SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, January 19, 2010

ஈழமும் இந்தியாவும்- நேற்று ... இன்று ... நாளை ... (தொடர்ச்சி-1)

இதுவரை விளக்கிய எனது சிந்தனையின் அடிப்படையில் ஈழத்தில் போராடியது தீவிரவாதிகளா? புரட்சியாளர்களா? இல்லை போராளிகளா? என்பதை நீங்களே ஊகிக்கமுடியும். சிங்களர்களின் அத்துமீறல்களும், கொடுஞ்செயல்களும் எல்லை மீறிப்போகவே அதை சகிக்க இயலாத இயல்பிலேயே தமிழுணர்வுடன் கூடிய வீரம் செறிந்த (ஈழத்)தமிழ் இளைஞர்கள் பலரும் பல்வேறு பெயர்களில் பல்வேறு குழுக்களாக பல்வேறு கொள்கைகளுடன் இலங்கை அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடத்துவங்கினர். அவ்வாறாக செயல்பட்ட பல்வேறு குழுக்களின் கொள்கைகளும், செயல்பட்ட விதமும்தான் வெவ்வேறாக இருந்ததேதொழிய அவர்கள் அனைவரின் குறிக்கோளும் நோக்கமும் ஒன்றே ஒன்றுதான். அது ஈழத்தமிழர்களுக்கென்று ஒரு தனிநாடு "தமிழீழம்" வேண்டுமென்பதுதான். சிங்கள மக்கள், அரசு, காவல்துறை, நீதித்துறை என அனைத்துமே சொந்த நாட்டிலேயே தமிழர்களை அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தி இரண்டாம்தர குடிமக்களாய் நடத்தத் தொடங்கிய பிறகு இப்படி பல்வேறு குழுக்களும் இயக்கங்களும் தம் மக்களுக்காக தோன்றுவது இயல்பான ஒன்றே. அவ்வாறு தோன்றிய பல்வேறு குழுக்களில் ஒற்றையிலக்க உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றில் ஒரு உறுப்பினராய் தன் போராட்டத்தை துவக்கியவர்தான் இந்நூற்றாண்டில் தமிழ்ச்சாதியை சுடுகாட்டிற்கும், இடுகாட்டிற்கும் உயிரோடு அனுப்புவதை ஓடோடிச்சென்று மருத்துவமனையில் படுத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துவிட்டு பின்னாளில் மொழிக்காக மாநாடு நடத்தும் தமிழர்(!)களுக்கு மத்தியில் இவரைப்போன்ற மக்களுக்காக போராடும் போராளி இனியொருவர் உண்டோ எனுமளவுக்கு வளர்ந்து பெரும்போராட்டங்களையும் சில தவறுகளையும் (என்ன தவறுகளென்பது தொடரும் எழுத்துக்களில் வரும்) நிகழ்த்திய திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். (பல்வேறு குழுக்களும், இயக்கங்களும், தியாக வீரர்களும் ஈழ விடுதலை வரலாற்றில் இடம் பெற்றிருந்தாலும் நான் ஏன் திரு.பிரபாகரன் அவர்களை மட்டும் மையப்படுத்துகிறேன் என்பது எனது கட்டுரையின் தலைப்பைச்சார்ந்தது). பிரபாகரன் ஒரு விடுதலைப்போராட்டக்குழுவில் இடம் பெற்றிருந்தாலும் கூட அச்சிறு வயதிலேயே அவரது எண்ணமெல்லாம் அனைத்துவித வசதிகள் மற்றும் சுய ஒழுக்கத்துடன் கூடிய ஒரு முன்மாதிரியான ஜனநாயக தமிழீழத்தை உருவாக்குவதில்தான் இருந்தது. பிரபாகரனின் கனவுகளுக்கும், தனிப்பட்ட எண்ணங்களுக்கும் அவர் சார்ந்திருந்த மற்றும் வேறெந்த குழுக்களின் கொள்கைகளும் ஒத்து வராததால் வெகு விரைவிலேயே அவர் தனி இயக்கம் ஒன்றை காணவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். அவ்வாறு அவரால் தொடங்கப்பட்டதுதான் பின்னாளில் பிரிட்டனும், அமெரிக்காவும் இன்னபிற ஆதிக்கசக்திகளும் வியந்து போற்றும் வண்ணம் ஒரு சீரிய இராணுவத்தைப் போன்ற கட்டுக்கோப்பும், சுய ஒழுக்கமும் நிறைந்த தன்னலமற்ற எண்ணிலா போராளிகளைக் கொண்ட LTTE என்றழைக்கப்படும் "விடுதலைப்புலிகள்" இயக்கம்(இந்தப்பெயரையே கொஞ்சம் மாற்றி வைத்துக்கொண்டு ஆளுபவர்களுக்கு ஆதரவாக விடுதலைப்பூனைகள்(!) போல திரியும் தமிழ்நாட்டிலுள்ள இயக்கம் போன்றதல்ல இது). ஈழமும் இந்தியாவும் என்ற இந்தக்கட்டுரையில் நான் புகழவேண்டிய, போற்ற வேண்டிய விடுதலைப்புலிகளுக்கு பெரும் ஆதரவளித்து வளர்த்த இந்தியத்தலைவர்கள் இருவர் மட்டுமே. என்னால் நிச்சயமாகக் கூறமுடியும். இன்றுவரை இந்தத்தகுதிக்கு சொந்தமாக, இவ்விருவரைத் தவிர வேறெவருக்கும் அருகதை இல்லை. யாரந்த இருவர் தெரியுமா? ஒருவர் நமது சுதந்திர இந்தியாவின் இரும்புப்பெண்மணி, அமெரிக்காவையே துச்சமாக மதித்து நமது நாட்டின் எதிர்காலத்திற்க்காக பல அதிரடி முடிவுகளை அமல்படுத்திய "அன்னை இந்திரா". சரி மற்றொருவர் ? ... மற்றொருவர் நமது தமிழனத்தலைவர்(சத்தியமாக இப்போது உயிருடன் இருக்கும் எவருமில்லை!. இப்போது இருக்கும் எவருக்கும் தமிழனத்தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியும் இல்லை!) தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும் கூட தமிழராய் வாழ்ந்து தமிழர்களுக்காக பல சீரிய திட்டங்களை செயல்படுத்திய தனது மரணத்தில் தமிழகத்தையே கதறியழச் செய்த மக்கள் திலகம் என்றழைக்கப்பட்ட திரு.M.G.R அவர்கள்தான் அது. உங்களில் எத்தனைபேருக்குத் தெரியும் ... விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தனது சொந்த பணத்திலிருந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பே கோடிக்கணக்கில் வழங்கிய ஒரே தமிழனத் தலைவர் அவர் மட்டும்தான் என்பது.(தற்போது தமிழகத்தில் இருக்கும் அரசியல்வாதிகளில் எத்தனைபேர் ஈழத்தமிழ் மக்களுக்காக, இயக்கத்துக்காக இதுவரை என்ன செய்து கிழித்தார்கள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!) அதுமட்டுமில்லாமல் விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமன்றி இன்னபிற ஈழத்தின் விடுதலை இயக்கங்களுக்கும் தமிழ்நாட்டில் தேவையான தருணத்தில் புகழிடம் அளித்து அரவணைத்தவர் அந்த மாபெரும் தலைவர்.(ஓட்டுக்காக இயக்கத்தை ஆதரித்தவர் அல்ல இவர்). ஈழத்தின் பல்வேறு விடுதலையியக்கங்களுக்கிடையே போட்டியும், சண்டையும் தொடங்கியபோது அவர்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த பெரும் முயற்சியெடுத்தவர். உண்மையிலேயே ஈழத்தமிழர்களுக்காக அவர்கள் படும் துயரங்கள் கண்டு இதயம் கசிந்து எவ்வித உள்நோக்கங்களும், அரசியல் காரணங்களுமின்றி மனதார உதவிய ஒரே தமிழகத்தலைவர் இவராக மட்டும்தான் இருக்கமுடியும். பின்னாளில் விடுதலைப்புலிகள் இயக்கம் வெளிநாடு வாழ் (அல்லது புலம் பெயர்ந்த- "அகதி" என்ற வார்த்தையின் வலியைப் பின்னால் விவரிக்கிறேன்) ஈழத்தமிழர்களின் அமோக ஆதரவால் பொருளாதார ரீதியிலும், ஆயுத பலத்திலும் பெருமளவு வளர்ந்து நின்றாலும் ஆரம்பகாலத்தில் இவ்விரு தலைவர்களும் உதவாமல் போயிருந்தால் அப்பொழுதே விடுதலைப்புலிகள் இயக்கம் வேறருக்கப்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.

No comments:

Post a Comment