும்ப ஆட்சியின் அக்கிரமங்கள்தான் எத்தனை? மனசாட்சியுள்ள எந்த மனிதரும் செய்யாத காரியங்களையெல்லாம் சர்வ சாதாரணமாக செய்தது கருணாநிதியின் தமிழ்த் துரோக ஆட்சி.

இனிவரும் காலங்களில் கருணாநிதியின் புழுகு மூட்டைகளும், நீலிக்கண்ணீர்களும், நாடக காட்சிகளும் அவருடைய கட்சிக்காரர்களால் வேண்டுமானால் சகித்துக் கொள்ளப்படலாம். ஆனால் அதையெல்லாம் நம்புமளவுக்கு இன்றைய தலைமுறையில் எவருமில்லை என்பது எப்போது விளங்கப்போகிறதோ கருணாநிதிக்கு? அய்யா…தாத்தா இது அந்தக்காலமில்லை உங்களது நாடகங்களையெல்லாம் உங்கள் வசதிக்கேற்ப அரங்கேற்றிக்கொள்ள! உங்களது அறிக்கைகளும், நாடகங்களும் ஊடகங்களால் மட்டுமன்றி சாமான்யன்களாலும் வெகு கேவலமாய் விமர்சிக்கப் படுவதெல்லாம் உங்கள் காதுகளில் விழுவதே இல்லையா? இல்லை… விழாதது போல் நடித்துக் கொண்டிருக்கிறீர்களா? போதுமய்யா பேரப்பிள்ளைகள் வரை நாட்டைச் சுரண்ட விட்ட இந்த பொழப்பு! 58 வயதுக்கு மேல் சாதாரண அரசு வேலைக்கே தகுதியில்லை எனும்போது அரசையே கட்டிக்காக்க மட்டும் வயது வரம்பு நிர்ணயிக்காத நமது முன்னோர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான் நீங்கள் இப்படி 80 வயதைத் தாண்டியும் ஆட்சி மோகத்தில் அலைவீர்கள் என்பது! இனியாவது ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுவது போன்ற அசிங்கமான நாடகங்களை அரங்கேற்றி உங்கள் பெயரை நீங்களே கெடுத்துக் கொள்ளாமல் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்ய வழியேதுமுண்டா என்று தேடத்துவங்குங்கள்!

‘’தமிழர்களே… தமிழர்களே… நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாய்த்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம். கவிழ்ந்து விட மாட்டீர்’’. போதுமய்யா சாமி! இனி எங்களுக்கு இல்லை தேவை… உங்களின் சேவை! – நன்றியுடன் உங்களை நம்பி நம்பி நாசமாய்ப்போன ஒரு அப்பாவித் தமிழன்…

No comments:

Post a Comment