SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Saturday, April 30, 2011

பெத்த மனசும், தனிமைப் பரிசும்…ஒவ்வொரு வருட கோடை விடுமுறைக்கும்
காத்திருப்பது குழந்தைகள் மட்டுமல்ல,
பெரியவர்களாகிய நாங்களும்தான்!

எங்கள் குழந்தை படிக்கச்சென்றது
முதல் பிரிவு;
தூரதேச பணிக்குச் சென்றது
இரண்டாம் பிரிவு;
மூன்று முடிச்சால் விலகிப்போனது
மூன்றாம் பிரிவு;
அவர்கள் வாரிசுகளோடு
நாங்கள் வாழ வழியின்றிப்போனது
நான்காம் பிரிவு;

எங்கள் பெற்றோரிடம்
அவர்கள் வளர்ந்தபோது
ஒருபோதும் நினைத்ததில்லை
அவர்கள் குழந்தை
எங்களிடம் வளராதென்று;

அங்கே டெலிபோனில் வளரும்
பாட்டி, தாத்தா பாசமும்
இங்கே புகைப்படத்தில் சிரிக்கும்
குழந்தைகள் மீதான ஏக்கமும்
வித்தியாசமாய் தோன்றிய காலத்தில்
கோடைகால விடுமுறைகளையெண்ணி
மீதமுள்ள நாட்களை நகர்த்த
கற்றுக்கொண்ட வாழ்க்கையைத் தவிர
வேறொன்றும் செய்வதற்கில்லை;

பிள்ளைகள் பிறக்கும் முன்
நாங்கள் வாழ்ந்த தனிமை மகிழ்ச்சி
எப்போதும் உணர்த்தியதில்லை
இப்படியொரு தனிமையிருப்பதை!

வருடத்திற்கொருமுறை பெற்றோரை
தங்களுடன் கூட்டிச் செல்லும்
எங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை,
நாங்கள் ஆசையாய்ப்போவது
அந்நிய தேசத்தைச் சுற்றிப்பார்க்க அல்ல-எங்கள்
பேரக்குழந்தைகளுக்கு நாங்கள்
அந்நியர்களாய் ஆகிவிடக்கூடாதென்றே!

காலச்சுழற்சியின் வேகமாற்றத்தில்
பூமிப்பந்து கைக்குள் சுருங்கிப்போனது
அவர்கள் குற்றமுமில்லை;
வயோதிக நாட்களின் இறுதிக்காலத்தில்
வாழ்க்கை பந்தங்கள் விலகிப்போனது
எங்கள் தவறுகளுமில்லை;
விதியென்று சொல்லி ஒதுக்கி
சொந்தங்களின்றி வாழ்ந்து சாக
நெஞ்சில் உரமுமில்லை;
ஒருவருக்கொருவர் குழந்தையாய் மாறி
வாழ்ந்து தொலைப்பதுமின்றி
வேறொரு வழியுமில்லை;

கண்கள் பூத்திருக்க
நாங்கள் காத்திருப்பது
வருடத்திற்கொருமுறை வரும்
வசந்த நாட்களுக்காகவே;
எங்கள் வீட்டுக்கு
அவர்கள் வருவதும்,
எங்களைக் கூட்டிச்சென்று
அவர்களோடு வைப்பதும்,
எதுவாயினும் இன்பமே
குழந்தைகளோடு வாழ்வதென்றால்;
தீபாவளி, பொங்கல்
இன்ன பிற பண்டிகையெல்லாம்
எங்கள் பேரப்பிள்ளைகளோடு
நாங்கள் வாழும் நாட்கள்தான்;

எப்போதும் நாங்கள் ஏங்கித்தவிப்பது
ஒற்றைவரிக் கவலையோடுதான்…
எங்கே அடுத்த விடுமுறை
வரும் முன்னரே
மூச்சு நின்று வாழ்க்கை
முடிந்துவிடக் கூடுமோ?
பேரப்பிள்ளை முன்நடந்து
நெய்ப்பந்தம் பிடிக்குமா?-இல்லை
பெற்ற பிள்ளை மட்டுமே
பறந்து வந்து திரும்புமா?

ஒவ்வொரு வருட சந்திப்பின்போதும்
உணர்த்த நினைத்தும் மௌனம் காத்து
சொல்லாமலே விட்டு வருகிறோம்
நாங்கள் பெற்ற பிள்ளைகளிடம்…
‘’இன்று நாங்கள்…
நாளை நீங்கள்;
எப்போதாவது நேரம் கிடைத்தால்
இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்,
நாளை இந்த நிலை வரும் நாளில்
நெஞ்சில் கலக்கமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்’’;

Friday, April 29, 2011

ஆடு நனைவதாக ஓநாய்க் கூட்டம் ஒப்பாரி…இலங்கைத் தமிழர் மீது தி.மு.க திடீர் கரிசனம் ஏன்?

ஆடு நனைவதாக ஓநாய்க் கூட்டம் ஒப்பாரி…
இலங்கைத் தமிழர் மீது தி.மு.க திடீர் கரிசனம் ஏன்?


சமீபத்தில் நடந்த தி.மு.க வின் உயர் நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் கனிமொழி விஷயம் மட்டுமன்றி இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகவும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. உயர் நிலை செயல் திட்டக்குழு என்ற பெயரில் கருணாநிதி என்ற தனிமனிதர் தனக்காக நிறைவேற்றிக்கொண்ட அந்தத் தீர்மானத்தின் சில பகுதிகள்;- கனிமொழி எனது மகள் என்பதால் மட்டுமே இந்த வளர்ச்சியை அடைந்து விடவில்லை. கட்சியின் அடிமட்டத்தொண்டர் என்ற நிலையிலிருந்தே இந்த வளர்ச்சியை எட்டியுள்ளார். வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி சமுதாயத்திற்கும், சங்கமம் விழா மூலம் கலைக்கும் அவர் ஆற்றிய அரும்பணிகள் அனைவருக்கும் தெரியும். எவ்வளவோ இன்னல்களை இன்முகத்தோடு ஏற்றுக் கொண்ட நான் எந்தவொரு சூழ்நிலையிலும் கட்சியைக் காட்டிக் கொடுக்கும் செயலைச் செய்யமாட்டேன். இனி வரும் சூழலில் கட்சி கனிமொழிக்காக அவர் ஒரு தி.மு.க உறுப்பினர் என்ற முறையில் அவருக்குப் பின்னால் பக்க பலமாய் நிற்கும். அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தமைக்காக இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கி இலங்கைக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு சமஉரிமை பெற்றுத்தர இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இப்படியாக நீளும் அந்தத் தீர்மானத்தில் எதனால் நுழைக்கப்பட்டது இலங்கை விவகாரம்? பழுத்த அரசியல் தந்திரியான கருணாநிதிக்கு திடீரென்று இலங்கைத் தமிழர் நலனில் அக்கறை பொத்துக்கொண்டு வருவதற்கு என்ன காரணங்கள் இருக்கக்கூடும்?

இலங்கையில் கொத்து கொத்தாக நம் இனம் மாண்ட போது உண்ணாவிரத நாடகமும் உடல் நிலை சரியில்லையென்று ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்ட நாடகமும் நடத்தியவர் இந்தக் கருணாநிதி. அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸை எதிர்த்து மூச்சு கூட விடாமல், இதயத்தைக் கழற்றி வைத்து விட்டு நாற்காலியை மட்டும் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட உண்மைத்தமிழன் என்று வரலாற்றில் இடம் பிடித்த வெட்கம் கெட்ட மாமனிதர் இவர். தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வல மக்கள் எழுச்சியை மத்திய அரசுக்காக மண்ணாக்கிய புண்ணியவான். எண்ணற்ற இன உணர்வாளர்களின் தீக்குளிப்புகளுக்கு பைத்தியக்காரப் பட்டம் கட்டிய தமிழினத்தலைவர்! ரத்த சொந்தங்கள் அங்கு வெந்து மடிகையில் இங்கு தனக்குத்தானே பல பாராட்டு விழாக்களை நடத்தி மகிழ்ந்த பாசக்காரத்தலைவன். இனமக்கள் மரணத்திலும் தம்மக்கள் பதவிக்காக டெல்லிக்கு பறந்த முதுகெலும்பைத் தொலைத்த மூத்த அரசியல்வாதி. தமிழர்களின் சமாதி மீது செந்தமிழ் மாநாடு நடத்திய தமிழ்க் கடவுள்! தமிழக மீனவர்களே சாகடிக்கப்பட்ட போதிலும் மத்திய அரசுக்கு எதிராக மௌனம் மட்டுமே காத்த இறையாண்மைக் காவலர். தமிழினச் சமாதிகளை இலவசங்களைக் கொண்டு மூடநினைத்த முற்போக்குச் சிந்தனையாளர். தனது குடும்ப நலனுக்காக மட்டுமே கட்சியை காங்கிரசின் காலில் அடகு வைத்த சுயமரியாதைச் சிங்கம்!

இப்போது மட்டும் எங்கிருந்து முளைத்தது திடீர் ஞானோதயமென்று தெரியவில்லை. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல இந்த உதயசூரியர்களின் திடீர்ப்பாசம் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லாத கண்துடைப்பே என்றாலும் இதன் பின்னனி குறித்து தெரிய முயல்வதில் தவறேதுமில்லை.

இலங்கைப்போரின் இறுதிக்கட்டச் சம்பவங்களாய் சமீபத்தில் வெளியான ஒரு செய்தியில் கருணாநிதி மற்றும் கனிமொழியின் கிழிந்து போன முகத்திரைகள் மேலும் கிழித்து கந்தலாக்கப்பட்டிருந்தது. இறுதி நேரத்தில் நடேசன் எத்தனையோ முறை கருணாநிதியையும் கனிமொழியையும் தொடர்பு கொண்டு அப்பாவித்தமிழர்கள் கொல்லப்படுவதை விளக்கிக்கூறி அதை தடுத்து நிறுத்த முயலுமாறுக் கெஞ்சியும் இவர்கள் பதவிக்குப் பங்கமின்றி காத்துக் கொள்ள மத்திய அரசுக்கு ஆதரவாக வாய் மூடி மௌனிகளாய்ப் போன இனத்துரோகம் வெளியிடப்பட்டிருந்தது. தனது தமிழினத் தலைவர் முகமூடி கிழிந்த போதிலும் மகள் கனிமொழிக்காவது சங்கமம் போன்ற ஏமாற்று வேலைகள் மூலம் தமிழினக் காவலர் அடையாளத்தை ஏற்படுத்தலாமென்ற கனவில் இருந்த கருணாநிதிக்கு இந்த சமீபத்திய செய்தி நிச்சயம் நிம்மதியைக் கெடுத்திருக்கக்கூடும். இந்நிலையில் 2ஜி அலைவரிசை வழக்கிலும் கனிமொழிக்கு கைவிலங்கு நெருங்கத் தொடங்க அவசரமாய் கூட்டப்பட்டிருக்கிறது தி.மு.க வின் உயர்நிலை செயல் திட்டக்குழு.

கனிமொழிக்காக கூட்டப்பட்ட இந்த கூட்டத்தில் காங்கிரசை நேரடியாகக் கண்டிக்காமல் நாங்கள் இவ்வளவு நாள் இலங்கை விவகாரத்தில் வாய் மூடி எப்படி உங்களுக்கு ஆதரவாய் இருந்திருக்கிறோம் பாருங்கள். நாங்கள் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் இலங்கை விவகாரத்தை வைத்து உங்களுக்கு குடைச்சல் கொடுக்க முடியும் என்பதை உணர்த்துவதற்காக இப்போது கையிலெடுக்கப் பட்டிருக்கக்கூடும் இலங்கை விவகாரம்.

இனி வரும் தேர்தல் முடிவுகள் ஒருவேளை நம்மைக் கைவிடக்கூடும் என்ற எண்ணம் கருணாநிதிக்கு தோன்றியிருக்கலாம். நாம் இவ்வளவு இலவசங்களை வாரி வழங்கியும் தேர்தல் முடிவுகள் நமக்கு எதிராய்ப் போகுமென்றால் என்ன காரணமிருக்கக்கூடும் என்று சிந்தித்த கருணாநிதிக்கு ஒருவேளை இலங்கை விவகாரம்தான் காரணமாயிருக்குமென்று புரிந்து போயிருக்கக்கூடும். அதனால் இந்த முறை தோற்றால் கூட அடுத்த முறை ஆட்சியைப் பிடிக்க உதவுமென்று இலங்கை விவகாரத்தை தொட்டிருக்கக்கூடும்.

ஒருவேளை 2ஜி விவகாரம் வில்லங்கமாய்ப் போனால் தமிழக மக்கள் ஆதரவு தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் தமிழினத்தலைவர் முகமூடியால் மட்டுமே சாத்தியமென்று திட்டமிட்டிருக்கலாம்.

ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நிச்சயம் பல காட்சி மாற்றங்களும் நிகழுமென்பது கருணாநிதிக்கு நன்றாய்த் தெரியும். காங்கிரசிலிருந்து தி.மு.க கழற்றி விடப்பட்டு அ.தி.மு.க வும் காங்கிரசும் உடன்பாடு செய்து கொள்ளக்கூடுமானால் அப்போது தமிழகத்தில் காங்கிரசுக்கு இடையூரளிக்க இலங்கை விவகாரத்தால் மட்டுமே முடியும். ஆனால் அப்படி ஒரு சூழலில் திடீரென்று இலங்கை விவகாரத்தை கையில் எடுத்தால் அது சந்தர்ப்பவாத அரசியலாக விமர்சனங்களை எழுப்பக்கூடுமென்பதால் இப்போதிருந்தே கொஞ்சம் தொட்டுவைக்கலாம் என்று இலங்கை விவகாரத்தை கையிலெடுத்திருக்கலாம்.

இத்தனை நாள் மௌனம் காத்த மனசாட்சி இப்போது ஒருவேளை சுட்டிருக்கக்கூடும். சரி… செய்யவேண்டிய நேரத்தில் செய்யாமல் போனாலும்கூட இப்போது மீதமிருக்கும் மக்களையாவது காப்பாற்ற நம்மால் ஆன முயற்சிகள் செய்து பார்ப்போம் என்று எண்ணியிருக்கலாம்.

நாமும் நமது குடும்பமும் தமிழக மக்களின் பணத்தை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்குச் சுரண்டியிருக்கிறோம். ஆட்சியில் இருக்கும் வரைதான் தமிழர்களுக்காக உருப்படியாய் எதுவும் செய்யவில்லை. ஆட்சியிலிருந்து இறங்கும் நேரத்திலாவது பணத்தை திருடிய நன்றி உணர்வுக்காக தமிழர்களுக்கு ஆதரவாய் ஒரு தீர்மானமாவது போடுவோம் என்று எண்ணியிருக்கலாம்.

இவை எதுவுமே காரணமில்லையென்றால் அவசரமாகக் கூட்டப்பட்ட உயர்நிலை செயல் திட்டக்குழுவில் மகள் கனிமொழியின் விஷயம் மட்டுமே அலசப்பட்டால் அது மகளுக்காக மட்டுமே கூட்டப்பட்ட கூட்டமாகிவிடும். பின்னர் முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு அல்வா கொடுத்து கடிதம் எழுத முடியாது என்று எண்ணி எதற்கும் இருக்கட்டுமென்று இலங்கைத்தமிழருக்கு ஆதரவாக ஒரு தீர்மானம் நிறைவேற்றி, கனிமொழிக்காக மட்டுமின்றி இலங்கை விவகாரத்துக்காகவும் கூட்டப்பட்ட கூட்டம்போல ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க முயன்றிருக்கலாம்.

எப்படியிருந்தாலும் சரி… என்னவாகயிருந்திலும் சரி… கருணாநிதியின் முகத்திரை கிழிந்த சுயரூபம் கடந்த ஐந்தாண்டுகளில் நன்றாகவே விளங்கியிருக்கும் மக்களுக்கு. எத்தனை எத்தனை நாடகங்கள்? எத்தனை எத்தனை ஊழல்கள்? தமிழ்நாட்டையே தங்களுக்கு மட்டுமே சொந்தமென்று மாற்ற நினைத்த குடும்ப ஆட்சியின் அக்கிரமங்கள்தான் எத்தனை? மனசாட்சியுள்ள எந்த மனிதரும் செய்யாத காரியங்களையெல்லாம் சர்வ சாதாரணமாக செய்தது கருணாநிதியின் தமிழ்த் துரோக ஆட்சி.

இனிவரும் காலங்களில் கருணாநிதியின் புழுகு மூட்டைகளும், நீலிக்கண்ணீர்களும், நாடக காட்சிகளும் அவருடைய கட்சிக்காரர்களால் வேண்டுமானால் சகித்துக் கொள்ளப்படலாம். ஆனால் அதையெல்லாம் நம்புமளவுக்கு இன்றைய தலைமுறையில் எவருமில்லை என்பது எப்போது விளங்கப்போகிறதோ கருணாநிதிக்கு? அய்யா…தாத்தா இது அந்தக்காலமில்லை உங்களது நாடகங்களையெல்லாம் உங்கள் வசதிக்கேற்ப அரங்கேற்றிக்கொள்ள! உங்களது அறிக்கைகளும், நாடகங்களும் ஊடகங்களால் மட்டுமன்றி சாமான்யன்களாலும் வெகு கேவலமாய் விமர்சிக்கப் படுவதெல்லாம் உங்கள் காதுகளில் விழுவதே இல்லையா? இல்லை… விழாதது போல் நடித்துக் கொண்டிருக்கிறீர்களா? போதுமய்யா பேரப்பிள்ளைகள் வரை நாட்டைச் சுரண்ட விட்ட இந்த பொழப்பு! 58 வயதுக்கு மேல் சாதாரண அரசு வேலைக்கே தகுதியில்லை எனும்போது அரசையே கட்டிக்காக்க மட்டும் வயது வரம்பு நிர்ணயிக்காத நமது முன்னோர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான் நீங்கள் இப்படி 80 வயதைத் தாண்டியும் ஆட்சி மோகத்தில் அலைவீர்கள் என்பது! இனியாவது ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுவது போன்ற அசிங்கமான நாடகங்களை அரங்கேற்றி உங்கள் பெயரை நீங்களே கெடுத்துக் கொள்ளாமல் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்ய வழியேதுமுண்டா என்று தேடத்துவங்குங்கள்!

‘’தமிழர்களே… தமிழர்களே… நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாய்த்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம். கவிழ்ந்து விட மாட்டீர்’’. போதுமய்யா சாமி! இனி எங்களுக்கு இல்லை தேவை… உங்களின் சேவை! – நன்றியுடன் உங்களை நம்பி நம்பி நாசமாய்ப்போன ஒரு அப்பாவித் தமிழன்…

Thursday, April 21, 2011

ஒரு கிராமத்துக் காதல்…

ஒரு கிராமத்துக் காதல்…


ஆசக்கிளி உம்மேல
அத்திப்பூ ஆசை வச்சேன்,
ஆத்தோரம் அய்யனார
வேண்டியே பூச வச்சேன்;

ஏத்தி வச்ச தீபத்தில
எம்மனசு எரியுதடி,
பாத்தி வச்ச தோட்டத்திலும்
உம்முகமே தெரியுதடி;

கருவேலங்காட்டுக்குள்ள என
காத்திருக்கச் சொன்னவளே…
கண்டாங்கி சீல கட்டி
கருவிழியில காதல் வச்சு,
கூந்தலில எம்மனச
கிள்ளியே மல்லி வச்சு,
கான மயிலாட்டம் நீ
கால் பின்ன வருவேன்னு,
கார்மேக அந்தியில
காத்திருந்தேன் என்னவளே;

என்னுசிரு கரையுதடி
எங்கேயோ பறக்குதடி,
ஒன்னக் காணாத எங்கண்ணும்
இமைக்கவே மறுக்குதடி;

கதிரவன் வந்து விட்டான்
ஒன் காலடி இன்னுமில்ல,
காத்திருந்த கண்களுக்கு
இனி என்னடி நானும் சொல்ல?;

ஓராயிரம் காரணம்
ஒனக்குள்ள சொல்லுவே நீ,
ஒன்னக் காணாத கண்ணுக்குள்ள
ஒசரமா வளருதே தீ;

சந்தயடிக் கூட்டத்தில
சமத்துவம் பேசி நிக்கும்
உங்கப்பன் வாய் தொறந்தா
சாதியாடும் சலங்க கட்டி;

ஒன் சாதி இல்ல நான்
ஒன்னோட கிட்ட நிக்க
அதுக்குத்தான் இம்புட்டுநா
இங்கிருக்கேன் ஓரங்கட்டி;

ஒன்னக் காணாத கண்ணும்
உசிரின்றி துடிக்குதடி,
நம்மூரு கம்மா போல
எம்மனசும் காயுதடி;

ஒன்னக் காணாத கண்ணுக்குள்ள
கச்சந்தோப்பு ஓடையடி,
ஒத்தயில நானிருக்கேன்
என் உசுரோட கலந்திடடி….

பட்டாளத்தான் பொண்டாட்டி நான்…

பட்டாளத்தான் பொண்டாட்டி நான்…பட்டாளத்தில வேல செஞ்சு
பட்டுச்சீல வாங்கியார
பஞ்சாப்பு போன மச்சான்
பயணம் திரும்புறதெப்போ?

தாய்மண்ண காத்திடவே
தணியாத வேட்கயிலே
தாமரக்குளத்த விட்டு
தண்ணியில்லா காடு போனீக;

உங்காத்தா உசிரு
உம்மயெண்ணி தவிக்குதய்யா,
உங்கொள்ளி கிடைக்குமான்னு
அவ உள்ளம் ஏங்குதய்யா;

நாட்ட காக்குறதுக்கு
வீட்டுக்கொரு ஆளுன்னு
தெருக்கோடி கண்ணீரோட
நாட்டோரம் போனீகளே…

உம்ம வீட்ட காக்குறதுக்கே
ஆம்பிள யாருமில்ல,
இத்தன நாளாகியும்
உமக்கிது வெளங்கலையா?

ஆத்தங்கர அய்யனார
ஆசி வேண்டிக்கிட்டு
ஆம்பிள சிங்கமா நீரு
ஆளில்லா தேசம் போனீக;

உம்புள்ள இன்னும்
ஓராறு மாசத்தில
அழுது புரண்டுகிட்டு
அப்பன் வரும் நாள் கேப்பான்;

ஆத்தா நான் அவன
அரவணச்சி மார் கொடுத்து
எத்தன நாளக்குத்தான்
ஏமாத்தி வைக்குறது?

என்றாவது நீ வர
ஏங்கியே காத்திருக்கேன்,
தந்தி வர வேணாமுன்னு
தினமிங்கே தவிச்சிருக்கேன்;

அரளி விதையெடுத்து
அடுப்பறையில் வச்சிருக்கேன்,
அதுபோல சேதி வந்தா
அதையே நா நெனச்சிருக்கேன்;

உன் வருக பாத்திடவே
பல நாளா காத்திருக்கேன்,
உசிரோட நீ வரவே
ஊர் எல்ல பாத்திருக்கேன்….

வாடகைக்கு ஒரு மலர்…

வாடகைக்கு ஒரு மலர்…


துவைப்பதற்கு நாளின்றி
நிதமும் பயன்படுத்தப்படுகிறது – எனது
அழுக்கான இரவுகள்;

விடியல்களினால்
வெளிச்சம் மட்டுமே
என்னிரவுகள்
வெளுக்கக் கூடுமா?

உழைத்தோயும் என்னுடம்புக்கு
ஓய்வில்லையெனினும்
என்னிரவுக்கு ஓய்வுண்டு
மாதம் மூன்று நாட்கள்;

என் விந்தைப் பள்ளியில்
நிதமும் எனக்குத் தேர்வு;
முகம் பார்த்தே
தேர்ச்சி நடக்கும்…
முன்னிரவு முடிந்ததும்
முகமூடியில் வருவதற்கு!

என்றோ என் மனதைக்
கொன்ற பிறகும்
எத்தனை எத்தனை முறை
கொன்றிருக்கிறேன்-என்
தற்கொலை முடிவுகளை!

இருளில் மட்டுமே
எனது பகல்கள்;
இரவல் இன்பமே
எனது தழுவல்கள்;

வயிற்றுக்கு வழிசெய்ய
வழியின்றிப் போயினும்
நோய் அது பரவிடினும்
நாயாய்த் திரிவோரால்
இன்னும் கூட என்னிரவுகள்
அழுக்கடையத்தான் செய்கின்றன..

ஆகம விதிகளும் அன்பு நெறிகளும்
நல்லது கெட்டது நாலும் தெரிவதும்
ஊருக்கு விளங்கா சில உண்மை உணர்வுகளும்
என்றுமே தெரிவதில்லை-என்
விடியாத இரவுகளுக்கு…!

இத்தனைக்கும் நடுவில்
அடிக்கடி தேடத்தான் செய்கிறேன்…
“என் நெஞ்சில் எழும் கேள்விக்கு
எவரிடமிருக்கக் கூடும் பதில்?”....

பெண்மை மலருக்கு உவமையென்றால்
வண்டுகள் வந்து தங்கிச் செல்லும்
நானென்ன ஒரு வாடகை மலரா…?!

என் பால்ய பருவத்துத் தோழி…

என் பால்ய பருவத்துத் தோழி…


பௌர்ணமி நிலவு;
பொங்கும் நுரை;
முகத்தில் அறைந்து
முடியை சிலுப்பும் குளிர்காற்று;
கடற்கரை மணல்வெளியில்
மௌனத்தோடு கலந்துபோன நான்;
எழும்பும் ஒவ்வொரு அலையிலும் - என்
இறந்துபோன நாட்கள்
ஒவ்வொன்றாய் எழுந்து வரும் !
சிறிது நாட்களுக்கு
முந்தைய நினைவு வரும்;
சிறிது மாதங்களுக்கு
முந்தைய நினைவு வரும்;
சிறிது வருடங்களுக்கு
முந்தைய நினைவு வரும்;
நினைவுகளைத்தாங்கி வரும்
ஒவ்வொரு அலையிலும்
மிதக்கும் கோடி நுரைக்குமிழிகளிலும்
மீண்டும் வரும்-நான் கடந்து வந்த
கோடிமுகங்கள்!
ஒவ்வொரு நாளும் - நான்
கிளம்பும் முன் வரும்
கடைசி அலையில் மட்டும்
"ஒன்றாய் கைகோர்த்து ,
ஒன்றாய் விளையாடி ,
ஒன்றாய் உண்டு ,
ஒன்றாய் உறங்கி ,
ஒன்றுமறியா பருவத்திலேயே
எனை விட்டுப்பிரிந்து சென்ற
இறந்து போனதாய்க் கூறப்படும்
என் பால்ய பருவத்து தோழி முகம்
மங்கலாய் வந்து திரும்பும்!"
உப்புக்காற்று கண்ணில் பட்டதால்தான்
கண்ணீர் வருவதாய்க்கூறுகிறேன்-
ஒவ்வொரு நாள் வீடு திரும்பும்போதும்
"ஏன் அழுகிறாய்?" என்று கேட்பவரிடத்தில்!

ஒரு காதலியின் கல்யாணம்…-5

ஒரு காதலியின் கல்யாணம்…


காலத்தால் மறையாத
காதலின் வடுக்கள்
இன்னும் என்னிதயத்தில்-நின்
நினைவுச்சுவடுகளாய்…

உயிரே,
உனைப் பார்க்கவே
ஓராறு ஆண்டு தனித்திருந்தும்
“உன் பேரையிட்டேன்-என் பேறுக்கு”
என்றாய் உனைக் கண்ட
மின்னல் நொடிகளில்!

காதலின் சின்னங்களை
எந்தன் கையிலிட்டு,
மறந்து விடு என்றாயே…-எந்தன்
இதயத்தை மட்டும்
உன்னுடன் எடுத்துச் சென்றது
இன்னுமா தெரியவில்லை உனக்கு?...

Wednesday, April 20, 2011

எப்படி வளர்க்கலாம் குழந்தைகளை? - ஓர் எளிய வழிகாட்டல்!

எப்படி வளர்க்கலாம் குழந்தைகளை? - ஓர் எளிய வழிகாட்டல்!


இன்றைய சூழ்நிலையில் பணி நிமித்தம் காரணமாக நம்மில் பெரும்பாலானோர் குழந்தைகள் வளர்ப்பில் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ள முடிவதில்லை. மேலும் தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளரும் பாக்கியமும் எல்லா குழந்தைகளுக்கும் கிட்டிவிடுவதுமில்லை.

நம்மில் பெரும்பாலானோர் நமது பெற்றோரின் நேரடிக் கண்காணிப்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்ததால் மட்டுமே இன்று ஒரு நல்ல நிலையை எட்டியிருக்கிறோம் என்பதை மறுப்பதற்கில்லை. நம்மை நம் பெற்றோர் வளர்த்து ஆளாக்கியதைப்போல் நம்மால் நம் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்க முடியுமா என்று கொஞ்சம் ஆழச் சிந்திக்கும்போது இயல்பாகவே அடிமனதில் ஒரு சந்தேகம் உண்டாகத்தான் செய்கிறது. குழந்தைகளை அதிகப்பணம் கறக்கும் பெயர் பெற்ற தனியார் பள்ளிகளில் சேர்ப்பிப்பதால் மட்டுமே நாம் சிறந்த பெற்றோராகி விடமுடியாது.

என்ன செய்யலாம்?...

குழந்தை வளர்ப்பில் இன்று நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன? அவற்றை எவ்வாறெல்லாம் திருத்திக்கொள்வது? நாளை நம் குழந்தைகள் அன்பிலும், பண்பிலும், அறிவிலும் சிறந்தவர்களாகி ஆரோக்கியமான தேகத்துடன் சிந்தனைமிக்க சாதனையாளராக, சிறந்த மனிதராக விளங்க இன்று நாம் செய்ய வேண்டியது என்ன?

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல இன்றைய வாழ்க்கை சூழலில் நமது குழந்தைகளின் எதிர்காலத்தை அவர்களது 17 வயது வரையிலான வாழ்க்கை முறையும் வளர்ப்பு முறையும் மட்டுமே நிர்ணயிக்கிறது. 17வயது வரை நல்ல முறையில் வளர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு அதற்கு மேல் அதன் எதிர்காலத்தை அவர்களே நிர்ணயிக்கும் சிந்தனைத்திறன் அமையப்பெறும். நாம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய குழந்தை வளர்ப்பை மூன்று பருவங்களாகப் பிரித்துக் கொள்ளலாம்.

1.) 0-5 ;- குழந்தை பிறந்தது முதல் அதன் ஐந்து வயது வரையிலான பால்ய பருவம்.
2.) 6-11 ;- ஆறு வயது முதல் பதினோரு வயது வரையிலான குழந்தை மற்றும் படிப்பு பருவம்.
3.) 12-17 ;- பன்னிரெண்டு முதல் பதினேழு வயது வரையிலான சிந்தனைப் பருவம்.

முதல் பருவமான முதல் ஐந்து வயது வரையிலான பால்யப் பருவத்தில் நாம் கவனிக்கவேண்டியவைகள் ;-


1.) குழந்தை பிறந்தது முதல் ஒரு வயது வரை எக்காரணத்தைக் கொண்டும் தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்துதல் கூடாது. குறைந்த பட்சம் ஒரு வயது வரை தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கே அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியும், எதிர்காலத்தில் ஆரோக்கியமான தேகமும் அமையப்பெறும்.

2.) இரண்டு வயது வரை கண்டிப்பாய் அன்னையின் முழுநேர அரவணைப்பிலேயே குழந்தை வளருதல் வேண்டும். வேலைக்கு போகும் பெண்ணாயிருப்பினும் இந்த இரண்டு வருடங்களுக்கு வேலையை உதறுவது சாலச்சிறந்தது.

3.) முதல் மூன்று வயது வரை குழந்தைகளுக்கான உணவிலும் சுத்தத்திலும் அதிக கவனம் கொள்ளுதல் தேவை. குழந்தைகள் ஆசைப்பட்டதெல்லாம் தின்னக் கொடுப்பது தவறு. குழந்தைகளுக்கு செரிமானம் ஆகாத உணவு வகைகளையும் தவிர்த்திடல் வேண்டும். சரியாகத் தின்னாத குழந்தையை அடித்து, திட்டி, மிரட்டி, திணித்து தின்ன வைப்பது மிகமிகத் தவறாகும். இவ்வாறு தின்னச்செய்யும் ஒரு கிண்ணம் உணவை விட அன்புடன், விளையாட்டுடன் குழந்தைக்கு ஊட்டும் ஒரு வாய் உணவே மேலானது என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.

4.) மூன்று வயது முதலே குழந்தைக்கு அன்பையும், மரியாதையையும், நற்பழக்கங்களையும் கற்றுக் கொடுக்கத் தொடங்கவேண்டும். மழலை மொழியில் பெரியவர்களை ‘வாடா, போடா’ என்பது நமக்கு மகிழ்ச்சியளிப்பினும் அதை ஊக்குவிக்காதிருப்பது மிக அவசியமான ஒன்றாகும்.

5.) எக்காரணத்தைக் கொண்டும் மூன்று வயதிலேயே குழந்தையை பள்ளிக்கு அனுப்புதல் கூடாது. தேவைப்பட்டால் மூன்று வயதில் வீட்டிலேயே அதற்கு கொஞ்ச கொஞ்சமாக பயிற்றுவிக்கத் தொடங்குங்கள். குழந்தை பயிலத்தொடங்கும் காலத்தில் எக்காரணத்தைக்கொண்டும் அதை அடிப்பதோ, திட்டுவதோ கூடாது. அடிப்பதாலும், திட்டுவதாலும் குழந்தைக்கு கல்வி மீது வெறுப்பும் பயமும் மட்டுமே உண்டாகும். கல்வி என்பது மிக எளிதான அவசியமான ஒன்று. பழகப்பழக கல்வி எளிய கைப்பழக்கமாகும் என்பதை அன்பால் உணர்த்துங்கள். குழந்தைகள் பயிலும் ஒவ்வொரு புதிய விஷயத்தையும் பாராட்டுதல்களுடன் உற்சாகப்படுத்துங்கள்.

6.) நான்கு வயதிலிருந்து பள்ளிக்கு அனுப்புங்கள். ஐந்து வயது வரை அடிப்படை கல்வியை மட்டுமே உங்கள் குழந்தையை பயிலச்செய்யுங்கள். எக்ஸ்ட்ரா கரிகுலர் எனப்படும் இதர குப்பைகளைத் தயவு செய்து ஐந்து வயது வரையிலாவது உங்கள் குழந்தையின் மேல் திணிக்காதிருங்கள். பிஞ்சுகளின் முதுகில் பொதி மூட்டைகளை ஏற்றாதீர்கள்.

7.) ஐந்து வயதிற்குள்ளாகவே குழந்தைகளின் மனதில் தாத்தா, பாட்டி, ஆசிரியர்கள் மற்றும் குடும்பப் பெரியவர்கள் அனைவரும் அன்பும், மரியாதைக்கும் உரியவர்கள் என்ற எண்ணத்தை ஆழ விதையுங்கள். வளர்ப்பு பிராணிகளைத் துன்புறுத்துதல் தவறென்றும் அவைகளை நேசிக்கவும் கற்றுக் கொடுங்கள்.

8.) ஐந்து வயது வரையிலும் கண்டிப்பாய் குழந்தைகளை உங்களுடனே உறங்கச் செய்யுங்கள். குழந்தைகளுக்குத் தனியாய் படுக்கையறை ஒதுக்க நினைத்தால் அதைக் குறைந்தது ஆறு வயதிற்கு மேல் செய்யுங்கள்.

9.) எல்லாவற்றுக்கும் மேலாக வெறும் ஆங்கிலம் பேசுவதால் மட்டுமே அறிவு வளர்ந்து விடும் என்ற உங்கள் எண்ணத்தை மாற்றி உங்கள் குழந்தைக்கு ஆங்கிலத்தோடு சேர்த்து தாய்மொழியையும் நேசிக்கக் கற்றுக் கொடுங்கள்.

இரண்டாம் பருவமான ஆறு முதல் பதினோரு வயது வரையிலான குழந்தைப் பருவத்தில் நாம் கவனிக்கவேண்டியவைகள் ;-

1.) இப்பருவத்தில் குழந்தைகளின் கல்வியின் மீது உங்கள் முழுக்கவனத்தையும் வையுங்கள். உங்களுடைய ஒவ்வொரு நாளிலும் குழந்தைக்காக மாலைப் பொழுதில் ஒரு மணி நேரம் ஒதுக்குங்கள். அன்றைய வகுப்பில் என்ன கற்றுக்கொண்டது?, அடுத்த நாள் முடித்துக்கொண்டு போகவேண்டிய வீட்டுப்பாடங்கள் என்னென்ன? அவர்களின் வகுப்பு ஆசிரியர் பற்றிய விவரங்கள், அவர்களின் பள்ளித்தோழர்கள் ஆகியனப் பற்றியெல்லாம் அக்கறையாக விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வாகனம் பற்றியும் யோசித்து முடிவெடுத்தல் மிக அவசியமான ஒன்றாகும். முடிந்த வரை குழந்தைகளை நீங்களே பள்ளிக்கு அழைத்துச் செல்லுங்கள். முடியாதவர்கள் ஆட்டோவோ… சைக்கிள் ரிக்ஷாவோ… எதுவானால் என்னவென்று ஏதோவொன்றில் திணித்து குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாதீர்கள். உங்களால் முடியாத பட்சத்தில் அனுபவம் வாய்ந்த ஓட்டுனர்களால் இயக்கப்படும் தரமான பள்ளி வாகனத்தில் மட்டுமே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புங்கள்.

2.) பள்ளியிலும் வெளியிலும் அறிமுகமில்லாத நபர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை குழந்தைகளுக்குப் புரியும் வகையில் எடுத்துக்கூறுங்கள். அவர்களுக்கு என்ன தேவையென்றாலும் ‘தமது பெற்றோர்கள் செய்து தருவார்கள், அவர்களிடம் மட்டுமே கேட்க வேண்டும்’ என்ற எண்ணத்தையும் நம்பிக்கையையும் அவர்கள் மனதில் ஆழ விதையுங்கள்.

3.) மாதம் ஒரு முறையாவது வார இறுதியைக் குழந்தைகளுக்காக ஒதுக்கி அவர்களை வெளியே அழைத்துச் செல்லுங்கள். வெளியுலகம் பற்றி சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் குழந்தைகளுக்கு போரடிக்காத வகையில் எடுத்துக் கூறுங்கள்.


4.) குழந்தைகளின் முன்னால் தேவையற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைக் கண்டிப்பாய் தவிர்த்து விடுங்கள்.

5.) எக்காரணத்தைக் கொண்டும் கணவன் மனைவிக்கிடையே வரும் சிறுசிறு சண்டைகளை உங்கள் குழந்தைகள் முன்னால் நடத்தாதீர்கள். அவர்கள் கண்களுக்குப் பெற்றோர் என்பவர்கள் எப்போதும் அன்பு நிறைந்தவர்களாகவே காட்சியளிக்க வேண்டும்.

6.) கல்வி மட்டுமன்றி வேறு என்னென்னவற்றிலெல்லாம் உங்கள் குழந்தைக்கு ஈடுபாடும், திறமையும் இருக்கிறதென்பதைக் கண்டறியுங்கள். அவர்களுக்கு ஈடுபாடுள்ள விஷயங்களையே அவர்களை கற்றறியச் செய்யுங்கள். உங்கள் ஆசைகளையெல்லாம் அவர்கள் மீது திணிக்காதீர்கள்.

7.) குழந்தைகள் எழுப்பும் எந்தக் கேள்விகளானாலும், எந்த சந்தேகங்களானாலும் பொறுமையாக, எளிமையாக அவர்களுக்குப் புரியும் வகையில் விளக்கிக் கூறுங்கள். குழந்தைகள் கேள்வி கேட்கும் போது எரிச்சல் படுவதும், அவர்களைத்திட்டி வாயடைப்பதும் உங்கள் குழந்தையின் அறிவுக் கண்களை மூடுவதற்குச் சமமாகும்.

8.) பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிவிப்பதையும், அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக பணம் கொடுப்பதையும் அறவேத் தவிர்த்திடுங்கள்.

9.) கல்வியோடு கண்டிப்பாய் குழந்தைகளுக்கு விருப்பமான ஏதாவதொரு விளையாட்டிலும் அவர்களை ஊக்குவிய்யுங்கள். கல்வி அவர்களின் அறிவை மேம்படுத்துவது போல், விளையாட்டு அவர்களின் ஆரோக்கியத்தை திடப்படுத்தும்.

10.) சுகாதாரம் மற்றும் ஆடையணிதல் போன்ற பல்வேறு விழிப்புணர்ச்சிகளைக் கொஞ்ச கொஞ்சமாய் அவர்களின் மனதில் பதியச்செய்யுங்கள்.

மொத்தத்தில் குழந்தைகளிடம் அநாவசிய கண்டிப்புகள் காட்டாமல் அவர்களிடம் நீங்களும் ஒரு குழந்தையின் மனதோடு நல்லதொரு வழிகாட்டியாய் நடந்து அவர்கள் வாழ்வுக்கு அடித்தளமிடவேண்டிய காலகட்டம் இதுதான் என்பதை மறக்காமல் செயல்படுங்கள்.

மூன்றாம் பருவமான பதினோரு முதல் பதினேழு வயது வரையிலான சிந்தனைப் பருவத்தில் நாம் கவனிக்கவேண்டியவைகள் ;-

1.) குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்களிப்புகள் அதிகமாகவும் அதி ஜாக்கிரதையாகவும் கையாளப்படவேண்டியது இந்தப் பருவத்தில்தான். உங்கள் குழந்தைகள் எல்லா விஷயங்களிலும் ரெண்டுங்கெட்டான் மனதுடன் திரிகின்ற பருவம் இது. இந்தப்பருவத்தில் பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி மீது அக்கறை காட்டுவதோடு அவர்கள் எந்தெந்த வழிகளில் தடம் மாறக்கூடும் என்பது பற்றியும் கவனித்து வருதல் நல்லதாகும்.

2.) முக்கியமாக இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் உடற்கூறு பற்றி கொஞ்சகொஞ்சமாய் உணர்த்திடுங்கள். இந்த வயதில் தோன்றும் உணர்ச்சிகள் அனைத்தும் வெறும் இனக்கவர்ச்சி மட்டுமே என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்துங்கள்.

3.) இந்தப் பருவத்தில் வீட்டில் அன்பும் அரவணைப்பும் கிடைக்காத குழந்தைகளே தடம் மாறிப்போய் வாழ்க்கையைத் தொலைத்தவர்களாகிறார்கள். வெளிக்காட்டாத அன்பு கூட உங்கள் குழந்தையின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் முடிந்த வரை உங்கள் குழந்தைகளின் மீது உங்களுக்கிருக்கும் உண்மையான அன்பையும் பாசத்தையும் அவர்கள் உணர்ந்திடும் வகையில் நடந்து கொள்ளுங்கள்.

4.) வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க இதுவல்ல வயது என்பதை உங்கள் குழந்தைகளுக்கு ஆழமாய் உணர்த்திடுங்கள். அதற்கான வயது வரும் போது அவர்கள் மனதுப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நீங்கள் ஒரு போதும் தடையாய் இருக்கமாட்டீர்கள் என்று அவர்களுக்கு நம்பகத்தை ஏற்படுத்துங்கள். அவ்வாறான சுதந்திரம் ஒன்றே தவறான வயதில் அவர்கள் தடம் மாறிப்போவதை தடுக்கவல்லது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

5.) அவர்களுடைய எதிர்காலத் துறையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவர்களிடமே ஒப்படையுங்கள். தேவைப்பட்டால் மட்டுமே அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டுமேயன்றி டாக்டராக வேண்டும்… இன்ஜினியராக வேண்டும் என்று உங்கள் கனவுகளை அவர்கள் மீது திணிக்காதீர்கள்.

6.) இந்தப் பருவத்தில் குழந்தைகளைத் தடம் மாறிப் போகச்செய்யும் மற்றுமொரு முக்கிய விஷயம் அவர்களின் நட்பு வட்டம். பெரும்பாலான குழந்தைகள் இந்தப் பருவத்தில் தடம் மாறக்காரணம் தவறான நண்பர் கூட்டமே. இந்த விஷயத்தில் அவசரப்பட்டு நீங்கள் உங்கள் குழந்தைகளின் நட்பை விமர்சித்தால் அது உங்கள் மீது அவர்களுக்கு வெறுப்பையே உண்டாக்கும். உங்கள் குழந்தைகளின் நட்பு வட்டம் தவறானதென்று உங்களுக்குத் தெரியவந்தால் அவர்களை எரிச்சலடையச் செய்யாத வகையில் கவனமாகக் கையாண்டு அப்படிப்பட்ட நட்பு வட்டத்திலிருந்து அவர்களை வெளிக்கொணருங்கள்.

7.) எக்காரணத்தைக் கொண்டும் தொலைக்காட்சி, இன்டர்நெட் போன்றவற்றை அவர்களின் தனியறையில் அமைத்துத் தராமல் வீட்டின் பொது அறையிலேயே உபயோகப்படுத்தும் வகையில் அமைத்துக் கொள்ளுங்கள்.

8.) வாழ்வில் வெற்றி பெற்றவர்களின் சரித்திரங்களை உங்கள் குழந்தைகள் விரும்பும் வண்ணம் அவ்வப்போது அவர்களுக்கு எடுத்துரையுங்கள். நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் அவர்கள் மனதில் ஆழமாய் வளர்ந்திடச் செய்யுங்கள்.

9.) என்ன நடந்தாலும் சரி… அவர்கள் எதிர்காலமும் அவர்கள் வாழ்வும் அவர்களின் கைகளிலேயே உள்ளதென்றும், மனம் தளராத எதிர் நீச்சலால் வாழ்வின் எத்தகைய சூழலையும் வெல்ல முடியுமென்பதையும் அவர்களை உணரச் செய்யுங்கள். அவர்களின் வெற்றிப்பாதைக்கு அவர்களே வித்திட்டுக்கொள்வார்கள்.

மொத்தத்தில் குழந்தைகளை உங்களின் ஆளுமையில் அடக்கி நடத்த முயலாமல் அவர்களுக்கு நல்ல நண்பர்களாய், அவர்கள் விரும்பும் நல்ல பெற்றோராய், நல்லதொரு வழிகாட்டியாய் நடந்து கொண்டு, அவர்கள் வழியிலேயே அவர்களுக்கு அனைத்தையும் புரியச்செய்து, அவர்கள் வாழ்வில் தடம் மாறாமல் காத்து, அவர்களை வெற்றியாளராக்குவதென்பது உங்கள் கைகளில்தான் உள்ளது.

‘ஆல் இஸ் வெல்… குட்லக்’!

Tuesday, April 19, 2011

மே13…? ’ஜெ’க்கு கிட்டினால்…? கப்பித்தனமாயிருக்கு… போய் புள்ள குட்டிய படிக்கவைங்கய்யா…!

மே13…? ’ஜெ’க்கு கிட்டினால்…?
கப்பித்தனமாயிருக்கு… போய் புள்ள குட்டிய படிக்கவைங்கய்யா…!சட்டமன்றத் தேர்தல் முடிந்து விட்டது. நாம் எல்லோரும் வாக்களித்து விட்டு எவருக்கு ஆட்சி ஆமைக்கும் பெரும்பான்மை கிடைக்கப்போகிறது என்று ஆவலோடு காத்திருக்கிறோம். நாம் மட்டுமல்ல… அரசியல் கட்சிகளும் கூட ஒரு வித டென்ஷனுடனேயே காத்துக் கொண்டிருக்கின்றன.

என்ன நடக்கக்கூடும் மே 13க்கு பிறகு?... எந்த கட்சி ஆட்சிக்கு வரப்போகிறது என்பதை பற்றிய கருத்துக் கணிப்போ… இல்லை ஜோதிடக் கட்டுரையோ இல்லை இது. ஒருவேளை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடத்திக் காட்டவிருக்கிறார் என்பதை பற்றிய முன்னுரை மட்டுமே இது.

ஒருவிதத்தில் வரலாறுகளைப் புரட்டும்போது இந்திராகாந்திக்குப் பிறகு இந்திய அரசியலில் அவருக்கு நிகரான இரும்புப் பெண்மணி ஒருவர் உண்டென்றால் அது ஜெயலலிதாவாக மட்டுமே இருக்கமுடியும் என்று தோன்றினாலும், தான்தோன்றித்தனமான தலைக்கர்வ முடிவெடுப்பதிலும் அவருக்கு நிகர் அவர் மட்டுமே என்பதை மறுப்பதற்கில்லை. அவருடைய பழைய ஆட்சியின் பக்கங்களை புரட்டினால் ஒருசில கசப்புகளைத்தவிர பெரும்பாலானவை அவருடைய நிர்வாகத்திறமையை பளிச்சிடச் செய்யவே செய்கின்றன.

தமிழக மக்களுக்கு ‘ஜெ’யிடமிருந்து (ஓரளவாவது)நல்லாட்சி கிடைக்கப்பெற வேண்டுமெனில் அது தேர்தல் முடிவில்தான் அடங்கியிருக்கிறது. அ.தி.மு.க தனிப் பெரும்பான்மை பெறாமல் கூட்டணிக் கட்சிகளின் தயவுடன் ஜெ ஆட்சியில் அமர்ந்தால்… அவரது தலைக்கர்வ முடிவுகளுக்கு மூக்கணாங்கயிறு கட்டப்பட்டு அவரது நிஜமான நிர்வாகத்திறமை மட்டுமே பளிச்சிடக்கூடும். ஆனால் அதை என்றுமே ஜெ விரும்பாததால்தான் தனிப்பெரும்பான்மை ஆசைக்காக வை.கோவை பலிகடாவாக்கினார்.

சரி… ஒருவேளை மே13… ‘ஜெ’வுக்குத் தனிப்பெரும்பான்மையை வழங்கினால்… ஆஹா... அப்போதானே ஆரம்பிக்கும் விளையாட்டே…!

அடுத்த ஐந்தாண்டுகள் ‘ஜெ’ யின் தனிப்பெரும்பான்மை நடத்தப் போகும் நாடகங்கள் என்னென்னவாக இருக்கும்?...

# பதவிப் பிரமாணத்திற்கு முன்னமே… கூட்டணிக்கட்சிகள் அனைத்திற்கும் அல்வா வழங்கப்படும் ( முத பாலே… சிக்ஸரா…?!)

# ஆட்சியில் அமர்ந்ததும் முதல் வேலை காவல்துறையில் ‘ஜெ’ விசுவாசிகள் முன்னுக்கு கொண்டுவரப்படுவார்கள்.

# கருணாநிதி, அவரது குடும்பத்தினர், தேர்தலில் தி.மு.க.விற்கு ஆதரவாகச்செயல்பட்டவர்கள், இவையனைத்துக்கும் மேலாக தி.மு.க.விற்கு தாவிய முன்னாள் அ.தி.மு.க.வினர் ஆகியோர் மீது எந்தெந்த வழிகளில் என்னென்ன வழக்குகள் பதிவுசெய்து பழிவாங்கலாம் என்று சட்டவல்லுனர்களைக் கொண்டு ஆராயப்படும் (பல பகல் நேரக் கைதுகளும் சில நள்ளிரவு கைதுகளும் அரங்கேறக்கூடும்).

# அனைத்துவித ஒப்பந்தப் பணிகளிலும் அ.தி.மு.க.வினர் முன்னுக்கு நிறுத்தப்பட்டு கட்சியின் நிதி வளர்ச்சிக்கான கமிஷன் தொகைகள் நிர்ணயிக்கப்படும் (மாநில நிதி வளர்ச்சி? அது கெடக்கு கழுதை!!!).

# டாஸ்மாக் நிர்வாகத்தில் சசிகலாவின் ஆதிக்கம் அரங்கேறத்துவங்கும் (அப்பவும் உருப்படியான ஒரிஜினல் சரக்கு கிடைக்கப்போறதில்ல…!).

# அங்கங்கே சூட்டப்பட்ட கருணாநிதியின் பெயர்களும், படங்களும் மாற்றப்படும் (அ) நீக்கப்படும் (அதானே… அதுக்குத்தானே மக்கள் நம்மகிட்ட ஆட்சியக் குடுத்திருக்காங்க!).

# கருணாநிதியால் துவங்கப்பட்ட திட்டங்களில் சிலவை பாதியில் நிறுத்தப்படும். சிலவை சில மாறுதல்களுடன் ஜெ புகழ் பாடும் வகையில் தொடர்ந்து நடத்தப்படும் ( பின்னே… நம்ம ஆளுங்கட்சின்னு எப்படி நிரூபிக்கறது?).

# தலைமைச் செயலக கட்டிடங்களிலும் ‘ஜெ’வின் ஆஸ்தான ஜோதிடர்களின் ஆலோசனைப்படி பல மாற்றங்கள் நிகழ்த்தப்படும் (வெளங்கிரும்ம்ம்ம்…).

# மத்தியில் காங்கிரசுடன் கருணாநிதியின் உறவை முறியச்செய்து மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வுக்கு பதிலாக அ.தி.மு.க.வை இடம் பெறச்செய்ய எல்லாவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் (இது வேறயா….?)

# மே13க்குப் பிறகாவது மே18ல் முடிந்து போன வாழ்வு மீட்கப்படும் என்று நம்பிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு கருணாநிதியைப் போல் கடிதம் எழுதி ஆதரவளிக்காமல் ‘ஜெ’யின் அறிக்கைகளால் ஆதரவளிக்கப்படும் (அடப்பாவிகளா… அவரு கடிதம்னா நீங்க அறிக்கையா? அவ்வளவுதான் வித்தியாசமா… அவ்வ்வ்வ்ஊஊஊஊ).

# அரசு கஜானாவின் நிதி நிலைமையைக் காரணம் காட்டி, தி.மு.க ஆட்சி மக்கள் பணத்தை வீணடித்துக் கஜானாவைக் கடனுக்குள் தள்ளியதாகக் கூறி, பெரும்பான்மையான இலவசத்திட்டங்கள் முதல் மூன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தப்படக்கூடும் (இலவசங்கள் ஒழியக்கூடுமென்று நிம்மதிப்பெருமூச்சு விடாதீர்கள். ஆட்சியின் கடைசி ஒன்றரை ஆண்டுக்கு ஓட்டு வங்கிக்காக மீண்டும் வேகமெடுக்கும் இலவசத்திட்டங்கள்!!).

# நிதி நிர்வாகத்தை மேம்படுத்தும் காரணத்துடன் பெரும்பாலான விலையேற்ற நடவடிக்கைகள் அரங்கேற்றமாகும். முக்கியமாகப் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படும் (ஆஹா…இப்பவே கண்ண கட்டுதே..).

# அரசு கேபிள் டி.விக்கான நடவடிக்கைகள் மீண்டும் முழு வேகமெடுக்கக் கூடும் (மறுபடியும் மக்கள் பணம் நாசமாகப் போகுதா..?).

# ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்தார்கள், கந்துவட்டிக்காரர்கள், கவுன்சிலர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு சட்டம் ஒழுங்கு முழுவீச்சில் அமல்படுத்தப்படும் (கருமம்… இந்த லிஸ்ட்டுலே கவுன்சிலர்களும் வர்ற அளவுக்கு நாறிப்போயிக்கெடக்கு நம்ம அரசியல்!!).

# எவ்வளவுதான் மக்கள் வரிப்பணத்தில் சலுகைகளையும், சம்பளத்தையும் வாரி வழங்கினாலும்… கிம்பளம் வாங்காமல் துரும்பைக்கூட அசைக்காத அரசு ஊழியர்களின் சலுகைகளில் ஆப்புகள் ஆரம்பமாகக் கூடும் (டேய் மாப்ளேய்… இனி ஒனக்கு ஆப்புதான்டி..).

# மணல் குவாரிகள் தி.மு.க.வினரிடமிருந்து அ.தி.மு.க.வினர் கைவசம் கொண்டு வரப்பட்டு ஓரளவுக்கு நியாயமான கட்டுக்கோப்புடன் நடத்தப்படக்கூடும். (இல்லை…ஜெ கொஞ்சம் மனது வைத்தால்… மணல் குவாரிகள் முழுவதுமாய் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படக்கூடும்..ம்ம்ம்ம் கனவுதான்!).

# காவிரி, பாலாறு மற்றும் முல்லைப்பெரியாறு விவகாரங்களில் பல அதிரடி முடிவுகள் அமல்படுத்தப்படலாம் (ஹய்யோ… ஹய்யோ…)

# மழை நீர் சேகரிப்பு மற்றும் தொட்டில் குழந்தைகள் திட்டங்கள் மீண்டும் முழு வீச்சில் அமல்படுத்தப்படலாம் (நல்லதுதான்).

# அங்கங்கே தி.மு.க.வினருக்குப் போட்டியாக, அ.தி.மு.க.விலும் கல்வித் தந்தைகள் உருவாகத் தொடங்குவர் (அப்போ அரசுக்கல்லூரிங்க… அரோகராதானா?)

என்னய்யா இது? பழைய ஆட்சிக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசமே இல்ல… மக்களுக்கு அந்த அம்மா என்னய்யா பண்ணுவாங்க…? அதச்சொல்லு முதல்லன்னு நீங்க கேக்கிறது எனக்குப் புரியுது. உங்களுக்கெல்லாம் விவேக்கோட சினிமா டயலாக்தான்..! படிக்காதவன் படத்துல விவேக்க பாத்து அவரோட அல்லக்கை ஒருத்தர் கேக்கிற டயலாக் நியாபகமில்லையா உங்களுக்கு?

‘’பாஸ், உங்களுக்காக இவ்வளவு கூட்டமா வந்திருக்கிற மக்களுக்கு என்ன செய்யப்போறீங்க பாஸ்?
இதுவரைக்கும் உங்களுக்கு நான் என்ன செஞ்சிருக்கேன்டா?
ஒன்னும்ம்ம்ம் இல்ல…..
அதேதான் அவங்களுக்கும்…!!!’’

இதான்யா நாமெல்லாம் காத்திட்டிருக்கிற மாற்றம். இத யாராவது மறுக்க முடியுமா? புரிஞ்சுக்கோங்க… மே13 நமக்கு எந்த விதத்திலயும் பிரயோஜனமில்லை…

ஆட்சி வேணா மாறலாம்… ஆனா காட்சிகள் பெருசா மாறப்போறதில்ல…!

கப்பித்தனமா யோசிச்சிட்டு இருக்காம போய் புள்ள குட்டிய படிக்க வைங்கய்யா…!

அட... சும்மா ஒரு ஜாலிக்குதாங்க...!

பிரபலங்களுக்கான பயோடேட்டா பாடல்கள்… (உஸ்ஸ்…ச்சும்மா…ச்சும்மா!)இன்றைய சூழ்நிலையில் பல்வேறு பிரபலங்களுக்குப் பொருத்தமான தமிழ் சினிமாப் பாடல்கள் பற்றிய ஒரு ஜாலியான தொகுப்பு இது… பாடல்களை அதே ராகத்தோடு அந்தந்த தலைவர்கள் பாடுவதைப்போல கற்பனை செய்து கொண்டு படியுங்கள்…

கலைஞர் கருணாநிதி :- தில்லு முல்லு…தில்லு முல்லு… உள்ளமெல்லாம் கல்லு முள்ளு… தில்லு முல்லு… தில்லு முல்லு…

மன்மோகன் சிங் :- தில்லு முல்லு உலகத்த நான் சாட்டையாலே அடிக்கவந்தேன்… என்ன நானே அடிச்சிக்கிட்டேன்…

மு.க.அழகிரி :- அண்ணனென்ன தம்பியென்ன சொந்தமென்ன பந்தமென்ன சொல்லடி எனக்குப் பதிலை….

மு.க.ஸ்டாலின் :- நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை… நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை…

கனிமொழி :- ராசாவே உன்ன நம்பி… இந்த ரோசாப்பூ இருக்குதய்யா…

ராஜாத்தி அம்மாள் :- நடந்தால் இரண்டடி… இருந்தால் நான்கடி… படுத்தால் ஆறடி போதும்… இந்த ‘’நிலமும்’’ அந்த வானமும் அது ‘’எல்லோர்க்கும் சொந்தம்’’….

தயாளு அம்மாள் :- என் புருஷன்தான்… எனக்கு மட்டும்தான்… சொந்தம்தான் என்று நான் இருந்தேனே….

நீரா ராடியா :- பறந்தாலும் விட மாட்டேன்… பிறர் கையில் விழமாட்டேன்… அன்று நான் உன்னிடம் கைதியானேன்… இன்று நான் உன்னையே கைது செய்வேன்…

வை.கோ. :- அவள் பறந்து போனாளே.. எனை மறந்து போனாளே…

ஜெயலலிதா :- யாரை நம்பி நான் பிறந்தேன்… போங்கடா போங்க…

தோழி சசிகலா :- புத்தம் புது பூமி வேண்டும்… நித்தம் ஒரு வானம் வேண்டும்… தங்க மழை பெய்ய வேண்டும்…

அ.தி.மு.க வினர் :- அம்மா என்றழைக்காத உயிரில்லையே… அம்மாவை வணங்காது உயர்வில்லையே…

விஜயகாந்த் :- ராஜா என்பார்… மந்திரி என்பார்… ராஜ்யம் இல்லை ஆள…

நவரசநாயகன் கார்த்திக் :- நான் யாறு…? எனக்கேதும் புரியலையே… எந்த ஊறு… ஊர் பேரும் தெரியலையே…

சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார் :- நூலும் இல்லை… வாலும் இல்லை… வானில் பட்டம் விடுவேனா…?

வைகைப்புயல் வடிவேலு :- எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட கேக்கும்…

ஸ்பெக்ட்ரம் புகழ் ஆ.ராசா :- அவனுக்கென்ன தூங்கிவிட்டான்… அகப்பட்டவன் நானல்லவா…?

சோனியா காந்தி :- எட்டடுக்கு மாளிகையில்… ஏற்றிவிட்ட என் தலைவன்… விட்டு விட்டுப் போனானடி தோழி…

ராகுல் காந்தி :- என் தாயின் மீது ஆணை…. எடுத்த சபதம் முடிப்பேன்…

காங்கிரஸ் கட்சி தங்கபாலு :- நாற்காலிக்கு சண்ட போடும்… நாடு நம் பாரத நாடு… நான் சொன்னா கேட்பது யாரு…? நாளும் நீ பேப்பரப்பாரு…

மத்திய அமைச்சர் கபில்சிபல் :- ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குட்டி வந்ததின்னு யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டு…

ஜனதாகட்சி சுப்பிரமணியன் சுவாமி :- உன்னை ஒன்று கேட்பேன்… உண்மை சொல்ல வேண்டும்…

பா.ஜ.க அத்வானி :- ராம் ராம்… சலாம் ஹே ராம் ராம்…

துக்ளக் ‘’சோ‘’ :- சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்…

விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் :- ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே… நான்தான்டா என் காட்டுக்கு ராஜா…

மருத்துவர் ராமதாஸ் :- எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்… ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்…

ப.சிதம்பரம் :- நாட்டுக்கொரு சேதி சொல்ல… நாகரீக கோமாளி வந்தேனுங்க…

‘நாம் தமிழர்’ சீமான் :- பச்சோந்தியே கேளடா… வச்சேன் குறி நானடா… உன் ஜம்பம் ஆகாது… என்கிட்ட வேகாது…

பழ.நெடுமாறன் :- தமிழா தமிழா நாளை நம் நாளே… தமிழா தமிழா நாடும் நம் நாடே… தமிழா தமிழா கண்கள் கலங்காதே… தமிழா தமிழா உள்ளம் வருந்தாதே…

திராவிடர் கழக கி.வீரமணி :- நேத்து ஒருத்தர ஒருத்தர பாத்தோம்… பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்…

கவியரசு வைரமுத்து :- அம்மாவும் நீயே… அப்பாவும் நீயே… அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே…

எஸ்.வி.சேகர் :- சிரிப்பு வருது… சிரிப்பு வருது… சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது… சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாத்து சிரிப்பு வருது

சிவசேனா தாக்கரே&சன்ஸ் :- எங்க ஏரியா உள்ள வராதே… இது எங்க ஏரியா உள்ள வராதே…

சமூக சேவகர் அன்னா ஹசாரே :- ஓ… ஒரு தென்றல் புயலாகி வருதே… கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே…

‘டிராபிக்’ ராமசாமி :- இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…? நம் நாட்டிலே…?

பொது ஜன வாக்காளர் :- பணம் பந்தியிலே… குணம் குப்பையிலே… இதை பார்த்து அறிந்து நடக்காதவர் மனிதரில்லே… பிழைக்கும் மனிதரில்லே…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் :- தனிமையிலே… தனிமையிலே இனிமை காண முடியுமா…? நள்ளிரவினிலே ‘’சூரியனும்’’ தெரியுமா…?

கமல்ஹாசன் :- இளமை இதோ… இதோ… இனிமை இதோ… இதோ…

இசைஞானி இளையராஜா :- சங்கீதமேகம்… தேன் சிந்தும் நேரம்… ஆகாயம் பூக்கள் தூவும் காலம்… நாளை என் கீதமே… எங்கும் உலாவுமே…

ஏ.ஆர்.ரகுமான் :- நோ ப்ராபளம்… நோ ப்ராப்ளம்… கிழக்கு உலகத்தை அந்நாளில் இந்த மேற்கு உலகங்கள் ஆண்டனவே… இன்று கிழக்கு மேற்காக மாறியதே… நோ ப்ராப்ளம்…

தேனிசைத் தென்றல் தேவா :- வாங்குடா 420பீடா… கையில பங்க் கடை சோடா… வாழ்ந்துதான் பாக்கலாம் வாடா…

இளைய தளபதி விஜய் :- பச்ச மஞ்ச கருப்பு தமிழன்டா… நான் பச்ச மஞ்ச கருப்பு தமிழன்டா….

விஜய டி.ராஜேந்தர் :- ஏய் டண்டனக்கா… ஏய் டணக்குனக்கா… ஏய் டண்டனக்கா… ஏய் னக்கா…னக்கா..னக்கா…னக்கா

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு :- முத்தம் தர ஏத்த இடம்… முகத்திலே எந்த இடம்….?

பிரபுதேவா & நயன்தாரா :- இப்பவே… இப்பவே… பாக்கனும் இப்பவே… இப்பவே… இப்பவே… பேசனும் இப்பவே…

சூர்யா & ஜோதிகா :- என்னுயிர் நீநானே… உன்னுயிர் நான்தானே… நீ யாரோ…? இங்கு நான் யாரோ…? ஒன்று சேர்ந்தோமே… இன்பம் காண்போமே.

சாமியார் புகழ் ரஞ்சிதா :- ஊரெல்லாம் சாமியாகப் பார்க்கும் உன்னை… ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ…?

சாமியார் நித்யானந்தா :- எங்கேயும்… எப்போதும்… சங்கீதம் சந்தோஷம்…
ராத்திரிகள்… வந்து விட்டால்… சாத்திரங்கள் ஓடிவிடும்…

கற்பு நடிகை குஷ்பூ :- இருக்கும் இடத்தை விட்டு… இல்லாத இடம் தேடி… எங்கெங்கோ அலைகிறாய் ஞானத்தங்கமே….

இந்திய அணி கேப்டன் தோனி :- வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்…அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னைச்சேரும்.

தெண்டுல்கர் :- சொல்லி அடிப்பேனடி… அடிச்சனேனா நெத்தியடிதானடி…

இந்திய கிரிக்கெட் வாரியம் :- காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது… வாசக் கதவ ராசலட்சுமி தட்டுகிற வேளையிது…

இன்னும் நிறைய பேருக்கு எழுதனும்தான்… ஆனா நேரம் பத்தாததுனாலே இப்போதைக்கு முடிச்சிக்கிறேன்… மறுபடியும் எழுதறேன், கூடிய விரைவில்…!

Monday, April 11, 2011

நல்லாட்சியென்பது யாதெனில்……(இதப்படிங்க உருப்படியா!)

நல்லாட்சியென்பது யாதெனில்……


சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து நம் நாடு எத்தனையோ ஆட்சியாளர்களையும் அமைச்சர்களையும் பார்த்திருக்கிறது. ஆனால் இந்த 64 ஆண்டுகளில் இந்தியாவின் வியக்கத்தகு(ஒரே சீரான மற்றும் பரவலான)வளர்ச்சி, முன்னேற்றம், கொள்கைகள் என்று மனதார ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயங்கள் எத்தனை இருக்கிறது?... ஒருவேளை நம்மை வெள்ளையர்களே இன்னும் கொஞ்சகாலம் ஆண்டிருந்தால் நம் நாடும் இன்று அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்று இருந்திருக்குமோ என்ற உள்மன ஏக்கங்களை முழுவதுமாய் ஒதுக்கிவிடுவதற்கில்லை! சுதந்திரமடைந்தும், விதவிதமான ஆட்சியாளர்கள் இந்தியாவை ஆண்டும் இன்னும் ஏன் நாம் பின்தங்கியேயிருக்கிறோம்… நம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்லக்கூடிய நல்லாட்சியென்பது எது?... தேடுவோம்……!

நல்லாட்சியென்பதன் மிகமுக்கிய அடிப்படைகளுள் ஒன்று… அரசியலையும், ஆட்சியையும் வியாபாரமாக பார்க்காத ஊழலற்ற, தன்னலமற்ற தேசபக்திமிக்க அரசு.(அப்படியென்றால் என்ன என்பதே இன்றைய ஆட்சியாளர்கள் பலபேருக்குத்தெரியாது!)

‘’இந்தியா வளர்ந்து வரும் வல்லரசு… நாம் பொருளாதாரத்தில், கணினி மற்றும் தொலைத்தொடர்புத்துறையில் அடைந்துவரும் முன்னேற்றம் கண்ணுக்குத்தெரியவில்லையா? ஒருகாலத்தில் ஊருக்கு ஒரு வீட்டில் டிவி இருப்பதே அரிது. இன்று பெரும்பாலும் டிவி இல்லாத வீடுகளே இல்லை. அதுபோல் செல்போன் இல்லாத மனிதர்கள் இன்று எத்தனை பேர் இருக்கக்கூடும்‘’ என்றெல்லாம் வீண்வாதம் செய்பவர்களுக்கு என்னிடம் சில கேள்விகளுண்டு…!

மேற்கூறிய மற்றும் இதுபோன்ற இன்னபிற வளர்ச்சிகளெல்லாம் நம் ஆட்சியாளர்களால் நமக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட சிறப்பு நலத்திட்டங்களல்ல…! இவைகளெல்லாம் காலமாற்றத்தில் நமது மக்கள் தொகை என்ற வியாபாரத்தின் அடிப்படை ஆணிவேரைக்கொண்டு உருவாகிய சுயம்புகளே!

‘’இதுவரை நம் மக்கள் தொகையில் விவசாயிகளின் விழுக்காடு என்ன? அது வருடாவருடம் குறைந்துகொண்டு வரும் விழுக்காடு என்ன? இப்படியே குறைந்து கொண்டே போனால் அதன் இறுதி நிலைதான் என்ன? அது குறையாமலிருக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்ன?’’ என்பதுபற்றி எந்த அரசாவது புள்ளிவிவரங்கள் திரட்டியிருக்கிறதா? இயற்கை விவசாயத்தை முழுவதுமாய் மக்களிடம் கொண்டு சேர்க்க எந்த அரசாவது முயன்றிருக்கிறதா? அட… நீங்கள் விவசாயத்தைக்காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை. அதை அழிக்காமலாவது இருக்கலாமல்லவா? பி.டி எனப்படும் மரபணு மாற்றப்பட்ட பயிர்வகைகளை உலகின் வளர்ந்த நாடுகளெல்லாம் தடை செய்தபோதும் நமது அரசாங்கம் மட்டும் அதை அனுமதித்து நம்மையெல்லாம் சோதனைச்சாலை எலிகளாக்கத் துணிந்ததெப்படி? ஒவ்வொருமுறை இந்த அரசு விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்தபோதும் ஏற்கனவே வட்டியுடன் கடனை திருப்பிச்செலுத்திய விவசாயிகளுக்கு என்ன செய்திருக்கிறது? இலவச மின்சாரம், விவசாயக்கடன்கள் தள்ளுபடி, உரமானியம் என்பன போன்ற உருப்படியில்லாத திட்டங்களை தயவு செய்து ஒழித்துக்கட்டுங்கள் அரசுகளே… விவசாயிகளுக்கு தேவை இலவசங்களல்ல. இருபத்திநாலு மணிநேர தடையில்லா மின்சாரம், அலைக்கழிக்காத காலம் தாழ்த்தா கடனுதவி, தட்டுப்பாடற்ற சமச்சீரான உர மற்றும் விதை விநியோக மையங்கள், இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வுப்பயிற்சி, தட்டுப்பாடற்ற காலம் தாழ்த்தா தண்ணீர் திறப்பு, இடைத்தரகரில்லா அரசு நேரடிக்கொள்முதல் நிலையங்கள், குறுவிவசாயிகளுக்கான நேரடி சந்தைபடுத்துதல் வசதிகள், நாடு தழுவிய விவசாயிகளை உறுப்பினர்களாகக்கொண்ட விவசாயப்பொருட்கள் விலை நிர்ணய மையம், அதிக எண்ணிக்கை மற்றும் தரமான விவசாயக்கல்லூரிகள், ஊருக்கு ஊர் அரசு விவசாயப்பொருட்கள் குளிர்சாதன கிடங்குகள், விளைநிலங்களை விளைநிலங்களாக மட்டுமே உபயோகப்படுத்த சட்டத்திருத்தம் மற்றும் அரசு நேரடி ஏற்றுமதி கொள்முதல் நிலையங்கள். இதுபோன்றவையே இன்று நம் விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்க நாம் செய்ய வேண்டிய உடனடித்தேவைகளாகும். இவற்றையெல்லாம் நமது அரசுகள் செய்யத்தவறும் பட்சத்தில் நாளை நம் சந்ததியினர் உணவுக்கும் இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கப்போகிற சூழலுக்கு தயார்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும்.

நமது மிகப்பெரும் குடிநீர் ஆதாரங்களின் இன்றைய நிலை என்ன? ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஆக்கிரமிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் ஆதாயங்களுக்காக அழிந்துகொண்டிருக்கும் ஏரிகள், குளங்கள், குறுநீர்த்தேக்கங்கள் எத்தனை? அரசு நிர்வாகங்களின் ஊழல் மற்றும் அலட்சிய பாராமுகத்தால் அவலமாகிக்கொண்டிருக்கும் ஆறுகள் எத்தனை? நம் நாட்டின் மொத்த நீர்த்தேக்கங்களில் பிரிட்டிஷ் அரசு கட்டிச்சென்றது எத்தனை? நம் சுதந்திர இந்தியாவின் முதல் முப்பதாண்டு அரசுகள் கட்டியது எத்தனை? அதற்கு பின்னர் வந்த அரசுகள் கட்டியது எத்தனை? ஆராய்ந்து பார்த்தால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதைகூட மிஞ்சாது! ஏற்கனவே எங்கு வேண்டுமானாலும் குடிநீர் பருகி தாகம் தணிக்கும் நிலையிலிருந்த நம் நாட்டில் தண்ணீரையும் வியாபாரப்பொருளாக்கிய புண்ணியத்தைக்கட்டிக்கொண்ட நமது அரசுகள் இன்னும் என்னவெல்லாம் செய்யக்காத்திருக்கிறதோ?! ஆண்டுக்காண்டு அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் நமது நிலத்தடி நீரைப்பற்றி எந்தவொரு அரசாவது கவலைகொண்டு முழுவீச்சில் செயலில் இறங்கியிருக்கிறதா? மணலை விற்று கோடிகளைத்திருடிப்புரளும் இந்த கோமாளிகளுக்கு எப்போது உரைக்கப்போகிறது… நாளை நம் சந்ததியினர் பணப்பற்றாக்குறையில்லா வாழ்விலும் தண்ணீருக்காக கண்ணீர் விடப்போகும் நிகழ்வுகள் உருவாகப்போகிறதென்பது!

இன்றைய அரசுகளின் கல்விக்கொள்(ளை)கைகள்… அடேங்கப்பா… நினைக்கும்போதே புல்லரிக்கிறது! வருடாவருடம் அரசுப்பள்ளிகள் இழுத்து மூடப்பட்டுக்கொண்டே வருகின்றன. வருடாவருடம் தனியார்பள்ளிகளும் கல்லூரிகளும் பளபளப்பாய்த் தொடங்கப்பட்டு பணத்தைப்பிடுங்கிக் கொண்டேயிருக்கிறார்கள். தனியார்பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் அரசின் ஊழல் மலிந்த முட்டாள்தனமான தாராளமயத்தால்தான் கும்பகோண பிஞ்சுகளின் சோகம் நிகழ்ந்தது என்ற என் வாதத்திற்கு எவரிடமாவது எதிர்வாதம் இருக்கமுடியுமா? ஏன் எந்தவொரு அரசும் அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளின் சீரமைப்பிற்கும், நிர்வாக மேன்மைக்கும், புதுப்புது பள்ளிகள், கல்லூரிகள் கட்டுவதற்கும் சிரத்தையெடுத்துக் கொள்வதேயில்லை?. ஒருவேளை அரசுப்பள்ளிகளும் கல்லூரிகளும் எண்ணிக்கையிலும் தரத்திலும் மேம்படுத்தப்பட்டால் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் அல்லக்கைகளின் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வருமானங்கள் குறைந்து போகுமென்பதாலா? அரசுப்பள்ளிகளையும் கல்லூரிகளையும் தனியாருக்கு நிகராக மேம்படுத்துவதும் நிர்வகிப்பதென்பதும் அவ்வளவு எளிதல்ல என்பவர்களுக்கு என் ஒரே கேள்வி… எப்படியய்யா தனியார் வசமிருந்த மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தி நிர்வகித்து இலாபமீட்டுகிறீர்கள்?... அரசுப்பள்ளிகளில் ஏற்கனவே போதுமான அளவில் மாணவர்கள் சேர்வதில்லை. இதில் எங்கிருந்து புதுப்பள்ளிகள் வேறு கட்டுவது என்று சப்பை கட்டு கட்டுபவர்களுக்கு எனது ஒரே பதில்… அரசுப்பள்ளிகள், கல்லூரிகளின் எண்ணிக்கையையும் தரத்தையும் தனியாருக்கு நிகராக உயர்த்துங்கள். அப்போது கல்விக்கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் காற்று வாங்குகிறதா இல்லையா பாருங்கள். அரசுப்பள்ளிகளையும் கல்லூரிகளையும் காப்பாற்ற எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் நீங்கள் வகுக்கும் சமச்சீர் கல்வியானாலும் சரி… இல்லை எந்தவொரு கல்விக்கொள்கையானாலும் சரி… அவையனைத்தும் கடலில் கரைக்கும் குடிநீரைப்போன்றதே. எந்த உபயோகமும் இருக்கப்போவதில்லை! எவ்வித மாற்றமுமின்றி இன்றைய நிலையே இப்படியே தொடருமானால் நாளை நம் சந்ததியினரில் வசதியுள்ளவர்கள் தரமான கல்விக்காக ப்ரி.கே.ஜியிலிருந்தே வெளிநாடு சென்று படிப்பதும் வசதியற்றவர்கள் கல்வி கற்கவே வழியின்றிப்போவதும் தவிர்க்க முடியாததாகிப்போகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

நமது அரசுகளின் சுகாதாரம் மற்றும் மருத்துவக்கொள்கைகள்… சுகாதாரம் குறித்த நமது அரசுகளின் விழிப்புணர்ச்சி பற்றி அதிகம் பேசவே தேவையில்லை. எங்கேயாவது ஒரேயொரு இலவசப்பொதுகழிப்பிடத்தை பார்வையிட்டாலே போதும்… அடேயப்பா… நம் அரசுகளிடம்தான் என்னேவொரு விழிப்புணர்ச்சி சுத்தத்திலும் சுகாதாரத்திலும்?! (இதில் நவீனக்கட்டணக்கழிப்பிடம் என்ற பெயரிலும் மக்களிடமிருந்து கொள்ளை. ஒரு ரூபாய்க்கு அரிசியைக்கொடுத்துவிட்டு ஒன்னுக்கு போவதற்கு இரண்டு ரூபாய் புடுங்கும் கேவலத்திற்கு எவரிடமாவது பதில் உண்டா?) தேவைக்கு தகுந்த அளவு இலவச பொதுக்கழிப்பிடங்களை கட்டுவதிலும் அவற்றை சுத்தமாகப்பராமரிப்பதிலும் என்ன கஷ்டமிருக்கப்போகிறது இந்த அரசுகளுக்கு? ஏன் அதைக்கூட தனியார் மயமாக்கி கட்சிக்காரர்கள் காசு சம்பாதிக்க துணைபோகிறார்கள்? சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் இன்னுமேன் கழிவுநீர் அகற்றும் வழிகள் நூறு சதவிகித மக்களுக்கும் அளிக்கப்படவில்லை. இத்தனை ஆண்டுகளாகியும் இன்னும் இவர்களின் தேர்தல் அறிக்கைகளில் பாதாளச்சாக்கடைதிட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டுதானேயிருக்கிறது? இதுமட்டுமா?... மழைநீர் வடிகால் திட்டங்கள்… அய்யய்யோ… வெளிநாடுகளெல்லாம் நம்மிடம் பிச்சையெடுக்கவேண்டும். சரி, சுகாதாரத்தின் நிலைதான் இப்படியென்றால்… மருத்துவம்?...அட…! இந்தப்பத்தியின் முதலில் நான் கூறிய இலவசப்பொதுக்கழிப்பிட உதாரணமே இதற்கும் கணக்கச்சிதமாய் பொருந்துகிறதே?! (இலவசப் பொதுக்கழிப்பிடத்தையும் இலவசப் பொதுமருத்துவமனையையும் வித்தியாசமின்றி வைத்திருக்கின்றன நமது அரசுகள்!) அரசு மருத்துவமனைகளின் தரத்தையும் எண்ணிக்கையையும் உயர்த்துவதில் எவ்வித ஈடுபாடும் காட்டாத அரசுகள் இலவச மருத்துவக்காப்பீட்டுத்திட்டங்களை வாரி வழங்குவதேன்? ஓட்டு வங்கிக்காகவா? இல்லை… வருமானத்தின் பங்குக்காகவா? வருடத்திற்கு 800 கோடிக்கும் மேல் பிரிமியமாக கட்டப்படும் மக்களின் வரிப்பணம் நிஜமாகவே மக்களுக்கு உபயோகமாகிறதா இத்திட்டத்தில்? நிச்சயமாக சந்தேகம்தான்!. வருடாவருடம் உங்களுக்கு வேண்டப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களுக்கு எங்களின் பணத்தை வாரிவழங்கும் அரசுகளே… உங்களை ஒன்று கேட்கட்டுமா? இவ்வளவு தொகையை ஏதோவொரு நிறுவனத்துக்கு வாரிவழங்காமல் ஏன் அரசே செலவு செய்து இருக்கின்ற அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துவதோடு புதிதாக மருத்துவமனைகள் கட்டுவதற்கும் உபயோகப்படுத்திக்கொள்ளக்கூடாது? வருடாவருடம் இந்தப்பணத்தை இவ்வாறு உபயோகப்படுத்துவதோடு கொஞ்சம் நிர்வாகத்தையும் சீர்படுத்தினால் ஒரு காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகளின் தரம் தனியாருக்கு மேலாக உயர்வதோடு அருகாமையில் மருத்துவமனையே இல்லையேயென்று எந்த மக்களும் கவலைப்படத்தேவையில்லா நிலை நிச்சயம் உருவாகும். அட அதுமட்டுமா, நீங்கள் கூட உயர்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கும் வெளிநாட்டு மருத்துவமனைகளுக்கும் ஓடத்தேவையில்லை அரசியல்வாதிகளே…!

அடுத்து நிதி மற்றும் பொருளாதாரக்கொள்கைகள்…! நமது கருவூலங்களின் இன்றைய நிலையென்ன தெரியுமா? உலக வங்கியில் நாம் வாங்கியிருக்கும் கடன் எவ்வளவு தெரியுமா? நமது பணக்கார முதலாளிகளும், அரசாங்க(ஊழியர்களல்ல)ஊழல்வாதிகளும், வெள்ளையும் சொள்ளையுமாய் எப்போதுமே யோக்கியர்கள் போல திரியும் நமது அரசியல்வாதிகளும் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியிருக்கும் கறுப்புபணத்தின் அளவென்ன தெரியுமா? ஏற்கனவே ஏழைகளை சோம்பேறிகளாக்கி மூளைகளை மழுங்கடித்து உருப்படியில்லாத இலவசங்களை வாரி வழங்கி அரசின் கஜானா காலியாகிக்கிடக்கிறது. இதில் போதாக்குறைக்கு அக்கம்பக்கத்து மாநிலங்கள் கூட ஓட்டு வங்கியை குறிவைத்து இதேபோன்ற இலவசத்திட்டங்களை அமல்படுத்தி ஆண்டியாகத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அட… இந்த அரசோடு இலவசங்கள் ஒழிந்துவிடுமென்று பார்த்தால் இனி இலவசத்தையும் அரசியலையும் பிரிக்கமுடியாத அளவுக்கு எல்லா கட்சிகளுமே இலவச அறிவிப்புகளை வாரி வழங்குகின்றன. இலவசங்களாய் வாரிவழங்கி கருவூலங்களை காலிசெய்யும் அரசின் முக்கிய வருமானத்தில் ஒன்று ‘’டாஸ்மாக்’’! ஒருபக்கம் இலவசங்களை வழங்குவதுபோல் வழங்கிவிட்டு இன்னொருபக்கம் டாஸ்மாக்குகள் மூலம் மக்களின் ஜீவனத்தையே காலிசெய்து கொண்டிருக்கிறது நமது அரசுகள். நான் மக்களுக்கு இதை இலவசமாக வழங்கினேன்… அதை இலவசமாக வழங்குவேன் என்று வாய்ச்சவடால் விடும் யோக்கியர்களே… உங்களையொன்று கேட்கட்டுமா? இந்த இலவசங்களையெல்லாம் உங்கள் சொந்த பணத்திலிருந்து கொடுக்கவேண்டியதுதானே? முடியுமா உங்களால்…?. இலவசத்திட்டங்கள் ஒருபக்கம் பல்லிளித்துக்கொண்டிருக்கிறதென்றால் இன்னொரு பக்கம் வரி வதிப்புக்கொள்கைகள்…! அய்யா அரசியல்வாதிகளே… நீங்கள் நிஜமாகவே தமிழை வளர்க்க விரும்பினால் முதலில் தமிழர்களை காப்பாற்றுங்கள். அதை விட்டுவிட்டு உள்ளே எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், திரைப்படத்தின் பெயர் மட்டும் தமிழில் இருந்தால் போதும்… நூறு சதவீத வரிவிலக்கு என்றீர்களே… இது எவ்வளவு முட்டாள்தனமான கொள்கை?. இதனால் அரசுக்கு எவ்வளவு வருவாய் இழப்பு? யாரை திருப்திப்படுத்த இப்படியொரு திட்டம்? திரைப்படத்தின் பெயரை மட்டும் தமிழில் வைப்பதால் தமிழ் எவ்வளவு தூரம் வளர்ந்துவிட்டதென்று எண்ணுகிறீர்கள்? அப்படியே திரைப்படத்தின் பெயரை தமிழில் வைத்தால்தான் தமிழ் வளருமென்றால், தமிழில் பெயர் வைக்காத திரைப்படங்களுக்கு ஒன்றரை மடங்கு கேளிக்கை வரி என்று திட்டம் வகுத்திருக்கலாமே… நல்லவேளையாய் தமிழை வளர்க்கிறேன் பேர்வழியென்று பெயர்ப்பலகையை தமிழில் எழுதும் கடைகளுக்கும் நிறுவனங்களுக்கும் நூறு சதவீத வரிவிலக்கு என்று மற்றுமொரு சூப்பர் டூப்பர் திட்டத்தை அமல்படுத்தாமல், பெயர்ப்பலகையில் கட்டாயத்தமிழ் என்றுமட்டும் சட்டம் நிறைவேற்றி எங்கள் வயிற்றில் பாலை வார்த்ததோடு கஜானாவின் மற்றுமொரு வருமானத்தில் கைவைக்காமல் விட்டீர்களே… அந்தமட்டில் உங்களுக்கு புண்ணியமாய்ப்போக !!! இவையெல்லாம் போக தமிழுக்கென்று கூறி செம்மொழி மாநாடென்று ஒன்று நடத்தி அரசுப்பணத்தை அள்ளி இறைத்தீர்களே…. ஆஹாகா… அமோகம் போங்கள்! பழைய ஆட்கள்தான் அரசு நிலங்களை வளைப்பதிலும் விதவிதமான ஆபரணங்களிலும், வளர்ப்பு மகன் திருமணத்திலும் கஜானாவைக்காலிசெய்தார்களென்றால் இவர்கள் அதைவிட மோசம். (எனக்குத்தெரிந்து வளர்ப்புமகன் திருமணத்திற்கும் செம்மொழி மாநாட்டிற்கும் பெரிய வித்தியாசமிருப்பதாய் தோன்றவில்லை! இரண்டுமே தன் புகழை தானே பறைசாற்றிக்கொள்ள மக்கள் பணத்தை காலிசெய்த நிகழ்வுகளே) இவையனைத்தையும் புறந்தள்ளக்கூடியவை நமது அரசுகளின் சிறப்பு பொருளாதார மண்டலக்கொள்கைகள். விவசாயம், சுற்றுச்சூழல், மக்களின் வாழ்வாதாரங்கள் என்று எதைப்பற்றியும் கவலையின்றி சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும் நமது அரசின் செயல்பாடுகள் மெய்சிலிர்க்கச்செய்யவல்லவை! சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான எல்லா வசதிகளையும் நாட்டின் பின்தங்கிய, விவசாய நிலமல்லாத, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத பகுதிகளில் செய்து கொடுத்தால் பின்தங்கிய பகுதிகளும் பொருளாதார முன்னேற்றம் பெறலாமே பொருளாதார வளர்ச்சியென்பது ஒரு தொழிலை நசுக்கி இன்னொரு தொழிலை உருவாக்குவதல்ல. இன்டஸ்ட்ரியலைசேஸன் எனப்படும் நிறுவனமயமாக்குதலும் விவசாயமும் தராசின் இருபக்க தட்டுகள் போல சமமாய் பாவிக்கப்பட்டால் மட்டுமே எந்தவொரு அரசும் உண்மையான பொருளாதார வளர்ச்சியென்பதை அடையமுடியும். இன்றைய சூழலில் பொதுவாக தனிமனித வருமானமும், மக்களின் வாங்கும் சக்தியும் உயர்ந்திருப்பது போன்ற ஒரு மாயத்தோற்றம் இருந்தாலும் நமது சராசரி தனிநபர் வருமானத்தில் பெரிதாய் மாற்றமொன்றுமில்லை. வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் சதவிகிதத்தில் பெரிதாய் அதிசயங்களொன்றும் நிகழ்ந்து விடவில்லை. மக்களின் வாங்கும் சக்தி வளர்ந்து விட்டதே விலைவாசி உயர்வுக்கு காரணமென்று வெட்கமில்லாமல் பேட்டி கொடுக்கும் அரசியல் கோமாளிகளே… உங்களையொன்று கேட்கட்டுமா?... கொஞ்ச கொஞ்சமாய் நீங்கள் தனியாருக்குத் தாரைவார்த்துக்கொண்டிருக்கும் பெட்ரோலியத்துறைதான் நாட்டின் விலைவாசியிலும், பணவீக்கத்திலும், பொருளாதாரத்திலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் முக்கியப்பங்கு வகிக்கிறதென்பது உங்கள் மரமண்டைகளுக்கு உரைப்பதில்லையா? இல்லை… உரைக்காதது போல் நடிக்கிறீர்களா? மொத்தத்தில் இலவச திட்டங்களை புறந்தள்ளி, வேலைவாய்ப்புகளைப்பெருக்கி, தனியார்மயமாக்கலை நிறுத்தி, பெருநிறுவனங்கள், பணக்காரர்கள், கேளிக்கை சம்பந்தப்பட்ட பணப்புழக்கங்கள் போன்றவற்றிலிருந்து அதிக வரி வசூலும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பயன்பாடுகளில் முடிந்த அளவுக்கு குறைந்த வரி வசூலும் செய்து, ஊழலின்றி ஆட்சிசெய்தால் மட்டுமே நிச்சயமாய் அது பொருளாதாரத்தை நிலைக்கச்செய்யும் நல்லாட்சியாய் அமையக்கூடும்.

அடுத்து சட்டம் ஒழுங்கு…! அதிகம் பேசத்தேவையில்லை. இன்றைய அரசியலில் அடியெடுத்து வைப்பதில் பெரும்பாலானோர் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து மற்றும் சட்டத்துக்கு புறம்பான சம்பாத்தியம் செய்பவர்களே. அரசியல்வாதிகளிடமும் ஆட்சியாளர்களிடமுமே சட்டம் ஒழுங்கு இல்லாதபோது நாட்டில் மட்டும் எங்கிருந்து வரப்போகிறது சட்டம் ஒழுங்கு? இவையில்லாமல் காவல்துறையிலும் அரசியல் புகுந்து அல்லோகலப்படுத்துகிறது. கட்சிப்பாகுபாடும் சாதிப்பாகுபாடும் காவல்துறையிலும் முளைவிட்டு வெகுநாளாகிப் போய்விட்டது!. இன்று காவல்துறையிலிருக்கும் எந்த நேர்மையாளரையும் கேட்டுப்பாருங்கள்… அரசியல் தலையீடின்றி சுயமாய் நடவடிக்கையெடுக்கும் உரிமை அவர்களில் ஒருவருக்குக் கூடயில்லை. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களைக் கைது செய்யவும், அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இவர்களைப் பழி வாங்கவும் காவல்துறை எடுப்பார் கைப்பிள்ளை போல் உபயோகப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. சட்டத்திலும் ஆயிரம் ஓட்டைகளென்று ஆண்டாண்டு காலமாய் பேசிக்கொண்டேதானிருக்கிறோம். ஆனால் எந்த ஆட்சியாளர்களாவது அவற்றை திருத்த நடவடிக்கையெடுத்தார்களா? 1950ம் வருடம் இயற்றப்பட்ட சட்டங்களை அவ்வப்போது சிறு சிறு திருத்தங்கள் மட்டுமே செய்து 2011லும் உபயோகிக்கிறோமே…வேடிக்கையாக இல்லை? எதிர்க்கட்சிகளை பழிவாங்க மட்டும் போடா, தடா, குண்டாஸ் என்று விதவிதமான சட்டங்களை கொண்டுவரும் ஆட்சியாளர்களே… ஏன் மக்களுக்காக எந்தவொரு சட்டதிருத்தங்களும் நீங்கள் கொண்டுவருவதேயில்லை? மக்களுக்காக எந்த சட்டதிருத்தம் கொண்டுவந்தாலும் அது உங்களைத்தான் பாதிக்குமென்பதாலா? வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்பதற்கு சட்டத்தில் வழியில்லையென்கிறீர்கள். கறுப்புபண முதலைகளின் பெயர்களை வெளியிடமுடியாதென்று பகிரங்கமாய் பேட்டியளிக்கிறீர்கள். நீங்கள் என்ன சொன்னாலும் மக்கள் மாக்களாகவும், மௌனவுமாகவேயிருப்பார்கள் என்ற தைரியமா? உங்களுக்கெல்லாம் நிஜமாகவே வெட்கம், மானம், சூடு சொரனை என்று எதுவுமே கிடையாதா? அது சரி… நீங்கள் என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் சாதிக்காகவும், கட்சிக்காகவும், பணத்துக்காகவும் ஓட்டுபோடும் மாக்களிருக்கும் வரை உங்கள் காட்டில் மழைதான்!!! ஏதோ உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய செயல்பாடுகளனைத்தும் எங்கள் வயிற்றில் பாலை வார்ப்பது போலிருந்தாலும் எங்களுக்கு நன்றாகப்புரிகிறது… உங்களது அடுத்த அவசர சட்டதிருத்தம் உச்சநீதிமன்றத்தின் அதிகாரவரம்புகளை குறைப்பதாகக் கூடயிருக்கலாம். நீங்கள் என்ன செய்தாலும் சரி… நிச்சயமாய் ஒருநாள் உங்கள் பெயர்களெல்லாம் சந்தி சிரிக்கத்தான் போகின்றது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எனக்கொரு யோசனை உண்டு. காவல்துறையை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கி நிரந்தரமாய் அவை நீதிமன்றத்தின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் செயல்படச் செய்யலாம். ஆரம்பத்தில் நிர்வாகச் சிக்கல்கள் எழுந்தாலும் போகப்போக நிச்சயமாய் நிர்வாகம் சீர்படலாம். அதே போலத்தான் சட்டங்களனைத்தும் காலத்திற்கு ஏற்றவாறு கடுமையாகவும், பொய்வழக்குகள் போடமுடியாத வகையிலும் சீர்திருத்தப்படல் வேண்டும். என்ன செய்தாலும் ஜாமீனில் வந்துவிடலாமென்ற நிலை மாறி, குற்றம் செய்தால் நிச்சயம் தண்டனையென்ற நிலையை உருவாக்கினால்தான் நமது முன்னேற்றத்திற்கு மூலத்தேவையான சுயவொழுக்கம் உருவாகும்.

ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி, அரசு நிர்வாகம், போக்குவரத்து, மின்சாரம், நெடுஞ்சாலை, சிறுபான்மையினர் நலம், சுற்றுலா என எந்தத் துறையிலுமே எந்த அரசுகளுமே குறிப்பிடத்தக்க திட்டங்களை நிறைவேற்றுவதிலோ இல்லை நிர்வாகச் சீரமைப்பிலோ முனைப்பு காட்டுவதேயில்லை. எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அதில் எந்தத் திருடனை எந்தத் துறைக்கு அமைச்சராய்ப் போட்டால் எவ்வளவு கொள்ளையடிக்கலாமென்று திட்டங்கள் தீட்டுகிறார்களேத் தவிர இவைகளை முன்னேற்ற என்ன செய்யலாம் என்பது பற்றி எவருக்கும் கவலைகளில்லை. கிராமப்புற மேம்பாட்டிற்கு இதுவரையிலான அரசுகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள்தான் என்ன? வெறுமனே மக்கள்தொகைப்பெருக்கத்தின் அடிப்படையில் ஊராட்சிகளை பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் மாற்றுவதால் மட்டுமே என்ன முன்னேற்றங்கள் நிகழ்ந்து விடப்போகின்றன? ஏன் எப்போதுமே எல்லா அரசுகளும் கிராமங்களை மட்டும் மாற்றான்தாய் மனப்பான்மையுடனே நடத்துகின்றன? ஒரு கையில் வெண்ணை மற்றொருகையில் சுண்ணாம்பு என்பது போல் நகரத்திற்கும் கிராமத்திற்கும் பாகுபாடு பார்ப்பது ஏன்? நகரங்களிலும் பெருநகரங்களிலும் முடிந்தவரை முழுநேர மின்சாரம் வழங்கும் அரசுகள் கிராமங்களுக்கு மட்டும் நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் கூட முழுதாய் மின்சாரம் வழங்குவதில்லையே ஏன்? கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உண்டாக்குவதிலும் மேம்படுத்துவதிலும் அரசுகளின் நடவடிக்கைகள் என்ன? நகரங்களின் மீதும் கிராமங்களின் மீதுமான அரசின் பார்வை ஒன்றே என்று எவராலும் வாதிட இயலுமா? உள்ளாட்சி நிர்வாகத் தேர்தல்களையும், உள்ளாட்சி நிர்வாகப் பதவிகளையும் எம்.எல்.ஏ, எம்.பி சீட்டுகளுக்கு நிகராக மாற்றிய சாதனையைத் தவிர இதுவரையிலான அரசுகள் இதில் உருப்படியாய்க் கிழித்ததென்று எதுவுமில்லை!
வருகின்ற அரசுகளனைத்தும் அரசு நிர்வாகத்திற்கென என்ன நடவடிக்கைகள் எடுக்கின்றன? ஒரு அரசோ, அரசு ஊழியர்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்க முடியுமோ அத்தனையும் நமது வரிப்பணத்திலிருந்து வாரி வழங்கி அவர்களை விசுவாசிகளாய் தங்களின் கைப்பாவைகளாய் வைத்துக்கொள்ள முயல்கிறது. மற்றொரு அரசோ அரசு ஊழியர்களின் மேல் எல்லாவித அடக்குமுறைகளையும் அவிழ்த்துவிட்டு அவர்களை தங்களின் அடிமைகளாக வைத்துக்கொள்ள முயல்கிறது. இந்த இருவழிகளிலுமே மக்களுக்கான பயன்களென்பது எதுவுமேயில்லை. அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க இதுவரையிலான அரசுகளின் நடவடிக்கைகள் என்ன? லஞ்சம் கொடுக்காமல் அரசு நிர்வாகத்தில் துரும்பும் அசையாதென்ற நிலை எப்போது மாறப்போகிறது? நிர்வாகச் சீர்கேடுகள் எப்போது சீர்செய்யப்படப் போகின்றன? அரசு நிர்வாகம் மக்களுக்காக பணியாற்றுவதற்காகவே என்ற எண்ணம் எப்போது அரசு ஊழியர்களிடத்தில் விதைக்கப்படப்போகிறது?
போக்குவரத்து மற்றும் மின்சாரம்… அய்யோ பாவம்! ஏனென்றே தெரியவில்லை… யார் ஆட்சிக்கு வந்தாலும் இவைகள் தொடர்ந்து நஷ்டத்திலேயே இயங்கும் மர்மங்கள் மட்டும் புரிபடுவதேயில்லை! தனியார் பேருந்துகள் இலாபத்தில் கொழுத்து வளர்ந்து கொண்டே போகின்றன. அரசுப்பேருந்துகள் நஷ்டத்தின் பிடியில் தேய்ந்து கொண்டே செல்கின்றது. தனியார் பேருந்துகள் எப்படி பராமரிக்கப்படுகின்றன என்பதை பார்த்தாவது போக்குவரத்து கழகங்கள் திருந்தாதா? தேசிய நெடுஞ்சாலைகள் பெரும்பாலும் சுங்கவரிச்சாலைகளாக மாற்றப்பட்டு தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டிருந்தாலும் தரத்தில் பெரிதாய் குறை கூறுவதற்கில்லை. ஆனால் மாநில நெடுஞ்சாலைகள், நகர மற்றும் கிராம உள்வழிச்சாலைகளின் நிலைமை…?அங்கங்கே மேம்பாலங்கள் அமைத்து விட்டால் மட்டும் போதுமா? அட முட்டாள்களே.. முதலில் இந்த சாலைகளின் தரத்தை உயர்த்துங்கள். போக்குவரத்துத்துறையின் பேருந்துகளின் பராமரிப்புக்கான பெருந்தொகை தானாகவே மிச்சமாகத் தொடங்கும். பல மாநிலங்கள் நம்மிடமிருந்து மின்சாரத்தை வாங்கி தங்கள் மக்களுக்கு நியாயமான விலையில் தடங்கலின்றி வழங்குவதோடு இலாபமீட்டியும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் போது நமக்கு மட்டும் ஏனய்யா மின்சார விஷயத்தில் இந்த நிலைமை? மழைக்காலத்தில் எவ்வளவு வெள்ளச்சேதங்கள் வீணடித்துக் கொண்டிருக்கின்றன நம் வாழ்வை? புதிதாய் நீர்த்தேக்கங்களும் நீர் மின் நிலையங்களும் அமைக்கும் எண்ணம் உங்கள் கனவில் கூடத் தோன்றுவதில்லையா? பெருநிறுவனங்களுக்கு மட்டும் பதறியடித்து தடையின்றி மின்சாரம் வழங்கும் உங்கள் மனசாட்சியில் ஒருபோதும் சாமான்யர்கள் குறித்த எண்ணங்கள் நிழலாடுவதேயில்லையா?
இனிவரும் காலங்களிலாவது படித்த இளைஞர்களுக்கு பதவிகளில் வாய்ப்பளியுங்கள். ஆட்சியென்பது உங்கள் வருமானத்திற்கான அதிகாரம் என்ற நிலையை மாறச்செய்யுங்கள். அமைச்சர் பதவிகளை குத்தகைக்கு விடாமல் சுழல்முறை பதவிகளாக்குங்கள். தனியார்மயமாக்கலை முடிந்த மட்டிலும் கைவிட்டு அரசு நிர்வாகங்களைச் சீர்படுத்துங்கள். ஆட்சிப்பதவி பணக்காரர்களுக்கு ஆமாம் போடுவதற்கல்ல, ஏழை மக்களின் மேம்பாட்டிற்கானதென உணருங்கள். இலவசங்கள் ஏழ்மையை ஒழிக்கும் நிரந்தர திட்டங்களல்ல. வேலைவாய்ப்புகளைப் பெருக்கி மக்களை உழைப்பாளிகளாக்குவதே ஏழ்மையை ஒழிக்கும் ஒரே மருந்தெனப் புகட்டுங்கள். கல்வியிலும் மருத்துவத்திலும் தனியார்மயமாக்கலைக் குறைத்துக் கொண்டு அரசாங்கத்தின் கைகளை அகலப்படுத்துங்கள். நிறுவனமயமாக்குதலையும் விவசாயத் தொழில்களையும் இரு கண்களாய் சமமாய் பாவித்து அதற்கான முன்னேற்றத் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துங்கள். அடுத்தவர்களை விமர்சிப்பதையும் குறை கூறுவதையும் நிறுத்தி உங்களுக்கான கொள்கைகளையும் முன்னேற்றத் திட்டங்களை பற்றியுமே பேசுகிற ஆரோக்கிய அரசியலை உருவாக்குங்கள். உங்களால் முடியாத வயதிலும் பதவி மோகத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதை விடுத்து, படித்த தன்னலமற்ற அறிவுஜீவிகளை பதவியில் அமர்த்தத் தொடங்குகள். அரசாங்கம் சீர்பட்டு நிர்வாகத் திறம்பெற்று நிஜமான பொற்கால ஆட்சி அப்போதுதான் அமையத் தொடங்கும்.
இவையெல்லாம் செய்து நல்லாட்சி தருமளவுக்கு இன்றைய அரசியலில் யோக்கியர்கள் எவருமில்லையென்றாலும் நிச்சயமொருநாள் இந்நிலைகள் மாறக்கூடுமென்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை…!!!
------மாறும்வரை தொடரும்…

Sunday, April 10, 2011

மழலை விழுங்கிகள்

மழலை விழுங்கிகள்


மறக்காமலிருக்க வேண்டிய எனது
குழந்தையின் மழலையும்
தங்கத்தினுமுயர்ந்த அதன்
தவழ்நடையும்
அப்பா என்றழைக்கும் அதன்
அமுதமொழியும்
கணநேர மின்னல் போன்ற அதன்
பூஞ்சிரிப்பும்
எழுந்து நிற்க எனை பற்றிக்கொள்ளும் அதன்
பஞ்சு ஸ்பரிசமும்
என் கன்னங்களை எச்சில்செய்யும் அதன்
ரோஜா இதழ்களும்
நவீன ஓவியங்களாய் ரசிக்கத் தோன்றும் அதன்
சின்ன கிறுக்கல்களும்
அம்மா அடித்ததாய் என்னிடம் அளிக்கும் அதன்
செல்லப் புகார்களும்
எதையாவது செய்து கொண்டேயிருக்கும் அதன்
பிஞ்சுக் குறும்புகளும்
ரசிக்கமுடியாமலேயே
கடந்து விடுகின்றன…
இத்தனைநாளாய் என்
நேரம் விழுங்கிக்கொண்டிருந்த
தொலைக்காட்சிபெட்டி, கைப்பேசியுடன்
புதிதாகக் கூட்டு சேர்ந்துகொண்டது
எனது மடிக்கணினியும்!

Wednesday, April 6, 2011

தேர்தல்-2011-வாக்களிப்போம் வாருங்கள்…

தேர்தல்-2011-வாக்களிப்போம் வாருங்கள்…
வாக்கு-ஒரு ஜனநாயக கடமை&உரிமைஇன்றைய சூழலில் படித்தவர்களாகிய நம்மில் எத்தனை பேர் வேலை செய்யும் வெளியிடத்திலிருந்து விடுப்பில் வந்து வெய்யிலில் வரிசையில் நின்று வாக்களிக்கத்தயாராக உள்ளோம்? நமக்கு வாக்களிக்கும் வயது வந்ததிலிருந்து இதுவரை வந்த தேர்தல்கள் எத்தனை… அதில் நாம் எத்தனை முறை வாக்களித்துள்ளோம்? என்பதையெல்லாம் ஒரு முறை சுயபரிசோதனை செய்துவிட்டு தொடர்ந்து படிக்கலாம்!

முதலில் நம்மனைவருக்கும் தெரிந்த ஒரு சின்ன செய்தி-உதாரணமாக வரும் தேர்தலில் 60% வாக்குகள் பதிவாவதாக வைத்துக்கொள்வோம். அதில் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறுகின்ற ஒரு கட்சியோ இல்லை ஒரு கூட்டணியோ ஆட்சியைக்கைப்பற்றி நம்மை ஆளப்போகிறவர்கள் ஆவார்கள். இது வேடிக்கையாக இல்லை?

வெறும் 30% வாக்குகளை பெற்றவர்கள் மீதியிருக்கும் 70% மக்களையும் சேர்த்து 100% மக்களை ஆளப்போகிறார்கள்! வேட்பாளர்கள் யோக்கியமில்லை… கட்சிகள் சரியில்லை என்று காரணங்களை அடுக்கும் நண்பர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது ஆரோக்கியமான ஜனநாயகம் வேண்டுமென்றால் முதலில் மாறவேண்டியதில் தலையாயது வாக்களிக்கும் சதவீதம்தான். யோக்கியமான தன்னலமற்ற படித்த வேட்பாளர்கள் வேண்டும்தான்… இல்லையென்று என்னால் மறுக்க இயலாது. அது எப்போது எப்படி நடக்கும் என்பது கட்டுரையின் பின்பகுதியில் தெரியவரும்.

கக்கன் மற்றும் காமராசர் பற்றி நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் நன்மாறன், வெற்றிசெல்வி போன்ற ( ஏதோ 1950ம் வருட ஆட்களோயென்று எண்ண வேண்டாம் 21ம் நூற்றாண்டு மனிதர்களே! ) சட்டசபை உறுப்பினர்களைப்பற்றி எத்தனை பேருக்குத்தெரியும்? இவர்கள் சட்டசபை உறுப்பினர்களாகயிருந்தும் இன்றும் வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டு சாதாரண பேருந்தில் பயணித்து எம்.எல்.ஏ என்ற எந்தவித சுவடுமின்றி மக்கள் தொண்டாற்றி வருகிறார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இவர்களைப்போன்ற எளிமையானவர்கள் இன்னும் சிலரும் இருக்கிறார்கள்!

நாம் இந்த கட்டுரையை மேற்கொண்டு தொடருமுன் நாம் செய்ய வேண்டிய முக்கிய வேலை- இது போன்ற எளிமையானவர்களை தங்களின் பிரதிநிதிகளாய் தேர்ந்தெடுத்த அந்தந்த தொகுதி மக்களுக்கு நம் சிரம் தாழ்ந்த வணக்கங்களை உரித்தாக்குவோம்.

வெறும் உள்ளாட்சி பிரதிநிதித்தேர்தலுக்கே இலட்சங்களை செலவு செய்து பதவிக்கு வந்தவுடன் அமைச்சர் பெருமக்கள் போன்ற பில்ட்அப் உடன் வலம் வந்து கோடிகளைத்திருடிச்சேர்க்கும் ஈனப்பிறவிகளுக்கு மத்தியில் இது போன்ற மக்கள் சேவகர்கள் இன்றுமிருக்கிறார்களென்றால் இது வியக்கத்தகு விஷயமே! ஆனால் ஒரு நிதர்சனமான உண்மை என்ன தெரியுமா? நன்மாறன், வெற்றிசெல்வி போன்றோர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட இடம் கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் நம்மக்கள் அது போன்ற வேட்பாளர்களை எத்தனை தொகுதியில் வெற்றி பெறச்செய்வார்கள்? என்பதெல்லாம் பதில் கணிக்கயியலா கேள்விகள்….எதனால் அப்படி?.......

ஏனென்றால் இன்றைய சூழலில் வாக்களிப்போர்களில் பெரும்பான்மையானோர் அரசியல் சாதி போன்றவற்றை அடிப்படையாகக்கொண்ட அடிமட்டத்தொண்டர்களே! அவர்கள் வேட்பாளர்களின் தராதரம், நேர்மை, தகுதி என எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. அவர்களின் வாக்குகள் பெரும்பாலும் வேட்பாளர்களின் சாதி மற்றும் கட்சியின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. 100% வாக்களிப்பு என்ற அதிசயம் ஆரம்பமானாலே இந்தியாவின் அரசியல் சுத்தப்படுத்தப்பட்டு எதிர்காலம் உறுதிப்படுத்தப்படும். கட்டாய வாக்களிப்பை சட்டமாக்கலாமே? என்று நீங்கள் கேட்கலாம். அதில் அரசியல்வாதிகள் தவிர பெரும்பாலானோர்க்கு நிச்சயம் உடன்பாடிருக்கும். ஆனால் அப்படியொரு சட்டத்தை நமது அரசியல்வாதிகள் நிறைவேற்றுவார்களென்று நம்பினால் நம்மைப்போன்ற அப்பாவிகள் வேறுயாருமில்லை! ஆகவே விழிப்புணர்ச்சியினால் மட்டுமே 100% வாக்களிப்பை சாத்தியப்படுத்தயியலுமென்பது மறுக்கயியலாத உண்மையாகும்.

ஆயிரம் நெறி தவறியவர்கள் தேர்தலில் ஜெயிக்கட்டும். அந்த நிலை நிச்சயம் ஒருநாள் மாற்றப்படும். ஆனால் ஒரு நேர்மையாளர் கூட தோற்காமலிருப்பது நம் கையில்தானிருக்கிறது.

ஒவ்வொரு நேர்மையாளரின் வெற்றியும் நம்மைப்போன்ற படித்த பகுத்தறிவாளர்களின் வாக்குகளிலேயே அடங்கியிருக்கிறது. எல்லாத்தொகுதிகளிலும் நேர்மையான வேட்பாளர்கள் இல்லாமல் போகலாம். அதற்காக எவனுமே யோக்கியமில்லை… எதற்காக நான் வாக்களிக்கமெண்டுமென்பது மிகத்தவறான வாதமாகும். எப்படியென்கிறீர்களா?... ஒரு சின்ன லாஜிக்… இது வேடிக்கையாகக்கூடத்தெரியலாம். ஆனால் நிச்சயம் நடக்கும்! ஒரு தொகுதியின் வேட்பாளர்களில் ஒருவர் கூட நேர்மையாளரில்லை என்கிற பட்சத்தில் கட்சி சாதி போன்றவற்றைப்புறந்தள்ளி போட்டியிடுபவர்களில் கொஞ்சமாவது பரவாயில்லை ரக வேட்பாளரை வெற்றி பெறச்செய்வோம். இதன் மூலம் வெற்றி பெற்றவர்க்கும் தோற்றுப்போனவர்களுக்கும் தேர்தலில் வெல்ல நேர்மை அவசியமென்ற செய்தி உணர்த்தப்படும். இதன்மூலம் தோற்றுப்போனவர்கள் எதிர்காலத்தில் வெற்றி பெறவும் வெற்றி பெற்றவர் மீண்டும் வெற்றியை தக்கவைத்துக்கொள்ளவும் நேர்மையை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். இவர்களனைவரும் உடனே புத்தராவார்களென்று நான் சொல்லவில்லை.

கூவத்தை சுத்தப்படுத்த வெறும் விவாதங்களாலும் எழுத்துக்களாலும் மட்டுமே முடியுமா?... இல்லை… தேவை நடவடிக்கை! முதலில் கூவத்தில் கலக்கும் கழிவு நீரைத்தடுத்து மாற்று வழிப்படுத்தவேண்டும். இரண்டாவதாக கூவத்தை சுத்தப்படுத்தி தூர்வாரியாக வேண்டும். இறுதியாக மழைநீர் மொத்தமும் கூவத்தை வந்தடைய வகை செய்திட வேண்டும். இதேதான் சாக்கடை எனப்படும் அரசியலுக்கும் நம்மால் கடைபிடிக்கப்பட வேண்டியவை. முதலில் அசுத்தமானவர்கள் தேர்தலில் தோற்கடிப்பட்டு அரசியல் அவர்களுக்கு நிரந்தரமில்லையென்ற நிலையை உண்டாக்கி அவர்களை மாற்று வழிப்படுத்தவேண்டும். இரண்டாவதாக நேர்மையாளர்கள் ஒருவர் கூட தோற்கடிக்கப்படாத நிலையை ஏற்படுத்தியாக வேண்டும். இறுதியாக படித்தவர்கள், பகுத்தறிவாளர்கள், நேர்மையாளர்களுக்கு மக்கள் தங்களை ஏற்றுக்கொண்டு ஜெயிக்க வைப்பார்களென்ற நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்கள் மொத்தமும் அரசியலை வந்தடைய வகை செய்திட வேண்டும்.

இவ்வாறான வழிவகையினால் மட்டுமே படித்த தன்னலமற்ற நேர்மையாளர்கள் அரசியலுக்கு வருவதும் ஆட்சிக்கு வருவதும் நடக்கும் (நான் கட்டுரையின் ஆரம்பத்திலேயே படித்த தன்னலமற்ற நேர்மையாளர்கள் அரசியலுக்கு வருவது எப்போது எப்படி நடக்குமென்பது கட்டுரையின் பின்பகுதியில் தெரியவருமென்றிருந்தேன்). எனது விவாதங்கள் இப்போது உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்குமென்று நம்புகிறேன்.

ஆதலால் வருமான வரி கட்டுவதைத்தவிர நம் தாய்நாட்டுக்கு நாம் இதுவரை செய்தது என்னவென்று ஒருகணம்… ஒரேயொரு கணம்… மனப்பூர்வமாய் சிந்தித்து நான் ஒருவன் ஓட்டு போடாததால் என்னவாகிடப்போகிறதென்ற எண்ணத்தை மாற்றி சிறுதுளி பெருவெள்ளம் போல் நம் ஒவ்வொருவரின் நடுநிலையான வாக்கும் நம் தேசத்தின் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை கொண்டதென்பதை உணர்ந்து வேண்டா விவாதங்களையும் காரணங்களையும் தவிர்த்து தவறாமல் வாக்களியுங்கள் நண்பர்களே….

மீண்டும் கூறுகிறேன்…. வாக்களிப்பது ஜனநாயக உரிமை மட்டுமல்ல. நம் தேசத்திற்கு நாம் செய்யும் சேவையும்… நாம் செய்ய வேண்டிய கடமையும்கூட…!
ஜெய்ஹிந்த்!