SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Monday, April 11, 2011

நல்லாட்சியென்பது யாதெனில்……(இதப்படிங்க உருப்படியா!)

நல்லாட்சியென்பது யாதெனில்……


சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து நம் நாடு எத்தனையோ ஆட்சியாளர்களையும் அமைச்சர்களையும் பார்த்திருக்கிறது. ஆனால் இந்த 64 ஆண்டுகளில் இந்தியாவின் வியக்கத்தகு(ஒரே சீரான மற்றும் பரவலான)வளர்ச்சி, முன்னேற்றம், கொள்கைகள் என்று மனதார ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயங்கள் எத்தனை இருக்கிறது?... ஒருவேளை நம்மை வெள்ளையர்களே இன்னும் கொஞ்சகாலம் ஆண்டிருந்தால் நம் நாடும் இன்று அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்று இருந்திருக்குமோ என்ற உள்மன ஏக்கங்களை முழுவதுமாய் ஒதுக்கிவிடுவதற்கில்லை! சுதந்திரமடைந்தும், விதவிதமான ஆட்சியாளர்கள் இந்தியாவை ஆண்டும் இன்னும் ஏன் நாம் பின்தங்கியேயிருக்கிறோம்… நம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்லக்கூடிய நல்லாட்சியென்பது எது?... தேடுவோம்……!

நல்லாட்சியென்பதன் மிகமுக்கிய அடிப்படைகளுள் ஒன்று… அரசியலையும், ஆட்சியையும் வியாபாரமாக பார்க்காத ஊழலற்ற, தன்னலமற்ற தேசபக்திமிக்க அரசு.(அப்படியென்றால் என்ன என்பதே இன்றைய ஆட்சியாளர்கள் பலபேருக்குத்தெரியாது!)

‘’இந்தியா வளர்ந்து வரும் வல்லரசு… நாம் பொருளாதாரத்தில், கணினி மற்றும் தொலைத்தொடர்புத்துறையில் அடைந்துவரும் முன்னேற்றம் கண்ணுக்குத்தெரியவில்லையா? ஒருகாலத்தில் ஊருக்கு ஒரு வீட்டில் டிவி இருப்பதே அரிது. இன்று பெரும்பாலும் டிவி இல்லாத வீடுகளே இல்லை. அதுபோல் செல்போன் இல்லாத மனிதர்கள் இன்று எத்தனை பேர் இருக்கக்கூடும்‘’ என்றெல்லாம் வீண்வாதம் செய்பவர்களுக்கு என்னிடம் சில கேள்விகளுண்டு…!

மேற்கூறிய மற்றும் இதுபோன்ற இன்னபிற வளர்ச்சிகளெல்லாம் நம் ஆட்சியாளர்களால் நமக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட சிறப்பு நலத்திட்டங்களல்ல…! இவைகளெல்லாம் காலமாற்றத்தில் நமது மக்கள் தொகை என்ற வியாபாரத்தின் அடிப்படை ஆணிவேரைக்கொண்டு உருவாகிய சுயம்புகளே!

‘’இதுவரை நம் மக்கள் தொகையில் விவசாயிகளின் விழுக்காடு என்ன? அது வருடாவருடம் குறைந்துகொண்டு வரும் விழுக்காடு என்ன? இப்படியே குறைந்து கொண்டே போனால் அதன் இறுதி நிலைதான் என்ன? அது குறையாமலிருக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்ன?’’ என்பதுபற்றி எந்த அரசாவது புள்ளிவிவரங்கள் திரட்டியிருக்கிறதா? இயற்கை விவசாயத்தை முழுவதுமாய் மக்களிடம் கொண்டு சேர்க்க எந்த அரசாவது முயன்றிருக்கிறதா? அட… நீங்கள் விவசாயத்தைக்காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை. அதை அழிக்காமலாவது இருக்கலாமல்லவா? பி.டி எனப்படும் மரபணு மாற்றப்பட்ட பயிர்வகைகளை உலகின் வளர்ந்த நாடுகளெல்லாம் தடை செய்தபோதும் நமது அரசாங்கம் மட்டும் அதை அனுமதித்து நம்மையெல்லாம் சோதனைச்சாலை எலிகளாக்கத் துணிந்ததெப்படி? ஒவ்வொருமுறை இந்த அரசு விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்தபோதும் ஏற்கனவே வட்டியுடன் கடனை திருப்பிச்செலுத்திய விவசாயிகளுக்கு என்ன செய்திருக்கிறது? இலவச மின்சாரம், விவசாயக்கடன்கள் தள்ளுபடி, உரமானியம் என்பன போன்ற உருப்படியில்லாத திட்டங்களை தயவு செய்து ஒழித்துக்கட்டுங்கள் அரசுகளே… விவசாயிகளுக்கு தேவை இலவசங்களல்ல. இருபத்திநாலு மணிநேர தடையில்லா மின்சாரம், அலைக்கழிக்காத காலம் தாழ்த்தா கடனுதவி, தட்டுப்பாடற்ற சமச்சீரான உர மற்றும் விதை விநியோக மையங்கள், இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வுப்பயிற்சி, தட்டுப்பாடற்ற காலம் தாழ்த்தா தண்ணீர் திறப்பு, இடைத்தரகரில்லா அரசு நேரடிக்கொள்முதல் நிலையங்கள், குறுவிவசாயிகளுக்கான நேரடி சந்தைபடுத்துதல் வசதிகள், நாடு தழுவிய விவசாயிகளை உறுப்பினர்களாகக்கொண்ட விவசாயப்பொருட்கள் விலை நிர்ணய மையம், அதிக எண்ணிக்கை மற்றும் தரமான விவசாயக்கல்லூரிகள், ஊருக்கு ஊர் அரசு விவசாயப்பொருட்கள் குளிர்சாதன கிடங்குகள், விளைநிலங்களை விளைநிலங்களாக மட்டுமே உபயோகப்படுத்த சட்டத்திருத்தம் மற்றும் அரசு நேரடி ஏற்றுமதி கொள்முதல் நிலையங்கள். இதுபோன்றவையே இன்று நம் விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்க நாம் செய்ய வேண்டிய உடனடித்தேவைகளாகும். இவற்றையெல்லாம் நமது அரசுகள் செய்யத்தவறும் பட்சத்தில் நாளை நம் சந்ததியினர் உணவுக்கும் இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கப்போகிற சூழலுக்கு தயார்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும்.

நமது மிகப்பெரும் குடிநீர் ஆதாரங்களின் இன்றைய நிலை என்ன? ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஆக்கிரமிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் ஆதாயங்களுக்காக அழிந்துகொண்டிருக்கும் ஏரிகள், குளங்கள், குறுநீர்த்தேக்கங்கள் எத்தனை? அரசு நிர்வாகங்களின் ஊழல் மற்றும் அலட்சிய பாராமுகத்தால் அவலமாகிக்கொண்டிருக்கும் ஆறுகள் எத்தனை? நம் நாட்டின் மொத்த நீர்த்தேக்கங்களில் பிரிட்டிஷ் அரசு கட்டிச்சென்றது எத்தனை? நம் சுதந்திர இந்தியாவின் முதல் முப்பதாண்டு அரசுகள் கட்டியது எத்தனை? அதற்கு பின்னர் வந்த அரசுகள் கட்டியது எத்தனை? ஆராய்ந்து பார்த்தால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதைகூட மிஞ்சாது! ஏற்கனவே எங்கு வேண்டுமானாலும் குடிநீர் பருகி தாகம் தணிக்கும் நிலையிலிருந்த நம் நாட்டில் தண்ணீரையும் வியாபாரப்பொருளாக்கிய புண்ணியத்தைக்கட்டிக்கொண்ட நமது அரசுகள் இன்னும் என்னவெல்லாம் செய்யக்காத்திருக்கிறதோ?! ஆண்டுக்காண்டு அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் நமது நிலத்தடி நீரைப்பற்றி எந்தவொரு அரசாவது கவலைகொண்டு முழுவீச்சில் செயலில் இறங்கியிருக்கிறதா? மணலை விற்று கோடிகளைத்திருடிப்புரளும் இந்த கோமாளிகளுக்கு எப்போது உரைக்கப்போகிறது… நாளை நம் சந்ததியினர் பணப்பற்றாக்குறையில்லா வாழ்விலும் தண்ணீருக்காக கண்ணீர் விடப்போகும் நிகழ்வுகள் உருவாகப்போகிறதென்பது!

இன்றைய அரசுகளின் கல்விக்கொள்(ளை)கைகள்… அடேங்கப்பா… நினைக்கும்போதே புல்லரிக்கிறது! வருடாவருடம் அரசுப்பள்ளிகள் இழுத்து மூடப்பட்டுக்கொண்டே வருகின்றன. வருடாவருடம் தனியார்பள்ளிகளும் கல்லூரிகளும் பளபளப்பாய்த் தொடங்கப்பட்டு பணத்தைப்பிடுங்கிக் கொண்டேயிருக்கிறார்கள். தனியார்பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் அரசின் ஊழல் மலிந்த முட்டாள்தனமான தாராளமயத்தால்தான் கும்பகோண பிஞ்சுகளின் சோகம் நிகழ்ந்தது என்ற என் வாதத்திற்கு எவரிடமாவது எதிர்வாதம் இருக்கமுடியுமா? ஏன் எந்தவொரு அரசும் அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளின் சீரமைப்பிற்கும், நிர்வாக மேன்மைக்கும், புதுப்புது பள்ளிகள், கல்லூரிகள் கட்டுவதற்கும் சிரத்தையெடுத்துக் கொள்வதேயில்லை?. ஒருவேளை அரசுப்பள்ளிகளும் கல்லூரிகளும் எண்ணிக்கையிலும் தரத்திலும் மேம்படுத்தப்பட்டால் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் அல்லக்கைகளின் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வருமானங்கள் குறைந்து போகுமென்பதாலா? அரசுப்பள்ளிகளையும் கல்லூரிகளையும் தனியாருக்கு நிகராக மேம்படுத்துவதும் நிர்வகிப்பதென்பதும் அவ்வளவு எளிதல்ல என்பவர்களுக்கு என் ஒரே கேள்வி… எப்படியய்யா தனியார் வசமிருந்த மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தி நிர்வகித்து இலாபமீட்டுகிறீர்கள்?... அரசுப்பள்ளிகளில் ஏற்கனவே போதுமான அளவில் மாணவர்கள் சேர்வதில்லை. இதில் எங்கிருந்து புதுப்பள்ளிகள் வேறு கட்டுவது என்று சப்பை கட்டு கட்டுபவர்களுக்கு எனது ஒரே பதில்… அரசுப்பள்ளிகள், கல்லூரிகளின் எண்ணிக்கையையும் தரத்தையும் தனியாருக்கு நிகராக உயர்த்துங்கள். அப்போது கல்விக்கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் காற்று வாங்குகிறதா இல்லையா பாருங்கள். அரசுப்பள்ளிகளையும் கல்லூரிகளையும் காப்பாற்ற எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் நீங்கள் வகுக்கும் சமச்சீர் கல்வியானாலும் சரி… இல்லை எந்தவொரு கல்விக்கொள்கையானாலும் சரி… அவையனைத்தும் கடலில் கரைக்கும் குடிநீரைப்போன்றதே. எந்த உபயோகமும் இருக்கப்போவதில்லை! எவ்வித மாற்றமுமின்றி இன்றைய நிலையே இப்படியே தொடருமானால் நாளை நம் சந்ததியினரில் வசதியுள்ளவர்கள் தரமான கல்விக்காக ப்ரி.கே.ஜியிலிருந்தே வெளிநாடு சென்று படிப்பதும் வசதியற்றவர்கள் கல்வி கற்கவே வழியின்றிப்போவதும் தவிர்க்க முடியாததாகிப்போகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

நமது அரசுகளின் சுகாதாரம் மற்றும் மருத்துவக்கொள்கைகள்… சுகாதாரம் குறித்த நமது அரசுகளின் விழிப்புணர்ச்சி பற்றி அதிகம் பேசவே தேவையில்லை. எங்கேயாவது ஒரேயொரு இலவசப்பொதுகழிப்பிடத்தை பார்வையிட்டாலே போதும்… அடேயப்பா… நம் அரசுகளிடம்தான் என்னேவொரு விழிப்புணர்ச்சி சுத்தத்திலும் சுகாதாரத்திலும்?! (இதில் நவீனக்கட்டணக்கழிப்பிடம் என்ற பெயரிலும் மக்களிடமிருந்து கொள்ளை. ஒரு ரூபாய்க்கு அரிசியைக்கொடுத்துவிட்டு ஒன்னுக்கு போவதற்கு இரண்டு ரூபாய் புடுங்கும் கேவலத்திற்கு எவரிடமாவது பதில் உண்டா?) தேவைக்கு தகுந்த அளவு இலவச பொதுக்கழிப்பிடங்களை கட்டுவதிலும் அவற்றை சுத்தமாகப்பராமரிப்பதிலும் என்ன கஷ்டமிருக்கப்போகிறது இந்த அரசுகளுக்கு? ஏன் அதைக்கூட தனியார் மயமாக்கி கட்சிக்காரர்கள் காசு சம்பாதிக்க துணைபோகிறார்கள்? சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் இன்னுமேன் கழிவுநீர் அகற்றும் வழிகள் நூறு சதவிகித மக்களுக்கும் அளிக்கப்படவில்லை. இத்தனை ஆண்டுகளாகியும் இன்னும் இவர்களின் தேர்தல் அறிக்கைகளில் பாதாளச்சாக்கடைதிட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டுதானேயிருக்கிறது? இதுமட்டுமா?... மழைநீர் வடிகால் திட்டங்கள்… அய்யய்யோ… வெளிநாடுகளெல்லாம் நம்மிடம் பிச்சையெடுக்கவேண்டும். சரி, சுகாதாரத்தின் நிலைதான் இப்படியென்றால்… மருத்துவம்?...அட…! இந்தப்பத்தியின் முதலில் நான் கூறிய இலவசப்பொதுக்கழிப்பிட உதாரணமே இதற்கும் கணக்கச்சிதமாய் பொருந்துகிறதே?! (இலவசப் பொதுக்கழிப்பிடத்தையும் இலவசப் பொதுமருத்துவமனையையும் வித்தியாசமின்றி வைத்திருக்கின்றன நமது அரசுகள்!) அரசு மருத்துவமனைகளின் தரத்தையும் எண்ணிக்கையையும் உயர்த்துவதில் எவ்வித ஈடுபாடும் காட்டாத அரசுகள் இலவச மருத்துவக்காப்பீட்டுத்திட்டங்களை வாரி வழங்குவதேன்? ஓட்டு வங்கிக்காகவா? இல்லை… வருமானத்தின் பங்குக்காகவா? வருடத்திற்கு 800 கோடிக்கும் மேல் பிரிமியமாக கட்டப்படும் மக்களின் வரிப்பணம் நிஜமாகவே மக்களுக்கு உபயோகமாகிறதா இத்திட்டத்தில்? நிச்சயமாக சந்தேகம்தான்!. வருடாவருடம் உங்களுக்கு வேண்டப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களுக்கு எங்களின் பணத்தை வாரிவழங்கும் அரசுகளே… உங்களை ஒன்று கேட்கட்டுமா? இவ்வளவு தொகையை ஏதோவொரு நிறுவனத்துக்கு வாரிவழங்காமல் ஏன் அரசே செலவு செய்து இருக்கின்ற அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துவதோடு புதிதாக மருத்துவமனைகள் கட்டுவதற்கும் உபயோகப்படுத்திக்கொள்ளக்கூடாது? வருடாவருடம் இந்தப்பணத்தை இவ்வாறு உபயோகப்படுத்துவதோடு கொஞ்சம் நிர்வாகத்தையும் சீர்படுத்தினால் ஒரு காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகளின் தரம் தனியாருக்கு மேலாக உயர்வதோடு அருகாமையில் மருத்துவமனையே இல்லையேயென்று எந்த மக்களும் கவலைப்படத்தேவையில்லா நிலை நிச்சயம் உருவாகும். அட அதுமட்டுமா, நீங்கள் கூட உயர்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கும் வெளிநாட்டு மருத்துவமனைகளுக்கும் ஓடத்தேவையில்லை அரசியல்வாதிகளே…!

அடுத்து நிதி மற்றும் பொருளாதாரக்கொள்கைகள்…! நமது கருவூலங்களின் இன்றைய நிலையென்ன தெரியுமா? உலக வங்கியில் நாம் வாங்கியிருக்கும் கடன் எவ்வளவு தெரியுமா? நமது பணக்கார முதலாளிகளும், அரசாங்க(ஊழியர்களல்ல)ஊழல்வாதிகளும், வெள்ளையும் சொள்ளையுமாய் எப்போதுமே யோக்கியர்கள் போல திரியும் நமது அரசியல்வாதிகளும் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியிருக்கும் கறுப்புபணத்தின் அளவென்ன தெரியுமா? ஏற்கனவே ஏழைகளை சோம்பேறிகளாக்கி மூளைகளை மழுங்கடித்து உருப்படியில்லாத இலவசங்களை வாரி வழங்கி அரசின் கஜானா காலியாகிக்கிடக்கிறது. இதில் போதாக்குறைக்கு அக்கம்பக்கத்து மாநிலங்கள் கூட ஓட்டு வங்கியை குறிவைத்து இதேபோன்ற இலவசத்திட்டங்களை அமல்படுத்தி ஆண்டியாகத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அட… இந்த அரசோடு இலவசங்கள் ஒழிந்துவிடுமென்று பார்த்தால் இனி இலவசத்தையும் அரசியலையும் பிரிக்கமுடியாத அளவுக்கு எல்லா கட்சிகளுமே இலவச அறிவிப்புகளை வாரி வழங்குகின்றன. இலவசங்களாய் வாரிவழங்கி கருவூலங்களை காலிசெய்யும் அரசின் முக்கிய வருமானத்தில் ஒன்று ‘’டாஸ்மாக்’’! ஒருபக்கம் இலவசங்களை வழங்குவதுபோல் வழங்கிவிட்டு இன்னொருபக்கம் டாஸ்மாக்குகள் மூலம் மக்களின் ஜீவனத்தையே காலிசெய்து கொண்டிருக்கிறது நமது அரசுகள். நான் மக்களுக்கு இதை இலவசமாக வழங்கினேன்… அதை இலவசமாக வழங்குவேன் என்று வாய்ச்சவடால் விடும் யோக்கியர்களே… உங்களையொன்று கேட்கட்டுமா? இந்த இலவசங்களையெல்லாம் உங்கள் சொந்த பணத்திலிருந்து கொடுக்கவேண்டியதுதானே? முடியுமா உங்களால்…?. இலவசத்திட்டங்கள் ஒருபக்கம் பல்லிளித்துக்கொண்டிருக்கிறதென்றால் இன்னொரு பக்கம் வரி வதிப்புக்கொள்கைகள்…! அய்யா அரசியல்வாதிகளே… நீங்கள் நிஜமாகவே தமிழை வளர்க்க விரும்பினால் முதலில் தமிழர்களை காப்பாற்றுங்கள். அதை விட்டுவிட்டு உள்ளே எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், திரைப்படத்தின் பெயர் மட்டும் தமிழில் இருந்தால் போதும்… நூறு சதவீத வரிவிலக்கு என்றீர்களே… இது எவ்வளவு முட்டாள்தனமான கொள்கை?. இதனால் அரசுக்கு எவ்வளவு வருவாய் இழப்பு? யாரை திருப்திப்படுத்த இப்படியொரு திட்டம்? திரைப்படத்தின் பெயரை மட்டும் தமிழில் வைப்பதால் தமிழ் எவ்வளவு தூரம் வளர்ந்துவிட்டதென்று எண்ணுகிறீர்கள்? அப்படியே திரைப்படத்தின் பெயரை தமிழில் வைத்தால்தான் தமிழ் வளருமென்றால், தமிழில் பெயர் வைக்காத திரைப்படங்களுக்கு ஒன்றரை மடங்கு கேளிக்கை வரி என்று திட்டம் வகுத்திருக்கலாமே… நல்லவேளையாய் தமிழை வளர்க்கிறேன் பேர்வழியென்று பெயர்ப்பலகையை தமிழில் எழுதும் கடைகளுக்கும் நிறுவனங்களுக்கும் நூறு சதவீத வரிவிலக்கு என்று மற்றுமொரு சூப்பர் டூப்பர் திட்டத்தை அமல்படுத்தாமல், பெயர்ப்பலகையில் கட்டாயத்தமிழ் என்றுமட்டும் சட்டம் நிறைவேற்றி எங்கள் வயிற்றில் பாலை வார்த்ததோடு கஜானாவின் மற்றுமொரு வருமானத்தில் கைவைக்காமல் விட்டீர்களே… அந்தமட்டில் உங்களுக்கு புண்ணியமாய்ப்போக !!! இவையெல்லாம் போக தமிழுக்கென்று கூறி செம்மொழி மாநாடென்று ஒன்று நடத்தி அரசுப்பணத்தை அள்ளி இறைத்தீர்களே…. ஆஹாகா… அமோகம் போங்கள்! பழைய ஆட்கள்தான் அரசு நிலங்களை வளைப்பதிலும் விதவிதமான ஆபரணங்களிலும், வளர்ப்பு மகன் திருமணத்திலும் கஜானாவைக்காலிசெய்தார்களென்றால் இவர்கள் அதைவிட மோசம். (எனக்குத்தெரிந்து வளர்ப்புமகன் திருமணத்திற்கும் செம்மொழி மாநாட்டிற்கும் பெரிய வித்தியாசமிருப்பதாய் தோன்றவில்லை! இரண்டுமே தன் புகழை தானே பறைசாற்றிக்கொள்ள மக்கள் பணத்தை காலிசெய்த நிகழ்வுகளே) இவையனைத்தையும் புறந்தள்ளக்கூடியவை நமது அரசுகளின் சிறப்பு பொருளாதார மண்டலக்கொள்கைகள். விவசாயம், சுற்றுச்சூழல், மக்களின் வாழ்வாதாரங்கள் என்று எதைப்பற்றியும் கவலையின்றி சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும் நமது அரசின் செயல்பாடுகள் மெய்சிலிர்க்கச்செய்யவல்லவை! சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான எல்லா வசதிகளையும் நாட்டின் பின்தங்கிய, விவசாய நிலமல்லாத, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத பகுதிகளில் செய்து கொடுத்தால் பின்தங்கிய பகுதிகளும் பொருளாதார முன்னேற்றம் பெறலாமே பொருளாதார வளர்ச்சியென்பது ஒரு தொழிலை நசுக்கி இன்னொரு தொழிலை உருவாக்குவதல்ல. இன்டஸ்ட்ரியலைசேஸன் எனப்படும் நிறுவனமயமாக்குதலும் விவசாயமும் தராசின் இருபக்க தட்டுகள் போல சமமாய் பாவிக்கப்பட்டால் மட்டுமே எந்தவொரு அரசும் உண்மையான பொருளாதார வளர்ச்சியென்பதை அடையமுடியும். இன்றைய சூழலில் பொதுவாக தனிமனித வருமானமும், மக்களின் வாங்கும் சக்தியும் உயர்ந்திருப்பது போன்ற ஒரு மாயத்தோற்றம் இருந்தாலும் நமது சராசரி தனிநபர் வருமானத்தில் பெரிதாய் மாற்றமொன்றுமில்லை. வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் சதவிகிதத்தில் பெரிதாய் அதிசயங்களொன்றும் நிகழ்ந்து விடவில்லை. மக்களின் வாங்கும் சக்தி வளர்ந்து விட்டதே விலைவாசி உயர்வுக்கு காரணமென்று வெட்கமில்லாமல் பேட்டி கொடுக்கும் அரசியல் கோமாளிகளே… உங்களையொன்று கேட்கட்டுமா?... கொஞ்ச கொஞ்சமாய் நீங்கள் தனியாருக்குத் தாரைவார்த்துக்கொண்டிருக்கும் பெட்ரோலியத்துறைதான் நாட்டின் விலைவாசியிலும், பணவீக்கத்திலும், பொருளாதாரத்திலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் முக்கியப்பங்கு வகிக்கிறதென்பது உங்கள் மரமண்டைகளுக்கு உரைப்பதில்லையா? இல்லை… உரைக்காதது போல் நடிக்கிறீர்களா? மொத்தத்தில் இலவச திட்டங்களை புறந்தள்ளி, வேலைவாய்ப்புகளைப்பெருக்கி, தனியார்மயமாக்கலை நிறுத்தி, பெருநிறுவனங்கள், பணக்காரர்கள், கேளிக்கை சம்பந்தப்பட்ட பணப்புழக்கங்கள் போன்றவற்றிலிருந்து அதிக வரி வசூலும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பயன்பாடுகளில் முடிந்த அளவுக்கு குறைந்த வரி வசூலும் செய்து, ஊழலின்றி ஆட்சிசெய்தால் மட்டுமே நிச்சயமாய் அது பொருளாதாரத்தை நிலைக்கச்செய்யும் நல்லாட்சியாய் அமையக்கூடும்.

அடுத்து சட்டம் ஒழுங்கு…! அதிகம் பேசத்தேவையில்லை. இன்றைய அரசியலில் அடியெடுத்து வைப்பதில் பெரும்பாலானோர் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து மற்றும் சட்டத்துக்கு புறம்பான சம்பாத்தியம் செய்பவர்களே. அரசியல்வாதிகளிடமும் ஆட்சியாளர்களிடமுமே சட்டம் ஒழுங்கு இல்லாதபோது நாட்டில் மட்டும் எங்கிருந்து வரப்போகிறது சட்டம் ஒழுங்கு? இவையில்லாமல் காவல்துறையிலும் அரசியல் புகுந்து அல்லோகலப்படுத்துகிறது. கட்சிப்பாகுபாடும் சாதிப்பாகுபாடும் காவல்துறையிலும் முளைவிட்டு வெகுநாளாகிப் போய்விட்டது!. இன்று காவல்துறையிலிருக்கும் எந்த நேர்மையாளரையும் கேட்டுப்பாருங்கள்… அரசியல் தலையீடின்றி சுயமாய் நடவடிக்கையெடுக்கும் உரிமை அவர்களில் ஒருவருக்குக் கூடயில்லை. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களைக் கைது செய்யவும், அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இவர்களைப் பழி வாங்கவும் காவல்துறை எடுப்பார் கைப்பிள்ளை போல் உபயோகப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. சட்டத்திலும் ஆயிரம் ஓட்டைகளென்று ஆண்டாண்டு காலமாய் பேசிக்கொண்டேதானிருக்கிறோம். ஆனால் எந்த ஆட்சியாளர்களாவது அவற்றை திருத்த நடவடிக்கையெடுத்தார்களா? 1950ம் வருடம் இயற்றப்பட்ட சட்டங்களை அவ்வப்போது சிறு சிறு திருத்தங்கள் மட்டுமே செய்து 2011லும் உபயோகிக்கிறோமே…வேடிக்கையாக இல்லை? எதிர்க்கட்சிகளை பழிவாங்க மட்டும் போடா, தடா, குண்டாஸ் என்று விதவிதமான சட்டங்களை கொண்டுவரும் ஆட்சியாளர்களே… ஏன் மக்களுக்காக எந்தவொரு சட்டதிருத்தங்களும் நீங்கள் கொண்டுவருவதேயில்லை? மக்களுக்காக எந்த சட்டதிருத்தம் கொண்டுவந்தாலும் அது உங்களைத்தான் பாதிக்குமென்பதாலா? வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்பதற்கு சட்டத்தில் வழியில்லையென்கிறீர்கள். கறுப்புபண முதலைகளின் பெயர்களை வெளியிடமுடியாதென்று பகிரங்கமாய் பேட்டியளிக்கிறீர்கள். நீங்கள் என்ன சொன்னாலும் மக்கள் மாக்களாகவும், மௌனவுமாகவேயிருப்பார்கள் என்ற தைரியமா? உங்களுக்கெல்லாம் நிஜமாகவே வெட்கம், மானம், சூடு சொரனை என்று எதுவுமே கிடையாதா? அது சரி… நீங்கள் என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் சாதிக்காகவும், கட்சிக்காகவும், பணத்துக்காகவும் ஓட்டுபோடும் மாக்களிருக்கும் வரை உங்கள் காட்டில் மழைதான்!!! ஏதோ உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய செயல்பாடுகளனைத்தும் எங்கள் வயிற்றில் பாலை வார்ப்பது போலிருந்தாலும் எங்களுக்கு நன்றாகப்புரிகிறது… உங்களது அடுத்த அவசர சட்டதிருத்தம் உச்சநீதிமன்றத்தின் அதிகாரவரம்புகளை குறைப்பதாகக் கூடயிருக்கலாம். நீங்கள் என்ன செய்தாலும் சரி… நிச்சயமாய் ஒருநாள் உங்கள் பெயர்களெல்லாம் சந்தி சிரிக்கத்தான் போகின்றது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எனக்கொரு யோசனை உண்டு. காவல்துறையை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கி நிரந்தரமாய் அவை நீதிமன்றத்தின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் செயல்படச் செய்யலாம். ஆரம்பத்தில் நிர்வாகச் சிக்கல்கள் எழுந்தாலும் போகப்போக நிச்சயமாய் நிர்வாகம் சீர்படலாம். அதே போலத்தான் சட்டங்களனைத்தும் காலத்திற்கு ஏற்றவாறு கடுமையாகவும், பொய்வழக்குகள் போடமுடியாத வகையிலும் சீர்திருத்தப்படல் வேண்டும். என்ன செய்தாலும் ஜாமீனில் வந்துவிடலாமென்ற நிலை மாறி, குற்றம் செய்தால் நிச்சயம் தண்டனையென்ற நிலையை உருவாக்கினால்தான் நமது முன்னேற்றத்திற்கு மூலத்தேவையான சுயவொழுக்கம் உருவாகும்.

ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி, அரசு நிர்வாகம், போக்குவரத்து, மின்சாரம், நெடுஞ்சாலை, சிறுபான்மையினர் நலம், சுற்றுலா என எந்தத் துறையிலுமே எந்த அரசுகளுமே குறிப்பிடத்தக்க திட்டங்களை நிறைவேற்றுவதிலோ இல்லை நிர்வாகச் சீரமைப்பிலோ முனைப்பு காட்டுவதேயில்லை. எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அதில் எந்தத் திருடனை எந்தத் துறைக்கு அமைச்சராய்ப் போட்டால் எவ்வளவு கொள்ளையடிக்கலாமென்று திட்டங்கள் தீட்டுகிறார்களேத் தவிர இவைகளை முன்னேற்ற என்ன செய்யலாம் என்பது பற்றி எவருக்கும் கவலைகளில்லை. கிராமப்புற மேம்பாட்டிற்கு இதுவரையிலான அரசுகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள்தான் என்ன? வெறுமனே மக்கள்தொகைப்பெருக்கத்தின் அடிப்படையில் ஊராட்சிகளை பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் மாற்றுவதால் மட்டுமே என்ன முன்னேற்றங்கள் நிகழ்ந்து விடப்போகின்றன? ஏன் எப்போதுமே எல்லா அரசுகளும் கிராமங்களை மட்டும் மாற்றான்தாய் மனப்பான்மையுடனே நடத்துகின்றன? ஒரு கையில் வெண்ணை மற்றொருகையில் சுண்ணாம்பு என்பது போல் நகரத்திற்கும் கிராமத்திற்கும் பாகுபாடு பார்ப்பது ஏன்? நகரங்களிலும் பெருநகரங்களிலும் முடிந்தவரை முழுநேர மின்சாரம் வழங்கும் அரசுகள் கிராமங்களுக்கு மட்டும் நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் கூட முழுதாய் மின்சாரம் வழங்குவதில்லையே ஏன்? கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உண்டாக்குவதிலும் மேம்படுத்துவதிலும் அரசுகளின் நடவடிக்கைகள் என்ன? நகரங்களின் மீதும் கிராமங்களின் மீதுமான அரசின் பார்வை ஒன்றே என்று எவராலும் வாதிட இயலுமா? உள்ளாட்சி நிர்வாகத் தேர்தல்களையும், உள்ளாட்சி நிர்வாகப் பதவிகளையும் எம்.எல்.ஏ, எம்.பி சீட்டுகளுக்கு நிகராக மாற்றிய சாதனையைத் தவிர இதுவரையிலான அரசுகள் இதில் உருப்படியாய்க் கிழித்ததென்று எதுவுமில்லை!
வருகின்ற அரசுகளனைத்தும் அரசு நிர்வாகத்திற்கென என்ன நடவடிக்கைகள் எடுக்கின்றன? ஒரு அரசோ, அரசு ஊழியர்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்க முடியுமோ அத்தனையும் நமது வரிப்பணத்திலிருந்து வாரி வழங்கி அவர்களை விசுவாசிகளாய் தங்களின் கைப்பாவைகளாய் வைத்துக்கொள்ள முயல்கிறது. மற்றொரு அரசோ அரசு ஊழியர்களின் மேல் எல்லாவித அடக்குமுறைகளையும் அவிழ்த்துவிட்டு அவர்களை தங்களின் அடிமைகளாக வைத்துக்கொள்ள முயல்கிறது. இந்த இருவழிகளிலுமே மக்களுக்கான பயன்களென்பது எதுவுமேயில்லை. அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க இதுவரையிலான அரசுகளின் நடவடிக்கைகள் என்ன? லஞ்சம் கொடுக்காமல் அரசு நிர்வாகத்தில் துரும்பும் அசையாதென்ற நிலை எப்போது மாறப்போகிறது? நிர்வாகச் சீர்கேடுகள் எப்போது சீர்செய்யப்படப் போகின்றன? அரசு நிர்வாகம் மக்களுக்காக பணியாற்றுவதற்காகவே என்ற எண்ணம் எப்போது அரசு ஊழியர்களிடத்தில் விதைக்கப்படப்போகிறது?
போக்குவரத்து மற்றும் மின்சாரம்… அய்யோ பாவம்! ஏனென்றே தெரியவில்லை… யார் ஆட்சிக்கு வந்தாலும் இவைகள் தொடர்ந்து நஷ்டத்திலேயே இயங்கும் மர்மங்கள் மட்டும் புரிபடுவதேயில்லை! தனியார் பேருந்துகள் இலாபத்தில் கொழுத்து வளர்ந்து கொண்டே போகின்றன. அரசுப்பேருந்துகள் நஷ்டத்தின் பிடியில் தேய்ந்து கொண்டே செல்கின்றது. தனியார் பேருந்துகள் எப்படி பராமரிக்கப்படுகின்றன என்பதை பார்த்தாவது போக்குவரத்து கழகங்கள் திருந்தாதா? தேசிய நெடுஞ்சாலைகள் பெரும்பாலும் சுங்கவரிச்சாலைகளாக மாற்றப்பட்டு தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டிருந்தாலும் தரத்தில் பெரிதாய் குறை கூறுவதற்கில்லை. ஆனால் மாநில நெடுஞ்சாலைகள், நகர மற்றும் கிராம உள்வழிச்சாலைகளின் நிலைமை…?அங்கங்கே மேம்பாலங்கள் அமைத்து விட்டால் மட்டும் போதுமா? அட முட்டாள்களே.. முதலில் இந்த சாலைகளின் தரத்தை உயர்த்துங்கள். போக்குவரத்துத்துறையின் பேருந்துகளின் பராமரிப்புக்கான பெருந்தொகை தானாகவே மிச்சமாகத் தொடங்கும். பல மாநிலங்கள் நம்மிடமிருந்து மின்சாரத்தை வாங்கி தங்கள் மக்களுக்கு நியாயமான விலையில் தடங்கலின்றி வழங்குவதோடு இலாபமீட்டியும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் போது நமக்கு மட்டும் ஏனய்யா மின்சார விஷயத்தில் இந்த நிலைமை? மழைக்காலத்தில் எவ்வளவு வெள்ளச்சேதங்கள் வீணடித்துக் கொண்டிருக்கின்றன நம் வாழ்வை? புதிதாய் நீர்த்தேக்கங்களும் நீர் மின் நிலையங்களும் அமைக்கும் எண்ணம் உங்கள் கனவில் கூடத் தோன்றுவதில்லையா? பெருநிறுவனங்களுக்கு மட்டும் பதறியடித்து தடையின்றி மின்சாரம் வழங்கும் உங்கள் மனசாட்சியில் ஒருபோதும் சாமான்யர்கள் குறித்த எண்ணங்கள் நிழலாடுவதேயில்லையா?
இனிவரும் காலங்களிலாவது படித்த இளைஞர்களுக்கு பதவிகளில் வாய்ப்பளியுங்கள். ஆட்சியென்பது உங்கள் வருமானத்திற்கான அதிகாரம் என்ற நிலையை மாறச்செய்யுங்கள். அமைச்சர் பதவிகளை குத்தகைக்கு விடாமல் சுழல்முறை பதவிகளாக்குங்கள். தனியார்மயமாக்கலை முடிந்த மட்டிலும் கைவிட்டு அரசு நிர்வாகங்களைச் சீர்படுத்துங்கள். ஆட்சிப்பதவி பணக்காரர்களுக்கு ஆமாம் போடுவதற்கல்ல, ஏழை மக்களின் மேம்பாட்டிற்கானதென உணருங்கள். இலவசங்கள் ஏழ்மையை ஒழிக்கும் நிரந்தர திட்டங்களல்ல. வேலைவாய்ப்புகளைப் பெருக்கி மக்களை உழைப்பாளிகளாக்குவதே ஏழ்மையை ஒழிக்கும் ஒரே மருந்தெனப் புகட்டுங்கள். கல்வியிலும் மருத்துவத்திலும் தனியார்மயமாக்கலைக் குறைத்துக் கொண்டு அரசாங்கத்தின் கைகளை அகலப்படுத்துங்கள். நிறுவனமயமாக்குதலையும் விவசாயத் தொழில்களையும் இரு கண்களாய் சமமாய் பாவித்து அதற்கான முன்னேற்றத் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துங்கள். அடுத்தவர்களை விமர்சிப்பதையும் குறை கூறுவதையும் நிறுத்தி உங்களுக்கான கொள்கைகளையும் முன்னேற்றத் திட்டங்களை பற்றியுமே பேசுகிற ஆரோக்கிய அரசியலை உருவாக்குங்கள். உங்களால் முடியாத வயதிலும் பதவி மோகத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதை விடுத்து, படித்த தன்னலமற்ற அறிவுஜீவிகளை பதவியில் அமர்த்தத் தொடங்குகள். அரசாங்கம் சீர்பட்டு நிர்வாகத் திறம்பெற்று நிஜமான பொற்கால ஆட்சி அப்போதுதான் அமையத் தொடங்கும்.
இவையெல்லாம் செய்து நல்லாட்சி தருமளவுக்கு இன்றைய அரசியலில் யோக்கியர்கள் எவருமில்லையென்றாலும் நிச்சயமொருநாள் இந்நிலைகள் மாறக்கூடுமென்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை…!!!
------மாறும்வரை தொடரும்…

No comments:

Post a Comment