SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Monday, August 15, 2016

சுதந்திரதேசம்...!


வீதி தோறும் கொடி பிடித்து
மணித்துளியோ நாள்கணக்கோ…
மறந்துவிட்டு பறந்து விடுவோம்…

செய்தியின்றி சில நாட்கள்
குரைத்து கிடக்கும் நாய்களும்
அடுத்த ரொட்டித்துண்டு
அலேக்காய் மாட்டியதும்
மறக்கடித்து நம்மை மழுங்கடித்து
வாலாட்டி ம(ற)றைந்துவிடும்…

சீருடை வீரர்களும்
வெள்ளுடை வேந்தர்களின்
வேட்டைக்கு சிரம் தாழ்த்தி
தன்னிலை தரம் தாழ்த்தி
சுழல் விசைக்கு இயங்கும்
சிறப்பான பொம்மையாய்
செம்மையாய் பணி செய்து
தன்கடன் தீர்த்திருப்பர்…

காகிதப்புலிகளும்கூட
கணைத்து இறுமி இறுமி
புலித்தோல் போர்வைக்குள்
அடுத்த எழுத்துக்கு
எப்போது எது சிக்குமென
யோசித்து ஏங்கிப்போய்
எப்போதும்போல் உறங்கிப்போகும்…

அரசியலும் சாதியும்
பசி தீர ஆதாயம் உண்டு
கொழுத்து பருத்துப்போய்
அடுத்த காவுக்கு
கண்கள் உருட்டி காத்திருக்கும்…

சட்டையில் சீறும்
சேகுவாராக்கள்கூட
புதுப்பட கட்அவுட்களின்
பாலாபிசேகத்தில்
கரைந்து காணாமல் போய்
கண்கள் மூடி சிலிர்த்திருக்கும்…

அப்பாவியும் நடுநிலையும்
எப்போ தீரும்
என் நாட்டின் சாபமென
அரேபியச்சட்டங்களை
பேசி அலுத்துப்போய்
குடும்ப பொதி சுமக்க
வழக்கம்போல் கிளம்பிப்போகும்…

சாட்சிக்கும் வாய்தாக்கும்
வழக்கம்போல வாய்பிளந்து
துருப்பிடித்த புத்தகங்களை
இன்னமும் தூசி தட்டி
வயதான கிழவி ஒருத்தி
தராசுடன் காத்திருப்பாள்…

இங்கே யாருக்கும் புரியாது…
இன்னமும் புரியாதது
இனி எப்போதும் புரியாது…

அமிலத்தில் சிதையும்
முகச்சதையின் எரிச்சலும்
பிறப்புறுப்பை சிதைக்கும்
ஆதிக்கத்தின் வெறியும்…
சாதியில் மதத்தில்
சிக்கிச்சிதையும் உயிரும்…
ஊழலில் வாய்ப்பிழந்த
திறமைகளின் வேதனையும்…
இழப்புற்ற குடும்பத்தின்
பலகீன இதய முனகலும்…

இங்கே யாருக்கும் புரியாது…
இன்னமும் புரியாதது
இனி எப்போதும் புரியாது…

தலைநகர் மட்டுமின்றி
தலைமுதல் கால்வரை
வயது வரம்பென்ற
வித்தியாசம் ஏதுமின்றி
நித்தம் நித்தம் பல நிர்பயாக்களை
காவு கொடுக்கும் என் நாட்டில்…

சாதிக்கும் மதத்துக்கும்
சண்டயிட்டுச்செத்து
மனிதம் என்ற சொல்லை மறந்து
மறத்து கிடக்கும் என் நாட்டில்…

தேசத்தின் சாதனைகளை
உலகத்தில் பதியாமல்
ஊழலில் சாதனை புரியும்
அரசியல் மாறா என் நாட்டில்…

இன்னமும்
நீதி நிலைக்கும்…
நாடு திருந்தும்…
என் நாடும் ஒரு நாள்
சிங்கப்பூராகும்…
என ஏக்கப்பெருமூச்சுடன்
அண்ணாந்து காத்திருக்கும்
பெரும்பான்மை ஏமாளிக்கூட்டத்தின்
ஏகாந்த நடுமத்தியில்
நன்றாக உற்று நோக்கின்
நான்…
நீங்கள்…
நம் எல்லோர் முகமும்
நிச்சயம் அங்கிருக்கும்!!!Monday, April 6, 2015

ஏதோவொரு நொடிப்பொழுதேனும்...!


எனக்கானதொரு தேடல்களினூடே
எத்தனையோமுறை தொலைத்திருக்கிறேன்
என்னையே நான்...

உன்னிடமான எனது பிரிவு
எனது தயக்கத்திலும்
உனது கோபத்திலும்
தடைபட்டுக்கிடக்கிறது
உன்னைச்சேரமுடியாதொரு பயணத்தில்!

நமக்குள்ளான பிரிவின்
ஆராய்ச்சிக்கூற்றுகளை விலக்கி
உன்னைச்சேருமொரு தருணத்தை
மீண்டும் மீண்டும்
தேடிக்கொண்டேயிருப்பது
உனக்குப்புரியுமாவென தெரியவில்லை...

பிரிவிற்கான அக்கணத்தை விலக்கி
இலக்கணம் பாராமல்
எக்கணமும் உனைச்சேர நினைக்கும்
என் இதயத்துடிப்புகள்
இக்கணம் வரையிலும்
உனக்குப்புரியாமலே போனதேனோ?...

எனக்கானதொரு நொடிப்பொழுதாய்
எதுவுமிங்கே இருந்ததேயில்லை...
உனக்கானதான என் நியாபகங்கள்
ஒருபோதும் எனை பிரிந்ததேயில்லை...

உனக்குள் தொலைத்த என்னை
எனக்குள் நான் தேடும்
பயணற்ற பிரயத்தணங்கள்
எல்லையற்று விரிந்து பரவுகிறது
என் ஒவ்வொரு நாள் வாழ்வினூடே...

வாரியிறைத்த வார்த்தைகளில்
பிரிந்துபோன நம் உறவு
வாய்மூடிய மௌனத்தினில்
சேரத்துடிப்பது சாத்தியமில்லைதான்...

பிரிவின் தவிப்பினில்
சுயபச்சாதாபமும் தவிர்த்து
கட்டுப்பாடற்ற துடிப்புடன்
கசங்கிப்போய் கிடக்கிறது
கண்ணீரற்ற என் இதயம்...!

இனிமையான உன் வாழ்க்கைப்பயணத்தின்
ஏதோவொரு குறுக்குச்சாலையில்
ஒருகணமேனும் எதிர்ப்படக்கூடும்
என் இலக்கற்ற இதயபயணம்...

கடந்து செல்லும் ஒரு நொடியிலேனும்
ரேயொரு கடைக்கண் பார்வையிலோ
இல்லையொரு சிறு புன்னகையிலோ
என் தவறுகளை மன்னிக்க நேருமாவென
மனசாந்தியற்ற தவிப்புடன்
ஏங்கித்தவித்து நகர்கிறது
என் வாழ்க்கைப்பயணத்தின்
ஒவ்வொரு நாழிகைகளும்...!

Sunday, March 22, 2015

பார்ப்பானிய எதிர்ப்பு மட்டுமே பெரியார்த்துவமா?...- கொஞ்சம் யோசிங்கப்பா!


நீண்ட நாட்களாக என் மனதில் உறுத்திக்கொண்டேயிருக்கும் கேள்வி இது

அவ்வப்போது இணையத்தில் என் கண்களில் படும் வார்த்தைகள் பார்ப்பானியம்... ஒருவேளை இந்த வார்த்தையை உபயோகித்தால்தான் தன்னை ஒரு புரட்சியவாதியாக, எழுச்சி எழுத்தாளராக முன்னிறுத்திக்கொள்ளமுடியும் என்ற எண்ணமுண்டோ என்னவோ தெரியவில்லை?...

கட்டுரைக்குள் போகும் முன்னர் ஒரு சுயவிளக்கம் தந்தாக வேண்டிய கட்டாயம் எனக்குண்டு. நான் எந்த சாதியையும் நேசிப்பவனும் அல்ல. வெறுப்பவனும் அல்ல. நான் சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு மனிதனாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பவன். ஒரு வேளை ‘’எங்க ஜாதி ரத்தம்டா...’’ என்றொரு வார்த்தையை உபயோகிப்பவர்களுக்கு நான் கூற விரும்புவது நான் O+ve ஜாதி...!!!

பெரியாரைப்பற்றி எனக்குத்தெரிந்தவரை தீண்டாமை ஒழிப்பு என்ற அடிப்படையில் சாதி பேதமற்ற சமூகத்தை உருவாக்கப்போராடியவர் என்பதுதான். அவரது காலத்தில் பார்ப்பானிய ஆதிக்கம் அதிகமிருந்ததால் சாதிய ஒழிப்புக்கு பெருவாரியாக பார்ப்பானிய ஆதிக்கத்துக்கு எதிராக அவரது கருத்துக்கள் அமைந்திருந்தது. (கடவுள் எதிர்ப்பு, கள்ளுக்கடை ஒழிப்பு, பெண்ணியம் போற்றுதல் போன்றவையும் இருந்தாலும் அது இந்த கட்டுரைக்கு சம்பந்தமில்லை என்பதால் அதை நான் இங்கு குறிப்பிடவில்லை)

ஆனால் இன்றைய நிலைமை?... பெரியார்த்துவம் பேசுபவர்களும், பின்பற்றுபவர்களும் இன்னமும் வெறுமனே பார்ப்பானியம்... எதிர்ப்பு... என்று மட்டுமே பேசிக்கொண்டிருப்பதுதான் பெரியாரின் கனவுகளை நனவாக்க அவர்கள் எடுக்கும் முயற்சியா?... இது சரியான பாதைதானா?...

பெரியார்த்துவம் பேசுபவர்கள் முதலில் எனக்கு ஒன்றை தெளிவுபடுத்தவேண்டும். இன்னமும் உங்கள் கொள்கைகள் வெறுமனே பார்ப்பானிய எதிர்ப்பு மட்டும்தானா?... இல்லை... நிஜமாகவே சாதி பேதமற்ற சமூகத்தை உருவாக்குவதுதான் உங்களது கொள்கையா?...

அதாவது உங்களது கொள்கை ஒட்டுமொத்த சாதிய மறுப்பா / ஒழிப்பா?... எதிர்ப்பா?... இல்லை பார்ப்பானிய எதிர்ப்பு மட்டும்தானா?...

உங்களது நிஜமான கொள்கை சாதிய மறுப்பு / ஒழிப்பு என்றால் இன்றைய சூழலில் நீங்கள் பின்பற்றவேண்டியது பார்ப்பானிய எதிர்ப்பு அல்ல... சாதியை வளர்க்கும் ஒவ்வொரு சங்கங்களையும் கட்சிகளையும் எதிர்ப்பதும், விமர்சனங்களை முன்வைப்பதும்தான் சாதிய மறுப்புக்கு நீங்கள் எடுத்து வைக்கும் சரியான பாதையாக இருக்கக்கூடும்.

இன்னமும் பார்ப்பானிய எதிர்ப்பு பேசிக்கொண்டிருக்கும் பெரியார்த்துவ அமைப்புகள், சாதி நெருப்பை அணையவிடாமல் தகதகக்க வைத்துக்கொண்டிருக்கும் ராமதாஸ், திருமாவளவன், கிருஷ்ணசாமி, கொங்கு வேளாளர் பேரவை, முக்குலத்தோர் சங்கம், முதலியார் சங்கம், நாடார் சங்கம் etc., etc., வைப்பற்றி ஒரு வார்த்தைகூட மூச்சு விடுவதில்லை ஏனோ?...

இன்றைக்கு கோட்டா... ரிசர்வேஷன் என்ற பெயர்களில் உயர்சாதி என்ற வரையறைக்குள் பிறந்த எத்தனை குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துப்படிப்பு போன்ற உயர் படிப்புக்குள் நுழையமுடியாமல் போகும் சூழ்நிலையை எதிர்கொள்ளுவது உங்களுக்குத்தெரியாதா?... கடவுளரின் படைப்போ... இல்லை அறிவியல் ரீதியாகவோ... எப்படி எடுத்துக்கொண்டாலும் சரி... பிறக்கும் குழந்தைகளுக்கு சாதியின் அடிப்படையில் மூளை இருப்பதில்லை. அப்படிப்பட்டதொரு சூழ்நிலையில் தன்னைவிட குறைவான மதிப்பெண்கள் எடுக்கும் குழந்தைகளிடம் சாதிய அடிப்படையில் தனது வாய்ப்புகளை ரிசர்வேஷன், கோட்டா என்ற பெயரில் இழக்க நேரிடும் குழந்தைகளின் மனநிலைமை எப்படிப்பட்டதாக இருக்கக்கூடும் என்று என்றாவது யோசிப்பதுண்டா நீங்கள்?...

சாதி பேதமற்ற இந்தியாவை உருவாக்குவதாகக்கூறிக்கொண்டு, பள்ளிக்கூடம், கல்லூரி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, அரசுப்பணி, தேர்தலில் நிறுத்த வேட்பாளர் தேர்ந்தெடுப்பு என்று ஒவ்வொரு விஷயங்களிலும் மறைமுகமாக சாதியை வளர்த்தெடுக்கும் பணியினைத்தான் இன்னமும் மத்திய மாநில அரசுகள் கட்சி பேதமின்றி செய்து கொண்டிருக்கின்றன. பெரியார் பிறந்த தமிழகத்தில்தான் இன்னமும் சினிமா நடிகர்களைக்கூட சாதி வாரியாக பிரித்து போற்றிக்கொண்டாடுவது நடந்து கொண்டிருக்கிறது.

உங்களது உண்மையான கொள்கைகள் என்ன?... இன்னமும் பார்ப்பானிய எதிர்ப்பை பேசிக்கொண்டிருக்கிறீர்களே?... இன்றைய சமூக சூழல் எப்போது விளங்கும் உங்களுக்கு?...

இதை நான் கேட்பதால் நான் பார்ப்பானிய ஆதரவாளன் அல்ல. இன்னமும் தீண்டாமை ஒழிக்கப்படாத கிராமங்கள் இந்தியாவில் இருக்கத்தான் செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லைதான். இருந்தாலும் குறிப்பிட்ட சாதியை மட்டும் எதிர்க்காமல் ஒட்டுமொத்தமாக சாதியை வளர்க்க நினைக்கும் எல்லாவித அமைப்புகளையும், தனி நபர்களையும் எதிர்ப்பதுதான் பெரியாருக்கும், அவரது கொள்கைகளுக்கும் நீங்கள் தரும் மரியாதையாக இருக்கக்கூடும் என்பது என் தாழ்மையான கருத்து.

உண்மையிலேயே பெரியாருக்கும் அவரது கொள்கைகளுக்கும் நீங்கள் மரியாதை செய்யவிரும்பினால்... பெரியாரையும் அவரது கொள்கைகளையும் மறந்த கட்சிகளுக்கு அடிவருடிக்கொண்டு... அண்டிப்பிழைத்துக்கொண்டு... ஜால்ரா தட்டிக்கொண்டு காலத்தை ஓட்டுவதை விட்டுவிட்டு பெரியாரின் கனவான சாதிமறுப்பையும், கள்ளுக்கடை ஒழிப்பையும் சரியான பாதையில் முன்னெடுத்துச்சென்று பெரியாரை இன்றைய சமூகத்தினூடே உயிர்ப்பிக்கச்செய்யுங்கள்...

கொஞ்சம் யோசியுங்கள் தோழர்களே...

(உண்மையாக பதில்கூற நினைப்பவர்கள் தனிமனித தாக்குதல் தொடுப்பதை நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்தால் கருத்துப்பெட்டியில் விவாதிக்கலாம்...)


தொடர்ந்து பேசுவோம்...!