SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, March 29, 2011

ஓர் ஈழத்து இடிந்த வீடு…

ஓர் ஈழத்து இடிந்த வீடு…


எதைத்தேடுகிறேன் நான்-என்
இடிந்து போன வீட்டில்
இத்தனை ஆண்டுகள் கழித்து…?

அன்னையின் கையால் அமுதளித்த-அந்த
ஈயக்கிண்ணத்தையா?
அமரவைத்து எனை அக்கா ஆட்டிய-அந்த
மரக்குதிரையையா?
அகரமுதல எழுத்தெழுத அப்பா அளித்த-அந்த
கல்சிலேட்டையா?
அண்ணனுக்குப்பொருந்தாமல் நானனிந்த-அந்த
முதல் பேண்ட்டையா?

எதைத்தேடுகிறேன் நான்-என்
இடிந்து போன வீட்டில்
இத்தனை ஆண்டுகள் கழித்து…?

தாத்தாவின் மடியமர்ந்து கதைகேட்ட-அந்த
நிலா முற்றத்தையா?
நெற்றித்தழும்பை நினைவுப்பரிசளித்த-அந்த
நிலைப்படிக்கல்லையா?
ஓய்வின்றி அம்மா துவைக்கும்-அந்த
துவைப்புக்கல்லையா?
ஊனமானதும் அப்பாவின் உலகமாகிப்போன-அந்த
சாய்வு நாற்காலியையா?

எதைத்தேடுகிறேன் நான்-என்
இடிந்து போன வீட்டில்
இத்தனை ஆண்டுகள் கழித்து…?

அதோ அங்கிருக்கிறது-என்
இடிந்து போன வீட்டில்
இத்தனை நேரம் நான் தேடியது…

இடிந்து தொங்கும்
கூரையின் நேர் கீழே……

‘’ அப்பாவும் அம்மாவும்
அக்காவும் அண்ணனும்
தாத்தாவின் மடியில் நானும்
சிரித்த முகமாய்
கருப்பு வெள்ளையில்
தூசு படிந்த புகைப்படம்…’’ ,
காற்றோடு கலந்தாட
கனக்கும் இருதயம் கசங்கி
உதிரமெல்லாம் கண்ணீராய்
கருவிழிக்குள் ஊற்றெடுக்க…
ஏனோ என் நெஞ்சம்
‘’ இடிந்த வீடாய் நொறுங்கிப்போனது…’’ ;

ஒரு காதலி(யி)ன் மரணம்…

ஒரு காதலி(யி)ன் மரணம்…


குளத்துக்கர மேட்டுனில
குடமா நா காத்திருக்கேன்,
என்னுசிர தவிக்கவிட்டு
தனியா நீ போனதெங்கே?....
தங்கமே வந்து சொல்லடி;

அத்தானின்னு ஆயிரம் முற
ஆசயா நீ அழைச்சிருக்கே,
ஆத்தோரம் அஸ்தியிட
எனயிங்கு தனியாளா
தவிக்கவிட்டுப் போனதெங்கே?...
தங்கமே வந்து சொல்லடி;

அப்பங்காரன் அடிச்சாலும்
ஆத்தாக்காரி தடுத்தாலும்
தாமரையா நீயிருந்தா
தண்ணீரா நானிருப்பேன்னு
சத்தியம் செஞ்சித்தந்தியே
சவமா நீ போனதெங்கே?...
தங்கமே வந்து சொல்லடி;

நீயில்லா உலகம்-எனக்கு
நீரில்லா அகிலம்;

ஒனமட்டும் விட்டுப்புட்டு
உசிரோட நானிருந்து
உலகசுகம் பெறுவேன்னு
ஒருநாளும் நெனக்காதே;

கம்மாக்கர ஓரத்துல
கால்கடுக்க நின்னாலும்
காணாத சுகங்கண்டோம்
வாய்வலிக்க கதபேசி;

அங்கயே காத்திருந்து
உசிர் விடுவேன் ஒனக்காக,
ஒனவந்து சேந்திடுவேன்
ஒருநாளில் நெசமாக;

‘’ மரணத்த மரிக்கவெப்போம்
மண்ணுக்குள்ளும் நாம காதலிச்சி…
மக்களெல்லாம் சொல்லுறாக
திரியிறேனாம் நான் புத்தி பேதலிச்சி ‘’…!!!

ஒரு காதலியின் கல்யாணம்...-4

ஒரு காதலியின் கல்யாணம்…


என் உயிர் குடித்த பாதகியே-உன்
நினைவலைகளினால் நித்தமும்
செல்லரித்துக்கொண்டிருக்கும்
ஈரம் போன இதயமிது!

காதல் மாயையில் காலிடறி
உள்ளிழுத்து உருவான
கோடி பைத்தியங்களில்
நானும் ஒருவனா?

உன் பார்வை வெளிச்சத்தில்தான்
என் இதயப்பூ மலர்ந்தது;
உன் விழிகள் திறக்கையில்தான்
என் இரவுப்பொழுது புலர்ந்தது;

கலைந்து போன காதலுக்காக
சிதைந்து போன இதயத்தோடு
தொலைந்து போன நாளைத்தேடினால்
நானும் ஒரு பைத்தியம்தான்;

எப்படி முடிந்தது உன்னால்…?
இப்படி மாறி வாழ்வதற்கு!

என் வாழ்க்கை வேர்களை
வெட்டி வீசியவளும் நீயே;
என் வாலிபக்கனவுகளை
கசக்கியெறிந்தவளும் நீயே;

எத்தனை முறை ஏற்றிக்கொண்டேன் வஞ்சம்,
ஏனோ மறக்க மறுக்கிறது நெஞ்சம்;

நினைவுகளில், அறிவுகளில்
சுவாசங்களில், சுகங்களிலென்று-என்
அன்றாட வாழ்வின்
ஒவ்வொரு உணர்வுகளிலும்
ஒவ்வொரு உருவாய் வந்து
உயிர் குடித்துக்கொண்டிருக்கிறாய்…
ஒவ்வொரு நாழியும்,
ஒவ்வொரு நாளிலும்;!

கண்கள் சந்தித்ததினால்தான் நாம்
காதலித்தோமென்றால்-நான்
குருடனாகவே பிறந்திருக்கலாமென்று
தோன்றுகிறது!
இதயங்கள் இடம் மாறித்தான்-நாம்
காதலித்தோமென்றால்-நான்
பிறக்காமலேயே இறந்திருக்கலாமென்று
தோன்றுகிறது!

எல்லாம் முடிந்து
எங்கோ நீ சென்ற பிறகும்…
எப்படியென்று தெரியவில்லை
உன்னுடன் எனக்கு காதல் வந்தது?!

உன்னுடன் பழகிய வசந்தநாட்களே
இன்றெனது வாழ்க்கையின் அங்கமாகி
என் வாலிப நாட்களுக்கு கொள்ளிவைத்து
நிகழ்தினங்களை இருள் நிறங்களாக்குகிறது;

மழைக்கு ஒதுங்கும்
பெண்களை பார்க்கும் போதெல்லாம்-நம்
முதல் சந்திப்பு நினைவுகளில்
இதயம் ஈரமாகிப்போகின்றது;
நிலத்தில் கிடக்கும்
காலடித்தடங்களெல்லாம்-நின்
மலர்ப்பாதங்களை நினைவூட்டி
நெஞ்சை மிதித்து ரணமாக்கிச்செல்கிறது;
சிரித்துப்பேசும்
பெண்களை பார்க்கும் போதெல்லாம்-என்
கண்பார்த்து மலரும் உன் தாமரைமுகம்
கோபக்கொள்கைகளை தகர்த்தெறிகிறது;
எப்போதாவது கண்படும்
என் உள்ளங்கையை காணும்போதெல்லாம்-என்
பெயரையெழுதி முத்தமிட்ட உன்னுதடுகள் நினைந்து
உயிருலர்ந்து விழி நனைகின்றது;

ஒவ்வொரு அசைவிலும் உயிர் கலக்கும்
உன் பழைய நினைவுகள்
ஒன்றில் மட்டும் இன்றுவரை
உயிர் புகுந்து உனர்த்துவதில்லை;
ஏனோ தெரியவில்லை……
எத்தனைபேரின் கல்யாணத்தைப்பார்த்தாலும்-நீ
வேறொருவன் கைப்பிடித்தது மட்டும்
இன்றும் என்னிதயத்தில்
உரைப்பதேயில்லை……!!!

Saturday, March 26, 2011

கடவுளா… வெறும் கல்தானா?....!

கடவுளா… வெறும் கல்தானா?....!


ஆத்திகவாதிகள், நாத்திகவாதிகள்… நீங்கள் எவராயினும் சரி… இதப்படிங்க முதலில்…

கடவுளேயில்லை… கோயில்களில் இருப்பதெல்லாம் வெறும் கற்சிலைகளேயென்கிறது ஒரு கூட்டம். இல்லையில்லை அவனின்றி அணுவும் அசையாது… எல்லாம் இறைவன் செயலே என்கிறது இன்னொரு கூட்டம்… எதை நம்புவது? எப்படி நம்புவது? எதனால் நம்புவது?...

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விக்கு முன் நாம் விடை தெரிந்து கொள்ள வேண்டிய கேள்விகள் ஏராளம்.
அறிவியல் பூர்வமான கேள்விகள் நிறைய உண்டு. அண்டவெளியையும் கிரகங்களையும் உருவாக்கியது யார்? உயிரினங்களை உருவாக்கியது யார்? பாக்டீரியாவிலிருந்து முதல் உயிரி தோன்றியதென்றால் அந்த பாக்டீரியாவை உருவாக்கியது யார்? பாக்டீரியா இயற்கையிலிருந்து உருவானதென்றால் அந்த இயற்கையை படைத்தது யார்? இப்படியான அறிவியல் ரீதியான தர்க்கத்தில் தொடர்சங்கிலி கேள்விகள் வந்து விழுந்துகொண்டேயிருக்கும். நாம் பார்க்கப்போவது அறிவியல் ரீதியான கேள்விகளல்ல! பின்னே?....

நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்?
சாமியும் ஆசாமியும் ஒன்றாகுமா? – இப்படியான ஒரு சில கேள்விகளிலேயே நமது இந்தக்கட்டுரையின் பதில் அடங்கியிருக்கிறது.

கடவுள் என்னுடன் இருந்து எனது முயற்சியையும் கடின உழைப்பையும் வெற்றியடையச்செய்வார் என்று நம்பினால் அது தன்னம்பிக்கையுடன் கூடிய நம்பிக்கை. எந்தவித முயற்சியும் உழைப்புமின்றி கடவுளிருக்கிறார்… அவர் எனக்கு வெற்றியைத்தருவார் என்றால் அதுதான் மூடநம்பிக்கையின் ஆரம்பப்புள்ளி.

தேர்வெழுதச்செல்லும் ஒருவன் இரவெல்லாம் நன்றாகப்படித்து தேர்வுக்குத்தயாராகி காலையில் கோயிலுக்குச்சென்று வணங்கிவிட்டுத் தேர்வுக்குச் செல்லும்போது அவன் மனநிலையில் ‘’நாம் நன்றாகப்படித்திருக்கிறோம்’’ என்ற தன்னம்பிக்கையோடு ‘’நாம் கடவுளை வணங்கியிருக்கிறோம்… கடவுள் நம்மை வெற்றியடையச்செய்வார்’’ என்ற நம்பிக்கையும் சேர்ந்து அவனுக்கு அமைதியான ஆக்கப்பூர்வமான மனநிலையைத்தந்து அவனை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்கிறது. இதே நிலையிலிருக்கும் மற்றொருவன் தேர்வுக்குப்படிக்காமல் தயாராகாமல் இரவெல்லாம் கடவுளின் நாமம் பாடி, விடிந்ததும் கோயிலுக்குச்சென்று கடவுளை வணங்கிவிட்டு நேரே தேர்வறைக்குச்சென்று விட்டால் அவன் நிலையென்ன என்பது குறித்து விளக்கம் தேவையா? அவன் தேர்வில் முதன்மாணவனாக வெற்றிபெறுவானென்று நம்புவார் எவரேனுமுண்டோ? செய்யும் தொழிலே தெய்வம்; அன்பே சிவம்; எல்லாம் அவன் செயல்; இப்படி கடவுளைப்பற்றி கணக்கிலடங்கா சொற்றொடர்கள் உண்டு. அவற்றை நாம் ஆராயப்போவதில்லை.

நாம் அலசப்போகும் ஒற்றை வாக்கியம் ‘’நம்பிக்கையே கடவுள்’’.

எனக்குத்தெரிந்த நகைச்சுவையான கதையொன்று உண்டு. ஒருமுறை வெளியூர் சென்று திரும்பிக்கொண்டிருந்த ஒருவன் தனது ஊருக்குச்செல்லும் வழியிலுள்ள மலைப்பாங்கான காட்டை கடக்கும்முன் இருள் சூழ்ந்து கொண்டது. இன்னும் சிறிது நேரம் நடந்தால் ஊரை நெருங்கிவிடலாமென்ற நிலையில் அவன் மனம் காட்டிலேயே இரவைக்கழிக்க விரும்பவில்லை. ஆகவே இருளிலும் தொடர்ந்து நடந்து ஊரையடைந்து விட முடிவுசெய்து தொடர்ந்து நடக்கத்தொடங்கினான். அது மலைப்பாங்கான காட்டுப்பகுதியென்பதால் இருளில் உத்தேசமான நடையில் பள்ளமும் மேடும் மாறி மாறிக்கடந்தன அவனது கால்களில்.

இருளில் திடீரென நிலைதடுமாறி ஏதோவொரு பெரும்பள்ளத்தில் தலைகுப்புற விழத்தொடங்கினான் அவன். நீண்ட நொடிகளுக்கு மேலிருந்து கீழ்நோக்கி விழுந்து கொண்டேயிருந்த அவன் எப்படியும் எலும்புகூட மிஞ்சாது என்ற பயத்தில் கடவுளே காப்பாற்று என்று அலறினான். கைகால்களை பரப்பியபடி கீழ் நோக்கி விழுந்து கொண்டிருந்த அவன் கைகளில் திடீரென்று ஒரு மரக்கிளை பிடிபட்டது. தப்பித்தோம் பிழைத்தோமென அம்மரக்கிளையை கெட்டியாகப்பற்றிக்கொண்டு தொங்கத்தொடங்கினான். நேரம் செல்லச்செல்ல காட்டுவிலங்குகளின் சத்தமும் கைகளின் வலியும் அவனைக் களைப்படையச்செய்தாலும் எங்கே கைகளை விட்டுவிட்டால் பள்ளத்தில் விழுந்து சிதறிச்சாவதன்றி பிழைக்கவழியில்லையென்ற பயத்தில் மரக்கிளைகளை இன்னும் கெட்டியாகப்பற்றிக்கொண்டு தொங்கினான். அந்தப்பயத்திலும் பனியிலும் இருட்டிலும் அவனது மனம் மட்டும் கடவுளே காப்பாற்று என்று வேண்டிக்கொண்டேயிருந்தது.
நள்ளிரவு தாண்டிய பின்னிரவில் திடீரென அவனுக்கு காட்சியளித்த கடவுள் மகனே என்ன ஆயிற்று உனக்கு? என்றார். அதற்கு அவன் ‘’அய்யா கடவுளே நான் வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் இருளில் மலைப்பாதையில் காலிடறி இந்த அதள பாதாளத்தில் விழ நேர்ந்தது. எப்பிறப்பில் நான் செய்த புண்ணியமோ… பள்ளத்தில் விழுந்து சாகாமல் இந்த மரக்கிளையைப்பிடித்துக்கொண்டு நீண்ட நேரமாய்த் தொங்கிக்கொண்டிருக்கிறேன். எப்படியாவது என்னைக்காப்பாற்றுங்கள் கடவுளே’’ என்று கெஞ்சினான். உடனே கடவுளும் ‘’ சரி மகனே… நீ தொங்கிக்கொண்டிருக்கும் உனது கைகளை விடு. நான் உன்னைக்காப்பாற்றி உனது வாழ்வு சிறக்க உனக்கொரு வரமும் தருகிறேன்’’ என்றார். இவனோ ‘’ அய்யா… நானே அதளபாதாளத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறேன். என்னைப்போய் கைகளை விடச்சொல்கிறீர்களே… எப்படி முடியும்?. நீங்கள் முதலில் என்னைக்காப்பாற்றுங்கள். பிறகு நான் கைகளை விடுகிறேன் ’’ என்றான். ஆனால் கடவுளோ ‘’ இல்லை மகனே… நீ முதலில் கைகளை விடு. நான் உன்னைக்காப்பாற்றுகிறேன் ’’ என்றார். இவனோ ‘’ இல்லையில்லை… முதலில் நீங்கள் என்னைக்காப்பாற்றுங்கள் ‘’ என்றான்.

இப்படியான உரையாடலிலேயே விடியும் நேரம் நெருங்கிப்போனது. கடவுள் அவனிடம் ‘’ மகனே, இறுதியாய் கேட்கிறேன். உனது கைகளை விட்டாயானால் நான் உன்னைக்காப்பாற்றி உனக்கொரு வரமும் தருகிறேன். விடுகிறாயா? இல்லையா? ‘’ என்றார். இவனோ ‘’ இல்லையில்லை… முதலில் நீங்கள் என்னைக்காப்பாற்றுங்கள். அதன் பிறகு நான் கைகளை விடுகிறேன் ‘’ என்றான். கோபமாகிப்போன கடவுள் ‘’ சரி… நீ என்னை நம்பவில்லையல்லவா?... உன் விதிப்படி எல்லாம் நடக்கட்டும் ’’ என்று கூறிவிட்டு மறைந்துபோனார். இவனோ ‘’ நம்மை காப்பாற்ற வந்த கடவுளும் மறைந்துவிட்டார்… நமக்கு அவர் தருவதாய்ச்சொன்ன வரமும் இனி கிடைக்கப்போவதில்லை… என்ன செய்யப்போகிறோமோ? ‘’ என்று பயந்துகொண்டே உயிரைக்காப்பாற்றிக்கொள்ள தொடர்ந்து தொங்கிக்கொண்டிருந்தான்.

எப்படியோ நேரம் கடந்து பொழுதும் புலர்ந்து சூரியனும் உதித்தது. தொங்கிக்கொண்டிருந்த கைகளின் வலி தாங்கமுடியாமல் ‘’ இனி எவரும் நம்மைக்காப்பாற்றப்போவதில்லை, நமக்கு மரணம் நெருங்கிவிட்டது ‘’ என்ற பயத்துடன் நாம் எவ்வளவு உயரத்தில்தான் தொங்கிக்கொண்டிருக்கிறோமென்று கீழே குனிந்து பார்த்தபோதுதான் இரவெல்லாம் தெரியாதது வெளிச்சத்தில் தெரிந்தது… தரைக்கும் அவன் கால்களுக்கும் இருந்த இடைவெளி வெறும் மூன்றடிகூட இல்லை……!!!

இந்தக்கதையை வெறும் நகைச்சுவையாக மட்டும் கருதாமல் அதிலிருக்கும் சில சங்கதிகளைச்சிந்தியுங்கள். எளிதாகப்புரிபடும் உங்களுக்கு ‘’நம்பிக்கையே கடவுள் ‘’.

ஆதிகாலத்திலிருந்து நமக்கு கூறப்பட்ட சில பழக்கங்களை அலசுவோம். ‘’ நல்ல பாம்பை அடித்துக்கொன்றால் அதை அப்படியே போட்டுவிடாமல் பாலும் பழமும் ஊற்றி புதைக்கவேண்டும். எரிக்கவும் கூடாது. அவ்வாறு செய்யாவிடில் பாம்பு நம்மை பழிவாங்கிவிடும் ‘’ என்பார்கள். மெத்தப்படித்த நம்மில் பலரும் இது ஒரு வடிகட்டிய மூடநம்பிக்கை என்போம்… அப்படித்தானே?

அதுதானில்லை! நல்லபாம்பைக் கொன்றுவிட்டு அதை அப்படியே போட்டுச்சென்றால் அதன் விஷம் காற்றில் கலக்கவோ இல்லை எவராவது தெரியாமல் மிதித்து அதன் விஷம் காலில் ஏறவோ வாய்ப்புகள் மிக அதிகம். அதேபோலத்தான் அதை எரித்தாலும் அதன் விஷம் காற்றில் கலக்க வாய்ப்புண்டு. ஆனால் இதையெல்லாம் எடுத்துக்கூறி இப்படி இப்படி நடந்துவிட வாய்ப்புண்டு, அதனால் அதை புதைத்துவிடு என்றால் நம்மில் எத்தனைபேர் அதை கேட்டு நடப்பார்களென்று நினைக்கிறீர்கள். அதனால்தான் ‘’நல்லபாம்பு சாமிப்பாம்பு’’, ‘’பழிவாங்கும் பாம்பு’’ என்பன போன்ற கதைகள் புகுத்தப்பட்டன. அதற்காக புற்றுக்குள் பால் மற்றும் முட்டை ஊற்றுவதையும், பாம்பைப்பார்த்தவுடன் ‘’அம்மா… நாகம்மா’’ என்று விழுந்து வணங்குவதையும் இந்த வரிசையில் சேர்க்கமுடியாது. அவையெல்லாம் நிச்சயமாக வடிகட்டிய மூட நம்பிக்கைகளே. (பாம்பை பார்த்தவுடன் அம்மா.. நாகம்மா என்று அதன் முன் விழுந்து வணங்கினால் அது நம் நடு மண்டையில் நச்சென்று கொத்திவிட்டு ஓடிவிடும்… ஜாக்கிரதை!) விஷப்பாம்பை அடித்துக்கொன்றால் அதை புதைத்துவிடவேண்டும் என்ற செய்தியை விதைப்பதற்காக மனிதனுக்குள் புகுத்தப்பட்ட விஷயத்துடன் காலவளர்ச்சியில் நாகம்மா போன்ற இன்னபிற மூடநம்பிக்கைகளும் வரிசை கட்டிக்கொண்டன.

மனிதசமூகத்தின் நன்மைக்காகவும் நாகரீக வளர்ச்சிக்காகவும் மனசாட்சியின் ஒழுக்கத்திற்காகவும் மனிதனால் மனிதனுக்குள் புகுத்தப்பட்ட விஷயமே கடவுள் நம்பிக்கை. இப்படி கடவுள் என்ற பெயரில் இன்று நடக்கும் கலவரங்களும், அக்கிரமங்களும், அசிங்கங்களும் அன்றே தெரிந்திருந்தால் நிச்சயமாய் மனிதன் கடவுள் என்ற ஒன்றை படைத்திருக்கவேமாட்டான். மனதை நெறிப்படுத்த வேண்டிய மதங்கள் இப்படி மனிதனை வெறிப்படுத்தும் என்று தெரிந்திருந்தால் நிச்சயமாய் மதங்கள் உருவாக்கப்பட்டிருக்காது. இப்போதும் கூட ஒன்றும் கெட்டுவிடவில்லை. படிப்பறிவு வளர வளர பகுத்தறிவு தானாய் வளரும். பகுத்தறிவு முழுவதுமாய் வளரப்பெற்ற ஒரு சமூகத்தில் கடவுள் என்பது உணர்வுகளையும் மதங்களையும் தாண்டி ஒரு நம்பிக்கை மட்டுமேயென்பது நிச்சயம் உணரப்படும்.

இவ்வாறு கூறுவதால் எனக்கு நாத்திகன் என்ற முத்திரை குத்திவிடாதீர்கள். எங்கள் வீட்டு பூஜையறையில் எல்லாமத கடவுள் படங்களையும் வைத்து வணங்கும், கடவுள் என்ற ‘’நம்பிக்கை’’ கொண்ட (நம்பிக்கை மட்டுமே… மூடநம்பிக்கைகளல்ல) மனிதனே நானும். ஆனால் கடவுளென்ற ஒன்றை நான் மதங்களாக ரகங்களாக என்றுமே பிரித்துப்பார்க்காமல் எனது தன்னம்பிக்கைக்கு வலிமை சேர்க்கும் நம்பிக்கையாக மட்டுமே இன்றுவரை வணங்கி வருகிறேன். பிறரைப்பாதிக்காத பிறரை ஏமாற்றாத எந்தவொரு நம்பிக்கையும் நிச்சயமாய் மூடநம்பிக்கை ஆகாது.

‘’ஏழையின் சிரிப்பினில் இறைவனைக்காண்போம்’’, ‘’ஏழைக்கு ஆற்றும் தொண்டே இறைவனுக்காற்றும் பணி’’ என்ற மனிதம் ததும்பும் வார்த்தைகள் நம் மக்களுக்கு புரியாமலேயே போனதேன்? சகமனிதர்களின் துன்பங்களையும் வறுமையையும் பற்றி கொஞ்சம் கூட சிந்தனையின்றி தங்கத்தையும், வெள்ளியையும் கோடிக்கணக்கான பணத்தையும் கோயில் உண்டியலில் கொட்டுவதேன்? உண்டியலில் கொட்டப்படுபவை கடவுளைச்சென்றடைவதில்லை. அரசின் கஜானாவையே சென்றடையுமென்ற நிதர்சனம் எப்போது விளங்கப்போகிறது நம்மக்களுக்கு?

இந்தானந்தா சாமி, அந்தானந்தா சாமி, அவதாரம், அம்மா என்றெல்லாம் சாதாரண மனிதர்களை கடவுளாய்க்கொண்டாடும் அறியாமை எப்படி நம்மக்களுக்கு புரியாமலேயே உள்ளது? இதில் கொடுமை என்னவென்றால் இது போன்ற ஏமாற்று ஆசாமிகளுக்கு முப்பது சதவீதத்திற்கும் அதிகமாக மெத்தப்படித்த மேதாவிப்பக்தர்களும் உண்டு. சாதாரண வாத்தியார் வேலையை உதறியவனும், சிறுவயதில் தவறு செய்துவிட்டு வீட்டை விட்டு ஓடியவனும், படிப்பறிவின்றி ஜீவனத்திற்காக ஆட்டோ ஓட்டித்திரிந்தவனும் இன்று நம்மக்களால் கடவுளராய் கொண்டாடப்படுகிறார்கள். அய்யா மனிதர்களே… உங்களது நம்பிக்கைகளின்படி கடவுளென்பது இறவா சக்திதானே? ஆனால் நீங்கள் கடவுளாய் நினைக்கும் இந்த சாதாரண மனிதரெல்லாம் நம்மைப்போலவே உண்டு, கழித்து, நோய்வாய்ப்பட்டு இறக்கும் தன்மைகொண்ட சாதாரணமானவர்களே என்ற சின்ன விஷயம்கூட உங்களுக்கேன் புரிவதேயில்லை? இவையெல்லாவற்றையும் விட கொடுமை இதுபோன்ற சாமியார்களின் அசிங்கங்களை வீடியோ படமாய்ப் பார்த்த பின்பும் கூட இல்லையில்லை அவர் கடவுள், அவர் மீது களங்கம் சுமத்துவதை நம்பமாட்டோம் என்னும் மனநிலையிலுள்ள நம்மக்களை என்னவென்று சொல்வது?

சிறையிலிருந்து வெளியிலேயே வராமல் நோய்வாய்ப்பட்டு சமீபத்தில் இறந்து போனாரே சாமியார் பிரேமானந்தா… அவருடைய பக்தர்களுக்கெல்லாம் நான் கேட்க விரும்பும் கேள்வி ஒன்றுண்டு. உங்கள் சாமியார் கடவுளோ… இல்லை கடவுளுக்கு நிகரானவரோயென்றால் அவருக்கும் ஏன் சாதாரண மனிதரைப்போல் மூப்பும், நோயும், இறப்பும் வந்தது? இவ்வுலகில் நம் கண்முன்னே நடக்கும் எந்தவித அக்கிரமங்களையும், அநியாயங்களையும் நீங்கள் கடவுளாய் வணங்கும் உங்கள் சாமியார்களால் தடுக்கவோ, திருத்தவோ முடிவதில்லையே ஏன்? புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே… இவர்கள் கடவுள்களல்ல… சாமியார்களெல்லாம் வெறும் ஆசாமிகளே!!!

எந்தவித மூலதனமுமின்றி திடீரென சாமியார் வியாபாரத்தை ஆரம்பிக்கும் இவர்கள் கொஞ்சகாலத்தில் ஆயிரக்கணக்கில் கோடிகளைச் சேர்ப்பது எப்படி? தங்கத்திலேயே கோயில்கள் கட்டுவதெப்படி? உலகம் முழுவதும் தங்கள் கிளைகளைப்பரப்பி சொத்துக்களை குவிப்பதெப்படி? இவற்றுக்கெல்லாம் இந்த சாமியார்களின் மூலதனம் என்ன தெரியுமா? கடவுளென்ற பெயரிலிருக்கும் மக்களின் அறியாமையும் மூடநம்பிக்கையும் மட்டுமே!!!
இந்த மூடநம்பிக்கைகளை, ஆசாமிகளை சாமிகளாய் நம்பும் வடிகட்டிய முட்டாள்தனங்களை நம் மக்களிடமிருந்து எப்படி ஒழித்துக்கட்டுவதென்பது புரியாத புதிராகவே உள்ளது.

நண்பர்களே… கோயிலுக்குச்செல்லுங்கள். கடவுளை வணங்குங்கள். ஆத்ம அமைதி பெற்று ஆனந்தமாய் வாழுங்கள். நான் ஒருபோதும் வேண்டாமென்று சொல்லப்போவதில்லை. ஆனால் நீங்கள் கடவுளுக்கு செய்ய விரும்புவதை உண்டியலில் கொட்டாதீர்கள். ஒரேயொரு முறை நான் கூறப்போகும் வாக்கியத்தை உளப்பூர்வமாய் சிந்தித்துணர்ந்து உள் நிறுத்திக்கொள்ளுங்கள். ‘’ ஒவ்வொருமுறை நீங்கள் வீணாக்கும் ஒவ்வொரு பறுக்கையின்போதும் ஓரிரு கோடிக்கும் மேற்பட்டோர் இவ்வுலகில் இக்கணம் பசித்திருக்கக்கூடும் என்பதை உணருங்கள் ’’. உண்டியலில் கொட்ட விரும்பும் பணத்தில் இவ்வுலகில் கஷ்டத்திலிருக்கும் சக உயிர்களுக்கு உதவி செய்து பாருங்கள். அப்போது கிடைக்கும் ஆத்மதிருப்தி உங்களுக்குணர்த்தும்… ‘’ நம்பிக்கையே கடவுள்; கடவுளே நம்பிக்கை; ‘’

நம்பிக்கைகள் நிலைத்திருக்கலாம் தவறில்லை; ஆனால் மூடநம்பிக்கைகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டாகவேண்டும். ஆகவே நண்பர்களே… உங்களது மத உணர்வுகளையும் தேவையற்ற மூடநம்பிக்கைகளையும் ஓரம்கட்டிவிட்டு ‘’நம்பிக்கையே கடவுள்’’ என்பதை உளப்பூர்வமாய் உணர்ந்து வாழப்பழகுங்கள். உங்கள் தன்னம்பிக்கை வளர்வதுடன் மனமும் இனிமை பெற்று வாழ்வும் ஏற்றம் பெறும்.

Wednesday, March 23, 2011

ஒரு காதலியின் கல்யாணம்…- 3இதயத்தை அறுக்கும்-நின்
நினைவுகள் எல்லாம்
எனைவிட்டு அகலத்தான்-நிதம்
கண்ணீர் சிந்துகிறேன் நான்-நாம்
காதலித்த தினத்தின் நினைவுகளெல்லாம்
என் கண்வழியே கரையட்டுமென்று!
என்றாலும்…….
விழும் ஒவ்வொரு விழித்துளியிலும்
உன் எழில்முகம் தோன்றி
எனை வதைப்பதேனடி?...
நான் வாழ நினைத்த வாழ்க்கையெல்லாம்
உன் வாய் உதிர்த்த வார்த்தைகளில்
அமிலம் பட்ட ரோஜாவாய்
அன்றோடு கருகிப்போயின!

சித்தனுக்கும் கிறுக்கனுக்கும்-ஒரு
நூழிலை வித்தியாசமென்று
எங்கோ படித்த ஞாபகம்;
சித்தனா? கிறுக்கனா?-என்
இன்றைய நிலையென்று
எனக்கே புரியாத மாயம்!

உன் முதல் கல்யாணப்பத்திரிக்கையை
என் முகத்தில் விட்டெறிந்து
என்னிதயத்தை முதன்முதலில்
வெட்டியெறிந்தவள் நீயெனினும்
எத்தனை அடித்தாலும் தாயையே
பற்றி உறவாடும் பிஞ்சினைப்போல
இத்தனை ஆண்டாகியும் உன் நினைவுகளையே
இன்றும் சுற்றிவரும் என்னிதயத்தைத்தான்…
இறந்து போகச்சொல்லி-இன்றுவரை
இரங்கிக்கேட்கிறேன் ஒவ்வொரு இரவிலும்!
இறப்பிற்கு பின்னாலாவது
நின் நினைவுகளெல்லாம்-என்
அஸ்தியோடு சேர்ந்து ஏதாவதொரு
ஆற்றோடு கரைந்து தொலையட்டுமென்று…!

ஒரு காதலியின் கல்யாணம்…-2


எங்கெங்கோ தொலைந்து போகும்
உன் நினைவுகளை
எழுத்துக்களில் சிறைபடுத்தத்தான் ஆசை!
மனதுக்குள் இருக்கும் உணர்வுகள்
வார்த்தைகளாய் மாற மறுப்பதேனடி?
உன் மேல் நான் கொண்ட
மரியாதையே என் காதலோ?!
ஒரு மழைக்கால மாலையில்-உன்
மான்விழிகள் ரசித்திருக்கிறேன்;
ஒரு கோடைக்கால ரயில் பயணத்தில்-உன்
காலை முகம் ரசித்திருக்கிறேன்;
ஒரு குளிர்கால இரவினில்-உன்
மௌனம் கூட ரசித்திருக்கிறேன்;
ஒரு மலர் சிந்தும் மர நிழனிலில்-உன்
முல்லைச்சிரிப்பும் ரசித்திருக்கிறேன்;
ஆனால்….
ஏனோ தெரியவில்லை
எத்தனைமுறை யோசித்தாலும்
என்னால் ரசிக்க முடியவில்லை-அன்பே…
உன் திருமண அழைப்பிதழில்
இன்னொருவனின் பெயரை…!
---------+++----------

ஒரு காதலியின் கல்யாணம்…-1


‘’ பனி மூட்டங்கள், பசும் புற்கள்;
கூந்தலில் சிரித்த டிசம்பர் பூக்கள்;
வண்ணத்துப்பூச்சியின் சிறகினைப்போல்
இமைகளின் வர்ண ஜாலங்கள்;
புள்ளி மான்கள் தோற்கும் துள்ளல்கள்;
இமைக்க மறந்த என் பார்வைகள்;
சுவாசம் நிரப்பிய நின் நினைவுகள்;
கைகோர்த்த பனிக்காலப்பயணங்கள்; ‘’ –
என்றோ கண்ட கனவு
இன்று ஏன் மீண்டும் வந்தது?
கண்விழித்தவுடன்தான் தெரிந்தது,
காலையில் நீ கொடுத்துச்சென்ற – உன்
கல்யாண அழைப்பிதழ்
கட்டிலில் என்னருகில்….!
-------+++-------

சிதறிப்போன இதயம்…


உசரமா வளந்தவளே-என்
உசிரோட கலந்தவளே;
கொஞ்சநஞ்சமா என்னுசிர-நீ
கொஞ்சிக்கொஞ்சி இழுத்த கதை?
வேர் விட்டும் என்னெஞ்சில்-நீ
வளராத காதல் வித!

கொண்டமுடிப்பூவக்குள்ள
கொஞ்ச உசிர சிறவச்சே-உன்
கெண்ட மீனு கண்ணுக்குள்ள
கொஞ்ச உசிர சிறவச்சே;
கொசுவம் சொருகும் இடுப்புலயும்
கொஞ்ச உசிர சிறவச்சே-உன்
கோபுரக்கலச மாருலயும்
கொஞ்ச உசிர சிறவச்சே;

உதட்டு மச்சத்தில
கொஞ்ச உசிர சிறவச்சே-உன்
உயிர்குடிக்கும் சிரிப்புலயும்
கொஞ்ச உசிர சிறவச்சே;
ஆப்பிள் பழ கன்னத்தில
கொஞ்ச உசிர சிறவச்சே-உன்
ஆசையான எண்ணத்தில
கொஞ்ச உசிர சிறவச்சே;

பச்சமுளகா மூக்குமேல
கொஞ்ச உசிர சிறவச்சே-உன்
பகட்டுக்கல்லு மூக்குத்திலயும்
கொஞ்ச உசிர சிறவச்சே;
கால்கொலுசு சத்தத்தில
கொஞ்ச உசிர சிறவச்சே-உன்
கன்னமுரசும் ஜிமிக்கிலயும்
கொஞ்ச உசிர சிறவச்சே;

கல்நெஞ்சக்காரி நீயின்னு
கண்டபயலுக சொன்னபோது
கண்ணடிபட்ட காதலுன்னு
கருப்பசாமிக்கு பொங்கவச்சேன்;
கொஞ்சகொஞ்சமா உனக்குள்ள
சிறவச்ச என்னுசிர
காத்தோடு கலக்கவிட்டு-நீ
கானல் நீராப்போனதென்ன?
உன்னப்போல எனக்கிங்கே
ஓராயிரம் பேர் கிடைப்பான்னு
உதடு கூசாம-நீ
ஓர் வார்த்த சொன்னதென்ன?

வில்லால தாக்கியிருந்தாலும்-என்
இதயம் பொறுத்திருக்கும்,
சொல்லால தாக்கிப்புட்டியே….
சுக்கு நூறா சிதறிப்போச்சு…!

Friday, March 18, 2011

பெண்மை…


பெண்மை பற்றி அறிய நினைத்து
சக்தியவளை தொழுது நின்றேன்;
நொடிப்பொழுதினில் முன் தோன்றினாள் சக்தியவள்,
கர்ஜிக்கும் சிங்க வாகன முதுகின் மேல்;
அக்னிக்குஞ்சுகளிரண்டு அவள் கண்கள்,
ஆயினும் அன்னையென்போர்க்கு அவை அன்பு;

‘‘என்ன வேண்டும்? கேள் மகனே;’’
என்று சிரித்தாள்,
எண்ணியதை அடுக்கடுக்காய்
கேட்டு நின்றேன்;
‘‘பெண்மையென்பது என்ன தாயே?
பேதங்களறப்பிரித்து சொல்வாய்;
சொல்லுவதை நான் உரக்கச்சொன்னால்
பாருக்குள்ளே பெண்மை மலர்ந்திடவேண்டும்;’’

ஏனோ நொடிப்பொழுது நகைத்த அவள்
விழிகளை நோக்கி வினவலைத்திருப்பினாள்;
‘’ உனக்குள்ளிருக்கும் உணர்வு பற்றி
என்னைக்கேட்டால் என்ன சொல்வேன்? ‘’
‘’ புரிந்தும் புரியாததிது தாயே,
இன்னும் விரிவுர எடுத்துச்சொல் ‘’, என்றேன்;

ஞாயிற்றைக்கொண்டு விழியில் வைத்து
பெண்மையிதுதான் பார் என்றாள்;
நிலவினைக்கொண்டு நெற்றியில் வைத்து
பெண்மையிதுதான் பார் என்றாள்;
நெருப்பினை நீட்டி தொடச்சொன்னாள்,
சுட்டது தாயே நெருப்பென்றேன்,
பெண்மையிதுதான் பார் என்றாள்;
பனியினையெந்தன் உடம்பில் பூசி
உணர்வினை நன்றாய் உணர்ந்திடச்சொன்னாள்,
குளிர்ந்தது தாயே உடம்பென்றேன்,
பெண்மையிதுதான் பார் என்றாள்;

மலர்ந்து வீசும் மலரும் பெண்மை;
மலரினைக்கொண்ட முள்ளும் பெண்மை;
இன்பம் துன்பம் இரண்டுமறிவாய்,
இரண்டும் பெண்மையன்றி வேறிலையென்றாள்;
காதல் கண்ணீர் இரண்டுமறிவாய்,
இரண்டும் பெண்மையன்றி வேறிலையென்றாள்;

‘’இத்தனை சொன்னாய் புரிந்தது தாயே,
இருப்பினும் ஒன்றாய் சேர்த்துச்சொல்’’, என்றேன்;

என் தாயின் உருவத்தை
முன் தோற்றிக்காட்டி
‘’ தாய்மைதான் பெண்மை;
பெண்மைதான் தாய்மை; ‘’ –
என்றவள் உடனே மறைந்து போனாள்;
குழம்பிய மனது தெளிந்து நின்றேன்!

ஒரு கல்லூரி வாழ்க்கையின் கடைசி நிமிடங்கள்…..


கல்லூரி வாழ்க்கையின் கடைசி நிமிடங்களில்
கண்ணீர்கள்தான் நியதிகளோ?...
மௌனங்கள்தான் பாஷைகளோ?...

இத்தனை நாள் இல்லாத உணர்வு
இப்பொழுதுதான் இதயத்தைப்பிசையும்;
இங்கு நாம் மகிழ்ந்த தினங்கள்
தனிமையில் நம் மனங்களில் அசையும்;
இன்னொரு வருடம் படிக்கச்சொன்னால்
எல்லோரது மனங்களும் இசையும்!;
மனங்களுக்கு நியதியைச்சொன்னால்
புத்திக்கு மட்டுமே புரியும்;

பிரிவினைத்தாங்க நெஞ்சுரமில்லை,
பிரிவுத்துயரமும் நிரந்தரமில்லை;
மாலையில் பிரியும் கதிரவன்
மறுநாள் காலை மலருவான்;
மறைந்து போகும் இரவை எண்ணி
மனதைக்குழப்புதல் நியாயமோ?;
மலருகின்ற பொழுதையெண்ணி
இரவைக்கழித்தலும் இன்பமே!;

இன்றைய நிமிடம் இரவைப்போன்றது,
இதயத்தை அதனால் காலமும் வென்றது;
என்றைய நாளாவது காலை ஆகிடும்,
அன்றைய சந்திப்பில் நினைவுகள் மலர்ந்திடும்…
ஆம்……
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காத
நம் நினைவுகள்
நிச்சயம் ஒருநாள்
மீண்டும் மலர்ந்திடும்……!

மனைவியாகிப்போன என் காதலி…


விழி நோக்கின் குனி தலையாள்,
வேறெங்கும் நோக்கின் ஓரக்கண்ணாள்;
கற்கண்டு தேன் குழைத்த இதழ் நகையாள்,
நாவினிலே இன்சொல் மட்டுமறிவாள்;
இனியதொரு தமிழ்ச்சொல்லை பெயர் கொண்டாள்,
இமைக்கும்போது கண்களிலே மின்னல் வைப்பாள்;
சோகத்தில் மடிகொடுத்து சுமை குறைப்பாள்,
சந்தோஷ சிறகுக்குள்ளும் கண்ணசைப்பாள்;
இதயத்தை இழுக்கின்ற வித்தையறிந்தாள்,
இன்றுவரை என்னெஞ்சை இயக்கி வருவாள்;

என்றாலும் சில நாட்கள் எண்ணியதுண்டு…
மங்கையிவள்-
மாயையோ?
மோகினியோ?-இல்லை…
அம்பிகையின் மறுவடிவோ?!.......

Wednesday, March 16, 2011

இதயக்குதிரை


எக்கணமும் உள்மனதில்
கடிவாளமற்ற குதிரையொன்று
கண்டபடி ஓடித்திரியும்;
எவ்வளவோ முயன்றுவிட்டேன்
நிறுத்திவிட முடியவில்லை!
இதயத்தில் கைவைத்தோரெல்லாம்
இது வெறும் இதயத்துடிப்பென்றார்;
அப்படியென்றால் ஓடட்டுமென்று
அப்படியே விட்டுவிட்டேன்;
என்றாலும் சில நாட்கள்
‘ அதுவாக நின்று விடுமா-இல்லை
அதை இழுத்துப்பிடித்து நிறுத்தலாமா? ‘
என்றபடி யோசனையொன்று
அக்குதிரை மீது சவாரி செய்யும்…!

Monday, March 14, 2011

நத்தைப்பெண் { ஒரு நட்பின் க(வி)தை }


நத்தைப்பெண்
{ ஒரு நட்பின் க(வி)தை }

நகரச்சந்தடியின் நெரிசலுக்கிடையில்-ஒரு
சராசரிப்பெண்ணாய் நலிந்து வாழும்-உன்
பால்ய பருவத்து உயிர் பேசுகிறேன்!

எட்டு மாதக்குழந்தையாய் என் வயிற்றில்
எட்டி உதைத்த பாலகன்
யாரையும் நினைவுபடுத்தவில்லை-என்
மணாளனையும் மகிழ்ச்சியையும் தவிர!

முடிந்து போன என் மகிழ்வுக்குப்பிறகு
முட்டி முலை அருந்தும் போதெல்லாம்-என்
இறந்துபோன நாட்கள் ஒவ்வொன்றாய்
இதயத்திலிருந்து கலைந்தெழுந்து
இமைகளுக்குள் நீராய் வரும்!

என் கைகளில் சாட்டை பதித்ததால்
கல்லெறிந்து காயப்படுத்தினாயே… கமலா டீச்சர்
நினைவிருக்கிறதா உனக்கு?

விரல் நோகுது என்று சொன்னால்
விடியும்வரை விழித்திருந்து-என்
வீட்டுப்பாடப்புத்தகங்களையும்
முடித்தெழுதி தருவாயே…
நினைவிருக்கிறதா உனக்கு?

ஊர்க்கோடியில் உடைகளைந்து
ஒன்றாய் குளிப்போமே
ஊற்று நீர்க்கேணி…
நினைவிருக்கிறதா உனக்கு?

அம்மையில் நான் படுத்தபோது
உயிர்துடித்து மஞ்சளணிந்து
ஓராயிரம் முறை சுற்றினாயே-
அந்த அம்மன் கோவில்……
நினைவிருக்கிறதா உனக்கு?

பட்டாம்பூச்சி துன்புறுத்தல்
பிடிக்காது என்றபோதும்
பிடித்துப்போன எனக்காக
பிடித்து வருவாயே…
நினைவிருக்கிறதா உனக்கு?

என் பூப்பெய்திய நாளன்று
யாராரோ தடுத்தும் கேளாமல்-என்
கைவிரல் தொட்டிழுத்து
கண்ணாமூச்சியாட அழைத்தாயே…
நினைவிருக்கிறதா உனக்கு?

மாங்காய் கேட்ட என்னால்
மாந்தோப்பின் மரங்களுக்கிடையில்
கட்டி வைக்கப்பட்டு
கண்ணீர் சிந்தினாயே…
நினைவிருக்கிறதா உனக்கு?

மதுவில் வரும் என்னப்பா
அம்மாவை அடிக்கும் போதெல்லாம்-எனை
அன்பாய் அரவணைத்து
ஆறுதல் சொல்வாயே…
நினைவிருக்கிறதா உனக்கு?

எது எப்படியாகட்டும்,
உலகம் தெரியும்முன்னரே
உன்னையும் என்னையும் பிரித்துச்சென்ற
விழிகளின் நீரால் நனைந்த
விதியின் அந்த கறுப்பு தினம்…
நிச்சயம் நினைவிருக்கும் உனக்கு….

வாழ்க்கைச்சக்கரத்தின் வேகச்சுழற்சியில்
தொடர்பின்றி துண்டிக்கப்பட்டு
திசைக்கொருவராய் சிதறிப்போனோம்..!


இத்தனையாண்டுகள் கழித்து
எதிர்பாரா நம் சந்திப்பினில்
உள்ளம் பூத்த வார்த்தைகளெல்லாம்
உதடுகள் தொட மறுத்துப்போயின…!

முடிந்தவை என்றுமே நினைவுகளில்,
நடப்பவை மட்டுமே உணர்வுகளில்;
உணர்வும் நினைவும் ஒன்றாய்க்கலந்திட
உனைக்கண்ட மின்னல் நொடிகளில்
எங்ஙனம் உனது தோழியாயிட….?

அப்போதெல்லாம் பென்சில் சீவுவது
எனக்குப்பிடித்த ஒன்று,
வெட்டுப்படும் என் விரல்களைக்கண்டு
கலங்கிப்போகும் உன் விழிகளைக்காணவே
அடிக்கடி சீவுவேன்-அந்த
செட்டியார் கடை அம்பது காசு பென்சிலை!
அதனால்தானோ என்னவோ…-இன்று
அன்பு காட்ட ஆளின்றி
அனாதையாய் தவிக்கிறேன்;

மலர்களை மறைப்பதாக எண்ணி
இலைகளை உதிர்க்கச்சொல்லுதல் நியாயமோ?...
இப்படியொரு மணாளனைப்பெற்றது
எப்பிறப்பில் நான் செய்த பாவமோ….?

பெண்ணாய் பிறந்திருப்பாயானால்
மணாளன் உதட்டில் புகைந்தது
மங்கையென் உடம்பில் புதைந்ததை
உனக்குக்காட்டியிருப்பேன்!

சந்தித்த வேளையில்
சிந்திக்காமல் சிரித்து நடித்தேன்-அது
என் உள்ளத்தைப்பூட்டி
உதடுகள் உதிர்த்த பொய்…!எப்படி மறைத்தேன் உன்னிடம்?,
எதற்காக மறைத்தேன் உயிரிடம்?,
ஒருவேளை……
என் வாழ்க்கை, என் குடும்பம்
என்ற கூட்டுக்குள் சுருங்கிப்போன
‘நத்தைப்பெண்’ணாய்தான்
நானும் வாழ்கிறேனா?

இதயத்தை வினவும் போதெல்லாம்
இல்லையென்றுதான் தோன்றுகிறது;

புத்தாடை அணிந்த போதெல்லாம்
புல்வெளியில் எனை நிறுத்தி
புது தேவதையாய்ப் பார்த்து
பூத்திட்ட உன்னிடம்-என்
நைந்து போன ஆடையையும்-ஒரே
மஞ்சள் கயிறு அணிகலனையும்
எப்படி காண்பிப்பேன் தைரியமாய்?...
அதனால்தான் மறைத்தேன் பவ்யமாய்!

இப்பொழுதெல்லாம் நிறைய தாகம் நண்பா,
விழிகளின் வழியாய் நீர் வெளியேறிக்கொண்டேயிருப்பதால்!

இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ஒவ்வொரு நாளும்
இனிவரும் பிறப்பிலாவது உனை மகளாய் வந்தடைய!

எவ்வளவோ செய்திருக்கிறாய் என் தாய்க்கும் மேலாய்…
இறுதியாய் ஒன்று வினவுவேன்
எனக்காக செய்வாயா நண்பா?
எங்கேயேனும் அலைந்தாவது யாரையேனும் கேட்டாவது
தொலைந்து போன என் மகிழ்ச்சியை
மீட்டுத்தரும் ஒரே மருந்தை
‘மரணத்தை’ எனக்கு வாங்கித்தருவாயா?...
மகிழ்வோடு காத்திருக்கிறேன்……

நான் பிரசவித்த சில குறுங்கவிக்கள்….

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததாம்….
பிளாட்ஃபாரத்தில் ஏறிய லாரியில்
நசுங்கிச்செத்த எனக்குமா?....!
----------------------------------------
கல்லானாலும் கணவன்… புல்லானாலும் புருஷன்…
யாருக்கு? என்றாள்…
நூறில் ஒருத்தி தசரதனிடம்…!
----------------------------------------------
பூட்டி பூட்டி வைத்தாலும்
கசிந்து விடுகிறது…
கண் வழியே காதல்!
-----------------------------------------------------
வறட்சியின்றி வருடமெல்லாம் ஓடும்
வற்றாத ஜூவ நதி…
ஏழையின் கண்ணீர்……
---------------------------------------------------------
கோடி கோடியாய் பணம் விழுந்தும்
பிச்சைக்காரன் பசித்தேயிருந்தான்…
கோயில் உண்டியல்!
-----------------------------------------------------------------
இரவில் இளமை
விடிந்தால் முதுமை…
வானம்!
------------------------------------------------------------------------
வேப்பிலை அரைத்து வாருங்கள்
அம்மை நோய் வானத்துக்கு…
நட்சத்திரங்கள்!
---------------------------------------------------------------------------------------
ஆசையாய் தொட்டுப்பார்த்தான் ஏழைச்சிறுவன்….
அப்பா வாங்கி வந்த
சோளக்காட்டுப்பொம்மையின் புதுத்துணியை…!
-----------------------------------------------------------------------------------------------------

நான் ரசித்த சில சிறு கவிக்கள்….


ஒவ்வொரு பேருந்திலும் ஒவ்வொரு ரெயில் பயணத்திலும்
ஏமாந்து போகின்றன…. ஜன்னலோர இருக்கைகள்!
குழந்தைகள் அமராமல் பெரியவர்கள் அமரும் போது…!
------------------------------------

கிறுக்கல்கள் இல்லாத சுவர்கள்….
வைத்தது வைத்த படியே கலையாத பொம்மைகள்…
அழகாய் அடுக்கி வைக்கப்பட்ட கிழியாத புத்தகங்கள்…
அழங்கோலமாய் இருக்கிறது குழந்தையில்லாத வீடு!
-----------------------------------------

அம்மா வரும்வரை மரத்தை வெட்டாதீர்…
கூக்குரலிட்டது குஞ்சுக்குருவி…!
------------------------------------------------

புரியாவிட்டாலும் வியந்து போனதாய் காட்டிக்கொள்கிறேன்…
ஒவ்வொரு முறையும்
குழந்தைகள் காதில் சொல்லும் ரகசியத்தை!
-----------------------------------------------------