SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, January 19, 2010

ஈழமும் இந்தியாவும்- நேற்று ... இன்று ... நாளை ... (தொடர்ச்சி-1)

இதுவரை விளக்கிய எனது சிந்தனையின் அடிப்படையில் ஈழத்தில் போராடியது தீவிரவாதிகளா? புரட்சியாளர்களா? இல்லை போராளிகளா? என்பதை நீங்களே ஊகிக்கமுடியும். சிங்களர்களின் அத்துமீறல்களும், கொடுஞ்செயல்களும் எல்லை மீறிப்போகவே அதை சகிக்க இயலாத இயல்பிலேயே தமிழுணர்வுடன் கூடிய வீரம் செறிந்த (ஈழத்)தமிழ் இளைஞர்கள் பலரும் பல்வேறு பெயர்களில் பல்வேறு குழுக்களாக பல்வேறு கொள்கைகளுடன் இலங்கை அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடத்துவங்கினர். அவ்வாறாக செயல்பட்ட பல்வேறு குழுக்களின் கொள்கைகளும், செயல்பட்ட விதமும்தான் வெவ்வேறாக இருந்ததேதொழிய அவர்கள் அனைவரின் குறிக்கோளும் நோக்கமும் ஒன்றே ஒன்றுதான். அது ஈழத்தமிழர்களுக்கென்று ஒரு தனிநாடு "தமிழீழம்" வேண்டுமென்பதுதான். சிங்கள மக்கள், அரசு, காவல்துறை, நீதித்துறை என அனைத்துமே சொந்த நாட்டிலேயே தமிழர்களை அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தி இரண்டாம்தர குடிமக்களாய் நடத்தத் தொடங்கிய பிறகு இப்படி பல்வேறு குழுக்களும் இயக்கங்களும் தம் மக்களுக்காக தோன்றுவது இயல்பான ஒன்றே. அவ்வாறு தோன்றிய பல்வேறு குழுக்களில் ஒற்றையிலக்க உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றில் ஒரு உறுப்பினராய் தன் போராட்டத்தை துவக்கியவர்தான் இந்நூற்றாண்டில் தமிழ்ச்சாதியை சுடுகாட்டிற்கும், இடுகாட்டிற்கும் உயிரோடு அனுப்புவதை ஓடோடிச்சென்று மருத்துவமனையில் படுத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துவிட்டு பின்னாளில் மொழிக்காக மாநாடு நடத்தும் தமிழர்(!)களுக்கு மத்தியில் இவரைப்போன்ற மக்களுக்காக போராடும் போராளி இனியொருவர் உண்டோ எனுமளவுக்கு வளர்ந்து பெரும்போராட்டங்களையும் சில தவறுகளையும் (என்ன தவறுகளென்பது தொடரும் எழுத்துக்களில் வரும்) நிகழ்த்திய திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். (பல்வேறு குழுக்களும், இயக்கங்களும், தியாக வீரர்களும் ஈழ விடுதலை வரலாற்றில் இடம் பெற்றிருந்தாலும் நான் ஏன் திரு.பிரபாகரன் அவர்களை மட்டும் மையப்படுத்துகிறேன் என்பது எனது கட்டுரையின் தலைப்பைச்சார்ந்தது). பிரபாகரன் ஒரு விடுதலைப்போராட்டக்குழுவில் இடம் பெற்றிருந்தாலும் கூட அச்சிறு வயதிலேயே அவரது எண்ணமெல்லாம் அனைத்துவித வசதிகள் மற்றும் சுய ஒழுக்கத்துடன் கூடிய ஒரு முன்மாதிரியான ஜனநாயக தமிழீழத்தை உருவாக்குவதில்தான் இருந்தது. பிரபாகரனின் கனவுகளுக்கும், தனிப்பட்ட எண்ணங்களுக்கும் அவர் சார்ந்திருந்த மற்றும் வேறெந்த குழுக்களின் கொள்கைகளும் ஒத்து வராததால் வெகு விரைவிலேயே அவர் தனி இயக்கம் ஒன்றை காணவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். அவ்வாறு அவரால் தொடங்கப்பட்டதுதான் பின்னாளில் பிரிட்டனும், அமெரிக்காவும் இன்னபிற ஆதிக்கசக்திகளும் வியந்து போற்றும் வண்ணம் ஒரு சீரிய இராணுவத்தைப் போன்ற கட்டுக்கோப்பும், சுய ஒழுக்கமும் நிறைந்த தன்னலமற்ற எண்ணிலா போராளிகளைக் கொண்ட LTTE என்றழைக்கப்படும் "விடுதலைப்புலிகள்" இயக்கம்(இந்தப்பெயரையே கொஞ்சம் மாற்றி வைத்துக்கொண்டு ஆளுபவர்களுக்கு ஆதரவாக விடுதலைப்பூனைகள்(!) போல திரியும் தமிழ்நாட்டிலுள்ள இயக்கம் போன்றதல்ல இது). ஈழமும் இந்தியாவும் என்ற இந்தக்கட்டுரையில் நான் புகழவேண்டிய, போற்ற வேண்டிய விடுதலைப்புலிகளுக்கு பெரும் ஆதரவளித்து வளர்த்த இந்தியத்தலைவர்கள் இருவர் மட்டுமே. என்னால் நிச்சயமாகக் கூறமுடியும். இன்றுவரை இந்தத்தகுதிக்கு சொந்தமாக, இவ்விருவரைத் தவிர வேறெவருக்கும் அருகதை இல்லை. யாரந்த இருவர் தெரியுமா? ஒருவர் நமது சுதந்திர இந்தியாவின் இரும்புப்பெண்மணி, அமெரிக்காவையே துச்சமாக மதித்து நமது நாட்டின் எதிர்காலத்திற்க்காக பல அதிரடி முடிவுகளை அமல்படுத்திய "அன்னை இந்திரா". சரி மற்றொருவர் ? ... மற்றொருவர் நமது தமிழனத்தலைவர்(சத்தியமாக இப்போது உயிருடன் இருக்கும் எவருமில்லை!. இப்போது இருக்கும் எவருக்கும் தமிழனத்தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியும் இல்லை!) தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும் கூட தமிழராய் வாழ்ந்து தமிழர்களுக்காக பல சீரிய திட்டங்களை செயல்படுத்திய தனது மரணத்தில் தமிழகத்தையே கதறியழச் செய்த மக்கள் திலகம் என்றழைக்கப்பட்ட திரு.M.G.R அவர்கள்தான் அது. உங்களில் எத்தனைபேருக்குத் தெரியும் ... விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தனது சொந்த பணத்திலிருந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பே கோடிக்கணக்கில் வழங்கிய ஒரே தமிழனத் தலைவர் அவர் மட்டும்தான் என்பது.(தற்போது தமிழகத்தில் இருக்கும் அரசியல்வாதிகளில் எத்தனைபேர் ஈழத்தமிழ் மக்களுக்காக, இயக்கத்துக்காக இதுவரை என்ன செய்து கிழித்தார்கள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!) அதுமட்டுமில்லாமல் விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமன்றி இன்னபிற ஈழத்தின் விடுதலை இயக்கங்களுக்கும் தமிழ்நாட்டில் தேவையான தருணத்தில் புகழிடம் அளித்து அரவணைத்தவர் அந்த மாபெரும் தலைவர்.(ஓட்டுக்காக இயக்கத்தை ஆதரித்தவர் அல்ல இவர்). ஈழத்தின் பல்வேறு விடுதலையியக்கங்களுக்கிடையே போட்டியும், சண்டையும் தொடங்கியபோது அவர்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த பெரும் முயற்சியெடுத்தவர். உண்மையிலேயே ஈழத்தமிழர்களுக்காக அவர்கள் படும் துயரங்கள் கண்டு இதயம் கசிந்து எவ்வித உள்நோக்கங்களும், அரசியல் காரணங்களுமின்றி மனதார உதவிய ஒரே தமிழகத்தலைவர் இவராக மட்டும்தான் இருக்கமுடியும். பின்னாளில் விடுதலைப்புலிகள் இயக்கம் வெளிநாடு வாழ் (அல்லது புலம் பெயர்ந்த- "அகதி" என்ற வார்த்தையின் வலியைப் பின்னால் விவரிக்கிறேன்) ஈழத்தமிழர்களின் அமோக ஆதரவால் பொருளாதார ரீதியிலும், ஆயுத பலத்திலும் பெருமளவு வளர்ந்து நின்றாலும் ஆரம்பகாலத்தில் இவ்விரு தலைவர்களும் உதவாமல் போயிருந்தால் அப்பொழுதே விடுதலைப்புலிகள் இயக்கம் வேறருக்கப்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.

Monday, January 18, 2010

ஈழமும் இந்தியாவும்- நேற்று ... இன்று ... நாளை ... (பகுதி-1)

ஈழத்தின் கறை படிந்த துயரங்களுக்கெல்லாம் காரணம் "தமிழர்கள்" என்ற முத்திரையுடன் மனிதர்கள் பிறப்பதுதான் என்றால் எந்த நாட்டவரும் நம்ப மறுக்கத்தான் செய்வார்கள் உண்மை விளங்காதவரை!. ஆனால் நெஞ்சைப்பிசையும் கடந்தகால நிகழ்வுகள் விவரிக்கப்பட்டால் 21ம் நூற்றாண்டிலும் இப்படியொரு பாவப்பட்ட ஜென்மங்கள் இப்புவியில் உள்ளனரா என விம்மாதவர்கள் இருக்க முடியாது . ஈழத்தின் நேற்றைய வரலாறு நம்மில் பலர் அறிந்திருப்போம் . (பழங்காலத்தில் ஈழத்தை தமிழ் மன்னர்கள்தான் பரம்பரை வழியாக ஆண்டனர், ஆதலால் ஈழம் முழுவதுமே தமிழர்களுக்குதான் சொந்தம் என்று ஒரு தரப்பும் ... தமிழ் மன்னர்கள் ஈழத்தின் மீது படையெடுத்து கைப்பற்றியவர்களேயொழிய ஈழம் என்பது ஒரு பரம்பரை வழி சிங்கள நாடே என்றும் தமிழர்கள் அதில் தோட்டத்தொழில் செய்து பிழைக்கவந்த கூட்டமே என்று ஒரு சாரரும் கூறி வந்தாலும் இது ஒரு விவாதிக்கத்தேவையற்ற வரலாறு என்பதுதான் எனது கருத்து ) எந்த மண்ணாயிருந்தாலும் அங்குள்ள மக்கள் அவரவர் வேலையை அவரவர் பார்த்துக்கொண்டு அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதவரைதான் (அதாவது தனிமனித சுதந்திரமும், தன்மானமும் காக்கப்படும்வரைதான்) அந்த நாட்டின் அமைதி, வளர்ச்சி ... எல்லாமே. எப்பொழுது இதில் உரசலோ, விரிசலோ உண்டாகிறதோ அப்பொழுது தொடங்கப்படுவதுதான் சுதந்திரத்திற்க்கான போராட்டங்கள். உலகில் சுதந்திரமடைந்த மற்றும் சுதந்திரக்காற்றை சுவாசிக்க போராடிக்கொண்டிருக்கும் அனைத்து நாடுகளின் அடிப்படை வரலாறும் நிச்சயமாக மாற்று கருத்து ஏதுமின்றி இதுவாகத்தான் இருக்க முடியும் . இதேதான் அரங்கேறியது இலங்கையின் வரலாற்றிலும், ஆனால் எண்ணிப்பார்க்க இயலாத இதயம் தாங்க இயலா கொடுஞ்செயல்களுடன்! சிங்களர்கள் (பெரும்பாலானவர்கள்) ஆரம்பம் முதலே தமிழர்கள் என்றாலே ஒருவித வெறுப்புடனே இனவெறியுடன் (கருப்பர்களை இன்றும் வெறுக்கும் வெள்ளையர்களை போல) பார்த்து வந்தனர். தமிழர்களிலும் பல தொழிலதிபர்களும், செல்வந்தர்களும், அறிஞர்களும், தலைவர்களும் உருவாவதைக்கண்ட சிங்களர்களின் இனவெறி இன்னும் ஒருபடி மேலேறியது. போதாக்குறைக்கு இலங்கையின் அடுத்தடுத்த ஆட்சியாளர்களும் அரசியல் லாபங்களுக்காக சிங்களர்களின் இனவெறி நெருப்பு அணைந்து விடாமல் அவ்வப்போது எண்ணெய் விட்டு தூபம் போட்டவாறே நாள் நகர்த்தினர். தமிழர்களுக்கெதிராக நிகழ்த்தப்பட்ட சிங்கள இனவெறித்தாக்குதல்கள் எல்லை மீறத்தொடங்கியது. ஆரம்பத்தில் தமிழர்களின் சொத்துக்களையும், உடைமைகளையும் குறி வைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களின் உயிர்களுடனும், உணர்வுகளுடனும் வெறியாட்ட விளையாட்டுகளை ஆடத்தொடங்கியது. ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை எதிர்த்த, ஆதரிக்காத, தவறென்று கூறிய அகிம்சைவாதிகளுக்கும் மெத்தப்படித்த மேதாவிகளுக்கும் நான் கேட்க விரும்பும் கேள்விகள் சில உண்டு.... நீங்கள் நீண்ட காலமாய் வசித்து வரும் உங்கள் சொந்த இடத்தை நீங்கள் தமிழர் என்ற ஒரே காரணத்தால் யாராவது உதறிவிட்டு ஓடச்சொல்லி காவல்துறையும், நீதித்துறையும் கூட ஆமாம் நீங்கள் ஓடித்தான் ஆகவேண்டும் எனும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களை வயிற்றில் சுமந்து பெற்றெடுத்து பேணி வளர்த்த உங்கள் தாயை உங்கள் கண்முன்னே நிர்வாணமாக்கி, கும்பல் கூடி கற்பழித்து, கதறியழுத உங்கள் தந்தையை கண்டந்துண்டமாய் வெட்டியோ இல்லை துப்பாக்கியால் தலை சிதறச்செய்தோ சாகடித்து, அலறித்துடிக்கும் உங்கள் தாயின் மார்பகங்களை வெட்டியெறிந்து அணுவணுவாய் சித்திரவதை செய்து கொல்பவர்களுக்கெதிராக ஆயுதம் ஏந்துவீர்களா? இல்லை அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருப்பீர்களா? உங்கள் சகோதரியை எவரேனும் உங்கள் கண்முன்னே நிர்வாணமாக்கி, மானபங்கம் செய்து இறுதியாய் பிறப்புறுப்பில் டைனமைட்டை வெடிக்கச்செய்தோ இல்லை துப்பாக்கியை பிறப்புறுப்பினுள் செலுத்தி தோட்டாக்களை சிதறடித்தோ கொடூரமாக கொலை செய்தால் அவர்களுக்கெதிராக ஆயுதம் ஏந்துவீர்களா? இல்லை அகிம்சையை போதித்துக்கொண்டிருப்பீர்களா? ஒரேயொரு நிமிடம் உள்ளத்தில் கைவைத்து கண்மூடி நான் மேற்க்கூறிய நிலையில் உங்களை வைத்து நினைத்துப்பாருங்கள்.... அந்த கற்பனையே எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது... தயவு செய்து இனிமேல் நீங்கள் ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை... அதை தீவிரவாதம் என்று சித்தரிக்காதீர்கள். தீவிரவாதிகளுக்கும் போராளிகளுக்கும் புரட்சியாளர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. தீவிரவாதிகள் என்பது முட்டாள்தனமான கொள்கைகளுடனும், ஏதோ ஒன்றின் மீது வெறி கொண்டும் எங்கேயோ மறைந்திருந்து அரசாங்கத்தை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு அப்பாவி பொதுமக்களை தாக்கி அழிக்கும் கூட்டமாகும். இது யாரோ சிலரால் உருவாக்கப்பட்டு பலவீனங்களையும், மூளைச்சலவையையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு உலகம் முழுமைக்கும் தலைவலியாய் மாறிப்போன கூட்டமாகும். புரட்சியாளர்கள் என்பது குறிப்பிட்ட ஒரு சர்வாதிகாரி அல்லது சர்வாதிகாரத்துக்கு எதிராக கலகம் அல்லது கிளர்ச்சி செய்து தங்களது கொள்கைக்கு பிடிப்பான தலைமையை உருவாக்கி ஆட்சிபீடத்தில் அமரச்செய்பவர்கள். இது பெரும்பாலும் தானாய் உருவாகி தற்சமயத்திற்கு நிலைத்திருந்து சர்வாதிகாரம் தூக்கியெறியப்பட்டதும் கலைந்துவிடும் கூட்டம் எனலாம். ஆனால் போராளிகள் என்பது தங்கள் இனமோ மக்களோ நசுக்கப்படும்போது கொதித்தெழுந்து ஒன்று கூடி தங்கள் மக்களின் உரிமைக்காக ஆயுதம் ஏந்திப்போராடும் தன்னலமற்ற தியாகிகள் நிறைந்த உணர்வுப்பூர்வமான கூட்டமாகும். இது பொதுமக்களை தாக்காத முடிந்தவரை தற்காப்புக்கே ஆயுதங்களை உபயோகித்து இறுதிவரை கட்டுக்கோப்பு கலையாத கூட்டமாகும். ஈழத்தில் இருந்தது எவ்வகை?

மனையாள் ....


அதிகாலையில் எழுப்பிட அன்பு முகம் இல்லை ;
தோட்டத்தின் ஒற்றைப்பன்னீர் மரத்தில்
கூவிடும் குயிலையும் காணவில்லை ;
கொய்யாமரத்தின் பழம் சுவைக்கும்
அணில் பிள்ளையையும் காணவில்லை ;
விட்டத்தில் கூடுகட்டி வாழ்ந்த
பெண் குருவியையும் காணவில்லை ;
மாடியில் வைக்கும் மதிய உணவுக்கு வரும்
காக்கைகளையும் காணவில்லை ;
மிஞ்சிய இரவு உணவுக்கு வரும்
தெரு நாயையும் காணவில்லை ;
தூக்கத்தை தொலைக்கக் கத்தும்
தவளைகளையும் காணவில்லை ;
மனைவி மட்டுமே பிரிந்து போனாள் என்றிருந்தேன்,
அவைகளுமா போயின பிரசவத்திற்கு பிறந்த வீட்டுக்கு?!

Saturday, January 16, 2010

தீ ...


இழப்பென்று எதையும் நினைத்து
இறப்பென்று வரும் ? என்ற
இயந்திரத்தன வாழ்வுக்கு நடுவில் - என்
வாழ்க்கையின் சாஸ்திரவேர்கள் மட்டும்
இளமையிலேயே கருகிக் கொண்டிருப்பதேன்?
எதையோ தேடுகிறோம் என்றுணர்ந்த மனம்
எதையென்பதை மட்டும் உணர்த்த மறுத்து,
எழும்பும் அலையுடன் நீலக்கடலையும் ...
எங்கோ அதிலினையும் நீல வானையும்
எனக்குள் அடிக்கடி எடுத்துக்காட்டி
உயிருக்குள் உணர்த்தும் சேதியென்னெ?
சித்தனுக்கும் கிறுக்கனுக்கும்
ஒரு நூலிழை வித்தியாசமென்று
எங்கோ படித்த ஞாபகம்...
சித்தனா, கிறுக்கனா?
என் இன்றைய நிலையென்று
எனக்கே புரியாத மாயம்!
விழிகளை மூடித்திறக்கும் போதெல்லாம்
மூச்சுக்காற்றின் மூலஸ்தானத்தில்
முற்றிய தீயொன்று சுடர் விட்டெறிகிறது!
ஞானத் தீயா?
வேள்வித் தீயா?
காமத் தீயா?
காதல் தீயா?
ஒவ்வொருமுறை யோசிக்கும்போதும்
ஓங்கி ஒலிக்கும் ஒற்றைக் குரலொன்று-
உனக்குள் எரியும் இந்தத் " தீ " தான்
உன் உயிரை ஒருநாள் எரிக்குமென்று!

மீண்டும் கவிதைப்பயணம்

கடவுளென்பார்...
வெறும் கல்தான் என்பார்...
உண்டென்பார்...
உண்மையில் இல்லையென்பார்...
கவலையில்லை என்பேன்...
கல்லானாலும்...
கடவுளானாலும்...
முன்னே வந்து நின்றாலும்
முட்டி மோதி விலகி நடக்கும்
பார்வையற்ற எனக்கு !
"MY DAYS ARE DARKER THAN YOUR NIGHTS"- By A Blindman. so friends pls "DONATE YOUR EYES".