SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, March 29, 2011

ஓர் ஈழத்து இடிந்த வீடு…

ஓர் ஈழத்து இடிந்த வீடு…


எதைத்தேடுகிறேன் நான்-என்
இடிந்து போன வீட்டில்
இத்தனை ஆண்டுகள் கழித்து…?

அன்னையின் கையால் அமுதளித்த-அந்த
ஈயக்கிண்ணத்தையா?
அமரவைத்து எனை அக்கா ஆட்டிய-அந்த
மரக்குதிரையையா?
அகரமுதல எழுத்தெழுத அப்பா அளித்த-அந்த
கல்சிலேட்டையா?
அண்ணனுக்குப்பொருந்தாமல் நானனிந்த-அந்த
முதல் பேண்ட்டையா?

எதைத்தேடுகிறேன் நான்-என்
இடிந்து போன வீட்டில்
இத்தனை ஆண்டுகள் கழித்து…?

தாத்தாவின் மடியமர்ந்து கதைகேட்ட-அந்த
நிலா முற்றத்தையா?
நெற்றித்தழும்பை நினைவுப்பரிசளித்த-அந்த
நிலைப்படிக்கல்லையா?
ஓய்வின்றி அம்மா துவைக்கும்-அந்த
துவைப்புக்கல்லையா?
ஊனமானதும் அப்பாவின் உலகமாகிப்போன-அந்த
சாய்வு நாற்காலியையா?

எதைத்தேடுகிறேன் நான்-என்
இடிந்து போன வீட்டில்
இத்தனை ஆண்டுகள் கழித்து…?

அதோ அங்கிருக்கிறது-என்
இடிந்து போன வீட்டில்
இத்தனை நேரம் நான் தேடியது…

இடிந்து தொங்கும்
கூரையின் நேர் கீழே……

‘’ அப்பாவும் அம்மாவும்
அக்காவும் அண்ணனும்
தாத்தாவின் மடியில் நானும்
சிரித்த முகமாய்
கருப்பு வெள்ளையில்
தூசு படிந்த புகைப்படம்…’’ ,
காற்றோடு கலந்தாட
கனக்கும் இருதயம் கசங்கி
உதிரமெல்லாம் கண்ணீராய்
கருவிழிக்குள் ஊற்றெடுக்க…
ஏனோ என் நெஞ்சம்
‘’ இடிந்த வீடாய் நொறுங்கிப்போனது…’’ ;

1 comment:

  1. எத்தனை வீடுகள் ஓவ்வொன்றும் ஓரு கதை சொல்லும் 
    தாலாட்டிய தாயின் மடி வீடுகள் கானாபிரபா சொல்வதுபோல் வாழ்ந்து கெட்டவர்களின் வரலாற்றை கூறும் வீடுகள்
    என் வீடு உருக்குழைந்த பாட்டியின் தேகம்போல் குண்டுபோட்டு குப்புறகிடந்த கோலத்தைப்பார்த்து ஓருவாரம் பித்துப்பிடித்து திரிந்த வேதனையை யாரிடம் சொல்வேன் தான் தண்ணீர்கொண்டுவந்து அரிகல் அரிய உதவிசெய்து பார்த்துப்பார்த்து கட்டியவீடு களையிழந்த அரன்மனைபோல் கிடந்ததை தாய் தாங்கமாட்டா என்று வீட்டுநிலத்தைப்பார்க்கவிடாமல் புலம்பெயர்ந்து தொடர்மாடியில் நான்கு அறையின்னுள் வாழும் தாயின் சோகம் எத்தனை என்றுரைப்பேன் வாருங்கள் புதுமனைகட்டித்தருகிறோம் என்பவர்கள் இழந்துபோன அந்த நினைவுகள்,சந்தோஸங்களை மீட்டுத்தருவார்களா! எத்தனை கேள்விகள் இடிந்த வீட்டினுள் நண்பரே வாழ்த்துக்கள் கூறி உணர்வுகளை புன்படுத்தமுடியாது என்னால்!

    ReplyDelete