SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, April 19, 2011

மே13…? ’ஜெ’க்கு கிட்டினால்…? கப்பித்தனமாயிருக்கு… போய் புள்ள குட்டிய படிக்கவைங்கய்யா…!

மே13…? ’ஜெ’க்கு கிட்டினால்…?
கப்பித்தனமாயிருக்கு… போய் புள்ள குட்டிய படிக்கவைங்கய்யா…!சட்டமன்றத் தேர்தல் முடிந்து விட்டது. நாம் எல்லோரும் வாக்களித்து விட்டு எவருக்கு ஆட்சி ஆமைக்கும் பெரும்பான்மை கிடைக்கப்போகிறது என்று ஆவலோடு காத்திருக்கிறோம். நாம் மட்டுமல்ல… அரசியல் கட்சிகளும் கூட ஒரு வித டென்ஷனுடனேயே காத்துக் கொண்டிருக்கின்றன.

என்ன நடக்கக்கூடும் மே 13க்கு பிறகு?... எந்த கட்சி ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை பற்றிய கருத்துக் கணிப்போ… இல்லை ஜோதிடக் கட்டுரையோ இல்லை இது. ஒருவேளை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடத்திக் காட்டவிருக்கிறார் என்பதை பற்றிய முன்னுரை மட்டுமே இது.

ஒருவிதத்தில் வரலாறுகளைப் புரட்டும்போது இந்திராகாந்திக்குப் பிறகு இந்திய அரசியலில் அவருக்கு நிகரான இரும்புப் பெண்மணி ஒருவர் உண்டென்றால் அது ஜெயலலிதாவாக மட்டுமே இருக்கமுடியும் என்று தோன்றினாலும், தான்தோன்றித்தனமான தலைக்கர்வ முடிவெடுப்பதிலும் அவருக்கு நிகர் அவர் மட்டுமே என்பதை மறுப்பதற்கில்லை. அவருடைய பழைய ஆட்சியின் பக்கங்களை புரட்டினால் ஒருசில கசப்புகளைத்தவிர பெரும்பாலானவை அவருடைய நிர்வாகத்திறமையை பளிச்சிடச் செய்யவே செய்கின்றன.

தமிழக மக்களுக்கு ‘ஜெ’யிடமிருந்து (ஓரளவாவது)நல்லாட்சி கிடைக்கப்பெற வேண்டுமெனில் அது தேர்தல் முடிவில்தான் அடங்கியிருக்கிறது. அ.தி.மு.க தனிப் பெரும்பான்மை பெறாமல் கூட்டணிக் கட்சிகளின் தயவுடன் ஜெ ஆட்சியில் அமர்ந்தால்… அவரது தலைக்கர்வ முடிவுகளுக்கு மூக்கணாங்கயிறு கட்டப்பட்டு அவரது நிஜமான நிர்வாகத்திறமை மட்டுமே பளிச்சிடக்கூடும். ஆனால் அதை என்றுமே ஜெ விரும்பாததால்தான் தனிப்பெரும்பான்மை ஆசைக்காக வை.கோவை பலிகடாவாக்கினார்.

சரி… ஒருவேளை மே13… ‘ஜெ’வுக்குத் தனிப்பெரும்பான்மையை வழங்கினால்… ஆஹா... அப்போதானே ஆரம்பிக்கும் விளையாட்டே…!

அடுத்த ஐந்தாண்டுகள் ‘ஜெ’ யின் தனிப்பெரும்பான்மை நடத்தப் போகும் நாடகங்கள் என்னென்னவாக இருக்கும்?...

# பதவிப் பிரமாணத்திற்கு முன்னமே… கூட்டணிக்கட்சிகள் அனைத்திற்கும் அல்வா வழங்கப்படும் ( முத பாலே… சிக்ஸரா…?!)

# ஆட்சியில் அமர்ந்ததும் முதல் வேலை காவல்துறையில் ‘ஜெ’ விசுவாசிகள் முன்னுக்கு கொண்டுவரப்படுவார்கள்.

# கருணாநிதி, அவரது குடும்பத்தினர், தேர்தலில் தி.மு.க.விற்கு ஆதரவாகச்செயல்பட்டவர்கள், இவையனைத்துக்கும் மேலாக தி.மு.க.விற்கு தாவிய முன்னாள் அ.தி.மு.க.வினர் ஆகியோர் மீது எந்தெந்த வழிகளில் என்னென்ன வழக்குகள் பதிவுசெய்து பழிவாங்கலாம் என்று சட்டவல்லுனர்களைக் கொண்டு ஆராயப்படும் (பல பகல் நேரக் கைதுகளும் சில நள்ளிரவு கைதுகளும் அரங்கேறக்கூடும்).

# அனைத்துவித ஒப்பந்தப் பணிகளிலும் அ.தி.மு.க.வினர் முன்னுக்கு நிறுத்தப்பட்டு கட்சியின் நிதி வளர்ச்சிக்கான கமிஷன் தொகைகள் நிர்ணயிக்கப்படும் (மாநில நிதி வளர்ச்சி? அது கெடக்கு கழுதை!!!).

# டாஸ்மாக் நிர்வாகத்தில் சசிகலாவின் ஆதிக்கம் அரங்கேறத்துவங்கும் (அப்பவும் உருப்படியான ஒரிஜினல் சரக்கு கிடைக்கப்போறதில்ல…!).

# அங்கங்கே சூட்டப்பட்ட கருணாநிதியின் பெயர்களும், படங்களும் மாற்றப்படும் (அ) நீக்கப்படும் (அதானே… அதுக்குத்தானே மக்கள் நம்மகிட்ட ஆட்சியக் குடுத்திருக்காங்க!).

# கருணாநிதியால் துவங்கப்பட்ட திட்டங்களில் சிலவை பாதியில் நிறுத்தப்படும். சிலவை சில மாறுதல்களுடன் ஜெ புகழ் பாடும் வகையில் தொடர்ந்து நடத்தப்படும் ( பின்னே… நம்ம ஆளுங்கட்சின்னு எப்படி நிரூபிக்கறது?).

# தலைமைச் செயலக கட்டிடங்களிலும் ‘ஜெ’வின் ஆஸ்தான ஜோதிடர்களின் ஆலோசனைப்படி பல மாற்றங்கள் நிகழ்த்தப்படும் (வெளங்கிரும்ம்ம்ம்…).

# மத்தியில் காங்கிரசுடன் கருணாநிதியின் உறவை முறியச்செய்து மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வுக்கு பதிலாக அ.தி.மு.க.வை இடம் பெறச்செய்ய எல்லாவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் (இது வேறயா….?)

# மே13க்குப் பிறகாவது மே18ல் முடிந்து போன வாழ்வு மீட்கப்படும் என்று நம்பிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு கருணாநிதியைப் போல் கடிதம் எழுதி ஆதரவளிக்காமல் ‘ஜெ’யின் அறிக்கைகளால் ஆதரவளிக்கப்படும் (அடப்பாவிகளா… அவரு கடிதம்னா நீங்க அறிக்கையா? அவ்வளவுதான் வித்தியாசமா… அவ்வ்வ்வ்ஊஊஊஊ).

# அரசு கஜானாவின் நிதி நிலைமையைக் காரணம் காட்டி, தி.மு.க ஆட்சி மக்கள் பணத்தை வீணடித்துக் கஜானாவைக் கடனுக்குள் தள்ளியதாகக் கூறி, பெரும்பான்மையான இலவசத்திட்டங்கள் முதல் மூன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தப்படக்கூடும் (இலவசங்கள் ஒழியக்கூடுமென்று நிம்மதிப்பெருமூச்சு விடாதீர்கள். ஆட்சியின் கடைசி ஒன்றரை ஆண்டுக்கு ஓட்டு வங்கிக்காக மீண்டும் வேகமெடுக்கும் இலவசத்திட்டங்கள்!!).

# நிதி நிர்வாகத்தை மேம்படுத்தும் காரணத்துடன் பெரும்பாலான விலையேற்ற நடவடிக்கைகள் அரங்கேற்றமாகும். முக்கியமாகப் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படும் (ஆஹா…இப்பவே கண்ண கட்டுதே..).

# அரசு கேபிள் டி.விக்கான நடவடிக்கைகள் மீண்டும் முழு வேகமெடுக்கக் கூடும் (மறுபடியும் மக்கள் பணம் நாசமாகப் போகுதா..?).

# ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்தார்கள், கந்துவட்டிக்காரர்கள், கவுன்சிலர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு சட்டம் ஒழுங்கு முழுவீச்சில் அமல்படுத்தப்படும் (கருமம்… இந்த லிஸ்ட்டுலே கவுன்சிலர்களும் வர்ற அளவுக்கு நாறிப்போயிக்கெடக்கு நம்ம அரசியல்!!).

# எவ்வளவுதான் மக்கள் வரிப்பணத்தில் சலுகைகளையும், சம்பளத்தையும் வாரி வழங்கினாலும்… கிம்பளம் வாங்காமல் துரும்பைக்கூட அசைக்காத அரசு ஊழியர்களின் சலுகைகளில் ஆப்புகள் ஆரம்பமாகக் கூடும் (டேய் மாப்ளேய்… இனி ஒனக்கு ஆப்புதான்டி..).

# மணல் குவாரிகள் தி.மு.க.வினரிடமிருந்து அ.தி.மு.க.வினர் கைவசம் கொண்டு வரப்பட்டு ஓரளவுக்கு நியாயமான கட்டுக்கோப்புடன் நடத்தப்படக்கூடும். (இல்லை…ஜெ கொஞ்சம் மனது வைத்தால்… மணல் குவாரிகள் முழுவதுமாய் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படக்கூடும்..ம்ம்ம்ம் கனவுதான்!).

# காவிரி, பாலாறு மற்றும் முல்லைப்பெரியாறு விவகாரங்களில் பல அதிரடி முடிவுகள் அமல்படுத்தப்படலாம் (ஹய்யோ… ஹய்யோ…)

# மழை நீர் சேகரிப்பு மற்றும் தொட்டில் குழந்தைகள் திட்டங்கள் மீண்டும் முழு வீச்சில் அமல்படுத்தப்படலாம் (நல்லதுதான்).

# அங்கங்கே தி.மு.க.வினருக்குப் போட்டியாக, அ.தி.மு.க.விலும் கல்வித் தந்தைகள் உருவாகத் தொடங்குவர் (அப்போ அரசுக்கல்லூரிங்க… அரோகராதானா?)

என்னய்யா இது? பழைய ஆட்சிக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசமே இல்ல… மக்களுக்கு அந்த அம்மா என்னய்யா பண்ணுவாங்க…? அதச்சொல்லு முதல்லன்னு நீங்க கேக்கிறது எனக்குப் புரியுது. உங்களுக்கெல்லாம் விவேக்கோட சினிமா டயலாக்தான்..! படிக்காதவன் படத்துல விவேக்க பாத்து அவரோட அல்லக்கை ஒருத்தர் கேக்கிற டயலாக் நியாபகமில்லையா உங்களுக்கு?

‘’பாஸ், உங்களுக்காக இவ்வளவு கூட்டமா வந்திருக்கிற மக்களுக்கு என்ன செய்யப்போறீங்க பாஸ்?
இதுவரைக்கும் உங்களுக்கு நான் என்ன செஞ்சிருக்கேன்டா?
ஒன்னும்ம்ம்ம் இல்ல…..
அதேதான் அவங்களுக்கும்…!!!’’

இதான்யா நாமெல்லாம் காத்திட்டிருக்கிற மாற்றம். இத யாராவது மறுக்க முடியுமா? புரிஞ்சுக்கோங்க… மே13 நமக்கு எந்த விதத்திலயும் பிரயோஜனமில்லை…

ஆட்சி வேணா மாறலாம்… ஆனா காட்சிகள் பெருசா மாறப்போறதில்ல…!

கப்பித்தனமா யோசிச்சிட்டு இருக்காம போய் புள்ள குட்டிய படிக்க வைங்கய்யா…!

2 comments:

  1. நம்மவர்களுக்கு உண்மைநிலை என்பதை பற்றி நினைப்பே இருபதில்லை. இது, இல்லையென்றால் அது இப்படித்தான் இருக்கிறோம். ஆனால் கூச்சலும் டமாரம் அடிக்கும் சத்தமும் காதை கிழிக்கும்.

    ReplyDelete
  2. neenga sonnadu kandippa nadakum

    ReplyDelete