SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Wednesday, April 6, 2011

தேர்தல்-2011-வாக்களிப்போம் வாருங்கள்…

தேர்தல்-2011-வாக்களிப்போம் வாருங்கள்…
வாக்கு-ஒரு ஜனநாயக கடமை&உரிமைஇன்றைய சூழலில் படித்தவர்களாகிய நம்மில் எத்தனை பேர் வேலை செய்யும் வெளியிடத்திலிருந்து விடுப்பில் வந்து வெய்யிலில் வரிசையில் நின்று வாக்களிக்கத்தயாராக உள்ளோம்? நமக்கு வாக்களிக்கும் வயது வந்ததிலிருந்து இதுவரை வந்த தேர்தல்கள் எத்தனை… அதில் நாம் எத்தனை முறை வாக்களித்துள்ளோம்? என்பதையெல்லாம் ஒரு முறை சுயபரிசோதனை செய்துவிட்டு தொடர்ந்து படிக்கலாம்!

முதலில் நம்மனைவருக்கும் தெரிந்த ஒரு சின்ன செய்தி-உதாரணமாக வரும் தேர்தலில் 60% வாக்குகள் பதிவாவதாக வைத்துக்கொள்வோம். அதில் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறுகின்ற ஒரு கட்சியோ இல்லை ஒரு கூட்டணியோ ஆட்சியைக்கைப்பற்றி நம்மை ஆளப்போகிறவர்கள் ஆவார்கள். இது வேடிக்கையாக இல்லை?

வெறும் 30% வாக்குகளை பெற்றவர்கள் மீதியிருக்கும் 70% மக்களையும் சேர்த்து 100% மக்களை ஆளப்போகிறார்கள்! வேட்பாளர்கள் யோக்கியமில்லை… கட்சிகள் சரியில்லை என்று காரணங்களை அடுக்கும் நண்பர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது ஆரோக்கியமான ஜனநாயகம் வேண்டுமென்றால் முதலில் மாறவேண்டியதில் தலையாயது வாக்களிக்கும் சதவீதம்தான். யோக்கியமான தன்னலமற்ற படித்த வேட்பாளர்கள் வேண்டும்தான்… இல்லையென்று என்னால் மறுக்க இயலாது. அது எப்போது எப்படி நடக்கும் என்பது கட்டுரையின் பின்பகுதியில் தெரியவரும்.

கக்கன் மற்றும் காமராசர் பற்றி நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் நன்மாறன், வெற்றிசெல்வி போன்ற ( ஏதோ 1950ம் வருட ஆட்களோயென்று எண்ண வேண்டாம் 21ம் நூற்றாண்டு மனிதர்களே! ) சட்டசபை உறுப்பினர்களைப்பற்றி எத்தனை பேருக்குத்தெரியும்? இவர்கள் சட்டசபை உறுப்பினர்களாகயிருந்தும் இன்றும் வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டு சாதாரண பேருந்தில் பயணித்து எம்.எல்.ஏ என்ற எந்தவித சுவடுமின்றி மக்கள் தொண்டாற்றி வருகிறார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இவர்களைப்போன்ற எளிமையானவர்கள் இன்னும் சிலரும் இருக்கிறார்கள்!

நாம் இந்த கட்டுரையை மேற்கொண்டு தொடருமுன் நாம் செய்ய வேண்டிய முக்கிய வேலை- இது போன்ற எளிமையானவர்களை தங்களின் பிரதிநிதிகளாய் தேர்ந்தெடுத்த அந்தந்த தொகுதி மக்களுக்கு நம் சிரம் தாழ்ந்த வணக்கங்களை உரித்தாக்குவோம்.

வெறும் உள்ளாட்சி பிரதிநிதித்தேர்தலுக்கே இலட்சங்களை செலவு செய்து பதவிக்கு வந்தவுடன் அமைச்சர் பெருமக்கள் போன்ற பில்ட்அப் உடன் வலம் வந்து கோடிகளைத்திருடிச்சேர்க்கும் ஈனப்பிறவிகளுக்கு மத்தியில் இது போன்ற மக்கள் சேவகர்கள் இன்றுமிருக்கிறார்களென்றால் இது வியக்கத்தகு விஷயமே! ஆனால் ஒரு நிதர்சனமான உண்மை என்ன தெரியுமா? நன்மாறன், வெற்றிசெல்வி போன்றோர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட இடம் கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் நம்மக்கள் அது போன்ற வேட்பாளர்களை எத்தனை தொகுதியில் வெற்றி பெறச்செய்வார்கள்? என்பதெல்லாம் பதில் கணிக்கயியலா கேள்விகள்….எதனால் அப்படி?.......

ஏனென்றால் இன்றைய சூழலில் வாக்களிப்போர்களில் பெரும்பான்மையானோர் அரசியல் சாதி போன்றவற்றை அடிப்படையாகக்கொண்ட அடிமட்டத்தொண்டர்களே! அவர்கள் வேட்பாளர்களின் தராதரம், நேர்மை, தகுதி என எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. அவர்களின் வாக்குகள் பெரும்பாலும் வேட்பாளர்களின் சாதி மற்றும் கட்சியின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. 100% வாக்களிப்பு என்ற அதிசயம் ஆரம்பமானாலே இந்தியாவின் அரசியல் சுத்தப்படுத்தப்பட்டு எதிர்காலம் உறுதிப்படுத்தப்படும். கட்டாய வாக்களிப்பை சட்டமாக்கலாமே? என்று நீங்கள் கேட்கலாம். அதில் அரசியல்வாதிகள் தவிர பெரும்பாலானோர்க்கு நிச்சயம் உடன்பாடிருக்கும். ஆனால் அப்படியொரு சட்டத்தை நமது அரசியல்வாதிகள் நிறைவேற்றுவார்களென்று நம்பினால் நம்மைப்போன்ற அப்பாவிகள் வேறுயாருமில்லை! ஆகவே விழிப்புணர்ச்சியினால் மட்டுமே 100% வாக்களிப்பை சாத்தியப்படுத்தயியலுமென்பது மறுக்கயியலாத உண்மையாகும்.

ஆயிரம் நெறி தவறியவர்கள் தேர்தலில் ஜெயிக்கட்டும். அந்த நிலை நிச்சயம் ஒருநாள் மாற்றப்படும். ஆனால் ஒரு நேர்மையாளர் கூட தோற்காமலிருப்பது நம் கையில்தானிருக்கிறது.

ஒவ்வொரு நேர்மையாளரின் வெற்றியும் நம்மைப்போன்ற படித்த பகுத்தறிவாளர்களின் வாக்குகளிலேயே அடங்கியிருக்கிறது. எல்லாத்தொகுதிகளிலும் நேர்மையான வேட்பாளர்கள் இல்லாமல் போகலாம். அதற்காக எவனுமே யோக்கியமில்லை… எதற்காக நான் வாக்களிக்கமெண்டுமென்பது மிகத்தவறான வாதமாகும். எப்படியென்கிறீர்களா?... ஒரு சின்ன லாஜிக்… இது வேடிக்கையாகக்கூடத்தெரியலாம். ஆனால் நிச்சயம் நடக்கும்! ஒரு தொகுதியின் வேட்பாளர்களில் ஒருவர் கூட நேர்மையாளரில்லை என்கிற பட்சத்தில் கட்சி சாதி போன்றவற்றைப்புறந்தள்ளி போட்டியிடுபவர்களில் கொஞ்சமாவது பரவாயில்லை ரக வேட்பாளரை வெற்றி பெறச்செய்வோம். இதன் மூலம் வெற்றி பெற்றவர்க்கும் தோற்றுப்போனவர்களுக்கும் தேர்தலில் வெல்ல நேர்மை அவசியமென்ற செய்தி உணர்த்தப்படும். இதன்மூலம் தோற்றுப்போனவர்கள் எதிர்காலத்தில் வெற்றி பெறவும் வெற்றி பெற்றவர் மீண்டும் வெற்றியை தக்கவைத்துக்கொள்ளவும் நேர்மையை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். இவர்களனைவரும் உடனே புத்தராவார்களென்று நான் சொல்லவில்லை.

கூவத்தை சுத்தப்படுத்த வெறும் விவாதங்களாலும் எழுத்துக்களாலும் மட்டுமே முடியுமா?... இல்லை… தேவை நடவடிக்கை! முதலில் கூவத்தில் கலக்கும் கழிவு நீரைத்தடுத்து மாற்று வழிப்படுத்தவேண்டும். இரண்டாவதாக கூவத்தை சுத்தப்படுத்தி தூர்வாரியாக வேண்டும். இறுதியாக மழைநீர் மொத்தமும் கூவத்தை வந்தடைய வகை செய்திட வேண்டும். இதேதான் சாக்கடை எனப்படும் அரசியலுக்கும் நம்மால் கடைபிடிக்கப்பட வேண்டியவை. முதலில் அசுத்தமானவர்கள் தேர்தலில் தோற்கடிப்பட்டு அரசியல் அவர்களுக்கு நிரந்தரமில்லையென்ற நிலையை உண்டாக்கி அவர்களை மாற்று வழிப்படுத்தவேண்டும். இரண்டாவதாக நேர்மையாளர்கள் ஒருவர் கூட தோற்கடிக்கப்படாத நிலையை ஏற்படுத்தியாக வேண்டும். இறுதியாக படித்தவர்கள், பகுத்தறிவாளர்கள், நேர்மையாளர்களுக்கு மக்கள் தங்களை ஏற்றுக்கொண்டு ஜெயிக்க வைப்பார்களென்ற நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்கள் மொத்தமும் அரசியலை வந்தடைய வகை செய்திட வேண்டும்.

இவ்வாறான வழிவகையினால் மட்டுமே படித்த தன்னலமற்ற நேர்மையாளர்கள் அரசியலுக்கு வருவதும் ஆட்சிக்கு வருவதும் நடக்கும் (நான் கட்டுரையின் ஆரம்பத்திலேயே படித்த தன்னலமற்ற நேர்மையாளர்கள் அரசியலுக்கு வருவது எப்போது எப்படி நடக்குமென்பது கட்டுரையின் பின்பகுதியில் தெரியவருமென்றிருந்தேன்). எனது விவாதங்கள் இப்போது உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்குமென்று நம்புகிறேன்.

ஆதலால் வருமான வரி கட்டுவதைத்தவிர நம் தாய்நாட்டுக்கு நாம் இதுவரை செய்தது என்னவென்று ஒருகணம்… ஒரேயொரு கணம்… மனப்பூர்வமாய் சிந்தித்து நான் ஒருவன் ஓட்டு போடாததால் என்னவாகிடப்போகிறதென்ற எண்ணத்தை மாற்றி சிறுதுளி பெருவெள்ளம் போல் நம் ஒவ்வொருவரின் நடுநிலையான வாக்கும் நம் தேசத்தின் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை கொண்டதென்பதை உணர்ந்து வேண்டா விவாதங்களையும் காரணங்களையும் தவிர்த்து தவறாமல் வாக்களியுங்கள் நண்பர்களே….

மீண்டும் கூறுகிறேன்…. வாக்களிப்பது ஜனநாயக உரிமை மட்டுமல்ல. நம் தேசத்திற்கு நாம் செய்யும் சேவையும்… நாம் செய்ய வேண்டிய கடமையும்கூட…!
ஜெய்ஹிந்த்!

No comments:

Post a Comment